Friday, January 29, 2016

101)நன்றியில் செல்வம்

1.ஒருவன் பெரும் பொருளைச் சேர்த்து அதை அனுபவிக்காமல் இறந்து போனால்..சேர்க்கப்பட்ட செல்வத்தால் பயன் என்ன?

2.பொருளால் எல்லாம் முடியும் என..பிறர்க்கு எதுவும் கொடுக்காமல் செல்வத்தை பற்றிக்கொண்டிருப்பவன்..எச்சிறப்பும் அற்ற இழிபிறவி ஆவான்.

3.பொருளை சேர்ப்பதே குறியாக இருப்பவர்கள்..பிறந்து வாழ்வதே பூமிக்கு சுமையாகும்.

4.யாராலும் விரும்பப்படாதவன்..மரணத்திற்குப்பின் எஞ்சி நிற்பது எது என எதை நினைத்திட முடியும்.

5.ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் அடையும் இன்பத்தை அறியமுடியாதவனிடம்..கோடி கோடியாக பணம் இருந்தும் பயன் இல்லை.

6.தானும் அனுபவிக்காது..தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்பவன் ..அவனிடம் உள்ள செல்வத்துக்கு ஒரு நோய் போல ஆவான்.

7.வறியவர்க்கு ஏதும் உதவாதவன் செல்வம்..அழகானப்பெண் ஒருத்தி தனித்திருந்து முதுமை அடைவதைப் போன்றது.

8.பிறர்க்கு உதவாதவன் செல்வம்..ஊர் நடுவில் எதற்கும் உதவாத நச்சு மரத்தில் பழுத்துள்ள பழம் போல
உபயோகமற்றது.

9.அன்பும் இன்றி,தன்னையும் வருத்தி..அறவழிக்கு புறம்பாய் சேர்க்கும் செல்வத்தை பிறர் கொள்ளை கொண்டு
போய்விடுவர்.

10.நல்ல உள்ளம் கொண்ட செல்வர்களின் சிறிய வறுமை என்பது..உலகத்தைக் காக்கும் மழைமேகம் வறுமை
மிகுந்தாற் போன்ற தன்மையுடையதாம்.

102)நாணுடைமை

1.தகாத செயல் செய்து நாணுவதற்கும்..நல்ல பெண்ணின் இயல்பான நாணத்திற்கும் வேறுபாடு உண்டு.

2.உணவு,உடை எல்லாம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது..ஆனால் மாண்பு மட்டுமே மக்களின் சிறப்பு இயல்பு.

3.உடலுடன் உயிர் இணைந்து இருப்பது போல..மாண்பு எனப்படுவது நாண உணர்வோடு இணைந்து இருப்பது.

4.சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாக அமையும்.நாணுடைமை அற்றோர்.. பெருமிதமாக நடக்கும் நடையே
நோய்க்கு ஒப்பானதாகும்.

5.தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றி..பிறர்க்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் பண்பிற்கு உறைவிடமாவர்.

6.பரந்த உலகில் நாணம் என்னும் வேலியே சிறந்த பாதுகாப்பாக கொள்ள வேண்டும்.

7.நாண உணர்வுள்ளவர்கள் மானத்தைக்காக்க உயிரையும் விடுவர்.உயிரைக் காக்க மானம் இழக்க மாட்டார்கள்.

8.வெட்கப்படும் அளவு பழி ஏற்படுமேயானால்..அதற்கு வெட்கப்படாதவர்களை விட்டு அறநெறி அகலும்.

9.கொள்கை தவறினால் குலத்துக்கு இழுக்கு..பிறர் பழிக்கும் செயல் செய்யின் நலமனைத்தும் கெடும்.

10.கயிறு கொண்டு பொம்மையை உயிர் இருப்பது போல ஆட்டிவைக்கப்படுவதற்கும்..நாண உணர்வற்றவர்களுக்கும்
வேறுபாடு இல்லை.

103)குடிசெயல்வகை

1.கடமையைச் செய்வதில் சோர்வு காணாதவனுக்கு அப்பெருமையைவிட..வேறொரு பெருமை கிடையாது.

2.முயற்சி, நிறைந்த அறிவு கொண்டு அயராது பாடுபட்டால்..அவனைச் சார்ந்த குடிமக்கள் பெருமை உயரும்.

3.என் குடியை உயரச் செய்வேன் என முயலும் ஒருவனுக்கு..இயற்கையின் ஆற்றல் தானே முன் வந்து துணை
செய்யும்.

4.தம்மைச் சார்ந்த குடிமக்களை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு, முயல்வோருக்கு வெற்றி
வந்து குவியும்.

5.குற்றம் அற்றவனாய்..குடி உயரும் செயல் செய்து வாழ்பவனை உறவு போல கருதி சுற்றம் சூழ்ந்துகொள்ளும்.

6.நல்லபடி ஆளும் திறமை பெற்றவர்..பிறந்த குடிக்கு பெருமை சேர்ப்பர்.

7.போர்க்களத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் அஞ்சா வீரர் போல,குடிமக்களை தாங்கும் பொறுப்பும் ஆற்றலுள்ளவர்க்கு உண்டு.

8.குடி உயிர செயல் செய்கிறவனுக்கு காலம் என்று ஒன்று இல்லை.சோம்பல் கொண்டு தயங்கினால் குடிமக்கள்
நலன் கெடும்.

9.குடிமக்களுக்கு வரக்கூடிய குற்றத்தை வராது நீக்க முயலுபவன்..அவனைப் பொறுத்தவரை துன்பத்தைத்
தாங்கிக்கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

10.துன்பத்தை எதிர் நின்று தாங்கும் ஆற்றலுள்ளவர் இல்லாத குடியை..அத்துன்பம் வெட்டி வீழ்த்திவிடும்

104)உழவு

1.உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும்..ஏர்த்தொழிலின் பின் நிற்பதால்
உழவுத்தொழிலே சிறந்ததாகும்.

2.பல தொழில்கள் புரிபவர்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில்
இருப்பதால்.. உலகத்தார்க்கு அதுவே அச்சாணியாகும்.

3.உழுதுண்டு வாழ்பவரே உரிமையோடு வாழ்பவர்கள்..ஏனெனில் மற்றவர்கள் பிறரிடம் வேலைசெய்து சம்பாதித்து
உண்பவராக இருப்பதால்.

 4.பல அரசுகளின் குடைநிழல்களை தம் குடையின் கீழ் கொண்டு வரும்
வலிமை உழவர்களுக்கே உண்டு.

5.தானே தொழில் செய்து சம்பாதித்து உண்ணும் இயல்புடையவர் பிறரிடம் கையேந்தார்..
தம்மிடம் வேண்டி நிற்போருக்கும் ஒளிக்காமல் வழங்குவர்.

6.பற்றை விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகளும் உழவர்களின் கையை
எதிர்பார்த்தே வாழவேண்டும்.

7.ஒரு பலம் புழுதி...கால் புழுதி ஆகும்படி நன்கு உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும்
போடாமலேயே பயிர் செழித்து வளரும்.

8.உழுவது உரம் இடுதல் நன்று..களைஎடுப்பது..நீர்பாய்ச்சுதல் மிகவும் நல்லது.
அதைவிட பயிரை பாதுகாப்பது மிகமிக நல்லது.

9.உழவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் இருப்பானேயாயின்..அந்நிலம் ..மனைவிபோல
பிணங்கு கொண்டு அவனை வெறுக்கும்.

10.வாழ எந்த வழியும் இல்லை என சோம்பித் திரிவாரைப் பார்த்து..பூமித்தாய்
கேலியாய் சிரிப்பாள்.

105)நல்குரவு

1.வறுமையைப்போல வேறு துன்பம் எது என்று கேட்டால்,வறுமையைப் போல துன்பம் வறுமை ஒன்றே ஆகும்.

2.வறுமை என்னும் பாவி ஒருவனை நெருங்கினால்..அவருக்கு எக்காலத்திலும் நிம்மதி என்பதே கிடையாது.

3.வறுமை காரணமாக பேராசை ஏற்பட்டால்..அது அவன் பரம்பரை பெருமையையும் ,புகழையும் சேர்த்து
கெடுத்துவிடும்.

4.வறுமை என்பது..நற்குடியிற் பிறந்தவரிடம் இழிவு தரும் சொல் பிறக்க காரணமான சோர்வை உண்டாக்கும்.

5.வறுமை என்னும் துன்பத்திலிருந்து பலவகை துன்பங்கள் உருவாகும்.

6.அரிய நூல் கருத்துக்களை, ஒரு வறியவன் சொன்னால்..அவை எடுபடாமற் போகும்.

7.வறுமை ..வந்துவிட்டது என்று..அறநெறி விலகி நடப்பவனை தாய் கூட புறக்கணிப்பாள்.

8.வறியவன்..நேற்று கொலை செய்தது போல துன்புறுத்திய..வறுமை இன்று வராமல் இருக்க வேண்டுமே என
நாளும் வருந்துவான்.

9.நெருப்பில் படுத்து தூங்கினாலும் துங்க முடியும்.ஆனால் வறுமைப் படுத்தும் பாட்டில் தூங்குவது இயலாது.

10.ஒழுங்குமுறையற்றதால் வறிமையுற்றோர், தம்மை முற்றுந் துறக்காமல் உயிர் வாழ்வது உப்புக்கும்..கஞ்சிக்கும் கேடாகும்

106)இரவு

1.கொடுக்கக்கூடிய தகுதி இருந்தும்..இரப்பவர்களுக்கு இல்லை என்று சொன்னால் பழி ஏற்படும்.

2.இரந்து அடையும் பொருள் துன்பமின்றி கிடைக்குமானால்..வழங்குபர்,வாங்குபவர் இருவர் மனத்திலும்
இன்பம் உண்டாகும்.

3.ஒளிவு மறைவு இல்லா நெஞ்சம்,கடமைஉணர்வு கொண்டவரிடம் வறுமை காரணமாக ஒருவர் இரந்து
பொருள் கேட்பதும் பெருமையுடையது ஆகும்.

4.உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையில்லாதவரிடம்..இரந்து கேட்பது பிறர்க்குக் கொடுப்பது போல
பெருமையைத் தரும்.

5.உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கும் பண்புடையோர் இருப்பதாலேயே..இல்லாதார் அவர்களிடம்
சென்று இரத்தலை மேற்கொள்கின்றனர்.

6.உள்ளதை ஒளிக்காதவரைக் கண்டால் ..இரப்போரின் வறுமைத் துன்பம் அகலும்.

7.இகழ்ந்து பேசாமல்..ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால்..இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து
மகிழ்ச்சி அடையும்.

8.இரப்பவர்கள் தம்மை அணுகக்கூடாது என நினைக்கும் மனிதருக்கும்..மரப்பதுமைகளுக்கும் வேறுபாடு இல்லை.

9.இரந்து பொருள் பெறுவோர் இல்லையெனில்..பொருள் கொடுத்து புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.

10இரப்பவன் எந்நிலையிலும் கோபம் கொள்ளக்கூடாது..தன்னைப் போல் பிறர் நிலையும் இருக்கக்கூடும் என்ற
எண்ணமும் வேண்டும்.

107)இரவச்சம்

1.உள்ளதை ஒளிக்காமல் வழங்கும் இரக்கச் சிந்தை உள்ளவரிடம்..இரவாமல்
இருப்பது கோடி மடங்கு உயர்வானது.

2.உலகைப்படைத்தவன்.. உலகில் சிலர் இரந்துதான் உயிர்வாழவேண்டும் என
ஏற்படுத்தியிருந்தால்..கெட்டொழியப்படும்.

3.வறுமையை.. பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என எண்ணும்
கொடுமையைப்போல வேறு கொடுமை இல்லை.

4.வாழ வழி இல்லாதபோதும்..பிறரிடம் கைநீட்டாத பண்புக்கு
இந்த உலகே ஈடாகாது.

5.கூழ்தான் உணவென்றாலும் ..தம் முயற்சியில் சம்பாதித்து அதைக்குடித்தால்
அதைவிட இனிமையானது எதுவும் இல்லை.

6.பசுவிற்க்கு தண்ணீர் வேண்டும் என்று இரந்து கேட்டாலும் அதைவிட
இழிவானது வேறொன்றுமில்லை.

7.இருப்பதை மறைத்து இல்லை என்பாரிடம் கையேந்த வேண்டாம் என
கையேந்தி கேட்பதில் தவறில்லை.

8..இருப்பதை மறைத்து ..இல்லை எனக் கூறுபவர்மீது..இரத்தல் என்னும்
மரக்கலம் மோதினால் அதுதான் உடையும்.

9.இரந்து வாழ்வோர் நிலை கண்டு உள்ளம் உருகும்.கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை
நினைத்தால் உள்ளமே ஒழிந்துவிடும்.

10.இரப்பவரிடம் இல்லை என்றால் இரப்போர் உயிரே போய்விடுகிறதே..ஆனால் இல்லை என்று பொய்
சொல்பவரின் உயிர் மட்டும் எங்கு ஒளிந்துக் கொள்கிறது.

108)கயமை

1.மனிதர்களிடம் மட்டும் தான் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் கயவர்களைக் காணமுடியும்.

2.எப்போதும் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலையற்ற கயவர்கள்
ஒரு விதத்தில் பாக்யசாலிகள்.

3.புராணங்களில் வரும் தேவர்கள் போல..தங்கள் மனம் போன போக்கில் கயவர்களும் செல்வதால் அவர்கள்
இருவரும் சமம் எனலாம்.

4.கீழ் மக்கள்..தங்களைவிட கீழ்மக்களைக் கண்டால்..அவர்களைவிட நாம் நல்லவர்கள் என கர்வம் அடைவர்.

5.கீழ் மக்கள் தாங்கள் விரும்புவது கிடைத்தால் ஒழுக்கம் உள்ளவர் போல காட்டிக்கொள்வர்.மற்ற நேரங்களில்
பயம் காரணமாக உத்தமர் போல நடிப்பர்.

6.மறைக்கப்பட வேண்டிய ரகசியம் ஒன்றைக் கேட்டதும்..பிறரிடம் வலிய போய் சொல்வதால்..கயவர்களை
பறை என்ற கருவிக்கு ஒப்பிடலாம்.

7.முரடர்களுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்களே அன்றி ..ஈகை குணமற்ற கயவர்கள் ஏழை,எளியவர்க்கு
எச்சில் கையையும் உதற மாட்டார்கள்.

8.குறைகளை சொன்னதும்..சான்றோரிடம் பயன் பெற முடியும்.ஆனால் கயவர்களோ கரும்பு போல நசுக்கிப்
பிழிந்தால்தான்..பயன்படுவர்.

9.பிறர் உடுப்பதையும்..உண்பதையும் கண்டு அவர் மேல் பொறாமைக் கொண்டு..வேண்டுமென்றே அவர் மேல்
குறை சொல்வர் கயவர்.

10.துன்பம் வரும் போது..அதற்காக தம்மையும் விற்க தயாராய் இருப்பவரே கயவர்கள் ஆவார்கள்.
91)பெண்வழிச் சேறல்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.

2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.

3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.

4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.

5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

6.மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவர்..தேவாம்சம் பொருந்தியவர்கள் போல சிறப்பான நிலையில் வாழ்ந்தாலும்
பெருமை இல்லாதவர் ஆவர்.

7.மனைவியின் எல்லாக் கட்டளைக்கும் கீழ்படிந்து நடப்பவனை விட மான உணர்வுள்ள பெண்மை சிறந்ததாகும்.

8.மனைவியின் விருப்பப்படி நடப்பவர் ..நண்பர்கள் பற்றி,நற்பணிகள் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

9.ஆணவப் பெண்கள் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிபவனிடம் ,சிறந்த அறநெறிச் செயல்களோ ..சிறந்த
அறிவாற்றலோ இருக்காது.

10.சிந்திக்கும் திறன்,உறுதியான மனம் கொண்டவர்கள்..பெண்களிடமே பழியாகக் கிடக்க மாட்டார்கள்

92)வரைவின் மகளிர்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்
துன்பத்தையே தருவர்.

2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.

3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தை
தழுவினாற்போன்றது.

4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாக எண்ணுவர்.

5.இயற்கை அறிவும்,கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்..விலைமகளிரின் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

6.நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர்..ஒழுக்கமற்ற பொதுமகளிரை நாட மாட்டார்கள்.

7.உறுதியற்ற மனம் படைத்தவர் மட்டுமே..தன் மனதில் பொருள் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள
பொதுமகளிரை விரும்புவர்.

8.வஞ்சம் நிறைந்த பொது மகளிரிடம் ஒருவன் மயங்குதல் என்பது..அறிவில்லாதவனிடம் ஏற்படும்
மோகினி மயக்கமாகும்.

9.விலை மகளை விரும்புதல்..தெரிந்தே நரகத்தில் விழுவதற்கு சமமாகும்.

10.பொதுமகளிர் தொடர்பு,மதுப்பழக்கம்,சூதாட்டம் இம்மூன்றும் அமைந்தவர் வாழ்வு சிறப்புற அமையாது.

93)கள்ளுண்ணாமை

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்
அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.

2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.

3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..
ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.

4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன்
நாணம் எனப்படும் பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

5.தன்னை மறந்து மயங்கி இருக்க..விலைகொடுத்து கள்ளை வாங்குதல் என்பது மூடத்தனமாகும்.

6.இறப்பு என்பது நீண்ட உறக்கம் என்பது போல..கள்ளுண்பவர்களும் அறிவுமயங்குவதால்
அவர்கள் மதுவுக்கு பதில் நஞ்சு உண்பவர்கள் என்று கூறலாம்.

7.மறைந்திருந்து மது அருந்தினாலும்..அவர்கள் கண்கள் மயக்கத்தைக் காட்டிக்
கொடுப்பதால் ஊரார் அவர்களை எள்ளி நகையாடுவர்.

8.மது அருந்தமாட்டேன் என ஒருவன் பொய் சொல்ல முடியாது..ஏனெனில் மது
மயக்கத்தில் உள்ளபோது உண்மை வெளிப்பட்டுவிடும்.

9.குடிபோதைக்கு ஆளாளவனை திருத்த முயல்வது என்பது..நீரில் மூழ்கிய ஒருவனை
தீப்பந்தம் எடுத்துச் சென்று தேடுவது போல ஆகும்.

10.ஒருவன் மது அருந்தாதபோது.. மது அருந்தியவனின் நிலையை பார்த்தப் பின்னாவது
..திருந்தமாட்டானா

94)சூது

1.வெற்றியே அடைவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது.அந்த வெற்றி..தூண்டிலில் இரையை
விழுங்க நினைத்து மாட்டிக்கொள்ளும் மீன்களைப்போல் நம்மை ஆக்கிவிடும்.

2.ஒரு வெற்றி அடைந்தோம் என்று தொடர்ந்தால்..நூறு தோல்விகளை தழுவுவதே சூதின் தனமை ஆகும்.

3.பணையம் வைத்து சூதாடுவதை பழக்கமாகக் கொண்டால்..அவன் செல்வமும்..அதனை ஈட்டும் வழிமுறையும்
அவனை விட்டு நீங்கும்.

4.துன்பம் பலவற்றை உண்டாக்கி ஒருவன் புகழைக் கெடுக்கும் சூதைப்போல் வறுமை தருவது வேறு எதுவுமில்லை.

5.சூதாடும் கருவியும்,ஆடும் இடமும்,கைத்திறமையையும் மதித்துக் கைவிடாதவர் ஏதும் இல்லாதவர் ஆகி விடுவார்.

