Showing posts with label வள்ளுவர் நீதியும்-விதுர நீதியும். Show all posts
Showing posts with label வள்ளுவர் நீதியும்-விதுர நீதியும். Show all posts

Saturday, September 5, 2015

8-பொறுமை



பொறுமைசாலிகளிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு.வேறு எந்த குறைகளும் கிடையாது.அந்த ஒரே குறை என்னவென்றால் அவனை மக்கள் பலகீனமானவன் என எண்ணும்படி நடந்து கொள்வான்

உண்மையில் பொறுமை என்பது குறையல்ல.மிகவும் வலிமை வாய்ந்தது.பலகீனமானவர்களிடம் உள்ள பொறுமையும் நற்குணம்தான்.ஆனால் பலசாலிகளின் பொறுமையோ ஒரு ஆபரணம்.

பொறுமை அனைவரையும் வசீகரித்து வசப்படுத்தும் வலிமையைக் கொண்டது.பொறுமையால் சாதிக்கமுடியாத காரியங்களே இல்லை எனலாம்.பொறுமை என்ற வாளை ஏந்தியவனை எந்த தீயவனாலும் ஏதும் செய்ய முடியாது.

புல்லற்ற தரையில் விழும் நெருப்பு தானாகவே அழிந்துவிடும்.அதே வேளையில் சுற்றியுள்ள பொருட்களையும் சேதப்படுத்தாது.பொறுமையற்றவனோ தான் அழிவதுடன் அல்லாது சுற்றத்தினருக்கும் அழிவை உண்டாக்குவான்.

நேர்மை தலை சிறந்த பண்பாகும்.பொறுமைதான் அமைதிக்கு தலை சிறந்த வழி.முழுமையான அறிவே பூரண திருப்தியத் தரும்.பிறருக்குத் தீங்கிழைக்காத தன்மையே மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.


Wednesday, September 2, 2015

6-அறிஞர் எனப்படுபவர்



உண்மையான அறிஞரின் பண்புகளை விதுரர் கூற ஆரம்பித்தார்.

அறிஞர் எனப்படுபவர்...

தனது அடிப்படையை அறிதல்,முயற்சியுடமை,சகிப்புத்தன்மை,அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பர்,மேலும், வாழ்க்கையில் குறிக்கோள்களை கைவிடாதவராகவும் இருப்பார்கள்

மரம் ஒன்றுதான்...ஆனால் அதிலிருந்து பூஜைப்பாத்திரம், கரண்டி, படகு,மரக்கூடை,உலக்கை முதலிய பல பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.அதுபோல, ஒரு மூத்தோரிடமிருந்து தான் நல்லது, கெட்டது இரண்டுமே தோன்றுகின்றன


அறிஞர் எனப்படுபவர்.....

உன்னதமான விஷயங்களில் பற்று கொண்டிருப்பர்.நிந்திக்கப்படும் விஷயங்களைத் தவிர்த்திடுவார்.கடவுள் பக்தி உடையவராக இருப்பதுடன், தன்னைவிட மூத்தவர்கள், குரு ஆகியோரின் அறிவுரைகளிலும், சமய நூல்கள் கூறும் கருத்துக்களிலும் நம்பிக்கை கொண்டிருப்பர்.

கோபம், மகிழ்ச்சி, கர்வம், கூச்சம்,பிடிவாதம், போலி சுயகௌரவமாகியவற்றின் வசப்படுவதில்லைவாழ்க்கையின் உன்னத லட்சியங்களை மேற்கூறியவை தடுத்துவிடும் என்பதால் அவை தன்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வர்.

தனது பணிகள், வெப்பத்திலோ, குளிராலோ அச்சம் காரணமாகவோ, அன்பாலேயோ, வளமையாலோ தடைப்பட்டு நிற்காமல் தொடர்ந்து இயங்குவர்.

தடுமாறும் அறிவை வசப்படுத்தி, நல்ல விஷயங்களிலும், வாழ்க்கையின் வசதிகளை நேர்மையாகப் பெறுவதிலும் ஈடுபட்டிருப்பர்.இவ்வாறு அறம்,பொருள் இரண்டிலும் ஈடுபாடு கொண்ட  உலக இன்பங்களில் அதிக நாட்டக் காட்ட மாட்டார்கள்.

