Friday, August 28, 2015

5- விதுர நீதி -- உறங்கா நிலைப் படலம்


(இந்த அத்தியாயத்திலிருந்து விதுரநீதி ஆரம்பிக்கிறது.விதுரர் கூறியவை 605 சுலோகங்களாகும்.இவை 1210 வரிகள் ஆகும்)

திருதராஷ்டிரர் தன் அறையின் காவலாளியை அழைத்தார்.அவனிடம், "நான் விதுரரை சந்திக்க விழைகிறேன்! அவரை அழைத்து வருவாயாக1" என்றார்.

அந்த வாயிற்காவலனனும் விதுரரிடம் சென்று, :"ஐயா! மாமன்னர் தங்களை சந்திக்க விரும்புகிறார்." என்றான்..விதுரரும் மன்னரைச் சந்திக்கச் சென்றார்.ஆழ்ந்த சிந்தனையில் இருந்த திருதராஷ்டரரிடம், இரு கைகளையும் கூப்பியபடியே விதுரர், தான் வந்துள்ளதாகத் தெரிவித்தார்..(திருதராஷ்டிரர் பார்வை இழந்தவர் ஆதலால், தன் பெயரைக் கூறி வந்ததைத் தெரிவித்தார்.)

"விதுரரே! நல்வரவாகுக.சஞ்சயனைப் பாண்டவர்களிடம் தூது அனுப்பியிருந்தேன்.அவன் திரும்பி விட்டான்.ஆனாலும், நேரமாகிவிட்டபடியால், நாளை காலை சபையில் தருமரின் செய்தியை அறிவிக்கிறேன் என்று சொல்லி விட்டான். தருமர் சொல்லியுள்ள செய்தி என்னவாக இருக்கும்? என என்னால் தெரிந்து கொள்ள இயலவில்லை.இதை எண்ணி எண்ணியே எனக்கு உறக்கம் வரவில்லை. விதுரரே! நீர்தான் நம்மிடையே நன்கு அறிவு நூல்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவன்.ஆகவே, உறக்கம் வராது அவதிப் படும் எனக்கு ஒரு நல்வழி சொல்வாயாக.சஞ்சயன், என்ன செய்தி கொண்டு வந்துள்ளானோ? என்றே சிந்தனையாக உள்ளது.உம்மால், தருமர் என்ன சொல்லியிருப்பார் என யூகித்து சொல்ல முடியுமா? தருமர் எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தருமா?" என்றார்.

அதற்கு விதுரர், அரசே, யார் யாருக்குத் தூக்கம் வராது தெரியுமா? பலசாலிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் பலமற்றவர்களும், தன் தொழிலுக்கு ஏற்ற கருவிகளை வைத்திராத தொழிலாளிகளுக்கும்,சொத்தை இழந்தவர்களுக்கும், காதலிப்பவர்கள் அல்லது காமுகர்களுக்கும், திருடர்கள் ஆகியோருக்கும் இரவில் சரியாகத் தூங்க முடியாது.

அரசே! நீங்கள் மேற்கண்ட எந்த வகைக்களுக்குள்ளும் அடங்குபவர் அல்லவே!பிறர் சொத்தை அடையும் பேராசை உங்களுக்குத் தெரியாதே!" என்றார்.

"அந்தப் பிரச்னைப் பற்றித்தான் உன் அறிவுரையைக் கேட்க விரும்புகிறேன்!உன் கருத்துகள் எப்போதுமே அறப்பண்புக்கு பொருந்தி வருபவை.ஆகவேதான், அரசர் குலத்தில் பிறந்த ஞானிகளில் நீ மட்டுமே அறிஞர்களாலும் போற்றப்படுகிறாய்" என்றார்.

