Friday, January 29, 2016

71)குறிப்பறிதல்

1.ஒருவன் ஏதும் சொல்லாமலேயே அவர் முகம் நோக்கியதும் கருத்து அறிபவன் உலகத்துக்கு
அணிகலனாவான்.

2.ஒருவன் மனதில் உள்ளதை உணர வல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

3.முகம்,கண்,இவற்றின் குறிப்புகளால் உள்ளக் குறிப்பை உணருபவரை எதைக் கொடுத்தாவது
நம் துணை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

4.ஒருவன் மனதில் உள்ளதை.. அவன் கூறாமலேயே அறிந்துக் கொள்பவர் போல மற்றவர்கள்
உறுப்பால் ஒன்று பட்டாலும் அறிவால் வேறுபட்டவர்கள்.

5.ஒருவனது முகக் குறிப்பு உள்ளத்தில் உள்ளதைக் காட்டிவிடும் எனும் போது..அதை உணர
முடியாதவர்களுக்கு கண்கள் இருந்தும் பயனில்லை.

6.ஒருவன் மனதில் உள்ளதை அவன் முகம்..தன் எதிரில் உள்ளதை காட்டும் கண்ணாடிப் போலக்
காட்டிவிடும்.

7.உள்ளத்தில் உள்ள விருப்பு,வெறுப்புகளை தெரிவிக்கும் முகத்தைவிட அறிவு மிக்கது ஏதுமில்லை.

8.முகக் குறிப்பால் உள்ளத்தில் உள்ளதை அறிபவர் முன் ஒருவன் நின்றாலே போதுமானது ஆகும்.

9.கண் பார்வையின் வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள்..ஒருவரின் கண்களைப் பார்த்தே
அவரிடம் உள்ளது நட்பா..பகையா என கூறிவிடுவர்.

10.தாம் நுட்பமான அறிவுடையோர் என்பவர்..பிறர் மனத்தில் உள்ளதை ஆராய்ந்து அறிய பயன்படுத்துவது
அவர்களின் கண்களையே ஆகும்.

72)அவை அறிதல்

1.ஒவ்வொரு சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள், அவையினரின் தன்மையும் உணர்ந்து..அதற்கேற்ப
ஆராய்ந்து பேசுவார்கள்.

2.சொற்களின் வழிமுறையறிந்தவர் அவையினரின் நேரத்தையும்,நிலையையும் உணர்ந்து சொல்ல வேண்டும்.

3.அவையின் தன்மையை அறியாது..சொற்களை பயன்படுத்துவோர்களுக்கு சொற்களின் வகையும் பேசும் திறமையும்
கிடையாது.
4.அறிவாளிகளின் முன் அறிவாளியாகவும்..அறிவற்றவர் முன் அறிவில்லாதவர் போலவும் இருக்க வேண்டும்.

5.அறிவாளிகள் மிகுந்த இடத்தில் பேசாத அடக்கம் ஒருவனுக்கு எல்லா நன்மைகளையும் தரும்.

6.அறிவுடையோர் முன் ஆற்றும் உரையில் குற்றம் ஏற்படின் அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு
சமமாகும்.

7.குற்றமற்ற சொற்களை தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துபவரிடம் அவர் கற்ற கல்வியின் பெருமை விளங்கும்.

8.உணரும் தன்மை உள்ளவர் முன் கற்றவர் பேசுவதென்பது..தானே வளரும் பயிரில் நீர் ஊற்றுவதற்கு சமமாகும்.

9.நல்ல அறிஞர்கள் சூழ்ந்த அவையில்..மனதில் பதியுமாறு பேசுபவர்..சொல்வன்மை உள்ளவர் ஆவார்..அறிவற்றோர்
அவையில் பேசாதிருப்பதே சிறந்தது.

10.அறிவுள்ளவர்கள்..அறிவில்லாதவர் நிறைந்த கூட்டத்தில் பேசுவது தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய
அமிழ்தம் போல வீணாகிவிடும்.

73)அவை அஞ்சாமை

1.சொற்களின் அளவறிந்தவர்கள்..அவையிலிருப்போரை அறிந்து..பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

2.கற்றவரின் முன்..தான் கற்றதை அவர்கள் மனதில் பதிய சொல்லும் வல்லவர்..கற்றவர்களைவிட
கற்றவராக மதிக்கப்படுவர்.

3.பகைவர்களைக் கண்டு அஞ்சாமல் சாகத்துணிந்தவர் பலர் உள்ளனர்..ஆனால்..அறிவுடையோர் உள்ள
அவையில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே உள்ளனர்.

4.அறிஞர்கள் அவையில் நாம் கற்றதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவு எடுத்துச் சொல்லி ..நம்மைவிட
கற்றவர்களிடம் தெரியாததைக் கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.