தன்னுடைய திறமையை முழுமையாக பயன்படுத்த விரும்புவர்.தன் சக்திக்கு ஏற்ப நடந்ததையெல்லாம் சிறப்பாகச் செய்வார்கள்.எப்பணியையும் தாழ்வானது என புறக்கணிக்க மாட்டார்கள்

எதையும் உடனே புரிந்து கொள்வர்.பிறர் கூறுவதை பொறுமையாகக் கேட்பார்கள்.பிறர் சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.அதனால் உண்டாகும் பலனை எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.கடமை உணர்வுடன் செயல் படுவார்கள்.தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டு தனது நேரத்தை வீணாக்கமாட்டார்கள்.

தனக்குக் கிடைக்க வாய்ப்பற்ற பொருட்கள் மீது ஆசை படமாட்டார்கள்.தனது பொருள் தொலைந்து போனாலும் அதற்காக,
புலம்ப மாட்டார்கள்.எதிர்ப்பு, தோல்வி ஆகிய எந்த சூழ்நிலையிலும் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நிற்க மாட்டார்கள்.

ஒரு  செயலை செய்யும் முன் சிந்திப்பார்கள்.செயல்புரிய தொடங்கிவிட்டால் அதை பாதியில் நிறுத்த மாட்டார்கள்.தனது நேரத்தை விரயம் செய்யாமல் மனதை தன் வசத்தில் வைத்திருப்பர்.

உன்னதமான பணிகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.தனக்கும், பிறருக்கும் மகிழ்ச்சியும், நன்மையும் தரக்கூடிய செயல்களிலேயே ஈடுபட்டிருப்பர்.மற்றவர்களின் வசதியைக் கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்.

அதீத மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.அவமானம் ஏற்பட்டாலும் துவண்டு விட மாட்டார்கள்.பாராட்டு, அவமானம் ஆகிய எந்நிலையிலும் கங்கை நதியிலுள்ள மடுபோல சலனமின்றி அமைதியாக இருப்பார்கள்.

உயிருள்ளவை, உயிர் அற்றவை ஆகிய அனைத்தின் அடைப்படை அறிந்தவராய் இருப்பர்.மக்கள் செய்யும் செயல்கள் எத்திசையில் செல்கின்றனவோ  , அவற்றின் விளைவுகள் எப்படி என இரண்டையும்
யூகிக்க வல்லவராய் இருப்பர்.தங்களது விருப்பங்கள் நிறைவேற மனிதர்கள் பின்பற்றும் எல்லா செயலையும் அறிந்தவராய் இருப்பர்.

தைரியமாக தடங்களின்றி பேசக்கூடியவராய் இருப்பார்கள்.பல விஷயங்கள் குறித்தும் சுவையாக பேசுவார்கள்.எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது அறிந்திருப்பார்கள்.எந்தப் பிரச்னையானாலும் நுணுக்கமாக அறியும் பார்வை பெற்றிருப்பர்.உயரிய நூல்களிலிருந்து சுலபமாக மேற்கோள் காட்டி விளக்குவார்கள்.

தன் அறிவின் தரப்படி உயர்க்கல்வி பெற்றிருப்பர்.உயர்க் கல்விக்கேற்ப உயர் அறிவும் பெற்றிருப்பர்.மற்ற அறநூல்களில் நிலை நாட்டப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை மீறமாட்டார்கள்.

தன் அறிவிற்காக கர்வப்பட மாட்டார்கள்.செல்வமோ, ஆற்றலோ. அதிகாரமோ குறைந்திருந்தாலும்திமிர் கொண்டு அலைய மாட்டார்கள்.அடக்கமாக தன் பணிகளைச் செய்வார்கள்.



Friday, August 28, 2015

5- விதுர நீதி -- உறங்கா நிலைப் படலம்


(இந்த அத்தியாயத்திலிருந்து விதுரநீதி ஆரம்பிக்கிறது.விதுரர் கூறியவை 605 சுலோகங்களாகும்.இவை 1210 வரிகள் ஆகும்)

திருதராஷ்டிரர் தன் அறையின் காவலாளியை அழைத்தார்.அவனிடம், "நான் விதுரரை சந்திக்க விழைகிறேன்! அவரை அழைத்து வருவாயாக1" என்றார்.

