Tuesday, September 22, 2015

12-ஐவகை



தந்தை,தாய், நெருப்பு,ஆத்மா, குரு இந்த ஐந்தும் புனிதமனாவை.ஆற்றல் மிக்கவை, ஒவ்வொரு மனிதனும் இவற்றிற்கு சேவை செய்ய வேண்டும்

கடவுள், முன்னோர், மூத்தோர் (தாய்,தந்தை, குரு), துறவிகள், விருந்தினர்  ஆகியோரை வழிபட்டு, பணிவிடை செய்வதன் மூலம் ஒருவன் முழுமையான புகழ் அடையலாம்

நண்பர்கள், எதிரிகள், காரணமில்லாமல் விசாரிக்க வருபவர்கள், நம்மை ஆதரிக்கும் அயலார், நம்மைச் சார்ந்துள்ள உறவு ஆகிய ஐவகையினரில், யாரேனும் ஒருவர் நம்மை, எங்கும், எப்போதும் பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.

மெய்,வாய், கண், மூக்கு,செவி..ஆகிய ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருந்தால், அதன் வழி கிடைக்கக் கூடிய நன்மை அல்லது அறிவானது ஓட்டையான பொருளிலிருந்து தண்ணீர் வெளியேறுவது போல நம்மை விட்டு நழுவிச் சென்று விடும்.


Wednesday, September 16, 2015

11 - நான்கு வகையினர்



அரைகுறை அறிவைப் பெற்றவர், தாமதப்படுத்தும் எண்ணத்துடன் காலம் கடத்துபவர்கள், சோம்பேறிகள் , (ஆதாயத்திற்காக) பிறரைப் புகழ்பவர்கள் ஆகிய நான்கு வகையினரிடம் ஆலோசனைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.இவர்களது ஆலோசனைகள் அரசனையும் தோல்வியடையச் செய்யும்..

வயதான உறவினர், உயர் நிலையிலிருந்து வீழ்ச்சியுற்றோர், வறுமையில் வாடும் நண்பர், குழந்தையற்ற சகோதரி இந்த நான்கு வகையினரையும் வசதி,கடமை உணர்வு மிக்கவர்கள் தன் வீட்டில் வைத்து காப்பாற்ற  வேண்டும்

தேவர் தலைவன் இந்திரன் தனது குருவான பிரகஸ்பதியிடம் "உடன் நிகழக்கூடிய நான்கு சம்பவங்கள் என்ன? என்று கேட்டார்.அதற்கு பிரகஸ்பதி சொன்னார்...

"கடவுளின் விருப்பம், ஞானிகளின் அதிசய ஆற்றல்,அறிஞர்களின் அடக்கக் குணம், பாவிகளின் அழிவு ஆகியவை உடனுக்குடன் நடக்கும்"

அக்னிஹோத்ர வேள்வி,மௌன விரதம்,ஆழ்ந்து படித்தல், வேள்விகள் முதலிய சடங்குகள் இவை நான்கையும் முறையாக, மரியாதையுடன் செய்தால் அவை நம்மைக் கவசம் போல இருந்துக் காப்பாற்றிப் பாதுகாக்கும்.இவற்றைச் சரிவரச் செய்யாவிடின் நன்மை விளையாது என்பதுடன் தீமையே ஏற்படும்.


Monday, September 14, 2015

10 - மூன்று வகையினர்



தங்களது பணிகளை நிறைவேற்ற ஒவ்வொருவரும் தாழ்ந்தது,நடுத்தரமானது.உத்தமமானது என மூன்று வகையான அணுகுமுறைகளில் ஒன்றை மேற்கொள்கின்றனர்

உத்தமர்,மத்திமர்,அதமர் என மனிதர்கள் மூவகையாக பிரிக்கப்படுகின்றனர்.இவர்கள் முறையே உத்தமமான, நடுத்தரமான, இழிவான வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

மனைவி,அடிமை,மகன் இவர்கள் மூவரும் தங்கள் பெயரில் சொத்து அமையப் பெறாதவர்கள்.அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அல்லது அன்பளிப்பு ஆகியவை அவர்கள் யாரைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குப் போய்ச் சேரும்(முறையே, கணவன்,முதலாளி,தந்தை)

பிறர் பொருளைத் திருடுதல், பிறர் மனைவியைக் கற்பழித்தல்,நண்பனை மோசம் செய்து கைவிடல் இவை மூன்றும் ஆபத்தானவை.இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அவை அவனை எலும்புருக்கி நோயாய் அரித்து அழிவிற்குக் காரணமாய் அமையும்

காமம், கோபம், பேராசை இவை நரகத்தின் வாயில்களாக அமைந்துள்ளன.இவை ஆத்மாவைக் களங்கப் படுத்தும்.ஆகவே அவற்றைக் கைவிட வேண்டும்.

