Wednesday, December 30, 2015

34-நட்பு




யாருடைய கோபம் நம்மை அச்சப்படுத்துகிறதோ...அவர் நண்பர் அல்ல.அச்சத்தாலோ அல்லது தப்பாக நினைக்கக்கூடாது என்றோ யாருக்கு நாம் பணிவிடை செய்ய நேரிடுகிறதோ..அவர் நம் நண்பர் அல்ல.தந்தையிடம் பேசுவது போல நாம் யாரை நம்பிக்கையுடன் அணுகி பிரச்னைகளுக்கு ஆறுதல் பெறுகிறோமோ அவரே நம் நண்பர் ஆவார்.மற்றவர்கள் அவ்வப்போது தலைகாட்டுபவர்கள் ஆவார்கள்.அவ்வளவே!

நமக்கு உறவாக இல்லாவிடினும்..நட்போடு பழகினால் அவர் நமக்கு உறவுபோலத்தான்.அவரே நம் நண்பர்.அவரே நமக்கு உதவக் கூடியவர்.அவரே பிரச்னைகளின் போது நமக்கு அடைக்கலமும், ஆறுதலும் தருபவராக இருப்பார்

சஞ்சலமான மனதினனுக்கும், விவேகமும் அனுபவமும் உள்ள பெரியோர்களுக்கு பணிவிடை செய்யாதவனுக்கும், பதற்றப்பட வேண்டியவனுக்கும் அல்லது ஏமாற்றுபவனுக்கும் ஒரு போதும் நிரந்தர நண்பர்கள் இருக்க மாட்டார்கள்

ஏரி வறண்டு போனால் அன்னப்பறவைகள் வெளியேறி விடுவது போல..ஒருவன் சஞ்சலமான மனதினனாகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவனாகவும், புலன் ஆசைகளுக்கு வசப்பட்டவனாகவும் இருந்தால் அவனுடைய செல்வமும், வசதிகளும் அவனை விட்டு நீங்கி விடும்

கொடியவர்கள் திடீரென சீறி விழுவார்கள்.அதுபோல திடீரென காரணமில்லாமலேயே மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அவர்கள் குணம் ஆகாயத்தின் தோற்றம் போல கணம் தோறும் மாறியபடியே இருக்கும் (வானம் மேகங்களால் திடீரென இருளும்..பின் மேகங்கள் விலக திடீரென வெளிச்சமாகும்)

சிலர் தங்கள் நண்பர்களால் நன்கு வரவேற்கப்பட்டு, உபசரிக்கப்பட்டு நன்மைகள் பல பெற்றாலும், நன்றியுணர்வு அற்றவர்களாக இருப்பர்.அத்தகையோர் இறந்த பின்..அவர்களது உடலை நரி, கழுகு போன்றவை கூடத் தொடாது

ஒருவன் பணம் படைத்தவனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி உதவி தேவைப்படும் போது நண்பர்களை அணுக வேண்டும்.அப்படி ஒருபோதும் உதவி கோராவிடின் நம் நண்பர்கள் எனப்படுபவர்கள் உண்மையானவர்களா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது

கவலையால் அழகு குலையும்.உடல் வலிமை குறையும், அன்பு மழுங்கும். கவலை காரணமாக மனிதன் பல நோய்களுக்கு ஆளாகிறான்

கவலைப்படுவதால் மட்டும் நாம் விரும்பும் எதையும் பெற முடியாது.மனதில் துன்பம் பரவி உடலும் கஷ்டத்திற்குள்ளாகிறது.இது கண்டு நம் எதிரிகள் மகிழ்வர்.எனவே கவலையால் மனம் தளரக்கூடாது

