Showing posts with label வள்ளுவர் நீதியும்-விதுர நீதியும்- TVR. Show all posts
Showing posts with label வள்ளுவர் நீதியும்-விதுர நீதியும்- TVR. Show all posts

Friday, January 22, 2016

50-இனி வள்ளுவ நீதி

--------------------------------------------------------------------

வள்ளுவ நீதி
-------------------------------------------------------------------------------

கடவுள் வாழ்த்து-

1. 'அ' என்ற உயிர்எழுத்து எழுத்துக்களுக்கு முதல் அதுபோலஆதி பகவன் உலக உயிர்களுக்கு முதல்.
(திருவள்ளுவரின் தாய்,தந்தை ஆதி பகவன் என்பதால் உலக உயிர்களுக்கு தாய்,தந்தை முதல் என்றும்
சொல்லலாம்)

2. இறைவனை வணங்கும் பண்பில்லாதவன் படித்திருந்தும் பயனில்லை

. 3. மலரை ஒத்த இறைவனை மனதில் ஆராதிப்பவன் பெயர் உலகில் நீடித்து இருக்கும்

4.விருப்பு வெறுப்பு இல்லா இறைவனை வேண்டுவோர்க்கு எந்த துன்பமும் வராது.

5. இறைவனை புரிந்து கொண்டால் நன்மை,தீமைகள் எல்லாம் ஒன்றே போல் தெரியும்.

6.ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தியவனின் ஒழுக்க நெறியை பின்பற்றவேண்டும்.

7.இறைவனை வேண்டினால் மனக்கவலைகள் மறையும்.

8.இறைவனை வேண்டினால் துன்பங்களை எளிதில் வெல்லலாம்.

9.இறைவனை வேண்டாதவனுக்கு ஐம்புலன்கள் இருந்தும் பயனில்லை.

10.இறைவனை வேண்டினால் நற்பிறவி அடைய முடியும்


2)வான் சிறப்பு
-----------------------

1.மழை தான் உலகத்தை வாழ வைக்கும் அமிர்தம்.

2.உணவுப்பொருட்கள் விளைய மழை தேவை...தவிர...மழையே அருந்தும் உணவாகும் உள்ளது.

3.எங்கும் கடல் நீர் சூழ்ந்திருந்தாலும் மழை இல்லை எனில் பசி வாட்டி வதைக்கும்.

4.மழை இல்லையேல் உழவுத்தொழிலும் இல்லை.

5.மழை பெய்யாமல் வாழ்வையும் கெடுக்கும்...பெய்து வாழ்வின் வளத்தையும் சேர்க்கும்.

6.மழை இல்லையேல் மண்ணில் புல்லைக்கூட பார்க்கமுடியாது.

7.கடல்நீர் மேகமாக மீண்டும் கடலில் பெய்வதால் கடல் வற்றுவதில்லை.அதுபோல மனிதனும் சமுதாயத்துக்கு
பயன்பட்டால்தான் சமுதாயம் வாழும்.

8.மழை பொய்த்துவிட்டால்  இறைவனுக்கு விழாக்களும் கிடையாது...வழிபாடும் இருக்காது.

9.மழை பெய்யாவிடின்..செய்யும் தானம்....மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இருக்காது.

10.உலகில் மழை இல்லை எனில் ஒழுக்கமே கேள்விக்குறியாகும்...

(மழையின் முக்கியத்தை இதைவிட அருமையாக யாரால் சொல்லமுடியும்.)


3)நீத்தார் பெருமை
---------------------------------

1.ஒழுக்கமுள்ள துறவிகளின் புகழ் அழியாப் புகழாய் திகழும்.

2.பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளவிட முடியாது.

3.நன்மை எது, தீமை எது என உணர்ந்து நன்மைகளை செய்பவர்கள் உலகில் பெருமையானவர்கள்.

4.துறவி என்பவன் உறுதியுடன் ஐம்புலன்களையும் அடக்கிக்காப்பவன்.

5.புலன்களை அடக்கியவர்கள் புகழ் எப்படிப்பட்டது என்பது புலன்களை அடக்காத இந்திரனின் செயலால்
தெரியவருகிறது.

6.பெருமை தரும் செயல்களை செய்பவர்கள் பெரியோராகவும், மற்றவர்கள் சிறியோராகவும் கருதப்படுவர்.

7.ஐம்புலன்களை அடக்கும் திறன் கொண்டவனை உலகம் புகழும்.

8.அறவழி நூல்கள் சான்றோரின் பெருமையை உலகிற்கு காட்டும்.

9. நல்ல குணம் படைத்தவர்கள் கோபம் கொண்டால்...அந்த கோபம் வந்த வேகத்திலேயே மறைந்துவிடும்.

10.உயிர்களிடத்தில் அன்பு கொண்ட அனைவருமே அந்தணர்கள் ஆவார்கள்.


4)அறன் வலியுறுத்தல்
------------------------------------


1. அறவழி மட்டுமே சிறப்பையும் செல்வத்தையும் தரும்.

2. தீமைகளில் பெரிய தீமை அறவழியை மறப்பதுதான்.

3. செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் அறவழியிலேயே செய்யப்படவேண்டும்.

4.மனத்தூய்மையே அறம் ஆகும்.

5. பொறாமை,பேராசை,கோபம்,வன்சொல் இவை அறமாகாது.

6. நாள் கடத்தாமல் ஒருவர் அறவழியை மேற்கொண்டால் இறந்தும் புகழப்படுவார்.

7. அறவழியில் நடப்பவர்கள் இன்ப துன்பங்கள் இரண்டையும் ஒன்றாய் கருதி மகிழ்வர்.

8.ஒரு நாள் கூட வீணாக்காது நற்செயலில் ஈடுபட வேண்டும்.

9. அறவழியில் நடப்பதன் மூலம் அடையும் புகழே இன்பமாகும்.

10. அறவழிச் செயல்களில் ஈடுபடுவதே ஒருவருக்கு புகழ் சேர்க்கும்.



5)இல்வாழ்க்கை
-------------------------------

1.பெற்றோர்,மனைவி,குழந்தைகள் ஆகியோருக்கு துணையே ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

2.துறவிகள்,பசியால் வாடுபவர்,பாதுகாப்பில்லாதவர்கள் ஆகியோருக்கு இல்லறத்தானே துணை.

3.இறந்தவர்களை நினைத்தல்,தெய்வத்தை நினைத்தல்,விருந்தோம்பல்,உறவினர் பேணுதல்,
தன்னை இவற்றிற்கு தயார்படுத்திக்கொள்ளல் ஆகிய அறநெறிகள் இல்வாழ்க்கைக்குரியது.

4.சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பே வாழ்க்கையின் ஒழுக்கம் ஆகும்.

5.அன்பும்,அறவழியுமே இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் உடையதாகவையாகவும் ஆக்கும்.

6.இல்வாழ்க்கை அறநெறியில் அமைத்துக்கொண்டால் பெரும் பயன் அதிகமாகும்.

7.இல்வாழ்க்கையின் இலக்கண முணர்ந்து வாழ்பவர்கள் நல்வாழ்க்கையில் தலையானவர்.

8.அறவழியில் நடந்து ...பிறரையும் அதில் ஈடுபட சொல்வாரின் ...அது துறவிகளின் தவத்தை விட
மேன்மை யுடையதாகும்.

9.பிறர் பழிப்புக்கு இடமில்லா இல்வாழ்க்கையே இல்லறம்.

10.வாழவேண்டிய அறநெறியில் வாழ்பவன் தெய்வத்துக்கு இணையாக போற்றப்படுவான்


6)வாழ்க்கைத் துணைநலம்
--------------------------------------------

1.பொருள் வளத்துக்கு ஏற்றார் போலவும்,நற்பண்புகளுடனும் அமையும் மனைவி
கணவனின் பெருந்துணையாகும்.

2.பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறந்ததாயிருந்தாலும் பயனில்லை.

3.நற்பண்புள்ள மனைவி அமைந்தால் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தாற்போல் ஆகும்.

4.பெண்ணுக்கு கற்பைத் தவிர பெருமைத்தருவது எதுவும் இல்லை.

5.சிறந்த மனைவி பெய் என்று சொன்னால்...மழையும் அது கேட்டு பெய்யுமாம்.

6.சிறந்த மனைவி கணவனையும் காத்து,உறுதி குலையாது புகழுடன் திகழ்வாள்.

7.பண்புள்ள மனைவியை அடிமை என எண்ணுவது அறிவுடமை ஆகாது.

8.நல்ல கணவனை அடைந்த பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

9.இல்வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் சமூகத்தில் நிமிர்ந்து நடக்கமுடியாது.

10.நல்ல குழந்தைகளுடனும்,பண்புகளுடனும் வாழ்வதே இல்வாழ்க்கையின் சிறப்பு.



7)மக்கட் பேறு
----------------------

1.அறிவுள்ள நல்ல பிள்ளைகளை பெறும் பேறே சிறந்த இல்வாழ்ககை.

2.பண்புள்ள குழந்தைகளை பெற்றெடுப்பவர்களை ஏழேழு பிறவிக்கும் தீமை அண்டாது.

3.நம் நற்செயல்களின் விளைவே ...நாம் பெறும் மக்கட்செல்வங்களாகும்.

4.நம் குழந்தைகளின் பிஞ்சுக்கையால் அளிக்கும் கூழ் அமிர்தத்தைவிட சிறந்ததாகும்.

5.நம் குழந்தைகளைத் தழுவுதல் உடலுக்கு இன்பத்தையும் ..அவர்கள் மழலை செவிக்கு இன்பத்தையும் தரும்.

6.குழலோசை,யாழோசை இனிமை என்பவர்கள் தங்கள் குழந்தைகளின் மழலையை கேட்காதவர்கள்.

7.தந்தை தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமை.....கல்வியறிவு தந்து அவையில் முதல்வனாக
இருக்கச் செய்தலே ஆகும்.

8.பெற்றோர்களை விட அறிவிற் சிறந்த பிள்ளைகளைக் கண்டால் உலகமே மகிழும்.

9.தன் மகனை பெற்றேடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியை விட ...அவனை ஊரார் புகழும் போது...
தாய் மிகவும் மகிழ்வாள்.

10....இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தான் என ஊரார் சொல்லும்படி நடப்பதே
தந்தைக்கு மகன் செய்யும் உதவி ஆகும்.


8)அன்புடமை
---------------------

1.அன்பைத் தாழ்ப்பாள் போட்டு பூட்ட முடியாது.அன்புக்குரியவர் துன்பம் அடைந்தால்,நமக்கு கண்ணீர் வரும்.

2.அன்பு உடையவர்..அன்பு இல்லாதவர் போலின்றி..தன் உடல்,பொருள்,ஆவி மூன்றும் பிறருக்கென்றே எண்ணுவர்.

3.உயிரும்,உடலும் இணைந்துள்ளது போல், அன்பும்,செயலும் இணைந்திருக்கும்.

4.அன்பு பிறரிடம் பற்றை ஏற்படுத்தும்.அவர் உள்ளம் நட்பை உருவாக்கும்.

5.அன்புள்ளம் கொண்டவர்கள் உலகில் இன்புற்று வாழும் சிறப்பு அடைவர்.

6.அறச்செயல்களுக்கு மட்டுமின்றி வீரச்செயல்களுக்கும் அன்பே துணையாய் நிற்கும்.

7.அறம் எதுவென தெரிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை...மனசாட்சி வாட்டி வதைக்கும்.

8.மனதில் அன்பற்றவர் வாழ்க்கை...பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்த்தது போன்றது.

9.அன்புள்ளம் இல்லாதவர்களின் புறத்தோற்றம் அழகாய் இருந்து என்ன பயன்?

10.அன்பு வழியில் நடக்கும் உடலே உயிருள்ள உடல் மற்றவை எலும்பை போர்த்திய வெறும் உடலாகும்


9)விருந்தோம்பல்
----------------------------

1.விருந்தினரை வரவேற்று ...அவர்க்கு வேண்டியதை செய்வதே இல்லறத்தானின் பண்பு.

2.சாகாத மருந்து கிடைத்தாலும் ..அதை விருந்தினர் வெளியே இருக்க நாம் மட்டும் உண்ணுவது
பண்பான செயல் அல்ல.

3.விருந்தினரை வரவேற்று மகிழ்பவரின் வாழ்வு என்றும் துன்பம் அடைவதில்லை.

4.முகத்தில் மகிழ்ச்சியுடன் விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

5.பண்பாளன் என்பவன்...எதுவுமே இல்லை என்றாலும் ...விதை நெல்லைக்கூட எடுத்து விருந்துக்கு
அளிப்பான்.

6. வந்த விருந்தை உபசரித்து அனுப்பி ...வரும் விருந்தை எதிபார்ப்பவன்...தேவலோகத்தினராலும்
போற்றப்படுவான்.

7.விருந்தினரின் சிறப்பை எண்ணி ...விருந்தை ஒரு வேள்வியாகக் கூட கருதலாம்.

8.செல்வத்தை சேர்த்து...அது அழியும்போதுதான் ...அந்த செல்வத்தை விருந்தோம்பலுக்கு
பயன்படுத்தவில்லையே. .என வருத்தம் ஏற்படும்.

9.பணம் படைத்தவர்கள் ..விருந்தினர்களை போற்றத் தெரியாவிட்டால் தரித்திரம் படைத்தவராகவே
கருதப்படுவர்.

10.வரும் விருந்தினரை முகமலர்ச்சியின்றி  வரவேற்றால் விருந்தினர் வாடிவிடுவர்.


10)இனியவை கூறல்
---------------------------------

1.வஞ்சனையில்லாமல்,அன்புடனும்,வாய்மையுடனும் பேசப்படுவதே இன்சொல் ஆகும்.

2.மனம் விரும்பி ஏதேனும் அளிப்பதை விட முகம் மலர்ந்து இனிமையாக பேசுவதே சிறந்தது.

3.முகம் மலரவும்,அகம் மலரவும் இனியவை கூறினால் அதுவே அறவழிப்பண்பாகும்.

4.அனைவரிடமும் இன்சொல்கூறி கனிவுடன் பழகினால் நண்பர்கள் அதிகமாக இருப்பர்.

5.சிறந்த பண்பும்.. இனிமையான சொல்லும் மட்டுமே சிறந்த அணிகலங்கள் ஆகும்.

6.தீய செயல்களை அகற்றினால் அறனெறித்தழைக்கும்.இனிய சொற்களை பயன்படுத்தினால்
நல்வழி ஏற்படும்.

7.நல்ல பண்பான சொற்கள் இன்பத்தையும்,நன்மையையும் உண்டாக்கும்.

8.இனிய சொல் ... ஒருவன் வாழும்போதும்...மறைந்தபிறகும் அவனுக்கு புகழ் தரும்.

9.இன்சொற்கள் இன்பத்தை தருதலால்...கடுஞ்சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும்.

10.இனிமையாக சொற்கள் இருக்கையில் கடுஞ்சொற்களை கூறுவது கனிக்கு பதில்
காயை உண்பதுபோல ஆகும்



11)செய்நன்றியறிதல்
--------------------------------------

1. அரிய உதவிக்கு வானமும்,பூமியும் கூட ஈடாகாது.

2.தேவைப்படும் சமயத்தில் செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும் அது பெரிதாக போற்றப்படும்.

3.பயனை எதிர்பாராது ...அன்பிற்காக ஒருவர் செய்த உதவி கடலை விடப் பெரிது.

4.தினையளவு சிறிய நன்மையை செய்தாலும்.. அதனால் பயனடைபவர் அதை பனை அளவு பெரிதாக எண்ணுவர்.

5.உதவி செய்யப்படும் அளவை பொருத்தது அல்ல...அதை பெறுபவரின் பண்பை பொருத்தது.

6.குற்றமற்றவர்கள் உறவையும், துன்பத்தில் நம்முடன் இருந்தவர் நட்பையும் இழக்கக்கூடாது.

7.ஒருவரின் துன்பத்தை போக்கியவரின் நட்பு ஏழேழு பிறப்புக்கும் போற்றப்படும்.

8.ஒருவர் செய்த நன்மையை மறக்கக்கூடாது. தீமையை செய்த அன்றே மறந்திட வேண்டும்

9.ஒருவர் நமக்கு செய்த தீமையை மறக்கவேண்டுமென்றால்..அதற்கு முன் அவர் செய்த ஒரு நன்மையை எண்ணினால்
போதுமானது.

10.எப்படிப்பட்ட தர்மத்தை மறந்தாலும்,ஒருவர் செய்த உதவியை மட்டும் மறக்கவே கூடாது.


12)நடுவுநிலைமை
-------------------------------

1.ஒருவரை பகைவர்,அயலார்,நண்பர் என பகுத்து பார்க்காமல் செயல்படுவதே நடுவு நிலைமை ஆகும்.

2.நடுவுநிலையாளனின் செல்வம் அழியாமல்,வரும் தலைமுறையினருக்கும் பயன் அளிக்கும்.

3.நடுவுநிலை தவறினால் நமக்கு பயன் கிடைக்குமென்றால்கூட ...அந்தப் பயனை பெரிதாக
எண்ணாமல் நிலை மாறக்கூடாது..

4.ஒருவர் நேர்மையானவரா..நெறிதவறியவரா என்பதெல்லாம் அவருக்குப்பின் உண்டாகக்கூடிய
புகழையோ,பழிச்சொல்லையோ வைத்து அறியலாம்.

5.வாழ்வும்,தாழ்வும் இயற்கை நியதி.இரு நிலையிலும் நடுவுநிலைமை மாறக்கூடாது..

6.நடுவுநிலை மாறி செயல்படுவோம் என்ற எண்ணம் தோன்றியதுமே அவனது அழிவுகாலம்
ஆரம்பித்துவிடும்.

7.நடுவுநிலைமை காப்பவருக்கு அதனால் வறுமை ஏற்பட்டாலும் ...உலகம் அவரை போற்றவே செய்யும்.

8.தராசுமுள் ...நேராக நின்று அளவை காட்டுதல் போல,நடுவுநிலைகாரர்களும் இருக்கவேண்டும்.

9.நேர்மை,உறுதி இருப்போர் சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும்.

10.பிறர் பொருளையும்,தன்னுடையது போல எண்ணி வாணிகம் செய்தலே நேர்மை எனப்படும்.

Thursday, January 21, 2016

49- சுவர்க்கத்தை அடைய....


