சந்திரக் குலத்தின் அரசர் சந்தனுவிற்கும், கங்கைக்கும் மகனானவர் பீஷ்மர்.கங்கை சந்தனுவைப் பிரிந்து சென்று சில காலம் கழித்து, சந்தனு சத்தியவதி என்னும் செம்படவப் பெண்ணை மணந்தார்.அந்தப் பெண் கன்னியாய் இருக்கும் காலத்திலேயே பராசர முனிவர் அவள் மீது மோகம் கொண்டார்.மனதளவிலான மோகமே அவளுக்கு ஒரு குழ்ந்தையைப் பிறப்பித்து விட்டது.அதுதான் வியாசர்.
சந்தனு, சத்தியவதியை மணந்த பிறகு அவர்களுக்கு சித்திராங்கதன், விசித்திர வீரியன் ஆகிய புதல்வர்கள் பிறந்தனர்.
சித்திராங்கதன் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டான்.பீஷ்மர், விசித்திரவீரியனுக்கு, அம்பிகை, அம்பாலிகை என்ற இரு சகோதரிகளை மணமுடித்தார்.ஆனால், விசித்திரவீரியனும் இறந்து விட்டான்.பீஷ்மரோ மணமாகாதவர்.வாரிசு இல்லாமல் சந்திரக் குலம் அழியும் நிலை.இதைத் தடுக்க எண்ணிய சத்தியவதி, அம்பிகை, அம்பாலிகை இருவரையும் குழந்தைப் பெற வியாசரிடம் அனுப்பினாள்.வியாசரும் அவளது மகன் தானே1 (இன்றும் சில வகுப்பினரிடையே ஒருவன் இறந்து போனால் அவனது மனைவியை அவனது சகோதரன் மணமுடிக்கும் வழக்கம் உண்டு)
ஆனால் சத்தியவதி வியாசரிடம், அவர் குழந்தைப் பிறக்கக் காரணமாய்த்தான் இருக்க வேண்டும்.குழந்தைகள் பிறந்ததும் விலகிட வேண்டும் என்றாள்.
வியாசர் மூலம், அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும், அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறந்தனர். திருதராஷ்டிரர் பார்வையற்றவராய்ப் பிறந்தார்.பாண்டுவோ உடல் முழுதும் வெள்ளையாகப் (ரோகம்) பிறந்தார்.அதனால் மீண்டும் ஒரு குழந்தையைப் பெற அம்பிகையை, வியாசரிடம் போகச் சொன்னாள் சத்தியவதி.
அதற்கு விருப்பமில்லாத அம்பிகை, தனது பணிப்பெண் ஒருத்திக்கு தன்னைப் போல அலங்காரம் செய்து அனுப்பி வைத்தாள். இதை அறிந்து கொண்ட வியாசர், அப்பணிப் பெண்ணைத் தொட்டார்.அதன் விளைவாகவே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.அவனே தரும தேவதையின் அவதாரமான விதுரர் ஆவார்.
திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் மூவருக்கும் ஒரே தந்தை வியாசர் ஆவார்.தாய்மார்கள் தான் வேறு.ஆகவே விதுரர், திருதராஷ்டிரர், பாண்டு ஆகியோர் அண்ணன், தம்பி முறையாகும்.
பீஷ்மர், திருதராஷ்டிரர், பாண்டு ஆகியோர்க்கு நற்குணவதிகளான அரசகுமாரிகளைத் திருமணம் செய்வித்தார்.விதுரர், சாதாரண மனிதனைப் போல எளிமையாய் வாழும் லட்சியம் கொண்டவர் ஆதலால் வடமதுரை மன்னன் தேவசன் என்பவனின் பணிப்பெண் ஒருத்தியை விதுரருக்கு மணம் முடித்தார்.அவளது பெயர் பாரசவி ஆகும்.
"வித்" என்ற வேர்ச் சொல்லிலிருந்து தன் பெயரைப் பெற்றதால், விதுரர் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார்.முக்காலமும் உணர்ந்த அவர், எக்காலமும் நேர்மையையே வலியுறுத்தியவர் ஆவார்.கடைசிவரை அறவழியிலேயேச் சென்றவர்.
ஆகவேதான் விதுரர் இன்றும் போற்றப்படுபவராக இருக்கிறார்.
No comments:
Post a Comment