தன்னைச் சார்ந்தவர்கள் வேண்டுவதைக் கொடுத்தல், நாடுகளை வெல்லுதல், மகன் பிறத்தல் இவை மூன்றும் தனித்தனி சிறப்புப் பெற்றவை.இவை மூன்றும் சேர்ந்தால் மும்மடங்கு சிறப்பு.ஆபத்தில் மாட்டிக் கொண்ட பகைவனை விடுவிப்பதற்கு சமமான சிறப்புப் பெற்றவை.(பகைவனுக்கு அருள்வது சிறப்பான குணமாகும்)

பலகாலமாக நமக்கு உண்மையாக உள்ளவர், ஆதரவாளர் இப்போது உண்மையாக உள்ளவர், நம்மிடம் அடைக்கலம் கேட்பவர் ஆகியவர்களை நமக்கு ஆபத்து வந்தாலும் கைவிடக் கூடாது.

Saturday, September 12, 2015

9- இருவகையினர்



தாக்கப்பட்டாலும் போரிடாத அரசன், வெளியூருக்கு (குருவைத் தேடியோ, புண்ணிய தலங்களுக்கோ) செல்லாத அந்தணன்..ஆகிய இரண்டு பேரையும் பொந்துகளில் வாழும் பிராணிகளை பாம்பு விழுங்குவது போல பூமி விழுங்கிவிடும்

சிறிதும் கடுஞ்சொற்கள் பேசாதிருத்தல், தீயவர்களைப் புகழ்ந்து  வணங்காமலிருத்தல் ஆகிய இரண்டும் மனிதன் புகழ் பெற்று பிரகாசிக்க உதவும்.

மற்ற பெண்கள் விரும்பும் பொருட்களுக்கு தானும் ஆசைப்படும் பெண்கள், மற்றவர்கள் வணங்குவதைப் பார்த்து தானும் வணங்கும் முட்டாள்கள் இருவரும் சுயமாக சிந்திக்காமல் மற்றவர்கள் கருத்துக்கு ஏற்ப செயல்படுபவர்கள் ஆவார்கள்

ஏழையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஏங்குவது, உயர் பதவியிலோ, உயர்நிலையிலோ இல்லாவிடினும் பிறர் மீது கோபத்தை வெளியிடுவது ஆகிய இரண்டு குறைகளும் கூர்மையான விஷ முட்களைப்போல உடலை பாதித்துவிடும்

உழைப்பில் ஆர்வமில்லா குடும்பத் தலைவன், உலக விவகாரங்களில் ஈடுபடும் துறவி ஆகிய இருவகையினரும் வாழ்க்கையில் கௌரவம் பெற முடியாது.

பிரபுக்கள் போல உயர்நிலையிலிருந்தும் பொறுமையாக இருப்பவர், வறியவராய் இருந்தும் வள்ளல் போல வழ்ங்குபவர்கள் ஆகிய இரண்டு வகையினரும் விண்ணுலகிற்கும் மேற்பட்ட உலகில் இடம் பெறுவார்கள்.

தகுதியற்றவர்களுக்கு பணம் கொடுத்தல், தகுதி உள்ளவர்களுக்கு உதவ மறுத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த கௌரவத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படும்

தான தருமம் செய்யாத பணக்காரன், கடவுள் பற்றில்லா ஏழை ஆகிய இரு வகையினரும் கழுத்தில் பெரிய கல் கட்டப்பட்டு தண்ணீரில் தள்ளப்பட்டவர்கள் போல அழிவர்

யோகப் பயிற்சிகளில் முழு தேர்ச்சி பெற்றுவிட்ட துறவி, புறமுதுகுக் காட்டாது போரிட்டு கொல்லப்பட்ட வீரன் ஆகிய இருவகையினரும் விண்ணுலக வாழ்வைப் பெறுவர்


Saturday, September 5, 2015

8-பொறுமை



பொறுமைசாலிகளிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு.வேறு எந்த குறைகளும் கிடையாது.அந்த ஒரே குறை என்னவென்றால் அவனை மக்கள் பலகீனமானவன் என எண்ணும்படி நடந்து கொள்வான்

உண்மையில் பொறுமை என்பது குறையல்ல.மிகவும் வலிமை வாய்ந்தது.பலகீனமானவர்களிடம் உள்ள பொறுமையும் நற்குணம்தான்.ஆனால் பலசாலிகளின் பொறுமையோ ஒரு ஆபரணம்.