6.சூதின் வலையில் வீழ்ந்தவர்கள்..வயிறு நிறைய உணவும் உண்ணமுடியாமல் துன்பப்பட்டு வருந்துவார்கள்.

7.சூதாடும் இடத்தில் ஒருவன் தன் காலத்தை கழித்தால்..அது அவன் மூதாதையர் தேடி வைத்த செல்வம்,சொத்து,
நற்பண்புகள் எல்லாவற்றையும் நாசமாக்கும்.

8.பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி..அருள் நெஞ்சத்தையும் மாற்றி, துன்ப இருளில் ஒருவனை உழலச்
செய்வதே சூது.

9.சூதுக்கு அடிமையாகி விட்டவர்களை விட்டு புகழ்,கல்வி,செல்வம்,உணவு,உடை ஆகியவை அகன்று விடும்.

10உடலுக்கு துன்பம் வர..வர..உயிர் மேல் ஆசை ஏற்படுவதைப் போல..பொருளை இழக்க இழக்க சூதாட்டத்தில்
ஆசை அதிகரிக்கும்.

95)மருந்து

1.வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் சொல்லும் மூன்றில் ஒன்று
கூட அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

2.முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்.. அடுத்த உணவு அருந்தினவர்களுக்கு
எந்த மருந்தும் தேவைப்படாது.

3.உண்ட உணவு செரித்ததும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து
உண்டால் நீண்டநாள் வாழலாம்.

4.உண்ட உணவு செரித்துவிட்டதா என அறிந்தபின்னர்..
பசி எடுத்த பிறகு உணவு அருந்த வேண்டும்.

5.உடலுக்கு வேண்டிய உணவைக்கூட ..அதிகமாகும் போது...மறுத்து அளவுடன் சாப்பிட்டால்..
உயிர் வாழ்வதில் தொல்லை இருக்காது.

6.அளவுடன் உண்பவர் நலமாகவும் ..அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் வாழ்க்கை.

7.பசியின் அளவு..ஆராயாமல் அதிகமாக சாப்பிட நோய்களும் அதிகமாக வரும்.

8.நோய் என்ன? வரக்காரணம் என்ன? தீர்க்க வழி என்ன என ஆராய்ந்து சிகிச்சை
மேற்கொள்ளவேண்டும்.

9.மருத்துவர் என்பவர்..நோய் என்னவென்றும்,அதற்கான காரணத்தையும்,தணிக்கும் வழியையும்
ஆராய்ந்து ..நோயாளியின் உடலுக்கு பொருந்த சிகிச்சை மேற்கொள்ளுபவர்.

10.மருத்துவமுறை என்பது..நோயாளி,மருத்துவன்,மருந்து,அருகிலிருந்து துணை செய்பவர்
என நான்கு வகையாக பாகுபாடு உடையது.

96)குடிமை

1.நடு நிலையான பண்பு,அடக்கம் கொண்டவர்களையே உயர் குடி பிறப்பு எனலாம்.

2.ஒழுக்கம்,வாய்மை,நாணம் இம்மூன்றும் வழுவாமல் வாழ்வரே உயர் குடியில் பிறந்தவர்கள்.

3.முகமலர்ச்சி,ஈகை,இனியசொல்,பிறரை இகழாமை ஆகிய நான்கு நல்ல பண்புகளும் பெற்றவர்கள் உயர்குடியினர்.

4.பலகோடி பெறுவதாக இருந்தாலும்..உயர் குடியில் பிறந்தவர்..சிறப்புக் கெடும் காரியங்களை செய்யமாட்டார்கள்.

5.பழம் பெருமை வாய்ந்த குடிபிறப்பினர்..வறுமையால் வாடிய போதும்..பிறர்க்கு வழங்கும் பண்பை விடமாட்டார்கள்.

6.வஞ்சக எண்ணத்துடன் தகுதியில்லாதவற்றை, மாசற்ற பண்புடன் வாழ்பவர்கள் செய்ய மாட்டார்கள்.

7.உயர்குடியில் பிறந்தவர்களிடம் உண்டாகும் குற்றம்..வானத்து நிலவில் காணப்படும் களங்கம் போல
பலர் அறியத் தெரியும்.

8.நல்ல பண்புள்ள ஒருவனிடம் அன்பற்ற தன்மை இருந்தால்..அவன் பிறந்த குலம் பற்றி ஐயப்பட நேரிடும்.

9.இன்ன நிலத்தில்..இன்ன பயிர் விளைந்தது என சொல்வது போல..ஒருவரின் வாய்ச்சொல்லே அவரின்
குடிபிறப்பைக் காட்டும்.

10.ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால்..தகாத செயல் செய்ய அஞ்சி நாண வேண்டும்.அதுபோல குடியின்
உயர்வு வேண்டுமானாலும் அனைவரிடமும் பணிவு வேண்டும்.

97)மானம்

1.இன்றியமையாத செய்ய வேண்டிய செயல்கள் என்றாலும்..அவற்றால் குடிப்பெருமை குறையுமானால்..
அச்செயல்களை தவிர்த்திட வேண்டும்.

2.புகழ் மிக்க வாழ்க்கையை விரும்புகிறவர்..தனக்கு புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களை
செய்யமாட்டார்கள்.

3.உயர் நிலை அடையும்போது அடக்க உணர்வும்..அந்நிலை மாறும்போது அடிமையாக நடக்காத மான உணர்வும்
வேண்டும்.

4.மக்கள் உயர் நிலையில் இருந்து..மானமிழந்து தாழ்ந்திடும்போது..தலையிலிருந்து உதிர்ந்த முடிக்கு சமமாக
கருதப்படுவர்.

5.மலைபோல் உயர்நிலையில் உள்ளவரும்..ஒரு குன்றிமணி அளவிற்கு இழிவான செயலில் ஈடுபட்டால்
தாழ்ந்து போய் விடுவார்கள்.

6.ஒருவரின் இகழ்வையும் பொறுத்துக்கொண்டு..மானத்தையும் விட்டுவிட்டு பணிந்து செல்வதில் எந்த
புகழோ,பயனோ கிடைக்காது.

7.மதியாதோர் பின் சென்று உயிர் வாழ்வதைவிட ,செத்து ஒழிவது சிறந்ததாகும்.

8.ஒருவரின் சிறப்பு கெடும்போது..அவர் உடம்பை மட்டும் காத்து வாழ்வது என்பது இழிவான செயலாகும்.

9.தன் உடலில் இருந்து உரோமம் நீங்கினாலும்,கவரிமான் உயிர் வாழாதாம்.அதுபோல உயர்ந்த மனிதர்கள்
மானம் போனால் உயிரையே விட்டு விடுவார்கள்.

10.மானம் போயிற்றே என உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் புகழை உலகு போற்றும்.

98)பெருமை

1.ஊக்கம் ஒருவரது வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும்..ஊக்கமின்றி வாழ்வது இழிவே தரும்.

2.பிறப்பினால் அனைவரும் சமம்..தொழில் செய்யும் திறமையால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.

3.பண்பு இல்லாதவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் உயர்ந்தவர் ஆகமாட்டார்கள்..இழிவான காரியத்தில்
ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தலும் உயர்ந்தாரே ஆவார்கள்.

4.ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொண்டு நடந்தால்..கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் புகழும் ,பெருமையும்
இவர்களுக்கும் கிடைக்கும்.

5.அரிய செயல்களை செய்து முடிக்கும் திறமைசாலிகள் அனைவரும் பெருமைக்குரியவர்களே.

6.பெரியாரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நோக்கம்..சிறியோரின் உணர்ச்சியில் இருக்காது.

7.சிறப்பு நிலை..பொருந்தாத கீழ்மக்களுக்குக் கிடைத்தால்..அவர்கள் வரம்பு மீறி செயல்படுவர்.

8.பண்புடைய பெரியார் எக்காலமும்..எல்லோரிடமும் பணிவுடன் நடப்பார்கள்.ஆனால் சிறியோரோ
பண்பு இன்றி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருப்பார்கள்.

9.ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை ஆகும்.ஆணவத்தின் எல்லைக்கு செல்வது சிறுமை ஆகும்.

10.பிறர் குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும்..பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது
சிறுமைக் குணமாகும்.

99)சான்றாண்மை

1.ஆற்றவேண்டிய கடமை இவை என உணர்ந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம்
இயல்பான கடமை ஆகும்.

2.நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கு அழகாகும்..வேறு எதுவும் அழகல்ல.

3.அன்பு,நாணம்,ஒழுக்கம்,இரக்கம்,வாய்மை என ஐந்து பண்புகளும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

4.தவம் என்பது ஒரு உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது.பிறர் செய்யும் தீமைகளை
சுட்டிக்காட்டாத பண்பே சால்பு.

5.ஆணவமின்றி பணிவுடன் நடத்தலே..ஆற்றலாளரின் ஆற்றல்..அதுவே பகையை பகையிலிருந்துமாற்றும் கருவியாக
அமையும்.

6.ஒருவரின் மேன்மைக்கு உரைகல் போல மதிப்பிடும் கருவி..தாழ்ந்தோரிடத்திலும் ஏற்படும் தோல்வியைக் கூட
ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம்தான்.

7.துன்பத்தை செய்தவர்க்கும் நன்மை செய்வதே சான்றாண்மை எனும் நல்ல பண்பாகும்.

8.சால்பு என்ற வலிமையை உடையவர்களுக்கு வறுமை என்பது இழிவு தரக்கூடியது அல்ல.

9.கடமைகளை கண்ணியத்துடன் ஆற்றுகிற சான்றோர் ஊழிக்காலம் ஏற்பட்டாலும்..தம் நிலை மாறாமல் கடல்போல
திகழ்வர்.

10.சான்றோரின் நற்பண்பு குறையத் தொடங்கினால்...அதை இவ்வுலகு பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.

100)பண்புடைமை

1.யாராயிருப்பினும்..அவரிடம் எளிமையாகப் பழகினால்..அதுவே சிறந்த ஒழுக்கமான பண்புடைமை ஆகும்.

2.அன்புடையவராக இருத்தல்..உயர் குடியில் பிறந்த தன்மை ஆகிய இரண்டும் பண்புடையராக வாழ நல்வழியாகும்.

3.உடலால் ஒத்திருந்தாலும்..நற்பண்பு அற்றவர்களை மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியாக இருக்காது.

4.நீதி வழுவாமை,நன்மை செய்தல், என பிறர்க்கு பயன்படப் பணியாற்றுவர்களின் நற் பண்பை உலகு பாராட்டும்.

5.விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுதல் துன்பம் தருவதாகும்.பகைவரிடம் பண்பு கெடாமல் நடக்க
வேண்டும்.

6.பண்பாளர்களைச் சார்ந்து உலக நடமுறைகள் இயங்க வேண்டும்.இல்லையேல் அவை நாசமாகிவிடும்.

7.அரம் போல கூர்மையான அறிவு உடையவர் ஆனாலும்..உரிய பண்பற்றவர் மரத்துக்கு ஒப்பானவர் ஆவார்கள்.

8.நட்புக்கு ஏற்றவராய் இல்லாமல்..தீமை செய்பவரிடம்..பொறுமை காட்டி பண்புடையவராய் நாம் நடக்க வேண்டும்.

9.பிறருடன் நட்புக் கொண்டு பழகி, மகிழ முடியாதவர்க்கு..உலகம் பகலில் கூட இருட்டாகவே இருக்கும்.

10.பாத்திரம் சுத்தமாய் இல்லாவிட்டால்,அதில் ஊற்றும் பாலும் கெட்டு விடுவது போல..பண்பற்றவர் செல்வமும்
பயனற்றதாகும்.
84)பேதைமை

1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதே
பேதைமை எனப்படும்.

2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.

3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்
அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.

4.நூல்களை படித்து உணர்ந்து,அவற்றை பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் செய்துவிட்டு தாங்கள் மட்டும் அப்படி
நடக்காவிட்டால் அவர்கள் பேதைகள் ஆவார்கள்.

5.தன்னிச்சையாக செயல்படும் ஒரு பேதை..ஏழேழு பிறப்பிற்கும் துன்பமெனும் சேற்றில் அழுந்தி கிடக்க நேரிடும்.

6.ஒழுக்க நெறி இல்லாத ஒரு மூடன்..ஒரு செயலை மேற்கொண்டால்..அதைத் தொடரவும் முடியாமல்..அச்செயலும்
கெட்டு தானும் தண்டனை அடைவான்.

7.அறிவில்லாதவனிடம் சேரும் பெரும் செல்வம் அயலார் சுருட்டிக் கொள்ள பயன்படுமேயன்றி..பாசமுள்ள
உறவினர்களுக்கு பயன்படாது.

8.முட்டாளின் கையில் பொருள் கிடைத்து விட்டால்..அவன் நிலை பித்து பிடித்தவன் கள்ளையும் குடித்து
மயங்கும் கதை ஆகிவிடும்.

9.அறிவற்றவர்களுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது..ஏனெனில் அவர்களிடமிருந்து பிரியும் போது
வருத்தம் ஏற்படாது.

10.அறிஞர்கள் கூட்டத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலை கழுவாமல் படுக்கையில்
வைப்பது போன்றது.

85)புல்லறிவாண்மை

1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்
பொருட்படுத்தப்படுவது இல்லை.

2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...
அது அப்பொருளை பெறுகிறவன் பெற்ற பேறு தான்.

3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்
தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.

4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும் ஆணவமே..
அறியாமை எனப்படும்..

5.அறிவற்றவர்..தான் படிக்காத நூல்களையும் படித்ததுபோல காட்டிக் கொண்டால்..அவர்களுக்கு தெரிந்த
விஷயங்கள் பற்றியும் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

6.தனது குற்றத்தை அறிந்து நீக்காதவன் உடலை மறைக்க மட்டும் உடை
அணிவது மடைமையாகும்.

7.நல்வழிக்கான அறிவுரைகளை ஏற்று...அதன்படி நடக்காத அறிவற்றவர்கள் தனக்குத்தானே
பெருந் துன்பத்தைத் தேடிக்கொள்வர்.

8.சொந்தபுத்தியும் இன்றி..சொல்புத்தியும் கேட்காதவர்கள் வாழ்நாள் முழுவதும்
அந்நோயினால் துன்பமடைவர்.

9.அறிவு இல்லாதவன் தான் அறிந்ததை வைத்து அறிவுடையவனாகக் காட்டிக்கொள்வான்
ஆனால் அவனுக்கு அறிவுரை கூறும் அறிவுள்ளவன் அறிவற்ற நிலைக்கு தன்னையே தள்ளிக்
கொள்ள நேரிடும்.

10.உலகத்தார் உண்டு என்று சொல்வதை ..இல்லை என்று கூறுகிறவன்...ஒரு பேயாக
கருதி விலக்கப்படுவான்.

86)இகல்

1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.

2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாக
அவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.

3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.

4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும் இன்பமாகும்.

5.மனதில் மாறுபாடு உருவானால் அதற்கு இடம் தராது..நடக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களை வெல்லுதல் முடியாது.

6.மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி எளிது என எண்ணுபவர் வாழ்வு..விரைவில் தடம் புரண்டு கெட்டொழியும்.

7.பகை உண்ர்வுள்ள தீய அறிவை உடையவர் வெற்றிக்கு வழிவகுக்கும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

8.மனதில் உண்டாகும் மாறுபாட்டை நீக்கிக்கொண்டால்.. நன்மையும்..இல்லையேல் தீமையும் விளையும்.

9.தனக்கு நன்மை வரும் போது மாறுபாட்டை நினைக்கமாட்டான்.ஆனால் தனக்குத்தானே கேடு
தருவித்துக் கொள்ளும்போது அதை எதிர்ப்பான்.

10.மாறுபாடு கொண்டு பகை உணர்வைக் காட்டுவோரை துன்பங்கள் தொடரும்.நட்புணர்வோடு
செயல்படுவோர்க்கு நற்பயன் விளையும்

87)பகைமாட்சி

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.

2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர்
பகையை எப்படி வெல்லமுடியும்?

3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்
இருப்பவனை வெல்லுதல் எளிது.

4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.

5.நல்வழி நாடாமல்,பொருத்தமானவற்றைச் செய்யாமல்,பழிக்கு அஞ்சாமல்,பண்பும் இல்லாமல்
இருந்தால் எளிதில் வெல்லப்படுவான்.

6.யோசிக்காத சினம் உடையவனையும்,பேராசைக் கொண்டவனையும் பகையாக ஏற்று எதிர்கொள்ளலாம்.

7.தன்னுடன் இருந்துக்கொண்டு,தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனை
பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

8.குணம் இல்லாதவன்,குற்றம் பல செய்தவன் ஆகியவர்களுக்கு துணை யாரும் இருக்கமாட்டார்கள்.
அதனால், அவனை பகைவர்கள் எளிதில் வீழ்த்துவர்.

9.அறிவற்ற கோழைகள், எதற்கும் பயப்படும் இயல்புடையோர் ஆகியோரின் பகைவர்கள் எளிதில் வெற்றிப் பெறுவர்.

10.கல்வி கற்காதவர்களைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய முடியாதவனிடம் என்றும் புகழ்
வந்து சேராது.

88)பகைத்திறம் தெரிதல்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.

2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.

3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.

4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.

5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ இல்லை..அப்படிப்பட்ட சமயத்தில் அந்த பகைவரில் ஒருவனை
இனிய துணையாக்கிக் கொள்வதே அறிவுடைமை.

6.பகைவனைப் பற்றி ஆராய்ந்து அறிந்திருந்தாலும்..இல்லாவிட்டாலும்..கேடு ஏற்படும் காலத்தில் அவனை அதிகம்
நெருங்காமலும்..நட்புக்காட்டியும் சும்மா இருக்க வெண்டும்.

7.நம் துன்பத்தை, அறியாத நண்பருக்கு சொல்லக்கூடாது.அதுபோல நம் பலவீனத்தையும் பகைவரிடம்
வெளிப்படுத்தக்கூடாது.

8.செய்யும் வகையை உணர்ந்து,தன்னையும் வலிமைப் படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக்கொண்டால்
பகைவரின் ஆணவம் அடங்கிவிடும்.

9.முள் மரத்தை செடியிலேயே வெட்ட வேண்டும்..பகையையும் அது முற்றும் முன்னே வீழ்த்திட வேண்டும்.

10.பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள்..மூச்சு விட்டாலும் ..உயிரோடு இருப்பதாக
சொல்ல முடியாது.

89)உட்பகை

1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்
உறவினரின் உட்பகையும்.

2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்
கருவி போல அழித்துவிடும்.

4.மனம் திருந்தா உட்பகை உண்டாகுமானால்..அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டை
உண்டாக்கும்.

5.நெருங்கிய உறவுகளிடையே தோன்றும் உட்பகை..அவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய துன்பங்களை
உண்டாக்கும்.

6. உற்றாரிடம் பகைமை ஏற்படுமானால்..அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது அரிதான செயலாகும்.

7.ஒரு செப்பு சிமிழின் மூடி பொருந்தி இருப்பது போல வெளிப்பார்வைக்குத் தெரியும்..அதுபோல உட்பகை
உள்ளவர் ஒன்றாக இருப்பது போலத் தெரிந்தாலும், பொருந்தி இருக்க மாட்டார்கள்.

8.அரத்தினால் அறுக்கப்பட்ட இரும்பு வலிமை இழப்பது போல..உட்பகை குலத்தின் வலிமையை குறைத்துவிடும்.

