Showing posts with label -TVR. Show all posts
Showing posts with label -TVR. Show all posts

Saturday, September 12, 2015

9- இருவகையினர்



தாக்கப்பட்டாலும் போரிடாத அரசன், வெளியூருக்கு (குருவைத் தேடியோ, புண்ணிய தலங்களுக்கோ) செல்லாத அந்தணன்..ஆகிய இரண்டு பேரையும் பொந்துகளில் வாழும் பிராணிகளை பாம்பு விழுங்குவது போல பூமி விழுங்கிவிடும்

சிறிதும் கடுஞ்சொற்கள் பேசாதிருத்தல், தீயவர்களைப் புகழ்ந்து  வணங்காமலிருத்தல் ஆகிய இரண்டும் மனிதன் புகழ் பெற்று பிரகாசிக்க உதவும்.

மற்ற பெண்கள் விரும்பும் பொருட்களுக்கு தானும் ஆசைப்படும் பெண்கள், மற்றவர்கள் வணங்குவதைப் பார்த்து தானும் வணங்கும் முட்டாள்கள் இருவரும் சுயமாக சிந்திக்காமல் மற்றவர்கள் கருத்துக்கு ஏற்ப செயல்படுபவர்கள் ஆவார்கள்

ஏழையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஏங்குவது, உயர் பதவியிலோ, உயர்நிலையிலோ இல்லாவிடினும் பிறர் மீது கோபத்தை வெளியிடுவது ஆகிய இரண்டு குறைகளும் கூர்மையான விஷ முட்களைப்போல உடலை பாதித்துவிடும்

உழைப்பில் ஆர்வமில்லா குடும்பத் தலைவன், உலக விவகாரங்களில் ஈடுபடும் துறவி ஆகிய இருவகையினரும் வாழ்க்கையில் கௌரவம் பெற முடியாது.

பிரபுக்கள் போல உயர்நிலையிலிருந்தும் பொறுமையாக இருப்பவர், வறியவராய் இருந்தும் வள்ளல் போல வழ்ங்குபவர்கள் ஆகிய இரண்டு வகையினரும் விண்ணுலகிற்கும் மேற்பட்ட உலகில் இடம் பெறுவார்கள்.

தகுதியற்றவர்களுக்கு பணம் கொடுத்தல், தகுதி உள்ளவர்களுக்கு உதவ மறுத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த கௌரவத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படும்

தான தருமம் செய்யாத பணக்காரன், கடவுள் பற்றில்லா ஏழை ஆகிய இரு வகையினரும் கழுத்தில் பெரிய கல் கட்டப்பட்டு தண்ணீரில் தள்ளப்பட்டவர்கள் போல அழிவர்

யோகப் பயிற்சிகளில் முழு தேர்ச்சி பெற்றுவிட்ட துறவி, புறமுதுகுக் காட்டாது போரிட்டு கொல்லப்பட்ட வீரன் ஆகிய இருவகையினரும் விண்ணுலக வாழ்வைப் பெறுவர்


Saturday, September 5, 2015

8-பொறுமை



பொறுமைசாலிகளிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு.வேறு எந்த குறைகளும் கிடையாது.அந்த ஒரே குறை என்னவென்றால் அவனை மக்கள் பலகீனமானவன் என எண்ணும்படி நடந்து கொள்வான்

உண்மையில் பொறுமை என்பது குறையல்ல.மிகவும் வலிமை வாய்ந்தது.பலகீனமானவர்களிடம் உள்ள பொறுமையும் நற்குணம்தான்.ஆனால் பலசாலிகளின் பொறுமையோ ஒரு ஆபரணம்.

பொறுமை அனைவரையும் வசீகரித்து வசப்படுத்தும் வலிமையைக் கொண்டது.பொறுமையால் சாதிக்கமுடியாத காரியங்களே இல்லை எனலாம்.பொறுமை என்ற வாளை ஏந்தியவனை எந்த தீயவனாலும் ஏதும் செய்ய முடியாது.

புல்லற்ற தரையில் விழும் நெருப்பு தானாகவே அழிந்துவிடும்.அதே வேளையில் சுற்றியுள்ள பொருட்களையும் சேதப்படுத்தாது.பொறுமையற்றவனோ தான் அழிவதுடன் அல்லாது சுற்றத்தினருக்கும் அழிவை உண்டாக்குவான்.

நேர்மை தலை சிறந்த பண்பாகும்.பொறுமைதான் அமைதிக்கு தலை சிறந்த வழி.முழுமையான அறிவே பூரண திருப்தியத் தரும்.பிறருக்குத் தீங்கிழைக்காத தன்மையே மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும்.


Friday, September 4, 2015

7- அறிவிலி யார்?



அறிவிலி எனப்படுபவன்.......

தனக்கு அறிவில்லை என்பதை பொருட்படுத்தாது கர்வமாய் இருப்பான்.ஏழையாக இருந்தாலும் திமிராக நடந்து கொள்வான்.தனது விருப்பங்களைத் தவறான வழிமுறைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வான்.அல்லது..எந்த முயற்சியும் செய்யாது விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என எண்ணுவான்

தனது சொந்த வேலையை விட்டு விட்டு பிறர் வேலையில் தலையிடுவான்.தன் சொத்தை இழந்துவிட்டு பிறர் தயவில் வாழ்வான்.அன்புள்ளவன் போல நடித்து நண்பர்களுக்குத் துரோகம் செய்வான்

விரும்பத்தகாத பொருளுக்கு ஆசைப்படுவான்.விரும்ப வேண்டிய பொருள்களை புறக்கணிப்பான்.தன்னைவிட வலியாரிடம் பணிவாகப் பழகாது அவர்தம் மீது வெறுப்புடன் விரோதத்தை வளர்த்துக் கொள்வான்

பகைவனை நண்பன் என ஏமாறுவான்.உண்மையான நண்பனை பகைவனாய் எண்ணி, அவனை வெறுத்து, அவனுக்கு தீங்கு செய்வான்.எப்பொழுதும் தீயச் செயல்களிலேயே ஆழ்ந்திருப்பான்.