பொறுமை அனைவரையும் வசீகரித்து வசப்படுத்தும் வலிமையைக் கொண்டது.பொறுமையால் சாதிக்கமுடியாத காரியங்களே இல்லை எனலாம்.பொறுமை என்ற வாளை ஏந்தியவனை எந்த தீயவனாலும் ஏதும் செய்ய முடியாது.

புல்லற்ற தரையில் விழும் நெருப்பு தானாகவே அழிந்துவிடும்.அதே வேளையில் சுற்றியுள்ள பொருட்களையும் சேதப்படுத்தாது.பொறுமையற்றவனோ தான் அழிவதுடன் அல்லாது சுற்றத்தினருக்கும் அழிவை உண்டாக்குவான்.

நேர்மை தலை சிறந்த பண்பாகும்.பொறுமைதான் அமைதிக்கு தலை சிறந்த வழி.முழுமையான அறிவே பூரண திருப்தியத் தரும்.பிறருக்குத் தீங்கிழைக்காத தன்மையே மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.


Friday, September 4, 2015

7- அறிவிலி யார்?



அறிவிலி எனப்படுபவன்.......

தனக்கு அறிவில்லை என்பதை பொருட்படுத்தாது கர்வமாய் இருப்பான்.ஏழையாக இருந்தாலும் திமிராக நடந்து கொள்வான்.தனது விருப்பங்களைத் தவறான வழிமுறைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வான்.அல்லது..எந்த முயற்சியும் செய்யாது விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என எண்ணுவான்

தனது சொந்த வேலையை விட்டு விட்டு பிறர் வேலையில் தலையிடுவான்.தன் சொத்தை இழந்துவிட்டு பிறர் தயவில் வாழ்வான்.அன்புள்ளவன் போல நடித்து நண்பர்களுக்குத் துரோகம் செய்வான்

விரும்பத்தகாத பொருளுக்கு ஆசைப்படுவான்.விரும்ப வேண்டிய பொருள்களை புறக்கணிப்பான்.தன்னைவிட வலியாரிடம் பணிவாகப் பழகாது அவர்தம் மீது வெறுப்புடன் விரோதத்தை வளர்த்துக் கொள்வான்

பகைவனை நண்பன் என ஏமாறுவான்.உண்மையான நண்பனை பகைவனாய் எண்ணி, அவனை வெறுத்து, அவனுக்கு தீங்கு செய்வான்.எப்பொழுதும் தீயச் செயல்களிலேயே ஆழ்ந்திருப்பான்.

தனக்குரிய கடமையைச் செயல்படுத்தத் தொடங்காமல் தயங்கிக் குழம்பியபடியே இருப்பான்.எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவான்.விரைவில் முடிக்கக்கூடிய பணியையும் இழுத்தடித்து தாமதப் படுத்துவான்.

முன்னோர்களை ஞாபகம் வைத்துக் கொண்டு திதி, படையல் ஆகியவற்றை செய்ய மாட்டான்.குலதெய்வங்களை வழிபட மாட்டான்.நல்ல உள்ளம் கொண்டவர்களை நண்பனாகக் கருத மாட்டான்.

தான் அழைக்கப்படாத இடங்களுக்கு தானே வலிய செல்வான்.தன்னிடம் பேசாதவர்களிடம் தேவையின்றி பேசுவான்.நம்பத் தகாதவர்களிடம் தன் ரகசியங்களை பகிர்ந்து கொள்வான்

தான் தவறிழைத்த போதிலும் பிறர் மீது குற்றம் சொல்வான்.தன்னைச் சார்ந்திராதவர், தனக்கு சம்பந்தமில்லாதவர் போன்றவர்களிடம் கோபித்து சண்டையிடுவான்

தனது ஆற்றல் குறைவு என புரியாமல், பெரிய செயல்களைச் செய்ய பேராசைப் படுவான்.அவை அறநெறிக்கு பொருந்தாதவையாகவும், அதிக உழைப்பின்றி பணம் சம்பாதிக்க விரும்பும் முயற்சிகளாகவும் இருக்கும்.

தன்னைச் சாராதார், தனக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆகியோருக்கு வழி காட்டுவான்.ஆனால், தன்னைச் சார்ந்தவர், தனக்கு சம்பந்தமானவர்களுக்கு பயனுள்ளதாக ஏதும் செய்ய மாட்டான்.கருமிகளிடம் உதவி எதிர்ப்பார்த்து கெஞ்சிக் கொண்டிருப்பான்.

