Saturday, September 12, 2015

9- இருவகையினர்



தாக்கப்பட்டாலும் போரிடாத அரசன், வெளியூருக்கு (குருவைத் தேடியோ, புண்ணிய தலங்களுக்கோ) செல்லாத அந்தணன்..ஆகிய இரண்டு பேரையும் பொந்துகளில் வாழும் பிராணிகளை பாம்பு விழுங்குவது போல பூமி விழுங்கிவிடும்

சிறிதும் கடுஞ்சொற்கள் பேசாதிருத்தல், தீயவர்களைப் புகழ்ந்து  வணங்காமலிருத்தல் ஆகிய இரண்டும் மனிதன் புகழ் பெற்று பிரகாசிக்க உதவும்.

மற்ற பெண்கள் விரும்பும் பொருட்களுக்கு தானும் ஆசைப்படும் பெண்கள், மற்றவர்கள் வணங்குவதைப் பார்த்து தானும் வணங்கும் முட்டாள்கள் இருவரும் சுயமாக சிந்திக்காமல் மற்றவர்கள் கருத்துக்கு ஏற்ப செயல்படுபவர்கள் ஆவார்கள்

ஏழையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஏங்குவது, உயர் பதவியிலோ, உயர்நிலையிலோ இல்லாவிடினும் பிறர் மீது கோபத்தை வெளியிடுவது ஆகிய இரண்டு குறைகளும் கூர்மையான விஷ முட்களைப்போல உடலை பாதித்துவிடும்

உழைப்பில் ஆர்வமில்லா குடும்பத் தலைவன், உலக விவகாரங்களில் ஈடுபடும் துறவி ஆகிய இருவகையினரும் வாழ்க்கையில் கௌரவம் பெற முடியாது.

பிரபுக்கள் போல உயர்நிலையிலிருந்தும் பொறுமையாக இருப்பவர், வறியவராய் இருந்தும் வள்ளல் போல வழ்ங்குபவர்கள் ஆகிய இரண்டு வகையினரும் விண்ணுலகிற்கும் மேற்பட்ட உலகில் இடம் பெறுவார்கள்.

தகுதியற்றவர்களுக்கு பணம் கொடுத்தல், தகுதி உள்ளவர்களுக்கு உதவ மறுத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த கௌரவத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படும்

தான தருமம் செய்யாத பணக்காரன், கடவுள் பற்றில்லா ஏழை ஆகிய இரு வகையினரும் கழுத்தில் பெரிய கல் கட்டப்பட்டு தண்ணீரில் தள்ளப்பட்டவர்கள் போல அழிவர்

யோகப் பயிற்சிகளில் முழு தேர்ச்சி பெற்றுவிட்ட துறவி, புறமுதுகுக் காட்டாது போரிட்டு கொல்லப்பட்ட வீரன் ஆகிய இருவகையினரும் விண்ணுலக வாழ்வைப் பெறுவர்


No comments:

Post a Comment