Thursday, October 29, 2015

21- நெகிழ்தல்



எளிதில் பாலைக் கறக்க விடாத முரட்டுப் பசு முரட்டுத்தனமாக நடத்தப்படும்.எளிதில் பால் கறக்க உதவும் பசு நேசிக்கப்படும்.அதை மக்கள் துன்புறுத்த மாட்டார்கள்.(முதலில் எதையாவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை வரின்..முரண்டுப் பிடிக்காதுக் கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்)

சூடு படுத்தாமல் வளையக் கூடியதை சூடேற்ற வேண்டிய அவசியமில்லை.உதாரணமாக மரத்தின் கிளைகளைச் சொல்லலாம். அவை தாமாகவே வளையக் கூடியவை.(அறிஞர்களும் தங்கள் செல்வாக்குச் செல்லாத இடத்தில் வளைந்து கொடுப்பர்)

அறிஞர் எனப்படுபவர் குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னைவிட வலியவர் முன்னால் வளைந்துக் கொடுப்பர்.(இதைத் தாழ்வாக எண்ணிவிடக் கூடாது.பிறரின் வலிமை அறிந்து நடப்பது விவேகமாகும்)

கால்நடைகள் மேயும் புல் செழிக்க மழையை நம்பியுள்ளன.அரசன், அமைச்சர்களின் ஆலோசனையைச் சார்ந்துள்ளான்.மனைவி, கணவனை நம்பி வாழ்கிறாள்.அந்தணர்கள் வேதங்களை வழிகாட்டியாகக் கொண்டு பணி செய்கின்றனர்

நாம் சத்தியத்தைப் பின் பற்றினால் நம் நற்பண்புகள் காப்பாற்றப் படும்.நாம் அறிவைத் தொடர்ந்து பயன் படுத்தினால் அது குறையாமல் நம்மிடம் நிலைத்து இருக்கும்.நாம் உடலைத் தேய்த்துக் குளித்து தூய்மையாக வைத்திருந்தால் அழகுடன் விளங்குவோம்.நம்  நடத்தை நன்றாக இருந்தால் நம் பரம்பரை நிலைபெற்று வளரும்

தானியங்கள், அவ்வப்போது எவ்வளவு உள்ளன என்பதை அவ்வப்போது  பார்த்தால் அவற்றிற்கு பஞ்சம் ஏற்படாது.குதிரைகளை  லாயத்திலேயே வைத்திருந்தால் நோயுறும்.அவ்வப்போது அவற்றை ஓட்டிச் செல்ல வேண்டும்.பசுக்களை நேரடியாகக் கவனித்து வந்தால் நல்ல அதிகப்படியான பால் தரும்.பெண்கள் உடல் தெரியுமாறு இருக்கக் கூடாது.வறுமையில் உள்ளோரும் கந்தைத் துணியிலாவது உடலை மறைக்க வேண்டும்

ஒருவன் உயர் பரம்பரையைச் சார்ந்தவானாக இருந்தாலும், ஒழுக்கத்தில் குறையுடையவன் ஆனால் அவன் மரியாதைக்குரியவன் அல்ல.அதுபோன்று தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் ஆனாலும் ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை மதிக்க வேண்டும்.(குலம் முக்கியமில்லை..குணமே முக்கியம்)

பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகௌரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை,அதிர்ஷ்டம், பட்டம், பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு பொறாமைப்பட்டால் நாம் வாழ்நாள் முழுதும் தீராத நோயாளியைப் போல அவதிப்பட நேரிடும்.

செய்யக் கூடாததாகிய காரியத்திற்கு அஞ்சுபவன், கட்டாயாகச் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாமல் விட அஞ்சுபவன், குறிப்பிட்ட காலத்திற்கு முன் ரகசியத்தை வெளியிட அஞ்சுபவன் இம்மூவகையினரும் ஒரு போதும் போதைதரும் எப்பொருளையும்  பயன்படுத்தக் கூடாது.(போதை, செய்யக்கூடாததை செய்யவைக்கும்.செய்ய வேண்டியதை  மறக்கச் செய்யும்.ரகசியம் அவனால் காப்பாற்றப் பட முடியாது)

No comments:

Post a Comment