Saturday, October 31, 2015

23- செல்வம்



செல்வந்தர் உணவில் இறைச்சி அதிகம் இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் உணவு நெய்யும், அதனால் தயாரான உணவு வகைகளும் இருக்கும்.ஆனால் ஏழைகள் உணவோ எண்ணெயில் ஆகியவனவாகவே இருக்கும்

ஏழைகளுக்கு எப்போதும் நன்கு பசி எடுத்து, ருசியைத் தூண்டுகிறது. . ஆதலால், அவர்கள் உணவை ரசித்தும்,ஆர்வத்துடனும்,முழுமையாகவும் உண்கின்றனர்.ஆனால், பணக்காரர்களோ பசித்து உண்ணுவதில்லை.ஆகவே, முழுமையாக அனுபவித்து உண்ணும் வாய்ப்பு அவர்களுக்கு அரிதாகும்.

ஏழைகளுக்கு நல்ல சீரண சக்தி உண்டு..மரத்துண்டைக் கூட அவர்களால் செரிக்க முடியும்.ஆனால், பணக்காரனோ, எதிர்ப்பு சக்திக் குறைவால் சரியாகச் சாப்பிட இயலாது தவிப்பர்

அச்சம் மூன்று வகையாகும்.சமூகத்தில், அடித்தள மக்கள் உயிர் வாழ வேலையில்லாமல் போய்விடுமோ என அஞ்சுகின்றனர்.நடுத்தர மக்கள் (வசதி வருமுன்)சாவு வந்துவிடுமோ  என அஞ்சுகின்றனர்.உயர் வர்க்கத்தினர் தங்களுக்கு அவமரியாதையோ, அவமானமோ ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றனர்

குடிப்பழக்கத்தால் ஏற்படும் போதையைவிட, செல்வ மிகுதியால் ஏற்படும் போதை ஆபத்தானது.செல்வத்தால் ஏற்படும் போதைக்கொண்டவன் பேரழிவு ஏற்பட்ட பின்னரே சுயநினைவு அடைகிறான்.(பணத்திமிர் செல்வம் அழியும் வரை நீடிக்கும்)



22- நன்னடத்தை.....



படிப்பதால் வரும் கர்வம், செல்வ வசதியால் வரும் கர்வம், உயர் குலத்தில் பிறந்ததால் வரும் கர்வம் இம்மூன்று வகை கர்வங்களும் சாதாரண மனிதனைத் திமிராக நடந்து கொள்ள வைக்கும்.ஆனால் நற்பண்புகளைக் கொண்டவன் இந்த மூன்று வகைக் கர்வங்களையும் தன் முன்னேற்றத்திற்குத் தடையாகக் கருதுவான்

நல்லவர்களும், எக்காலத்திலாவது, எதற்காகவாவது தீயவர்களிடம் உதவி கேட்க நேரிடலாம்.உடன் தீயவர்கள் தாங்கள் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என கர்வம் கொள்வர்

உத்தமர்களிடம் அனைவரும் அடைக்கலமாகலாம்.சுயக்கட்டுப்பாடும், நற்பண்புகளும் உடையவர்களும் மட்டுமல்ல,தீயவர்களும் அவர்களை அடைந்து ஆதரவும், பாதுகாப்பும் பெறலாம்.ஆனால் தீயவர்கள் நல்லவர்களுக்கு புகலிடம் அளிப்பவராக விளங்க முடியாது.(தீயவர்களையும் நல்லவன் கைவிட ,மாட்டான்.ஆனால் தீயவன், நல்லவர்களுக்கு உதவவும் மாட்டான்.ஆபத்தையும் ஏற்படுத்துவான்)

சிறப்பாக ஆடை அணிபவன் அதற்கு மதிப்பவர்களைக் கவர்ந்து விடுவான்.காலநடை செல்வம் உள்ளவன் உணவு விஷயத்திலான விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்.வாகன வசதியைக் கொண்டவன் சாலையை விரைவில் கடக்கும் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வான்.ஆனால், நன்னடத்தை உள்ள மனிதன் தன் நற்பண்புகள் மூலம் எல்லோரையும் கவர்ந்து அவர்கள் மூலம் தன் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்

ஒருவன் நீண்ட ஆயுள், அதிக செல்வம், அதிக உறவினர் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கலாம்.ஆனால், வாழ்க்கையில் நல்ல நடத்தை உயிருக்கு சமமானது.நல்ல நடத்தி இல்லாதவன் ஒருவன் வாழ்க்கையில் நல்ல பயன் பெற முடியாது. 

Thursday, October 29, 2015

21- நெகிழ்தல்



எளிதில் பாலைக் கறக்க விடாத முரட்டுப் பசு முரட்டுத்தனமாக நடத்தப்படும்.எளிதில் பால் கறக்க உதவும் பசு நேசிக்கப்படும்.அதை மக்கள் துன்புறுத்த மாட்டார்கள்.(முதலில் எதையாவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை வரின்..முரண்டுப் பிடிக்காதுக் கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்)

சூடு படுத்தாமல் வளையக் கூடியதை சூடேற்ற வேண்டிய அவசியமில்லை.உதாரணமாக மரத்தின் கிளைகளைச் சொல்லலாம். அவை தாமாகவே வளையக் கூடியவை.(அறிஞர்களும் தங்கள் செல்வாக்குச் செல்லாத இடத்தில் வளைந்து கொடுப்பர்)