அதற்கு விதுரர்,"அரசே1 நற்பண்புகள் நிறைந்த அரசன் மூவுலகங்களையு8ம் அரசாளும் மேன்மை பெறுவான்.அத்தகையப் பண்புகள் நிறைந்த தருமருக்கு ஆதரவு அளிக்காமல் நாடு கடத்திவிட்டீர்கள்".நீங்கள் நல்லவர், வல்லவர்.அறநெறி அறிந்தவரானாலும் தருமருக்கும், உங்களுக்கும் வித்தியாசம் உண்டு..பார்வை இல்லாததால் நீங்கள் அதிர்ஷ்டம் குறைந்தவர்.(திருதராஷ்டிரர் புறக்கண்கள் மட்டுமின்றி, அகக்கண்ணும்குருடானவர்,  என மறைமுகமாக உரைத்தார் விதுரர்)

தருமர்..மென்மையானவர்,கனிவானவர், அறவழியில் நடப்பவர், உண்மையானவர், உங்களுக்குக் குடும்பப் பெரியவர் என்ற முறையில் மதிப்புத் தருபவர்.தனக்கு இழைக்கப்பட்ட தீமைகளை எல்லாம் அவர் தன் நற்பண்புகள் காரணமாக சகித்து வருகிறார்.நீங்கள் அட்சிப் பொறுப்பை துரியோதனன், சகுனி,கர்ணன்,துச்சாதனன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.அதற்குப் பிறகுமா வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்?" என்றார்.(மேற்கண்டவர்கள் நாட்டை ஆளும் தகுதியற்றவர்களாவார்கள்)


Wednesday, August 26, 2015

4-திருதராஷ்டிரரும், விதுரரும்



மகாபாரதத்தில் மூன்று உபதேச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் செய்த கீதாபதேசம்
பீஷ்மர்  போருக்குப் பின் தருமருக்கு உரைத்த அறிவுரைகள்
விதுரர் திருதராஷ்டிரருக்குக் கூறிய நீதிகள்

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்கள் கீதையை மிகவும் விரும்புவர் எனலாம்.மற்றவர்களுக்கு அந்த அளவிற்கு ஈடுபாடு இல்லாதிருக்கலாம்.

பீஷ்மர் கூறிய அறிவுரைகளோ...அரசர்களுக்கும், அரசியலில் உள்ளோர்க்கு மட்டுமே எனலாம்.

ஆனால் விதுரர் கூறியவை, ஆன்மீகவாதிகள்,ஆட்சியாளர்கள், ஆன்மீகத்தில் நாட்டமில்லாதவர்கள், நாத்திகவாதிகள் என அனைவருக்குமானது எனலாம்.ஆனாலும் விதுர நீதி, மற்ற இரண்டைப் போல அதிகம் பேசப்படவில்லை.ஆனாலும், அதற்கான மதிப்பு, மற்ற இரண்டைவிட எள்ளளவும் குறைவானதில்லை.

திருதராஷ்டிரர், கௌரவர்கள் பற்றிய கவலையில் உறக்கம் வராமல் தவித்தார்.அப்போது விதுரர் அவரைத் தேற்ற சொன்னக் கருத்துகள் இவை.

விதுர நீதி, தனி மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை என இரண்டுடன் கைகோர்த்துச் செல்கிறது.தவிர்த்து...விதுர நீதி எந்த மதத்தையும் சார்ந்தது இல்லை எனலாம்.வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அனைவருக்கும் இது பொதுவானதாகும்.

எளிய சொற்கள், சொற் சிக்கனம், ஆழ்ந்த பொருள் ஆகியவை கொண்ட விதுர நீது திருக்குறளுக்கு ஒப்பானது எனலாம்.


பாரதப்போர் ஏற்படுவதைத் தடுக்க எண்ணிய திருதராஷ்டிரர் சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது அனுப்பினார்.சஞ்சயன் கூறியவற்றைக் கேட்ட தருமர், திருதராஷ்டிரரின் மனதில் உள்ளதை அறிந்தார்.அதனால் அவர் சஞ்சயனிடம் " ஒரு காலத்தில் பாண்டவர்கள், திருதராஷ்டிரரின் ஆசியோடு நாடு ஆண்டோம்.இப்போது, நாடு இன்றி, ஊரின்றி பிறரை அண்டி வாழ்கிறோம்.எங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடுத்திருக்கலாம்" என்றார்.

