Wednesday, August 26, 2015

4-திருதராஷ்டிரரும், விதுரரும்



மகாபாரதத்தில் மூன்று உபதேச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் செய்த கீதாபதேசம்
பீஷ்மர்  போருக்குப் பின் தருமருக்கு உரைத்த அறிவுரைகள்
விதுரர் திருதராஷ்டிரருக்குக் கூறிய நீதிகள்

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ளவர்கள் கீதையை மிகவும் விரும்புவர் எனலாம்.மற்றவர்களுக்கு அந்த அளவிற்கு ஈடுபாடு இல்லாதிருக்கலாம்.

பீஷ்மர் கூறிய அறிவுரைகளோ...அரசர்களுக்கும், அரசியலில் உள்ளோர்க்கு மட்டுமே எனலாம்.

ஆனால் விதுரர் கூறியவை, ஆன்மீகவாதிகள்,ஆட்சியாளர்கள், ஆன்மீகத்தில் நாட்டமில்லாதவர்கள், நாத்திகவாதிகள் என அனைவருக்குமானது எனலாம்.ஆனாலும் விதுர நீதி, மற்ற இரண்டைப் போல அதிகம் பேசப்படவில்லை.ஆனாலும், அதற்கான மதிப்பு, மற்ற இரண்டைவிட எள்ளளவும் குறைவானதில்லை.

திருதராஷ்டிரர், கௌரவர்கள் பற்றிய கவலையில் உறக்கம் வராமல் தவித்தார்.அப்போது விதுரர் அவரைத் தேற்ற சொன்னக் கருத்துகள் இவை.

விதுர நீதி, தனி மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை என இரண்டுடன் கைகோர்த்துச் செல்கிறது.தவிர்த்து...விதுர நீதி எந்த மதத்தையும் சார்ந்தது இல்லை எனலாம்.வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அனைவருக்கும் இது பொதுவானதாகும்.

எளிய சொற்கள், சொற் சிக்கனம், ஆழ்ந்த பொருள் ஆகியவை கொண்ட விதுர நீது திருக்குறளுக்கு ஒப்பானது எனலாம்.


பாரதப்போர் ஏற்படுவதைத் தடுக்க எண்ணிய திருதராஷ்டிரர் சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது அனுப்பினார்.சஞ்சயன் கூறியவற்றைக் கேட்ட தருமர், திருதராஷ்டிரரின் மனதில் உள்ளதை அறிந்தார்.அதனால் அவர் சஞ்சயனிடம் " ஒரு காலத்தில் பாண்டவர்கள், திருதராஷ்டிரரின் ஆசியோடு நாடு ஆண்டோம்.இப்போது, நாடு இன்றி, ஊரின்றி பிறரை அண்டி வாழ்கிறோம்.எங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது கொடுத்திருக்கலாம்" என்றார்.

தருமரின், பெருந்தன்மையால் கவரப்பட்ட சஞ்சயன் அன்றிரவே அஸ்தினாபுரம் வந்தான்.இரவு நேரமாகிவிட்டபடியால், திருதராஷ்டிரரிடம், தருமர் கூறியதை காலையில் கூறுவதாகக் கூறிச் சென்றான்.

சஞ்சயன் , என்ன பதில் கொண்டு வந்திருப்பானோ என்ற எண்ணத்தில் திருதராஷ்டிரருக்கு இரவு உறக்கம் வரவில்லை.ஆகவே, இரவை பேசிக் கழிக்க எண்ணி விதுரரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்.

திருதராஷ்டிரர், தன்னைக் கூப்பிட்டுப் பேசப்போகிறார் என விதுரருக்குத் தெரியாது.அதனால், அவர் கூப்பிட்டு அனுப்பியதும், அவரிடம் சாதாரணமாக உரையாடுவது போல விதுரர் சொல்லிக் கொண்டே வந்தார்.இந்த அறிவுரைகள் கொண்ட நூல் ஒவ்வொருவருர் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

திருதராஷ்டிரர் மனம் சஞ்சலத்தில் இருந்ததால், அவருக்கு மற்ற ஒருவர் அறிவுரை தேவைப்பட்டது.அதை விதுரர் செய்தார்.

இதைத்தான் வள்ளுவனும் இக்குறளில் கூறுகிறார்.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை

நூல்களைக் கற்காவிடினும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக மையும். 

No comments:

Post a Comment