Monday, October 19, 2015

16- எவன் ஒருவன்



எவன் ஒருவன் காமத்தையும்,கோபத்தையும் விட்டொழிக்கிறானோ, தகுதியுள்ளவர்களுக்கு நிதி உதவி செய்கிறானோ, நல்லது, கெட்டதை பிரித்துணரும் விவேகியாக உள்ளானோ, அறிஞனாக விளங்குகிறானோ, சுறு சுறுப்பாய் செயல்படுகிறானோ அவனைத் தலைவனாக உலகம் கருதும்.

எவன் ஒருவன், மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற்று விடுகிறானோ, குற்றவாளிக்கு பொருத்தமான தண்டனையை வழங்குகிறானோ, தண்டனையின் அளவைச் சரியாகத் தெரிந்து வைத்துள்ளானோ, எந்த சமயத்தில் கருணையைக் காட்டி மன்னிக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளானோ..அவனை செல்வம், செல்வாக்குத் தேடி வரும்

எவன், தன் எதிரி பலகீனமாய் இருந்தாலும், அவனிடமும் எச்சரிக்கையாய் உள்ளானோ, சரியான சந்தர்ப்பம் வரும்வரையிலும் எதிரியை அனுசரித்துச் செல்கிறானோ, தன்னைவிட வலிமையானவருடன் மோதாமல் இருக்கிறானோ, சரியான நேரம் தன் ஆற்றலை வெளிப்படுத்தித் தாக்குகிறானோ அவனே அறிவாளியும், வீரனும் ஆவான்

எவன் துன்பத்தையும், எதிர்ப்புகளையும் கண்டு வருந்துவதில்லையோ,, எவன் தேடிச்சென்று, கவனமாயும், கடுமையாகவும் உழைக்கின்றானோ, சூழ்நிலையைக் கருதி துன்பங்களைப் பொறுத்துக் கொள்கின்றானோ..அவனே மனிதர்களில் முதன்மையானவன்.அவன் அனைத்து எதிரிகளையும் வென்றிடுவான்.

எவன் காரணமின்றி வீட்டை விட்டு வெளியே சென்று வாழ்வதில்லையோ,தீயவர்களுடன் பழகுவதில்லையோ, பிறர் மனைவியைக் கெடுதல் செய்வதில்லையோ, கர்வப்படுவது,கபடமாக நடந்துக் கொள்வது..பிறரை நிந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லையோ, குடிப்பழக்கம் வைத்துக் கொள்வதில்லையோ அவன் மகிழ்ச்சியாக விலங்குவான்.

எவன், அறம்,பொருள்,இன்பம் அடைய அவசரப்பட்டுச் செயற்படுவது இல்லையோ, எப்போதும் உண்மை பேசுகிறானோ,தன் நண்பனுக்காகவும் பிறரிடம் தகராறு செய்வதை விரும்பவில்லையோ, மற்றவர்கள் மதிக்காவிடினும் கோபப்படுவது இல்லையோ அவனே அறிவாளி ஆவான்.

எவன் யாரிடமும் பொறாமை கொள்வதில்லையோ, எல்லோரிடமும் கனிவாக இருக்கிறானோ, தனது பலக்குறைவை உணர்ந்து யாரையும் எதிர்க்காமல் உள்ளானோ, திமிராகப் பேசி பண்பை மீறாதிருக்கின்றானோ, தன்னோடு தகராறு செய்பவர்களை மன்னித்து விடுகிறானோ ..அவனே புகழ் பெறுவான்

எவன் திமிருடன் ஆர்ப்பாட்டமாக நடந்து கொள்வது இல்லையோ, பிறரை இகழ்ந்து, தன்னை மெச்சிக்கொள்வது இல்லையோ, உணர்ச்சி வசப்பட்டப் போதும் தன்னை மறந்து கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவன் எல்லோராலும் விரும்பப்படுபவன் ஆவான்

எவன் பழைய சண்டைகளை மீண்டும் நினைவூட்டிக் கிளப்புவது இல்லையோ, கர்வப்படுவது இல்லையோ, எப்போதும் அமைதியாக உள்ளானோ, வறுமையில் வாடினாலும், துன்ப்ம் விளைந்தாலும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையோ அவனே நன்னடத்தையாளன் எனப் புகழப்படுவான்

எவன் தனக்கு நல்லது நடக்கும் போது அதை ஆரவாரமாகக் கொண்டாடுவது இல்லையோ, பிறர் துன்பம் கண்டு மகிழ்வதில்லையோ, யாருக்காவது அன்பளிப்புக் கொடுத்த பின் அதற்காக பின்னர் வருத்தப்படுவது இல்லையோ அவனே நற்பண்பாளன் எனப் புகழப்படுவான்

எவன், உள்ளூரில் நிலவும் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், அங்குள்ள சாதி, சமூகப்பிரிவினர் மேற்கொள்ளும் பணிகள் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்றானோ அவன் உயர்ந்தது, தாழ்ந்தது அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பான்,அவன் எங்குச் சென்றாலும் அங்குள்ள பெரியவர்களால் மதிக்கப் படுவான்.