தனக்குரிய கடமையைச் செயல்படுத்தத் தொடங்காமல் தயங்கிக் குழம்பியபடியே இருப்பான்.எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவான்.விரைவில் முடிக்கக்கூடிய பணியையும் இழுத்தடித்து தாமதப் படுத்துவான்.

முன்னோர்களை ஞாபகம் வைத்துக் கொண்டு திதி, படையல் ஆகியவற்றை செய்ய மாட்டான்.குலதெய்வங்களை வழிபட மாட்டான்.நல்ல உள்ளம் கொண்டவர்களை நண்பனாகக் கருத மாட்டான்.

தான் அழைக்கப்படாத இடங்களுக்கு தானே வலிய செல்வான்.தன்னிடம் பேசாதவர்களிடம் தேவையின்றி பேசுவான்.நம்பத் தகாதவர்களிடம் தன் ரகசியங்களை பகிர்ந்து கொள்வான்

தான் தவறிழைத்த போதிலும் பிறர் மீது குற்றம் சொல்வான்.தன்னைச் சார்ந்திராதவர், தனக்கு சம்பந்தமில்லாதவர் போன்றவர்களிடம் கோபித்து சண்டையிடுவான்

தனது ஆற்றல் குறைவு என புரியாமல், பெரிய செயல்களைச் செய்ய பேராசைப் படுவான்.அவை அறநெறிக்கு பொருந்தாதவையாகவும், அதிக உழைப்பின்றி பணம் சம்பாதிக்க விரும்பும் முயற்சிகளாகவும் இருக்கும்.

தன்னைச் சாராதார், தனக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஆகியோருக்கு வழி காட்டுவான்.ஆனால், தன்னைச் சார்ந்தவர், தனக்கு சம்பந்தமானவர்களுக்கு பயனுள்ளதாக ஏதும் செய்ய மாட்டான்.கருமிகளிடம் உதவி எதிர்ப்பார்த்து கெஞ்சிக் கொண்டிருப்பான்.

மற்றவர் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் உண்டு களிப்பான்.தன் குடும்பத்தினர் கிழிந்த அடை அணிந்திருந்தாலும் தான் நல்ல ஆடை அணிந்து மகிழ்வான்

ஒருவன் பாவச்செயல் செய்தால் அது அனைவரையும் பாதிக்கிறது.ஆனால் காலப்போக்கில் சரியாகிவிடுகிறது.ஆனால் பாவச் செயல் புரிந்தவனை விட்டு களங்கம் எப்போதும் நீங்காது.

அம்பு எதிரியைக் கொல்லும் போது குறி தவறும்.ஆனால், ஒரு அறிவாளி தன் அறிவை அழிவு நோக்குடன் பயன் படுத்தினால் அரசன் உட்பட ஒரு நாடே நாசமாகிவிடும்.

இரண்டை, ஒன்றால் பிரித்தறிந்து, மூன்றை நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து, ஐந்தை வென்று, ஆறை அணிந்து கொண்டு, ஏழை கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.(இது பொதுவாக மன்னர்களுக்குச் சொல்லப்பட்டது.இதன் விளக்கம்-
நல்லது, கெட்டது என்ற இரண்டை விவேகம் என்ற ஒன்றால் பிரித்து அறிந்து, நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய மூவரை , சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கின் கட்டுப்பாடின் கீழ் கொணர்ந்து ஐம்புலன்களை (ஐந்தை) வென்று, உடன்படிக்கை, போர்,அணிவகுத்து முன்னேறுதல்,தன் வசமுள்ள பகுதிகளைக் காத்தல், சாதகமான காலம் வருவரை காத்திருத்தல்,வஞ்சகம், அடைக்கலம் கிடைக்கக் கூடிய இடம் ஆகியவற்றை (விவரங்களை) அணிந்து கொண்டு, பெண்ணாசை. சூதாட்டம்,வேட்டையாடுதல்,குடிப்பழக்கம், கடுஞ்சொல் கூறல், கடுமையாக தண்டித்தல், செல்வத்தை விரயம் செய்தல் ஆகிய ஏழைக் கைவிட்டு மகிழ்ச்சியடையலாம்.

விஷம் குடிப்பவனைக் கொல்லும்.ஆயுதம் தாக்கப்பட்டவனை அழிக்கும் ஆனால் அரசியல் ரகசியங்கள் வெளியானால் ஆட்சியாளரும், குடிமக்கள் உட்பட நாடே அழியும்.(தீய ஆலோசனைகளால் நாடே அழியும்)

தனியாக ஒருவன் விருந்துணவை உண்ணக்கூடாது.தனியாக ஒருவன் முக்கிய முடிவெடுக்கக் கூடாது.தனியாக ஒருவன் பயணம் செய்யக் கூடாது மற்றவர் உறங்குகையில் தனியாக ஒருவன் கண் விழித்திருக்கக் கூடாது.

விண்ணுலகிற்கு அழைத்துச் செல்ல ஒரு ஏணிதான் உண்டு.மாற்று ஏணிக்கிடையாது.கடலைக் கடக்க உதவும் படகினைப் போல, உலகைக் கடந்து அமர வாழ்விற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரே ஏணி உண்மைதான்.இதை நீங்கள் (திருதராஷ்டிரர்) உணரவில்லை.