அறிஞர் எனப்படுபவர் குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னைவிட வலியவர் முன்னால் வளைந்துக் கொடுப்பர்.(இதைத் தாழ்வாக எண்ணிவிடக் கூடாது.பிறரின் வலிமை அறிந்து நடப்பது விவேகமாகும்)

கால்நடைகள் மேயும் புல் செழிக்க மழையை நம்பியுள்ளன.அரசன், அமைச்சர்களின் ஆலோசனையைச் சார்ந்துள்ளான்.மனைவி, கணவனை நம்பி வாழ்கிறாள்.அந்தணர்கள் வேதங்களை வழிகாட்டியாகக் கொண்டு பணி செய்கின்றனர்

நாம் சத்தியத்தைப் பின் பற்றினால் நம் நற்பண்புகள் காப்பாற்றப் படும்.நாம் அறிவைத் தொடர்ந்து பயன் படுத்தினால் அது குறையாமல் நம்மிடம் நிலைத்து இருக்கும்.நாம் உடலைத் தேய்த்துக் குளித்து தூய்மையாக வைத்திருந்தால் அழகுடன் விளங்குவோம்.நம்  நடத்தை நன்றாக இருந்தால் நம் பரம்பரை நிலைபெற்று வளரும்

தானியங்கள், அவ்வப்போது எவ்வளவு உள்ளன என்பதை அவ்வப்போது  பார்த்தால் அவற்றிற்கு பஞ்சம் ஏற்படாது.குதிரைகளை  லாயத்திலேயே வைத்திருந்தால் நோயுறும்.அவ்வப்போது அவற்றை ஓட்டிச் செல்ல வேண்டும்.பசுக்களை நேரடியாகக் கவனித்து வந்தால் நல்ல அதிகப்படியான பால் தரும்.பெண்கள் உடல் தெரியுமாறு இருக்கக் கூடாது.வறுமையில் உள்ளோரும் கந்தைத் துணியிலாவது உடலை மறைக்க வேண்டும்

ஒருவன் உயர் பரம்பரையைச் சார்ந்தவானாக இருந்தாலும், ஒழுக்கத்தில் குறையுடையவன் ஆனால் அவன் மரியாதைக்குரியவன் அல்ல.அதுபோன்று தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் ஆனாலும் ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை மதிக்க வேண்டும்.(குலம் முக்கியமில்லை..குணமே முக்கியம்)

பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகௌரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை,அதிர்ஷ்டம், பட்டம், பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு பொறாமைப்பட்டால் நாம் வாழ்நாள் முழுதும் தீராத நோயாளியைப் போல அவதிப்பட நேரிடும்.

செய்யக் கூடாததாகிய காரியத்திற்கு அஞ்சுபவன், கட்டாயாகச் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாமல் விட அஞ்சுபவன், குறிப்பிட்ட காலத்திற்கு முன் ரகசியத்தை வெளியிட அஞ்சுபவன் இம்மூவகையினரும் ஒரு போதும் போதைதரும் எப்பொருளையும்  பயன்படுத்தக் கூடாது.(போதை, செய்யக்கூடாததை செய்யவைக்கும்.செய்ய வேண்டியதை  மறக்கச் செய்யும்.ரகசியம் அவனால் காப்பாற்றப் பட முடியாது)

Wednesday, October 28, 2015

20-ஆட்சியாளர்



பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய விரும்ப மாட்டார்கள்.அதுபோல குடிமக்களும் தங்களது அரசன் (ஆட்சியாளன்) பயனற்ற முயற்சியில் ஈடுபடுபவனாகவோ, பயனுள்ள செயல்களை தட்டிக் கழிப்பவனாகவோ இருந்தால் அவரை தங்களது தலைவனாக ஏற்க மாட்டார்கள்.

பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய மாட்டார்கள்.அதுபோல குடிமக்கள் தங்கள் அரசனுடைய ஆதரவால் அல்லது மகிழ்ச்சியால் ஒரு பயனும் இல்லையென்றாலும்,அவனது கோபத்தால் ஒரு ஆபத்தும் இல்லையென்றாலும் அவனைத் தலைவனாக மதித்து ஏற்கமாட்டார்கள்

சில விஷயங்களுக்கு அதிக முயற்சி தேவைப்படாது.ஆனால், அதனால் பெரிய பயன்கள் ஏற்படக் கூடும்.அத்தகையவற்றை அறிவாளி தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பான்.

ஒரு அரசன் (ஆட்சியாளர்) வெளிப்பார்வைக்கு ஒன்றும் அறியாதவன் போல அமைதியாகத் தெரியலாம்.ஆனால் அவன் தன்னைச் சுற்றி நடைபெறும் எல்லா விஷயங்களையும் தெளிவாகவும், கூர்மையாகவும் கவனித்துக் கொண்டிருக்கக் கூடும். அத்தகையவரிடம் குடிமக்களும் விசுவாசமாக இருப்பர்

மரமானது பூக்கள் நிறைந்ததாக இருப்பினும் அதிகம் பழம் தராததாக இருக்க வேண்டும்.பழம் தரும் மரமானால், எளிதில் ஏறிப் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருக்க வேண்டும்.அதன் பழங்கள் அரைகுறையாக பழுத்திருந்தாலும், முழுதாக பழுத்தது போல இருக்க வேண்டும்,இப்படியெல்லாம் இல்லாமல் வாடிய மரம் போல இருந்தால் மக்கள் அது பயனற்றது என வெட்டி வீழ்த்தி விடுவர்.

