Sunday, December 27, 2015

32-பேச்சின் விளைவும்...மனிதரின் மூவகையும்



விதுரர் மேலும் கூறலானார்...

சூழ்நிலையை விளக்க ஒரு பழங்கதையைக் கூறுகிறேன்.இது ஒரு உரையாடல்.தத்தாத்திரேய முனிவருக்கும், சாத்தியர்கள் என்ற தேவ வையினருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் ஆகும் இது.

முன்னொருகாலத்தில் ஆத்திரேயர் என்ற மாமுனிவர் வாழ்ந்தார்.விவேகமுள்ளவர்.அவர் கடுமையான விரதங்களைக் கடைபிடித்தார்.அவர் பரமஹம்ச முறையிலான துறவி உடை அணிந்து செல்வார்.அவரிடம் சாத்தியர்கள் ஒரு விஷயம் கேட்டனர்

"மாமுனிவரே! சாத்தியர்கள் எனும் நாங்கள் தேவவகையைச் சேர்ந்தவர்கள்.தங்களை தரிசிப்பதில் மகிழ்ச்சி.ஆனால், தாங்கள் யாரென எங்களுக்குத் தெரியவில்லை.நீங்கள் வேதங்களை பயின்றவர்..பேரறிஞர் என்று நினைக்கிறோம்.நீங்கள் எங்களுக்கு ஞானத்தைப் போதித்தால் பேருதவியாய் இருக்கும்"

பரமஹம்சர் சொன்னார்.." தேவ புருஷர்களே! முதலில் நான் நன் குக்  கற்ற விஷயம் ஒன்றைக் கூறுகிறேன்.எந்த சூழ்நிலையிலும், மன உறுதி,மன அமைதி அல்லது மனக்கட்டுப்பாடு, வாய்மை,நற்பண்புகள் ஆகியவற்றைக் கைவிடக்கூடாது.இதயத்தை இறுக்கும் காமம், சினம் போன்ற முடிச்சுகளை நெகிழ்த்தி விட வேண்டும்.தன்னைப் பொறுத்தவரை இன்ப. துன்பங்கள் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும்.

நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினால் பதிலுக்கு நாமும் அவனைத் தூற்றக்கூடாது.இகழப்பட்டவர் பொறுமையாக இருந்தால் அவர் படும் வேதனை தீயைப்போல இகழ்ந்தவனை பற்றிக்கொள்ளும்.அதுமட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்டவனைப் போய்ச் சேர்ந்துவிடும்

நாம் யாரையும் ஏசக்கூடாது.பிறரை அவமதிக்கவும் கூடாது.நீசர்களை சார்ந்து வாழக்கூடாது.நன்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.திமிர் பிடித்து அலையக் கூடாது.கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடாது. கடுமையான புண்படுத்தும் சொற்களைப் பேசக்கூடாது.

கடுஞ்சொல் கூறுவதால் உடலுக்குக் கெடுதல் விளைகிறது.கடுஞ்சொற்கள் உடலில் உயிர்நிலைகளாக உள்ள உறுப்புகளை அரித்துவிடும்.எலும்புகள், இதயம், நுரையீரல் ஆகிய பகுதிகளையும் பாதித்துவிடும்.ஆகவே  அறநெறியைப் பின்பற்ற விரும்பிகிறவன்  பிறரைக் கீறுவது போன்ற கடுஞ்சொற்களை எப்போதும் கூறாமல் இருக்க வேண்டும்.

எவன் எரிந்து விழும் குணம் கொண்டுள்ளானோ, கல் போன்ற கடுமையான சுபாவம் கொண்டுள்ளானோ, சொல்லம்புகளால் பிறரது இதயத்தைத் துளைக்கின்றானோ அத்தகையவன் அதிர்ஷ்டம் கெட்டவனாக, மனிதர்களுள் கீழ்த்தரமானவனாக இருப்பான்.அவனது வாயில் எமன் குடிகொண்டிருப்பான்

ஒரு தீயவன், கூரானதும் நெருப்பு அல்லது சூடான சொல்லம்புகளால் ஒரு அறிஞனைத் தூற்றினால், அந்த அறிஞன் வேதனையடைந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப் பொறுமைக் காத்தால் திட்டியவன் செய்திருந்த புண்ணியங்களின் நற்பலனெல்லாம் அறிஞனிடம் வந்துவிடும்  என்பதை அறிஞன் உணர்ந்திருக்க வேண்டும்

நாம் துணியை எந்த நிறச் சாயத்தில் நனைக்கிறோமோ, அந்த நிறத்தில் துணி மாறும். அதுபோல நல்லவருடனோ, தீயவருடனோ,துறவியிடனோ, கள்வனுடனோ இப்படி யாருடன் பழகுகிறோமோ அவரது பாதிப்பால் அதற்குரிய குணமாறுதலைப் பெற்றுவிடுவோம்.