9.எள்ளின் பிளவு போன்று சிறியதாக இருந்தாலும்..உட்பகை குடியைக் கெடுக்கும்.

10.மனதால் உடன்பட்டு இல்லாதவருடன் கூடி வாழ்வது என்பது ஒரு சிறு குடிசையில் பாம்புடன்
வாழ்வது போல அச்சம் தருவதாகும்

90)பெரியாரைப் பிழையாமை

1.ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தலே..நம்மை காத்திடும் காவல்கள்
அனைத்தையும் விடச் சிறந்த காவலாகும்.

2.பெரியோர்களை மதிக்காமல் நடந்தால்..நீங்காத துன்பத்தை அடைய நேரிடும்.

3.பகையை அழிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்கள் பேச்சைக் கேட்காது இழித்துப் பேசினால்..அவன் தன்னைத்தானே
அழித்துக் கொள்கிறான் என்று பொருள்.

4.ஆற்றல் உடையவர்களுக்கு ஆற்றலற்றவர் தீமை செய்தால்..தங்கள் முடிவுக்காலத்தை அவர்களே
அழைத்துக் கொள்வது போலாகும்.

5.வலிமை பொருந்திய அரசின் கோபத்துக்கு ஆளானவர்கள் எங்கு சென்றாலும் உயிர் வாழ முடியாது.

6.தீயால் சுட்டால் கூட ஒரு வேளை உயிர் பிழைக்கலாம்..ஆற்றல் மிக்கவரிடம் தவறிழைப்பவர் தப்பிப்
பிழைக்க முடியாது.

7.பெருஞ்செல்வத்துடன் சுகமாக இருந்தாலும்..பெரியோரின் கோபத்துக்கு ஆளானவர்கள் முன் அனைத்தும்
பயனற்றதாய் விடும்.

8.மலை போன்ற பெருமை கொண்ட பெரியவர்களை குலைக்க நினைத்தால்..பெருஞ்செல்வந்தரும் குடியோடு அழிவர்

9.உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்கள்..கோபமடைந்தால் அரசனும்..அரசு இழந்து அழிவான்.

10.வசதி வாய்ப்புக்கள்,வலிமையான துணைகள் உடையவராக இருந்தாலும் சான்றோரின் சினத்தை எதிர்த்துத்
தப்பிப் பிழைக்க முடியாது.
79)நட்பு

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்
அது ஏற்ற செயலாகும்.

2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.
அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.

3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்
நட்பு இன்பம் தரும்.

4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது
இடித்து திருத்துவதற்கும் ஆகும்.

5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.

6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.

7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து
துன்பப்படுவதே நட்பாகும்.

8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.

9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை
தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.

10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது
நட்பின் பெருமை குறையும்.

80)நட்பாராய்தல்

1.ஆராயாமல் கொள்ளும் தீய நட்பு பின்னர் விடுபட முடியா அளவுக்கு கேடுகளை உண்டாக்கும்.

2.மீண்டும்..மீண்டும் ஆராயாமல் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு..இறுதியில் சாவதற்கு காரணமாகிற
அளவு துயரத்தைக் கொடுக்கும்.

3.குணம்,குடிபிறப்பு,குற்றங்கள்,குறையா இயல்புகள் என அனைத்தும் அறிந்தே ஒருவருடன் நட்பு
கொள்ள வேண்டும்.

4.உயர்குடியில் பிறந்து பழிக்கு நாணுகின்றவனின் நட்பை எப்பாடுபட்டாவது பெறவேண்டும்.

5.தீமையான செயல்களை செய்யும் போது கண்டித்து சொல்லி,அறிவுரை வழங்கும் ஆற்றலுள்ளவரின்
நட்பே சிறந்த நட்பாகும்.

6.தீமை வருவதும் நன்மைதான்..அப்போதுதான் நம் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியமுடியும்.

7.அறிவில்லாதவருடன் செய்துக் கொண்ட நட்பிலிருந்து நீங்குதலே ஒருவனுக்கு பெரும் பயனுடையதாக
அமையும்.

8.ஊக்கம் குறையும் செயல்களையும்,துன்பம் வரும்போது விலகும் நண்பர்களையும் விட்டுவிட வேண்டும்.

9.இறக்கும் தறுவாயிலும்..நமக்கு கேடு வரும்போது கைவிட்டு ஓடிய நண்பர்களின் நினைப்பு வந்தால்..
அது உள்ளத்தை வறுத்தும்.

10.குற்றமற்றவர்களை நண்பனாகக் கொள்ள வேண்டும்..இல்லாதவர் நட்பை எந்த விலைக் கொடுத்தாவது
விலக்க வேண்டும்.

81)பழைமை

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.

2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.

3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமே
செய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.

4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..
நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக் கொள்வர்.

5.வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை மட்டுமல்ல..
மிகுந்த உரிமையே என்று எண்ண வேண்டும்.

6.நீண்டநாள் நண்பகள் தமக்கு கேடு செய்வதாக இருந்தாலும் நட்பின் இலக்கணம்
தெரிந்தவர்கள் அந்த நட்பைத் துறக்க மாட்டார்கள்.

7.பழைய நண்பர்கள் அன்புடன் அழிவு தரும் செயல்களைச் செய்தாலும்
நட்பு கொண்டவர்கள் அன்பு நீங்காமலிருப்பர்.

8.பழகிய நண்பர் செய்த தவறுப்பற்றிப் பிறர் கூறினாலும் கேளாமலிருப்பவர்க்கு..
அந்நண்பர் தவறு செய்தால் அந்நட்பால் என்ன பயன்.

9.பழைய நண்பரின் நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகு போற்றும்.

10.பழகிய நண்பர்கள் தவறு செய்தாலும் ..அவர்களிடம் தமக்குள்ள அன்பை
நீக்கிக் கொள்ளாதவரை பகைவரும் விரும்புவர்.

82)தீநட்பு

1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை
குறைத்துக் கொள்வதே நல்லது.

2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்
நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.

3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்
போன்றவர்களுக்கு ஒப்பாவார்.

4.போர்க்களத்தில்..நம்மைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்றவர் நட்பைப்
பெறுவதைவிட அந்த நட்பு இல்லாததே சிறந்ததாகும்.

5.தீய நட்பு..பாதுகாப்பாக அமையாததாகும்...அவர்களுடன் நட்பு கொள்வதைவிட அந்நட்பை
ஏற்காமல் இருப்பதே நலம்.

6.அறிவில்லாதவரின் நட்பைவிட..அறிவுள்ளவர்களிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு
நன்மை தருவதாகும்.

7.சிரித்துப்பேசி நடிப்பவரின் நட்பைவிட பகைவர்களால் வரும் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மை
தருவதாகும்.

8.நிறைவேற்ற முடியும் செயலையும் முடிக்க விடாதவர் உறவை..அவர் அறியாதபடி மெல்ல மெல்ல
விட்டு விட வேண்டும்.

9.சொல் ஒன்று,செயல் ஒன்று என்றுள்ளவர்களின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

10.தனியாக உள்ளபோது இனிமையாக பேசி..பொது மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்பு நம்மை
சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

83)கூடா நட்பு

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்ற
கல்லுக்கு ஒப்பாகும்.

2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக
வேறுபட்டு நிற்கும்.

3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.

4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு, அஞ்சி ஒதுங்கவேண்டும்.

5.மனம் வேறு..செயல் வேறாக இருப்பவர்களின் நட்புக்கு அஞ்சி ஒதுங்க வேண்டும்.

6.நண்பர் போல பகைவர் பழகினாலும்..அவர் சொல்லும் சொற்களில் அவர்களது உண்மைத் தன்மை வெளிப்படும்.

7.பகைவரின் சொல் வணக்கம் என்பது..வளையும் வில் போல தீங்கு விளைவிக்கூடியது.

8.பகைவர் வணங்கும் கையினுள்ளும் கொலைக்கருவி இருக்கும்.அவர் கண்ணீர் விட்டாலும் அது போலிக்கண்ணீரே

9.வெளியே நண்பர் போல மகிழ்ந்து அகத்தில் இகழ்கின்றவரின்..நட்பை நலிவடையச்செய்ய நாமும் அதே முறையை
கைப்பிடிக்க வேண்டும்.

10.பகைவருடன் பழகும் காலம் வரும்போது..முகத்தளவில் நட்புக் கொண்டு வாய்ப்பு வரும் போது அந்த நட்பை
விட்டுவிட வேண்டும்
71)குறிப்பறிதல்

1.ஒருவன் ஏதும் சொல்லாமலேயே அவர் முகம் நோக்கியதும் கருத்து அறிபவன் உலகத்துக்கு
அணிகலனாவான்.

2.ஒருவன் மனதில் உள்ளதை உணர வல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

3.முகம்,கண்,இவற்றின் குறிப்புகளால் உள்ளக் குறிப்பை உணருபவரை எதைக் கொடுத்தாவது
நம் துணை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

4.ஒருவன் மனதில் உள்ளதை.. அவன் கூறாமலேயே அறிந்துக் கொள்பவர் போல மற்றவர்கள்
உறுப்பால் ஒன்று பட்டாலும் அறிவால் வேறுபட்டவர்கள்.

5.ஒருவனது முகக் குறிப்பு உள்ளத்தில் உள்ளதைக் காட்டிவிடும் எனும் போது..அதை உணர
முடியாதவர்களுக்கு கண்கள் இருந்தும் பயனில்லை.

6.ஒருவன் மனதில் உள்ளதை அவன் முகம்..தன் எதிரில் உள்ளதை காட்டும் கண்ணாடிப் போலக்
காட்டிவிடும்.

7.உள்ளத்தில் உள்ள விருப்பு,வெறுப்புகளை தெரிவிக்கும் முகத்தைவிட அறிவு மிக்கது ஏதுமில்லை.

8.முகக் குறிப்பால் உள்ளத்தில் உள்ளதை அறிபவர் முன் ஒருவன் நின்றாலே போதுமானது ஆகும்.

9.கண் பார்வையின் வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள்..ஒருவரின் கண்களைப் பார்த்தே
அவரிடம் உள்ளது நட்பா..பகையா என கூறிவிடுவர்.

10.தாம் நுட்பமான அறிவுடையோர் என்பவர்..பிறர் மனத்தில் உள்ளதை ஆராய்ந்து அறிய பயன்படுத்துவது
அவர்களின் கண்களையே ஆகும்.

72)அவை அறிதல்

1.ஒவ்வொரு சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள், அவையினரின் தன்மையும் உணர்ந்து..அதற்கேற்ப
ஆராய்ந்து பேசுவார்கள்.

2.சொற்களின் வழிமுறையறிந்தவர் அவையினரின் நேரத்தையும்,நிலையையும் உணர்ந்து சொல்ல வேண்டும்.

3.அவையின் தன்மையை அறியாது..சொற்களை பயன்படுத்துவோர்களுக்கு சொற்களின் வகையும் பேசும் திறமையும்
கிடையாது.
4.அறிவாளிகளின் முன் அறிவாளியாகவும்..அறிவற்றவர் முன் அறிவில்லாதவர் போலவும் இருக்க வேண்டும்.

5.அறிவாளிகள் மிகுந்த இடத்தில் பேசாத அடக்கம் ஒருவனுக்கு எல்லா நன்மைகளையும் தரும்.

6.அறிவுடையோர் முன் ஆற்றும் உரையில் குற்றம் ஏற்படின் அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு
சமமாகும்.

7.குற்றமற்ற சொற்களை தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துபவரிடம் அவர் கற்ற கல்வியின் பெருமை விளங்கும்.

8.உணரும் தன்மை உள்ளவர் முன் கற்றவர் பேசுவதென்பது..தானே வளரும் பயிரில் நீர் ஊற்றுவதற்கு சமமாகும்.

9.நல்ல அறிஞர்கள் சூழ்ந்த அவையில்..மனதில் பதியுமாறு பேசுபவர்..சொல்வன்மை உள்ளவர் ஆவார்..அறிவற்றோர்
அவையில் பேசாதிருப்பதே சிறந்தது.

10.அறிவுள்ளவர்கள்..அறிவில்லாதவர் நிறைந்த கூட்டத்தில் பேசுவது தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய
அமிழ்தம் போல வீணாகிவிடும்.

73)அவை அஞ்சாமை

1.சொற்களின் அளவறிந்தவர்கள்..அவையிலிருப்போரை அறிந்து..பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

2.கற்றவரின் முன்..தான் கற்றதை அவர்கள் மனதில் பதிய சொல்லும் வல்லவர்..கற்றவர்களைவிட
கற்றவராக மதிக்கப்படுவர்.

3.பகைவர்களைக் கண்டு அஞ்சாமல் சாகத்துணிந்தவர் பலர் உள்ளனர்..ஆனால்..அறிவுடையோர் உள்ள
அவையில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே உள்ளனர்.

4.அறிஞர்கள் அவையில் நாம் கற்றதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவு எடுத்துச் சொல்லி ..நம்மைவிட
கற்றவர்களிடம் தெரியாததைக் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.

5.அவையில் பேசும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அஞ்சாமல் விடை அளிக்கும் அளவுக்கு ஏற்றவகையில்
கற்றிருக்க வேண்டும்.

6. கோழைகளுக்கு வாளால் என்ன பயன்? அதுபோல அவையில் பேச அஞ்சுபவர் கற்றும் பயனில்லை.

7.அவையில் பேச அஞ்சுபவன் கற்ற நூல்..போர்க்களத்தில் கோழையின் கையில் ஏந்தியுள்ள வாளுக்கு சமம்.

8.அறிவுடையோர் உள்ள அவையில்..அவர்கள் மனதில் பதிய கருத்துக்களை சொல்ல முடியாதவர்..என்ன
படித்து என்ன பயன்?

9.நூல் பல கற்றும் அறிஞர்கள் நிறைந்த அவையில் பேச அஞ்சுபவர்..கல்லாதவரைவிட இழிவானவர்களாக
கருதப்படுவர்.

10.அவைக்கு அஞ்சி தாம் படித்ததைக் கேட்போர் கவரும் வண்ணம் கூற அஞ்சுபவர்..உயிருடன் இருந்தும்
இறந்தவர் ஆவார்.

74)நாடு

1.குறையா விளை பொருளும்,சிறந்த அறிஞர்களும் பழி இல்லா செல்வம் உடையவரும்
கொண்டதே சிறந்த நாடாகும்.

2.மிக்க பொருள்வளம் கொண்டதாய்..எல்லோராலும் விரும்பத்தக்கதாய்,கேடு இல்லாததாய்
நல்ல விளைச்சல் உள்ளதாய் அமைவதே சிறந்த நாடு.

3.வேற்று நாட்டு மக்கள் குடியேறும்போது ஏற்படும் சுமையைத் தாங்கி..அரசுக்கு வரிகளை
ஒழுங்காகச் செலுத்தும் மக்களையும் பெற்றதே சிறந்த நாடு.

4.பசியும், நோயும், பகையும் இல்லாத நாடு சிறந்த நாடாகும்.

5.பல குழுக்களால் உட்பகையும்,அரசில் பங்குக்கொள்ளும் கொலைகாரர்களும் இல்லாததே
சிறந்த நாடாகும்.

6.பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ளதே
நாடுகள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

7.நிலத்தடி நீர்,மழை ஆகிய இரு வகை நீர் வளமும்..அதற்கேற்ப மலைத்தொடரும்..மலையிலிருந்து
வரும் நீர்வளமான ஆறும், பாதுகாப்பான அரணும் நாட்டிற்கு முக்கியம்.

8.நோயற்ற வாழ்வு,விளைச்சல்,பொருள்வளம்,இன்பவாழ்வு,பாதுகாப்பு ஆகிய ஐந்தும்நாட்டிற்கு அழகு.

9.இடைவிடா முயற்சியால் வளம் பெறும் நாடுகளைவிட..இயற்கையிலேயே வளங்களைக் கொண்ட
நாடே சிறந்த நாடாம்.

10.நல்ல தலைவன் அமையாத நாட்டில் எல்லா வளங்கள் இருந்தாலும் பயனின்றிப் போகும்.

75)அரண்

1.போர் செய்யச் செல்பவர்க்கும் கோட்டை சிறந்ததாகும்..பகைவர்க்கு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும்
கோட்டை பயன்படும்.

2.தெளிந்த நீர்,பரந்த நிலம்,மலையும்,காடும் இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.

3.உயரம்,அகலம்,உறுதி,அழிக்க முடியாத அமைப்பு இவை நான்கும் அமைந்திருப்பதே அரண்.

4.காக்க வேண்டிய இடம் சிறியதாய்.மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய்,தன்னை எதிர்க்கும் பகைவரின் ஊக்கத்தை
அழிக்கக்கூடியதே அரண் ஆகும்.

5.பகைவரால் கைப்பற்ற முடியாததாய்,உள்ளே தேவையான அளவு உணவுப் பொருள் கொண்டதாய்..போர் புரிய
எளிதானதாய் அமைந்ததே அரண் ஆகும்.

6.தன்னிடம் உள்ளவர்க்கு எல்லாப் பொருளும் உடையதாய், போர்க்காலத்தில் உதவ வலிமை மிக்க வீரர்களை
உடையதே அரண் ஆகும்.

7.முற்றுகையிட்டும், முற்றுகை இடாமல் போர் செய்தும்,வஞ்சனை செய்தும் பகைவரால் கைப்பற்ற முடியாத
வலிமையுடையதே அரண் ஆகும்.

8.முற்றுகை இடும் வல்லமை கொண்டு,உள்ளிருந்துக்கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில்
அமைந்ததே அரண்.

9.போர் முனையில் பகைவர் அழியும்படி உள்ளிருந்துக்கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் பெருமைப்
பெற்றதே அரண்.

10.கோட்டைக்கு தேவையான சிறப்புகள் இருந்தாலும்..உள்ளிருந்து போர் புரிபவர் திறமையற்றவராய் இருந்தால்
பயனில்லை.

76)பொருள் செயல் வகை

1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.

2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.

3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்
சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.

4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.

5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள் நெறியிலோ..அன்பு வழியிலோ வரவில்லை என்னும்போது
அதை புறக்கணித்து விட வேண்டும்.

6.வரி,சுங்கம்,பகை நாடு,செலுத்தும் கப்பம் ஆகியவை அரசுக்குரிய செல்வமாகும்.

7.அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படும்.

8.தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு தொழில் செய்தல்..மலையின் மேல் ஏறி யானைகளின்
போரைப் பார்ப்பது போல எளிதானதாகும்.

9.தன்னுடைய பகைவனின் செருக்கை அழிக்கவல்லது பொருளே ஆகும்.

10.சிறந்ததான பொருளை ஈட்டியவர்க்கு..அறமும்..இன்பமும்..எளிதாக வந்து சேரும்

77)படைமாட்சி

1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படை
அரசுக்கு தலையான செல்வமாகும்.

2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறு
எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்
வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து விடுவார்கள்.

4.அழிவு இல்லாததாய்,வஞ்சனைக்கு இரையாகாததாய் ,பரம்பரை பயமற்ற உறுதி உடையதே உண்மையான
படையாகும்.

5.எமனே கோபமடைந்து எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படை ஆகும்.

6.வீரம்,மானம்,சிறந்த வழி நடத்தல்,தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப்
பாதுகாக்கும் பண்புகளாகும்.

7.எதிர்த்து வரும் பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் ஆற்றல் அறிந்திருப்பின் அதுவே வெற்றிக்கு
செல்லக்கூடிய சிறந்த படையாகும்.