மனிதன் இறக்கிறான்.மீண்டும் பிறக்கிறான்..ஏழையாகிறான்.மீண்டும் செல்வச் சிறப்பு பெறுகிறான்.பிச்சை எடுக்கிறான்..பின்னர் வாரி வழங்குகிறான்.இன்னொருவரின் மரணத்திற்காக சோகத்தை வெளிப்படுத்துகிறான்.வேறொரு சமயம் அவன் மரணத்திற்காக மற்றவர்கள் விசனப்படுகின்றனர்

இன்பம்-துன்பம், தோற்றம்- அழிவு, வளமை- வறுமை, லாபம்- நஷ்டம், சாவு- பிறப்பு, என்ற இரட்டை நிலைகள் எல்லோருக்கம் மாறி மாறி, மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.எனவே, நாம் நமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு சமயம் கூத்தாடாமலும் மறுசமயம் புலம்பாமலும் அமைதியாகவே இருக்க வேண்டும்

கண், காது, மூக்கு,நாக்கு,சருமம். மனம் என ஆறும் எப்போதும் சஞ்சலத்துடனே உள்ளன. பானையின் எந்தப் பகுதி ஓட்டையானாலும் ஊற்றப்படும் தண்ணீர் வெளியேறுவது போல நம்புலன்கள் ஏதேனும் ஒன்று தவறாக இயங்கினாலும் அதன் வழியே நம் அறிவு வெளியேறிவிடும்

என்று விதுரர் கூறினார்.

திருதராஷ்டிரர் சோகமாக விதுரரிடம்,"துரியோதனனைச் செல்லமாக வளர்த்துவிட்டேன்.அது தவறு.உடலுக்குள் நெருப்பை மறைத்துவைக்க முயன்றது போல ஆகிவிட்டது.அந்த நெருப்பு உடலை எரித்து..அதனுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றவற்றையும் அழித்துவிடும்.துரியோதனன் தானும் அழிவதுடன், என் மற்ற மகன் களையும்  கூட அழித்துவிடுவான் போல இருக்கிறதே! இச் சூழ்நிலைத் தொடர்ந்து அச்சுறுத்துவதாகவே உள்ளது.இதனால் மனம் குழம்பிக் கிடக்கிறது.விதுரரே! எல்லா கவலைகளில் இருந்து  விடுபட வழி என்ன?" என்றார்

விதுரர் கூறலானார், "தூய மன்னரே! அறநெறி அறிந்திருத்தல், கடமையைத் தவம் போலச் செய்து வருதல், புலன்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்,பிறர் செல்வத்திற்கு ஆசைப்பாடாதிருத்தல் ஆகியவை மூலம் மனிதர்கள் மன அமைதியைப் பெற முடியும்

அறிவின் மூலம் அச்சத்தை விரட்டலாம்.கடமையைத் தவம் போலச் செய்தால் பெரிய சாதனைகள் புரியலாம்.குருவைச் சார்ந்திருந்து சேவை புரிந்தால் ஆத்ம ஞானம் பெறலாம்.புலன்களை வசப்படுத்தினால் அமைதியாக வாழலாம்

முக்தி பெற விரும்புபவர்கள், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு அற்றவர்களாகவும், பற்றுகளை குறைத்துக் கொண்டும் வாழ வேண்டும்.தான தருமம் செய்வதால் விளையக்கூடிய நல்ல பலன் களுக்காக ஏங்கக் கூடாது.வேதங்கள் கூறும் சடங்குகளைச் செய்வதால் கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகளுக்காகவும் ஆசைப்படக் கூடாது

சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்து முறையாக பயில்வனும்,நியாயமான காரணத்திற்காக வீரமாக போராடுபவனும், எப்போதும் நற்செயல்களையே செய்பவனும் கடமைகளைத் தவம் போல உறுதியாகச் செய்பவனும் தங்கள் முயற்சியின் முடிவில் வளமாக வாழ்வார்கள்

இனி வள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளைஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம் புலன் களையும் அடக்கியாளும் உறுதி காலமெல்லாம் வாழ்க்கைக்கு அரணாக அமையும்


No comments:

Post a Comment