தருமரின், பெருந்தன்மையால் கவரப்பட்ட சஞ்சயன் அன்றிரவே அஸ்தினாபுரம் வந்தான்.இரவு நேரமாகிவிட்டபடியால், திருதராஷ்டிரரிடம், தருமர் கூறியதை காலையில் கூறுவதாகக் கூறிச் சென்றான்.

சஞ்சயன் , என்ன பதில் கொண்டு வந்திருப்பானோ என்ற எண்ணத்தில் திருதராஷ்டிரருக்கு இரவு உறக்கம் வரவில்லை.ஆகவே, இரவை பேசிக் கழிக்க எண்ணி விதுரரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்.

திருதராஷ்டிரர், தன்னைக் கூப்பிட்டுப் பேசப்போகிறார் என விதுரருக்குத் தெரியாது.அதனால், அவர் கூப்பிட்டு அனுப்பியதும், அவரிடம் சாதாரணமாக உரையாடுவது போல விதுரர் சொல்லிக் கொண்டே வந்தார்.இந்த அறிவுரைகள் கொண்ட நூல் ஒவ்வொருவருர் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

திருதராஷ்டிரர் மனம் சஞ்சலத்தில் இருந்ததால், அவருக்கு மற்ற ஒருவர் அறிவுரை தேவைப்பட்டது.அதை விதுரர் செய்தார்.

இதைத்தான் வள்ளுவனும் இக்குறளில் கூறுகிறார்.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை

நூல்களைக் கற்காவிடினும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக மையும். 

Tuesday, August 25, 2015

3-விதுரர் மறைவு


விதுரர் பண்பாளர்.அனைவரிடமும் அன்பாகவும், பண்புடனும் பழகியவர்.அவர் திருதராஷ்டிரருக்கு நெருக்கமாகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர்.திருதராஷ்டிரரும் எப்போதும் விதுரரின் ஆலோசனைகளைக் கேட்பார்.துரியோதனன் மீது உள்ள பாசத்தால், திருதராஷ்டிரர் விதுரரின் ஆலோசனைகளை மீறிய போதெல்லாம் அவதிப்பட்டார்.விதுரர் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.பாண்டவர்களுக்கும் துன்பக் காலத்தில் விதுரர் உறுதுணையாய் இருந்தார்.

பாண்டவர்களை நேர்மையான முறையில் வெல்ல முடியாது என துரியோதனனும், சகுனியும், தருமரை சூதாட அழைத்து வெல்ல முடிவெடுக்கின்றனர்.

திருதராஷ்டிரர், விதுரரைக் கூப்பிட்டுத் தருமரை சூதாட வருமாறு நேரில் சென்று அழைக்கக் கூறுகிறார்.விதுரர், இதை எவ்வளவோ தட்டிக் கழிக்கப் பார்த்தும், திருதராஷ்டிரரின் பிள்ளைப் பாசத்தினால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

தருமர், நாட்டை வைத்து சூதாட வேண்டிய நிலை வந்த போது, விதுரர் எல்லோர் முன்னிலையிலும் திருதராஷ்டிரரைக் கண்டிக்கிறார்."துரியோதனைப் பிள்ளையென வளர்த்திட்டேன்.ஆனால், அது பாம்பை, நரியை வளர்த்ததற்கு ஒப்பாகிவிட்டதே!" என புலம்பினார்.அறநெறி தவறிய பிறகும் வாழ்வில் இன்பம் ஏற்படும் என எண்ண வேண்டாம் என்கிறார்.ஆனால், அதற்கு , அவருக்குக் கிடத்தது அவமானமே!

