Saturday, November 21, 2015

26 -தருமரின் நற்பண்புகள்


ஒருவன் தோல்வியோ, அவமானமோ அடைய வேண்டும் என்று விதியிருந்தால் அவர்களின் அறிவு மழுங்கிப் போய்விடும்.அறிவு பழுதுப்பட்ட நிலையில் அந்த மனிதன் கீழ்த்தரமான செயல்களைப் புரியத் தொடங்கி விடுவான்

அறிவு மயங்கி அதனால் வீழ்ச்சியடையும் நேரம் வந்து விட்டால், ஒருவனுக்கு அவன் செய்யும் அநியாயமெல்லாம், நியாயமாகத் தெரியும்.தனது அநியாயச் செயலை நியாயமானது என மனதில் பதிந்துவிடச் செய்வான்

பரதகுலத்தில் பிறந்த திருதராஷ்டிரரே! உமது புதல்வர்கள் பாண்டவர்களிடம் பகைமை உணர்வு கொண்டுள்ளதால் அவர்களிடம் புத்தித் தெளிவு இல்லை.அவர்கள் எத்தகையவர்கள் என நீங்களும் அறியவில்லை

தருமர், மூவுலகும் ஆளத்தகுதியுடையவர். அதற்கான அனைத்து அரச லட்சணங்களும் உடையவர்.அப்படியிருந்தும் உங்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்.ஆகவே அவரை அமைச்சராக்கி விடுங்கள்

தருமரிடம், ஆற்றலும்,விவேகமும் சிறப்பாகக் காணப்படுகின்றன.நற்பண்புகள், உலக நன்மைக்கான அனைத்து நடவடிக்கைகள் ஆகியவற்றை நன்கு அறிந்துள்ளார்.ஆகவே, உங்கள் மகன்களைவிட தருமரே அரசப் பதவிக்கு அதிக உரிமையுள்ள வாரிசு ஆவார்..

நல்ல ,மனிதர்களில் முதல்வரானவர் தருமர்,அவருக்கு விளைவிக்கப்பட்ட கெடுதல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு வருகிறார்.அவர், கனிவானவர்.மென்மையானவர்.உங்களிடம் மரியாதை உடையவர்.இதுவே அவர் பொறுமைக்குக் காரணம்

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

Friday, November 20, 2015

25- பேசும் சொற்கள்



பேச்சு, உண்மையாக, எளிமையாக இருப்பது கடினம்.அதே நேரம் புதுமையாகவும், கேட்போரை கவரும் விதமாகவும், பொருள் நிறைந்ததாகவும் இருப்பதும் கடினமே

சிறப்பாக, இனிமையாக நிகழும் சொற்பொழிவு பல நன்மைகளை விளைவிக்கும்.ஆனால் சரியாக அமையாத கடுமையானப் பேச்சு பெரிய தொந்தரவுகளைக் கொடுக்கும்

வில்லம்புப்பட்ட புண் ஆறிவிடும்.கோடாரியால் வெட்டப்பட்ட காட்டிலுள்ள மரங்கள் மீண்டும் துளிர்க்கும்.ஆனால், புண் படும் படி பேசும் காயம் ஆறவே ஆறாது.ஆறினாலும் வடு இருக்கும்

காது வடிவிலான அம்பு,குழல் வழியே வீசப்படும் அம்பு, இரும்பு அம்பு ஆகியவை  உடலில் பாய்ந்து விட்டாலும் அவற்றை அவ்விடத்திலிருந்து எடுத்துவிடலாம்.ஆனால். கடுஞ்சொல் என்னும் அம்பு தைத்துவிட்டால் அதை எடுப்பது முடியாது.அது இதயத்தில் ஆழமாகப் பதிந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும்

ஒருவர் வாயிலிருந்து புறப்படும் சொல் அம்புகள், மற்றவரைத் தாக்கி அவர்களை இரவும், பகலும் வருந்தச் செய்யும்.ஏன், சில வேளைகளில் உயிரையேப் பறிக்கும் அளவிற்கு ஆபத்து நிறைந்தவை.ஆகவே, ஒரு அறிவாளன் அத்தகைய அம்புப் போன்ற சொற்களை பிறர் மீது மறந்தும் கூறாது த்ன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி வள்ளுவர்..