அந்தணர் எனப்படுபவர், தினமும் காலை-மாலை குளிக்க வேண்டும்.பூணூல் அணிந்திருக்க வேண்டும்.வேதம் ஓத வேண்டும்.சுகாதாரமற்ற உணவை உண்ணக் கூடாது.உண்மையே பேச வேண்டும்.தன் குரு சொன்ன சடங்குகளைச் செய்து வர வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் சுவர்க்கத்தில் வாழ்வர்

சத்திரியர் எனப்படுபவர் , வேதங்களின் பொருளை அறிய வேண்டும்.தூய்மையான வேள்விகள் நடைபெற உதவ வேண்டும்.தானும், வேள்விகளை நிகழ்த்த வேண்டும்.குடிமக்களை பராமரிக்க வேண்டும்.பசுக்களுக்கும், வேதவிற்பன்னர்களுக்கும் தீங்கு நேராமல் பாதுகாக்க வேண்டும்.போர்க்களத்தில் கொல்லப்பட தயாராய் இருக்க வேண்டும்.அத்தகையோர் சுவர்க்கத்தில் வாழ்வர்

வைசியர் எனப்படுபவர், வேதங்களின் பொருளைக் கேட்டறிய வேண்டும்.உரிய சமயத்தைல் தன் செல்வத்தை வாரிசுகளுக்குக் கொடுப்பதுடன் ,அந்தணர்களுக்கும்,சத்திரியர்களுக்கும்,சொத்தில் பங்கு தர வேண்டும்.மூவகை வேள்விகளின் புனிதப் புகையை நுகர வேண்டும்.இப்படிப்பட்ட வைசியர் சாவிற்குப் பின் சுவர்க்கத்தில் வசிப்பர்

மேற்படி மூவருணங்களுக்கு அப்பாற்பட்ட நான்காம் வருணத்தில் உள்ளவர்கள், அந்தணர்கள் - சத்திரியர்கள்- வைசியர்கள் ஆகியவரின் அதே வரிசைப்படி மதித்து, வழிப்பட்டு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.இதனால் மூவருணத்தினரும் திருப்தியடைவர்.அவர்களுக்கு பணிவிடை செய்த இவர்களின் பாவம் நீங்கும்.நிம்மதியுடன் இவர்கள் இறப்பார்கள்.அதற்குப்பின் இவர்கள் சுவர்க்கத்தில் இன்பமாய் வசிப்பர்

அரசே! நான்கு வருணத்தினர் கடமைகளையும் கூறினேன்.அதற்குக் காரணம் உண்டு.இதுவரை,..சத்திரியர்களுக்குரிய முறையில் தருமபுத்திரர் தன் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை.ஆகவே, அவரை அரியணையில் அமர்த்தி ஆட்சிப் பொறுப்பை ஒப்படையுங்கள்" என விதுரர் கூறி முடித்தார்

விதுரர்க்கு திருதராஷ்டிரர் பதில் கூறலானார்....

"விதுரா! நீ தொடர்ந்து அறிவுறுத்தி வருவதைப்போலத்தான், நடவடிக்கை எடுக்க நான் விரும்புகிறேன்.ஏனெனில் உன் அறிவுரைகள் சரியானது ஆகும்

எனது மனம் எப்போதும் பாண்டவர்க்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறது.ஆனால், துரியோதனனிடம் கொண்ட பாசம் என் மனதை மாற்றிவிடுகிறது.
விதியின் வலிமை பெரியது.இதுவரை விதியை வென்றவர் இல்லை.நாம் எவ்வளவு முயற்சித்தாலும் விதியின்படிதான் நடக்கும்.விதியின் போக்கை மாற்றவோ..தடுக்கவோ முடியாது,விதி வலியது" என்று முடித்தார்
(திருதிராஷ்டிரர், தன்னால் முடியாது என்பதை கூறாமல் விதியின் மீது பழையைப்போட்டார்.ஆனால் துரியோதனின் செயலுக்கு தண்டனை வேண்டும்.பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதும் விதியின் செயல்  என்று அவர் நினைப்பதாகக் கொள்ளலாம்)



ஊழை விட வலியது இல்லை என்கிறார் வள்ளுவரும்...

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.
சூழினுந் தான்முந் துறும்

விதியைவிட வலிமை உள்ளது வேறு என்ன?ஊழை விலக்க வேறு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் ஊழ்தான் வந்து நிற்கும்.

48-வாழ்வின் முடிவு சாவு




எத்தனை மாவீரர்கள், மாமன்னர்கள் கடந்த காலத்தில் தோன்றியிருக்கின்றனர்! தானிய செல்வத்திலும்,மற்றவகைச் செல்வங்களாலும் நிறைந்து விளங்கிய நிலப்பரப்பை ஆட்சி புரிந்துள்ளனர்.அவர்களுக்குச் சாவுத்தெய்வம் சலுகைக்காட்டவில்லை.எல்லாவற்றையும் இழந்து சாவுக்கு இரையாகிவிட்டனர்

நாம், மிகுந்த கவனத்தோடும், முயற்சியோடும் மகனை வளர்த்து பெரியவன் ஆக்குகிறோம்.அவன் இறந்துவிட்டால்....என்ன செய்வது? உடலை வீட்டிலிருந்து மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.வீட்டுப் பெண்கள் அலறிப் புலம்புவார்கள் என வீட்டில் பிணத்தை வைத்திருக்க முடியுமா? யார் எப்படி அழுதாலும்....விறகுகள் நடுவே உடலையும் விறகாய் சிதையில் வைக்க வேண்டியதேத் தவிர வேறு வழியில்லை

வாழ்நாள் முழுதும் உழைத்து இறந்த ஒருவன் திரட்டிய செல்வத்தை வேறொருவன் அனுபவிக்கிறான்.நாம் எவ்வளவு சீராட்டி வளர்த்தாலும்..ஐந்து மூலப்பொருட்களால் ஆன இவ்வுடலை பறவைகள் மிச்சமின்றி அழிக்கின்றன...அல்லது நெருப்பு எரித்துவிடுகிறது.இறந்தவன், இதுவரை செய்த பாவபுண்ணியங்கள் என்றும் உடன் வர மேலுலகம் செல்கிறான்

மரங்கள் பூப்பதையும், கனிகள் தருவதையும் நிறுத்தி விட்டால் அவற்றை விட்டு பறவைகள் வேறிடம் சென்று விடும்.அதுபோலவே, ஒருவன் இறந்துவிட்டால்....அவனால் இனிப்பயன் இல்லை என அவனுடைய மகன்களும்,உறவினர்களும், நண்பர்களும் அவன் உடலைச் சுடுகாட்டில் வைத்துவிட்டு வந்து விடுகின்றனர்

சிதை நெருப்பில் போடப்படுகின்ற இறந்தவனுடைய ஆத்மாவுடன் வருபவை அவன் வாழ்க்கையில் செய்த காரியங்களின் பலன் மட்டுமே..ஆகவே நாம் எப்படிப்பட்டாவது கொஞ்சம்..கொஞ்சமாகவாவது நற்செயல்கள் செய்து புண்ணியத்தை சேகரிக்க வேண்டும்

நாம் வாழும் இவ்வுலகில் மேற்பகுதியிலும்...கீழுள்ள பகுதியிலும் வேதனையான இருண்ட உலகங்கள் பல உண்டு.அவை நம் புலன்களையும்  திணறும் அளவிற்குக் கொடுமையானவை.துரியோதனன் மீதுள்ள பாசம் காரணமாக பாவச்செயல்களுக்கு உடந்தை போய் அந்தக் கொடிய உலகங்களில் தள்ளப்பட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
(மேலுலகங்கள் - பூலோகம்,சுவர்லோகம்,அயர்லோகம்,சனலோகம்,தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்
 கீழுலகங்கள்- அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,மகாதலம்,ரசாதலம், பாதாளம்)

அரசே! நான் கூறிய அறிவுரைகளைப் பொறுமையுடன் கேட்டீர்கள்.அதன்படி நீங்கள் உண்மையாக நடந்து கொண்டால் இவ்வுலகில் பெரும் புகழ் பெறுவீர்கள்.பின்...இவ்வுலகில் எதற்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்.மேலுலகிலும் அஞ்சும்படி எத்துன்பமும் விளையாது

ஆத்மா..ஒரு நதிக்கு சமம்.புண்ணியச் செயல்களே அந்நதியில் குளிப்பதற்குரிய இடமாகும்.சத்தியமே...அந்நதியின் நீர்ப்பெருக்கு.ஐம்புலன் கட்டுப்பாடே அந்நதியின் கரைப்பகுதி.கருணை உணர்வே அதன் அலைகள்.அதில் குளிப்பவன் தூய்மைப் பெற்றுப் புண்ணியசாலியாகிறான்.ஏனெனில் ஆத்மா புனிதமானது.ஆசைகளைத் துறத்தலே தலை சிறந்த புண்ணியமாகும்

உலக வாழ்க்கை என்பது ஒரு நதி.அதில் ஐம்புலன் ஆசைகள் தண்ணீராய் உள்ளன.காமம்,சினம்,என்ற முதலைகள் அதில் நிறைந்துள்ளன.மீண்டும், மீண்டும் பிறத்தல் என்ற நீர்ச்சுழல்கள் நம்மை அச்சுறுத்துகின்றன.இத்தகைய பயங்கர ஆற்றை நாம் சுயக்கட்டுப்பாடு என்ற படகின் உதவியோடு கடக்க வேண்டும்

நம்மைச் சுற்றியுள்ளவர்களில் அல்லது உறவினர்களில் யாராவது அல்லது சிலர் விவேகத்திலோ, நற்பண்பிலோ,உலக அறிவிலோ, வயதிலோ நம்மைவிட மூத்தவர்களாக  இருக்கக் கூடும்.அப்படிப்பட்டவர்களுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.அவரது தயவைப் பெற்றிட வேண்டும்.நாம் ஒரு சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்....என்ன செய்யக்கூடாது என அத்தகைய மூத்தவரிடம் ஆலோசனைப் பெற்று அதற்கேற்ப நடந்து கொண்டால், தவறு செய்ய வாய்ப்பே இல்லை

நாம் காமத்தையும், வாயுணர்வையும் உள்ளத்து வலிமையைக் கொண்டு அடக்கி ஆள வேண்டும்.கைகளையும், கால்களையும் கண்களின் உதவியால் கட்டுப்படுத்த வேண்டும்.கண்களையும்-செவிகளையும் மனத்தால் வசப்படுத்த வேண்டும்.சிந்தனையையும், பேச்சையும் செயல்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும். 

Wednesday, January 20, 2016

47-முன்னேற்றத்தைத் தடுக்கும் பகைவர்கள்



ஒருவன் நல்ல மனிதர்களால் மதிக்கப்பட்டு,எந்தப் பற்றும் இல்லாமல்கடமைகளை செய்து வந்து,தனது ஆற்றலை வீணாக்காமல் உழைத்து வந்தால் அவன் விரைவில் புகழ் பெறுவான்.ஏனெனில்,சான்றோரிடம் நாம் திருப்தித் தரும் விதத்தில் நடந்து கொண்டால், அவர்கள் நம் வாழ்வை மகிழ்ச்சி ஏற்படும்படி செய்யும் வல்லவர்கள் ஆவர்

ஒரு பொருளோ, பரிசோ, பதவியோ தவறான வழிமுறையைப் பின்பற்றி வாங்கப்பட்டிருந்தால் நாம் உடனே அதை மறுத்து விட வேண்டும்.பாம்பு தன் சட்டையை உரித்த பின் அதை அப்படியே போட்டுவிட்டுச் செல்வது போல, தவறான வழியில் கிடைக்கும் எதன் மீதும் பற்று வைக்காது உதறித் தள்ளினால் நாம் எத்துன்பமும் இன்றி சந்தோஷமாக வாழலாம்

பொய் வழக்கு மூலம் மேன்மை பெறுவதும், அரசர் மீது வெறுப்பு கொண்டு, அவரை பகைத்து கொள்வதும், குருவிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து அவை சரியானவைதான் என பிடிவாதமாகக் கூறுவதும்...வேதம் படித்த அறிஞனைக் கொல்வதற்குச் சமமாகும்.(வேதம் படித்தவன் அறிவு, ஒழுக்கம்,பண்பு, லட்சியம், எளிமை,ஆன்மீக நாட்டம், புலன்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முதன்மையானவர்கள் ஆவார்கள் )

பொறாமை குணம் சாவதற்கு சமமாகும்.கடுஞ்சொற்கள் சொல்வது, வசைமாரி பொழிவது, நமது செல்வச் சிறப்புகளுக்குச் சாவுமணி அடிப்பதற்கு சமமாகும்.ஆன்மீக குரு உபதேசம் செய்கையில் கவனிக்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் அவசரப்படுத்துவது, தற்பெருமையடித்துக் கொள்வது ஆகிய மூன்றும் நம்மைக் கல்வியறிவில் முன்னேறாமல் தடுக்கும் பகைவர்கள் ஆகும்.

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல்,தடுமாற்றம், கூட்டமாக அரட்டை அடித்தல்,முரட்டுப் பிடிவாதம், போலித்தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்

வாழ்க்கையில் புலன் இன்பங்களைத் தேடி அலைபவர்கள், கல்வி, கேள்விகளில் எப்படி சிறப்பு அடைய முடியும்? அது போலவே..அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவன் சுகத்தைத் தேடி அலையக் கூடாது.வாழ்க்கையில் வசதிகள்தான் முக்கியம் என நினைப்பவன், அதே நேரம் அதிக அறிவையும் பெற்றிட வேண்டும் என்ற  ஆசையைக் கைவிட வேண்டும்.படிப்புதான் முக்கியம் என நினைப்பவன், வசதிகளுக்கும்,இன்பங்களுக்கு ஏங்கக் கூடாது

எவ்வளவுதான் கரி, விறகுகள் போட்டாலும் நெருப்பு திருப்தி அடையாது.எத்தனை நதிகள் வந்து கலந்தாலும் கடல் திருப்தியடையாது புதிதாக வருவதையும் ஏற்கும்.கோடிக்கணக்கான உயிர்களை கவர்ந்து சென்ற பின்னும் சாவுக்கடவுளுக்கு திருப்தியாகவில்லை.அழகிய பெண் ,எத்தனை ஆண்கள் தன்னைப் பார்த்து மயங்கினாலும், அனைவரும் தன் அழகுக் கண்டு மயங்க வேண்டும் என எண்ணுவாள்.

ஆசை சுயக்கட்டுப்பாட்டை அழிக்கும்.சாவு, வளர்ச்சியைத் தடுத்து அழிக்கிறது.கோபம் செல்வத்தை அழித்துவிடும்.கருமித்தனம் புகழைக் கொல்லும்.பராமரிப்பில் அக்கறையில்லாவிடின் பசுக்கள் இறந்துவிடும்.ஒரு அந்தணர்க்கு சினம் ஏற்பட்டால்..ஒரு பேரரசையே அழிக்கும்

நம்முடைய வீடுகளில் ஆடுகள், வெண்கலப்பாத்திரங்கள்,வெள்ளிப்பாத்திரங்கள்,தேன், விஷமுறிவு மருந்துகள், பறவைகள் முதலியவற்றையும், புனித நூல் கற்ற அந்தணர், வயதான உறவினர், துன்பத்தில் சிக்கிக் கொண்ட உயர்குடிப் பிறப்பினர் ஆகியவர்களையும் பராமரிக்க வேண்டும்

ஆடுகள், எருதுகள்,சந்தனம்,வீணை,முகம் பார்க்கும் கண்ணாடி,தேன்,நெல், இரும்பு,தாமிரம்,சங்கு, சாலகிராமம்,மஞ்சள், கோரோஜனை ஆகியவை மங்களப் பொருட்களாகக் கருதப்படுகிறது

மேற்கண்ட பொருட்களை நாம் வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும் என மனு அறிவுறுத்துகிறார்.ஏனெனில், அவை பூஜைக்கும்,பெரியவர்களை வழிபடவும்,விருந்தினரை உபசரிக்கவும் பயன்படும் என மனு கூறியுள்ளார்

இன்னொரு நேர்த்தியான விஷயம் -- நாம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறவழியைக் கைவிடக் கூடாது.எதன் மீதாவது விருப்பம் கொண்டோ, எவரிடமும் பயந்தோ,எதற்காகவாவது பேராசைப்பட்டோ தர்ம நெறியிலிருந்து விலகக் கூடாது
...
அறம் நிரந்தரமானது.ஆனால் இன்பமும், துன்பமும் தற்காலிகமாக வந்து செல்லும் நிகழ்ச்சிகளாகும்.வாழ்க்கை நிரந்தரமானது...ஆனால் அது எடுக்கும் வடிவங்கள் மாயையானவை.நிகழ்ச்சிகள் மீது நாம் பற்றுக் கொள்ளக் கூடாது. நிரந்தரமானவற்றை நாம் பற்றிக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும்.நல்ல மனிதர்கள் இத்தகைய திருப்தியை அடைவதிலேயே முழுக் கவனமும் செலுத்துவார்கள்

Tuesday, January 19, 2016

46- வெற்றி அடைய....



உயர்தரமான மனிதன் ,ஒரு காரியத்தில் முயன்று தோல்வியடைந்தாலோ, இழப்பிற்கு ஆளானாலோ அவன் சும்மா இருப்பதில்லை.பின், சரியான புதிய வழியொன்றைப் பின்பற்றி, தான் இழந்ததை மீண்டும் கை பற்றுவேன் என்று சபதம் ஏற்பான்.(பாண்டவர் இழந்த்தை மீண்டும் பெறுவார்கள்)

நாம் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்னைகளை சமாளிக்கும் வழிகளை அறிந்திருக்க வேண்டும்.நிகழ்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும்.நடந்ததற்கு வருந்தாமல்...அதன் விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராக  இருக்க வேண்டும்.இவ்வாறு முக்காலம் குறித்தும் தெளிவாக இருந்தால் , தன் குறிக்கோள்களை அடைவதில் தோல்வி ஏற்படாது.

ஒருவன் சிந்தனையாலும், பேச்சாலும், செயலாலும் இடைவிடாது தன் லட்சியங்களில் முழுமையாக ஈடுபட்டால் அந்த லட்சியம் அவனை நோக்கி வரும்.ஆகவே நாம்.நமக்கு நன்மை தரும் விஷயங்களையே அறிந்திருக்க வேண்டும்

பிறருக்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுதல், சோம்பல் இல்லா முயற்சி,அறிவு, சுறுசுறுப்பு, நேர்மை ஆகியவற்றைப் பெற்றிருத்தல், நல்ல மனிதர்கள் இருப்பிடம் சென்று அவர்களை அடிக்கடி சந்தித்தல் ஆகியவை மூலம் வாழ்க்கையில் வளம் பெற முடியும்

விடாமுயற்சி, வாழ்க்கை வளத்திற்கு ஊற்றுக் கண்ணாகும்.விடாமுயற்சியின் மூலம் லாபமும்,மகிழ்ச்சியும் விளைகின்றன.எளிதில் சலிப்படைந்து, தளராமல் தொடர்ந்து முயற்சி செய்பவன் உயர் நிலையை அடைவான்.ஆனந்தமாய் இருப்பான்

அனைவருக்கும் பொறுமைத் தேவை.வலிமையற்ற ஒருவன் எல்லாப் பிரச்னைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வது நல்லது.ஒருவன் வல்லமை உடையவனாயினும் அவன் பொறுமையை ஒழுக்கத்தின் அம்சமாகக் கருதி கடைப் பிடிக்க வேண்டும்.நல்லது-கெட்டது இரண்டையும் சமமாக நினைப்பவன் மன்னிக்கும் உள்ளம் கொண்டவன் ஆவான்

ஒருவன் புலன்வழி இன்பங்களை அனுபவித்துக் கொண்டு, அதே நேரம் நற்பண்புகளை இழக்காமலும், உலகிற்கு நன்மை செய்வதை மறக்காமலும் இருந்தால்...அவன் புலன்வழி இன்பங்களில் ஈடுபடினும் தவறில்லை.ஆனால் முட்டாள்தனம் மேலோங்கி, புலன்வழி இன்பங்களை மிகையாக ஈடுபடுபவனாக மட்டுமே ஆகிவிடக் கூடாது

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்குக் கவலை வசப்படுபவர்கள் ,தொடர்ந்து தவறு செய்பவர்கள்,கடவுளை நம்பாதவர்கள்,சோம்பேறிகள்,சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள், முயற்சியும்-உழைப்பும் செய்யாதவர்கள் ஆகியோரிடம் செல்வமும், வாழ்க்கை வசதிகளும் தங்கி நிற்பதில்லை

வாழ்க்கையில் நேர்மையாக இருப்பவனை, மேலும் நேர்மைக் காரணமாகத் தவறான செயல்களில் ஈடுபடுவதற்குக் கூசுபவனை, கோணல் புத்திக்காரர்கள், பலகீன மானவன் என மட்டம் தட்டுவார்கள்.அவனுக்குத் தொல்லைத் தருவார்கள்

அளவிற்கு மீறித் தகுதியுடையவனாகத் தன்னைப் பற்றி நினைப்பவன், எல்லை மீறி பிறருக்கு வாரி வழங்குபவன்,அளவு கடந்த வீரம் உள்ளவன்,தன்னை வருத்திக் கொண்டு கடும் விரதங்களைப் பின்பற்றுபவன், தானே அறிவாளி என எண்ணிக் கொண்டிருப்பவன்..ஆகியோரிடம் செல்வமும், வசதிகளும் வராமல் விலகி நிற்கும்

அளவிற்கு மீறிய ஒழுக்கமுடைய சான்றோர்கள் வளமும், வசதியும் பெறுவதில்லை.பண்பே  இல்லாதவர்களிடம் செல்வமும், வசதிகளும் நிலைத்து நிற்பதில்லை.பண்பாளனைத் தேடி செல்வம் செல்வதில்லை.பண்பில்லாதவரிடம்தான் செல்வம் சேருகிறது என்றும் உறுதி படக் கூற முடியாது

கட்டுப்பாடின்றித் திரியும் ஆவேசமான மாடு போல செல்வமும் குருட்டுத்தனமாக யாரிடம் வேண்டுமானாலும் போய்ச் சேருகிறது.