(ஆட்சியாளர் பழக இனிமையாக இருக்க வேண்டும்.அதே நேரம் வாரி வழங்குபவராக இருக்கக் கூடாது..எல்லோராலும் அணுகப்படக் கூடியவராய் இருக்கக் கூடாது.)

அரசன் (ஆட்சியாளர்) தன் பார்வையாலும், மனதாலும், பேச்சாலும், செயலாலும் உலகத்திற்கு மனநிறைவை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். அத்தகையோரை குடிமக்கள் வழிபடுவர்.

ஒரு அரசன் கடல்வரை பரவியுள்ள நிலத்திற்கு முழுதும் உரிமையாளனாக இருக்கலாம்.ஆனால், மக்கள் அவனுக்குப் பயப்படும் நிலையில் இருந்தால், அவன் அரசு புரிய தகுதியற்றவன் ஆவான்.மக்கள் அவனை விரைவில் கைவிட்டு விடுவர்,(மக்களை பயமுறுத்தி ஆட்சியாளர் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது)

அரசருக்கு ஆட்சி செய்யும் உரிமை பரம்பரை சொத்தாய் கிடைத்திருக்கலாம்.அதற்காக அவன் அநியாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதில்லை.அவன் தீய செயல்களைச் செய்தால்...காற்று மேகங்களை சிதறடிப்பது போல நாடு சிதறுண்டு போகக் காரணமாவான்.

பண்டைக் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் அறநெறி வழிப்படி அரசன் நல்லாட்சி செய்ய வேண்டும்.அத்தகையவனுடைய நாடு செழிப்புடன் விளங்கும்.அந்நாட்டில் மகிழ்ச்சி பொங்கும்

இதற்கு மாறாக அரசன் தன் நற்பண்புகளை விட்டு, அநியாய நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவனது நாட்டில் வளம், வசதிகள் குறையும்.நெருப்பினால் சருமம் சுருங்கி விடுவதுபோல அவனது நாட்டு எல்லையும் சுருங்கி விடும்.

அரசர்கள் எதிரி நாடுகளை வென்று தாக்க கடுமையாக முயற்சிப்பர்.அதுபோலவே அவர்கள் கடும் முயற்சி செய்து தங்கள் நாட்டையும் பாதுகாத்து செழிப்படையச் செய்ய வேண்டும்.

ஆட்சியை நேர்மையான முறையில் முயற்சித்து அடைய வேண்டும்.ஆட்சியைப் பிடித்த பின்னர் நேர்மையாக ஆள வேண்டும்.நேர்மையாகக் கிடைக்கின்ற ஆட்சியை ஆட்சியாளர் கைவிட மாட்டார்கள்.அந்த அரசாட்சி வாய்ப்பும் அவர்களைக் கைவிடாது.

எங்கும் எதிலும் நாம் சத்தியத்தைத் தேடி அறிய வேண்டும்.பாறையிலிருந்து தங்கத்தைச் சுரண்டி எடுப்பது போல, சத்தியத்தை அறிய முயற்சிக்க வேண்டும்.உளறுகின்ற பைத்தியம், மழலைப் பேசும் குழந்தை ஆகியோரிடம் கூட விஷயங்கள் இருக்கலாம்.ஆகவே யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது

அறுவடை நேரத்தில், கொஞ்சம் தானியங்கள் வயலிலேயே சிதறிப் போகும்.அதை சேகரித்து, உணவாக்கி சிலர் விரத வாழ்க்கை நடத்து கின்றனர்.அதுபோன்ற சான்றோர்களின், நன்மொழிகளும்,அரிய செயல்களின் விவரங்களும் பல்வேறு இடங்களில் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றையெல்லாம் சேகரித்து அவற்றின் அடிப்படையில் வாழ வேண்டும்

பசுக்கள் மோப்ப சக்தி மூலம் தொலைவில் உள்ளதையும் அறிந்து கொள்கின்றன. அந்தணர்கள் வேதம் மூலம் கண்ணுக்குப் புலப்படாததை அறிகின்றனர்.அரசர்கள் ஒற்றர்கள் மூலம் தங்கள் பார்வைக்கு அப்பால் நடக்கும் விஷயங்களையும் அறிகின்றன.சாதாரண மக்கள் தங்கள் படுவதைக் கண்டு திருப்தியடைகின்றனர்.

Sunday, October 25, 2015

19-காலம் கனியும் வரை காத்திருத்தல்



அறிவாளி எனப்படுபவன் தான் செய்யும் செயலுடன் தொடர்புடைய சாதக, பாதக அம்சங்களையும், அதனால் ஏற்படும் சாதக, பாதக விளைவுகளையும், மேலும் அச்செயலை நிறைவேற்ற தன்னிடம் ஆற்றல் உள்ளதா? அது தன்னை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.பிறகே அச்செயலில் இறங்க வேண்டும்.மேற்கண்டவை அவனுக்கு சாதகமாக இல்லாவிடில் அப்பணீயை எடுத்துக் கொள்ளக் கூடாது

அரசன் (ஆட்சி செய்பவன்) தன் தலைநகர், தன் ஆட்சி ஆகியவற்றின் பாதுகாப்புத் த்ன்மை, நிதி நிலமை, தன் நாட்டு நிலப்பகுதியில் உள்ள நிறை, குறை, த்னது படை ஆகியவற்றின் அதுக பட்ச அளவு ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்,இவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளாதவர் நீண்ட காலம் ஆட்சியில் நிலைக்கமுடியாது.