தன்னை பிறர் ஏசினாலும் எவன் ஒருவன் பிறரை இகழ்வதில்லையோ, தன் சார்பில் யாரும் பிறரை இகழ அனுமதிப்பதும் இல்லையோ அத்தகைய பொறுமைசாலி தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்பும்

தன்னை ஒருவன் தாக்கினாலும், எவன் அவனைத் திருப்பித் தாக்குவதில்லையோ....தன் சார்பில் யாரும் அவரைத் திருப்பித் தாக்க அனுமதிப்பதும் இல்லையோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குத் துளிக்கூட கெடுதல் செய்ய விரும்புவதில்லையோ அத்தகைய பொறுமைசாலியை தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்புவர்

பேசுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது.பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும்.அவ்வாறு நாம் பேசும் உண்மைபிறருக்கு நன்மை செய்வதாகவும் அமைய வேண்டும்.நாம் நன்மையளிக்கும் வகையில் பேசுவது அறநெறிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்

ஒரு மனிதன் யாருடனெல்லாம் நெருங்கிப் பழகிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான்.அல்லது யாரைச் சார்ந்து பணி புரிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான் அல்லது யாரைப்போல ஆகவேண்டும் என மனதில் நினைக்கிறானோ அவரைப்போல ஓரளவாகிறான்

ஒருவன் எதை எதைத் தவிர்த்து விடுகிறானோ அதனதன் பின் விளைவுகளிலிருந்தும் தப்பித்து விடுகிறான்.எல்லாவற்றையும் தவிர்ப்பவன் வாழ்வில் சிறிதளவு கூட துன்பம் ஏற்படுவதில்லை

மேற்கண்டவாறு பற்றுகளை விட்டவனை யாரும் வெல்ல முடியாது.அவனும் யாரையும் வெல்ல விரும்புவதில்லை.அவன் யாருக்கும் எதிரியில்லை.அவன் யாரையும் பழி வாங்குவதில்லை.பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிற்குள்ளாகாது அவன் அமைதியாக இருப்பான்.அவன் ஒன்றை இன்பம் என எண்ணிக் குதிப்பதில்லை.மற்றதைத் துன்பம் என எண்ணி துவண்டும்போவதில்லை

மனிதர்களில் முதல்தர மனிதன் உலகில் அனைவரும்,அனைத்தும் நலமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான்.அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான்.அவன் உண்மையே பேசுவான்.கனிவுடன் பழகுவான்.உடல்,மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்

நடுத்தர மனிதன்   வாக்குறுதிகள் கொடுப்பான்.அவற்றை நிறைவேற்றியும் தருவான்.எதையும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுத்து விடுவான்.பிறரிடம் குற்றம் கண்டுபித்தவாரே இருப்பான்.

கீழ்த்தர மனிதர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள்.எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள்.பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள்.பயங்கரமாய்க் கோபப்படுவார்கள்.நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள்.அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர்.சில சமயங்களில் நல்லவர்களைப் போலப்பழகினாலும் கொடிய மனம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

கீழ்த்தரமானவர், பெரியவர்கள் கூறும்  நல்ல ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.அந்த ஆலோசனைகளால் நன்மை விளையும் என நம்பமாட்டார்கள்.தன்னையே சந்தேகப்படுபவர்களாக இருப்பார்கள்.தன் நண்பர்களையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புபவன் மேற்கண்ட மூவகை மனிதரில் உத்தமமான மனிதர்களையே அணுக வேண்டும்.தவிர்க்க இயலா நிலையில் நடுத்தரமானவர்களை அணுகலாம்.ஆனால் ஒருபோதும் கீழ்த்தரமக்களை சார்ந்திருக்கக் கூடாது

ஒருவன் தன் வலிமையைத் தவறாகப் பயன்படுத்தியோ,விடாமுயற்சியுடன் உழைத்தோ, அறிவையும், ஆண்மையையும்கொண்டோ செல்வம் சம்பாதிக்கலாம்.ஆனால் இவற்றால் மட்டுமே அவன் நற்பெயரோ, உயர்குடியில் பிறந்தோரின் நற்பண்பையையோ அடையமுடியாது.


No comments:

Post a Comment