தீ மூட்டித் தேவதைகளுக்கு செய்யும் வேள்விகளால், வேதங்களில் கூறப்படும் நற்பலன்கள் ஏற்படும்.புனித நூல்களைப் பயின்றால் . நற்குணங்களும்,நன்னடத்தையும் நமக்கு அமையும்.மனைவியாக அமையும் பெண் மூலம், குடும்ப இன்பமும்,மக்கள் பேறும் கிடைக்கும்.நம்மிடம் செல்வம் இருந்தால் நாம் மகிழ்வுடன் விளங்கிப் பிறரையும் சந்தோஷப்படுத்தலாம்.

இறந்தபின் மேலுலகில் பல நன்மைகளும்,இன்பங்களும் பெறுவதற்காகப் பலர் இவ்வுலகில் பலியுணவு,காணிக்கை போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.ஆனால், தவறான முறையில் பணம் சம்பாதித்து அதை வைத்து இந்த சடங்குகளைச் செய்தால்,சாவிற்குப் பிறகு விண்ணுலகில் எந்நன்மையும் விளையாது.

தைரியம் நிறைந்த மனிதன் மக்கள் நடமாட்டமில்லா பாலைவனப் பகுதியிலோ, யாரும் நுழைய முடியா அடர்ந்த காட்டிலோ, நுழைய முடியா கோட்டையிலோ பயங்கர ஆபத்து எற்பட்டாலோதிகைப்பூட்டி தடுமாற வைக்கின்ற சூழ்நிலையிலோ, எதிரி தனக்கு எதிராக ஆயுதத்தை உயர்த்தி விட்ட நிலையிலோ சிக்கிக் கொண்டால் பயப்பட மாட்டார்கள்.

சுறுசுறுப்பாக உழைத்தல்,சுயக்கட்டுப்பாடு,நுணுக்கமானத் திறமை,கவனமாக வேலை செய்தல்,மனவுறுதி,நினைவாற்றல், நன்கு யோசித்த பிறகே பணிகளை மேற்கொள்ளுதல்- இவை நல் வளத்தையும், வசதிகளையும் பெருகச் செய்யும் குணங்களாகும்

துறவிகளின் வலிமை தவத்தில் உள்ளது.மெய்ஞானம் பெற்ற வேத அறிஞர்களின் வலிமை பரம்பொருள் பற்றி அவர்கள் அறிந்திருப்பதில் உள்ளது.தீயவர்களின் வலிமை வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பண்பாளரின் பலம் பொறுமையில் அடங்கியுள்ளது

விரதங்களை மேற்கொள்கையில், நடுவில் தண்ணீர்,மூலிகை, பழம்,பால், நெய் ஆகிய ஐந்தை சாப்பிட்டாலோ, புரோகிதர் சொல்படி நடந்து கொண்டாலோ. குருவின் கட்டளைப்படி அச்சமயத்தில் வேறு வேலை செய்தாலோ, மருந்து குடித்தாலோ அவை விரதத்திற்கு பங்கமாகக் கருதப்படுவதில்லை

நமக்கு மற்றவர்களால் என்ன நேரக்கூடாது, நம்மை மற்றவர்கள் என்ன செய்யக்கூடாது என விரும்புகிறோமோ அதை நாமும் பிறருக்குச் செய்யக் கூடாது.இவ்வாறு நம்மை கட்டுப்படுத்திக் கொண்டாலே...இவற்றிலிருந்து நற்பண்புகள் தோன்றும்.தீய குணங்கள் எல்லாம் மிகையான புலனாசைகளால் தோன்றுகின்றன

கோபப்படுபவனை பொறுமையாலும், தீயவர்களை நற்செயல்களாலும்,கருமியை தாராள மனப்பான்மை மூலமும், பொய் பேசுபவனை நேர்மையாலும் நாம் வெல்ல முடியும்.(மற்றவர் கோபிக்கும் போது நாம் பொறுமையாக இருந்தால் அவர் கோபம் நீங்கிவிடும்)

நாம் கீழ்கண்டவர்களை நம்பி ரகசியங்களைச் சொல்லக் கூடாது.பெண், போக்கிரி,சோம்பேறி,கோழை,கடுங்கோபம் கொள்பவன்,தன் வலிமைப் பற்றி பெருமை பேசுபவன்,திருடன்,நன்றி கெட்டவன்,நாத்திகன் ஆகியோர் ரகசியங்களைப் பாதுகாக்க வல்லவர்கள் அல்ல

எவன், தன்னைவிட உயர்ந்தவர்களை பணிவுடன் வணங்குபவனாகவும், மூத்தவர்களுக்கு சேவை செய்வதை வழக்கமாகவும் கொண்டுள்ளானோ அவன் அதிகம் பாராட்டப்படுவான்.அவன் ஆயுள் கூடும்.அவனது புகழும், ஆற்றலும் வளரும்

சில காரியங்களை நிறைவேற்றுவது கடினம்.மிகவும் துன்பப்பட்ட பிறகோ, நற்பண்புகளை கைவிட்டோ, எதிரியின் கால்களில் விழுந்தோ நாம் விரும்பும் குறிப்பிட்ட சில பொருட்களை அடைய முடியுமனால் அப்பொருட்கள் மீது ஆசை வைக்கக் கூடாது

கல்வியறிவற்றவன் பரிதாபத்துக்குரியவன்.தாம்பத்திய உறவு இருந்தும் குழந்தைகள் பிறக்காவிடின் அது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.அரசன் இருந்தும் உணவின்றி பட்டினியால் வாழும் குடிமக்கள் இரக்கத்துக்குரியவர்கள்.குடிமக்கள் இருந்தும் அரசனில்லா நாடு பரிதாபகரமான நிலையில் இருக்கும்

நெடுந்தூரம் நடப்பது, (நீண்ட பயணம்) உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.உயரத்திலிருந்து விழும் நீர் மலையையும் தேய்த்துவிடும்.தாம்பத்திய சுகம் அறியாத பெண்கள் விரைவில் மூப்பு எய்துவர்.கடுமையான சொற்கள் அம்பு போல பாய்ந்து மனக்கலக்கத்தையும், சோர்வையும் உண்டாக்கி விடும்

சம்பிரதாய முறைப்படி பயிலவில்லை எனின் அல்லது பயின்றதை பின்பற்றாவிடில் வேதங்களின் தூய்மையும்,பாஹ்லீகர்கள் என்ற இனத்து மக்களால் பூமியின் தூய்மையும், பொய்யுரைப்பதால் மனிதர்களின் தூய்மையும் களங்கப்பட்டுவிடுகிறது(பாஹ்லீகர்கள் என்ற இனம் நாகரீகமற்ற, பாவச்செயல்கள் புரியும்...இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்து வந்தனர்)

கற்புள்ள பெண் தேவையின்றிப் பல விஷயங்களில் ஆர்வம் காட்டினால் அவளது தூய்மை கெட்டுவிடும் அபாயமுள்ளது.பொதுவாகவே பெண்கள் கணவரைப் பிரிந்திருந்தால் மாசு அடையக் கூடும்.தங்கம் தரம் குறைந்தால் வெள்ளியின் மதிப்பிற்கு இறங்கிவிடும்.வெள்ளி தரம் குறைந்தால் தகரத்தின் விலைக்கு விற்கும்.ஈயம் தூய்மை கெட்டால் அதைவிட மோசமான பொருள் கிடையாது.

படுத்துக் கிடப்பவன் மூலம் தூக்கத்தை வெல்ல முடியாது.உடலின்பத்தை அனுபவிப்பதன் மூலம் பெண்களை வெல்ல முடியாது.எரிபொருள் மூலம் நெருப்பை அணைக்க  முடியாது.குடிப்பதன் மூலம் மதுப்பழக்கத்தை வெல்ல முடியாது.

நண்பர்களுக்கு அவ்வப்போது அன்பளிப்புகள் அளித்து அவர்களை வசப்படுத்துபவர்கள்,எதிரிகளைப் போரில் தோற்கடித்தவர்கள்,நல்ல உணவுகளும்,பானங்களும் கிடைக்குமாறு வசதியான வாழ்க்கையை மனைவிக்கு ஏற்படுத்தித் தந்தவர்கள் ஆகியோர் வாழ்வில் வெற்றி வீரர்களாக விளங்குவர்.

ஆயிரக்கணக்கில் வருமானம் உடையவரும் வாழ்கிறார்கள்.நூற்றுக்கணக்கான வருமானம் வருபவரும் வாழ்கிறார்கள்.எதுவுமே இல்லாதோரும் எப்படியோ உயிர் வாழ்கிறார்கள்.திருதராஷ்டிரரே! நாடும், அரசும் இருந்தால்தான் வாழலாம் என்ற நினைப்பையும், ஆசையையும் விட்டுவிடுங்கள்

உலகில் உணவு தானியங்கள், தங்கம், மிருகங்கள்,பெண்கள் நிறைந்து கிடந்தாலும், மனிதனின் ஆசை தனிவதில்லை.இதைப் புரிந்து கொண்டால், உலகில் எல்லாப் பொருட்களும் தமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக நினைக்க மாட்டோம்

அரசே! உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்...உங்கள் புதல்வர்களையும், பாண்டுவின் புதல்வர்களையும் சமமாகக் கருதி எவ்வித வித்தியாசமும் இல்லாமல் இருவரையும் சமமாக நடத்துங்கள்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.



Saturday, January 16, 2016

45-நட்பைத் தேர்ந்தெடுத்தல்



புத்திசாலியான மனிதன் தனது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து அறிஞர்களுடன் நட்பு கொள்ள வேண்டும்.நல்லது-கெட்டது அறிந்து நண்பர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.இதற்காக தனது காதுகளையும், கண்களையும் , விவேகத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம்.வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.பொறுமையின் மூலம் கோபத்தை வெல்லலாம்.நன்னடத்தையின் மூலம் எல்லா அம்சங்களையும் நீக்கலாம்

ஒரு மனிதனின் குலமரபின் உயர்வை அவன் பயன்படுத்தும் அல்லது வைத்துக் கொண்டிருக்கும் பொருட்கள், சொந்தமாகக் கொண்டுள்ள நிலம், வீடு,பொதுவான நடத்தை, உணவுப் பொருட்கள், உடைகள் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிட வேண்டும்

உலகப் பற்றுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனும், புலன் நுகர்ச்சிக்குரிய ஏதேனும் தன்னை வந்தடைந்தாலும், அதை மறுத்து அனுபவிக்காமல் இருந்துவிட மாட்டான்.பற்றற்றவன் நிலையே இப்படியெனில், ஆசைகளில் நிரம்பிவழியும் சாதாரண மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?

நம்முடன் பழகுபவர்களில் நல்லறிவை பெற்றவர்களையும்,அறிவாளிகளைச் சார்ந்திருப்பவர்களையும், நல்ல நடத்தை, இனிய தோற்றம், சுமுகமாகப் பழகுதல், இன்சொல் கூறும் பண்பு ஆகிய சிறப்புகள் உடையவர்களையும் நாம் நண்பர்களாக வைத்துக் கொள்ள வேண்டும்

ஒருவன் தாழ்ந்த குலத்திலோ, உயர் குலத்திலோ பிறந்திருக்கலாம்.அவன் அறநெறிக்கு புறம்பானதைச் செய்யாதவனாகவும், நற்பண்புகளுக்கு மதிப்புக் கொடுப்பவனாகவும், மென்மையும்-கனிவும் உள்ளவனாகவும், தீயதைச் செய்யக் கூசுபவனாகவும் இருந்தாலவன் உயர்குலத்தைல் பிறந்த சிறப்புடைய நூறுபேர்களைவிட உயர்ந்தவனாகப் போற்றப்படுவான்

நெருங்கிப் பழகும் இருவர்,ஒரே மாதிரியான மனப்பான்மை, ரகசியங்களை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுதல்,ஒரே மாதிரியாக உலகவிஷயங்களைப் புரிந்து கொள்லுதல் ஆகிய ஒற்றுமையான தன்மைகளைக் கொண்டிருந்தால் ,அவ்விருவரிடையே நிலவும் நட்பு ஒருபோதும் தேயாது.

ஒருவன் கொடிய மனம் கொண்டவனாகவும், சரியான படிப்போ-பயிற்சியோ பெறாதவனாகவும் இருந்தால் அவனுடன் அறிவாளி நட்பு கொள்வதைத் தவிர்ப்பான்.தண்ணீரை.மறைத்துப் பாசி படிந்துள்ள கிணற்றைப் போல மனம் விட்டுப் பேசாமால் மூடி மறைத்துப் பேசுகின்றவனையும் நண்பனாக்கிக் கொள்வதை அறிஞர்கள் தவிர்ப்பர்.ஏனெனில் அப்படிப்பட்ட நட்பு நீடிக்காது

கர்வம் நிறைந்தவர்கள்,அறிவிலிகள், கோபாவேசப்படுபவர்கள், அவசரப்படுபவர்கள், பண்புகள் அமையப் பெறாதவர்கள் ஆகியோருடன் நட்புக் கொள்வதை புத்திசாலி தவிர்த்துவிட வேண்டும்

நன்றியுடையவர்கள்,பண்பாளர்கள்,உண்மையானவர்கள்,உயர்தரமானவர்கள், விசுவாசிகள்,சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள், ஒழுக்கத்திலும்-நேர்மையிலும் உறுதியானவர்கள் ஆகியவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது விரும்பத்தக்கது.

புலன்களை அவை நாடும் இன்ப நுகர்ச்சிகளிலிருந்து பின் வாங்கச் செய்து கட்டுப்படுத்தினால் அவை சாவை வெல்வதற்கு சமமாகு.புலன் இன்பங்களில் அளவுக்கு மீறி ஆழ்ந்திருப்பது ஆபத்து.அவ்வாறு இன்பங்களில் மூழ்கி இருப்பவர்கள் தேவர்களாயினும் அழிவுறுவர்

பணிவு,எல்லா உள்ளங்களிடத்தும்.கனிவு, பொறாமையின்மை,பொறுமை, சகிப்துத் தன்மை,நண்பர்கலீடம் மரியாதையும் பழகுதல் ஆகியவை நம் ஆயுளை நீடிக்க வைக்கும் என அறிஞர்கள் கூற்கின்றனர்

(வள்ளுவன் _ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
             தான்சாம் துயரம் தரும்
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவிற்குத் துயரத்தை உண்டாக்கிவிடும்

 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
 வீடில்லை நட்பாள் பவர்க்கு

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும்

Friday, January 15, 2016

44-அறிஞர்களின் சொல்படி நடக்க வேண்டும்



அறிஞர்களின் நன்மொழிகளை நடைமுறையில் கொண்டுவருவதால் விளையக்கூடிய நன்மைகள் பற்றி நன்கு சிந்தனை செய்தபின்னர் செயலில் இறங்கி உழைக்கத் தொடங்கும் மனிதன் குன்றாப் புகழைப் பெறுவான்

கெட்டிக்காரர்கலூம் அறிவைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.இதனால்...எதனை அறிந்து கொள்ள வேண்டுமோ..அதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது.எது,ஏற்கனவே அறிந்து கொள்ளப்பட்டதோ அதை பின்பற்றவும் முடியாமல் போகிறது

ஒரு அறிஞன் பாவச்செயல் என்று கருதப்படும் செயல்களைப் புரியாதிருந்தாலவன் வளம் பெற்று வாழ்வான்,ஒருவன் அறிஞனாக இருந்தும் அறிவு கோணலாகப் போய், விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் முன்பு செய்த பாவக்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அவன் நரகத்தில் அமுக்கப் படுவான்.அதிலிருந்து அவனால் தப்ப இயலாது.

ரகசிய ஆலோசனைகளும்..பின் சொல்லப்பட்டுள்ள வழிகளில் ஒன்றின் மூலம் வெளிப்பட்டுவிடக் கூடும் என்பதை அறிவுள்ளவன் கவனத்தில் கொள்ள வேண்டும்.வாழ்வில், வெற்றியும், செல்வமும் அடையவும், தன் பரம்பரை வளர்ந்து தொடரவும் விரும்புகிறவன் அந்த ஆறு அபாயங்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

மதுவின் போதை,தூக்கத்தில் உளறுதல்,எதிரிகளை ஒற்றர்கள் கண்காணிப்பது பற்றி அறியாமை, மனதில் இருப்பது முகத்தில் பிரதிபலிப்பாகி விடுதல், கெட்டவர்களான அமைச்சர்களை நம்புதல்,தூதர்கள் திறமையற்றவராய் இருத்தல் என்று ஆறு வழிகளில் நமது ரகசியம் வெளிப்பட்டு விடும்

இந்த ஆறு வழிகளுக்கு வாய்ப்பளிக்காமல் அடைத்துவிட வேண்டும்.அவ்வாறு எச்சரிக்கையாக இருப்பதுடன், எவன் அறநெறியைக் கடைப்பிடித்தல், நேர்மையாக வாழ்க்கை வசதிகள் பெறுதல்,மிதமாக இன்பம் அனுபவித்தல் இந்த மூன்று விஷயங்களை பின்பற்றுகின்றானோ அவன் தன் எதிரிகளை வென்று அடக்கி ஆளமுடியும்.

ஒருவன் பிரஹஸ்பதியைப் போல அறிவாளியாய் இருக்கலாம்.ஆயினும்,அவன் புனித நூல்களையும், சாஸ்திரங்களையும் பயிலாதவனாகவும், வயதானவர்களுக்கு சேவை செய்யாதவனாகவும் இருந்தால் அவன் நற்பண்புகளை பெறுவதற்கும் வாழ்க்கை வசதிகளை அடைவதற்கும் உரிய வழியை அறியாதவனாக இருப்பான்

கடலில் விழுந்த பொருள்...போனது போனதுதான்.நாம் சொல்வதை ஒருவன் கேட்காவிடின்..நம் சொற்கள் எல்லாம் வீணாகி விட்டன எனலாம்.சுயக்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் வேதநூல் அறிவைப் பெற்றிருப்பினும் வீண்தான்.நெருப்பில்லாத வேள்விக் குண்டத்தில் பூஜைப் பொருட்களைப் போடுவதால் எந்த ஆன்மீக நன்மையும் ஏற்படாது.