அரசன், (ஆட்சி புரிபவன்) தன்னிடம் மேற்கண்டவை சாஸ்திரங்களில் கூறப்பட்ட அளவு போதுமானதா என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.அத்துடன், அவர் நற்பண்பு கொண்டவராயும், பொருளாதார அறிவு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட ஆட்சியாளரின் ஆட்சியை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் ஆவார்.

ஒரு நாட்டை வென்று விட்டோம் (அல்லது ஆட்சியைப் பிடித்து விட்டோம்) என்று அலட்சியமாக ஆட்சி செய்வது பெரிதல்ல.அழகான உடலையும் முதுமை காலப்போக்கில் சிதைப்பது போல, ஆட்சி தன் வசம் உள்ளது என திமிருடன் இருந்தால் அந்த ஆட்சி அழிந்து போகச் செய்து விடும்.

இரைக்கு ஆசைப்பட்டு மீன், தூண்டிலிலுள்ள புழுவுடன் இரும்பு முள்ளையும் சேர்த்து இழுத்து இறக்கிறது.பின் விளைவுகளைப் பற்றி அது யோசிப்பது இல்லை.(நாமும் சாதக, பாதகங்களை பற்றி யோசிக்காது, ஒரு செயலில் இறங்கக் கூடாது.

வளமாக இருக்க எண்ணுபவன், தனக்கு ஏற்ற உணவையே, தன்னால் சாப்பிடக்கூடிய உணவையே, சாப்பிட்டால் செரிக்கக் கூடிய உணவையே, செரித்தால் நன்மை தரக்கூடிய உணவையே உண்ண வேண்டும்.(நம் உடலுக்கு ஏற்ற உணவை உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.எல்லை மீறினால் நோய்தான்)

பழுக்காத கனிகளை பறித்து நாம் சாறு பிழிய முயன்றால் தோல்வியே ஏற்படும்.பாதி பழுத்த அக்கனியில் உள்ள விதைகளும் பலனின்றி போகும்.(எதையும் உரிய காலத்தில் செய்ய வேண்டும்).சரியான பழத்தைப் பறித்தால் அதில் சுவையான சாறு இருக்கும்.அதிலுள்ள விதைகளும் பூமியில் விழுந்து மீண்டும் மரமாகும்.அதுவே பிறகு பலருக்குக் கூடுதலான பழ்னகளை வழங்கும்.



தேனீ மலர்களைச் சேதப்படுத்தாமல் தனக்குத் தேவையான அளவு தேனை எடுத்து சேகரிக்கும்.அதுபோல அரசனும் (ஆட்சியாளரும்) மக்களைப் பிழியாமல் அளவிற்குட்பட்டு மென்மையாக வரி வசூலிக்க வேண்டும்

தோட்டக்காரன் மலர்ந்த பூக்களை, செடிகளை சேதப்படுத்தாமல் பறிப்பான்.விறகு வெட்டியோ விறகு தயாரிக்க மரங்களை வேரோடு வெட்டுவான்.(அரசன் வரி விதிப்பு என்ற பெயரில் மக்களை ஏழைகள் ஆக்கிவிடாது, வசதியுள்ளவர்களிடம் மட்டும் வரி வசூலிக்க முயற்சிக்க வேண்டும்)

ஒரு செயலைச் செய்வதால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என அறிந்து கொள்ள வேண்டும்.அதை செய்யாவிடினும் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் உணர வேண்டும்.இரண்டையும் ஒப்பிட்டுச் சிந்தித்தப் பிறகே நம் செயல்களை செய்ய வேண்டும்.அச் செயலால் பாதகம் என்றால் செய்யக்கூடாது

செயல்கள் பலவகையாகும்.சில செயல்களில் ஈடுபடக்கூடாது.சில செயல்களை முழுமையாக நம்மால் செய்து முடிக்க இயலாது.பலனில்லா அச்செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு கடுமையாக உழைப்பது வீணாகும்

Tuesday, October 20, 2015

18-விதுரரின் பதில்



விதுரர் பதில் கூறலானார்-

ஒருவர் நம்மைக் கேட்டுக் கொள்ளாதவரை நாம் அவருக்கு ஆலோசனை சொல்லக் கூடாது.நல்லதோ, கெட்டதோ, பிரியமானதோ,பிரியமற்றதோ எவ்வகை ஆலோசனையும் சொல்லக்கூடாது.புத்திமதி கூறினால் நம் மரியாதை கெட்டுவிடும்

நீங்கள் என்னை ஆலோசனைக் கேட்டதால்...கௌரவர்களுக்கு என்ன நன்மை பயக்குமோ அதைச் சொல்கிறேன்.இது, மகிழ்ச்சியளிப்பதாகவும், அறநெறிப்படியும் இருக்கும்.

மோசமான செயல்களும், தீய வழிமுறைகளும், அதனால் செய்யப்படும் செயல்களும் முதலில் வெற்றியைத் தருவது போலத் தெரியும்,அதை நம்பக்கூடாது.(சகுனியின் சூதாட்ட வெற்றியை மறைமுகமாகச் சொன்னதாகக் கொள்ளலாம்)

அதே சமயம் மறுபுறம், ஒழுங்காக, கவனமாக உழைத்து, நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றினாலும் அவை நம் முயற்சிக் கேற்ற பலன் தராதிருக்கலாம்.அறிஞன் ஒருவன் இந்த முறன்பாட்டைக் கண்டு மனமொடியக் கூடாது.நாம் விரும்பும் செயல்கள் வேறு பல நபர்களுடன் தொடர்புடையதாக இருப்பின்...நாம் அவற்றை சரியாகக் கவனித்து மதிப்பிட வேண்டும்.நாம் தொடங்கவுள்ள வேலையின் நன்மை, தீமைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.அதன் பின்னரே வேலையைத் தொடங்க வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டு எந்த வேலையையும் மேற்கொள்ளக் கூடாது.

