Wednesday, September 2, 2015

6-அறிஞர் எனப்படுபவர்



உண்மையான அறிஞரின் பண்புகளை விதுரர் கூற ஆரம்பித்தார்.

அறிஞர் எனப்படுபவர்...

தனது அடிப்படையை அறிதல்,முயற்சியுடமை,சகிப்புத்தன்மை,அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பர்,மேலும், வாழ்க்கையில் குறிக்கோள்களை கைவிடாதவராகவும் இருப்பார்கள்

மரம் ஒன்றுதான்...ஆனால் அதிலிருந்து பூஜைப்பாத்திரம், கரண்டி, படகு,மரக்கூடை,உலக்கை முதலிய பல பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.அதுபோல, ஒரு மூத்தோரிடமிருந்து தான் நல்லது, கெட்டது இரண்டுமே தோன்றுகின்றன


அறிஞர் எனப்படுபவர்.....

உன்னதமான விஷயங்களில் பற்று கொண்டிருப்பர்.நிந்திக்கப்படும் விஷயங்களைத் தவிர்த்திடுவார்.கடவுள் பக்தி உடையவராக இருப்பதுடன், தன்னைவிட மூத்தவர்கள், குரு ஆகியோரின் அறிவுரைகளிலும், சமய நூல்கள் கூறும் கருத்துக்களிலும் நம்பிக்கை கொண்டிருப்பர்.

கோபம், மகிழ்ச்சி, கர்வம், கூச்சம்,பிடிவாதம், போலி சுயகௌரவமாகியவற்றின் வசப்படுவதில்லைவாழ்க்கையின் உன்னத லட்சியங்களை மேற்கூறியவை தடுத்துவிடும் என்பதால் அவை தன்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வர்.

தனது பணிகள், வெப்பத்திலோ, குளிராலோ அச்சம் காரணமாகவோ, அன்பாலேயோ, வளமையாலோ தடைப்பட்டு நிற்காமல் தொடர்ந்து இயங்குவர்.

தடுமாறும் அறிவை வசப்படுத்தி, நல்ல விஷயங்களிலும், வாழ்க்கையின் வசதிகளை நேர்மையாகப் பெறுவதிலும் ஈடுபட்டிருப்பர்.இவ்வாறு அறம்,பொருள் இரண்டிலும் ஈடுபாடு கொண்ட  உலக இன்பங்களில் அதிக நாட்டக் காட்ட மாட்டார்கள்.

தன்னுடைய திறமையை முழுமையாக பயன்படுத்த விரும்புவர்.தன் சக்திக்கு ஏற்ப நடந்ததையெல்லாம் சிறப்பாகச் செய்வார்கள்.எப்பணியையும் தாழ்வானது என புறக்கணிக்க மாட்டார்கள்

எதையும் உடனே புரிந்து கொள்வர்.பிறர் கூறுவதை பொறுமையாகக் கேட்பார்கள்.பிறர் சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.அதனால் உண்டாகும் பலனை எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.கடமை உணர்வுடன் செயல் படுவார்கள்.தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டு தனது நேரத்தை வீணாக்கமாட்டார்கள்.

தனக்குக் கிடைக்க வாய்ப்பற்ற பொருட்கள் மீது ஆசை படமாட்டார்கள்.தனது பொருள் தொலைந்து போனாலும் அதற்காக,
புலம்ப மாட்டார்கள்.எதிர்ப்பு, தோல்வி ஆகிய எந்த சூழ்நிலையிலும் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நிற்க மாட்டார்கள்.

ஒரு  செயலை செய்யும் முன் சிந்திப்பார்கள்.செயல்புரிய தொடங்கிவிட்டால் அதை பாதியில் நிறுத்த மாட்டார்கள்.தனது நேரத்தை விரயம் செய்யாமல் மனதை தன் வசத்தில் வைத்திருப்பர்.

உன்னதமான பணிகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்வார்கள்.தனக்கும், பிறருக்கும் மகிழ்ச்சியும், நன்மையும் தரக்கூடிய செயல்களிலேயே ஈடுபட்டிருப்பர்.மற்றவர்களின் வசதியைக் கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்.

அதீத மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.அவமானம் ஏற்பட்டாலும் துவண்டு விட மாட்டார்கள்.பாராட்டு, அவமானம் ஆகிய எந்நிலையிலும் கங்கை நதியிலுள்ள மடுபோல சலனமின்றி அமைதியாக இருப்பார்கள்.

உயிருள்ளவை, உயிர் அற்றவை ஆகிய அனைத்தின் அடைப்படை அறிந்தவராய் இருப்பர்.மக்கள் செய்யும் செயல்கள் எத்திசையில் செல்கின்றனவோ  , அவற்றின் விளைவுகள் எப்படி என இரண்டையும்
யூகிக்க வல்லவராய் இருப்பர்.தங்களது விருப்பங்கள் நிறைவேற மனிதர்கள் பின்பற்றும் எல்லா செயலையும் அறிந்தவராய் இருப்பர்.

தைரியமாக தடங்களின்றி பேசக்கூடியவராய் இருப்பார்கள்.பல விஷயங்கள் குறித்தும் சுவையாக பேசுவார்கள்.எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது அறிந்திருப்பார்கள்.எந்தப் பிரச்னையானாலும் நுணுக்கமாக அறியும் பார்வை பெற்றிருப்பர்.உயரிய நூல்களிலிருந்து சுலபமாக மேற்கோள் காட்டி விளக்குவார்கள்.

தன் அறிவின் தரப்படி உயர்க்கல்வி பெற்றிருப்பர்.உயர்க் கல்விக்கேற்ப உயர் அறிவும் பெற்றிருப்பர்.மற்ற அறநூல்களில் நிலை நாட்டப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை மீறமாட்டார்கள்.

தன் அறிவிற்காக கர்வப்பட மாட்டார்கள்.செல்வமோ, ஆற்றலோ. அதிகாரமோ குறைந்திருந்தாலும்திமிர் கொண்டு அலைய மாட்டார்கள்.அடக்கமாக தன் பணிகளைச் செய்வார்கள்.



No comments:

Post a Comment