Tuesday, January 12, 2016

43-தீயோரும்- உறவும்



விதுரரை நோக்கி திருதராஷ்டிரர், "விதுரரே! வாழ்க்கையில் வளம் பல பெற்று முன்னேறவும், அல்லது வறுமையிலிருந்து வீழவும் மனிதன் தனிப்பட்ட முறையில் பொறுப்பாளி இல்லை.அவன் கயிற்றால் கட்டப்பட்ட பொம்மலாட்ட பொம்மை.பிரம்மா, மனிதனைத் த்லைவிதிக்குக் கீழ்ப் படவேண்டியவனாக படைத்து விட்டார்.எனெனும் உமது உபதேசத்தை தொடர்ந்து சொல்லவும்" என்றார்.

விதுரர் கூறலானார், "தேவர்களுக்குக் குருவான பிரகஸ்பதி கூட சூழ்நிலை சரியாக இல்லையெனில் பேசக்கூடாது.காலத்துக்கு ஒவ்வாது அவர் பேசினால், அவரது அறிவிற்கு மதிப்பின்றிப் போய் விடும்.அவரது மரியாதைக் கெடும்.

மனிதர்கள் பலவிதம்.பரிசு கொடுத்துத்தான் சிலரது பிரியத்தைப் பெற முடியும்.இனிமையாகப் பேசி சிலரை கவரலாம். வேறு சிலரை, மந்திரம், தந்திரம், தாயத்து என வசப்படுத்தலாம்.ஆனால், இயல்பாகவே அன்பு மிக்கவன் மற்றவர்களின் மகிழ்ச்சி இன்றியே அவர்களிடம் பிரியம் காட்டுவான்.

ஒருவரை நாம் வெறுக்கும் போது அவரது பண்பையோ, புத்திக் கூர்மையையோ,அறிவின் ஆழத்தையோ நாம் உணர முடிவதில்லை.ஒருவரை நாம் நேசித்தால் அவரிடம் அனைத்தும் நல்லபடியாக இருப்பதாகத் தெரிகிறது.நாம் வெறுப்பவரிடம் எல்லாமே கோணலாய்த் தெரிகிறது...

அரசே! துரியோதனன் பிறந்ததுமே உங்களை எச்சரித்தேன்!இவன் மீது அளவிற்கு அதிகமாகப் பாசம் வைக்காதீர்கள்.அப்போதுதான் நூறு மகன்களும் நல்ல முறையில் வாழமுடியும் என சொன்னேன்.துரியோதனன் மீது கண்மூடித்தனமான பாசத்தை கைவிடாவிடின் நூறு மகன்களும் கொல்லப்படுவார்கள்'என்றும் கூறினேன்.

வாழ்க்கை முன்னேறுவது போல இருந்து, அது கடைசியில் வீழ்ச்சிக்கு வழி வகுக்குமாயின் அது முன்னேற்றமில்லை.இதற்கு மாறாக, சரிந்து கொண்டே போவது போலத் தோன்றி, அச்சரிவு முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லுமாயின் அது வீழ்ச்சியாகாது

ஒரு நஷ்டம் ஏற்பட்டு, அந்த நஷ்டம் கடைசியில் லாபம் தந்தால் அது ஒரு இழப்பல்ல.ஒரு குறிப்பிட்ட லாபத்தைப் பெறுவதால் கடைசியில் பெருத்த நஷ்டம் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பின் அதை லாபமென்று எண்ணாமல் இழப்பாகவே கருத வேண்டும் (எந்த விஷயத்திலும் இறுதியில் முடிவு என்ன என மதிப்பீடு செய்ய வேண்டும்)

சிலரிடம் நற்பண்புகள் நிறைந்திருக்கும்.சிலரிடம் செல்வம் அதிகம் இருக்கும்.செல்வம் மட்டும் இருந்து நற்பண்புகள் இல்லாதவர்களுடன் நாம் பழகக்கூடாது.அத்தகையோரிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

உடன், திருதிராஷ்டிரர் குறுக்கிட்டு, "விதுரா! உன் அறிவுரை இப்போது கசந்தாலும் எதிர்காலத்தில் நன்மை தரக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை.நீ சொல்பவை சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.நான் என் மகனை கைவிடுதல் இயலாது.ஆனாலும், எங்கு தர்மம் உள்ளதோ, அங்குதான் வெற்றியும் நிலைபெற்று விளங்கும்

விதுரர் கூறினார், "எவன் நற்பண்புகளை பெற்றுள்ளதுடன், பண்புடனும் உள்ளானோ, அவன் பிறர்க்கு மிகச் சிறிதளவு கொடுமை இழைக்கப் பட்டாலும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

பிறரைப் பழித்துக் கூறுவதிலேயே சிலர் ஆர்வமாய் இருப்பார்கள்.அத்தகையோர் பிறரது மனதைப் புண்படுத்தும் விஷயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பரப்பி அவர்களை வேதனைக்குள்ளாக்குகின்றனர்.இதனால் சம்பந்தப்பட்டவர்களிடையே தகராறுகளையும் மூட்டி விடுகின்றனர்

இவ்வாறு கோள் மூட்டுபவர்களைக் கண்ணால் கூட பார்க்கக் கூடாது.அது அமங்களம்..அபசகுனம்.அவர்கலூடன் தொடர்பு வைத்துக் கொள்வதோ ஆபத்து.அவர்களிடமிருந்து பணம் பெறுவது பாபம்.அவர்களுக்குப் பணம் கொடுப்பதும் கெடுதல்.

மக்களிடையே கோள் முட்டி, தகராறும்-பிரிவினையும் ஏற்படச் செய்பவர்கள், வரம்பு மீறிய காமம் கொண்டவர்கள்,வெட்கம் கெட்டவர்கள்,போக்கிரிகள்,கொடியவர்கள் என இகழப்படுவார்கள்.இத்தாய்யோரிடம் நாம் பழகக்கூடாது

இவர்களுடன் மட்டுமல்ல...இவர்க்ளைப் போல மற்ற தீய குணங்கள் உடையவர்களும் நட்புடன் பழக தகுதியற்றவர்கள்.

தீயோரிடம் நட்பு கொள்ளக் கூடாது.ஏனெனில், அந்நட்பு முறிந்தால்,  தீயவர், தனது முன்னாள் நண்பர் செய்த உதவிகளையும்,அந்த நட்பின் இனிமையையும் மறந்து விடுவார்கள்.அத்துடன் நில்லாது, தீயவர் தனது முன்னாள் நண்பனைப் பற்றிக் கெடுதலானத் தகவல்களை பரப்பி விடுவர்.அந்த நண்பரை நாசமாக்கும் முயற்சியிலும் ஈடுபடுவர்

தீயவருக்கு ஒருவர் தெரிந்தோ-தெரியாமலோ குற்றம் இழைத்து விட்டாலும் தீயவர் பொறுத்துக் கொள்வதில்லை.பகைமையைக் கைவிடுவதில்லை,அறிஞனானவன் இதையெல்லாம் தெளிந்து உணர்ந்து இத்தகைய இழிவானவர்களுடனும், பழி கூறித் திரியும் குடு நோக்கர்களுடனும், மாசடைந்த உள்ளம் கொண்டவர்களுடனும் இயன்றவரை பழகாது விலகி இருக்க வேண்டும்

யார் தனது உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும்,ஆதரவற்றவர்களுக்கும்,துன்புறுவோர்க்கும் ஆறுதல் அளித்து உதவுகின்றனரோ...அவர் குழந்தைச் செல்வம்,கால்நடைச் செல்வம்,நிரந்திரப் புகழ் ஆகிய சிறப்புகளைப் பெற்று விளங்குவார்கள்

யார் தனக்கு மகிழ்ச்சியும், தன் குடும்பத்திற்கு வசதிகளும் என்றும் குறைவின்றிக் கிடைத்து வர வேண்டுமென விரும்புகிறாரோ அவர் தனது உறவுகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்

எனவே அரசே! எது உங்களுக்கு நன்மை தருமோ அதையே செய்யுங்கள்.நீங்கள், உறவினர்களுக்கு நன்மையைச் செய்தால், என்றும் புகழ் பெற்று விளங்குவீர்கள்

நம் உறவினர்கள் நற்பண்புகள் இல்லாதவர்கள் ஆயினும்...நாம் அவர்களைக் காக்க வேண்டும்.உங்கள் உறவினர்களோ பண்பாளர்கள்.உங்களது ஆதரவுக்கு ஏங்குபவர்கள்.அவர்களை எந்த அளவிற்கு பராமரிக்க வேண்டும் எனச் சொல்லத் தேவையில்லை

திருதராஷ்டிரரே! வீரர்களாகிய பாண்டவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.அவர்களுக்கு சில குக்கிராமங்களையாவது கொடுங்கள்.அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து அவர்கள் வசதியாக வாழ்வார்கள்.அவர்களுக்கு இவ்வாறு உதவுவதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் புகழ் பெறுவீர்கள்.வயதாகிவிட்ட போதும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் புதல்வர்களைக் கட்டுப்பாற்குள் கொண்டு வர வேண்டும்

நான் எப்போதும் உங்கள் நன்மையையே நாடுபவன் என்பதை உணருங்கள்.எது உங்களுக்கு நன்மை பயக்குமோ அதை எடுத்துச் சொல்ல நான் கடமைப்பட்டவனாகிறேன்.தனது நன்மைகளை விரும்பும் யாரும் உறவினர்களுடன் ஒருபோதும் தகராறு வைத்துக் கொள்ளக்கூடாது

நாம் வாழ்க்கையில் நம் மகிழ்ச்சியை எல்லாம் நம் உறவினர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.சேர்ந்து உண்ணுதல்,ஒருவர் வீட்டிற்கு ஒருவர் வந்து போய்க்கோண்டிருத்தல், பரஸ்பர அன்பு ஆகியவை உறவினருடன் நிலைக்க வேண்டும்,

உறவினரிடையே விரோதம் கூடாது.உறவினர்களால்தான் நம்மை உலகில் நடத்திச் சென்று அக்கரையில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.அவர்களைப் பகைத்துக் கொண்டால் மூழ்கடித்தும் விட முடியும்.

நல்ல நடத்தையுள்ள உறவினர் நம்மை பாதுகாப்பார்கள்.ஆனால், கொடிய உறவினர்கள் நம்மை மூழ்க செய்து விடுவார்கள்.அரசே! நீங்கள் அனைவருக்கும் நன்மைகளை வாரி வழங்கக் கூடியவர்.பாண்டுவின் புதல்வர்களிடம் நல்ல முறையில், நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.பாண்டவர் சூழ நீங்கள் இருந்தால் உங்களை எந்தப் பகைவரும் ஏதும் செய்ய முடியாது

கையில் விஷம் தோய்ந்த அம்புகளுடன் வரும் வேடனை எதிர்த்து மான்களால் ஏதும் செய்ய இயலாது.அதைக் கொல்லும் பாவம் அவனைச் சேருகிறது.அதுபோலவே வேறு வழியின்றி உறவினர் ஒருவர் நம்மைக் காப்பாற்ற வேண்டி வந்தால்,அது குழ்ந்தையானாலும்...நாம் உதவாது போனால்...பாவமெல்லாம் நம் தலையில் ஏற்றப்படும்

பாரதப்போர் நடந்தால்..பாண்டவர்களோ..அல்லது கௌரவர்களோ ஒரு சாரார் இறப்பது நிச்சயம்.அதிக் கேட்கும் போது, நீங்கள்..முங்கூட்டியே போரைத் தடுக்காமல் போய்விட்டோமே என வருந்துவீர்கள்...எனவே, நன்கு சிந்தித்து இப்பவே ஒரு முடிவை எடுங்கள்

நாம் தீயச் செயலைச் செய்தால் அவமான உணர்ச்சி மேலிட தனியறையில் ஒதுங்கி மனம் புழுங்க நேரிடுகிறது.ஆகவே, அத்தகைய தீயச்செயல்களை நாம் செய்யாமல் இருந்து விட வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கை எந்த சமயம் முடியும் என உறுதியாகக் கூற இயலாது

பார்கவர் எனப்படும் சுக்கிராச்சாரியாரைத் தவிர....ஒருபோதும் ஒழுக்கம் தவறாமலோ, நியாயம் தவறாமலோ நடந்துகொண்ட மனிதன் உலகில் யாரும் கிடையாது.எனினும் அறிவுடையார்...கடந்த காலத்தில் செய்த தவறுகளைப் பற்ரி எண்ணி வருந்திக் கொண்டிராமல் இனி எதிர்காலத்தில் சரியாக, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என முடிவெடுப்பர்

ஏற்கனவே, பாண்டவர்களுக்குத் துரியோதனன் பல இன்னல்களை விளைவித்திருக்கிறான்.குலப்பெரியவரான நீங்கள் அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து நியாயமாக நடந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்

பாண்டவர்களுக்கு அவர்களது உயர்ந்த தகுதிக்கேற்ற அரச பதவிகள் அளித்து கௌரவித்தால், நீங்கள் எல்லாவகையான பாவங்கள், களங்கங்களிருந்து விடுபடுவீர்கள்.அறிஞர்களும் நீங்கள் போற்றப்பட வேண்டியவர் என புகழ்வார்கள்  

Sunday, January 10, 2016

42-ரகசியம் காத்தல்



ஒரு அரசன் தான் எடுக்கும் முடிவுகளை வெளி நபர்களோ, தனக்கு வேண்டியவர்களோ தெரிந்து கொள்ள விடாமல் கவனமாக இருப்பதுடன், அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையைக் கடை பிடித்தால் அவரால் நீண்ட காலம் செழிப்பாக ஆட்சி செய்ய முடியும்

தர்மகாரியங்கள், இன்பங்களை நுகர்தல், பொருளீட்டும் முயற்சி ஆகியவற்றை அச்செயல்கள் நிறைவேற்றி முடிந்த பின்னே வெளியே சொல்வது ஏற்றது.நாம் பிறரிடம் மேற்கொள்ளும் அல்லது பிறரிடமிருந்து பெறும் ரகசிய ஆலோசனைகளையும் முன் கூட்டியே  வெளியிடக் கூடாது

முக்கியமான விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டுமாயின் அதற்கேற்ப தனியான இடத்தை நாடிச் செல்ல வேண்டும்.மலையுச்சி,தனி வீடு,காட்டுப்பகுதி போன்ற இடங்களுக்குச் சென்று சிந்திக்க வேண்டும்

நாம் மிகவும் முக்கியமானதாகக் கருதும் ரகசியங்களை நம் நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.அந்த நண்பர் மதிநுட்பம் அற்றவராக இருந்தால் அவரிடமும் கூறக்கூடாது.நமக்கு நண்பனாக இருந்து, சுயக்கட்டுப்பாடு இல்லாதவராயின் அவரிடமும் ரகசியத்தை வெளியிடக் கூடாது

ஆட்சி புரிபவர்,நன்கு பரிசோதனை  செய்த பின்னரே ,ஒருவரை தன் அமைச்சராக நியமித்துக் கொள்ள வேண்டும்.நாட்டின் நிதி நிலைமையைச் சீராக வைத்திருப்பதும், தக்க ஆலோசனைகள் கூறும் பொறுப்பும் அமைச்சரின் கடமைகளாகும்

ஒரு அரசன் மேற்கொள்ளும் அறச்செயல், செல்வம் பெருக்குதல் இன்பமாக வாழ்தல் என்னும் அறம்-பொருள்-இன்பம் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஆலோசகர்களுக்குத் தெரிய வேண்டும்.அப்படிப்பட்ட அரசனை யாரும் வீழ்த்த முடியாது.அவன் உயர் நிலையில் இருப்பான்

தன் முடிவுகளை ரகசியமாக வைத்திருக்கும் மன்னன் ,தான் விரும்பும் லட்சியங்களை நிச்சயமாக அடைந்துவிட முடியும்.ஆனால் அவன் அறிவில் தெளிவற்றவனாய் இருந்தால் தவறான முடிவுகளை எடுத்து விடுவான்.அவற்றால் கெடுதல் ஏற்படும்.இதனால் அம்மன்னன் அழிய நேரிடும்

பிறர் பாராட்டும் நற்செயல்களைச் செய்தால், அவை நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.அத்தகையச் செயலைச் செய்ய தவறிவிட்டால் பின்னால் நம் மனம் வருந்தி புழுங்கும் நிலை உண்டாகும்

வேத மந்திரங்களைக் கற்காத அந்தணர்,முன்னோர்களுக்கான திதிச் சடங்கின் போது புரோகிதராக வழிகாட்டி நடத்தி வைக்கும் தகுதியற்றவர் ஆகிறார்.அதுபோல் ஆறுவிதமான போர்த் தந்திரங்களை அறியாத அரசன்,அரசியல் ரகசியங்களை அறிந்து கொள்ள உரியவரல்லர்.(ஆறுவகை தந்திரங்கள்- சமாதானப் பேச்சு,போர்,படை வரிசை முன்னேற்றம்,முற்றுகையும்-முகாமிடலும்,எதிரிப்படையில் கலகமூட்டல்,பாதுகாப்பிற்காக அடைக்கலம் கூறல் ஆகியவை)


எந்த அரசன் தன் நாட்டின் தற்போதைய நிலையை, அதன் உயிர்சக்தி கூடுவதையும், குறைவதையும் கணக்காக கவனிக்கின்றானோ, மேற்சொன்ன ஆறுவகை தந்திரங்களையுமறிந்துள்ளவனாகவும்,பிறர் பாராட்டும்படித் தூய நடத்தையும் உடையவனாகவும் விளங்குகின்றானோ...அவன் தனது நாட்டை வெற்றிகரமாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பான்.(நாட்டின் உயிர்சக்தி- சேனை, கருவூலம்,தலைநகரம், பரப்பு எல்லை)

யாருடைய கோபமும் மகிழ்ச்சியும் செல்லுபடியாகுமோ, யார் தான் மேற்சொல்லியுள்ள பணிகளைப் பற்றி தீவிரமாக சிந்திக்கின்றானோ, தன்னம்பிக்கையைப் பொக்கிஷம் போலப் பெற்றுள்ளானோ...அவனுக்கு உலகு எல்லா செல்வங்களையும் வழங்கும்

ஒவ்வொரு அரசனும் தான் பெற்றுள்ள பட்டத்துடன், தன் வெண்கொற்றக் கடையுடன் மன நிறைவு அடைய வேண்டும்.அரசன் என்ற முறையில் தன்னிடம் வந்து சேரும் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது.தன்னிடமுள்ள செல்வத்தைத்  தன் கீழ் பணிபுரிபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

ஒரு அந்தணர்தான் இன்னொரு அந்தணரைப் புரிந்து கொள்ள முடியும்.கணவன், தன் மனையைப் பற்றி நன்கு அறிந்தவன்.அரசனுக்குத் தான் அமைச்சரைப் பற்றி சரியாகத் தெரியும்.ஒரு அரசன் தான் இன்னொரு அரசனைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பான்

எதிரியிடம் சிக்கிக் கொண்டு மரணதண்டனைப் பெற்றவன் விடுதலை பெற முடியாது.எதிரியிடம் பணிவன்புடன் நடந்து கொண்டு.சேவை புரிய வேண்டும்.தனக்குப் போதுமான அளவு வலிமை சேரும் வரை பொறுத்திருந்த் பின்னரே எதிரியை அழிக்க வேண்டும்.அவ்வாறு தக்க நேரத்தில் எதிரியைக் கொல்லாவிட்டால் பெரிய அபாயம் விளையும்

நமக்குக் கோபம் ஏற்படும் போது யாரைக் கோபித்துக் கொள்கிறோம் என்று பார்க்க வேண்டும்.தெய்வம்,அரசன்,அந்தணர்,முதியவர்,குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரை நாம் கோபித்துக் கொள்ளக் கூடாது

அறிவுடைய மன்னன் காரணமற்ற தகராறுகளைச் செய்யக் கூடாது.முட்டாள்கள்தான் தகராறுகளில் மாட்டிக் கொள்வர்.தகராறில் சிக்காமல் எச்சரிக்கையாக வாழ்பவன் உலகில் புகழ் பெறுவான்.அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது

எந்தப் பெண்ணும் ஆண்மையற்றவனைக் கணவனாக அடைய விரும்ப மாட்டாள்.அதுபோலவே, ஒரு குறிப்பிட்ட அரசனின் ஆதரவானாலும் பயனில்லை.அவன் கோபித்தாலும் பயமில்லை.என்றால் அந்த அரசனைத் தலைவனாகப் பெறுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

ஒருவன் அறிவாளியாய் இருந்தால் மட்டுமே அவனிடம் செல்வம் சேர்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது.உழைக்காமல் சோம்பேறியாய் இருந்தால் வறுமை ஏற்பட்டுவிடும் என்பதும் நிச்சயமில்லை.ஆனால், அறிவாளி காலம் சாதகமாக மாறும் என அறிந்திருக்கின்றான்.சோம்பேறி அதை அறிவதில்லை.அறிவாளி வாழ்க்கையை அறிந்துள்ளான்

அறிவில்லாதவன், தன்னைவிட அதிகம் படித்தவர்கள், மேலான நடத்தையுடையவர்கள்,வயதில் மூத்தவர்கள்,அறிவில் சிறந்தவர்கள்,அதிகச் செல்வந்தர்கள்,உயர் குலத்தில் பிறந்தவர்கள் ஆகியோரைச் சரிவர மதித்து மரியாதையாக நடத்த மாட்டான்.