தருமர் சூதாட்டத்தில் திரௌபதியை வைத்துத் தோற்றதும், அவளை கேவலப்படுத்த, சபைக்கு அழைத்து வருமாறு விதுரருக்குக் கட்டளை இடுகிறான்.ஆனால், விதுரர், அதற்கு மறுத்து அவனைக் கண்டிக்கிறார்."மாண்டு தரை மீது கிடப்பாய்" மகனே..என துரியாதனன் இறப்பை முதலிலேயே சொல்கிறார். (முக்காலமும் அறிந்தவர் அவர், பின்னர், துரியோதனன் போரில் பீமனால் தரையில்  தடைப் பிளக்கப் பட்டு மாண்டு விழ நேர்ந்தது)

விதுரரின் நேர்மையை புரிந்துக் கொள்ளாத திருதராஷ்டிரர், அவர் பாண்டவர்களுக்காக பேசியதாக நினைக்கிறார்.விதுரரை நோக்கி, "நீ எதிரிக்காக பேசுவதாகத் தான் தெரிகிறது.இனி நான் உன்னை நம்ப முடியாது.நீ, இனி எனக்கு வேண்டாம்.பாண்டவர் இருக்குமிடத்திற்கே நீ செல்'என்கிறார். விதுரரும், கிளம்பி பாண்டவர்கள் இருக்கும் வனத்திற்குச் செல்கிறார்.பின்னர், தன் தவறை உணர்ந்து திருதராஷ்டிரர், தன் நண்பரும், தேரோட்டியுமான சஞ்சயனை அனுப்பி விதுரரை அழைத்து வரச் சொல்கிறார்.திரும்பி வந்தவரிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

பாரதப்போர் தொடங்குமுன் கண்ணன் தூதுவராக அஸ்தினாபுரம் வருகிறார்.அவரை வரவேற்க துரியோதனன் ஏற்பாடு செய்கிறான்.ஆனாலும், தன்னை நேரில் வரவேற்க வந்த விதுரரின் இல்லம் சென்ற கண்ணன் ,அங்கு விருந்துண்டு ஓய்வெடுக்கிறார்,

இதனால் கோபமுற்ற துரியோதனன் சபையில், "எனக்குப் பகைவன் உனக்கும் பகைவனல்லவா?" என்று கூறி, கண்ணனுக்கு ஏன் விருந்தளித்தாய் ? என்கிறான்."என் தந்தையுடன் பிறந்தும். இதுநாள் வரையில் என் கையால் அளிக்கப்பட்ட உணவை உண்ட நீ, என்னிடம் அன்புடையவன் அல்ல.எனக்கு வெளிப்பகையானாய் உள்ளவர்களைவிட நீ மிகவும் ஆபத்தானவன்" என்றும், அவரை வேசி மகன் என்றும் ஏசுகிறான்.

விதுரர் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, "என்னைப் பழி கூறிய வாயையும், உன் தலையையும் உடனே என்னால் வெட்ட முடியும.ஆனால் குரு வம்சத்தில் பிறந்த ஒருவன், தன் புதல்வன் உயிரைக் கொன்றான்" என்று நாளை உலகம் என்னை ஏசும் .அதனால் விடுகிறேன்" என்றார்.

போரில் எந்தப் பக்கத்திலிம் நிற்க மாட்டேன் என்றவர் உலகின் பிரசித்தமான சிவ தனுசு, விஷ்ணு தனுசு ஆகிய சிறந்த வில் தனுசுகளில் தன்னிடமிருந்த விஷ்ணு தனுசை உடைத்து எறிந்தார்.



புதல்வரைப் போன்ற கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நடக்கும் போரைக் காணவிழையாமல் விதுரர் புனிதத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார்,

குஜராத்தில் உள்ள பிரபாச தீர்த்தம் (சோமநாத்) என்னும் தலத்தை அடந்த போது, பாரதப் போரின் முடிவினை அறிந்தார்.ஹரித்துவார் சென்று மைத்திரேய முனிவரிடம் உபதேசம் பெற்று அஸ்தினாபுரம் திரும்பினார்.

பின் திருதராஷ்டிரர்,காந்தாரி, குந்தி ஆகியோருடன் இறுதி நாட்களைக் கழிக்க இமயமலைக்குப் புறப்பட்டார்.அங்கு கடுமையான தவங்களை மேற்கொண்டு உலக வாழ்க்கையை நீத்தார்.எனினும் ஒரு நீதிமானாக இன்றும் ஆத்திகர்களால் போற்றப்படுகிறார்.



