Wednesday, December 23, 2015

30-ஏற்றம் பெற எட்டு



விவேகம், உயர்குடிப் பிறப்பு,சுயக்கட்டுப்பாடு,புனித நூல்களில் பயிற்சி,வீரம், பேச்சில் அளவாக இருத்தல், சக்திக்கு உட்பட்டு தான தருமம் செய்தல்,நன்றி மறவாமை ஆகிய எட்டுக் குணங்களும் ஒருவனைப் புகழ்ப் பெறச் செய்யும்.

இந்த எட்டுக் குணங்களையும் ஒருவன் பெற்றிருந்தால், அவனுக்கு ஆட்சியாளர் மூலம் கௌரவம் கிடைக்கும்.அந்தக் கௌரவம் மேற்கண்ட எட்டையும் விடச் சிறப்பாகும்.

இப்பொழுது  சொல்லும் எட்டுக் குணங்களைக் கடைப்பிடித்தால் அவை நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.அவற்றில் நான் கு  நன்மக்களுக்கு இயல்பாகவே அமைவது.மீதியை அவர்கள் முயற்சித்து பெறுகின்றனர்.

வேள்வி செய்தல்,தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம்,தருமம் செய்வதில் ஈடுபாடு ஆகிய நான்கும் நல்லவர்களிடம் இயல்பாகவே உள்ளன.சுயக்கட்டுப்பாடு,வாய்மை,நேர்மை, அகிம்சை ஆகிய நான்கு குணங்களையும் நல்லவர்கள் தம்முடையதாக்கிக் கொள்கின்றனர்.

வேள்வி, தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம், தவம், வாய்மை, மன்னிக்கும் பண்பு, கருணை, பிறர் பொருளை விரும்பாமை ஆகிய எட்டும் நாம் பின்பற்ற வேண்டிய நற்குணப் பாதைகள் என முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிறர் பாராட்டைப் பெற சிலர் மேற்சொன்ன எட்டில் வேள்வி,ஆன்மீக நாட்டம்,தான தருமம் தவம் ஆகிய நான்கையும் மேற்கொண்டிருக்கலாம்.ஆனால் வாய்மை, பிழையைப் பொறுத்தல்,கருணை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை ஆகிய நான்கும் உண்மையாகவே..இயல்பாகவே சான்றோர்களீடம் காணப்படும்

முதியோர் கலந்து கொள்ளாத ஆலோசனை நிகழ்ச்சியைக் கூட்டமென்றே கூறமுடியாது.நற்பண்புகளை எடுத்துரைக்காதவர்களை முதியோர்கள் என கூறமுடியாது.எடுத்துரைக்கப்படும் குணம் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்காவிட்டால் அது நற்பண்பு ஆகாது.வஞ்சகம் கலந்த ஒன்றை உண்மை எனக் கூறமுடியாது.

இனி வாய்மை, பிறர் பொருள் விரும்பாமை ஆகியபற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.....

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்

பிறருக்கு எம்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கிறவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவார்கள்


No comments:

Post a Comment