எவனது நடத்தை சீராக இல்லையோ, அன்பு குறைவாக உள்ளதோ,.மனம் பொறாமையில் நிரம்பியுள்ளதோ, எண்ணங்கள் அநியாயமான வழியில் செல்கின்றதோ, எவன் கடுஞ்சொற்கள் பேசுபவனாகவும்,கடும் கோபக்காரனாகவும் உள்ளானோ அவன் விரைவில் துன்பத்திற்கு ஆளாவான்

பிறரை மோசடி செய்யாமலிருத்தல், தான தருமம் புரிதல்,வாக்குத் தவறாமை,பொருத்தமாகவும்-நன்மை தரும் வகையிலும் பேசுதல் ஆகிய பண்புகளால் நாம் அனைவரையும் கவர்ந்துவிட முடியும்

எவனொருவன் பிறரை ஏமாற்றாதவனாகவும்,உழைப்பாளியாகவும்,நன்றியுள்ளவனாகவும், கூர்மையான அறிவுடையவனாகவும், நேர்மையாளனாகவும் வாழ்கிறானோ அவன் செல்வவசதி இல்லாதவனாயினும் அவனைப் பின் தொடர்ந்து ஒரு பெரிய பட்டாளமே அவனுக்கு உதவ முன்வரும்

எரிபொருளாகிய விறகு முதலியவை, நெருப்பைத் தூண்டுவது போல துன்பங்களில் தளராமை,மனக்கட்டுப்பாடு, புலன்களைக் கட்டுப்படுத்துதல், தூய்மை,கருணை,இன்சொல் உரைத்தல்,நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகிய ஏழு பண்புகளும் வாழ்வில் வளத்தையும்,வசதிகளையும் பன்மடங்காகத் தூண்டிவிடும்.
எந்த அரசன் தன்னிடம் வந்து சேரும் செல்வத்தையும்,வசதிகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் தான் மட்டும் அனுபவிப்பராகவும், தீய மனம் கொண்டவராயும்,,நன்றி கெட்டவராயும்,தீயவை செய்யக் கூசாதவராகவும் உள்ளாரோ அவரைத் தவிர்த்து விட வேண்டும்.
ஒரு வீட்டில் பாம்பு ஒளிந்திருந்தால், அந்த வீட்டுக்காரனால் அச்சமின்றி தூங்க முடியாது.அதுபோல தன்னைச் சுற்றியுள்ள அப்பாவியான ஒரு மனிதனுக்குத் தொந்தரவு கொடுக்கும் தீய மனிதனும் நிம்மதியாக உறங்க முடியாது

தீய எண்ணத்தாலோ, கோபத்தாலோ தூண்டப்பட்டு நம்மிடமுள்ள செல்வத்தையும், மற்ற வசதிப் பொருட்களையும் நாசமாக்கக் கூடிய அளவிற்கு அக்கிரம் செய்யும் வலிமை கொண்டவர்க்கு எதையாவதுக் கொடுத்துத் திருப்திப்படுத்தி அனுப்பி விடுவதுதான் நமக்கு பாதுகாப்பானது(தீயவர்களை இயன்றவரை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்)

முக்கியமான பணிகளைப் பெண்களிடம் ஒப்படைக்கக் கூடாது.வழக்கமாகத் தவறு செய்பவர்கள் , சமுக மதிப்பு அல்லது சாதியிலிருந்து தாழ்ந்து வீழ்ந்தவர்கள்,நேர்மையும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஆகியோரிடம் முக்கியமானப் பணிகளை ஒப்படைக்கக் கூடாது.அவர்களிடம் பொறுப்புள்ள பணிகளைக் கொடுத்தாலவை நிறைவேறுவது சந்தேகமே!(விதுரர் காலத்தில் பெண்களால் கூடுதலான பொறுப்புகளை சுமப்பது கடினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)

கல்லால் படகு செய்து அதைத் தண்ணீரில் விட்டு நாம் அமர்ந்தால் அதனுடன் சேர்ந்து மூழ்க நேரும்.அதுபோன்றே நாம், பெண்கள், மோசடிக்காரர்கள் அல்லது குழந்தைகளின் ஆலோசனைப்படிச் செயல்பட்டால் தோல்வியடைந்து அழிந்து போவோம்(பெண்களுக்கு உலக அனுபவம் போதாது)

வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களின் இறுதிப்பயனில் கவனம் செலுத்துவதே அறிவுள்ளவன் கடமையாகும்.அந்த லட்சியங்களை அடைவதற்கான முயற்சியின் இடையில் காணப்படும் சிறு விஷயங்களிலும், விசித்திரங்களிலும் அறிவாளியின் கவனம் சிதறக்கூடாது.ஏனெனில் நடுவில் வரும் விஷயங்கள் தற்செயலானவை.மேலும் இரண்டாம் பட்சமானவை

ஒருவன் போக்கிரிகளாலும், முகஸ்துதி செய்து பிழைக்கும் கவிஞர்கள் அல்லது பாடகர்களாலும், விலை மாதர்களாலும் மட்டுமே புகழப்படுவானாயின் அவன் உயிர் வாழ்வதைவிட சாவதே மேல்

அரசே! பாண்டவர்கள் அற்புதமான வில் வித்தை வீரர்கள்,அளவற்ற ஆற்றல் கொண்டவர்கள்.அவர்களை நீங்கள் கைவிட்டீர்கள்.இந்தப் பேரரசை ஆளும் பொறுப்பைத் துரியோதனனிடம் ஒப்படைத்துத் தவறு செய்து விட்டீர்கள்

மகாபலி யைப் போல துரியோதனன், செல்வமும், செல்வாக்கும் உள்ள காரணத்தால் திமிர் பிடித்து அலைகிறான்.மூவுலகையும் ஆண்ட மகாபலி அவற்றை இழந்தது போல துரியோதனனும் விரைவில் இப்பேரரசை ஆளுகின்ற உன்னத நிலையிலிருந்து உருண்டு விழத்தான் போகிறான்.இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று விதுரர் கூறி முடித்தார்.  

Thursday, January 7, 2016

41-விருந்தினர்



ஒரு முதியவர் அல்லது பெரியவர் ,ஒரு இளைஞனின் வீட்டிற்கு வந்தால். அவன் உரிய மரியாதையைக் காட்ட வேண்டும்.இல்லாவிட்டால் அவனது உயிர் சக்தியில் சிறிது வெளியேறிவிடும்.பெரியவர் ஒருவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குபவனுக்கு உயிர் சக்தி கிடைக்கும்

ஒரு நல்லவர் நம் வீட்ட்ற்கு வந்தால்,அவரை வரவேற்று உட்கார ஆசனம் தர வேண்டும்.பிறகு தண்ணீர் கொண்டுவந்து அவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும்.அடுத்து, அவர் நலன் விசாரித்த பின், நம் குடும்ப நலனைத் தெரிவிக்க வேண்டும்.அவர் வந்துள்ள சமயத்திற்கேற்ப உணவு பரிமாற வேண்டும்

வேதங்களை நன்று பயின்றவர்க்கு தண்ணீரோ, தயிரும்-தேனும் கலந்த பானமோ, பசுவோ அளிப்பதன் மூலம் நன்மை பெறலாம் என பேராசைப் படுபவர்களிடமிருந்து வேதியர் எதையும் ஏற்க மாட்டார்.அவர்கள் சாபத்திற்கு பயந்து பொருட்கள் அளிப்பவர்களிடமிருந்தும் வேதியர் எதையும் ஏற்க மாட்டார். இவ்வாறு வேதியரைச் சரிகட்டும் குடும்பஸ்தினரின் வாழ்க்கை வீணாகிவிடும்

குறிப்பிட்ட சில வகையினரை நாம் விருந்தினர்களாக வரவேற்று உபசரிக்கக் கூடாது.அததகையோரில் அறுவை சிகிச்சை செய்பவர்,பிரம்மச்சரியத்தை நடுவில் கைவிட்ட சமயக் கல்வி மாணவர்,திருடன்,கொடூரன்,குடிகாரன்,கருச்சிதைவு செய்பவன்,ராணுவ வீர ஊழியர், வேத அறிவை விற்பனை பொருளாக்குபவர் ஆகியோர் அடங்குவர்.இவர்களில் யாராவது நமக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் விருந்தினர்களை உபசரிக்கக் கூடாது

சில பொருட்களை விற்பது உயர்ந்தத் தொழிலாகக் கருதப்படுவதில்லை.உயர்ரக வணிகராகக் கருதப்பட விரும்புபவன், அவற்றை விற்பதைத் தவிர்க்க வேண்டும்.உப்பு, சமைக்கப்பட்ட உணவு,தயிர், பால்,தேன், எண்ணெய், நெய்,எள்,இறைச்சி,பழங்கள்,கிழங்குகள்,கீரை, காய்கறி,சிவப்பு சாயமேற்றிய துணி,வசனை திரவியங்கள்,வெல்லப்பாகு ஆகியவற்றை விற்பனை செய்வது உயர் வணிகம் அல்ல

உண்மையான தூறவி கோபப்பட மாட்டார்.மண்ணையும்,தங்கத்தையும் சமமாகவே மதிப்பர்.எதற்கும் கவலைப்பட மாட்டார்கள், யார் மீதும் பற்று வைப்பதோ...யாரையும் வெறுப்பதோ கிடையாது.தன்னை யார் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிப்படைவதில்லை.பிரியமானவை-பிரியமற்றவை என்று வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பான்மை அவசியம் இருப்பதில்லை.அவர் எந்நிலையிலும் சலனப்படாது அமைதியாக இருப்பர்.

உண்மையான துறவி யாருக்கும் சொந்தமில்லாதவர்..காட்டில் விளையும் அரிசி, கிழங்குகள்,மரக்கொட்டைகள், இலைகள் ஆகியவற்றை உண்டு உயிர்வாழ்வார்.சுயக்கட்டுப்பாடு உள்ளவராக இருப்பார்.அக்கினிக்கு பலியுணவைக் கொடுத்து வழிபடுவார்.தனியிடத்தில் வசிப்பார்.ஆனாலும் தன்னை சந்திப்பவர்களை நன்கு உபசரிப்பார்

தொலைவில் உள்ள நல்லறிஞர் ஒருவருக்குக் கெடுதல் செய்து விட்டு, அவர்தான் தொலைவில் இருக்கிறாரே....நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைக்க வேண்டாம்.அறிஞர்கள் கைகள் நீண்டவை,ஆகவே அவர்கள் தமக்குத் தீங்கிழைத்தவர்கள் எங்கிருந்தாலும் தண்டித்து விடமுடியும்,

நம்மத் தகாதவரிடம் நாம் நம்பிக்கை வைக்கக் கூடாது.ஒருவர் நம்பத்தக்கவர் ஆனாலும் ஆர் மீதும் அளவு கடந்து நம்பிக்கை வைக்கக் கூடாது.எத்ற்கும் மற்றவர்களையே நம்பினால் நாம் ஆதரவற்றோர் ஆகி பலகீனம் அடையவர் ஆவோம்

யாரிடமும் நாம் பொறாமை கொள்ளக் கூடாது.நமது மனைவிக்கு துன்பம் நேராமல் காப்பாற்ற வேண்டும்.நம்மைச் சார்ந்தவர்களுடனும், விருந்தினருடனும் உணவை,வசதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.இனிய சொற்களையே கூற வேண்டும்.குறிப்பாக பெண்களீடம் கனிவாகப் பேச வேண்டும்.ஆனால் அவர்களுக்கு மயங்கி அடிமை ஆகிவிடக் கூடாது.

சிறப்பான குணங்களுடன் நன்னடத்தையைக் கடைப்பிடித்து குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பெண்கள் பூஜிக்கத் தக்கவர்கள்.திருமகளே அவர்கள் வடிவத்தில் அவதாரம் எடுத்து அக்குடும்பத்தில் வாழ்வதாகக் கருதப்படும்.இத்தகைய தெய்வீகப் பெண்கள் சிறப்பாகப் பாதுகாக்கப் பட்டு...பராமரிக்கப்பட வேண்டியவர்கள்

ஒருவன் குடும்பத்தின் தலைமையை எடுத்துக் கொண்டு விட்டால், வீட்டின் உள் நீர்வாகத்தை தந்தையிடமும், சமையலறைப் பொறுப்பைத் தாயிடமும், தனக்கு நிகரானவரிடம் பசுக்களின் பராமரிப்பயும் ஒப்படைக்க வேண்டும்.விவசாய வேலைகளைத் தானே நேரில் கவனிக்க வேண்டும்.வீட்டிற்கு வரும் விருந்தினரை தனது புதல்வர்களைக் கொண்டு உபசரிக்க வேண்டும்

நீரிலிருந்து நெருப்புத் தோன்றியது.அந்தணர் குலத்திலிருந்து சத்திரியர்கள் தோன்றினர்.கல்லிலிருந்து உலோகங்கள் எடுக்கப் பட்டன.இவ்வாறு தோன்றிய தீயின் சக்தி,சத்திரியரின் வலிமை,உலோகங்களின் ஆற்றல் எங்கும் செல்லுபடி ஆகக் கூடியவை.ஆனால், இவை தாங்கள் உதித்த இடத்தைப் பார்ப்பதில்லை

உயர்குலத்தில் பிறந்த நல்லவர்கள் நெருப்பப் போலவே அளவற்ற சக்தி உடையவர்கள் ஆவர்.ஆனால், வடிவெடுக்காமல் விறகுக்குள் அமைதியாகக் கிடக்கும் தீயைப் போல உயர்குலச் சான்றோர்கள் தங்களது ஆற்றலை வீணாக வெளியிடாமல் பொறுமையாய் இருப்பார்கள் 

Wednesday, January 6, 2016

40- வலிமைகளும்- நெருப்பின் ஆற்றலும்



மனிதர்களிடம் இருக்கும் வலிமைகள் ஐந்து வகைஆகும்.இந்த ஐந்தில் ஒன்று உடல் வலிமை ஆகும்.இது தரத்தில் கடைசி ஆகும்

இதற்கு மாறுபட்டது சிறந்த ஆலோசகர்களைப் பெற்றிருப்பது.ஆகும்.இந்த வலிமை மங்களமானது.இதற்கும் மேற்பட்டவலிமை நிரம்பச் செல்வம் பெற்றிருத்தல்.

உயர் குலத்தில் பிறந்திருத்தல் செல்வ வலிமையை விட மேம்பட்டதாகும்.பரம்பரையாக பாட்டனாரிடமிருந்து தந்தைக்கும்,தந்தையிடமிருந்து மகனுக்கும் இயற்கையாகவே மரபுப்பெருமை எனும் இந்த வலிமை  கிடைக்கிறது

அறிவு எனும் வல்லமை மற்றவற்றைவி ட அதிக வலுவானது.அறிவே முதல் வலிமை ஆகும்.அதுவே மற்ற நான்கு  வலிமைகளைப் பெற வழி வகுக்கிறது

பழி வாங்கக் கூடியவனிடம் விரோதம் கூடாது.ஒருவேளை அவன் நெடுந்தொலைவில் வசித்துக் கொண்டிருக்கலாம்.ஆகவே அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து விரோதம் வைத்துக் கொள்ளக் கூடாது

பெண்கள், அரசன்,பாம்பு, ஒருவன் பெற்றுள்ள ஏட்டறிவு, பணக்காரர்கள், எதிரிகள்,புலன் இன்பங்கள், ஒருவனது ஆயுள் ஆகியவை நம்பற்குரியவை அல்ல.எந்த அறிவாளியும் இவற்றை நம்பி இருக்க மாட்டான்

விவேகமுள்ளவன் எடுக்கும் நடவடிக்கை ஆகிய அம்பின் விளைவை மருத்துவர்களோ,மருந்துகளோ மாற்ற முடியாது.கடவுளுக்கு படையல் அளித்தல், புனிதச் சடங்குகள், அதர்வ வேதத்திலுள்ள தந்திர மந்திரங்களை பிரயோகித்தல், மூலிகை மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டும் விவேகமுள்ளவனின் செயலின் விளைவை மாற்ற முடியாது.(அவனது செயல்கள் மிகச் சரியான மாற்ற வழி தேவையில்லாததாகும்)

பாம்பு, நெருப்பு, சிங்கம் ஆகியவற்றையும், நல்ல குடும்பத்தில் பிறந்தவனையும் யாரும் அலட்சியம் செய்யக்கூடாது.ஏனெனில் இவற்றின் ஆற்றல் அளவு கடந்ததாகும்

தீ, உலகில் அதிக அளவில் சக்தி பெற்றதாகும்.அது விறகுனுள் மறைந்துள்ளது.ஆனாலும் மற்றவர்கள் தூண்டிவிடாத வரையில் பிறருக்கு எநத்க் கெடுதலும் செய்வதில்லை

மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்கையில் அவற்றினுள் இருக்கும் வெப்ப ஆற்றல், தீயாகக் கிளம்பி மரங்களையே எரித்து விடுகிறது.அந்த நெருப்பு பரவி, காடு முழுவதும் சாம்பலாகி விடுகிறது.அப்போது காட்டிலுள்ள இதரப் பொருள்களும் ,உயிரினங்களும் கூட எரிந்து விடுகின்றன

அதுபோலவே உயர் பண்புகள் நிறைந்தவர்களும்,ஆற்றலாகிய பெரிய நெருப்பை மறைத்து வைத்துள்ளனர்.அந்த ஆற்றல் பொறுமை ஆகும்.அது வெளிப்படாது விறகினுள் நெருப்புப் போல உள்ளது

நீங்களும், உங்கள் புதல்வர்களும் மரத்தில் படரும் கொடி போன்றவர்கள்.மரத்தின் துணையின்றி, மரத்தைச் சாராமல் கொடி வளரமுடியாது.