மற்றவர் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் உண்டு களிப்பான்.தன் குடும்பத்தினர் கிழிந்த அடை அணிந்திருந்தாலும் தான் நல்ல ஆடை அணிந்து மகிழ்வான்

ஒருவன் பாவச்செயல் செய்தால் அது அனைவரையும் பாதிக்கிறது.ஆனால் காலப்போக்கில் சரியாகிவிடுகிறது.ஆனால் பாவச் செயல் புரிந்தவனை விட்டு களங்கம் எப்போதும் நீங்காது.

அம்பு எதிரியைக் கொல்லும் போது குறி தவறும்.ஆனால், ஒரு அறிவாளி தன் அறிவை அழிவு நோக்குடன் பயன் படுத்தினால் அரசன் உட்பட ஒரு நாடே நாசமாகிவிடும்.

இரண்டை, ஒன்றால் பிரித்தறிந்து, மூன்றை நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து, ஐந்தை வென்று, ஆறை அணிந்து கொண்டு, ஏழை கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.(இது பொதுவாக மன்னர்களுக்குச் சொல்லப்பட்டது.இதன் விளக்கம்-
நல்லது, கெட்டது என்ற இரண்டை விவேகம் என்ற ஒன்றால் பிரித்து அறிந்து, நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய மூவரை , சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து ஐம்புலன்களை (ஐந்தை) வென்று, உடன்படிக்கை, போர்,அணிவகுத்து முன்னேறுதல்,தன் வசமுள்ள பகுதிகளைக் காத்தல், சாதகமான காலம் வருவரை காத்திருத்தல்,வஞ்சகம், அடைக்கலம் கிடைக்கக் கூடிய இடம் ஆகியவற்றை (விவரங்களை) அணிந்து கொண்டு, பெண்ணாசை. சூதாட்டம்,வேட்டையாடுதல்,குடிப்பழக்கம், கடுஞ்சொல் கூறல், கடுமையாக தண்டித்தல், செல்வத்தை விரயம் செய்தல் ஆகிய ஏழைக் கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.

விஷம் குடிப்பவனைக் கொல்லும்.ஆயுதம் தாக்கப்பட்டவனை அழிக்கும் ஆனால் அரசியல் ரகசியங்கள் வெளியானால் ஆட்சியாளரும், குடிமக்கள் உட்பட நாடே அழியும்.(தீய ஆலோசனைகளால் நாடே அழியும்)

தனியாக ஒருவன் விருந்துணவை உண்ணக்கூடாது.தனியாக ஒருவன் முக்கிய முடிவெடுக்கக் கூடாது.தனியாக ஒருவன் பயணம் செய்யக் கூடாது மற்றவர் உறங்குகையில் தனியாக ஒருவன் கண் விழித்திருக்கக் கூடாது.

விண்ணுலகிற்கு அழைத்துச் செல்ல ஒரு ஏணிதான் உண்டு.மாற்று ஏணிக்கிடையாது.கடலைக் கடக்க உதவும் படகினைப் போல, உலகைக் கடந்து அமர வாழ்விற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரே ஏணி உண்மைதான்.இதை நீங்கள் (திருதராஷ்டிரர்) உணரவில்லை.


Wednesday, September 2, 2015

6-அறிஞர் எனப்படுபவர்



உண்மையான அறிஞரின் பண்புகளை விதுரர் கூற ஆரம்பித்தார்.

அறிஞர் எனப்படுபவர்...

தனது அடிப்படையை அறிதல்,முயற்சியுடமை,சகிப்புத்தன்மை,அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பர்,மேலும், வாழ்க்கையில் குறிக்கோள்களை கைவிடாதவராகவும் இருப்பார்கள்

மரம் ஒன்றுதான்...ஆனால் அதிலிருந்து பூஜைப்பாத்திரம், கரண்டி, படகு,மரக்கூடை,உலக்கை முதலிய பல பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.அதுபோல, ஒரு மூத்தோரிடமிருந்து தான் நல்லது, கெட்டது இரண்டுமே தோன்றுகின்றன


அறிஞர் எனப்படுபவர்.....

உன்னதமான விஷயங்களில் பற்று கொண்டிருப்பர்.நிந்திக்கப்படும் விஷயங்களைத் தவிர்த்திடுவார்.கடவுள் பக்தி உடையவராக இருப்பதுடன், தன்னைவிட மூத்தவர்கள், குரு ஆகியோரின் அறிவுரைகளிலும், சமய நூல்கள் கூறும் கருத்துக்களிலும் நம்பிக்கை கொண்டிருப்பர்.