மோசடி, முட்டாள்தனம்,விரோதம், பாவச் செயல்கள், ஆட்சியாளருக்கு எதிராக சதி செய்தல் அல்லது ஆட்சியாளருக்கு நம்பிக்கைக்கு உகந்தவனாக இல்லாதிருத்தல், போக்கிரித்தனம்,பழி கூறுதல், தன் மக்களுடன் பகைமை, குடிகாரர்கள்,புத்தி சுவாதீனமற்றோர், கள்வர்கள் ஆகியோருடன்  பழகுதல் முதலியவை தீயச்செயலாகும்.எவன் இவற்றைத் தவிர்க்கின்றானோ அவனை சமூகம் போற்றும்.

சுயக்கட்டுப்பாடு,உடல் தூய்மை,மனத்தூய்மை, இறை வழிபாடு,மங்களச் சடங்குகள்,செய்த தவறுகளுக்கான பிராயச்சித்தம், உலக விஷயங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் ஆகியவை தினசரி வேண்டிய கடமைகள் ஆகும்.எவன் இவற்றைக் கடைப்பிடிக்கின்றானோ அவன் வசதியாக வாழும் வாய்ப்பை இறைவன் ஏற்கிறான்

எவன் தாழ்ந்த நிலையில் உள்ளோரை தவிர்த்து விட்டு, தனக்கு இணையான குடும்பத்துடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அதே போன்று சமமான அந்தஸ்து உள்ளோருடன் மட்டுமே நட்பு,கொடுக்கல்,- வாங்கல், பேச்சு ஆகியவை வைத்துக் கொள்கிறானோ, சான்றோருக்கு முதலிடம் அளிக்கிறானோ அவன் வாழ்க்கை ஒழுங்காக அமையும் வாய்ப்புள்ளது.

எவன் மிதமாக உண்கின்றானோ, தன் சுற்றத்துடன் உணவை பகிர்ந்து உண்கின்றானோ, கடும் உழைப்பிற்குப் பிறகும் மிகுதியாக உறங்குவது இல்லையோ, எதிரி கேட்டாலும் தயங்காது உதவுகின்றானோ அவனை துன்பம் எப்போதும் அணுகாது.

எவன் தன் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு அதை ஒழுங்காக நிறைவேற்றுகின்றானோ, தனக்குக் கெடுதல் செய்பவர்களைப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் பிறர் அறியாமல் வைத்துக் கொள்கின்றானோ அவன் தன் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்.

எவன் தன் நடவடிக்கைகள் மூலம் பிறர் வாழ்வில் அமைதி நிலவச் செய்கின்றானோ, உண்மையாகவும், கருணை நிறைந்தும் விளங்குகின்றானோ, மரியாதை உணர்வு, நல்லெண்ணம் கொண்டுள்ளானோ அவன் ஒளி வீசும் ரத்தினம் போல தன் சுற்றத்தாரிடம் முதன்மையாக இருப்பான்

தான் செய்த தவறுகளை மற்றவர் அறியாத போதும், தான் அவற்றை நினைத்து வெட்கம் அடைகின்றானோ அவன் உலகிற்கே வழிகாட்டும் குருவாகக் கருதப்படுவான்.எவன் அளவற்ற ஆற்றல், பரிசுத்தமான இதயம், மன அமைதி ஆகியவை பெற்றுள்ளானோ, அவன் சூரியனைப் போல புகழுடன் பிரகாசிப்பான்.

விதுரர், இவ்வாறெல்லாம் திருதிராட்டிரருக்கு அறிவுரைகளைக் கூறிய பின்னர் அவரை நோக்கி, 'அம்பிகையின் மன்னரே! உமது தம்பி பாண்டுவிற்கு முனிவர் ஒருவர் சாபம் கொடுத்திருந்தார்.(ஒருசமயம் கூடிக் களித்திருந்த மான்களை பாண்டு வேட்டையாடினார்.அதைக்கண்ட முனிவர், நீ உன் மனைவியுடன் கூடிக் களித்தால் இறந்துவிடுவாய் என்ற சாபம்).அதனால் பாண்டுவிற்கு நேரடியாகக் குழந்தைகள் பிறக்கவில்லை.இந்திரன் போன்ற தேவர்கள் மூலம் ஐந்து மகன்கள்.அவர்கள் உங்களால் வளர்க்கப்பட்டார்கள்.உங்கள் கட்டளைக்குக் கீழ் படிந்தனர்.பாண்டுவிற்கு இந்த ராஜ்ஜியத்தில் பங்கு உணடு.அதை பாண்டுவின் மகன்களுக்குக் கொடுத்துவிடுங்கள்.அவர்களுடன் நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள்.இதனால் உங்களை யாரும் குறைகூற முடியாது" என்று விதுரர் கூறி முடித்தார்.

No comments:

Post a Comment