Tuesday, December 29, 2015

33-உயர்க்குலப் பண்புகள்



விதுரரைப் பார்த்து திருதராஷ்டிரர் கேட்டார்,,,

:விதுரரே! அறநெறியைப் பின்பற்றுபவர்களும், நேர்மையான முறையில் சுகம் அனுபவிப்பவர்களும் ,அறிஞர்களான தேவர்களும் உயர்குலத்தினரை விரும்புவதாக அறிகிறேன்.உயர்க்குலக் குடும்பங்கள் என்பதற்கான தகுதிகள் என்ன்?

விதுரர் கூறலானார்.....

'தவம் செய்வது போன்ற புனித வாழ்க்கை,புலன்களை அடக்குதல்,ஆன்மீக அறிவு,சகிப்புத்தன்மை ,வேள்விகள் செய்தல், சாதிப்பிரிவிற்குள் திருமணம்,மனநிறைவு,அன்னதானம் செய்வதில் விருப்பம் ஆகிய எட்டும் உயர்க்குலக் குடும்பங்களில் காணப்படும் நற்பண்புகள் ஆகும்.

உயர்குலக்குடும்பத்தில் பிறந்தவர்கள்...ஒழுக்கத்திலிருந்து தடம் புரள மாட்டார்கள்.தங்களது முன்னோர், மூத்தவர்கள் மனம் புண்படும்படி பேச மாட்டார்கள்.நற்பண்புகளைபின்பற்றுவார்கள்.தங்கள் குடும்பம் புகழ்ப் பெற விரும்புவார்கள்.எல்லாவித பொய்களையும் தவிர்ப்பார்கள்

உயர்குலக் குடும்பத்தினர், தங்களுக்குரிய வேள்விகளை செய்யாவிடினும்,தங்கள் தகுதிக்குத் தாழ்வான குடும்பத்தில் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டாலும், வேதங்களைப் புறக்கணித்தாலும், நற்பண்புகளை மீறி நடந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

உயர்குலக் குடும்பத்தினர் கோயில்களிலுள்ள கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களை சேதப்படுத்தினாலும்,அந்தணர்களின் சொத்தை பிடுங்கிக் கொண்டாலும்,அந்தணர்களை அவமதித்தாலும் அக்குடும்பப் பெயர் களங்கப்படும்.(அந்தணர்களை உயர்க்குலம் என இங்கு குறிப்பிடாததை கவனித்தில் கொள்ள வேண்டும்)

உயர் குலக் குடும்பத்தினர் அந்தணர்களை அவமதித்தாலும், ஏசினாலும்,பிறர் தங்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்த பொருட்களைத் தாங்களே கவர்ந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

சில குடும்பங்களில் கால்நடைச் செல்வம்,குழந்தைகள். சொத்து வசதிகள்,நிறைந்து இருக்கலாம்.ஆனாலும் அக்குடும்பங்களில் உறுப்பினர்கள் நன்னடத்தையும்,நற்பழக்கங்களும் கொண்டிராவிட்டால் அவற்றை உயர்குலக் குடும்பங்களாக எண்ண முடியாது.

சில குடும்பங்களில் செல்வ வசதி குறைவாக இருக்கலாம்.ஆனால் அதே நேரம், குடும்ப உறுப்பினர்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்கத்தையும் உடையவர்களாக இருக்கலாம்.அப்படியானால் அந்தக் குடும்பங்களும் நல்ல குடும்பங்களாகவே கருதப்பட்டுப் பெரும் புகழ் பெறும்

எத்தகைய சூழ்நிலையிலும் நன்னடத்தையும்,நல்ல பழக்கங்களையும் கைவிடாமல் பின்பற்றி வர வேண்டும்.பணம் வரும்..போகும்..பணவசதி இல்லாததால் ஒருவரது வாழ்க்கை வீணாகிவிட்டது எனக் கூற முடியாது.ஆனால் ஒழுக்கமும், நற்பழக்கங்களும் அற்றவனது வாழ்க்கை நிரந்தரமாக வீணாகி விட்டதென்றே கூற வேண்டும்.

சில குடும்பங்களில் ஏராளமான பசுக்கள்,பிற வளர்ப்பு மிருகங்கள்,குதிரைகள் ,ஏராளமான தானியங்கள் ஆகியவை இருக்கக்கூடும்.ஆனால்,குடும்ப உறுப்பினர்கள் ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டிருக்காவிட்டால் அக்குடும்பங்கள் முன்னேறவோ, புகழ் பெறவோ முடியாது

எனவே நம் குடும்பத்தைச் சார்ந்தவர் எவனும் பிறரது பகைமையைத் தூண்டாமல் இருக்க வேண்டும்.நம் கீழுள்ள அரசர்கள். எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.நம்மவர்கள் பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.நண்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.பிறரை ஏமாற்றவோ, பொய் சொல்லவோ கூடாது.வீட்டில் தயாராகும் உணவை மறைந்த முன்னோர்களுக்கும், தெய்வங்களுக்கும் படைத்து, வந்துள்ள விருந்தாளிகளுக்கும் பரிமாறிய பின்னரே உண்ண வேண்டும்

(வள்ளுவர்-
விருந்து புறத்ததாய் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல)

நம் குலத்தைச் சேர்ந்தவர் ,அந்தணர்களுக்குத் தீங்கு விளைவித்தால் அல்லது அவர்களை வெறுத்தால் அல்லது அறுவடைக்குள்ள பயிரை நாசம் செய்தால் அத்தகையவர் நம்முடன் பழக,உறவாட நாம் அனுமதிக்கக் கூடாது

நல்ல மனிதர்களின் குடும்பங்களில் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனமும் அல்லது பாயும், விருந்தினர் அமர மேடை போன்ற அமைப்பும், கை கால் கழுவ தண்ணீரும் உண்மையான இனிமையான  பேச்சும் ஆகியவற்றை கட்டாயம் எதிர்பார்க்கலாம்

பாராட்டுக்குரிய நற்செயல்கள் புரிவதில் ஆர்வமுள்ளவர்கள் மேற்கூறியவற்றுடன் தயாராய் இருப்பார்கள்.வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று கௌரவிக்கும் போது மேற்கண்டவற்றை அவர்களுக்கு மரியாதையுடன் அளிப்பார்கள்

வண்டியும், தேரும் செய்ய பயன்படும் மரம் பார்க்க சிறியதாய் இருக்கும்.ஆனால், மிக உறுதியானது.அதன் சிறு கிளைகளும் பெரும் பாரத்தைத் தாங்கும்.ஆனால், வேறு சில மரங்கள் பெரியதாய் இருந்தாலும் சுமையைத் தாங்காது.அதுபோலவே உயர்குலக் குடும்பங்களில் பிறந்தவர் பெரிய பொறுப்புகளை சுமக்ககூடியவர்களாக இருப்பார்கள்.சாதாரணமான மக்களால் பெரிய பொறுப்புகளை நிர்வகிக்க இயலாது


வள்ளுவன்-
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

சொல்லாற்றல் படைத்தவனாகவும்,சோர்வு அறியாதவனாகவும்,அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது


No comments:

Post a Comment