8.போர் புரியும் வீரம்,எதிர்ப்பைத் தாங்கும் ஆற்றல் இல்லை என்றாலும் படையின் அணி வகுப்புத் தோற்றம்
சிறப்புடையதாக அமைய வேண்டும்.

9.சிறுத்து விடாமல்,தலைவனை வெறுக்காமல்,பயன்படா நிலை இல்லாமல்..இருக்கும் படையே வெற்றி பெறும்.

10.நீண்ட நாள் நிலைத்திருக்கும் வீரர் பலரை கொண்டதாக இருந்தாலும்..தலைமை தாங்க சரியான தலைவர்
இல்லை எனில் அப்படை நிலைத்து நிற்காது.

78)படைச்செருக்கு

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.

2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்து
அது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.

3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்
ஆண்மையின் உச்சமாகும்.

4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத் தொடர,
தன் மார்பில் பாய்ந்த வேலை கண்டு மகிழ்பவன் ஆவான்.

5.பகைவர் வீசும் வேல் தன் மீது பாயும் போது விழிகளை இமைத்தல் கூட வீரர்க்கு அழகல்ல.

6.வீரன் தன் வாழ்நாட்களை கணக்கிட்டு ..விழுப்புண் படாத நாட்களெல்லாம்
வீணான நாட்கள் என்று எண்ணுவான்.

7.புகழை மட்டுமே விரும்பி உயிரைப்பற்றி விரும்பாத வீரரின்..காலில் கட்டப்படும் வீரக்கழல் கூட
தனிப்பெருமை பெற்றதாகும்.

8.தலைவன் சினந்தாலும் போர்வந்தால் உயிரைப் பற்றி எண்ணாமல் போர் செய்யும் வீரர்
சிறப்பு குன்றாதவன் ஆவான்.

9.தான் சபதம் செய்தபடி போர்களத்தில் சாக வல்லவனை யாரும் இழிவாக பேசமுடியாது.

10.தன்னைக் காக்கும் தலைவன் கண்களில் நீர் வருமாறு வீரமரணம் அடையும்
சந்தர்ப்பத்தை யாசித்தாவது பெற்றுக்கொள்ளுதல் பெருமை ஆகும்.
61- மடி இன்மை

1.பிறந்த குடி மங்காத விளக்காயிருந்தாலும்...ஒருவனது சோம்பல்
அதை மங்க வைத்துவிடும்.

2.பிறந்த குடி செழிக்க...சோம்பலை ஒழித்து...ஊக்கத்துடன்
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

3.அழிக்கும் இயல்பான சோம்பல் கொண்டவனின் பிறந்த குடி,
அவனுக்கு முன் அழிந்துவிடும்.

4.சோம்பலில் உழன்று..சிறந்த முயற்சி இல்லாதவர்கள் குடி
தனிப் பெருமை இழந்து...குற்றத்தை பெருக்கும்.

5.காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்.அளவுக்கு மீறிய தூக்கம்
இந்நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் தோணிகளாகும்.

6.நல்லவர்கள் உறவு தானே வந்து சேர்ந்தாலும் ..சோம்பல் உடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.

7.முயற்சியின்றி சோம்பேறியாய் வாழ்பவர்கள் அனைவரின் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

8.நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் இருந்தால் அதுவே அவனைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

9.சோம்பலை அகற்றிவிட்டால் ..அவனது குடிப்பெருமையும்,ஆண்மையும்
தானே வந்து சேரும்.

10.சோம்பல் இல்லா அரசன் உலகம் முழுவதையும் ஒரு சேர அடைவான்

62- ஆள்வினை உடைமை

1.எந்த ஒரு காரியத்தையும் நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் முயன்றால்
அதுவே பெரிய வலிமை ஆகும்.

2.எந்த செயலானாலும் ..அரைக்கிணறு தாண்டாமல் முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும்.

3.பிறர்க்கு உதவி செய்தல்....என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்ற
பண்பில் நிலைத்து இருக்கின்றது.

4.ஊக்கமில்லாதவரை நம் உதவியாளராக வைப்பது என்பது..ஒரு கோழை வாள்
வீச்சில் ஈடுபடுவதை போன்றதாகும்.

5.தன் இன்பத்தை விரும்பாதவனே..தான் ஏற்ற செயலை முடிக்க நினைப்பவனே..
தன் சுற்றத்தாரை தாங்குகின்ற தூணாக ஆவான்.

6.முயற்சி ஒருவனது செல்வத்தை பெருக்கும்..முயற்சி இன்மை அவனை வறுமையில் ஆழ்த்தும்.

7.ஒருவனின் சோம்பலில் மூதேவியும்,சோம்பலற்றவன் முயற்சியில் திருமகளும் வாழ்கின்றனர்.

8.ஊழ்வினை என்பதுடன் அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாமைதான் பெரும்பழியாகும்.

9.ஊழ்வினையால் ஒன்றை செய்ய முடியாமல் போனாலும்..ஒருவனின் முயற்சியானது
அந்த உழைப்பிற்கான வெற்றியைக் கொடுக்கும்.

10.ஊழ்வினையை வெல்ல முடியாது என்று சொல்வதை விட,முயற்சியை மேற்கொண்டால்
அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்யலாம்.

63)இடுக்கண் அழியாமை

1.துன்பம் வரும்போது கலங்கக்கூடாது.அதை எதிர்த்து
வெல்ல வேண்டும்.

2.வெள்ளம் போன்ற அளவற்ற துன்பமும்...அதை நீக்கும் வழியை
அறிவுடையவர்கள் நினைக்க விலகி ஓடும்.

3.துன்பம் வரும்போது கலங்காமல்..அத்துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்கி
அதை வெல்ல வேண்டும்.

4.கரடுமுரடான பாதையில் வண்டி இழுக்கும் எருது போல விடாமுயற்சியுடன்
செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்படும்.

5.துன்பங்கள் கண்டு கலங்காதவர்களைக் கண்டு அத்துன்பமே
துன்பபட்டு அழியும்.

6.செல்வம் வரும்போது அதன்மீது பற்றுக்கொள்ளாதவர்கள்தான் ..
வறுமை வந்தபோது துவண்டுவிட மாட்டார்கள்.

7.உடலுக்கும் உயிர்க்கும் துன்பம் இயல்பானதால்..துன்பம் வரும்போது
அதை துன்பமாகக் கருதக்கூடாது.

8.இன்பம் தேடி அலையாது ..துன்பம் இயற்கையானதுதான் என
எண்ணுபவன் ..துவண்டு போவதில்லை.

9.இன்பம் வரும்போது ஆட்டம் போடாமலும்...துன்பம் வரும்போது வாடாமலும்
இரண்டையும் ஒன்று போல் கருதவேண்டும்.

10.துன்பத்தையே இன்பமாகக் கருதிக் கொண்டால்...அவர்களை
பகைவர்களும் பாராட்டுவார்கள்.

64)அமைச்சு

1.உரிய கருவி,ஏற்ற காலம்,செய்யும் வகை,செய்யப்படும் பணி ஆகியவற்றை ஆய்ந்து
அறிந்து செய்ய வல்லவனே அமைச்சன்.

2.அஞ்சாமை,குடிபிறப்பு,காக்கும் திறன்,கற்றறிந்த அறிவு,முயற்சி ஆகிய ஐந்தும்
கொண்டவனே அமைச்சன்.

3.பகைவனின் துணையைப் பிரித்தல்,தம்மிடம் உள்ளவரைக் காத்தல்,பிரிந்தவரை
மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சன்.

4.ஒரு செயலை தேர்ந்தெடுத்தலும்,அதற்கான வழி அறிந்து ஈடுபடுதலும் துணிவான
கருத்துக்களை சொல்லுதலுமே அமைச்சனின் சிறப்பாகும்.

5.அறத்தை அறிந்தவனாய்,சொல்லாற்றல் கொண்டவனாய்,செயல் திறன் படைத்தவனாய்
இருப்பவனே ஆலோசனை சொல்ல தகுதி உடையவன்.

6.இயற்கையான அறிவு,நூலறிவு இரண்டையும் பெற்றவர் முன் எந்த சூழ்ச்சியும் நிற்காது.

7.நூலறிவைப் பெற்றிருந்தாலும்..உலக நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப செயல்களை
நிறைவேற்ற வேண்டும்.

8.சொந்த அறிவும் இன்றி,சொல்வதையும் கேட்காதவர்களுக்கு அமைச்சன் தான் நல்ல
யோசனைகளைக் கூற கடைமைப்பட்டவன்.

9.தவறான வழியைக் கூறும் அமைச்சனைவிட..எழுபது கோடி பகைவர்கள் எவ்வளவோ மேலாகும்.

10.முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளையும்..செயல் படுத்த திறனற்றோர் எதையும் முழுமையாக
செய்யார்.

65)சொல் வன்மை

1.நாவன்மை செல்வம் ஆகும்..அது சிறப்புடைய சிறந்த செல்வமாகும்.

2.ஆக்கமும்..அழிவும் சொல்லும் சொல்லால் வருவதால் ஒருவன் தன்
சொல்லில் தவறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3.கேட்பவரை கவரும் தன்மையும்..கேட்காதவரைக்கூட கேட்க வைப்பதுமே
சொல்வன்மை ஆகும்.

4.சொல்லும் காரணத்தை அறிந்து சொல்லும் சொல்வன்மையைவிட
சிறந்த அறமும்..பொருளும் இல்லை.

5.ஒரு சொல்லை வெல்லும் மற்றொரு சொல் இல்லை என்பதை உணர்ந்த பின்னே
அச்சொல்லை பயன்படுத்தவேண்டும்.

6.பிறர் விரும்பும் கருத்துக்களைச் சொல்லி..பிறர் சொல்லும் சொல்லின்
பயனை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது அறிவுடையார் தொழிலாகும்.

7.சொல்லுவதை நன்கு சொல்லி ..சோர்வற்றவனாய்,அஞ்சாதவனாய்
உள்ளவனை யாராலும் வெல்லமுடியாது.

8.சொற்களை கோர்த்து...இனிமையாக சொல்ல வல்லவரை உலகத்தார் கேட்டு
அதன்படி நடப்பர்.

9.குற்றமற்ற சொற்களை சொல்லத் தெரியாதவர்தான்..பல சொற்களை
திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பர்.

10.தாம் கற்றதை பிறர்க்கு சரியாக விளக்கத் தெரியாதவர்கள்...
கொத்தாக மலர்ந்திருந்தாலும்..மணமில்லா மலரைப் போன்றவர்கள்.

66)வினைத்தூய்மை

1.ஒருவனுக்கு கிடைக்கும் துணையின் நன்மை ஆக்கத்தையும்.
செய்யும் வினையின் நன்மை எல்ல நலன்களையும் கொடுக்கும்.

2. புகழையும்,நன்மையும் தராத செயல்களை எப்பொழுதுமே செய்யாமல்
விட்டொழிக்க வேண்டும்.

3.மேன்மேலும் உயரவேண்டும் என விரும்புபவர்,தன் புகழ் கெட காரணமான
செயலைச் செய்யாமல் விடுவர்.

4.தெளிந்த அறிவினையுடையவர்.. துன்பத்தில் சிக்கினாலும் இழிவான
செயலை செய்யார்.

5.பின்னால் நினைத்து வருந்தும் செயல்களைச் செய்யக்கூடாது.அப்படியே
தவறி செய்திருந்தாலும்..மீண்டும் செய்யாதிருத்தல் நல்லது.

6.பெற்ற தாயின் பசி கண்டு வருந்தினாலும்..ஒருவன் இழிவான
செயலைச் செய்யக்கூடாது.

7.இழிவான செயல் புரிந்து செல்வந்தனாக வாழ்வதை விட,கொடிய
வறுமை தாக்கினாலும் ,நேர்மையாளராக வாழ்வதே மேலானது.

8.தகாத செயல்களை விலக்காமல் செய்தவர்களுக்கு அச்செயல்கள்
நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

9.பிறர் வருந்த திரட்டிய பொருள் எல்லம் போய்விடும்.. ஆனால் நல்வழியில்
ஈட்டிய செல்வம் நம்மை விட்டு போனாலும் மீண்டும் பயன் தரும்.

10.தவறான வழியில் பொருள் சேர்த்து காப்பாற்றுதல்..பச்சை மண் பாத்திரத்தில்
நீரை விட்டு காப்பாற்றுவது போன்றதாகும்.

67)வினைத்திட்பம்

1.எல்லாம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும்
செயலிலும் உறுதி இருக்காது.

2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்
மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.

3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்
வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.

4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்
செய்து முடிப்பது கடினம்.

5.செயல் திறனால் சிறப்புற்றவரின் வினைதிட்பம்..ஆட்சியாளரையும்
கவர்ந்து பெரிதும் போற்றப்படும்.

6.எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதியாய் இருப்பவரே..
எண்ணியபடி வெற்றி பெறுவார்கள்

7.உருவத்தில் சிறியவர்களைக் கண்டு இகழக்கூடாது.பெரிய தேர் ஓட உதவும்
அச்சாணியும் உருவத்தில் சிறியது தான்.

8.மனம் கலங்காது..ஆராய்ந்து துணிந்து,தளர்ச்சியின்றி ...தாமதமும் இல்லாமல்
ஏற்ற செயலை செய்து முடிக்கவேண்டும்.

9.இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது ...அதனால் ஆரம்பத்தில்
துன்பம் வந்த போதும் துணிவுடன் செய்து முடிக்கவேண்டும்.

10.எவ்வளவு தான் உறுதி உடையவராய் இருந்தாலும் ..செய்யும் தொழிலில்
உறுதியற்றவரை உலகம் மதிக்காது

68)வினைசெயல்வகை

1.ஒரு செயலில் ஈடுபடும்முன் அச்செயலால் எழப்போகும் சாதக,பாதங்கள் பற்றி
ஆராயவேண்டும்..முடிவெடுத்தபின் காலந்தாழ்த்தக்கூடாது.

2.மெதுவாக செய்யவேண்டிய காரியங்களை காலந்தாழ்த்தே செய்யலாம்.
ஆனால் விரைவாக செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும்.

3.இயலும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது.
இயலாத இடமாயின் அதன் வழி அறிந்து செயலை முடிக்க வேண்டும்.

4.ஏற்ற செயல்.. எதிர்கொண்ட பகை இவற்றை முழுதும் முடிக்காது விட்டுவிட்டால்
அது நெருப்பைஅரைகுறையாக அணைத்தாற் போலாகிவிடும்.

5.வேண்டிய போருள்,அதற்கான கருவி,காலம்,செயல்முறை,இடம் ஆகியவற்றை....
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன் பார்த்துக்கொள்ளவேண்டும்.

6.செயலை முடிக்கும் வகையும்,வரக்கூடிய இடையூறும்,முடிந்தபின் கிடைக்கும்
பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும்.

7.ஒரு செயலை செய்பவன் அச்செயலைக்குறித்து நன்கு அறிந்தவனின் கருத்தை
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபடும்போதே ...அது தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்தல்
ஒரு யானையை பயன்படுத்தி மற்ற யானையை பிடிப்பது போன்றதாகும்.

9.நண்பருக்கு...நல்ல உதவியை செய்வதைவிட..பகைவராய் உள்ளவரை தன்னுடன்
சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத்தக்கதாகும்.

10.நம்மைவிட வலிமையுள்ளவரை எதிர்க்க நம்முடன் உள்ளவரே அஞ்சும்போது...
வேண்டுவது கிடைக்குமானால் வலியோரை பணிந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்வர்.

69)தூது

1.அன்பான குணம்,தகுதியான குடிப்பிறப்பு,அரசர் விரும்பும் சிறந்த பண்பு பெற்றிருப்பதே
தூதுவனின் தகுதிகளாகும்.

2.அன்பு,அறிவு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை இம்மூன்றும் தூது செல்வோருக்கு தேவையான
பண்புகளாகும்.

3.வேற்று நாட்டவனிடம்..தன் நாட்டிற்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைக்கும் தூதுவனே..
நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

4.தூது உரைப்போர்.. அறிவு,தோற்றம்,ஆய்ந்த கல்வி ஆகிய மூன்றும்..நிறைந்தவராக இருத்தல்
வேண்டும்.

5.பலவற்றை தொகுத்திச் சொல்லி..பயனற்றவைகளை நீக்கி மகிழுமாறு சொல்லி..அரசனுக்கு
நன்மை உண்டாக்குபவனே தூதுவன்.

6.கற்கவேண்டியவற்றை கற்று..பிறரின் பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில்
பதிய சொல்லி.. காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றனவே தூதுவன்.

7.செய்யவேண்டிய கடமையை தெளிவாக அறிந்து,செய்யும் காலத்தை எதிர் நோக்கித் தக்க
இடத்தையும் ஆராய்ந்து சொல்பவனே தூதுவன்.

8.துணிவு,துணை,தூய ஒழுக்கம் இவை மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

9.ஒரு அரசின் கருத்தை மற்றொரு அரசுக்கு எடுத்துக் கூறும்போது..வாய்த் தவறிக்கூட
குற்றமான சொற்களை சொல்லாதவனே தகுதியான தூதுவன் ஆவான்.

10.தனக்கு அழிவு வந்தாலும்..அதற்காக பயப்படாது..தன் அரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே
தூதுவன் ஆவான்.

70)மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

1.மன்னருடன் பழகுபவர் நெருப்பில் குளிர் காய்பவர்போல் அணுகியும்
அணுகாமலும் இருக்கவேண்டும்.

2.மன்னர் விரும்புவதைத் தாம் விரும்பாமலிருத்தல்,அரசரால்
நிலையான ஆக்கத்தைப் பெற்றுத்தரும்.

3.அரசரிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் தவறுகள்
நேராமல் காத்துக்கொள்ளவேண்டும்.அரசனுக்கு சந்தேகம் வந்துவிட்டால் தீர்ப்பது எளிதல்ல.

4.வல்லமை உள்ள பெரியவர்கள் முன் மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும்
நகைப்பதையும் தவிர்த்து அடக்கமாயிருக்கவேண்டும்.

5.அரசர் பிறருடன் பேசும்போது அதை ஒட்டுக்கேட்கக்கூடாது.அது என்ன வென்றும்
கேட்கக்கூடாது.அவர் என்ன என்று சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

6.அரசர் குறிப்பறிந்து தக்க காலம் எதிர்நோக்கி வெறுப்பில்லாதவற்றையும்,
விருப்பமானவற்றையும் அவர் விரும்பும்படி சொல்லவேண்டும்.

7.விரும்பிக்கேட்டாலும் பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்
பயனற்றவற்றை சொல்லாமல் விடவேண்டும்.

8.அரசர் எனக்கு இளையவர் ..எனக்கு இன்னமுறையில் சொந்தம் என்று எல்லாம்
சொல்லாமல் நம் நிலைக்கு ஏற்றபடி நடக்கவேண்டும்.

9.நாம் அரசரால் விரும்பபட்டோம் என்ற துணிவில் அரசர் விரும்பாதவற்றை
அறிவுடையோர் செய்யமாட்டார்கள்.

10.நெருங்கி அரசருடன் பழகுவதாலேயே தகாத காரியங்களை செய்தால் அது
துன்பத்தையேத் தரும்.

Thursday, January 28, 2016

51)தெரிந்து தெளிதல்

1.அறம்,பொருள்,இன்பம்,உயிர் மேல் அச்சம் இவை நான்கும் ஆராயப்பட்ட பிறகே ஒருவனை ஒரு பணியில்
ஈடுபடுத்த முடியும்.