)

Monday, October 19, 2015

17- திருதிராட்டிரர் மேலும் கேட்டார்



விதுரன் கூறியவற்றைக் கேட்ட திருதிராட்டிரரின் மனம் சமாதானம் அடையவில்லை.சஞ்சயன்மூலம் தருமர் அனுப்பியுள்ள செய்தி என்னவாய் இருக்கும் எனத் தெரியாது தவித்தார்.அச் செய்தியை ஓரளவு விதுரரால் யூகிக்கமுடியும் என எண்ணி விதுரரிடம் சொன்னார்.

:என் உடல் கவலைக் காரணமாக தகிக்கிறது.தூக்கம் வராமல் அவதிப்படும் எனக்கு நன்மை ஏற்பட ஒரு நல்வழி கூறுவாயாக1 நீ சாஸ்திரங்கள்,புனித நூல்களைக் கற்றவன்.உலகியல் நூல்களையும் முற்றும் பயின்றவன்.அப்படிப்பட்ட நிபுணன் நம்மிடையே நீ மட்டுமே!

ஆகவே, உன் விவேகத்தைப் பயன்படுத்தி எனக்குச் சரியான ஆலோசனை வழங்கு..அது, தருமபுத்திரர்களுக்கும்,கௌரவர்களுக்கும் திருப்தியும், நன்மையும் தருவதாய் இருக்க வேண்டும்.

நான் ஏற்கனவே பாண்டவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள பாவங்களை சுமந்துள்ளேன்.எதிர்காலத்தில் நடைபெறும் செயல்களும் பாவமயமாகவே இருக்கப் போகிறதே என அஞ்சுகிறேன்.இந்நிலையில் உன் ஆலோசனை அவசியம்.தருமன் ,சஞ்சயன் மூலம் அனுப்பியுள்ள செய்தி என்னவாக இருக்கும்?என யூகித்துச் சொல்" என்றார்.

16- எவன் ஒருவன்



எவன் ஒருவன் காமத்தையும்,கோபத்தையும் விட்டொழிக்கிறானோ, தகுதியுள்ளவர்களுக்கு நிதி உதவி செய்கிறானோ, நல்லது, கெட்டதை பிரித்துணரும் விவேகியாக உள்ளானோ, அறிஞனாக விளங்குகிறானோ, சுறு சுறுப்பாய் செயல்படுகிறானோ அவனைத் தலைவனாக உலகம் கருதும்.

எவன் ஒருவன், மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற்று விடுகிறானோ, குற்றவாளிக்கு பொருத்தமான தண்டனையை வழங்குகிறானோ, தண்டனையின் அளவைச் சரியாகத் தெரிந்து வைத்துள்ளானோ, எந்த சமயத்தில் கருணையைக் காட்டி மன்னிக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளானோ..அவனை செல்வம், செல்வாக்குத் தேடி வரும்

எவன், தன் எதிரி பலகீனமாய் இருந்தாலும், அவனிடமும் எச்சரிக்கையாய் உள்ளானோ, சரியான சந்தர்ப்பம் வரும்வரையிலும் எதிரியை அனுசரித்துச் செல்கிறானோ, தன்னைவிட வலிமையானவருடன் மோதாமல் இருக்கிறானோ, சரியான நேரம் தன் ஆற்றலை வெளிப்படுத்தித் தாக்குகிறானோ அவனே அறிவாளியும், வீரனும் ஆவான்

எவன் துன்பத்தையும், எதிர்ப்புகளையும் கண்டு வருந்துவதில்லையோ,, எவன் தேடிச்சென்று, கவனமாயும், கடுமையாகவும் உழைக்கின்றானோ, சூழ்நிலையைக் கருதி துன்பங்களைப் பொறுத்துக் கொள்கின்றானோ..அவனே மனிதர்களில் முதன்மையானவன்.அவன் அனைத்து எதிரிகளையும் வென்றிடுவான்.

எவன் காரணமின்றி வீட்டை விட்டு வெளியே சென்று வாழ்வதில்லையோ,தீயவர்களுடன் பழகுவதில்லையோ, பிறர் மனைவியைக் கெடுதல் செய்வதில்லையோ, கர்வப்படுவது,கபடமாக நடந்துக் கொள்வது..பிறரை நிந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லையோ, குடிப்பழக்கம் வைத்துக் கொள்வதில்லையோ அவன் மகிழ்ச்சியாக விலங்குவான்.

எவன், அறம்,பொருள்,இன்பம் அடைய அவசரப்பட்டுச் செயற்படுவது இல்லையோ, எப்போதும் உண்மை பேசுகிறானோ,தன் நண்பனுக்காகவும் பிறரிடம் தகராறு செய்வதை விரும்பவில்லையோ, மற்றவர்கள் மதிக்காவிடினும் கோபப்படுவது இல்லையோ அவனே அறிவாளி ஆவான்.