Monday, August 17, 2015

2-விதுரர் பிறந்தார்



சந்திரக் குலத்தின் அரசர் சந்தனுவிற்கும், கங்கைக்கும் மகனானவர் பீஷ்மர்.கங்கை சந்தனுவைப் பிரிந்து சென்று சில காலம் கழித்து, சந்தனு சத்தியவதி என்னும் செம்படவப் பெண்ணை மணந்தார்.அந்தப் பெண் கன்னியாய் இருக்கும் காலத்திலேயே பராசர முனிவர் அவள் மீது மோகம் கொண்டார்.மனதளவிலான மோகமே அவளுக்கு ஒரு குழ்ந்தையைப் பிறப்பித்து விட்டது.அதுதான் வியாசர்.

சந்தனு, சத்தியவதியை மணந்த பிறகு அவர்களுக்கு சித்திராங்கதன், விசித்திர வீரியன் ஆகிய புதல்வர்கள் பிறந்தனர்.

சித்திராங்கதன் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டான்.பீஷ்மர், விசித்திரவீரியனுக்கு, அம்பிகை, அம்பாலிகை என்ற இரு சகோதரிகளை மணமுடித்தார்.ஆனால், விசித்திரவீரியனும் இறந்து விட்டான்.பீஷ்மரோ மணமாகாதவர்.வாரிசு இல்லாமல் சந்திரக் குலம் அழியும் நிலை.இதைத் தடுக்க எண்ணிய சத்தியவதி, அம்பிகை, அம்பாலிகை இருவரையும் குழந்தைப் பெற வியாசரிடம் அனுப்பினாள்.வியாசரும் அவளது மகன் தானே1 (இன்றும் சில வகுப்பினரிடையே ஒருவன் இறந்து போனால் அவனது மனைவியை அவனது சகோதரன் மணமுடிக்கும் வழக்கம் உண்டு)

ஆனால் சத்தியவதி வியாசரிடம், அவர் குழந்தைப் பிறக்கக் காரணமாய்த்தான் இருக்க வேண்டும்.குழந்தைகள் பிறந்ததும் விலகிட வேண்டும் என்றாள்.

வியாசர் மூலம், அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும், அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறந்தனர். திருதராஷ்டிரர் பார்வையற்றவராய்ப் பிறந்தார்.பாண்டுவோ உடல் முழுதும் வெள்ளையாகப் (ரோகம்) பிறந்தார்.அதனால் மீண்டும் ஒரு குழந்தையைப் பெற அம்பிகையை, வியாசரிடம் போகச் சொன்னாள் சத்தியவதி.

அதற்கு விருப்பமில்லாத அம்பிகை, தனது பணிப்பெண் ஒருத்திக்கு தன்னைப் போல அலங்காரம் செய்து அனுப்பி வைத்தாள். இதை அறிந்து கொண்ட வியாசர், அப்பணிப் பெண்ணைத் தொட்டார்.அதன் விளைவாகவே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவனே தரும தேவதையின் அவதாரமான விதுரர் ஆவார்.

திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் மூவருக்கும் ஒரே தந்தை வியாசர் ஆவார்.தாய்மார்கள் தான் வேறு.ஆகவே விதுரர், திருதராஷ்டிரர், பாண்டு ஆகியோர் அண்ணன், தம்பி முறையாகும்.

பீஷ்மர், திருதராஷ்டிரர், பாண்டு ஆகியோர்க்கு நற்குணவதிகளான அரசகுமாரிகளைத் திருமணம் செய்வித்தார்.விதுரர், சாதாரண மனிதனைப் போல எளிமையாய் வாழும் லட்சியம் கொண்டவர் ஆதலால் வடமதுரை மன்னன் தேவசன் என்பவனின் பணிப்பெண் ஒருத்தியை விதுரருக்கு மணம் முடித்தார்.அவளது பெயர் பாரசவி ஆகும்.

"வித்" என்ற வேர்ச் சொல்லிலிருந்து தன் பெயரைப் பெற்றதால், விதுரர் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார்.முக்காலமும் உணர்ந்த அவர், எக்காலமும் நேர்மையையே வலியுறுத்தியவர் ஆவார்.கடைசிவரை அறவழியிலேயேச் சென்றவர்.

