Sunday, October 11, 2015

14 - ஏழும்..எட்டும்



கீழே குறிப்பிட்டுள்ள ஏழு தீமைகளும் பெரும் அழிவை விளைவிக்கும்.ஆகவே, அரசர்கள் (ஆட்சிபுரிபவர்கள்) இவற்றை அறவே தவிர்த்திட வேண்டும்.இந்த ஏழு தீமைகளும்...தேவலோகத்தினரையும் , ஆட்சியில் நிலைபெற்ற மன்னர்களையும் கூட நாசமாக்கியுள்ளன.

அவை-

பெண் மோகம், சூதாடுதல்,வேட்டையாடுதல்,குடிப்பழக்கம், கடுஞ்சொல் கூறுதல்,மிகுதியான தண்டனையைக் கொடுத்தல்,செல்வத்தைத் தவறான முறையில் செலவழித்தல் ஆகியவை ஆகும்.

பின் வரும் எட்டு செயல்களும்..ஒரு மனிதன் அழியப் போகிறான் என்பதை முங்கூட்டியே தெரிவித்துவிடும் அறிகுறிகள் எனலாம்.

அந்தணர்களை வெறுப்பது,அவர்களை விரோதித்து அவர்கள் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வது,அவர்கள் சொத்தை அபகரிப்பது,அவர்களைக் கொல்ல அல்லது அவர்களுக்குத் தீமை செய்ய விரும்புவது, அவர்கள் ஏசப்பட்டால் மகிழ்வது,அவர்கள் புகழப்பட்டால் வருந்துவது, சடங்குகள் போது அவர்களை அழைக்க மறப்பது, அவர்கள் ஏதேனும் யாசித்தால் கோபித்துக் கொள்வது ஆகிய எட்டும் புத்திசாலி மனிதன் விட்டொழிக்க வேண்டும்.
(மகாபாரதம் 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்கிறார்கள்.ஆகவே அந்தணர்கள் அந்த நாளில் எளிமையான, ஆன்மீக வாழ்க்கையை மட்டுமே கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை இவ்விடத்தில் நினைவில் வைக்கவும்)

பின் வரும் எட்டும், பாலில் திரளும்..வெண்ணெய் போல, மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் எனலாம்.அவை

மனதிற்கினிய நண்பர்களைச் சந்தித்தல், நிறைய செல்வம் சேகரித்தல்,மகனால் தழுவப்படுதல், தாம்பத்திய உறவு, சூழ்நிலைக்கேற்ற இனிய உரையாடல், தன் சமூகத்தில் மேல் நிலைக்கு உயர்த்தப்படுதல்,விரும்புவது கைவசமாதல்,மக்கள் மத்தியில் மதிப்பு

விவேகம்,உயர்க் குடிப் பிறப்பு,புலன் கட்டுப்பாடு,கல்வியறிவு,வீரம்,மிதமான பேச்சு,வசதிக்கேற்ப தான தருமம் செய்தல்,நன்றியுணர்வு ஆகிய எட்டும் மனித வாழ்வு ஒளிவீசிப் புகழ்ப் பெறச் செய்வன ஆகும்

No comments:

Post a Comment