2.நல்ல குடியில் பிறந்தவனாகவும்,குற்றமற்றவனாகவும்,பழி சொல்லுக்கு அஞ்சுபவனாகவும் இருப்பவனே உயர் குடியில் பிறந்தவன் எனப்படுபவன்.

3.அரிய நூல்கலைக் கற்றவராயிருந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவரிடம் அறியாமை என்பது இல்லை என்று
சொல்லிவிடமுடியாது.

4.ஒருவனது குணங்களையும்,குறைகளையும் பார்த்து அவற்றுள் எவை மிகுதியாக உள்ளவை என்று தெரிந்த பிறகே
அவனைப் பற்றி முடிவெடுக்க முடியும்

5.ஒருவர் செய்யும் காரியங்களே..அவர்..தரமானவரா,தரங்கட்டவரா என்பதைச் சொல்லிவிடும்.

6.சுற்றத்தார் தொடர்பு அற்றவரை நம்பி தேர்வு செய்யக்கூடாது.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பழிக்கு அஞ்சார்.
உலகத்துக்கும் கவலைப் பட மாட்டார்.

7.அறிவற்றவரை அன்பு காரணமாக தேர்வு செய்தால்,அது எல்லா அறியாமையையும் கொடுக்கும்.

8.ஆராயாமல் ஒருவரை துணையாய்த் தேர்ந்தெடுத்தால் அது அவனுக்கு மட்டுமல்ல..அவன் வருங்காலத்
தலைமுறைக்கும் கேடு விளைவிக்கும்.

9.நன்கு ஆராய்ந்து தெளிந்ததும் ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஆராயாமல் யாரையும் நம்பக் கூடாது.

10ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து..ஏற்றுக்கொண்டு பின் அவரை சந்தேகப்படுவது தீராத் துன்பத்தைத் தரும்

52)தெரிந்து வினையாடல்

1.நற்செயலில் நாட்டம் கொண்டவர்கள் நன்மை,தீமை இரண்டையும் ஆராய்ந்து
அப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்.

2.பொருள் வரும் வழிகளை பெருகச்செய்து வளம் பெற்று இடையூறுகளையும்
ஆராய்ந்து நீக்க வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

3.அன்பு,அறிவு,ஆற்றல்,அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாக
பெற்றவனை தேர்ந்து எடுக்க வெண்டும்.

4.எவ்வளவு தான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும்..
செயல்வகையில் வேறுபடுபவர் பலர் இருப்பர்.

5.செய்யும் வழிகளை ஆராய்ந்து அறிந்து.. இடையூறுகளைத் தாங்கிச் செய்து
முடிக்கவல்லவன் அல்லால் மற்றவனைச் சிறந்தவன் என்று கருதிட முடியாது.

6.செய்கின்ற தன்மை,செயலின் தன்மை இவற்றை ஆராய்ந்து தக்க காலத்தோடு
பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

7.ஒரு தொழிலை இந்தக் காரணத்தால் இவர் முடிப்பார் என ஆராய்ந்து...
பின் அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபட அவன் ஏற்றவனா என்பதை ஆரய்ந்த பிறகே ...
அவனை அந்த செயலில் ஈடுபடுத்த வெண்டும்.

9.மேற்கொண்ட தொழிலில் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக
எண்ணுபவரைவிட்டு பெருமை அகலும்.

10.உழைப்பவர் உள்ளம் வாடாதிருந்தால் உலகம் செழிக்கும்...ஆகவே அரசாள்பவர்
உழைப்பவனின் நிலையை நாளும் ஆராயவேண்டும்.

53)சுற்றந்தழால்

1.ஒருவன் வறுமை அடைந்த நேரத்திலும்..அவனிடம் பழைய உறவைப்
பாராட்டிப் பேசுபவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

2.அன்பு குறையா சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் ..அது வளர்ச்சி குறையாத
ஆக்கத்தை கொடுக்கும்.

3.சுற்றத்தாரோடு கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்வு..கரையில்லா
குளத்தின் நீர் போல பயனற்றது ஆகும்.

4.சுற்றத்தாரோடு தழுவி அன்புடன் வாழ்தல்..ஒருவனுக்கு பெரும் செல்வத்தைப்
பெற்ற பலனைத் தரும்.

5.கொடைத் தன்மையும்,இன் சொல்லும் கொண்டவனை சுற்றத்தார் சூழ்ந்து
கொண்டேயிருப்பார்கள்.

6.பெரும் கொடையாளியாகவும்,கோபமற்றவனாகவும் ஆகிய ஒருவன் இருந்தால்
அவனைப்போல சுற்றம் உடையவர் உலகில் இல்லை எனலாம்.

7.காக்கை தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும்.அந்தக் குணமுடையோருக்கு
உலகில் உயர்வு உண்டு.

8.அனைவரும் சமம் என்றாலும்..அவரவர் சிறப்புக்கு ஏற்றார்போல பயன்படுத்தப்
படுவார்களேயானால், அந்த அரசுக்கு அரணாக மக்கள் இருப்பர்.

9.உறவு..ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தால்..அந்தக் காரணம் சரியில்லை என
உணர்ந்ததும் மீண்டும் உறவு கொள்வர்.

10.ஏதோ காரணத்தால் பிரிந்து..மீண்டும் வந்து இணைபவரை..ஆராய்ந்து..
பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்

54)பொச்சாவாமை

1.மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி,அடங்காத சினத்தால் ஏற்படும்
விளைவை விட தீமையானது.

2.நாளும் வாட்டும் வறுமை அறிவைக் கொல்வதுபோல,புகழை
அவனுடைய மறதி கொன்றுவிடும்.

3.மறதி உள்ளவர்களுக்கு..அவர் எப்படிபட்டவராயிருந்தாலும் புகழ்
ஏற்படாது.

4.தம்மைச்சுற்றி பாதுகாப்பிருந்தாலும்..அச்சம் உள்ளவருக்கு பயனில்லை..
அதுபோல மறதி உடையவர்களும் நல்ல நிலை இருந்தும் பயனில்லை.

5.துன்பம் வருமுன் அதை காக்காமல் மறந்துவிடுபவன்..பின்னர்
அவை வரும்போது தன் பிழையை எண்ணி வருந்துவான்.

6.ஒருவரிடம் மறவாமை என்ற பண்பு இருக்குமேயானால்..அதைவிட
அவருக்கு நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.

7.மறதியின்றி அக்கறையுடன் செயல்பட்டால் முடியாதது என்பதே கிடையாது.

8.சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களை போற்றிச் செய்யவேண்டும்..
இல்லையனில் ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாகாது.

9.மகிழ்ச்சியால் செருக்கு அடைந்து கடமையை மறப்பவன்...
அதுபோல முன்னரே அழிந்துபோனவர்களை எண்ணி திருந்திடவேண்டும்.

10.ஒருவன் எண்ணியதை விடாது...வெற்றி அடைவதிலேயே குறியாக இருந்தால்..
குறிக்கோளை அடைவது எளிதாகும்.

55)செங்கோன்மை

1.குற்றம் என்னவென்று ஆராய்ந்து, எந்த பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல்
வழங்கப்படுவது நீதியாகும்.

2.உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழ்கின்றன..அதுபோல குடிமக்கள் நல்லாட்சியை நோக்குகிறார்கள்.

3.மறை நூலுக்கும்..அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனின் செங்கோலாகும்.

4.குடிமக்களை அன்போடு அணைத்து..செங்கோல் செலுத்துபவரை உலகம் போற்றும்.

5.நீதி வழுவா அரசு இருந்தால் பருவ காலத்தில் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பது போல ஆகும்.

6.அரசுக்கு வெற்றி பகைவரை வீழ்த்துவதில்லை..குடிமக்களை வாழவைப்பதே..

7.நீதி வழுவாத அரசு இருந்தால்...அந்த அரசே நீதியை காக்கும்.

8.ஆடம்பர அரசு...நீதி வழங்கப்படாத அரசு..இவை தானாகவே கெட்டு ஒழியும்.

9. குடிமக்களை பாதுகாப்பதும், குற்றம் புரிந்தவர் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என
கருதாது தண்டிப்பதும் அரசின் கடைமையாகும்.

10.கொடியவர் சிலரை கொலை தண்டனை மூலம் அரசு தண்டிப்பது வயலில் பயிரின்
செழிப்புக்காக களை எடுப்பது பொலாகும்

56)கொடுங்கோன்மை

1.குடிகளை வருத்தும் தொழிலையும்,முறையில்லா செயல்களையும் செய்யும் அரசன் கொலையாளியை விடக்
கொடியவன்.

2.ஆட்சியில் இருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி பொருள் பறித்தல்..வேல் ஏந்தி நிற்கும்
கள்வன் மிரட்டி 'கொடு' என பறித்தல் போன்றது.

3.ஆட்சியில் விளையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தகுந்தவாறு நடக்காத அரசு சீர் குலையும்.

4.நாட்டு நிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசன் பொருளையும்,குடிகளையும் ஒரு சேர இழப்பான்.

5.கொடுமையால் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கக்கூடியதாகும்.

6.நீதி நெறி தவறாத அரசு புகழ் பெறும்..தவறிய அரசு சரிந்து போகும்.

7.மழை இல்லா உலகம் எத்தன்மையானதோ..அத்தன்மையானது நாட்டில் வாழும் மக்களிடம் அருள் இல்லா அரசு.

8.வறுமை இல்லா ஒருவன் வாழ்வு..கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்து விட்டால் அது வறுமைத் துன்பத்தை
விட அதிக துன்பமாகும்.

9.முறை தவறி நாட்டை ஆளும் அரசன் இருந்தால்..அந்த நாட்டில் பருவ மழை கூட பொய்த்துப் போகும்.

10.நாட்டைக் காக்கும் அரசன் முறை தவறினால்..அந் நாட்டில் பசுக்கள் பால் தராது..அறநூல்களையும் மக்கள்
மறப்பர்.

57)வெருவந்த செய்யாமை

1.ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதப்படி..குற்றத்துக்கு பொருந்துமாறு
தண்டிப்பவனே அரசன்.

2.குற்றங்கள் நிகழாமல் இருக்க..தண்டிக்கும்போது அளவுக்கு அதிகமாக நடந்துக்கொள்வது போலக் காட்டி
..அளவு மீறாமல் நடக்க வேண்டும்.

3.குடிமக்கள் அஞ்சும்படியாக நடக்கும் அரசு..விரைவில் அழியும்.

4.நம் தலைவன் கடுமையானவன்..என குடிமக்கள் கருதினால்..அந்த அரசு தன் பெருமையை விரைவில்
இழக்கும்.

5.கடுகடுப்பும்,இனிமையற்ற முகமும் உடையவன் செல்வம் பேயைப்போல அஞ்சத்தக்க தோற்றத்துக்கு ஒப்பாகும்.

6.கடுஞ்சொல்லும்,இரக்கமற்ற உள்ளமும் கொண்டவன் செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.

7.கடுஞ்சொல்லும்,முறையில்லா தண்டனையும் அரசின் வெற்றிக்கான வலிமையை தேய்க்கும் கருவியாக அமையும்.

8.அமைச்சர்களுடன் கலந்து முடிவெடுக்கா அரசன்..சினத்துக்கு ஆளாகி நிற்பதுடன்,புகழையும் இழப்பான்.

9.முன்னரே உரிய பாதுகாப்பு இல்லாத அரசன்..போர் வந்துவிட்டால் தற்காப்பு இல்லாது விரைவில் வீழ்வான்.

10.கொடுங்கோல் மன்னன் படிக்காதவர்களை, இந்த பூமிக்கு பாரமாய் தனக்கு பக்க பலமாய் ஆக்கிக்கொள்வான்.

58)கண்ணோட்டம்

1.இரக்கம் என்னும் சிறந்த அழகு இருப்பதால் தான் உலகு
அழியாமல் இருக்கின்றது.

2.இரக்கம்,அன்பும் இல்லதவர்கள் உயிரோடு இருத்தல் நிலத்துக்கு ஒரு சுமையே ஆகும்.

3.பாடலுடன் பொருந்தாத இசை போல..இரக்கம் சுரக்கா கண்ணினால் என்ன பயன்.

4.தக்க அளவில் அன்பும் இரக்கமும் இல்லாத கண்கள் முகத்தில் இருந்தால் என்ன...இல்லாவிட்டால் என்ன.

5.கருணைஉள்ளம் உள்ளவன் கண்ணே கண்..மற்றவை எல்லம் கண் அல்ல புண்.

6.கண் இருந்தும் இரக்கம் இல்லாதவர் மரம் போன்றவர்கள்.

7.கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு இருப்பதே கண்கள்..அல்லாதவர்கள்
கண்ணற்றோர் என சொல்லலாம்.

8.கடமை தவறாதல் கருணை பொழிதல் உள்ளவர்க்கே
இவ்வுலகம் உரிமையுடையதாகும்.

9.தம்மை அழிக்க நினைப்பவரிடமும் பொறுமை காட்டுவது மிக
உயர்ந்த பண்பாகும்.

10.கருணை உள்ளமும் பண்பும் உள்ளவர்கள் விஷத்தையேக் கொடுத்தாலும் அருந்தி மகிழ்வர்

59)ஒற்றாடல்

1.ஒற்றரும்,நீதிநூலும் அரசனின் இரண்டு கண்களாக அமையும்.

2.எல்லோரிடத்திலும்,நிகழும் எல்லாவற்றையும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல் அரசனின் தொழிலாகும்.

3.நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்து நடக்காத அரசு தழைத்திடமுடியாது.

4.ஒற்று வேலை பார்ப்பவர்கள் வேண்டியவர்,வேண்டாதவர்,சுற்றத்தார் என்று எல்லாம் பாராது பணி செய்தலே
நேர்மைக்கு அடையாளம்.

5.சந்தேகப்படாத உருவத்தோடு,பார்ப்போர் கண் பார்வைக்கும் அஞ்சாமல்,என்ன நேரிடினும் மனத்தில் உள்ளதை
சொல்லாதவரே சிறந்த ஒற்றர்கள் ஆவர்.

6.முற்றும் தொடர்பில்லாதவராய் இருந்துக்கொண்டு..செல்ல முடியாத இடங்களில் சென்று ஆராய்ந்து..துன்பங்களை
தாங்கிக்கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவரே ஒற்றர் ஆவார்.

7.மற்றவர்கள் பற்றிய செய்திகளையும் அவர்களுடன் இருப்பவர் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொண்டு ..அதன்
உண்மைகளை தெளிந்து அறிவதே உளவறியும் திறனாகும்.

8.ஒரு ஒற்றன் தெரிவித்த செய்தியையும்..மறு ஒற்றன் மூலம் தெரிந்துக்கொண்டு ..செய்தியின் உண்மையைப் பற்றி
முடிவுக்கு வர வேண்டும்.

9.ஒரு ஒற்றனை..மறு ஒற்றன் தெரியாதபடி ஆள வேண்டும்.இது போல் மூன்று ஒற்றர்களை இயங்க வைத்து
அறிவதே உண்மை எனக் கொள்ள வேண்டும்.

10.ஒற்றரின் திறனை வியந்து அவனை சிறப்பு செய்தால்,அவன் ஒற்றன் என்பது வெளிப்படையாக தெரிந்து விடும்

60)ஊக்கம் உடைமை

1.ஊக்கம் உடையவர் எல்லாம் உடையவர்.ஊக்கம் இல்லாதவர் எது இருந்தாலும் உடையவர் ஆக மாட்டார்கள்.

2.ஊக்கம் ஒன்றுதான்..நிலையான உடைமையாகும்.

3.ஊக்கம் உடையவர்கள்..ஆக்கம் இழந்து விட்டாலும்..இழந்துவிட்டோமே என கலங்க மாட்டார்கள்.

4.உயர்வு..ஊக்கமுடையவர்களை தேடிப்பிடித்து போய்ச் சேரும்.

5.தண்ணீர் அளவே தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதர்களின் வாழ்க்கையின் உயர்வும்
ஊக்கத்தின் அளவே இருக்கும்.

6.உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்..அவ்வுயர்வை அடையாவிடினும் நினைப்பை விட்டு விடக் கூடாது.

7.உடம்பு முழுதும் அம்புகளால் புண்பட்டாலும் யானை தன் பெருமையை நிலை நிறுத்தும்..அதுபோல
அழிவு வந்தாலும் ஊக்கமுடையவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

8.ஊக்கம் அற்றோர்..தம்மைத் தாமே எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடைய மாட்டார்கள்.

9.யானை பருத்த உடலையும்,கூர்மையான தந்தங்களையும் உடையது..ஆனாலும் ஊக்கமுள்ள புலி
தாக்கினால் அஞ்சும்.

10.ஊக்கமில்லாதவர்கள் மனிதர்களாக காணப்பட்டாலும்..மரங்களுக்கும்,அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
42)கேள்வி

1.செவியால் கேட்டறியும் செல்வம்..செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

2.கேள்வியாகிய செவி உணவு இல்லாத போதுதான் வயிற்றுக்கு உணவு தரும் நிலை ஏற்படும்.

3.செவி உணவாகிய கேள்வி அறிவு பெற்றோர் நிலத்தில் வாழ்ந்தாலும் தேவருக்கு ஒப்பாவார்கள்.

4.நாம் படிக்கவில்லையெனினும், கற்றவர்களிடம் கேட்டு அறிந்தால்,அது வயதான காலத்து ஊன்றுகோலாய் அமையும்.

5.வழுக்கும் நிலத்தில் நடக்க ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர் அறிவுரை உதவும்.

6.நல்லவற்றை சிறிய அளவே கேட்டாலும் அந்த அளவிற்கு அது பெருமையைத்தரும்.

7.நுட்பமான கேள்வி அறிவு உடையவர்,சிலவற்றை தவறாக உணர்ந்தாலும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

8.காதுகள் கேட்கக்கூடியதாக இருந்தாலும்,அவை நல்லவர்கள் உரையை கேட்காவிட்டால் செவிடாகவே எண்ணப்படும்.

9.கேள்வி அறிவு இல்லாதவர்கள்..பணிவான சொற்களை பேசும் பண்புடையவராக ஆக முடியாது.

10.செவிச்சுவை அறியாது..வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இறந்தாலும்..வாழ்ந்தாலும் ஒன்றுதான்.

43)அறிவுடைமை

1.பகையால் அழிவு வராது பாதுகாப்பது அறிவு மட்டுமே.

2.மனம் போகும் போக்கில் போகாது..தீமையை நீக்கி.. நல்வழி தேர்வு செய்வது அறிவுடைமை ஆகும்.

3.ஒரு பொருள் குறித்து யார் என்ன சொன்னாலும்..அதை அப்படியே ஏற்காது..அப்பொருளின் மெய்ப்பொருள் அறிவதே அறிவாகும்
.
4.நாம் சொல்ல வேண்டியதை எளிமையாக சொல்லி,பிறரிடம் கேட்பதையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமை

5.உலகத்து உயர்ந்தவரோடு நட்புக் கொண்டு..இன்பம்,துன்பம் இரண்டையும்..ஒன்று போல கருதுவது அறிவுடைமை

6.உலகம் நடைபெறும் வழியில் உலகத்தோடு ஒட்டி தானும் நடப்பதே அறிவாகும்.

7.ஒரு விளைவிற்கு எதிர்காலத்தில் எதிர் விளைவு எப்படி இருக்குமென..அறிவுடையார் மட்டுமே நினைப்பர்.

