Tuesday, January 19, 2016

46- வெற்றி அடைய....



உயர்தரமான மனிதன் ,ஒரு காரியத்தில் முயன்று தோல்வியடைந்தாலோ, இழப்பிற்கு ஆளானாலோ அவன் சும்மா இருப்பதில்லை.பின், சரியான புதிய வழியொன்றைப் பின்பற்றி, தான் இழந்ததை மீண்டும் கை பற்றுவேன் என்று சபதம் ஏற்பான்.(பாண்டவர் இழந்த்தை மீண்டும் பெறுவார்கள்)

நாம் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்னைகளை சமாளிக்கும் வழிகளை அறிந்திருக்க வேண்டும்.நிகழ்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும்.நடந்ததற்கு வருந்தாமல்...அதன் விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராக  இருக்க வேண்டும்.இவ்வாறு முக்காலம் குறித்தும் தெளிவாக இருந்தால் , தன் குறிக்கோள்களை அடைவதில் தோல்வி ஏற்படாது.

ஒருவன் சிந்தனையாலும், பேச்சாலும், செயலாலும் இடைவிடாது தன் லட்சியங்களில் முழுமையாக ஈடுபட்டால் அந்த லட்சியம் அவனை நோக்கி வரும்.ஆகவே நாம்.நமக்கு நன்மை தரும் விஷயங்களையே அறிந்திருக்க வேண்டும்

பிறருக்கு நன்மை தரும் செயல்களில் ஈடுபடுதல், சோம்பல் இல்லா முயற்சி,அறிவு, சுறுசுறுப்பு, நேர்மை ஆகியவற்றைப் பெற்றிருத்தல், நல்ல மனிதர்கள் இருப்பிடம் சென்று அவர்களை அடிக்கடி சந்தித்தல் ஆகியவை மூலம் வாழ்க்கையில் வளம் பெற முடியும்

விடாமுயற்சி, வாழ்க்கை வளத்திற்கு ஊற்றுக் கண்ணாகும்.விடாமுயற்சியின் மூலம் லாபமும்,மகிழ்ச்சியும் விளைகின்றன.எளிதில் சலிப்படைந்து, தளராமல் தொடர்ந்து முயற்சி செய்பவன் உயர் நிலையை அடைவான்.ஆனந்தமாய் இருப்பான்

அனைவருக்கும் பொறுமைத் தேவை.வலிமையற்ற ஒருவன் எல்லாப் பிரச்னைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வது நல்லது.ஒருவன் வல்லமை உடையவனாயினும் அவன் பொறுமையை ஒழுக்கத்தின் அம்சமாகக் கருதி கடைப் பிடிக்க வேண்டும்.நல்லது-கெட்டது இரண்டையும் சமமாக நினைப்பவன் மன்னிக்கும் உள்ளம் கொண்டவன் ஆவான்

ஒருவன் புலன்வழி இன்பங்களை அனுபவித்துக் கொண்டு, அதே நேரம் நற்பண்புகளை இழக்காமலும், உலகிற்கு நன்மை செய்வதை மறக்காமலும் இருந்தால்...அவன் புலன்வழி இன்பங்களில் ஈடுபடினும் தவறில்லை.ஆனால் முட்டாள்தனம் மேலோங்கி, புலன்வழி இன்பங்களை மிகையாக ஈடுபடுபவனாக மட்டுமே ஆகிவிடக் கூடாது

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்குக் கவலை வசப்படுபவர்கள் ,தொடர்ந்து தவறு செய்பவர்கள்,கடவுளை நம்பாதவர்கள்,சோம்பேறிகள்,சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள், முயற்சியும்-உழைப்பும் செய்யாதவர்கள் ஆகியோரிடம் செல்வமும், வாழ்க்கை வசதிகளும் தங்கி நிற்பதில்லை

வாழ்க்கையில் நேர்மையாக இருப்பவனை, மேலும் நேர்மைக் காரணமாகத் தவறான செயல்களில் ஈடுபடுவதற்குக் கூசுபவனை, கோணல் புத்திக்காரர்கள், பலகீன மானவன் என மட்டம் தட்டுவார்கள்.அவனுக்குத் தொல்லைத் தருவார்கள்

அளவிற்கு மீறித் தகுதியுடையவனாகத் தன்னைப் பற்றி நினைப்பவன், எல்லை மீறி பிறருக்கு வாரி வழங்குபவன்,அளவு கடந்த வீரம் உள்ளவன்,தன்னை வருத்திக் கொண்டு கடும் விரதங்களைப் பின்பற்றுபவன், தானே அறிவாளி என எண்ணிக் கொண்டிருப்பவன்..ஆகியோரிடம் செல்வமும், வசதிகளும் வராமல் விலகி நிற்கும்

அளவிற்கு மீறிய ஒழுக்கமுடைய சான்றோர்கள் வளமும், வசதியும் பெறுவதில்லை.பண்பே  இல்லாதவர்களிடம் செல்வமும், வசதிகளும் நிலைத்து நிற்பதில்லை.பண்பாளனைத் தேடி செல்வம் செல்வதில்லை.பண்பில்லாதவரிடம்தான் செல்வம் சேருகிறது என்றும் உறுதி படக் கூற முடியாது

கட்டுப்பாடின்றித் திரியும் ஆவேசமான மாடு போல செல்வமும் குருட்டுத்தனமாக யாரிடம் வேண்டுமானாலும் போய்ச் சேருகிறது.