உங்களது புதல்வர்கள் காடு போல.பாண்டவர்கள் சிங்கம் போல.சிங்கம் இல்லா காடு அழிக்கப்படும்.காட்டில் வாழும் சிங்கங்கள் அழியும்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

39-போரைத் தவிர்



கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே போர் மூண்டால் என்ன தீமைகள் உண்டாகும் என யோசித்துப் பாருங்கள்.அப்போர், இந்திரனுக்கும்,இதர தேவர்களுக்கும் வேதனைத் தரும்.கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நிரந்திரப் பகை ஏற்படும்.உங்களின் எஞ்சியுள்ள வாழ்க்கை கவலை நிறைந்ததாய் அமையும்.குரு வம்சத்தின் பெயர் களங்கப்படும்.உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டு எதிரிகள் மகிழ்ச்சியடைவர்

வானத்தின் உச்சியில் எழுந்து, பூமியின் குறுக்காக வீழ்கின்ற வால்நட்சத்திரம் நாட்டின் நலனுக்குக் கெடுதலாக அமையும்.அதுபோலவே போரின் காரணமாக உங்களுக்கும்,பீஷ்மர்-துரோணர்-தருமர் ஆகிய மாவீரர்களுக்கும் பொங்கி வரும் சினம் உலகையே அழித்துவிடும்

இதற்கு மாறாக நாட்டின் நலன் கருதி உங்களது நூறு மகன்களும், பாண்டுவின் ஐந்து மகன்களும், கர்ணன் ஆகியோரும் ஒன்று சேர்ந்தால் கடல்வரை பரவியுள்ள நிலப்பரப்பு முழுவதையும் வென்று அரசாளலாம்

அரசே! உங்கள் மகன்கள் அனைவரும் சேர்ந்து ஒரு காடு போன்றவர்கள்.பாண்டுவின் புதல்வர்கள் புலிகளுக்குச் சமம்.புலிகளைக் கொல்வதாகக் கிளம்பிக் காடே அழியும் நிலை செய்துவிடக் கூடாது.காட்டை விட்டு புலிகளை விரட்டிவிடவும் முயற்சிக்கக் கூடாது..புலிகள் இல்லா காடு பாதுகாப்பற்றது.காடில்லாமல் புலிகளும்   வாழாது.புலிகள் காடுகளைக் காக்கின்றன.காடு புலிகளுக்கு பாதுகாப்பைத் தரும்

தீயவர்கள் மற்றவர்களிடம் என்னென்ன நல்ல குணங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.மற்றவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் அக்கறை செலுத்துகின்றனர்

தேவலோகத்திலிருந்து அமிர்தத்தைப் பிரிக்க முடியாது.அதுபோல, வாழ்வில் உயர்தரவளமையை அறநெறியிலிருந்து விலகிப் பெற இயலாது.ஆகவே, வாழ்வில் உன்னத செழிப்பையும், முன்னேற்றத்தையும் நாம் அடைய விரும்பினால் ஆரம்பம் முதலே நற்பண்புகளைக் கடைப் பிடிக்க வேண்டும்

நம் மனம் தீய சிந்தகளிலிருந்து பிரிந்து விலகி நின்று, நற்பண்புகளில் வேரூன்றி இருக்க வேண்டும்,அப்போதுதான் உலகப் பொருட்களின் மெய்யான தன்மையையும்,அவற்றால் ஏர்படும் மாறுதல்களையும் நன்கு அறிந்தவர்கள் ஆக முடியும்

நற்பண்புகளை பின்பற்றுதல், வசதிகளைப் பெறுதல், புலன்வழி இன்பங்களை அனுபவித்தல் ஆகியவற்றை அதற்கான காலத்தில் எவன் முறையாக துய்க்கின்றானோ அவனுக்கு அவை மூன்றும் இவ்வுலகில் கிடைப்பதைப் போல மறுவுலகிலும் கிடைத்துவிடும்

சினமும்,மகிழ்ச்சியும் மிகுந்த ஆற்றலை உடையவை.இவற்றிலிருந்து பொங்கிப் பிரவாகிக்கும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி, சரியான வழியில் செலுத்துவதுடன் சோதனையான சூழலிலும் தடுமாறாது இருக்க வேண்டும்.இம்முயற்சியில் வெற்றி பெறுபவனை செல்வமும், வசதிகளும் வந்து சேரும்.  

Tuesday, January 5, 2016

38- தவிர்க்கப்பட வேண்டியவர்கள்



நாம் குறிப்பிட்ட சிலரை நம் வீட்டில் தங்க அனுமதிக்கக் கூடாது.சோம்பேறி, மிகையாக உண்பவன்,சமூகத்தால் வெறுக்கப்படுபவன்,மோசடிக்காரன்,கொடூரமானவன்,இடம்-காலம் அறிந்து பழகத் தெரியாதவன்,அசிங்கமாக உடை அணிபவன் ஆகியோரை வீட்டில் தங்கவிடக் கூடாது.

நமக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும், குறிப்பிட்ட சிலரிடம் உதவி கேட்கக் கூடாது.கருமி,நம்மை ஏசுபவர்,கல்வி அறிவற்றவர்,காட்டுவாசி,போக்கிரி,தகுதியுடைவருக்கு மரியாதை காட்டத் தவறுபவர்,கொடூர குணம் கொண்டவர்,நமது எதிரி,நன்றி கெட்ட்வர் ஆகியோரிடம் உதவி கேட்கக் கூடாது

நாம் எப்போதும் குறிப்பிட்ட சில வகையினருக்கு உதவக் கூடாது.பிறரது வீட்டைக் கொளுத்துதல் போன்ற பயங்கர பாவங்கள் செய்பவன்,எப்போதும் தவறு செய்து கொண்டே இருப்பவன்.எப்போதும் பொய் பேசுபவன்.கடவ்ள் மீது உறுதியான பக்தியற்றவன்.அன்பில்லாதவன்.தான் ஒருவனே அறிவாளி என திமிருள்ளவன் இந்த ஆறு வகையினருக்கு உதவுவதோ அல்லது அவர்களிடம் பணிபுரிவதோ கூடாது

(பயங்கர பாவங்கள்- பிறர் வீட்டைக் கொளுத்துதல்,விஷம் கொடுத்துக் கொல்லுதல்,ஆயுதத்தால் தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பிறர் செல்வத்தை அபகரித்தல்,பிறர் நிலத்தை ஆக்கிரமித்தல், பிறர் மனைவியின் கற்புக்குக் கேடிழைத்தல் ஆகியவை ஆகும்)

நம்முடைய செயல்களின் விளைவுகள்,நாம் அவற்றை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பொறுத்து அமைகின்றன.நாம் எந்த வழிமுறைகளை மேற்கொள்கிறோம் என்பது நாம் அடைய விரும்பும் பலன்களுக்கு ஏற்ப அமைகிறது.இவ்வாறு செயல்கள்,வழிமுறைகள்,விளைவுகள் ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன

நம்முடைய கடமை என்ன வென்றால், முதலில் மகன்களையும்,மகள்க ளையும்  பெற்றெடுக்க வேண்டும்.மகன்களை பிரச்னையில்லா நல்ல வேலைகளில் அமர்த்த வேண்டும்.பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.இவ்வாறு கடமைகளை நிறைவேற்றிய பின்னர் நாம் காட்டிற்குச் சென்று...வாழ்நாளின் கடைசிப் பகுதியை முனிவர்கள் போல வாழ்ந்து கழிக்க வேண்டும்

நாம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மையும், நமக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் செயல்களையேச் செய்ய வேண்டும்.அவற்றையும் அவற்றின் நற்பலனையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.இத்தகைய மனப்போக்கு அமைந்தால் நம்முடைய குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறும்

ஒருவன் அறிவு,திறமை, நெருப்பைப்போலத் தீவிரம்,வலிமை,உழைப்பு,உறுதி ஆகிய குணங்களைப் பெற்றிருந்தால் அவன் வேலை எதுவும் கிடைக்காமல் போய்விடுவோமோ என அஞ்ச வேண்டியதில்லை

Monday, January 4, 2016

37-முதலாளியும் ..ஊழியரும்



தன்னிடம் விசுவாசம் கொண்டு, தன் நன்மைக் கருதி உழைக்கின்ற ஊழியர்களிடம் ஒரு போதும் கோபம் கொள்ளாத எஜமானன், அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறான்.ஆகவே அப்படிப்பட்ட எஜமானனுக்குப் பிரச்னையான சூழல் ஏற்படுகையில் ஊழியர்கள் அவனைவிட்டு ஓடாமல் நிலைத்து நின்று உதவுவார்கள்

ஒரு அரசன் தன்னுடைய பணியாளர்கள் உயிர் வாழ செய்கின்றத் தொழிலைத் தடுத்து புதியதோர் அரசை நிறுவவோ அல்லது செல்வம் ஈட்டவோ முயற்சிக்கக் கூடாது.இவ்வாறு வஞ்சிக்கப்பட்டு யார் உயிர் வாழ சிரமப்பட வேண்டியுள்ளதோ அவர்கள் பிரிய அமைச்சர்களாக இருந்தாலும் எதிர்ப்பு உணர்வு மேலிட தலைவனைவிட்டு பிரிவர்

ஒருவன் தன் கீழுள்ள ஊழியர்களை நியமிக்கையில்  அவர்களின் பணிகள் என்ன, தனது வரவு செலவு நிலவரம் எவ்வாறு உள்ளது.ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை எல்லாம் முன்னரே ஆராய வேண்டும்.சரியான பணியும், சரியான ஊதியமும் நிச்சயித்து பொருத்தமான ஊழியர்களை நியமித்துவிட்டால் அவர்கள் உதவியுடன் கடினமான சாதனைகளையும் நிறைவேற்றலாம்

நம் கீழ் பணிபுரிபவர் யாரெல்லாம், விருப்பு-வெறுப்பு, நோக்கத்தை அற்றவர்களாகவும், சுசுறுப்பாக எல்லாக் கடமைகளையும் செய்பவர்களாகவும், நமக்கு நன்மைத் தருவதையே பேசுபவர்களாகவும், நம்மியம் விசுவாசம் உள்ளவர்களாகவும், கண்ணியமான நடத்தை கொண்டவர்களாகவும், தங்கள் உழைப்பின் அதிகப் பட்ச அளவையும்,தங்களுக்குப் போட்டியாக உள்ளவர்களின் ஆற்றலையும் உணர்ந்தவர்களாகவும் உள்ளனரோ அவர்களை நாம் மிகவும் வேண்டியவர்களாகக் கருதிப் பணிவுடன் நடத்த வேண்டும்

நம் கீழ் பணிபுரிபவர் யாராவது நாம் கட்டளையிட்டாலும் அக்கறையுடன் வேலைசெய்யாதவராகவும், நாம் வேலை சொன்னால் எதிர்த்து பேசுபவராகவும், தனக்கு நிரம்ப அறிவுள்ளதாகக் கர்வப்பட்டவராகவும், எதற்கெடுத்தாலும் நம்முடன் வாதம் செய்பவராகவும் இருந்தால் அவரை முடிந்த அளவு விரைவில் பதவிநீக்கம் செய்ய வேண்டும்

தூதருக்குரிய குணங்கள் எட்டு என அறிஞர்கள் கருதுகிறார்கள்.சமயத்திற்கேற்ப முடிவெடுக்கும் திறமை,துணிச்சல், எக்கணமும் செயலில் இறங்க தயாராக இருப்பது, கனிவுடமை,நடை-உடை பழக்கங்களில் பண்பட்ட நளினம். ஊழல் வசப்படாமை,ஆரோக்கியம், கண்ணியம், கவர்ந்து இழுக்கும் பேச்சுத் திறன்,ஆகியவை அந்த எட்டுக் குணங்களாகும்

விவேகமுள்ள எவனும், தான் செய்வது தவறில்லை என நம்பிக்கையுடன் பொருத்தமில்லா நேரத்தில் இன்னொருவர் வீட்டிற்குள் நுழையக் கூடாது.இரவு நேரத்தில் இன்னொருவர் வீட்டில் ஒளிர்ந்திருக்கக் கூடாது.அரசன் விரும்பும் பெண்ணை ஆசையுடன் அணுகக் கூடாது

தீயவர்களுடன் நட்பு வைத்து அவர்களிடம் ஆலோசனைப் பெறுவோரின் கூட்டங்களுடன் நாம் கலந்து கொள்ளக் கூடாது.நமக்கு ஒருவரிடம் நம்பிக்கையில்லாவிடினும் அதை அவரிடம் நேருக்கு நேர் சொல்லிவிடக்கூடாது.ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அடித்தாற் போலத் தெரிவிக்காமல் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி பின் வாங்கிவிடவேண்டும்

நாம் யாருக்குப் பணம் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.நம்மை வெறுப்பவர்,அரசன்,ஒழுக்கமற்ற பெண்,அரசாங்க ஊழியர், மகன்,சகோதரன்,குழந்தைகள்,விதவை,ராணுவத்தில் வேலை பார்ப்பவன்,சொத்தையோ..அதிகாரத்தையோ முழுமையாக இழந்தவன் ஆகியோரிடம் பண விவகாரம் வைத்துக் கொள்ளக்கூடாது

தினமும் குளிப்பதால் பின் வரும் நன்மைகள் விளையும்.உடல் வலிமை பெறும்.அழகுக் கூடும்.குரல் தெளிவு பெறும்.உடலின் நிறம் சிறக்கும்.உடல் மிருதுவாக இருக்கும்,உடலிலிருந்து நறுமணம் வீசும்.உடல் தூய்மையாக இருக்கும்.எழில் மிகும்,இளமை நீடிக்கும்,அழகியப் பெண்களின் நட்பு கிடைக்கும்

அளவோடு உண்பவனுக்கு ஆறு நன்மைகள் விளைகின்றன.ஆரோக்கியம் உறுதிப்படுகிறது.ஆயுள் நீள்கிறது.வளமை கூடுகிறது.மகிழ்ச்சி மிகுதியாகிறது.ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.சாப்பாட்டுராமன் என இகழப்படும் நிலை ஏற்படாது 

Sunday, January 3, 2016

36- அந்தப் பதினேழு




விதுரர் மேலும் திரிதராஷ்டிரருக்குச் சொல்ல ஆரம்பித்தார்

அரசே! பிரம்மாவின் புதல்வரான மனு, நான் சொல்லப் போகும் பதினேழு நபர்களை, ஆகாயத்தைத் தாக்குபவர்கள் (அவசரப்பட்டுச் செயல்படுவது, லட்சியமின்றி செயல்படுவது)என பட்டியல் இட்டுள்ளார். இத்தகையோர் இந்திரனின் வளைக்க முடியாத வில்லை வளைப்போம் என வீண் பெருமை பேசுவார்கள்.யாராலும் வசப்படுத்த முடியாத சூரிய  கிரணங்களையும், சந்திர கிரணங்களையும் நாங்கள் கையால் பிடித்துக் காட்டுவோம் என்று திமிராகச் சொல்வார்கள் என்றும் சொல்கிறார்.
அவர் கூறும் பதினேழு வகையினர்-
படிக்க விரும்பாத மாணவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்
முன்னேறும் ஆர்வமின்றி சம்பாத்தியத்துடன் நிறுத்திக் கொள்பவர்
எதிரிகளுக்கு பணிவிடை செய்து வாழ்க்கை நடத்துவர்
தீய பெண்களைப் பாதுகாத்துத் தரகர் வாழ்க்கை நடத்துபவர்
யாரிடம் உதவிக் கேட்கக் கூடாதோ அவரிடம் சென்று யாசிப்பவர்
தற்பெருமை பிடித்துக் கொள்ளும் வழக்கமுள்ளவர்
உயர்குலத்தில் பிறந்திருந்தும் குலப்பெருமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்பவர்
தான் பலகீனராயினும் வலிமை மிக்கவர்களிடம் பகைமைக் கொள்பவர்
தன் பேச்சைக் கவனமாகக் கேட்காதவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்
விரும்பத்தகாத பொருள்களுக்கு ஆசைப்படுபவர்
மாமனார் என்ற கண்ணியயமான ஸ்தானத்தில் இருந்த போதிலும் மருமகளிடம் கேலியும், கிண்டலுமாகத் தரக்குறைவாக பழகுபவர்
தனது பயத்தை நீக்கப் பெண்களின் உதவி தேவைப்பட்ட போதிலும், வெளியில் பெண்களை அதிகாரம் செய்பவர்
இன்னொருவரின் வயலில் விதைகள் நட்டு அறுவடை செய்பவர்(பிறன் மனை விரும்புபவர்)
பெண்களை அளவு கடந்து குறை  கூறுபவர்
ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டபின் அவ்வாறு பெற்றதாக நினைவில்லை என வாதாடுபவர்
ஒரு பொருளைக் கேட்டவருக்குக் கொடுத்துவிட்டு அதைப்பற்றியே தற்பெருமை பேசுபவர்
தவறான வழியில் செல்பவர்களை ஆதரிப்பவர்கள்

இந்தப் பதினேழு பேர்களையும் எமதூதர்கள் கையில் பாசக்கயிறு எடுத்து வந்து நரகத்திற்கு இழுத்துச் செல்வார்கள்

ஒருவன் இன்னொருவனிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது அந்த இன்னொருவன் அவனுடன் எப்படிப் பழகுகிறான் என்பதைப் பொறுத்ததாகும்.நம்மிடம் தந்திரமாக பழகுபவரிடம் நாமும் தந்திரமாகப் பழக வேண்டும்.நம்மிடம் நல்லதனமாக பழகுபவரிடம் நாமும் நேர்மையாக நடக்க வேண்டும்(நல்லவனாக இருக்கலாம்..ஆனால் ஏமாளியாக இருக்ககூடாது)

திருதராஷ்டிரர் கேட்டார். "விதுரரே! மனிதன் நூறாண்டு வாழ்பவன் என வேதங்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் அனைவராலும் நூறு வயதுவரையில் வாழ முடியவில்லை"

விதுரர் கூறினார், "அளவுக்கு மீறிய கர்வம்.அடக்கமற்றப் பேச்சு அல்லது கடுஞ்சொல் கூறுதல், கருமித்தனம், சினம், புலன் வழி இன்பங்களில் விருப்பம்.நண்பர்களுக்கோ,உறவினருக்கோ துரோகம் செய்தல் என ஆறு கொடிய பாவங்கள் உள்ளன.

இந்த ஆறும் கூர்மையான வாள் போல.இவை ஆயுளின் ஆண்டுகளை வெட்டிவிடுகின்றன.இவைதான் மனிதர்களை கொல்கின்றனவே தவிர சாவு மனிதனைக் கொல்வதில்லை.உங்கள் மகன்கள் இந்த ஆறு பாவங்களையும் செய்யாதிருந்து நூறாண்டுகள் வாழக் கடவுள் ஆசிர்வதிப்பாராக!

தன்னை நம்பியுள்ளவரது மனைவிக்குக் கேடிழைத்தல், தனது குருவின் மனைவியைப் பலவந்தப்படுத்துதல், தாழ்ந்த சாதிப் பெண்ணை உயர்குலத்தவர் மணந்து கொள்ளல், குடிப்பழக்கம்,சான்றோர்கள் மீது அதிகாரம் செலுத்துதல், ஒருவர் சம்பாதித்து வாழ உதவுகின்றத் தொழிலை நாசமாக்குதல்.அந்தணர்களை அடிமையைப் போல நடத்தி வேலை வாங்குதல், அடைக்கலம் புகுந்தவரைக் கொல்லுதல்...இத்தகையக் கொடியச் செயல்களைப் புரிந்தவர்கள் பாவிகளைப் போல நிந்திக்கப்படுவர்.அவர்களது பாவம் உடன் இருப்போரையும் தொற்றிக்கொள்ளும்.ஆகவே அவர்களுடன் இருப்பவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கின்றன வேதங்கள்.