8.அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிஞர்கள் செயலாகும்.

9.வரப்போவதை முன்னமே அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையருக்கு துன்பம் அணுகாது.

10.அறிவுடையர் எல்லாம் உடையவர்.அறிவில்லாதவர் என்ன இருப்பினும் இல்லாதவரே ஆவர்.

44)குற்றங்கடிதல்

1.செருக்கும்,சினமும்,காமமும் இல்லாதவரின் செல்வாக்கு மேம்பட்டது ஆகும்.

2.பேராசை,மானமில்லாத தன்மை,குற்றம்புரியும் செயல்கள் ஆகியவை தலைவனுக்கு கூடாத தகுதிகளாகும்.

3.தினையளவு குற்றத்தையும்,பனையளவாக எண்ணி தங்களை காத்துக் கொள்வார்கள் பழிக்கு அஞ்சுபவர்கள்.

4.குற்றம் அழிவை உண்டாக்கும் பகையாக மாறும்..அதனால் குற்றம் ஏதும் புரியாமல் இருக்க வேண்டும்.

5.குற்றம் செய்வதற்கு முன்னமே காத்துக் கொள்ளாதவன் வாழ்வு நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல்
போராய் அழியும்.
6.தலைவன் என்பவன் நம் குற்றத்தை உணர்ந்து திருந்திய பின்னரே பிறர் குற்றத்தை ஆராய வேண்டும்.

7.நற்பணிகள் செய்யாது சேர்த்து வைப்பவன் செல்வம் பயனின்றி அழிந்து விடும்.

8.எல்லா குற்றத்தையும் விட பெருங்குற்றம் பிறர்க்கு ஏதும் ஈயாத் தன்மையே ஆகும்.

9.தன்னைத்தானே உயர்வாக எண்ணி தற்பெருமையுடன் நன்மை தராத செயல்களில் ஈடுபடக்கூடாது.

10.தனது விருப்பம் என்ன என பிறர் அறியா வண்ணம் நிறைவேற்றுபவரை பகைவர்கள் சூழ்ச்சி ஒன்றும் செய்யாது

45)பெரியோரைத் துணைக்கோடல்

1.அறமுணர்ந்த மூத்த அறிவுடையோரின் நட்பை பெறும் வகை அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.வந்த துன்பம் நீங்கி..மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோரின் நட்பைக் கொள்ள வேண்டும்.

3.பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் நட்புக் கொள்ளல் அரிய பேறாகும்.

4.அறிவு ஆற்றலில் தம்மைவிட சிறந்த அறிஞர்களிடம் உறவு கொண்டு அவர் வழி நடத்தல் வலிமையாகும்.

5.தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரை உலகம் கண்ணாகக் கொள்ளுவதால் மன்னனும் அத்தகையோரிடம்
நட்பு கொள்ளவேண்டும்.

6.தக்க பெரியவரின் கூட்டத்தில் உள்ளவனுக்கு பகைவரால் எந்த தீங்கும் ஏற்படாது.

7.தவற்றை கண்டித்து அறிவுரை கூறும் பெரியாரை துணைக்கொள்பவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கும் இருக்க
முடியாது.

8.கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை யில்லா அரசு,பகைவர் எவரும் இல்லா விட்டாலும் தானே அழியும்.

9.முதல் இல்லா வியாபாரிக்கு ஊதியம் வராது..அதுபோல தம்மை தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு
எப்பேறும் இல்லை.

10.நல்லவரின் நட்பை கை விடுதல்,பலர் பகையை தேடிக் கொள்வதைவிட பத்து மடங்கு தீமையாகும்.

46)சிற்றினம் சேராமை

1.பெரியோர் கீழ்மக்களை அஞ்சி ஒதுங்குவர்.ஆனால் சிறியோரின் இயல்பு
கீழ்மக்களின் கூட்டத்துடன் சேருவது.

2.நிலத்தின் தன்மை போல் நீர் மாறும்...அதுபோல மக்கள் அறிவும் தங்கள் இனத்தின்
தன்மையைப் போன்றதாகும்.

3.ஒருவனது இயற்கை அறிவு மனத்தால் ஏற்படும் .ஆனால் உலகத்தாரால் இப்படிப்பட்டவன்
என மதிக்கப்படுவது சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

4.ஒருவரின் அறிவு அவரது மனதில் உள்ளது போலக் காட்டினாலும் உண்மையில் அவன்
சார்ந்த இனத்தில் உள்ளதாகும்.

5.மனத்தின் தூய்மை,செயலின் தூய்மை இரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒத்ததே ஆகும்

6.மனத்தூய்மையானவர்க்கு ...அவருக்குப்பின் எஞ்சி நிற்பது புகழும் ..இனம் தூய்மையானவருக்கு
அவரின் நற்செயலும் ஆகும்..

7.மனத்தின் நலம் உயிர்க்கு ஆக்கமாகும்...இனத்தின் நலமோ எல்லா புகழையும் வழங்கும்.

8.மனத்தின் நலம் உறுதியாக இருந்தாலும் சான்றோர்க்கு இனத்தின் நலம் நல்ல காவலாக அமையும்.

9.மனத்தின் நன்மையால் இன்பம் உண்டாகும்.அது இனத்தின் தூய்மையால் மேலும் சிறப்படையும்.

10.நல்ல இனத்தைவிட சிறந்த துணை ஏதுமில்லை...தீய இனத்தைவிட துன்பமும் பகையும் தரக்கூடியது
எதுவுமில்லை

47)தெரிந்து செயல்வகை

1.ஒரு செயலில் இறங்குமுன் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை
ஆராய்ந்த பின்னே இறங்கவேண்டும்.

2.அறிந்த நண்பர்களுடன் சேர்ந்து ...ஆற்ற வேண்டிய செயல் ஆராய்ந்து தாமும் சிந்தித்து செய்தால்
எந்த வேலையானாலும் நன்கு முடியும்.

3.பெரும் லாபம் வரும் என கை முதலையும் இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டார்கள்.

4.களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்...ஒரு செயலின் விளைவுகளை எண்ணிப்பார்த்து
களங்கம் தரும் செயலை செய்யார்.

5.பகைவரை ஒடுக்க முழுமையாக முன்னேற்பாடுகள் செய்யாவிடின் அது பகைவனின் வலியைக் கூட்டிவிடும்

6.செய்யக்கூடாததை செய்தாலும் சரி..செய்யவேண்டியதை செய்யாமல் விட்டாலும் சரி கேடு விளையும்.

7.நன்கு சிந்தித்தபின்னே செயலில் இறங்கவேண்டும்..இறங்கிய பின் சிந்திப்போம் என்பது தவறு.

8.நமக்கு எவ்வளவு பேர் துணயாக இருந்தாலும்.. முறையாக.செயல்படாத முயற்சி குறையிலேயே முடியும்.

9.அவரவர் இயல்புகள் அறிந்து அதற்கு பொருந்துமாறு செய்யாவிடின், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

10.தம் நிலைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார் ஆதலால் உலகு இகழாத செயல்களை
செய்யவேண்டும்.

48)வலியறிதல்

1.செயலின் வலிமை,தன் வலிமை,பகைவனின் வலிமை,இவர்களுக்கு துணையாக இருப்பவரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து செயல் பட வேண்டும்.

2.நமக்கு பொருந்தும் செயலையும்,அதற்காக அச் செயல் பற்றி ஆராய்ந்து அறியும் முயற்சியும் மேற்கொண்டால்
முடியாதது என்பதே இல்லை.

3.நமது வலிமை இவ்வளவுதான் என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து இடையில் அதை முடிக்க முடியாது அழிந்தவர் பலர்.

4.மற்றவர்களுடன் ஒத்து போகாமை,தன் வலிமையின் அளவை அறியாமை..ஆகியவையுடன் தன்னைத்தானே
வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

5.மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் ..அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அச்சு முறியும்.(மயிலிறகானாலும் ஒரு கட்டத்தில் வலிமை மிக்கதாகும்)

6.ஒரு மரத்தின் நுனி கொம்பில் ஏறியவர்,அதையும் கடந்து ஏறமுயன்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும்(.தன் வலிமை அறிய வேண்டும்)

7.தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்க வேண்டும்.அதுவே பொருளை போற்றி வாழ்வதாகும்.

8.நமது வருவாய் குறைவாக இருந்தாலும்..செலவு அதற்குள் இருந்தால் தீங்கு ஏற்படாது.

9.பொருளின் அளவு அறிந்து வாழாதவன் வாழ்க்கை..ஒளிமயமாய் இருப்பதுபோல தோன்றி இல்லாமல் போகும்.

10.தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல்.. .அளவின்றி கொடுத்துக் கொண்டே இருந்தால் விரைவில் கெடுவான்

49)காலமறிதல்

1.தன்னைவிட வலிய கோட்டானை காக்கை பகலில் வென்றுவிடும்.அதுபோல
பகையை வெல்ல ஏற்ற காலம் வேண்டும்.

2.காலத்தோடு பொருந்தி ஆராய்ந்து நடந்தால்..அதுவே செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும்
. கயிறாக அமையும்.

3.தேவையான சாதனங்களுடன்,சரியான காலத்தையும் அறிந்து செய்தால்
எல்லா செயல்களும் எளியன ஆகும்.

4.உரிய காலத்தையும்,இடத்தையும் அறிந்து நடந்தால் உலகமே நம் கைக்குள் வரும்.

5.உரிய காலத்திற்காக பொறுமையாக கலங்காது காத்திருப்பவர் இந்த உலகத்தைக்கூட வெல்லுவர்.

6.உறுதியானவர்கள் ..உரிய காலத்துக்கு அடங்கி இருத்தல் என்பது ஆடு ஒன்று
தன் எதிரியை தாக்க கால்களை பின் வாங்குவது போன்றது.

7.அறிவுடையவர்..புற சினம் கொள்ளமாட்டார்கள்.அதே சமயம் வெல்லுவதற்கு ஏற்ற
காலம் பார்த்து அக சினம் கொள்வர்.

8.பகைவரைக் கண்டால் பொறுத்துக்கொள்ளவேண்டும்.. அந்த பகைவன் முடிவு காலம்
வந்தால் தானே விழுவான்.

9.சரியான காலம் வரும்போது.. அதை பயன்படுத்திக்கொண்டு செய்தற்கரிய
செயல்களை செய்யவேண்டும்.

10.காலம் வரும்வரை கொக்கு காத்திருப்பது போல காத்திருந்து, காலம் வரும்போது குறி தவறாமல் மீனை கொத்துவது போல காரியத்தை செய்து முடிக்கவேண்டும்.

50)இடனறிதல்

1.முற்றுகை செய்ய ஏற்ற இடத்தைக் கண்டதும்தான், பகைவரை இகழாமல் செயல்களைத் தொடங்கவேண்டும்.

2.அரணுடன் பொருந்தி ,வரும் பகையை எதிர்த்தால் பெரும் பயன் கிட்டும்.

3.தக்க இடத்தில் தம்மைக் காத்து,பகைவரிடம் தம் செயலைச் செய்தால்..வலிமை அற்றவரும் வலியவராவார்.

4.தக்க இடம் அறிந்து செயலைச் செய்தால்..அவரை வெல்ல வேண்டும் என எண்ணும் பகைவர் இரார்.

5.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும்..ஆனால் நீரில் இருந்து அது வெளியே வந்தால் அதை மற்ற உயிர்கள் வென்று
விடும்.
6.வலிய சக்கரங்கள் கொண்ட தேர் கடலில் ஓடாது..கடலில் ஓடும் கப்பலும் நிலத்தில் ஓடாது.(இடத்தேர்வு முக்கியம்)

7.செயலுக்கான வழிவகைகளைக் குறைவில்லாது எண்ணி தக்க இடத்தில் செய்தால்..அஞ்சாமை என்ற ஒரு
துணை போதும்.
8.சிறிய படை ஆயினும் அதன் இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையைக் கூட வென்றிட இயலும்.

9.பாதுகாப்பான கோட்டையும், படைச் சிறப்பும் இல்லாவிட்டால் கூட அவர் வாழும் இடத்தில் அவரை தாக்குதல் அரிது.

10.வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்தும் யானை கூட.. சேற்றில் சிக்கிக் கொண்டால் நரிகளால் கொலை செய்யப்படும் (இடம் உணர்ந்து, நிலை உணர்ந்து செயல்பட வேண்டும்)
37) அவா அறுத்தல்

1.எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும் பிறவி துன்பத்தின் வித்தான ஆசை இருக்கும்.

2.ஆசைகளை ஒழிக்காவிட்டால்..ஏன் பிறந்தோம் என்று எண்ணும் அளவு துன்பநிலை வரும்.

3.ஆசை அற்ற நிலையே சிறந்த செல்வமாகும்,அதற்கு நிகர் அதுவே.

4.ஆசை இல்லாதிருத்தலே தூய நிலை.இது மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

5.பற்றற்றவர் என்பவர் அவாவை விட்டவரே ஆவர்.மற்றவர்கள் அப்படி சொல்லிக் கொள்ளமுடியாது.

6.அவாவிற்கு அஞ்ச வேண்டும்.ஏனெனில் ஒருவனை கெடுத்து வஞ்சிப்பது அந்த ஆசைதான்.

7.ஒருவன் ஆசையை ஒழித்தால்..அவனுக்கு சிறந்த வாழ்வு வாய்க்கும்.

8.ஆசையை ஒழித்தால் துன்பம் இல்லை..ஆசை இருந்தால் எல்லா துன்பமும் வரும்.

9.ஆசையை விட்டு ஒழித்தால்..வாழ்வில் இன்பம் தொடரும்.

10.ஆசையை அகற்றி வாழ்வதே..நீங்காத இன்பத்தை வாழ்வில் தரக்கூடியது ஆகும்.

38)ஊழ்

1.ஆக்கத்திற்கான நிலை சோர்வை நீக்கி ஊக்கம் தரும். சோம்பல் அழிவைத்தரும்.

2.பொருளை இழக்க வைக்கும் ஊழ் அறியாமை ஆகும். பொருளை ஆக்கும் ஊழ் அறிவுடமை ஆகும்.

3.ஒருவன் பல நூல்களைப் படித்திருந்தாலும்,இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

4.ஒருவர் செல்வமுடையவராகவும்,ஒருவர் அறிவுடையராகவும் இருப்பது உலகின் இயற்கை நிலை ஆகும்.

5.நல்ல செயல்கள் தீமையில் முடிவதும்,தீய செயல்கள் நல்லவை ஆவதுமே ஊழ் எனப்படும்.

6.தமக்கு உரியவை இல்லா பொருள்கள் நில்லாமலும் போகும்.உரிய பொருள்கள் எங்கிருந்தாலும் வந்தும் சேரும்.

7.முறையானபடி வாழவில்லை எனில்..கோடி கணக்கில் பொருள் சேர்த்தாலும் அதன் பலனை அனுபவிக்க முடியாது.

8.வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் இருக்குமேயானால் நுகரும் பொருளற்றோர் துறவி ஆவர்.

9.நன்மை தீமை இரண்டும் இயற்கை நியதி.நன்மையைக் கண்டு மகிழ்வது போல் தீமையைக் கண்டால் கலங்கக்கூடாது.

10ஊழ்வினையிலிருந்து தப்ப முயன்றாலும் அதைவிட வலிமையுள்ளது வேறு ஏதுமில்லை

39)இறை மாட்சி

1.படை, குடி மக்கள், குறையா வளம், நல்ல அமைச்சர்கள்  ,நல்ல நட்பு, அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் அமைந்த அரசு
ஆண் சிங்கமாகும்.
2.துணிவு,இரக்கம்,அறிவாற்றல்,உயர்ந்த குறிக்கோள் இந் நான்கு பண்புகளும் அரசின் இயல்பாகும்.

3.காலம் தாழ்த்தா தன்மை,கல்வி,துணிவு இவை மூன்றும் அரசனிடம் நீங்காமல் இருக்க வேண்டும்.

4.ஆட்சியில் அறநெறி தவறாமை,குற்றம் ஏதும் செய்யாமை,வீரம்,மானம் இவையே சிறந்த அரசனிடம் இருக்க வேண்டியவை.

5.பொருள் வரும் வழி,வந்த பொருள்களைச் சேர்த்தல்,காத்தல் அவற்றை சரியாக வகுத்தல் இவையே நல்லாட்சி
அரசனின் இலக்கணம்.
6.எளியவரையும்,கடுஞ்சொல் கூறாதவனையும் இனிய பண்புடையவனையும் கொண்ட அரசனை உலகு புகழும்.

7.இனிய சொற்கள்,பிறர்க்கு தேவையானவற்றை வழங்கிக் காத்தல் கொண்ட அரசனுக்கு உலகு வசப்படும்

8.நீதி தவறா ஆட்சியுடன் மக்களைக் காப்பாற்றும் மன்னவன் மக்கள் தலைவனாவான்.

9.தன்னை குறைகூறுவோரின் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் மன்னனுக்கு மக்களிடம் மதிப்புண்டு.

10.கொடை,அருள்,செங்கொல்,குடிகளைக்காத்தல் இவை நான்கும் உள்ள அரசன் ..ஒளி விளக்காவான்

40)கல்வி

1.கற்கத் தகுந்த நூல்களை குறையின்றி கற்பதோடு நில்லாது...கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.

2.எண் என்பதும் எழுத்து என்பதும் மக்களின் கண்கள் போன்றதாகும்.

3.கண்ணுடையவர் என்பவர் கற்றவரே..கல்லாதவருக்கும் கண்கள் இருப்பினும் அவைகள் புண்களாகவே கருதப்படும்.

4.பழகும் போது மகிழ்வோடு பழகி..பிரியும் போது இனி எப்போது காண்போம் என எண்ணும்படி பிரிவதே அறிவுடையோர் செயலாகும்.

5.செல்வந்தர் முன் தாழும் வறியவர் போல்..கல்வி கற்றோர் முன்..தாழ்ந்து நின்று கற்போரே உயர்ந்தவர் ஆவார்.

6.தோண்ட தோண்ட கிணற்றில் நீர் ஊறுவது போல, படிக்கப் படிக்க அறிவு பெருகும்.

7.கற்றோருக்கு எல்லா நாடுகள்,எல்லா ஊர்களிலும் சிறப்பு உண்டு. அதனால் ஒருவன் சாகும்வரை படிக்கலாம்.

8.ஒரு பிறப்பில் நாம் கற்ற கல்வி..ஏழேழு பிறப்பிற்கும் உதவும் தன்மை உண்டு.

9.தாம் விரும்பும் கல்வி அறிவை உலகமும் விரும்புவதால் அறிஞர்கள் மேன்மேலும் கற்றிட விரும்புவர்.

10.அழிவற்ற செல்வம் கல்வியே ஆகும்..மற்றவை எதுவும் செல்வமாக ஆகாது.

41)கல்லாமை

1 அறிவாற்றல் இல்லாமல் கற்றவர்களிடம் பேசுதல் கட்டமில்லாமல்
சொக்கட்டான் விளையாடுவதைப்போல ஆகும்.

2.கல்லாதவன் சொல்லை கேட்க நினைப்பது மார்பகம் இல்லா பெண்ணை விரும்புவது போல ஆகும்.

3.கற்றவர் முன் எதுவும் பேசாதிருந்தால் கற்காதவர்கள் கூட நல்லவர்களே ஆவர்.