தீ மூட்டித் தேவதைகளுக்கு செய்யும் வேள்விகளால், வேதங்களில் கூறப்படும் நற்பலன்கள் ஏற்படும்.புனித நூல்களைப் பயின்றால் . நற்குணங்களும்,நன்னடத்தையும் நமக்கு அமையும்.மனைவியாக அமையும் பெண் மூலம், குடும்ப இன்பமும்,மக்கள் பேறும் கிடைக்கும்.நம்மிடம் செல்வம் இருந்தால் நாம் மகிழ்வுடன் விளங்கிப் பிறரையும் சந்தோஷப்படுத்தலாம்.

இறந்தபின் மேலுலகில் பல நன்மைகளும்,இன்பங்களும் பெறுவதற்காகப் பலர் இவ்வுலகில் பலியுணவு,காணிக்கை போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.ஆனால், தவறான முறையில் பணம் சம்பாதித்து அதை வைத்து இந்த சடங்குகளைச் செய்தால்,சாவிற்குப் பிறகு விண்ணுலகில் எந்நன்மையும் விளையாது.

தைரியம் நிறைந்த மனிதன் மக்கள் நடமாட்டமில்லா பாலைவனப் பகுதியிலோ, யாரும் நுழைய முடியா அடர்ந்த காட்டிலோ, நுழைய முடியா கோட்டையிலோ பயங்கர ஆபத்து எற்பட்டாலோதிகைப்பூட்டி தடுமாற வைக்கின்ற சூழ்நிலையிலோ, எதிரி தனக்கு எதிராக ஆயுதத்தை உயர்த்தி விட்ட நிலையிலோ சிக்கிக் கொண்டால் பயப்பட மாட்டார்கள்.

சுறுசுறுப்பாக உழைத்தல்,சுயக்கட்டுப்பாடு,நுணுக்கமானத் திறமை,கவனமாக வேலை செய்தல்,மனவுறுதி,நினைவாற்றல், நன்கு யோசித்த பிறகே பணிகளை மேற்கொள்ளுதல்- இவை நல் வளத்தையும், வசதிகளையும் பெருகச் செய்யும் குணங்களாகும்

துறவிகளின் வலிமை தவத்தில் உள்ளது.மெய்ஞானம் பெற்ற வேத அறிஞர்களின் வலிமை பரம்பொருள் பற்றி அவர்கள் அறிந்திருப்பதில் உள்ளது.தீயவர்களின் வலிமை வன்முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பண்பாளரின் பலம் பொறுமையில் அடங்கியுள்ளது

விரதங்களை மேற்கொள்கையில், நடுவில் தண்ணீர்,மூலிகை, பழம்,பால், நெய் ஆகிய ஐந்தை சாப்பிட்டாலோ, புரோகிதர் சொல்படி நடந்து கொண்டாலோ. குருவின் கட்டளைப்படி அச்சமயத்தில் வேறு வேலை செய்தாலோ, மருந்து குடித்தாலோ அவை விரதத்திற்கு பங்கமாகக் கருதப்படுவதில்லை

நமக்கு மற்றவர்களால் என்ன நேரக்கூடாது, நம்மை மற்றவர்கள் என்ன செய்யக்கூடாது என விரும்புகிறோமோ அதை நாமும் பிறருக்குச் செய்யக் கூடாது.இவ்வாறு நம்மை கட்டுப்படுத்திக் கொண்டாலே...இவற்றிலிருந்து நற்பண்புகள் தோன்றும்.தீய குணங்கள் எல்லாம் மிகையான புலனாசைகளால் தோன்றுகின்றன

கோபப்படுபவனை பொறுமையாலும், தீயவர்களை நற்செயல்களாலும்,கருமியை தாராள மனப்பான்மை மூலமும், பொய் பேசுபவனை நேர்மையாலும் நாம் வெல்ல முடியும்.(மற்றவர் கோபிக்கும் போது நாம் பொறுமையாக இருந்தால் அவர் கோபம் நீங்கிவிடும்)

நாம் கீழ்கண்டவர்களை நம்பி ரகசியங்களைச் சொல்லக் கூடாது.பெண், போக்கிரி,சோம்பேறி,கோழை,கடுங்கோபம் கொள்பவன்,தன் வலிமைப் பற்றி பெருமை பேசுபவன்,திருடன்,நன்றி கெட்டவன்,நாத்திகன் ஆகியோர் ரகசியங்களைப் பாதுகாக்க வல்லவர்கள் அல்ல