எவன் சான்றோர்களாகிய ஆசிரியர்களின் உபதேசத்தைப் பின்பற்றுகிறானோ, ஒழுக்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளானோ, பெருந்தன்மை உடையவனோ,கடவுள்-முன்னோர்-விருந்தினர் ஆகிய மூவருக்கும் படைத்தப்பின உண்கின்றானோ,பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, தீமை ஏதும் செய்யாது கவலையின்றி விளங்குகின்றானோ,நன்றி உடையவனோ, கனிவுடன் பழகுகின்றானோ, அறிஞனாக உள்ளானோ அவன் எளிதில் சுவர்க்கத்திற்குப் போகிறான்

மற்றவர்களுக்குப் பிடித்தபடி இனிமையாய் எப்போதும் பேசுபவர் நிறைய உள்ளனர்.ஆனால், இன்னொருவருக்குப் பிடிக்காது என தெரிந்தும் கசப்பான அறிவுரைகளை தயங்காது கூறுபவர்கள் சிலரே!அந்தக் கசப்பான அறிவுரைகளையும் பொறுமையாகக் கேட்பவர் மிகவும் சிலரே

அறிஞன், தனது உபதேசம், அதிக்கேட்பவரின் மனதிற்கேற்றபடி இனிமையாக உள்ளதா..இல்லையா என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது.நல் விளைவுகளைத் தரும் உபதேசம் கேட்பதற்குக் கசந்தாலும் அறிஞன் அதை எடுத்துக் கூற வேண்டும்.அத்தகையவனே மன்னனின் உண்மையான உபகாரி ஆவான்

குடும்பத்தின் நலன் கருதிக் குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கைவிட நேர்ந்தால் தயங்கக்கூடாது.அதுபோல, கிராமத்தின் நலன் கருதிக் குடும்பத்தையும், நாட்டின் நலனுக்காகக் கிராமத்தையும் கைவிடத் தயங்கக்கூடாது.தன் ஆத்மாவின் நலனைக் கருதும் போது அதற்காக உலகையேத் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்

எதிர்காலத்தில் விளையக்கூடிய ஆபத்துகளைச் சமாளிக்க இப்பொழுதிலிருந்தே பணம் சேமித்து வர வேண்டும்.ஆனால், மனைவியைக் காப்பாற்றுவதா இல்லை பணத்தைக் காப்பாற்றுவதா என்ற சிக்கல் எழுந்தால் மனைவியைக் காப்பாற்றுவதே முக்கியம்.பணம்,  மனைவி, ஆத்மா ஆகிய மூன்றில் எதைக் காப்பாற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டால் ஆத்மாவின் தூய்மையைக் காப்பாற்றுவதே முக்கியம்

சூதாட்டம் மனிதர்களிடையே பகையை விளைவிக்கும் என்பது அறியப்பட்ட உண்மையாகும்.ஆகவே அறிவுள்ள மனிதன் எவனும் சூதாடக்கூடாது.பொழுது போக சூதாட அழைக்கப்பட்டாலும் அதில் கலந்து கொள்ளக் கூடாது

சகுனியும், தருமரும் சூதாடுகையில், அதைத் தடுக்குமாறு தங்களிடம் கூறினேன்.ஆனால், நோயாளி கசப்பு மருந்தையும், பத்திய உணவையும் வெறுப்பதைப் போல என் ஆலோசனை உங்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது

வண்ணச்சிறகுகளைக் கொண்ட மயில்கள் போன்ற பாண்டவர்களைக் காக்கைகள் போன்ற உங்கள் மகன்கள் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணம் போலும்.சிங்கங்களை ஆதரித்துப் பாதுகாப்பதற்குப் பதிலாக நீங்கள் நரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டால், அதன் விளைவுகளை சந்தித்து அழுது புலம்பிட வேண்டும்.

Friday, January 1, 2016

35-உறவும் பகையும்



உறவினர்களுடன் சண்டையிட்டு பிரிந்து போனவர்கள் நிம்மதியாய் தூங்க முடியாது.நேர்த்தியான படுக்கை வசதியிருந்தாலும் தூக்கம் வராது.பெண்களின் இன்பமும் அவர்களுக்குத் திருப்தியைத் தராது.சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு புகழ்ந்து பாராட்டினாலும் மகிழ்வு ஏற்படாது

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தவர்கள் நற்பண்புகளைக் கடைப்பிடிக்க இயலாது.அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது.யாரும் மரியாதை காட்டமாட்டார்கள்.அமைதியாக வாழும் ஆனந்தம் கிட்டாது.(கௌரவர்கள் , பாண்டவர்களைப் பகைத்துக் கொண்டது தீது என மறைமுகமாக கூறுகிறார்)

உறவினர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் யார் நல்ல புத்தியைச் சொன்னாலும் மகிழ்ச்சியாகக் கேட்டுவிட்டு, அதை பின்பற்ற மாட்டார்கள்.தங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொள்ள மாட்டார்கள்.உறவினர்களை வெறுத்துத் தவிப்பார்கள்.கடைசியில் நாசமாகப் போவார்கள்

பசுக்கள் பாலைத் தருவது இயற்கை.அந்தணர்களிடம் கடுமையான விரதக் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம்.இளம் பெண்களிடம் சஞ்சலத் தன்மை இருக்கும்.அதுபோல உறவினர்களிடம் பகைத்து கொள்பவன் பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுவதும் சாத்தியமே

மெல்லியவை ஆயினும் ஒரே நீளமுள்ள தரமான நூல் இழைகள் தொகுக்கப்பட்டால் அவை துணி நெய்கையில் எத்தகைய இழுப்பையும் தாங்கும்.அதுபோல நல்லவர்கள்(பாண்டவர்கள்) ஒன்று சேர்ந்தால் மாபெரும் சாதனைகள் நிகழ்த்த முடியும்

எரிந்து கொண்டிருக்கும் விறகுகள் தனித்தனியாகப் பிரித்தால் புகைதான் கிளம்பும்.அவற்றை ஒன்றாகச் சேர்த்தால் தீ கொழுந்துவிட்டு எரியும்.உறவினர்களிடமிருந்து நாம் பிரிந்துவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியாது.எல்லா உறவும் சேர்ந்து முயற்சித்தால் அக்குடும்பம் பெரிய சாதனைகள் செய்ய முடியும்

யார், அந்தணர்கள்,பெண்கள், உறவினர்கள் ஆகியோருக்கும், பசுக்களுக்கும் கொடுமை இழைப்பதில் வீரம் காட்டுகின்றார்களோ அவர்கள் முற்றிய பழம் மரத்திலிருந்து விழுவதைப் போல ஆதாரத்தை இழந்து அழிந்து போவார்கள்

ஒரு மரம் தனியாக இருக்கிறது.அது பெரியதாகவும், வலுவாகவும் இருக்கலாம்.அதன் வேர்கள் பூமியில் ஆழமாக பதிந்திருக்கலாம்.ஆனாலும் சூறாவளிக் காற்று வீசினால் அம்மரம் ஒரு நிமிடத்தில் கிளைகள் உட்பட முற்றிலும் ஒடிந்து விழுந்துவிடும்.ஆனால், பல மரங்கள் அருகருகே அமைந்து, பூமிக்குள் நன்கு ஊடுருவி..அடர்த்தியாகத் திரண்டு நின்றால் அவை பலத்த புயல் காற்றையும் சமாளித்துவிட முடியும்.அவை ஒன்றையொன்று தாங்கிக் காப்பாற்றுவதுதான் நீடிக்க முடிவதன் காரணமாகும்

ஒரு ,மனிதரிடம் எல்லாச் சிறப்புகளும் இருக்கலாம்.ஆனால் ஊரோடு ஒட்டி வாழாமல் தனித்து நின்றால் அவனுடைய எதிரிகள் மகிழ்வர்.தனிமரத்தை காற்று வீழ்த்துவது பொல அவனை எளிதில் வெல்லலாம் என பகைவர்கள் தெரிந்துகொண்டு விடுவார்கள்

நீலத்தாமரைச் செடிகளின் தண்டுகள் தடாகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்வது போல ஒருவரை ஒருவர் சார்ந்து ஆதரித்தால் எல்லோரும் நிறைய செல்வமும், செழிப்பும் பெற்று விளங்க முடியும்

அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், நமக்கு உணவு தயாரித்து அளித்தவர்கள், நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் ஆகியோரை ஒருபொழுதும் கொல்லக்கூடாது.அவர்களில் யாரேனும் கடுமையான குற்றம் இழைத்திருந்தாலும் அவர்களை நாடு கடத்துவதே அதிக பட்சத் தண்டனை ஆகும்

ஆரோக்கியமற்றவன். கிட்டத்தட்ட இறந்தவனுக்கு சமமாவான்.ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வச் செழிப்புப் பெறுவது சிரமம்.செல்வந்தவனாக இல்லாவிடின் சமூகத்தில் சிறப்பும் கிடைக்காது

திருதராஷ்டிரரே! கோபம் என்பது ஒருவகையான தலைவலி.அது நோயின் காரணமாக ஏற்படுவதில்லை.கோபம் தீவிரமான பானம் போன்றது.கசப்பானது.காரசாரமானது.வெம்மை நிறைந்தது.தீய விளைவுகளை ஏற்படுத்துவது.இவ்வளவு பயங்கர கோபத்தைச் சான்றோர்களால்தான் அடக்க முடியும்.நீங்களும் பாண்டவர்கள் மீதான கோபத்தை விழுங்கி விடுங்கள்.அமைதி பெறுவீர்கள்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், தங்களது குழந்தைகளைக் கொஞ்சி நேசிக்கும் பொறுமை இருக்காது.அவர்களுக்கு தங்கள் பொருள் வசதிகளை ரசித்து அனுபவிக்க முடியாது.நல்லது, கெட்டது  என பகுத்தறியும் விவேக புத்தியும் மழுங்கிப் போயிருக்கும்.அவர்கள் எப்போதும் துக்கத்தில் சிக்கித் தவித்து கொண்டிருப்பார்கள்.கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு எப்படி சந்தோசமாக இருப்பது என அறிந்திருக்க மாட்டார்கள்

துரியோதனன் நடத்த விரும்பிய சூதாட்டத்தை ஆதரிக்காமல் தடுக்குமாறு முதலிலேயே உங்களிடம் யோசனைக் கூறினேன்.ஏனெனில், அறிவாளிகள் சூதாடுவதைத் தடுப்பார்கள்.ஆனால், நீங்கள் என் பேச்சை ஏற்றுச் சூதாட்டத்தைத் தடுக்காமல் இருந்து விட்டீர்கள்.இதனால் திரௌபதி இழுக்கப்பட்டு கதற நேர்ந்தது

நாம் நமது வலிமையை மென்மையானவர்களுக்கும், பலகீனர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தக் கூடாது.நமது வலிமையை நியாயம் பெறுவதற்காகவே உபயோகிக்க வேண்டும்.கொடூரமான வழிகளில் சம்பாதித்த செல்வம் நிச்சயமாக அழிந்துப் போகும்.மென்மையான முறையில், கண்ணியமான வழியில் சம்பாதித்த செல்வம் மகன்கள், பேரன்கள் என்று பரம்பரையாக நீடித்துச் செல்லும்

அரசே! உங்கள் புதல்வர்கள் பாண்டவனின் புதல்வர்களைப் பாதுகாக்கட்டும்.அதுபோலவே பாண்டுவின் மகன்கள் உங்கள் மகன்களை ரட்சிக்கட்டும்.இருவரும்..குரு வம்சத்தினரே!  ஆகவே கௌரவர்களின் நண்பர்களைப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களாகவும்,பாண்டவர்களின் எதிரிகளைக் கௌரவர்கள் தங்கள் எதிரிகளாகவும் கருத வேண்டும்.இருதரப்பினரும் ஒரே மாதிரியான லட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டு ஒரே மாதிரியான நடவடிக்கைகளில் ஏடுபட்டு, மகிழ்ச்சியாகவும்,பலவளங்கள் பெற்று சிறப்பாகவும் வாழ வேண்டும்

அஸ்தினாபுரத்தை ஏற்படுத்தியவரான ஹஸ்தியின் மூத்த மகனாகிய அஜமீடரின் பரம்பரையில் வந்த உங்களைத்தான் குரு வம்சம் சார்ந்துள்ளது.ஆனால் நீங்களோ, வெறும் கௌரவர்களை மட்டுமே ஆதாரமாகத் தாங்குகிறீர்கள்.பாண்டவர்கள் காட்டுக்கு விரட்டப்பட்டனர்.அவர்களையும் நீங்கள் அரவணைத்துக் காத்தால் உங்கள் பெயர் களங்கப்படாமல் இருக்கும்

குரு வம்சத்தில் உதித்தவரே! பாண்டுவின் புதல்வர்களுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் எதிரிகள் ஆவார்கள்.அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.பாண்டவர்கள் சத்தியவாதிகள்.ஆகவே நீங்கள் துரியோதனனை அடக்கி வையுங்கள்.

என்று விதுரர் கூறி முடித்தார்.

Wednesday, December 30, 2015

34-நட்பு




யாருடைய கோபம் நம்மை அச்சப்படுத்துகிறதோ...அவர் நண்பர் அல்ல.அச்சத்தாலோ அல்லது தப்பாக நினைக்கக்கூடாது என்றோ யாருக்கு நாம் பணிவிடை செய்ய நேரிடுகிறதோ..அவர் நம் நண்பர் அல்ல.தந்தையிடம் பேசுவது போல நாம் யாரை நம்பிக்கையுடன் அணுகி பிரச்னைகளுக்கு ஆறுதல் பெறுகிறோமோ அவரே நம் நண்பர் ஆவார்.மற்றவர்கள் அவ்வப்போது தலைகாட்டுபவர்கள் ஆவார்கள்.அவ்வளவே!

நமக்கு உறவாக இல்லாவிடினும்..நட்போடு பழகினால் அவர் நமக்கு உறவுபோலத்தான்.அவரே நம் நண்பர்.அவரே நமக்கு உதவக் கூடியவர்.அவரே பிரச்னைகளின் போது நமக்கு அடைக்கலமும், ஆறுதலும் தருபவராக இருப்பார்

சஞ்சலமான மனதினனுக்கும், விவேகமும் அனுபவமும் உள்ள பெரியோர்களுக்கு பணிவிடை செய்யாதவனுக்கும், பதற்றப்பட வேண்டியவனுக்கும் அல்லது ஏமாற்றுபவனுக்கும் ஒரு போதும் நிரந்தர நண்பர்கள் இருக்க மாட்டார்கள்

ஏரி வறண்டு போனால் அன்னப்பறவைகள் வெளியேறி விடுவது போல..ஒருவன் சஞ்சலமான மனதினனாகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவனாகவும், புலன் ஆசைகளுக்கு வசப்பட்டவனாகவும் இருந்தால் அவனுடைய செல்வமும், வசதிகளும் அவனை விட்டு நீங்கி விடும்

கொடியவர்கள் திடீரென சீறி விழுவார்கள்.அதுபோல திடீரென காரணமில்லாமலேயே மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அவர்கள் குணம் ஆகாயத்தின் தோற்றம் போல கணம் தோறும் மாறியபடியே இருக்கும் (வானம் மேகங்களால் திடீரென இருளும்..பின் மேகங்கள் விலக திடீரென வெளிச்சமாகும்)

சிலர் தங்கள் நண்பர்களால் நன்கு வரவேற்கப்பட்டு, உபசரிக்கப்பட்டு நன்மைகள் பல பெற்றாலும், நன்றியுணர்வு அற்றவர்களாக இருப்பர்.அத்தகையோர் இறந்த பின்..அவர்களது உடலை நரி, கழுகு போன்றவை கூடத் தொடாது

ஒருவன் பணம் படைத்தவனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி உதவி தேவைப்படும் போது நண்பர்களை அணுக வேண்டும்.அப்படி ஒருபோதும் உதவி கோராவிடின் நம் நண்பர்கள் எனப்படுபவர்கள் உண்மையானவர்களா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது

கவலையால் அழகு குலையும்.உடல் வலிமை குறையும், அன்பு மழுங்கும். கவலை காரணமாக மனிதன் பல நோய்களுக்கு ஆளாகிறான்

கவலைப்படுவதால் மட்டும் நாம் விரும்பும் எதையும் பெற முடியாது.மனதில் துன்பம் பரவி உடலும் கஷ்டத்திற்குள்ளாகிறது.இது கண்டு நம் எதிரிகள் மகிழ்வர்.எனவே கவலையால் மனம் தளரக்கூடாது

மனிதன் இறக்கிறான்.மீண்டும் பிறக்கிறான்..ஏழையாகிறான்.மீண்டும் செல்வச் சிறப்பு பெறுகிறான்.பிச்சை எடுக்கிறான்..பின்னர் வாரி வழங்குகிறான்.இன்னொருவரின் மரணத்திற்காக சோகத்தை வெளிப்படுத்துகிறான்.வேறொரு சமயம் அவன் மரணத்திற்காக மற்றவர்கள் விசனப்படுகின்றனர்

இன்பம்-துன்பம், தோற்றம்- அழிவு, வளமை- வறுமை, லாபம்- நஷ்டம், சாவு- பிறப்பு, என்ற இரட்டை நிலைகள் எல்லோருக்கம் மாறி மாறி, மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.எனவே, நாம் நமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு சமயம் கூத்தாடாமலும் மறுசமயம் புலம்பாமலும் அமைதியாகவே இருக்க வேண்டும்

கண், காது, மூக்கு,நாக்கு,சருமம். மனம் என ஆறும் எப்போதும் சஞ்சலத்துடனே உள்ளன. பானையின் எந்தப் பகுதி ஓட்டையானாலும் ஊற்றப்படும் தண்ணீர் வெளியேறுவது போல நம்புலன்கள் ஏதேனும் ஒன்று தவறாக இயங்கினாலும் அதன் வழியே நம் அறிவு வெளியேறிவிடும்

என்று விதுரர் கூறினார்.

திருதராஷ்டிரர் சோகமாக விதுரரிடம்,"துரியோதனனைச் செல்லமாக வளர்த்துவிட்டேன்.அது தவறு.உடலுக்குள் நெருப்பை மறைத்துவைக்க முயன்றது போல ஆகிவிட்டது.அந்த நெருப்பு உடலை எரித்து..அதனுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றவற்றையும் அழித்துவிடும்.துரியோதனன் தானும் அழிவதுடன், என் மற்ற மகன் களையும்  கூட அழித்துவிடுவான் போல இருக்கிறதே! இச் சூழ்நிலைத் தொடர்ந்து அச்சுறுத்துவதாகவே உள்ளது.இதனால் மனம் குழம்பிக் கிடக்கிறது.விதுரரே! எல்லா கவலைகளில் இருந்து  விடுபட வழி என்ன?" என்றார்

விதுரர் கூறலானார், "தூய மன்னரே! அறநெறி அறிந்திருத்தல், கடமையைத் தவம் போலச் செய்து வருதல், புலன்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்,பிறர் செல்வத்திற்கு ஆசைப்பாடாதிருத்தல் ஆகியவை மூலம் மனிதர்கள் மன அமைதியைப் பெற முடியும்

அறிவின் மூலம் அச்சத்தை விரட்டலாம்.கடமையைத் தவம் போலச் செய்தால் பெரிய சாதனைகள் புரியலாம்.குருவைச் சார்ந்திருந்து சேவை புரிந்தால் ஆத்ம ஞானம் பெறலாம்.புலன்களை வசப்படுத்தினால் அமைதியாக வாழலாம்

முக்தி பெற விரும்புபவர்கள், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு அற்றவர்களாகவும், பற்றுகளை குறைத்துக் கொண்டும் வாழ வேண்டும்.தான தருமம் செய்வதால் விளையக்கூடிய நல்ல பலன் களுக்காக ஏங்கக் கூடாது.வேதங்கள் கூறும் சடங்குகளைச் செய்வதால் கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகளுக்காகவும் ஆசைப்படக் கூடாது

சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்து முறையாக பயில்வனும்,நியாயமான காரணத்திற்காக வீரமாக போராடுபவனும், எப்போதும் நற்செயல்களையே செய்பவனும் கடமைகளைத் தவம் போல உறுதியாகச் செய்பவனும் தங்கள் முயற்சியின் முடிவில் வளமாக வாழ்வார்கள்

இனி வள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளைஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம் புலன் களையும் அடக்கியாளும் உறுதி காலமெல்லாம் வாழ்க்கைக்கு அரணாக அமையும்


Sunday, December 27, 2015

32-பேச்சின் விளைவும்...மனிதரின் மூவகையும்



விதுரர் மேலும் கூறலானார்...