4.படிக்காதவனுக்கு இயற்கை அறிவு இருந்தாலும் ...அவனை சிறந்தோன் என அறிவுடையோர்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

5.கல்வி அற்றவன் மேதை போல நடந்தால் ...கற்றவர்களிடம் அவன் வேஷம் கலைந்துவிடும்.

6.கல்லாதவர்கள் வெறும் களர் நிலமே...அவர்கள் வெறும் நடைபிணங்களே.

7..அழகாய் இருந்தாலும்...தெளிந்த அறிவற்றோர் கண்ணைக்கவரும் மண் பொம்மையாகவே ஆவர்.

8.முட்டாள்களின் செல்வம் ..நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட மிக்க துன்பம் செய்வதாகும்.

9.கற்றவராயிருந்தால் ..உயர்ந்தவர்..தாழ்ந்தவர் என்ற வேறுபாடு போய்விடும்.

10.அறிவு நூல் படித்தவர்கள் மனிதர்களாகவும்..படிக்காதவர்கள் விலங்குகளாகவும் கருதப்படுவர்.

Tuesday, January 26, 2016

25)அருளுடமை

1.பொருட்செல்வம் கொடியவர்களிடம் கூட இருக்கும்...ஆனால் அது அருட்செல்வத்துக்கு ஈடாகாது.

2.எப்படி ஆராய்ந்தாலும் அருள் உடமையே வாழ்க்கைக்கு துணையாகும்.

3.அருள் நிறை மனம் படைத்தோர் அறியாமையில் உழலமாட்டார்கள்.

4.எல்லா உயிரிடத்தும் கருணைக்கொண்ட சான்றோருக்கு..தம் உயிரைப்பற்றிய கவலை இருக்காது.

5.காற்றின் இயக்கத்தில் திகழும் உலகே..அருள் இயக்கத்தால் துன்பம் உணராததற்கு ஒரு சான்று.

6.அருளற்றவர்கள் தீமைகள் செய்பவர்களகவும் ,பொருள் அற்றவர்களாகவும் ,கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

7.பொருளில்லாதவர்க்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.அதுபோல் கருணை இல்லையேல்
துறவற வாழ்க்கையும் சிறந்ததாகாது.

8.பொருளை இழந்தால் மீண்டும் ஈட்டலாம் ஆனால் அருளை இழந்தால் மீண்டும் பெற முடியாது.

9.அறிவுத்தெளிவு இல்லாதவன் நூலின் உண்மைப்பொருளை அறியமுடியாது.
அதுபோலத்தான் அருள் இல்லாதவனின் அறச்செயலும்.

10.தன்னைவிட மெலிந்தவர்களை துன்புறுத்தும்போது ..தன்னைவிட வலியவர் முன் தான்
எப்படியிருப்போம் என எண்ண வேண்டும்.

26)புலால் மறுத்தல்

1.தன் உடல் வளர வேறு உயிரின் உடலை உண்பவனிடம் கருணை உள்ளம் இருக்குமா.?

2.புலால் உண்பவர்களை அருள் உடையவர்களகக் கருதமுடியாது.

3.படைக்கருவியை உபயோகிப்பவர் நெஞ்சமும்,ஒரு உயிரின் உடலை
உண்பவர் நெஞ்சமும் அருளுடமை அல்ல.

4.கொல்லாமை என்பது அருளுடமை....கொல்லுதல் அருளற்ற செயல்...
ஊன் உண்ணுதல் அறம் இல்லை.

5.உயிர்களை சுவைக்காதவர்கள் இருப்பதால் தான் பல உயிர்கள்
கொல்லப்படாமல் வாழ்கின்றன.

6.உண்பதற்காக உயிர்களை கொல்லாதிருப்பின்..புலால் விற்கும் தொழிலை
யாரும் மேற்கொள்ளமாட்டார்கள்.

7.ஊன் ஒரு உயிரின் உடற்புண் என்பதால் அதை உண்ணாமல் இருக்கவேண்டும்.

8.மாசற்ற மதி உள்ளோர் ..ஒரு உயிரை அழித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள்.

9.நெய் போன்றவற்றை தீயிலிட்டு நல்லது நடக்க யாகம் செய்வதை விட ஒரு உயிரை
போக்காமலிருப்பது நல்லது.

10.புலால் உண்ணாதவரையும்,அதற்காக உயிர்களை கொல்லாதவர்களையும்
எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.

27)தவம்

1.எதையும் தாங்கும் இதயம்,எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமை இவையே தவம் எனப்படும்.

2.தவம் என்பது உறுதிப்பாடு,மன அடக்கம்.ஒழுக்கம் இல்லாதவர்கள் தவத்தை மேற்கொள்வது வீண்.

3.பற்றற்றோருடன் நாம் இருந்தாலும், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை மறக்கக்கூடாது.

4.மன உறுதியும்,கட்டுப்பாடும் கொண்ட தவம்..பகைவரை வீழ்த்தும்.நண்பரைக் காக்கும்.

5.உறுதிமிக்க தவம் விரும்பியதை,விரும்பியவாறு செய்து முடிக்க துணையாய் நிற்கும்.

6.அடக்கம்,அன்பு நெறி,துன்பங்களை தாங்கும் பொறுமை இதுவே தவம் ஆகும்.ஆசையை விட்டொழித்தால் போதும்.

7.தம்மை வருத்திக்கொண்டு,ஒரு குறிக்கோளுடன் தவம் இருப்போரை எந்த துன்பம் தாக்கினாலும் பொன் போல்
புகழ் பெறுவர்.
8.தனது உயிர்,என்ற பற்று,தான் எனும் செருக்கு இல்லாதாரை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

9.எந்த துன்பம் வந்தாலும், அதைத்தாங்கி தன் குறிக்கோளில் உறுதியாக இருப்போர் சாவையும் வெல்லுவர்.

10.மன உறுதி கொண்டவர் சிலராகவும், ஆற்றலும்,உறுதியுமற்றவர்கள் பலராகவும் உலகில் உள்ளனர்.

28)கூடா ஒழுக்கம்

1.ஒழுக்கம் உள்ளவர்களைப் போல் நடிக்கும் மக்களைப் பார்த்து பஞ்ச பூதங்களும் சிரிக்கும்.

2.துறவுக்கோலத்தில் உள்ளவர்கள் தன் மனத்திற்கு குற்றம் என்று தெரிவதை செய்ய மாட்டார்கள்.

3.துறவுக்கோலம் பூண்டும் மனத்தை அடக்க முடியாதவர்கள், பசுத்தோல் போர்த்திய புலி போல் வஞ்சகர் ஆவர்.

4.வேடன் மறைந்து பறவைகளை தாக்குவதும், தவக் கோலத்தினர் தகாத செயல்களில் ஈடுபடுவதும் ஒன்றுதான்.

5.பற்றற்றவராய் நடப்பவர்கள் போல ஏமாற்றுபவர்கள், ஒரு நாள் தன் செயலுக்கு தானே வருந்துவர்.

6.உண்மையாக பற்றுகளைத் துறக்காமல் துறந்தது போல நடப்பவர் இரக்கமற்ற வஞ்சகர்கள் ஆவர்.

7.பார்க்க குண்டுமணியைப்போல் சிவப்பாக இருந்தாலும்,அதன் முனையில் உள்ள கறுப்புபோலக் கறுத்த மனம்
படைத்தவர் உள்ளனர்.
8.மாண்புடையோர் என்று தன் செயல்களை மறைத்து திரியும் மாசு உடையோர் உலகில் பலர் உண்டு.

9.அம்பு நேரானது,ஆனால் கொலை செய்ய உதவும். யாழ் வளைந்தது ஆனால் இன்ப இசையைத் தரும்.அதுபோல
மக்கள் பண்புகளே அவர்களை புரிய வைக்கும்.
10.ஒருவன் உண்மையான துறவியாய் இருந்தால்..மொட்டையடிப்பதோ,சடாமுடி வளர்த்துக் கொள்வதோ தேவையில்லை.

29)கள்ளாமை

1.எந்தப் பொருளையும் களவாடும் எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும்.

2.சூழ்ச்சி செய்து பிறர் பொருளை அடையலாம் என்று நினைப்பது கூட தவறாகும்.

3.கொள்ளையடிப்பதால் செல்வம் பெருகுவது போல் தோன்றினாலும்,அந்த செயல் அவனிடம் ஏற்கனவே உள்ள
செல்வத்தையும் கொண்டுபோய் விடும்.
4.களவு புரிவதில் உண்டாகும் தணியா தாகம் ..அதன் விளைவுகளால் தீரா துன்பத்தைத் தரும்.

5.ஒருவர் அசந்திருக்கும் நேரம் அவர் பொருளை களவாட எண்ணுபவரிடம்,அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

6.ஒரு எல்லைக்குட்பட்டு வாழாதவர்கள்..களவு செய்து பிறர் பொருளை கொள்வதில் நாட்டமுடையவராய் இருப்பர்.

7.அளவறிந்து வாழ்க்கை நடத்துபவரிடம் ..களவாடும் குணம் இருக்காது.

8.நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்..கொள்ளையடிப்போர் நெஞ்சமோ வஞ்சக வழியில் செல்லும்.

9.களவு வழியில் நடப்பவர்கள் ..வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

10.களவை மனத்தாலும் நினைத்துப் பார்க்காதவர்களுக்கு ..புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது

30)வாய்மை

1.பிறருக்கு சின்ன தீமை கூட ஏற்படாத சொல்லை சொல்வதே வாய்மை எனப்படும்.

2.நன்மையை விளைவிக்குமானால் பொய் கூட அச்சமயம் வாய்மையாகும்.

3.மனசாட்சிக்கு எதிராக பொய் சொன்னால்..அதுவே அவரை தண்டிக்கும்.

4.மனதில் கூட பொய்யை நினைக்காதவர்கள் மக்கள் மனதில் நிலையா இடம் பெறுவர்.

5.உதட்டளவில் இன்றி மனதிலிருந்து வாய்மை பேசுபவர்கள் தவம்,தானம் செய்பவர்களைவிட உயர்ந்தவர்கள் ஆவர்.

6.பொய் இன்றி வாழ்வதே புகழ் மிக்க வாழ்வு..அதுவே அறவழி வாழ்வாகும்.

7.செய்யக்கூடாத செயல்களை செய்யாததால் எற்படும் நன்மையைவிட பொய் கூறாத பண்பே சிறந்ததாகும்.

8.நீரில் குளிப்பதால் உடல் அழுக்கு நீங்கும்.அதுபோல மன அழுக்கு தீர்ப்பது வாய்மையே ஆகும்.

9.இருளைப் போக்கும் விளக்கை விட மன இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒளிவிளக்காகும்.

10.நமக்கு நல்லது எதுவென உண்மையாய் கூறுவோமானால்..அது உண்மையைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

31)வெகுளாமை

1.நமது கோபம் பலிக்குமிடத்தில் கோபம் கொள்ளக்கூடாது.பலிக்காத இடத்தில் கோபம் கொள்வதில் என்ன பயன்.
(எந்த இடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது)
2.நம்மைவிட வலியோரிடம் கோபம் கொண்டால்,கேடு விளையும்.மெலியோரிடம் கோபம் கொண்டால் அது மிகவும்
கேடானது.
3.யார் மீது சினம் கொண்டாலும் அதை மறந்து விட வேண்டும்.இல்லையேல் தீய விளைவுகள் ஏற்படும்.

4.கோபம் கொள்கிறவரிடமிருந்து,முகமலர்ச்சி, மனமகிழ்ச்சி எல்லாம் மறைந்துவிடும்

5.தன்னைத்தானே காத்துக் கொள்ள சினம் காக்க வேண்டும்.இல்லையேல் அந்த சினமே அவனை அழிக்கும்.

6.கோபமுடையவரை .அந்த கோபமே அவரை அழிப்பதுடன், அவர் சுற்றத்தாரையும் அழிக்கும்.

7.மண் தரையை கையால் அடித்தால் கை வலிக்கும். அது போலத்தான் சினமும்..அது நம்மையே துயரத்தில் ஆழ்த்தும்.

8.நமக்கு தீமை பல புரிந்தவன் திருந்தி வரும் போது கோபம் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

9.கோபம் கொள்ளாதவன் எண்ணியதெல்லாம் உடனே பெறமுடியும்.

10.அளவில்லா கோபமுடையவர்...இறந்தவராகக் கருதப்படுவார்.கோபத்தை துறந்தவர் துறவிக்கு சமம்

32)இன்னா செய்யாமை

1.பிறர்க்கு கேடு செய்வதால் செல்வம் கிடைக்கும் என்றாலும் மாசற்றவர் கேடு செய்ய மாட்டார்கள்.

2.கோபத்தால் ஒருவர் நமக்கு துன்பம் செய்தாலும்..அதை திரும்ப செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கை யாகும்.

3.யாருக்கும் கேடு செய்யாதவர்க்கு யாரேனும் கேடு செய்தால்..கேடு செய்பவர் மீளாத் துன்பம் அடைவர்.

4.நமக்குத் தீங்கு செய்பவரை தண்டிக்க சரியான வழி..அவர் வெட்கித் தலை குனியுமாறு அவருக்கு நன்மை செய்வதுதான்.

5.பிற உயிர்களின் துன்பத்தையும் தம் துன்பம் போல கருதாதோருக்கு அறிவு இருந்தும் பயனில்லை.

6.வாழ்க்கையில் துன்பம் என்ன என அறிந்தவன் மற்றவர்க்கு அதை செய்யாதிருக்க வேண்டும்.

7.தினையளவுக் கூட எப்போதும்,எவரையும் இழிவு படுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்கக் கூடாது.

8.பிறர் தரும் துன்பத்தை உணர்ந்தவன் பிற உயிர்க்கு எந்த துன்பமும் செய்யக்கூடாது.

9.பிறர்க்கு தீங்கு செய்வதால் மகிழ்ச்சி அடைவோருக்கு அதே போன்ற தீங்கு அவரையே தாக்கும்.

10.தீங்கு செய்பவருக்குத்தான் தீங்குகள் வரும்.எனவே யாருக்கும் தீங்கிழைக்காதவரை எந்த தீங்கும் அணுகாது.

33)கொல்லாமை

1.கொலை செய்தல் தீயவற்றை விளைவிப்பதால்..எவ்வுயிரையும் கொல்லாமையே அறச் செயலாகும்.

2.நம்மிடமிருப்பதை எல்லாரிடமும் பகிர்ந்துக் கொண்டு எல்லா உயிரும் வாழ வாழும் வாழ்வே ஈடு இணையற்ற வாழ்வாம்.

3.முதலில் கொல்லாமை..அடுத்து பொய் சொல்லாதிருத்தல் இவையே முதன்மையான அறங்கள் ஆகும்.

4.எவ்வுயிரைரும் கொல்லாதிருப்பதே நல் வழி யாகும்.

5.எல்லா உலகியலையும் துறந்தவரைவிட கொல்லாமையைக் கடை பிடிப்பவர் சிறந்தவர்.

6.கொலை செய்யாமையை அறனெறியாகக் கொண்டவரின் பெருமையை எண்ணி சாவு கூட அவர்களை பறிக்க
தயங்கும்.
7.தன் உயிரே போவதாயினும் பிற உயிர் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.

8.ஒரு கொலை நன்மை பயக்கும் என்றாலும்..பண்புடையோர் அந்த நன்மையை இழிவானதாகவே எண்ணுவர்.

9.பகுத்தறிவை இழந்து கொலை செய்பவர்கள் இழி பிறவிகளே ஆவர்.

10.தீய வாழ்க்கையில் இருப்போர்.வறுமையும்,நோயும் அடைந்து பல கொலைகளையும் செய்தவராய் இருப்பர்

34)நிலையாமை

1.நிலையில்லாதவற்றை நிலையானவை என நம்புவது அறியாமை ஆகும்.

2.சேர்த்து வைக்கும் பெருஞ்செல்வம் நம்மைவிட்டு ...காட்சி முடிந்ததும் அரங்கை விட்டு செல்லும் மக்கள் போல்
கலைந்து சென்று விடும்.

3.செல்வம் நிலையற்றது என உணர்ந்து அதை வைத்து நிலையான நற்செயலில் ஈடுபட வேண்டும்.

4.வாழ்க்கையை உணர்ந்தவர்கள்..நம் ஆயுளை அறுத்துக் கொண்டிருக்கும் வாள் போன்றது காலம் என அறிவர்.

5.வாழ்வு நிலையானதில்லை என உணர்ந்து உயிருள்ள போதே நற் பணிகள் ஆற்றிட வேண்டும்.

6.நேற்று உயிருடன் இருந்தவர் இன்று இல்லை என்ற பெருமை இவ்வுலகிற்கு உண்டு.

7.வாழ்க்கையின் உண்மையை சிந்தித்து அறியாதவர்கள்..பேராசை கொண்டவராய் இருப்பர்.

8.உடல்..உயிர்..இடையே யான உறவு..முட்டைக்கும்,பறவைக் குஞ்சிற்கும் இடையேயான உறவு போலாகும்.

9.நிலையில்லா வாழ்க்கையில்..பிறப்பு எனப்படுவது..தூங்கி விழிப்பதைப் போன்றது..சாவு என்பது விழிக்க முடியா
தூக்கமாகும்.
10.உடலுடன் தங்கியுள்ளது உயிர்..உயிர் பிரிந்தால் வேறு புகலிடம் இல்லை.

35)துறவு

1.ஒருவன் எந்தப் பொருள்மீது பற்றில்லாதவனாய் உள்ளானோ அப்பொருளால் துன்பம் அடைவதில்லை

2.பொருள்மீது உள்ள ஆசையை உரிய காலத்தில் துறந்தால் பெறும் இன்பம் பலவாகும்.

3.ஐம் புலன்களுக்கான ஆசை,அதற்கான பொருள்கள் எல்லாவற்றினையும் வெல்லுதல் வேண்டும்.

4.பற்றில்லாமல் இருத்தலே துறவு..ஒரு பற்றிருந்தாலும் மனம் மயங்கிவிடும்.

5.பிறவித்துன்பம் போக்க முயலும் போது உடம்பே மிகையாகும்..அதன் மீது வேறு தொடர்பு ஏன்?

6.நான் என்ற ஆணவத்தை விட்டவன் தேவர்க்கும் எட்டா உயர் நிலை அடைவான்.

7.பற்றுகளைப் பற்றிக்கொள்பவரை துன்பங்களும் பற்றிக்கொள்ளும்.

8.முற்றும் துறந்தவர் உயர் நிலை அடைவர்.அல்லாதார் அறியாமை என்னும் வலையில் விழுவர்.

9.பற்றுகளைத் துறந்தால் இன்ப துன்பங்கள் அணுகாது.இல்லையேல் அவை மாறி மாறி வந்து வறுத்தும்.

10.பற்றில்லாதவனான கடவுளிடம் பற்று வைத்தல் ஒன்றே பற்றுக்களை துறக்கும் வழியாகும்.

36)மெய்யுணர்தல்

1.மெய்ப்பொருள் அல்லாதவையை மெய்ப்பொருள் என எண்ணுபவர் வாழ்க்கை சிறக்காது.

2.மயக்கம் நீங்கி குற்றமற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகலும். நலம் தோன்றும்.

3.ஐயப்பாடுகளை நீக்கி மெய்யுணர்வு கொண்டவர்க்கு மேலுலகம் எனப்படுவதே அண்மையுள் இருப்பது
போல ஆகும்.

4.உண்மை அறியாதோர்,தமது ஐம்புலன்களையும் அடக்கியவராயிருப்பினும் பயன் இல்லை.