எவன் யாரிடமும் பொறாமை கொள்வதில்லையோ, எல்லோரிடமும் கனிவாக இருக்கிறானோ, தனது பலக்குறைவை உணர்ந்து யாரையும் எதிர்க்காமல் உள்ளானோ, திமிராகப் பேசி பண்பை மீறாதிருக்கின்றானோ, தன்னோடு தகராறு செய்பவர்களை மன்னித்து விடுகிறானோ ..அவனே புகழ் பெறுவான்

எவன் திமிருடன் ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்வது இல்லையோ, பிறரை இகழ்ந்து, தன்னை மெச்சிக்கொள்வது இல்லையோ, உணர்ச்சி வசப்பட்டப் போதும் தன்னை மறந்து கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவன் எல்லோராலும் விரும்பப்படுபவன் ஆவான்

எவன் பழைய சண்டைகளை மீண்டும் நினைவூட்டிக் கிளப்புவது இல்லையோ, கர்வப்படுவது இல்லையோ, எப்போதும் அமைதியாக உள்ளானோ, வறுமையில் வாடினாலும், துன்ப்ம் விளைந்தாலும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையோ அவனே நன்னடத்தையாளன் எனப் புகழப்படுவான்

எவன் தனக்கு நல்லது நடக்கும் போது அதை ஆரவாரமாகக் கொண்டாடுவது இல்லையோ, பிறர் துன்பம் கண்டு மகிழ்வதில்லையோ, யாருக்காவது அன்பளிப்புக் கொடுத்த பின் அதற்காக பின்னர் வருத்தப்படுவது இல்லையோ அவனே நற்பண்பாளன் எனப் புகழப்படுவான்

எவன், உள்ளூரில் நிலவும் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், அங்குள்ள சாதி, சமூகப்பிரிவினர் மேற்கொள்ளும் பணிகள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்றானோ அவன் உயர்ந்தது, தாழ்ந்தது அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பான்,அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள பெரியவர்களால் மதிக்கப் படுவான்.

மோசடி, முட்டாள்தனம்,விரோதம், பாவச் செயல்கள், ஆட்சியாளருக்கு எதிராக சதி செய்தல் அல்லது ஆட்சியாளருக்கு நம்பிக்கைக்கு உகந்தவனாக இல்லாதிருத்தல், போக்கிரித்தனம்,பழி கூறுதல், தன் மக்களுடன் பகைமை, குடிகாரர்கள்,புத்தி சுவாதீனமற்றோர், கள்வர்கள் ஆகியோருடன்  பழகுதல் முதலியவை தீயச்செயலாகும்.எவன் இவற்றைத் தவிர்க்கின்றானோ அவனை சமூகம் போற்றும்.

சுயக்கட்டுப்பாடு,உடல் தூய்மை,மனத்தூய்மை, இறை வழிபாடு,மங்களச் சடங்குகள்,செய்த தவறுகளுக்கான பிராயச்சித்தம், உலக விஷயங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் ஆகியவை தினசரி வேண்டிய கடமைகள் ஆகும்.எவன் இவற்றைக் கடைப்பிடிக்கின்றானோ அவன் வசதியாக வாழும் வாய்ப்பை இறைவன் ஏற்கிறான்

எவன் தாழ்ந்த நிலையில் உள்ளோரை தவிர்த்து விட்டு, தனக்கு இணையான குடும்பத்துடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அதே போன்று சமமான அந்தஸ்து உள்ளோருடன் மட்டுமே நட்பு,கொடுக்கல்,- வாங்கல், பேச்சு ஆகியவை வைத்துக் கொள்கிறானோ, சான்றோருக்கு முதலிடம் அளிக்கிறானோ அவன் வாழ்க்கை ஒழுங்காக அமையும் வாய்ப்புள்ளது.

எவன் மிதமாக உண்கின்றானோ, தன் சுற்றத்துடன் உணவை பகிர்ந்து உண்கின்றானோ, கடும் உழைப்பிற்குப் பிறகும் மிகுதியாக உறங்குவது இல்லையோ, எதிரி கேட்டாலும் தயங்காது உதவுகின்றானோ அவனை துன்பம் எப்போதும் அணுகாது.

எவன் தன் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு அதை ஒழுங்காக நிறைவேற்றுகின்றானோ, தனக்குக் கெடுதல் செய்பவர்களைப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் பிறர் அறியாமல் வைத்துக் கொள்கின்றானோ அவன் தன் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்.

எவன் தன் நடவடிக்கைகள் மூலம் பிறர் வாழ்வில் அமைதி நிலவச் செய்கின்றானோ, உண்மையாகவும், கருணை நிறைந்தும் விளங்குகின்றானோ, மரியாதை உணர்வு, நல்லெண்ணம் கொண்டுள்ளானோ அவன் ஒளி வீசும் ரத்தினம் போல தன் சுற்றத்தாரிடம் முதன்மையாக இருப்பான்

தான் செய்த தவறுகளை மற்றவர் அறியாத போதும், தான் அவற்றை நினைத்து வெட்கம் அடைகின்றானோ அவன் உலகிற்கே வழிகாட்டும் குருவாகக் கருதப்படுவான்.எவன் அளவற்ற ஆற்றல், பரிசுத்தமான இதயம், மன அமைதி ஆகியவை பெற்றுள்ளானோ, அவன் சூரியனைப் போல புகழுடன் பிரகாசிப்பான்.