ஆகவேதான் விதுரர் இன்றும் போற்றப்படுபவராக இருக்கிறார்.

Monday, August 3, 2015

1.தரும தேவதையும், மாண்டவ்யரும்

முன்னுரை

வணக்கம்

மகாபாரதத்தில் மூன்று உபதேசங்கள் சொல்லப்பட்டுள்ளன

ஒன்று - கண்ணன், அர்ச்சுணனுக்குச் சொன்ன கீதா உபதேசம்
இரண்டு- அம்புப் படுக்கயில் இருந்தவாறே, பீஷ்மர், தருமருக்கு உரைத்த அறிவுரைகள் (இதை நான் எனது, மினியேச்சர் மகாபாரதம்" என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளேன்.
மூன்று- மனம் சஞ்சலத்தில் இருந்த போது, திருதராஷ்டிரருக்கு, விதுரர் கூறிய அறிவுரைகள்

இவற்றுள், கீதை, போற்றப்பட்ட அளவிற்கு மற்ற இரண்டும் சொல்லப்படவில்லை.

விதுரர் நீதியும் பேசப்பட வேண்டும் என்ற அவாவே..இந்நூல் எழுதக் காரணம்.

சமஸ்கிருத ஸ்லோகங்களை தமிழில் மொழிபெயர்த்து டாக்டர் என்.ஸ்ரீதரன் அவர்கள் எழுதியுள்ள "விதுர நீதி" என்ற நூலை, நான் படித்துக் கொண்டிருந்த போது, அதில் சொல்லப்பட்டிருந்த பல செய்திகளை, பொய்யாமொழிப் புலவனும் , இரண்டு...இரண்டு அடிகளில் சொல்லியிருப்பதுக் கண்டு அதிசயத்தேன்

உடன், விதுரர் நீதியயும், வள்ளுவர் நீதியையும் தொகுத்து ஒரு புத்தகமாக்கும் எண்ணம் எழுந்தது.இவர்கள் கூறியுள்ள அறிவுரைகளை முடிந்த அளவிற்கு நாமும் நம் வாழ்நாளில் பின்பற்றலாமே!

ஆமாம்...விதுரருடன்...வள்ளுவரை ஏன் ஒப்பிட்டேன்...

விதுரர்...தனிப்பட்ட ஒருவருக்கு உரைத்தார்..ஆனால் வள்ளுவரோ, பொதுவாக அனைவருக்கும் சொல்லியுள்ளார்.

தவிர்த்து....திருக்குறள் ஒரு வாழ்வுநூல்

அறநூல்...எனில், அறநெறியை மட்டுமே வகுத்துக் கூறும் போக்குடையதாய் இருக்கும்.ஆனால், வாழ்வுநூல் எனில், தனக்கென பல தனித்தன்மைகளைக் கொண்டதாய் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட சமயத்தினர்,மொழியினர்,நாட்டினர் என்ற எல்லைகளைக் கடந்து மனிதகுலத்தின் வாழ்வு நூலாக விளங்குகிறது திருக்குறள்.இது, நடுவுநிலையுடன் உள்ளது என்பதை படிப்பவர்கள் உணர்வார்கள்

அறத்துப்பாலில், அறத்தின் பெருமையும்,பயனும் விளக்கப்பட்டுள்ளது
பொருளின் சிறப்பு,அதை சேகரித்து, காத்து,வகுத்து வழங்குமுறைகளை பொருட்பால் கூறுகிறது.இதில், சமுதாயக் கருத்துகள், அரசியல் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

தவிர, ஒரு அதிசயம் என்னவெனில், தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறளில், ஒரு குறளில் கூட தமிழ்நாடு என்றோ, தமிழன் என்றோ, தமிழ் என்றோ சொற்கள் கிடையாது.ஆகவேதான் திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப் படுகிறது

இந்நூலை கொண்டுவர ஊக்குவித்த சூரியன் பதிப்பகத்தாருக்கும், குறிப்பாக திரு முருகன் அவர்களுக்கும்,முகப்பு ஓவியம் வரைந்த --------- ஓவியருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

கடைசியாக ...ஒரு செய்தி....