யாகாவா ராயினும் நாக்காக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணம் ஆகிவிடும்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண் கூட ஆறிவிடும்.ஆனால், வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்களால் விளைந்த துன்பம் வடுவாய் இருந்து ஆறவே ஆறாது

Thursday, November 19, 2015

24-ஐம்புலன்கள்



கிரகங்களின் காரணமாய், நட்சத்திரங்கள் பாதிக்கப் படுகின்றன.அதுபோலவே எக்கட்டுப்பாடும் இன்றி ஐம்புலன்களிடம் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வதில் மூழ்கியிருப்பதால் உலகம் துன்பத்திற்கு ஆளாகிறது.(கிரகங்களின் சுழற்சியால்..சில நட்சத்திரங்களின் கீழ்ப் பிறந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்)

வளர்பிறைக் காலத்தில் நிலவு மேன்மேலும் வளர்ந்து ஒளி கூடுகிறது.அதுபோலவே ஐம்புலன்களின் ஆசை ஒருவனை வென்று விட்டால் அவனது துயரங்கள் அதிகமாகிக் கொண்டே செல்லும்

அரசன் தன் ஐம்புலன்களை வெல்ல இயலவில்லை எனில் அவனால் தன் அமைச்சர்களை வசப்படுத்த இயலாது.அப்படிப்பட்ட அரசன் எதிரிகளை வெல்ல முடியாது.உதவ யாருமில்லாமல் அவன் அழிவான்.

ஆனால், அதற்கு மாறாக ஐம்புலன்களையும் தனக்கு எதிரியாகக் கருதி வென்று...தன் மனதைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தால் அவனால் தன் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அவர்கள் துணையுடன் வெளிப்பகையை வெல்ல முடியும்

ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, அமைச்சர்களையும் தன் வசப்படுத்தி, குற்றவாளிகளை சரியாகத் தண்டித்து நன்கு ஆராந்து தன் கடமைகளைப் புரிந்து கொண்டு உறுதியுடன் இருக்கும் அரசன் செல்வச் செழிப்புடன் இருப்பான்

மனித உடல் தேர் போல.மனம் தன் சாரதி.ஐம்புலன்களும் குதிரைகள்.இந்தக் குதிரைகளை வசப்படுத்தி நன்கு பழக்கினால் அவன் அறிஞன் ஆவான்.அவன் தேரில் ஆபத்தின்றி இன்பமாய் வாழ்க்கைப் பயணம் செய்யலாம்

குதிரைகள் கடிவாளம் பூட்டப்படாது, பயிற்சி பெறாததாகவோ. அடங்காதவையாகவோ இருந்தால்..ஆபத்து.அவை சமயத்தில் தேரைக்கவிழ்த்து, தேரில் இருப்போரையும் வீழ்த்தி மரணிக்கச் செய்யும்.அதுபோலவே புலன்களை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிடின் அவை நாளாக ஆக நம் உடலையும், உயிரையும் அழித்து விடும்.

புலன்களை வசப்படுத்தாமல் அதன் போக்கில் வாழ்பவன் முட்டாள்.அவன் நல்ல விஷயங்களையும் கெடுதல் என எண்ணி புறக்கணித்துவிடுவான்.கெட்ட விஷயங்களை நல்லதாக எண்ணுவான்.துயரத்தை ஏற்படுத்தப் போகும் புலன் வழி திருப்தியை நிஜமான இன்பம் என ஏமாறுவான்

ஒருவன் நல்குணத்தையும்,நல்வழியையும் கைவிட்டுப் புலன்களின் தூண்டுதல்படி அலைந்தால் அவனை விட்டு செல்வம் நீங்கும்.அவன் ஆயுள் குறையும்.அவன் வாழ்க்கை வசதிக:ள் விலகும்.மனைவியும் கை விடுவாள்

ஒருவன் ஏராளமான செல்வத்திற்கு அதிபதியாக இருக்கலாம்.ஆனால் புலனாசைகளுக்கு அடிமையாகி விட்டால் அந்த பலகீனமே அவனை தன் அந்தஸ்து, ஐஸ்வரியம் ஆகியவற்றை இழந்து தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவான்.

