Wednesday, October 28, 2015

20-ஆட்சியாளர்



பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய விரும்ப மாட்டார்கள்.அதுபோல குடிமக்களும் தங்களது அரசன் (ஆட்சியாளன்) பயனற்ற முயற்சியில் ஈடுபடுபவனாகவோ, பயனுள்ள செயல்களை தட்டிக் கழிப்பவனாகவோ இருந்தால் அவரை தங்களது தலைவனாக ஏற்க மாட்டார்கள்.

பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய மாட்டார்கள்.அதுபோல குடிமக்கள் தங்கள் அரசனுடைய ஆதரவால் அல்லது மகிழ்ச்சியால் ஒரு பயனும் இல்லையென்றாலும்,அவனது கோபத்தால் ஒரு ஆபத்தும் இல்லையென்றாலும் அவனைத் தலைவனாக மதித்து ஏற்கமாட்டார்கள்

சில விஷயங்களுக்கு அதிக முயற்சி தேவைப்படாது.ஆனால், அதனால் பெரிய பயன்கள் ஏற்படக் கூடும்.அத்தகையவற்றை அறிவாளி தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பான்.

ஒரு அரசன் (ஆட்சியாளர்) வெளிப்பார்வைக்கு ஒன்றும் அறியாதவன் போல அமைதியாகத் தெரியலாம்.ஆனால் அவன் தன்னைச் சுற்றி நடைபெறும் எல்லா விஷயங்களையும் தெளிவாகவும், கூர்மையாகவும் கவனித்துக் கொண்டிருக்கக் கூடும். அத்தகையவரிடம் குடிமக்களும் விசுவாசமாக இருப்பர்

மரமானது பூக்கள் நிறைந்ததாக இருப்பினும் அதிகம் பழம் தராததாக இருக்க வேண்டும்.பழம் தரும் மரமானால், எளிதில் ஏறிப் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருக்க வேண்டும்.அதன் பழங்கள் அரைகுறையாக பழுத்திருந்தாலும், முழுதாக பழுத்தது போல இருக்க வேண்டும்,இப்படியெல்லாம் இல்லாமல் வாடிய மரம் போல இருந்தால் மக்கள் அது பயனற்றது என வெட்டி வீழ்த்தி விடுவர்.

(ஆட்சியாளர் பழக இனிமையாக இருக்க வேண்டும்.அதே நேரம் வாரி வழங்குபவராக இருக்கக் கூடாது..எல்லோராலும் அணுகப்படக் கூடியவராய் இருக்கக் கூடாது.)

அரசன் (ஆட்சியாளர்) தன் பார்வையாலும், மனதாலும், பேச்சாலும், செயலாலும் உலகத்திற்கு மனநிறைவை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். அத்தகையோரை குடிமக்கள் வழிபடுவர்.

ஒரு அரசன் கடல்வரை பரவியுள்ள நிலத்திற்கு முழுதும் உரிமையாளனாக இருக்கலாம்.ஆனால், மக்கள் அவனுக்குப் பயப்படும் நிலையில் இருந்தால், அவன் அரசு புரிய தகுதியற்றவன் ஆவான்.மக்கள் அவனை விரைவில் கைவிட்டு விடுவர்,(மக்களை பயமுறுத்தி ஆட்சியாளர் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது)

அரசருக்கு ஆட்சி செய்யும் உரிமை பரம்பரை சொத்தாய் கிடைத்திருக்கலாம்.அதற்காக அவன் அநியாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதில்லை.அவன் தீய செயல்களைச் செய்தால்...காற்று மேகங்களை சிதறடிப்பது போல நாடு சிதறுண்டு போகக் காரணமாவான்.

பண்டைக் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் அறநெறி வழிப்படி அரசன் நல்லாட்சி செய்ய வேண்டும்.அத்தகையவனுடைய நாடு செழிப்புடன் விளங்கும்.அந்நாட்டில் மகிழ்ச்சி பொங்கும்

இதற்கு மாறாக அரசன் தன் நற்பண்புகளை விட்டு, அநியாய நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவனது நாட்டில் வளம், வசதிகள் குறையும்.நெருப்பினால் சருமம் சுருங்கி விடுவதுபோல அவனது நாட்டு எல்லையும் சுருங்கி விடும்.

அரசர்கள் எதிரி நாடுகளை வென்று தாக்க கடுமையாக முயற்சிப்பர்.அதுபோலவே அவர்கள் கடும் முயற்சி செய்து தங்கள் நாட்டையும் பாதுகாத்து செழிப்படையச் செய்ய வேண்டும்.

ஆட்சியை நேர்மையான முறையில் முயற்சித்து அடைய வேண்டும்.ஆட்சியைப் பிடித்த பின்னர் நேர்மையாக ஆள வேண்டும்.நேர்மையாகக் கிடைக்கின்ற ஆட்சியை ஆட்சியாளர் கைவிட மாட்டார்கள்.அந்த அரசாட்சி வாய்ப்பும் அவர்களைக் கைவிடாது.

எங்கும் எதிலும் நாம் சத்தியத்தைத் தேடி அறிய வேண்டும்.பாறையிலிருந்து தங்கத்தைச் சுரண்டி எடுப்பது போல, சத்தியத்தை அறிய முயற்சிக்க வேண்டும்.உளறுகின்ற பைத்தியம், மழலைப் பேசும் குழந்தை ஆகியோரிடம் கூட விஷயங்கள் இருக்கலாம்.ஆகவே யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது

அறுவடை நேரத்தில், கொஞ்சம் தானியங்கள் வயலிலேயே சிதறிப் போகும்.அதை சேகரித்து, உணவாக்கி சிலர் விரத வாழ்க்கை நடத்து கின்றனர்.அதுபோன்ற சான்றோர்களின், நன்மொழிகளும்,அரிய செயல்களின் விவரங்களும் பல்வேறு இடங்களில் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றையெல்லாம் சேகரித்து அவற்றின் அடிப்படையில் வாழ வேண்டும்

பசுக்கள் மோப்ப சக்தி மூலம் தொலைவில் உள்ளதையும் அறிந்து கொள்கின்றன. அந்தணர்கள் வேதம் மூலம் கண்ணுக்குப் புலப்படாததை அறிகின்றனர்.அரசர்கள் ஒற்றர்கள் மூலம் தங்கள் பார்வைக்கு அப்பால் நடக்கும் விஷயங்களையும் அறிகின்றன.சாதாரண மக்கள் தங்கள் படுவதைக் கண்டு திருப்தியடைகின்றனர்.

No comments:

Post a Comment