இந்நூலை ஆரம்பத்திலிருந்து...நாவலைப் போலத் தொடர்ச்சியாய் படித்தால்தான் புரியும் என்பதில்லை.எந்தப் பக்கத்தை எடுத்து, எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படிக்கலாம்

படியுங்கள், ரசியுங்கள், முடிந்தவற்றை பின்பற்றுங்கள்.

அனைவருக்கும் நன்றி

அன்புடன்
டி.வி.ராதாகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------------------------------------------
விதுர நீதி
--------------------------------------------------------------------------------------------------------------

மாண்டவ்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.அந்த இடத்திற்கு சில திருடர்கள் வந்தனர்.

அந்தத் திருடர்களை, அரண்மனை சேவகர்கள் துரத்தியதால், அவர்கள் தாங்கள் திருடிய பொருள்களை அந்த முனிவரின் ஆசிரமத்தில் ஒளித்து வைத்துவிட்டு மறைந்து கொண்டனர்.

முனிவரைத் திருடர்களின் தலைவன் என்று நினைத்த படைத்தலைவன், சேவகர்களை அங்குக் காவல் வைத்து விட்டு அரசரிடம் முறையிடச் சென்றான்.அரசனும், சிறிதும் யோசியாது, "அத் திருடனை சூலத்தின் ஏற்றுங்கள்" என்றார்.

சூலத்தில் ஏற்றப்பட்ட முனிவர் இறக்காமல் சமாதி நிலையில் இருந்தார்.

இந்தச் செய்தி பரவ, பல முனிவர்கள் அங்குக் கூடினர்.அரசரும் அங்கு வந்தார்.பின், முனிவரைப் பற்றி அறிந்த அரசன், அவரை சூலத்திலிருந்து இறக்கி, அவரிம் மன்னிப்புக் கேட்டான்.

மாண்டவ்யர், தரும தேவதையிடம் சென்று, "நான் செய்த குற்றம் என்ன?  என்னை ஏன் தண்டித்தீர்கள்?" என்றார்,

"நீங்கள் சிறு வயதில் தும்பி ஒன்றைப் பிடித்து, அதன் வாலை வெட்டி எறிந்து , அதன் உடலில் ஒரு முள்ளைச் செருகி, அதை பறக்கவிட்டு துன்புறுத்தினீர்கள். அந்தத் தவறினால்தான் , தண்டனையாக சூலத்தில் ஏற்றப்பட்டீர்கள்' என்றது தரும தேவதை.

"அறியாத பருவத்தில், தெரியாமல் செய்த சிறு செயலுக்கு, என்னை இவ்வளவு கொடுமையாக தண்டித்த நீ....பூவுலகில் மனிதனாகப் பிறந்து வாழ்வாயாக1" என்று முனிவர் தருமதேவதைக்கு சாபமிட்டார்.

இந்த சாபத்தால் தரும தேவதை பீஷ்மரின் சிற்றன்னை சத்தியவதியின் மகனாகிய விசித்திரவீரியனின் மனைவி அம்பிகையின் பணிப்பெண்ணிற்கும், வியாசமுனிவருக்கும் மகனாகப் பிறந்து விதுரர் என்ற பெயர் பெற்றார் (ள்) தருமதேவதை.

(பிற உயிரை துன்புறுத்தக் கூடாது.அப்படிச் செய்பவருக்குக் கேடு விளையும்.இங்கும் மாண்டவ்யர், தும்பிக்குச் செய்த சிறு தீங்கு, அவரை சூலத்தில் ஏற்றும் நிலைக்கு வந்தது.பிறருக்கு துன்பம் இழைத்தால் நமக்குக் கேடு உண்டாகும். இதை வள்ளுவன் எப்படிச் சொல்கிறார்..

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்.செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்

இங்கு செய்யக் கூடாதது, தும்பிக்கு துன்பம்

செய்ய வேண்டியது, தும்பியை துன்புறுத்தாமல், சுதந்திரமாக செயல் பட வைக்க வேண்டியது.)