கோபம், மகிழ்ச்சி, கர்வம், கூச்சம்,பிடிவாதம், போலி சுயகௌரவமாகியவற்றின் வசப்படுவதில்லைவாழ்க்கையின் உன்னத லட்சியங்களை மேற்கூறியவை தடுத்துவிடும் என்பதால் அவை தன்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வர்.

தனது பணிகள், வெப்பத்திலோ, குளிராலோ அச்சம் காரணமாகவோ, அன்பாலேயோ, வளமையாலோ தடைப்பட்டு நிற்காமல் தொடர்ந்து இயங்குவர்.

தடுமாறும் அறிவை வசப்படுத்தி, நல்ல விஷயங்களிலும், வாழ்க்கையின் வசதிகளை நேர்மையாகப் பெறுவதிலும் ஈடுபட்டிருப்பர்.இவ்வாறு அறம்,பொருள் இரண்டிலும் ஈடுபாடு கொண்ட  உலக இன்பங்களில் அதிக நாட்டக் காட்ட மாட்டார்கள்.

தன்னுடைய திறமையை முழுமையாக பயன்படுத்த விரும்புவர்.தன் சக்திக்கு ஏற்ப நடந்ததையெல்லாம் சிறப்பாகச் செய்வார்கள்.எப்பணியையும் தாழ்வானது என புறக்கணிக்க மாட்டார்கள்

எதையும் உடனே புரிந்து கொள்வர்.பிறர் கூறுவதை பொறுமையாகக் கேட்பார்கள்.பிறர் சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.அதனால் உண்டாகும் பலனை எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.கடமை உணர்வுடன் செயல் படுவார்கள்.தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டு தனது நேரத்தை வீணாக்கமாட்டார்கள்.

தனக்குக் கிடைக்க வாய்ப்பற்ற பொருட்கள் மீது ஆசை படமாட்டார்கள்.தனது பொருள் தொலைந்து போனாலும் அதற்காக,
புலம்ப மாட்டார்கள்.எதிர்ப்பு, தோல்வி ஆகிய எந்த சூழ்நிலையிலும் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நிற்க மாட்டார்கள்.

ஒரு  செயலை செய்யும் முன் சிந்திப்பார்கள்.செயல்புரிய தொடங்கிவிட்டால் அதை பாதியில் நிறுத்த மாட்டார்கள்.தனது நேரத்தை விரயம் செய்யாமல் மனதை தன் வசத்தில் வைத்திருப்பர்.

உன்னதமான பணிகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.தனக்கும், பிறருக்கும் மகிழ்ச்சியும், நன்மையும் தரக்கூடிய செயல்களிலேயே ஈடுபட்டிருப்பர்.மற்றவர்களின் வசதியைக் கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்.

அதீத மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.அவமானம் ஏற்பட்டாலும் துவண்டு விட மாட்டார்கள்.பாராட்டு, அவமானம் ஆகிய எந்நிலையிலும் கங்கை நதியிலுள்ள மடுபோல சலனமின்றி அமைதியாக இருப்பார்கள்.

உயிருள்ளவை, உயிர் அற்றவை ஆகிய அனைத்தின் அடைப்படை அறிந்தவராய் இருப்பர்.மக்கள் செய்யும் செயல்கள் எத்திசையில் செல்கின்றனவோ  , அவற்றின் விளைவுகள் எப்படி என இரண்டையும்
யூகிக்க வல்லவராய் இருப்பர்.தங்களது விருப்பங்கள் நிறைவேற மனிதர்கள் பின்பற்றும் எல்லா செயலையும் அறிந்தவராய் இருப்பர்.

தைரியமாக தடங்களின்றி பேசக்கூடியவராய் இருப்பார்கள்.பல விஷயங்கள் குறித்தும் சுவையாக பேசுவார்கள்.எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது அறிந்திருப்பார்கள்.எந்தப் பிரச்னையானாலும் நுணுக்கமாக அறியும் பார்வை பெற்றிருப்பர்.உயரிய நூல்களிலிருந்து சுலபமாக மேற்கோள் காட்டி விளக்குவார்கள்.

தன் அறிவின் தரப்படி உயர்க்கல்வி பெற்றிருப்பர்.உயர்க் கல்விக்கேற்ப உயர் அறிவும் பெற்றிருப்பர்.மற்ற அறநூல்களில் நிலை நாட்டப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை மீறமாட்டார்கள்.

தன் அறிவிற்காக கர்வப்பட மாட்டார்கள்.செல்வமோ, ஆற்றலோ. அதிகாரமோ குறைந்திருந்தாலும்திமிர் கொண்டு அலைய மாட்டார்கள்.அடக்கமாக தன் பணிகளைச் செய்வார்கள்.