Tuesday, August 25, 2015

3-விதுரர் மறைவு


விதுரர் பண்பாளர்.அனைவரிடமும் அன்பாகவும், பண்புடனும் பழகியவர்.அவர் திருதராஷ்டிரருக்கு நெருக்கமாகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர்.திருதராஷ்டிரரும் எப்போதும் விதுரரின் ஆலோசனைகளைக் கேட்பார்.துரியோதனன் மீது உள்ள பாசத்தால், திருதராஷ்டிரர் விதுரரின் ஆலோசனைகளை மீறிய போதெல்லாம் அவதிப்பட்டார்.விதுரர் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.பாண்டவர்களுக்கும் துன்பக் காலத்தில் விதுரர் உறுதுணையாய் இருந்தார்.

பாண்டவர்களை நேர்மையான முறையில் வெல்ல முடியாது என துரியோதனனும், சகுனியும், தருமரை சூதாட அழைத்து வெல்ல முடிவெடுக்கின்றனர்.

திருதராஷ்டிரர், விதுரரைக் கூப்பிட்டுத் தருமரை சூதாட வருமாறு நேரில் சென்று அழைக்கக் கூறுகிறார்.விதுரர், இதை எவ்வளவோ தட்டிக் கழிக்கப் பார்த்தும், திருதராஷ்டிரரின் பிள்ளைப் பாசத்தினால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

தருமர், நாட்டை வைத்து சூதாட வேண்டிய நிலை வந்த போது, விதுரர் எல்லோர் முன்னிலையிலும் திருதராஷ்டிரரைக் கண்டிக்கிறார்."துரியோதனைப் பிள்ளையென வளர்த்திட்டேன்.ஆனால், அது பாம்பை, நரியை வளர்த்ததற்கு ஒப்பாகிவிட்டதே!" என புலம்பினார்.அறநெறி தவறிய பிறகும் வாழ்வில் இன்பம் ஏற்படும் என எண்ண வேண்டாம் என்கிறார்.ஆனால், அதற்கு , அவருக்குக் கிடத்தது அவமானமே!

தருமர் சூதாட்டத்தில் திரௌபதியை வைத்துத் தோற்றதும், அவளை கேவலப்படுத்த, சபைக்கு அழைத்து வருமாறு விதுரருக்குக் கட்டளை இடுகிறான்.ஆனால், விதுரர், அதற்கு மறுத்து அவனைக் கண்டிக்கிறார்."மாண்டு தரை மீது கிடப்பாய்" மகனே..என துரியாதனன் இறப்பை முதலிலேயே சொல்கிறார். (முக்காலமும் அறிந்தவர் அவர், பின்னர், துரியோதனன் போரில் பீமனால் தரையில்  தடைப் பிளக்கப் பட்டு மாண்டு விழ நேர்ந்தது)

விதுரரின் நேர்மையை புரிந்துக் கொள்ளாத திருதராஷ்டிரர், அவர் பாண்டவர்களுக்காக பேசியதாக நினைக்கிறார்.விதுரரை நோக்கி, "நீ எதிரிக்காக பேசுவதாகத் தான் தெரிகிறது.இனி நான் உன்னை நம்ப முடியாது.நீ, இனி எனக்கு வேண்டாம்.பாண்டவர் இருக்குமிடத்திற்கே நீ செல்'என்கிறார். விதுரரும், கிளம்பி பாண்டவர்கள் இருக்கும் வனத்திற்குச் செல்கிறார்.பின்னர், தன் தவறை உணர்ந்து திருதராஷ்டிரர், தன் நண்பரும், தேரோட்டியுமான சஞ்சயனை அனுப்பி விதுரரை அழைத்து வரச் சொல்கிறார்.திரும்பி வந்தவரிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

பாரதப்போர் தொடங்குமுன் கண்ணன் தூதுவராக அஸ்தினாபுரம் வருகிறார்.அவரை வரவேற்க துரியோதனன் ஏற்பாடு செய்கிறான்.ஆனாலும், தன்னை நேரில் வரவேற்க வந்த விதுரரின் இல்லம் சென்ற கண்ணன் ,அங்கு விருந்துண்டு ஓய்வெடுக்கிறார்,

இதனால் கோபமுற்ற துரியோதனன் சபையில், "எனக்குப் பகைவன் உனக்கும் பகைவனல்லவா?" என்று கூறி, கண்ணனுக்கு ஏன் விருந்தளித்தாய் ? என்கிறான்."என் தந்தையுடன் பிறந்தும். இதுநாள் வரையில் என் கையால் அளிக்கப்பட்ட உணவை உண்ட நீ, என்னிடம் அன்புடையவன் அல்ல.எனக்கு வெளிப்பகையானாய் உள்ளவர்களைவிட நீ மிகவும் ஆபத்தானவன்" என்றும், அவரை வேசி மகன் என்றும் ஏசுகிறான்.

விதுரர் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு, "என்னைப் பழி கூறிய வாயையும், உன் தலையையும் உடனே என்னால் வெட்ட முடியும.ஆனால் குரு வம்சத்தில் பிறந்த ஒருவன், தன் புதல்வன் உயிரைக் கொன்றான்" என்று நாளை உலகம் என்னை ஏசும் .அதனால் விடுகிறேன்" என்றார்.

போரில் எந்தப் பக்கத்திலிம் நிற்க மாட்டேன் என்றவர் உலகின் பிரசித்தமான சிவ தனுசு, விஷ்ணு தனுசு ஆகிய சிறந்த வில் தனுசுகளில் தன்னிடமிருந்த விஷ்ணு தனுசை உடைத்து எறிந்தார்.



புதல்வரைப் போன்ற கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நடக்கும் போரைக் காணவிழையாமல் விதுரர் புனிதத் தலங்களைத் தரிசிக்கச் சென்றார்,

குஜராத்தில் உள்ள பிரபாச தீர்த்தம் (சோமநாத்) என்னும் தலத்தை அடந்த போது, பாரதப் போரின் முடிவினை அறிந்தார்.ஹரித்துவார் சென்று மைத்திரேய முனிவரிடம் உபதேசம் பெற்று அஸ்தினாபுரம் திரும்பினார்.

பின் திருதராஷ்டிரர்,காந்தாரி, குந்தி ஆகியோருடன் இறுதி நாட்களைக் கழிக்க இமயமலைக்குப் புறப்பட்டார்.அங்கு கடுமையான தவங்களை மேற்கொண்டு உலக வாழ்க்கையை நீத்தார்.எனினும் ஒரு நீதிமானாக இன்றும் ஆத்திகர்களால் போற்றப்படுகிறார்.



No comments:

Post a Comment