விதுரர், இவ்வாறெல்லாம் திருதிராட்டிரருக்கு அறிவுரைகளைக் கூறிய பின்னர் அவரை நோக்கி, 'அம்பிகையின் மன்னரே! உமது தம்பி பாண்டுவிற்கு முனிவர் ஒருவர் சாபம் கொடுத்திருந்தார்.(ஒருசமயம் கூடிக் களித்திருந்த மான்களை பாண்டு வேட்டையாடினார்.அதைக்கண்ட முனிவர், நீ உன் மனைவியுடன் கூடிக் களித்தால் இறந்துவிடுவாய் என்ற சாபம்).அதனால் பாண்டுவிற்கு நேரடியாகக் குழந்தைகள் பிறக்கவில்லை.இந்திரன் போன்ற தேவர்கள் மூலம் ஐந்து மகன்கள்.அவர்கள் உங்களால் வளர்க்கப்பட்டார்கள்.உங்கள் கட்டளைக்குக் கீழ் படிந்தனர்.பாண்டுவிற்கு இந்த ராஜ்ஜியத்தில் பங்கு உணடு.அதை பாண்டுவின் மகன்களுக்குக் கொடுத்துவிடுங்கள்.அவர்களுடன் நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள்.இதனால் உங்களை யாரும் குறைகூற முடியாது" என்று விதுரர் கூறி முடித்தார்.

Monday, October 12, 2015

15- ஒன்பதும்...பத்தும்



இந்த வீட்டிற்கு ஒன்பது வாயில்கள்.தூண்கள் மூன்று, பணியாட்கள் ஐவர்.இதன் முதலாளி ஆத்மா. இதை சரியாக அறிந்துள்ளோரே முழுதும் தேர்ச்சிப் பெற்ற முனிவர்கள் ஆகும்.

(உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்கள் இங்கு வாயில்கள் எனப்படுகிறது.வாதம், சிலேட்டுமம்,பித்தம் ஆகியவை மூன்று தூண்கள்.ஐம்புலன்களும் நம் ஊழியர்.அவை நமக்குக் கீழ் படிந்து இருக்க வேண்டும்.வீடும், வீட்டில் இருப்போரும் வேறு..உடல் வேறு, ஆத்மா வேறு.)

கிழே கொடுக்கப்பட்டுள்ள பத்துவகை மனிதர்களால் நற்பண்புகளை நினைவில் கொள்ள முடியாது.ஆகவே அவற்றை பின் பற்ற முடியாது.

போதையில் மிதப்பவன்
எதிலும் கவனக் குறைவாக இருப்பவன்
பித்துப் பிடித்தவன்
களைத்து ஓய்ந்தவன்
அதிகக் கோபம் கொண்டவன்
பசியால் துடிப்பவன்
அவசரப்படுபவன்
பிறர் பொருளைக் கவர நினைப்பவன்
பயத்துடனேயே இருப்பவன்
மிகுதியான காம உணர்வு கொண்டவன்

ஆகியவர்கள் பண்பாளராக இருக்க முடியாது.ஆகவே இக்குறைபாடுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Sunday, October 11, 2015

14 - ஏழும்..எட்டும்



கீழே குறிப்பிட்டுள்ள ஏழு தீமைகளும் பெரும் அழிவை விளைவிக்கும்.ஆகவே, அரசர்கள் (ஆட்சிபுரிபவர்கள்) இவற்றை அறவே தவிர்த்திட வேண்டும்.இந்த ஏழு தீமைகளும்...தேவலோகத்தினரையும் , ஆட்சியில் நிலைபெற்ற மன்னர்களையும் கூட நாசமாக்கியுள்ளன.

அவை-

பெண் மோகம், சூதாடுதல்,வேட்டையாடுதல்,குடிப்பழக்கம், கடுஞ்சொல் கூறுதல்,மிகுதியான தண்டனையைக் கொடுத்தல்,செல்வத்தைத் தவறான முறையில் செலவழித்தல் ஆகியவை ஆகும்.

பின் வரும் எட்டு செயல்களும்..ஒரு மனிதன் அழியப் போகிறான் என்பதை முங்கூட்டியே தெரிவித்துவிடும் அறிகுறிகள் எனலாம்.

அந்தணர்களை வெறுப்பது,அவர்களை விரோதித்து அவர்கள் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வது,அவர்கள் சொத்தை அபகரிப்பது,அவர்களைக் கொல்ல அல்லது அவர்களுக்குத் தீமை செய்ய விரும்புவது, அவர்கள் ஏசப்பட்டால் மகிழ்வது,அவர்கள் புகழப்பட்டால் வருந்துவது, சடங்குகள் போது அவர்களை அழைக்க மறப்பது, அவர்கள் ஏதேனும் யாசித்தால் கோபித்துக் கொள்வது ஆகிய எட்டும் புத்திசாலி மனிதன் விட்டொழிக்க வேண்டும்.
(மகாபாரதம் 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்கிறார்கள்.ஆகவே அந்தணர்கள் அந்த நாளில் எளிமையான, ஆன்மீக வாழ்க்கையை மட்டுமே கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை இவ்விடத்தில் நினைவில் வைக்கவும்)

பின் வரும் எட்டும், பாலில் திரளும்..வெண்ணெய் போல, மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் எனலாம்.அவை

மனதிற்கினிய நண்பர்களைச் சந்தித்தல், நிறைய செல்வம் சேகரித்தல்,மகனால் தழுவப்படுதல், தாம்பத்திய உறவு, சூழ்நிலைக்கேற்ற இனிய உரையாடல், தன் சமூகத்தில் மேல் நிலைக்கு உயர்த்தப்படுதல்,விரும்புவது கைவசமாதல்,மக்கள் மத்தியில் மதிப்பு