எவன், தன்னைவிட உயர்ந்தவர்களை பணிவுடன் வணங்குபவனாகவும், மூத்தவர்களுக்கு சேவை செய்வதை வழக்கமாகவும் கொண்டுள்ளானோ அவன் அதிகம் பாராட்டப்படுவான்.அவன் ஆயுள் கூடும்.அவனது புகழும், ஆற்றலும் வளரும்

சில காரியங்களை நிறைவேற்றுவது கடினம்.மிகவும் துன்பப்பட்ட பிறகோ, நற்பண்புகளை கைவிட்டோ, எதிரியின் கால்களில் விழுந்தோ நாம் விரும்பும் குறிப்பிட்ட சில பொருட்களை அடைய முடியுமனால் அப்பொருட்கள் மீது ஆசை வைக்கக் கூடாது

கல்வியறிவற்றவன் பரிதாபத்துக்குரியவன்.தாம்பத்திய உறவு இருந்தும் குழந்தைகள் பிறக்காவிடின் அது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.அரசன் இருந்தும் உணவின்றி பட்டினியால் வாழும் குடிமக்கள் இரக்கத்துக்குரியவர்கள்.குடிமக்கள் இருந்தும் அரசனில்லா நாடு பரிதாபகரமான நிலையில் இருக்கும்

நெடுந்தூரம் நடப்பது, (நீண்ட பயணம்) உடல் நலத்தைக் கெடுத்துவிடும்.உயரத்திலிருந்து விழும் நீர் மலையையும் தேய்த்துவிடும்.தாம்பத்திய சுகம் அறியாத பெண்கள் விரைவில் மூப்பு எய்துவர்.கடுமையான சொற்கள் அம்பு போல பாய்ந்து மனக்கலக்கத்தையும், சோர்வையும் உண்டாக்கி விடும்

சம்பிரதாய முறைப்படி பயிலவில்லை எனின் அல்லது பயின்றதை பின்பற்றாவிடில் வேதங்களின் தூய்மையும்,பாஹ்லீகர்கள் என்ற இனத்து மக்களால் பூமியின் தூய்மையும், பொய்யுரைப்பதால் மனிதர்களின் தூய்மையும் களங்கப்பட்டுவிடுகிறது(பாஹ்லீகர்கள் என்ற இனம் நாகரீகமற்ற, பாவச்செயல்கள் புரியும்...இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்து வந்தனர்)

கற்புள்ள பெண் தேவையின்றிப் பல விஷயங்களில் ஆர்வம் காட்டினால் அவளது தூய்மை கெட்டுவிடும் அபாயமுள்ளது.பொதுவாகவே பெண்கள் கணவரைப் பிரிந்திருந்தால் மாசு அடையக் கூடும்.தங்கம் தரம் குறைந்தால் வெள்ளியின் மதிப்பிற்கு இறங்கிவிடும்.வெள்ளி தரம் குறைந்தால் தகரத்தின் விலைக்கு விற்கும்.ஈயம் தூய்மை கெட்டால் அதைவிட மோசமான பொருள் கிடையாது.

படுத்துக் கிடப்பவன் மூலம் தூக்கத்தை வெல்ல முடியாது.உடலின்பத்தை அனுபவிப்பதன் மூலம் பெண்களை வெல்ல முடியாது.எரிபொருள் மூலம் நெருப்பை அணைக்க  முடியாது.குடிப்பதன் மூலம் மதுப்பழக்கத்தை வெல்ல முடியாது.

நண்பர்களுக்கு அவ்வப்போது அன்பளிப்புகள் அளித்து அவர்களை வசப்படுத்துபவர்கள்,எதிரிகளைப் போரில் தோற்கடித்தவர்கள்,நல்ல உணவுகளும்,பானங்களும் கிடைக்குமாறு வசதியான வாழ்க்கையை மனைவிக்கு ஏற்படுத்தித் தந்தவர்கள் ஆகியோர் வாழ்வில் வெற்றி வீரர்களாக விளங்குவர்.

ஆயிரக்கணக்கில் வருமானம் உடையவரும் வாழ்கிறார்கள்.நூற்றுக்கணக்கான வருமானம் வருபவரும் வாழ்கிறார்கள்.எதுவுமே இல்லாதோரும் எப்படியோ உயிர் வாழ்கிறார்கள்.திருதராஷ்டிரரே! நாடும், அரசும் இருந்தால்தான் வாழலாம் என்ற நினைப்பையும், ஆசையையும் விட்டுவிடுங்கள்

உலகில் உணவு தானியங்கள், தங்கம், மிருகங்கள்,பெண்கள் நிறைந்து கிடந்தாலும், மனிதனின் ஆசை தனிவதில்லை.இதைப் புரிந்து கொண்டால், உலகில் எல்லாப் பொருட்களும் தமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக நினைக்க மாட்டோம்

அரசே! உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்...உங்கள் புதல்வர்களையும், பாண்டுவின் புதல்வர்களையும் சமமாகக் கருதி எவ்வித வித்தியாசமும் இல்லாமல் இருவரையும் சமமாக நடத்துங்கள்.

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.



No comments:

Post a Comment