Friday, September 4, 2015

7- அறிவிலி யார்?



அறிவிலி எனப்படுபவன்.......

தனக்கு அறிவில்லை என்பதை பொருட்படுத்தாது கர்வமாய் இருப்பான்.ஏழையாக இருந்தாலும் திமிராக நடந்து கொள்வான்.தனது விருப்பங்களைத் தவறான வழிமுறைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வான்.அல்லது..எந்த முயற்சியும் செய்யாது விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என எண்ணுவான்

தனது சொந்த வேலையை விட்டு விட்டு பிறர் வேலையில் தலையிடுவான்.தன் சொத்தை இழந்துவிட்டு பிறர் தயவில் வாழ்வான்.அன்புள்ளவன் போல நடித்து நண்பர்களுக்குத் துரோகம் செய்வான்

விரும்பத்தகாத பொருளுக்கு ஆசைப்படுவான்.விரும்ப வேண்டிய பொருள்களை புறக்கணிப்பான்.தன்னைவிட வலியாரிடம் பணிவாகப் பழகாது அவர்தம் மீது வெறுப்புடன் விரோதத்தை வளர்த்துக் கொள்வான்

பகைவனை நண்பன் என ஏமாறுவான்.உண்மையான நண்பனை பகைவனாய் எண்ணி, அவனை வெறுத்து, அவனுக்கு தீங்கு செய்வான்.எப்பொழுதும் தீயச் செயல்களிலேயே ஆழ்ந்திருப்பான்.

தனக்குரிய கடமையைச் செயல்படுத்தத் தொடங்காமல் தயங்கிக் குழம்பியபடியே இருப்பான்.எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவான்.விரைவில் முடிக்கக்கூடிய பணியையும் இழுத்தடித்து தாமதப் படுத்துவான்.

முன்னோர்களை ஞாபகம் வைத்துக் கொண்டு திதி, படையல் ஆகியவற்றை செய்ய மாட்டான்.குலதெய்வங்களை வழிபட மாட்டான்.நல்ல உள்ளம் கொண்டவர்களை நண்பனாகக் கருத மாட்டான்.

தான் அழைக்கப்படாத இடங்களுக்கு தானே வலிய செல்வான்.தன்னிடம் பேசாதவர்களிடம் தேவையின்றி பேசுவான்.நம்பத் தகாதவர்களிடம் தன் ரகசியங்களை பகிர்ந்து கொள்வான்

தான் தவறிழைத்த போதிலும் பிறர் மீது குற்றம் சொல்வான்.தன்னைச் சார்ந்திராதவர், தனக்கு சம்பந்தமில்லாதவர் போன்றவர்களிடம் கோபித்து சண்டையிடுவான்

தனது ஆற்றல் குறைவு என புரியாமல், பெரிய செயல்களைச் செய்ய பேராசைப் படுவான்.அவை அறநெறிக்கு பொருந்தாதவையாகவும், அதிக உழைப்பின்றி பணம் சம்பாதிக்க விரும்பும் முயற்சிகளாகவும் இருக்கும்.

தன்னைச் சாராதார், தனக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆகியோருக்கு வழி காட்டுவான்.ஆனால், தன்னைச் சார்ந்தவர், தனக்கு சம்பந்தமானவர்களுக்கு பயனுள்ளதாக ஏதும் செய்ய மாட்டான்.கருமிகளிடம் உதவி எதிர்ப்பார்த்து கெஞ்சிக் கொண்டிருப்பான்.

மற்றவர் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் உண்டு களிப்பான்.தன் குடும்பத்தினர் கிழிந்த அடை அணிந்திருந்தாலும் தான் நல்ல ஆடை அணிந்து மகிழ்வான்

ஒருவன் பாவச்செயல் செய்தால் அது அனைவரையும் பாதிக்கிறது.ஆனால் காலப்போக்கில் சரியாகிவிடுகிறது.ஆனால் பாவச் செயல் புரிந்தவனை விட்டு களங்கம் எப்போதும் நீங்காது.

அம்பு எதிரியைக் கொல்லும் போது குறி தவறும்.ஆனால், ஒரு அறிவாளி தன் அறிவை அழிவு நோக்குடன் பயன் படுத்தினால் அரசன் உட்பட ஒரு நாடே நாசமாகிவிடும்.

இரண்டை, ஒன்றால் பிரித்தறிந்து, மூன்றை நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து, ஐந்தை வென்று, ஆறை அணிந்து கொண்டு, ஏழை கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.(இது பொதுவாக மன்னர்களுக்குச் சொல்லப்பட்டது.இதன் விளக்கம்-
நல்லது, கெட்டது என்ற இரண்டை விவேகம் என்ற ஒன்றால் பிரித்து அறிந்து, நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய மூவரை , சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து ஐம்புலன்களை (ஐந்தை) வென்று, உடன்படிக்கை, போர்,அணிவகுத்து முன்னேறுதல்,தன் வசமுள்ள பகுதிகளைக் காத்தல், சாதகமான காலம் வருவரை காத்திருத்தல்,வஞ்சகம், அடைக்கலம் கிடைக்கக் கூடிய இடம் ஆகியவற்றை (விவரங்களை) அணிந்து கொண்டு, பெண்ணாசை. சூதாட்டம்,வேட்டையாடுதல்,குடிப்பழக்கம், கடுஞ்சொல் கூறல், கடுமையாக தண்டித்தல், செல்வத்தை விரயம் செய்தல் ஆகிய ஏழைக் கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.

விஷம் குடிப்பவனைக் கொல்லும்.ஆயுதம் தாக்கப்பட்டவனை அழிக்கும் ஆனால் அரசியல் ரகசியங்கள் வெளியானால் ஆட்சியாளரும், குடிமக்கள் உட்பட நாடே அழியும்.(தீய ஆலோசனைகளால் நாடே அழியும்)

தனியாக ஒருவன் விருந்துணவை உண்ணக்கூடாது.தனியாக ஒருவன் முக்கிய முடிவெடுக்கக் கூடாது.தனியாக ஒருவன் பயணம் செய்யக் கூடாது மற்றவர் உறங்குகையில் தனியாக ஒருவன் கண் விழித்திருக்கக் கூடாது.

விண்ணுலகிற்கு அழைத்துச் செல்ல ஒரு ஏணிதான் உண்டு.மாற்று ஏணிக்கிடையாது.கடலைக் கடக்க உதவும் படகினைப் போல, உலகைக் கடந்து அமர வாழ்விற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரே ஏணி உண்மைதான்.இதை நீங்கள் (திருதராஷ்டிரர்) உணரவில்லை.


No comments:

Post a Comment