சூழ்நிலையை விளக்க ஒரு பழங்கதையைக் கூறுகிறேன்.இது ஒரு உரையாடல்.தத்தாத்திரேய முனிவருக்கும், சாத்தியர்கள் என்ற தேவ வையினருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் ஆகும் இது.

முன்னொருகாலத்தில் ஆத்திரேயர் என்ற மாமுனிவர் வாழ்ந்தார்.விவேகமுள்ளவர்.அவர் கடுமையான விரதங்களைக் கடைபிடித்தார்.அவர் பரமஹம்ச முறையிலான துறவி உடை அணிந்து செல்வார்.அவரிடம் சாத்தியர்கள் ஒரு விஷயம் கேட்டனர்

"மாமுனிவரே! சாத்தியர்கள் எனும் நாங்கள் தேவவகையைச் சேர்ந்தவர்கள்.தங்களை தரிசிப்பதில் மகிழ்ச்சி.ஆனால், தாங்கள் யாரென எங்களுக்குத் தெரியவில்லை.நீங்கள் வேதங்களை பயின்றவர்..பேரறிஞர் என்று நினைக்கிறோம்.நீங்கள் எங்களுக்கு ஞானத்தைப் போதித்தால் பேருதவியாய் இருக்கும்"

பரமஹம்சர் சொன்னார்.." தேவ புருஷர்களே! முதலில் நான் நன் குக்  கற்ற விஷயம் ஒன்றைக் கூறுகிறேன்.எந்த சூழ்நிலையிலும், மன உறுதி,மன அமைதி அல்லது மனக்கட்டுப்பாடு, வாய்மை,நற்பண்புகள் ஆகியவற்றைக் கைவிடக்கூடாது.இதயத்தை இறுக்கும் காமம், சினம் போன்ற முடிச்சுகளை நெகிழ்த்தி விட வேண்டும்.தன்னைப் பொறுத்தவரை இன்ப. துன்பங்கள் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும்.

நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினால் பதிலுக்கு நாமும் அவனைத் தூற்றக்கூடாது.இகழப்பட்டவர் பொறுமையாக இருந்தால் அவர் படும் வேதனை தீயைப்போல இகழ்ந்தவனை பற்றிக்கொள்ளும்.அதுமட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்டவனைப் போய்ச் சேர்ந்துவிடும்

நாம் யாரையும் ஏசக்கூடாது.பிறரை அவமதிக்கவும் கூடாது.நீசர்களை சார்ந்து வாழக்கூடாது.நன்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.திமிர் பிடித்து அலையக் கூடாது.கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடாது. கடுமையான புண்படுத்தும் சொற்களைப் பேசக்கூடாது.

கடுஞ்சொல் கூறுவதால் உடலுக்குக் கெடுதல் விளைகிறது.கடுஞ்சொற்கள் உடலில் உயிர்நிலைகளாக உள்ள உறுப்புகளை அரித்துவிடும்.எலும்புகள், இதயம், நுரையீரல் ஆகிய பகுதிகளையும் பாதித்துவிடும்.ஆகவே  அறநெறியைப் பின்பற்ற விரும்பிகிறவன்  பிறரைக் கீறுவது போன்ற கடுஞ்சொற்களை எப்போதும் கூறாமல் இருக்க வேண்டும்.

எவன் எரிந்து விழும் குணம் கொண்டுள்ளானோ, கல் போன்ற கடுமையான சுபாவம் கொண்டுள்ளானோ, சொல்லம்புகளால் பிறரது இதயத்தைத் துளைக்கின்றானோ அத்தகையவன் அதிர்ஷ்டம் கெட்டவனாக, மனிதர்களுள் கீழ்த்தரமானவனாக இருப்பான்.அவனது வாயில் எமன் குடிகொண்டிருப்பான்

ஒரு தீயவன், கூரானதும் நெருப்பு அல்லது சூடான சொல்லம்புகளால் ஒரு அறிஞனைத் தூற்றினால், அந்த அறிஞன் வேதனையடைந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப் பொறுமைக் காத்தால் திட்டியவன் செய்திருந்த புண்ணியங்களின் நற்பலனெல்லாம் அறிஞனிடம் வந்துவிடும்  என்பதை அறிஞன் உணர்ந்திருக்க வேண்டும்

நாம் துணியை எந்த நிறச் சாயத்தில் நனைக்கிறோமோ, அந்த நிறத்தில் துணி மாறும். அதுபோல நல்லவருடனோ, தீயவருடனோ,துறவியிடனோ, கள்வனுடனோ இப்படி யாருடன் பழகுகிறோமோ அவரது பாதிப்பால் அதற்குரிய குணமாறுதலைப் பெற்றுவிடுவோம்.

தன்னை பிறர் ஏசினாலும் எவன் ஒருவன் பிறரை இகழ்வதில்லையோ, தன் சார்பில் யாரும் பிறரை இகழ அனுமதிப்பதும் இல்லையோ அத்தகைய பொறுமைசாலி தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்பும்

தன்னை ஒருவன் தாக்கினாலும், எவன் அவனைத் திருப்பித் தாக்குவதில்லையோ....தன் சார்பில் யாரும் அவரைத் திருப்பித் தாக்க அனுமதிப்பதும் இல்லையோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குத் துளிக்கூட கெடுதல் செய்ய விரும்புவதில்லையோ அத்தகைய பொறுமைசாலியை தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்புவர்

பேசுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது.பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும்.அவ்வாறு நாம் பேசும் உண்மைபிறருக்கு நன்மை செய்வதாகவும் அமைய வேண்டும்.நாம் நன்மையளிக்கும் வகையில் பேசுவது அறநெறிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்

ஒரு மனிதன் யாருடனெல்லாம் நெருங்கிப் பழகிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான்.அல்லது யாரைச் சார்ந்து பணி புரிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான் அல்லது யாரைப்போல ஆகவேண்டும் என மனதில் நினைக்கிறானோ அவரைப்போல ஓரளவாகிறான்

ஒருவன் எதை எதைத் தவிர்த்து விடுகிறானோ அதனதன் பின் விளைவுகளிலிருந்தும் தப்பித்து விடுகிறான்.எல்லாவற்றையும் தவிர்ப்பவன் வாழ்வில் சிறிதளவு கூட துன்பம் ஏற்படுவதில்லை

மேற்கண்டவாறு பற்றுகளை விட்டவனை யாரும் வெல்ல முடியாது.அவனும் யாரையும் வெல்ல விரும்புவதில்லை.அவன் யாருக்கும் எதிரியில்லை.அவன் யாரையும் பழி வாங்குவதில்லை.பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிற்குள்ளாகாது அவன் அமைதியாக இருப்பான்.அவன் ஒன்றை இன்பம் என எண்ணிக் குதிப்பதில்லை.மற்றதைத் துன்பம் என எண்ணி துவண்டும்போவதில்லை

மனிதர்களில் முதல்தர மனிதன் உலகில் அனைவரும்,அனைத்தும் நலமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான்.அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான்.அவன் உண்மையே பேசுவான்.கனிவுடன் பழகுவான்.உடல்,மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்

நடுத்தர மனிதன்   வாக்குறுதிகள் கொடுப்பான்.அவற்றை நிறைவேற்றியும் தருவான்.எதையும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுத்து விடுவான்.பிறரிடம் குற்றம் கண்டுபித்தவாரே இருப்பான்.

கீழ்த்தர மனிதர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள்.எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள்.பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள்.பயங்கரமாய்க் கோபப்படுவார்கள்.நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள்.அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர்.சில சமயங்களில் நல்லவர்களைப் போலப்பழகினாலும் கொடிய மனம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

கீழ்த்தரமானவர், பெரியவர்கள் கூறும்  நல்ல ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.அந்த ஆலோசனைகளால் நன்மை விளையும் என நம்பமாட்டார்கள்.தன்னையே சந்தேகப்படுபவர்களாக இருப்பார்கள்.தன் நண்பர்களையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புபவன் மேற்கண்ட மூவகை மனிதரில் உத்தமமான மனிதர்களையே அணுக வேண்டும்.தவிர்க்க இயலா நிலையில் நடுத்தரமானவர்களை அணுகலாம்.ஆனால் ஒருபோதும் கீழ்த்தரமக்களை சார்ந்திருக்கக் கூடாது

ஒருவன் தன் வலிமையைத் தவறாகப் பயன்படுத்தியோ,விடாமுயற்சியுடன் உழைத்தோ, அறிவையும், ஆண்மையையும்கொண்டோ செல்வம் சம்பாதிக்கலாம்.ஆனால் இவற்றால் மட்டுமே அவன் நற்பெயரோ, உயர்குடியில் பிறந்தோரின் நற்பண்பையையோ அடையமுடியாது.


Friday, December 25, 2015

31-பாவ புண்ணியம்



வாய்மை,பணிவு,ஆன்மீகப் பயிற்சி,நூல் அறிவு,உயர் குடிப் பிறப்பு,ஒழுக்கம்,மனவலிமை,நல் வழியில் சம்பாதித்த செல்வம்,வீரம், பல விஷயங்களை இனிமையாய்ப் பேசும் திறன் ஆகிய பத்தும் சுவர்க்கத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்லும் வழியைக் காட்டும்

ஒருவன் பாவச்செயலைப் புரிந்தால் அதன் விளைவாக பாவி என்று சொல்லப்பட்டு இகழப்படுவான்.அதனால் தண்டனையும் பெறுவான்.அதுவே, ஒருவன் நற்செயல் புரிந்தால் அவன் புண்ணியவான் எனப் புகழ்ப் பெறுவான்.அச்செயலால் பிற்காலத்தில் நல்ல பலனையும் பெறுவான்

ஆகவே, நாம் பாவச்செயல் புரிய மாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் பாவச் செயல் புரிபவனின் அறிவு மழுங்கிவிடும் .இவ்வாறு அறிவை இழப்பவன் பாவச் செயல்களையேச் செய்வான்.மாறாக நல்ல செயல்களைச் செய்து வந்தால் நம் அறிவு மேலும் வளரும்

நல்லறிவு கொண்டவன் புண்ணியச் செயல்களில் ஈடுபடுவான்.புகழ் பெறுவான்.இறுதியில் அவன் சுவர்க்கத்தைச் சென்றடைவான்.ஆகவே ஒருவன் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்

பொறாமை கொள்பவன், பாம்பு போல மனதில் விஷம் நிறைந்தவன்.கொடூர இதயம் படைத்தவன்.கடுஞ்சொல் கூறுவோன்.வேண்டுமென்றே பிறரிடம் விரோதம் கொள்வோன்.மோசடி செய்வோன்.ஆகியோர் பாவச் செயல்கள் புரிவோர் ஆவர்.அவர்கள் விரைவில் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்

ஒருவன் பிறரிடம் பொறாமை கொள்ளாதவனாகவும், நல்லதை பிரித்தறியும் விவேகம் உள்ளவனாகவும், பின் நல்லதை மட்டுமே செய்பவனாகவும் இருந்துவிட்டால் அவனுக்கு துன்பம் நேராது.மேலும் அவன் எளிதில் புகழப்படுவான்.

அறிவுள்ள மனிதன் தயங்காமல் மற்ற அறிஞர்களின் அறிவையும் திரட்டிப் பெற்று மேலும் அறிஞன் ஆவான்.அவன் நற்பண்புகளை கடைப்பிடிப்பான்.நேர்மையான ,முறையில் வாழ்க்கை வசதிகளைச் சேகரித்துக் கொள்வான்.இதனால் மேன்மேலும் மகிழ்ச்சி அடைபவனாக முன்னேறுவான்

நாம் இரவில் மகிழ்ச்சியாகத் தூங்க உதவும் வகையில் பகலில் செய்யும் வேலையின் தன்மையின் அளவும் அமைந்திருக்க வேண்டும்.மழைக்காலமான நான்கு மாதங்களில் நாம் வாழ உதவியாக எட்டு மாதங்களில் செய்யும் வேலையின் தன்மையும், அளவும் அமைய வேண்டும்

நாம் முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்றபடி வாழ்க்கையின் தொடக்கத்திலேயே செய்கின்ற வேலையின் தன்மையும், அளவும் அமைந்திருக்க வேண்டும்.இவ்வுலகை விட்டு நாம் சென்றாலும் சுவர்க்கத்தில் மகிழ்வோடு வாழ உதவும் வகையில் வாழ்க்கை முழுதும் நாம் செய்கின்ற வேலையின் தன்மை அமைய வேண்டும்

அறிஞர்கள் அவசரப்பட்டு எதையும், யாரையும் புகழ்ந்துவிட மாட்டார்கள்.அவர்கள் எளிதில் ஜீரணமானபின்பே குறிப்பிட்ட உணவையும்,நடுத்தர வயதைக் கடந்துவிட்ட பிறகே மனைவியையும், போரில் வெற்றி பெற்ற பிறகே வீரனையும்,தன்னை அறிந்து ஆத்ம தரிசனம் பெற்ற பிறகே துறவியையும் புகழ்வார்கள்

ஒருவன் தவறான வழியில் செல்வம் சம்பாதித்து பிறகு அதைக்கொண்டு அத்தவறை மூடி மறைக்க முயற்சித்தால் அது பலனளிக்காது.அது மட்டுமின்றி வேறு பல தவறுகளும் ஏற்பட்டுவிடும்

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டவர்களை ஆன்மீகக்குரு அடக்கியாள்கிறார்.கொடியவர்களை அரசர் தண்டனைகள் மூலம் அடக்கிகிறார்.விவஸ்வத் எனப்படும் சுரியனின் மகனாகிய வைவஸ்தர் என்னும் யமன் ரகசியமாகப் பாவம் செய்தவர்களையும் கண்டுபிடித்து அடக்கிவிடுகிறான்

ரிஷிமூலம், நதிமூலம் ,உத்தமர்களின் குலத்தின் மூலம் ஆகியவற்றைத் தேடி ஆராய்ந்துக் கொண்டிருக்கக் கூடாது.பெண்கள் கெட்டுப்போனால் அவர்கள் மேற்கொள்கின்ற தந்திரமான வழிகளில் மூலத்தையும் கண்டறிய இயலாது

எந்தச் சத்திரியர் அந்தணர்களை  போற்றுகிறாரோ , நிறைய தான தருமம் செய்கிறாரோ,உறவினர், சுற்றத்தாருடன் மென்மையாக, நேர்மையாக பழகுகிறாரோ, ஒழுக்கமான நடத்தை கொண்டுள்ளாரோ அவர் நெடுங்காலம் உலகை ஆள்வார்

வீரம் மிகுந்தவர்கள்,அறிவு மிக்கவர்கள்,மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவை உணர்வு மிகுந்தவர்கள் ஆகிய மூன்று வகையினரும் தங்க மலர்களால் ஆன உலகத்தைப் பரிசாகப் பெறுவர் (செல்வச் செழிப்புடன்விளங்குவர்)

மூளையின் உதவியுடன் செயல்படும் செயல்கள் உயர்தரவையாக இருக்கும். கைகளில் உதவியுடன் செயல்படுபவை நடுத்தரமானவையாகும்.தொடைகளால் செயல்படுபவை மோசமானதாக இருக்கும்.தலையால் செய்யப்படும் (பாரம் தூக்குதல் போன்றவை) தாழ்ந்ததாக இருக்கும்

திருதராஷ்டிரரே! இந்த நாட்டில் ஆட்சியை துரியோதனன்,சகுனி, துச்சாதனன், கர்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்.இப்படிப்பட்ட நிலையில் நாடு வளம் பெற்று விளங்கும் என எப்படிச் சொல்வது?

இதற்கு மாறாக பாண்டவர்கள் ஐவரும் நற்குணங்கள் நீரைந்து விளங்குகிறார்கள்.உங்களைத் தங்களதுத் தந்தையாகவே எண்ணி மதிக்கின்றனர்.ஆகவே நீங்களும் அவர்களை உங்கள் புதல்வர்களாக எண்ணி அந்த முறையில் நடத்துங்கள்

என்று விதுரர் கூறி முடித்தார்.

இனி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் எனப் பார்ப்போம்


பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பிறர் அழத்திரட்டிய செல்வம் அழ அழப் போய் விடும்.நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்


Wednesday, December 23, 2015

30-ஏற்றம் பெற எட்டு



விவேகம், உயர்குடிப் பிறப்பு,சுயக்கட்டுப்பாடு,புனித நூல்களில் பயிற்சி,வீரம், பேச்சில் அளவாக இருத்தல், சக்திக்கு உட்பட்டு தான தருமம் செய்தல்,நன்றி மறவாமை ஆகிய எட்டுக் குணங்களும் ஒருவனைப் புகழ்ப் பெறச் செய்யும்.

இந்த எட்டுக் குணங்களையும் ஒருவன் பெற்றிருந்தால், அவனுக்கு ஆட்சியாளர் மூலம் கௌரவம் கிடைக்கும்.அந்தக் கௌரவம் மேற்கண்ட எட்டையும் விடச் சிறப்பாகும்.

இப்பொழுது  சொல்லும் எட்டுக் குணங்களைக் கடைப்பிடித்தால் அவை நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.அவற்றில் நான் கு  நன்மக்களுக்கு இயல்பாகவே அமைவது.மீதியை அவர்கள் முயற்சித்து பெறுகின்றனர்.

வேள்வி செய்தல்,தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம்,தருமம் செய்வதில் ஈடுபாடு ஆகிய நான்கும் நல்லவர்களிடம் இயல்பாகவே உள்ளன.சுயக்கட்டுப்பாடு,வாய்மை,நேர்மை, அகிம்சை ஆகிய நான்கு குணங்களையும் நல்லவர்கள் தம்முடையதாக்கிக் கொள்கின்றனர்.

வேள்வி, தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம், தவம், வாய்மை, மன்னிக்கும் பண்பு, கருணை, பிறர் பொருளை விரும்பாமை ஆகிய எட்டும் நாம் பின்பற்ற வேண்டிய நற்குணப் பாதைகள் என முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிறர் பாராட்டைப் பெற சிலர் மேற்சொன்ன எட்டில் வேள்வி,ஆன்மீக நாட்டம்,தான தருமம் தவம் ஆகிய நான்கையும் மேற்கொண்டிருக்கலாம்.ஆனால் வாய்மை, பிழையைப் பொறுத்தல்,கருணை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை ஆகிய நான்கும் உண்மையாகவே..இயல்பாகவே சான்றோர்களீடம் காணப்படும்

முதியோர் கலந்து கொள்ளாத ஆலோசனை நிகழ்ச்சியைக் கூட்டமென்றே கூறமுடியாது.நற்பண்புகளை எடுத்துரைக்காதவர்களை முதியோர்கள் என கூறமுடியாது.எடுத்துரைக்கப்படும் குணம் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்காவிட்டால் அது நற்பண்பு ஆகாது.வஞ்சகம் கலந்த ஒன்றை உண்மை எனக் கூறமுடியாது.

இனி வாய்மை, பிறர் பொருள் விரும்பாமை ஆகியபற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.....

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்

பிறருக்கு எம்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கிறவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவார்கள்