மனிதன், தன் மனம்,அறிவு,புலன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் தன் ஆத்மாவின் தரிசனம் கிடைக்கும்.ஆத்மாவை உணர்ந்து கொண்டு அதன் மூலம் பரமாத்வாவைத் தேட வேண்டும்.ஆத்மாவே ஒருவனுக்கு நண்பன்,புலன்களை வசப்படுத்தாதவன் அந்த ஆத்மா என்னும் நண்பனின் விரோதி ஆகிவிடுகிறான்

ஒருவன் புலன்களை அடக்கித் தன் ஆத்மாவை வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆத்மா அவனுக்கு உண்மையான நண்பனாய் வழிகாட்டும். புலன்களை வசப்படுத்திக் கொண்டால்,ஆத்மா அவனுக்கு நெருங்கிய நண்பனாய் வழி காட்டும்.புலன்களை வசப்படுத்தா விட்டால் அதே ஆத்மா அவனுக்கு பரம எதிரி ஆகி விடும்.
(உடல், மனம், உயிர், புலன்கள்,அறிவு, தான் எனும் உணர்வு ஆகியவற்றின் அம்சங்கள் சேற்ந்ததே ஆத்மா எனப்படுவது)

மீன் பிடிக்க வலை வீசப்படுகிறது.ஆனால், இரு பெரிய மீன்கள் அந்த வலையைத் தாக்கினால் வலை அறுந்து போகும்,அதுபோலவே காமம், சினம் ஆகிய தீய குணங்கள் ஆபத்தானவை.அவை நம் விவேகத்தை நாசமாக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் வெற்றி பெற விரும்பினால் அறநெறியை பின்பற்றுவதுடன் அல்லாது...உலக நன்மையையும் கவனத்தில் கொண்டு அதற்குப் பயன் தரும் விதத்தில் தேவையான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும்.அப்போது அவை மூலம் நமக்கு மகிழ்ச்சி விளையும்

நம் மனதில் காமம், சினம், பேராசை, அறியாமை, கர்வம் என ஐந்து பகைவர்கள் வசிக்கின்றனர்.அவர்களை முதலில் வென்றால், வெளியில் இருக்கும் எதிரிகளை வெல்லலாம்

ஐம்புலன்களை வசப்படுத்த முடியாது...புலனாசைகளுக்கு ஆசைப்பட்டு பல மாமமன்னர்கள் அடிமையாகி இருக்கின்றனர்.பிறநாடுகளை வெல்ல வேண்டும் என்ற பேராசையாலும்..இதர அரச போகங்களுக்கு ஆசைப்பட்டும் அவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஈரமான விறகு எரியாது.ஆனால் உலர்ந்த விறகு எரிகையில் அதனுடன் சேர்ந்து ஈர விறகும் எரியத் தொடங்கும்.நாம் நல்லவர்களாக இருக்கலாம்.ஆனால், தீயோருடன் நட்புக் கொண்டால் அவர்கள் பெறும் தண்டனையை நாமும் அனுபவிக்க நேரிடும்

விறகு எரிய தாமதமாகலாம்.ஆனால் கண்டிப்பாக எரியும்,நல்லவர்கள் தீயோருடன் சேர்ந்து கெட்டுப் போக தாமதமாகலாம்.ஆனால் கெடப்போவது நிச்சயம்.கரி படர்ந்த அறையில் நுழைந்தால் கறை படாது வெளியே வர முடியாது

பொறாமை இல்லாமை,நேர்மையான பேச்சு,உள்ளத் தூய்மை,போதுமென்ற மனம், எரிச்சலூட்டா இனிய பேச்சு,மனக் கட்டுப்பாடு,வாய்மை, மன உறுதி இப்படிப்பட்ட நற்பண்புகளைத் தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஆத்ம அறிவு, கோபமற்ற தன்மை,வாழ்க்கையில் உண்டாகும் கசப்பை சகித்துக் கொள்ளல்,அறநெறியில் பிடிப்பு,பேச்சில் எச்சரிக்கை,தானம் செய்வதில் ஆர்வம்..ஆகிய பண்புகளை தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

முட்டாள்கள் அறிவாளிகளை கடுஞ்சொற்களால் விமரிசித்து அவர்கள் மனதை புண்படுத்துகிறார்கள்.இவ்வாறு பழித்தவர்கள் பாவி ஆகின்றனர்.அறிஞர்கள் அச்சொற்களை பொறுத்துக் கொள்வதால், அவர்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தாலும் அதிலிருந்து விடுபடுகின்றனர்.அவர்கள் செய்த பாவம் அவர்களைத் திட்டிய முட்டாள்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

வன்முறை செயல்களே தீயோரின் பலம்.தண்டனைப் பற்றிய சட்ட நூல்களே அரசனின் பலம். பண்பும், சேவையும் பெண்களின் பலம்.பொறுமையே சான்றோர் பலம்.

ஐம்புலன்களை அடக்கி ஆளுவதை ஒரே குறளில் வள்ளூவர் சொல்லிவிட்டார்...

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளை ஒரே ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்புலன்களையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்