விவேகம்,உயர்க் குடிப் பிறப்பு,புலன் கட்டுப்பாடு,கல்வியறிவு,வீரம்,மிதமான பேச்சு,வசதிக்கேற்ப தான தருமம் செய்தல்,நன்றியுணர்வு ஆகிய எட்டும் மனித வாழ்வு ஒளிவீசிப் புகழ்ப் பெறச் செய்வன ஆகும்

Thursday, October 8, 2015

13. ஆறுவகைகள்



அதிக தூக்கம், தூங்குவது போல இருத்தல், பயம், கோபம், சோம்பல், எதையும் தாமதப்படுத்துதல் ஆகிய ஆறும் கெடுதலான பழக்கங்கள்.உலகில் புகழுடன் முன்னேற விரும்புகிறவன் இவை தன்னைப் பற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

படகில் பயணிக்கையில் படகில் ஓட்டை ஏற்பட்டுவிட்டால் அதை விட்டு வெளியேற வேண்டும்.அதுபோல, மெய்ப்பொருளுக்கு விளக்கம் தராத குரு, வேள்வி சமயம் வேதம் ஓதத் தெரியாத புரோகிதர்,மக்களைக் காப்பாற்ற இயலாத மன்னன், இனிமையாகப் பேசும் வழக்கமில்லா மனைவி, கிராமத்தைவிட்டு மேய்ச்சல் நிலம் செல்ல விரும்பாத இடையன்,, கிராமத்தைவிட்டு தொழிலுக்கு வெளியே போக விரும்பாத நாவிதராகிய அறுவரும் சமூகத்தால் கைவிடப் பட வேண்டியவர்களாகும்.

வாய்மை. தரும சிந்தனை, சுறு சுறுப்பு, பொறாமை கொள்ளாமை,பொறுமை, மனவலிமை ஆகிய பண்புகள் கொண்டவனை ஒருபோதும் கைவிடக் கூடாது.

செல்வம் சேருதல், ஆரோக்கியமாக என்றும் இருத்தல்,பிரியமாக..இனிமையாகப் பேசும் இல்லாள்,பணிவுள்ள புதல்வன், நல்ல அறிவு,..அந்த அறிவும் பொருளீட்டவோ, ஞானம் பெறவோ உதவியாக இருத்தல்..இந்த ஆறு அம்சங்கங்களும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மனிதனின் மனதில் ஆறு தீய விஷயங்கள் உள்ளன.அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.ஆகவே அவன் பாவம் செய்யாதவனாக வாழ்வான்.அதனால், பாவத்தின் பின்விளைவுகளும்,துன்பங்களும் அவனை அணுகாது.(தீய விஷயங்கள் ஆறு..எவை என்று சொல்லாவிடினும்..அவை, காமம்,சினம், பேராசை,மோகம்,அகங்காரம், பொறாமை என எடுத்துக் கொள்ளலாம்)

காமம் மிகுந்த ஆண்களைப் பெண்களும்,
சடங்குகள் செய்பவர்களைப் புரோகிதர்களும்
தமக்குள் சண்டையிடும் மக்களை ஆட்சியாளரும்
அறிவு குறைந்தவர்களை அறிஞர்களும்
திருடர்கள் கவனம் குறைந்த மனிதர்களையும்
மருத்துவர்கள் நோயாளிகளையும்
தங்கள் வசப்படுத்தித், தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு வசதிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பசுமாடு, வேலைக்காரர்,விவசாயம்,மனைவி, அறிவு, கீழோர் நட்பு, இவற்றை நாம் கவனித்துப் பராமரிக்காவிட்டால் நம்மை விட்டு நீங்கிவிடும்.
(பசுவை நன்குப் பராமரிக்காவிட்டால் சரியாகப் பால் தராது.வேலைக்காரரை சரியாகக் கவனிக்காவிடின் நம்மை விட்டு விலகிவிடுவர்,விவசாயம் சரியாக இல்லாவிடில் பயிர்கள் வாடி விடும்.மனைவியைப் புறக்கணித்தால் குடும்ப அமைதிப் போகும்.அறிவைப் பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்தாற் போல வீணாகும்.கீழோர் நட்பு நாம் ஆதரிக்கும் வரையே நீடிக்கும்.)

படித்து முடிந்ததும் ஆசிரியரை மாணவர்களும்
திருமணமானப் பின்னர் தாயை மகன்களும்
காமுகர்கள் திருப்தியடைந்ததும் தன்னை நம்பிய பெண்களையும்
வாழ்க்கையில் முன்னேறியபின் தங்கள் வெற்றிக்கு உதவியவர்களையும்
பயணிகள் நதியைக் கடந்த பின்னர் படகையும்
நோய் நீங்கியதும் நோயாளிகள் மருத்துவர்களையும் மறந்துவிடுவது வழக்கம்

ஆரோக்கியமான உடல், கடன் இல்லாமை, வீட்டைவிட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை இல்லாமை, நல்லோர் நட்பு, மனசுக்கேற்ற திறமையானத் தொழில், அச்சமற்ற சூழ்நிலை ஆகியவை மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ உதவுவன.

பொறாமை உடையவர்,வெறுப்பு நிறைந்தவர்,எதிலும் திருப்தியற்றவர், எதற்கும் சிடுசிடுப்பவர், எதையும் சந்தேகப்படுபவர், பிறரைச் சுறண்டு வாழ்பவர் இந்த ஆறுவகை மனிதர்களுக்கும் எப்போதும் நிம்மதி இருக்காது.