அந்த வாயிற்காவலனனும் விதுரரிடம் சென்று, :"ஐயா! மாமன்னர் தங்களை சந்திக்க விரும்புகிறார்." என்றான்..விதுரரும் மன்னரைச் சந்திக்கச் சென்றார்.ஆழ்ந்த சிந்தனையில் இருந்த திருதராஷ்டரரிடம், இரு கைகளையும் கூப்பியபடியே விதுரர், தான் வந்துள்ளதாகத் தெரிவித்தார்..(திருதராஷ்டிரர் பார்வை இழந்தவர் ஆதலால், தன் பெயரைக் கூறி வந்ததைத் தெரிவித்தார்.)

"விதுரரே! நல்வரவாகுக.சஞ்சயனைப் பாண்டவர்களிடம் தூது அனுப்பியிருந்தேன்.அவன் திரும்பி விட்டான்.ஆனாலும், நேரமாகிவிட்டபடியால், நாளை காலை சபையில் தருமரின் செய்தியை அறிவிக்கிறேன் என்று சொல்லி விட்டான். தருமர் சொல்லியுள்ள செய்தி என்னவாக இருக்கும்? என என்னால் தெரிந்து கொள்ள இயலவில்லை.இதை எண்ணி எண்ணியே எனக்கு உறக்கம் வரவில்லை. விதுரரே! நீர்தான் நம்மிடையே நன்கு அறிவு நூல்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவன்.ஆகவே, உறக்கம் வராது அவதிப் படும் எனக்கு ஒரு நல்வழி சொல்வாயாக.சஞ்சயன், என்ன செய்தி கொண்டு வந்துள்ளானோ? என்றே சிந்தனையாக உள்ளது.உம்மால், தருமர் என்ன சொல்லியிருப்பார் என யூகித்து சொல்ல முடியுமா? தருமர் எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தருமா?" என்றார்.

அதற்கு விதுரர், அரசே, யார் யாருக்குத் தூக்கம் வராது தெரியுமா? பலசாலிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் பலமற்றவர்களும், தன் தொழிலுக்கு ஏற்ற கருவிகளை வைத்திராத தொழிலாளிகளுக்கும்,சொத்தை இழந்தவர்களுக்கும், காதலிப்பவர்கள் அல்லது காமுகர்களுக்கும், திருடர்கள் ஆகியோருக்கும் இரவில் சரியாகத் தூங்க முடியாது.

அரசே! நீங்கள் மேற்கண்ட எந்த வகைக்களுக்குள்ளும் அடங்குபவர் அல்லவே!பிறர் சொத்தை அடையும் பேராசை உங்களுக்குத் தெரியாதே!" என்றார்.

"அந்தப் பிரச்னைப் பற்றித்தான் உன் அறிவுரையைக் கேட்க விரும்புகிறேன்!உன் கருத்துகள் எப்போதுமே அறப்பண்புக்கு பொருந்தி வருபவை.ஆகவேதான், அரசர் குலத்தில் பிறந்த ஞானிகளில் நீ மட்டுமே அறிஞர்களாலும் போற்றப்படுகிறாய்" என்றார்.

அதற்கு விதுரர்,"அரசே1 நற்பண்புகள் நிறைந்த அரசன் மூவுலகங்களையு8ம் அரசாளும் மேன்மை பெறுவான்.அத்தகையப் பண்புகள் நிறைந்த தருமருக்கு ஆதரவு அளிக்காமல் நாடு கடத்திவிட்டீர்கள்".நீங்கள் நல்லவர், வல்லவர்.அறநெறி அறிந்தவரானாலும் தருமருக்கும், உங்களுக்கும் வித்தியாசம் உண்டு..பார்வை இல்லாததால் நீங்கள் அதிர்ஷ்டம் குறைந்தவர்.(திருதராஷ்டிரர் புறக்கண்கள் மட்டுமின்றி, அகக்கண்ணும்குருடானவர்,  என மறைமுகமாக உரைத்தார் விதுரர்)

தருமர்..மென்மையானவர்,கனிவானவர், அறவழியில் நடப்பவர், உண்மையானவர், உங்களுக்குக் குடும்பப் பெரியவர் என்ற முறையில் மதிப்புத் தருபவர்.தனக்கு இழைக்கப்பட்ட தீமைகளை எல்லாம் அவர் தன் நற்பண்புகள் காரணமாக சகித்து வருகிறார்.நீங்கள் அட்சிப் பொறுப்பை துரியோதனன், சகுனி,கர்ணன்,துச்சாதனன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.அதற்குப் பிறகுமா வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்?" என்றார்.(மேற்கண்டவர்கள் நாட்டை ஆளும் தகுதியற்றவர்களாவார்கள்)