5 வெளித்தோற்றம் கண்டு மயங்காமல், அது பற்றி உண்மையை அறிவதே அறிவுடைமை ஆகும்.

6.கற்க வேண்டியவற்றை கற்று உண்மைப்பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வரார்

7.ஒருவனது மனம் உண்மைப்பொருளை ஆராய்ந்து உணர்ந்தால் அவனுக்கு மறுபிறப்பு இல்லை எனலாம்.

8.பிறவித் துன்பத்திற்கான அறியாமையைப் போக்கி முக்தி நிலைக்கான பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

9.துன்பங்கள் நம்மை அடையாமல் இருக்க ...அத்துன்பத்துக்கான காரணம் அறிந்து பற்று விலக்கவேண்டும்.

10.விறுப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்றிருக்கும் இடம் தராதவரை துன்பம் நெருங்காது.
13)அடக்கம் உடைமை

1.அடக்கம் அழியாப்புகழையும்,அடங்காமை வாழ்வில் இருளையும் உண்டாக்கும்.

2.மிக்க உறுதியுடன் காக்கப்படும் அடக்கம், ஆக்கத்தையே தரும்.

3.தெரிந்து கொள்ளவேண்டியதை அறிந்து அடக்கத்துடன் நடப்பவர் பண்பு உலகு பாராட்டும்.

4.உறுதியான உள்ளம், அடக்க உணர்வு கொண்டவர் உயர்வு மலையைப்போல் ஆகும்.

5.பணிவு நலம் பயக்கும்...அதுவே செல்வமாகும்.

6.தன் ஓட்டுக்குள் உடலையே அடக்கும் ஆமைப்போல் ஐம்பொறிகளையும் அடக்க வேண்டும்.

7.யாரானாலும்..தன் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும்.இல்லையேல் துன்பமே வரும்.

8.பேசும் நல்ல வார்த்தைகளில்,சில தீய சொல் இருந்தாலும்..குடம் பாலில் கலந்த நஞ்சு போல் ஆகிவிடும்.

9.நெருப்பினால் பட்ட காயம் கூட ஒரு நாள் ஆறிவிடும்..ஆனால் நாவினால் கொட்டப்பட்ட சொற்களால் ஏற்படும்
துன்பம் ஆறவே ஆறாது.

10.நன்கு கற்று,கோபம் தவிர்த்து அடக்கம் கொண்டவரை அடைய அறவழி காத்திருக்கும்.

14)ஒழுக்கம் உடைமை

1.ஒழுக்கம் உயர்வைத் தருவதால், அது உயிரை விட மேலானதாகும்.

2.எப்படி ஆராய்ந்தாலும்,வாழ்வில் ஒழுக்கமே சிறந்த துணை..ஆதலால் எப்பாடுபட்டாவது அதை காக்கவேண்டும்.

3.உயர்ந்த குடிபிறப்பு ஒழுக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது.ஒழுக்கம் தவறியவர் இழிந்த குடிபிறப்பாவர்.

4.உயர் குடியில் பிறந்தவன் படித்ததை மறந்தால்..மீண்டும் படிக்கலாம்.ஆனால் ஒழுக்கம் தவறினால் அவன்
இழிமகனே ஆவான்

5.பொறாமைக்காரனும்,தீய ஒழுக்கமும் உள்ளவன் வாழ்வு உயர்வான வாழ்வாகாது.

6.மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறினால் உண்டாகும் இழிவுப்பற்றி தெரிந்திருப்பதால்..நல்லொழுக்கத்துடன் நடப்பார்கள்.

7.நன்னடத்தை உயர்வு தரும்.அல்லதோர் மீது இழிவான பழி சேரும்.

8.நல்லொழுக்கம் நன்மைக்கு வித்து.தீயொழுக்கமோ தீராத துன்பம்.

9.தவறி கூட தகாத வார்த்தைகளை ஒழுக்கமுடையோர் கூறக்கூடாது.

10.ஒழுக்கம் என்ற பண்போடு வாழத்தெரியாதவர்..எவ்வளவு படித்தும்..அறிவில்லாதவர்களே ஆவர்.

15)பிறனில் விழையாமை

1.அறநூல்,பொருள் நூல்களை உணர்ந்தவர்கள் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்ளமாட்டார்கள்.

2.பிறன் மனைவியை அடைய நினைப்பவர்கள் மிகவும் கீழானவர்களாவர்.

3.பிறர் மனைவியிடம் தகாதமுறையில் நடப்பவன்..உயிர் இருந்தும் பிணத்துக்கு ஒப்பாவான்.

4.தப்பு செய்யும் எண்ணத்துடன் பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது எப்பேர்ப்பட்டவனையும்
மதிப்பிழக்கச் செய்துவிடும்.

5.பிறன் மனைவியை எளிதாக அடையலாம் என முறைகேடான செயலில் ஈடுபடுபவன் அழியா பழியை அடைவான்.

6.பிறன் மனைவியை விரும்புவனிடமிருிந்து பகை,தீமை,அச்சம்,பழி இந்நான்கும் நீங்காது.

7.பிறன் மனைவியிடம் இன்பத்தை நாடி செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை
மேற்கொண்டவனாவான்.

8.காம எண்ணத்துடன்... பிறன் மனைவியை அணுகாதவனின் குணம் அவனை ஒழுக்கத்தின் சிகரமாக
ஆக்கும்.

9.பிறன் மனைவியைத் தீண்டாதவனே உலகின் பெருமைகளை அடைய தகுதியானவன்.

10.பிறன் மனைவியை விரும்புவது... அறவழியில் நடக்காதவர் செயலை விடத் தீமையானதாகும்.

16)பொறையுடைமை

1.கூட இருந்தே குழிப்பறிப்போரையும்...இந்த பூமி தாங்குவது போல...நம்மை இகழ்பவர்களை
பொறுத்துக்கொள்ளவேண்டும்.

2.ஒருவர் செய்த தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும் ....அத்தீங்கை மறந்துவிடுவதே சிறந்த பண்பு.

3.வறுமையில் பெரும் வறுமை விருந்தை வரவேற்க முடியாதது.அதுபோல ...பெரும்வலிமை
அறிவிலிகளை பொறுத்துக்கொள்வது.

4.பொறுமையாய் இருப்பவரை நிறைவான மனிதர் என போற்றுவர்.

5.தமக்கு இழைக்கப்படும் தீமையை பொறுத்துக்கொள்பவரை உலகம் பொன்னாக மதித்து போற்றும்.

6.தமக்கு கேடு செய்பவரை தண்டித்தல் ஒரு நாள் இன்பம்.
அவரை மன்னித்தல் வாழ்நாள் முழுவதும் இன்பம்.

7.பிறர் செய்யும் இழிவுக்கு பதிலாக இழிவே செய்யாது பழி வாங்காதிருத்தலே நற்பண்பாகும்.

8.அநீதி விளைவிப்பவர்களை ...பொறுமை என்னும் குணத்தால் வென்றிடலாம்.

9.கொடுமையான சொற்கள் நம்மீது வீசப்பட்டாலும் ....அதை பொறுப்பவனே தூய்மையானவனாவான்.

10.இறைவனுக்கு உண்ணா நோன்பு இருப்பவரை விட...ஒருத்தர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்
முதன்மையானவர் ஆவார்.

17)அழுக்காறாமை

1.ஒழுக்கத்துக்குரிய நெறி மனத்தில் பொறாமையின்றி வாழ்வதே.

2.ஒருவர் பெரும் மேலான பேறு யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பே ஆகும்.

3.அறநெறி.ஆக்கம் .ஆகியவற்றை விரும்பாதவன் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

4.தீயவழியில் சென்றால் துன்பம் ஏற்படும் என்பதை உணர்ந்தால் பொறாமை காரணமாக
தீயச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

5.பொறாமைக்குணம் கொண்டவர்களை வீழ்த்த வேறு பகை தேவை இல்லை.... அந்த குணமே போதும்.

6.ஒருவர்க்கு செய்யும் உதவியைக்கண்டு பொறாமை அடைந்தால் அந்த குணம் ..அவனையும்..
அவனை சார்ந்தோரையும் அழிக்கும்.

7.பொறாமைக் குணம் கொண்டவனை விட்டு லட்சுமி விலகுவாள்.

8.பொறாமை என்னும் தீ ஒருவனுடைய செல்வத்தை அழித்து அவனை தீய வழியில் விட்டுவிடும்.

9.பொறாமைக்குணம் கொண்டவனின் வாழ்வு வளமாகவும்...அல்லாதவன் வாழ்வு வேதனையாகவும்
இருந்தால் அது வியப்பான செய்தியாகும்.

10.பொறாமையால் உயர்ந்தோரும் இல்லை...அல்லாத காரணத்தால் புகழ் இகழ்ந்தாரும் இல்லை

18)வெஃகாமை

1.பிறரின் பொருளைக் கவர்ந்துக்கொள்ள விரும்புபவரின் குடியும் கெட்டொழிந்து..பழியும் வந்து சேரும்.

2.நடுவுநிலை தவறுவது வெட்கப்படும் செயல் என்பவர்..பயனுக்காக பழிக்கப்படும் செயலை செய்யார் .

3.அறவழி பயனை உணர்வோர்..உடனடிப் பயன் கிடைக்கும் என்பதற்காக அறவழி தவறார்.

4.புலனடக்கம் கற்றோர்..வறுமையில் வாடினாலும் பிறர் பொருளை விரும்பார்.

5.அறவழிக்கு புறம்பாக நடப்பவரிடம் நுண்ணறிவு இருந்தும் பயனில்லை.

6.அறவழி நடப்பவன் பிறர் பொருளை விரும்பி தவறான செயலில் ஈடுபட்டால் கெட்டழிவான்.

7.பிறன் பொருளால் வளம் பெற விழைபவனுக்கு அதனால் உண்டாகும் பயனால் நன்மை இருக்காது.

8.நம்மிடம் உள்ள செல்வச்செழிப்பு குன்றாமல் இருக்க வேண்டின்,பிறன் பொருள் மீதான ஆசை தவிர்க்க வேண்டும்.

9.பிறன் பொருளைக் கவரா மக்களின் ஆற்றலுக்கேற்ப செல்வம் சேரும்.

10.பிறன் பொருளை கவர்பவன் வாழ்வு அழியும்.அல்லாதான் வாழ்வு வெற்றி அடையும்.

19புறங்கூறாமை

1.மற்றவர்களைப் பற்றி புறம் பேசுதல் அறவழியில் நடக்காதிருத்தலை விடத் தீமையானது.

2.நேரில் பொய்யாக சிரித்து..மறைவில் அவர் பற்றி தீது உரைப்பது கொடுமையானது.

3.ஒருவரை பார்க்கும்போது ஒன்றும் ....பார்க்காதபோது ஒன்றுமாக பேசுபவர் உயிர் வாழ்வதைவிட சாவது நன்று.

4.நேருக்கு நேர் ஒருவரது குறைகளை சாடுவது புறங்கூறுவதை விட நல்லது.

5.பிறரைப்பற்றி புறம் பேசுபவன் அறவழியில் நடக்காதவனாவான்.

6.பிறர் மீது புறம் கூறினால் ...அதுவே கூறுபவனை திரும்பி தாக்கும்.

7.இனிமையாக பேசத்தெரியாதவர்கள்தான் நட்பை கெடுத்து புறங்கூறுவார்கள்.

8.நெருங்கியவர்களை பற்றியே புறம் பேசுபவர்கள் மற்றவர்களைப்பற்றி எவ்வளவு கூறுவார்கள்.

9.ஒருவன் இல்லாதபோது அவனைப்பற்றி பழிச்சொல் கூறுபவனையும் தருமமாக நினைத்தே
பூமி காக்கிறது

10.பிறர் குற்றம் பற்றி எண்ணுபவர்கள் தன்னிடமுள்ள குற்றத்தையும் நினைத்தல் நல்லது.

20)பயனில சொல்லாமை

1.பலர் வெறுக்கும் பயனற்ற சொற்களை பேசக்கூடாது.

2.பலர்முன் பயனற்றவற்றை பேசுவது தீமையுடையதாகும்.

3.பயனற்றவற்றைப்பற்றி பேசுபவனை பயனற்றவன் என்று சொல்லலாம்.

4.பயனற்ற,பண்பற்ற சொற்கள் மகிழ்ச்சியை குலைக்கும்,தீமையை ஏற்படுத்தும்.

5.பண்புடையர் பயனில்லா சொற்களை கூறுவாரானில் அவரது மதிப்பு நீங்கிவிடும்.

6.பயனற்றவற்றைப் பேசி..பயன் கிடைக்கும் என எண்ணுபவன் மனிதப்பதர் ஆவான்.

7.பண்பாளர்கள் இனிய சொற்களைக் கூறாவிட்டாலும் பயனில்லா சொற்களை சொல்லக்கூடாது.

8.பலன்களை ஆராயும் ஆற்றல் படைத்தவர்...பயன் விளைவிக்காத சொற்களை கூறமாட்டார்.

9.மாசற்ற அறிவு கொண்டவர்கள்.. மறந்தும் பயனில்லா வார்த்தைகளை பேசமாட்டார்கள்.

10.பயனற்ற சொற்களை விடுத்து மனதில் பதியும் பயனுள்ள சொற்களையே பேச வேண்டும்.

21)தீவினையச்சம்

1.தீயசெயல்களை செய்ய தீயோர் அஞ்சமாட்டார்கள்...ஆனால் சான்றோர் அஞ்சுவர்.

2.தீய செயல்கள் தீயைவிடக் கொடுமையானதால் அதை செய்திட அஞ்சவேண்டும்.

3.நமக்கு தீமை செய்தவர்க்கு தீமையை திருப்பிச் செய்யாதிருத்தலே அறிவுடமை ஆகும்.

4.மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்கக்கூடாது.அப்படி நினைத்தால்..நினைப்பவனுக்கே கேடு உண்டாகும்.

5.வறுமையின் காரணாமாகக்கூட தீய செயல்கள் செய்யக்கூடாது.அப்படிச்செய்தால்
வறுமை அவனை விட்டு அகலவே அகலாது.

6.தீய செயல்கள் நம்மை தாக்கக்கூடாது என எண்ணுபவன் பிறர்க்கும் தீங்கு செய்யக்கூடாது.

7.நேர்மையான பகையை விட ஒருவன் செய்யும் தீயவினைகள் பெரும் பகையாகும்.

8.நிழல் நம்மைவிட்டு அகலாது இருப்பது போல செய்யும் தீமையும் கடைசிவரை நம்மை விட்டு அகலாது.

9.தனது நலம் விரும்புபவன் தீய செயல்கள் பக்கம் நெருங்கமாட்டான்.

10.பிறர்க்கு தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்த கெடுதியும் ஏற்படாது.,

22)ஒப்புறவறிதல்

1.பதிலுதவி எதிர்ப்பார்த்து நாம் உதவி செய்யக்கூடாது..நமக்காக பெய்யும் மழை எந்த உதவியை திரும்ப
எதிர்ப்பார்க்கிறது?

2.பிறர் நலனுக்கு உதவும் பொருட்டே நம்மிடம் உள்ள பொருள் பயன்பட வேண்டும்.

3.பிறர்க்கு உதவிடும் பண்பைத்தவிர சிறந்த பண்பு வேறு எதுவும் இல்லை.

4.பிறர்க்கு உதவி செய்ய தன் வாழ்வில் நினைப்பவனே உண்மையில் உயிருள்ளவனாக கருதப்படுவான்.

5.பொது நோக்குடன் வாழ்பவனின் செல்வம்..மக்களுக்கு பயன் தரும் நீர் நிறைந்த ஊருணி ஆகும்.

6.பிறர்க்கு உதவும் எண்ணம் உள்ளவனிடம் செரும் செல்வம் பழுத்த மரம் போன்றது.

7.பிறர்க்கு உதவுபவனின் செல்வம்..ஒரு நல்ல மரத்தின் எல்லா பாகமும் பயன்படுவது போன்றது ஆகும்.

8.நம்மை வறுமை வாட்டினாலும்..முடிந்த அளவு உதவுதலே சிறந்த பண்புடையாளனுக்கு அடையாளம்.

9.பிறர்க்கு உதவுபவன் ..வறுமையடைந்து விட்டான் என்று உணர்த்துவது அவன் பிறர்க்கு உதவிட முடியாத நேரமே ஆகும்.

10.பிறர்க்கு உதவும் செயல் கேடு விளைவிக்குமாயின்..அக்கேட்டை தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ள வேண்டும்.

23)ஈகை

1.எந்த ஆதாயமுமின்றி இல்லாதவருக்கு வழங்குவதே ஈகைப்பண்பாகும்.

2.பிறரிடம் கை யேந்துவது சிறுமை..ஆயினும்..கொடுப்பவர்க்கு கொடுத்து வாழ்வதே பெருமை.

3.தன் வறுமையைக் காட்டிக்கொள்ளாமல்..பிறர்க்கு கொடுப்பது உயர் குடியினர் பண்பாகும்.

4.கொடுப்பவர்..அதனால் பயனடைபவரின் புன்னகை முகத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்..பெறுபவர் நிலை கண்டு
வருந்துவர்.
5.உண்ணா நோன்பை விட ..பசிப்பவர்க்கு உணவு அளித்ததால் உண்டாகும் பலன் அதிகம்.

6.பட்டினியால் வாடும் ஒருவரின் பசியை தீர்ப்பது மிகவும் புண்ணியமான செயல் ஆகும்.

7.பகிர்ந்து உண்போரை பசி என்றும் அணுகாது.

8.யாவருக்கும் எதுவும் அளிக்காத ஈவு இரக்கமற்றோர், ஒருவருக்கு உதவி..அதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை அறியார்.

9.பிறர்க்கு கொடுப்பதால் செல்வம் குறையுமெனக் கூறி தான் மட்டும் உண்ணுவது பிச்சை எடுப்பதற்கு சமம்.

10.சாவு என்னும் துன்பத்தை விட, வறியவர்க்கு ஏதும் கொடுக்க முடியா துன்பம் பெரியது

24)புகழ்

1.பிறர்க்கு ஈதலும்,புகழுமே வாழ்வில் ஆக்கம் தரும்

2.இல்லாதவர்க்கு வழங்குபவரின் புகழே போற்றப்படும் புகழாகும்.

3.ஒப்பற்றதும்,அழிவில்லாததும் இந்த உலகில் புகழ் ஒன்றே ஆகும்.

4.தன்னலமின்றி புகழ் ஈட்டிய மக்களை ஏழேழு உலகும் பாராட்டும்.

5.துன்பம்,சாவு.. இவற்றிலும் கூட புகழ் பெறுவார் ஆற்றலுடையவர்.

6.எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்க வேண்டும்.அல்லாதார் அத்துறையில் ஈடுபடவே கூடாது.

7.புகழுடன் வாழ முடியாதார் ..தம் செயல்களை இகழ்பவரை நொந்துக்கொள்ளாமல் தன்னைத்தானே நொந்துக்கொள்ள வேண்டும்.

8.தமக்குப்பிறகு எஞ்சி நிற்கக்கூடிய புகழை பெறாதார், வாழ்ந்தும் பயன் இல்லை.

9.மனித உடலில் உயிர் எனப்படுவது புகழ் ஆகும்.அது இல்லாதார் இந்த பூமியில் தரிசு நிலமே ஆவர்.

10.பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை.அதுபோல புகழுடன் வாழ்வதே வாழ்க்கை.