அதிக தூக்கம், தூங்குவது போல இருத்தல், பயம், கோபம், சோம்பல், எதையும் தாமதப்படுத்துதல் ஆகிய ஆறும் கெடுதலான பழக்கங்கள்.உலகில் புகழுடன் முன்னேற விரும்புகிறவன் இவை தன்னைப் பற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
படகில் பயணிக்கையில் படகில் ஓட்டை ஏற்பட்டுவிட்டால் அதை விட்டு வெளியேற வேண்டும்.அதுபோல, மெய்ப்பொருளுக்கு விளக்கம் தராத குரு, வேள்வி சமயம் வேதம் ஓதத் தெரியாத புரோகிதர்,மக்களைக் காப்பாற்ற இயலாத மன்னன், இனிமையாகப் பேசும் வழக்கமில்லா மனைவி, கிராமத்தைவிட்டு மேய்ச்சல் நிலம் செல்ல விரும்பாத இடையன்,, கிராமத்தைவிட்டு தொழிலுக்கு வெளியே போக விரும்பாத நாவிதராகிய அறுவரும் சமூகத்தால் கைவிடப் பட வேண்டியவர்களாகும்.
வாய்மை. தரும சிந்தனை, சுறு சுறுப்பு, பொறாமை கொள்ளாமை,பொறுமை, மனவலிமை ஆகிய பண்புகள் கொண்டவனை ஒருபோதும் கைவிடக் கூடாது.
செல்வம் சேருதல், ஆரோக்கியமாக என்றும் இருத்தல்,பிரியமாக..இனிமையாகப் பேசும் இல்லாள்,பணிவுள்ள புதல்வன், நல்ல அறிவு,..அந்த அறிவும் பொருளீட்டவோ, ஞானம் பெறவோ உதவியாக இருத்தல்..இந்த ஆறு அம்சங்கங்களும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மனிதனின் மனதில் ஆறு தீய விஷயங்கள் உள்ளன.அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.ஆகவே அவன் பாவம் செய்யாதவனாக வாழ்வான்.அதனால், பாவத்தின் பின்விளைவுகளும்,துன்பங்களும் அவனை அணுகாது.(தீய விஷயங்கள் ஆறு..எவை என்று சொல்லாவிடினும்..அவை, காமம்,சினம், பேராசை,மோகம்,அகங்காரம், பொறாமை என எடுத்துக் கொள்ளலாம்)
காமம் மிகுந்த ஆண்களைப் பெண்களும்,
சடங்குகள் செய்பவர்களைப் புரோகிதர்களும்
தமக்குள் சண்டையிடும் மக்களை ஆட்சியாளரும்
அறிவு குறைந்தவர்களை அறிஞர்களும்
திருடர்கள் கவனம் குறைந்த மனிதர்களையும்
மருத்துவர்கள் நோயாளிகளையும்
தங்கள் வசப்படுத்தித், தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு வசதிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பசுமாடு, வேலைக்காரர்,விவசாயம்,மனைவி, அறிவு, கீழோர் நட்பு, இவற்றை நாம் கவனித்துப் பராமரிக்காவிட்டால் நம்மை விட்டு நீங்கிவிடும்.
(பசுவை நன்குப் பராமரிக்காவிட்டால் சரியாகப் பால் தராது.வேலைக்காரரை சரியாகக் கவனிக்காவிடின் நம்மை விட்டு விலகிவிடுவர்,விவசாயம் சரியாக இல்லாவிடில் பயிர்கள் வாடி விடும்.மனைவியைப் புறக்கணித்தால் குடும்ப அமைதிப் போகும்.அறிவைப் பயன்படுத்தாமல் இருந்தால் துருப்பிடித்தாற் போல வீணாகும்.கீழோர் நட்பு நாம் ஆதரிக்கும் வரையே நீடிக்கும்.)
படித்து முடிந்ததும் ஆசிரியரை மாணவர்களும்
திருமணமானப் பின்னர் தாயை மகன்களும்
காமுகர்கள் திருப்தியடைந்ததும் தன்னை நம்பிய பெண்களையும்
வாழ்க்கையில் முன்னேறியபின் தங்கள் வெற்றிக்கு உதவியவர்களையும்
பயணிகள் நதியைக் கடந்த பின்னர் படகையும்
நோய் நீங்கியதும் நோயாளிகள் மருத்துவர்களையும் மறந்துவிடுவது வழக்கம்
ஆரோக்கியமான உடல், கடன் இல்லாமை, வீட்டைவிட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை இல்லாமை, நல்லோர் நட்பு, மனசுக்கேற்ற திறமையானத் தொழில், அச்சமற்ற சூழ்நிலை ஆகியவை மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ உதவுவன.
பொறாமை உடையவர்,வெறுப்பு நிறைந்தவர்,எதிலும் திருப்தியற்றவர், எதற்கும் சிடுசிடுப்பவர், எதையும் சந்தேகப்படுபவர், பிறரைச் சுறண்டு வாழ்பவர் இந்த ஆறுவகை மனிதர்களுக்கும் எப்போதும் நிம்மதி இருக்காது.
No comments:
Post a Comment