5.அவையில் பேசும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அஞ்சாமல் விடை அளிக்கும் அளவுக்கு ஏற்றவகையில்
கற்றிருக்க வேண்டும்.

6. கோழைகளுக்கு வாளால் என்ன பயன்? அதுபோல அவையில் பேச அஞ்சுபவர் கற்றும் பயனில்லை.

7.அவையில் பேச அஞ்சுபவன் கற்ற நூல்..போர்க்களத்தில் கோழையின் கையில் ஏந்தியுள்ள வாளுக்கு சமம்.

8.அறிவுடையோர் உள்ள அவையில்..அவர்கள் மனதில் பதிய கருத்துக்களை சொல்ல முடியாதவர்..என்ன
படித்து என்ன பயன்?

9.நூல் பல கற்றும் அறிஞர்கள் நிறைந்த அவையில் பேச அஞ்சுபவர்..கல்லாதவரைவிட இழிவானவர்களாக
கருதப்படுவர்.

10.அவைக்கு அஞ்சி தாம் படித்ததைக் கேட்போர் கவரும் வண்ணம் கூற அஞ்சுபவர்..உயிருடன் இருந்தும்
இறந்தவர் ஆவார்.

74)நாடு

1.குறையா விளை பொருளும்,சிறந்த அறிஞர்களும் பழி இல்லா செல்வம் உடையவரும்
கொண்டதே சிறந்த நாடாகும்.

2.மிக்க பொருள்வளம் கொண்டதாய்..எல்லோராலும் விரும்பத்தக்கதாய்,கேடு இல்லாததாய்
நல்ல விளைச்சல் உள்ளதாய் அமைவதே சிறந்த நாடு.

3.வேற்று நாட்டு மக்கள் குடியேறும்போது ஏற்படும் சுமையைத் தாங்கி..அரசுக்கு வரிகளை
ஒழுங்காகச் செலுத்தும் மக்களையும் பெற்றதே சிறந்த நாடு.

4.பசியும், நோயும், பகையும் இல்லாத நாடு சிறந்த நாடாகும்.

5.பல குழுக்களால் உட்பகையும்,அரசில் பங்குக்கொள்ளும் கொலைகாரர்களும் இல்லாததே
சிறந்த நாடாகும்.

6.பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ளதே
நாடுகள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

7.நிலத்தடி நீர்,மழை ஆகிய இரு வகை நீர் வளமும்..அதற்கேற்ப மலைத்தொடரும்..மலையிலிருந்து
வரும் நீர்வளமான ஆறும், பாதுகாப்பான அரணும் நாட்டிற்கு முக்கியம்.

8.நோயற்ற வாழ்வு,விளைச்சல்,பொருள்வளம்,இன்பவாழ்வு,பாதுகாப்பு ஆகிய ஐந்தும்நாட்டிற்கு அழகு.

9.இடைவிடா முயற்சியால் வளம் பெறும் நாடுகளைவிட..இயற்கையிலேயே வளங்களைக் கொண்ட
நாடே சிறந்த நாடாம்.

10.நல்ல தலைவன் அமையாத நாட்டில் எல்லா வளங்கள் இருந்தாலும் பயனின்றிப் போகும்.

75)அரண்

1.போர் செய்யச் செல்பவர்க்கும் கோட்டை சிறந்ததாகும்..பகைவர்க்கு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும்
கோட்டை பயன்படும்.

2.தெளிந்த நீர்,பரந்த நிலம்,மலையும்,காடும் இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.

3.உயரம்,அகலம்,உறுதி,அழிக்க முடியாத அமைப்பு இவை நான்கும் அமைந்திருப்பதே அரண்.

4.காக்க வேண்டிய இடம் சிறியதாய்.மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய்,தன்னை எதிர்க்கும் பகைவரின் ஊக்கத்தை
அழிக்கக்கூடியதே அரண் ஆகும்.

5.பகைவரால் கைப்பற்ற முடியாததாய்,உள்ளே தேவையான அளவு உணவுப் பொருள் கொண்டதாய்..போர் புரிய
எளிதானதாய் அமைந்ததே அரண் ஆகும்.

6.தன்னிடம் உள்ளவர்க்கு எல்லாப் பொருளும் உடையதாய், போர்க்காலத்தில் உதவ வலிமை மிக்க வீரர்களை
உடையதே அரண் ஆகும்.

7.முற்றுகையிட்டும், முற்றுகை இடாமல் போர் செய்தும்,வஞ்சனை செய்தும் பகைவரால் கைப்பற்ற முடியாத
வலிமையுடையதே அரண் ஆகும்.

8.முற்றுகை இடும் வல்லமை கொண்டு,உள்ளிருந்துக்கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில்
அமைந்ததே அரண்.

9.போர் முனையில் பகைவர் அழியும்படி உள்ளிருந்துக்கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் பெருமைப்
பெற்றதே அரண்.

10.கோட்டைக்கு தேவையான சிறப்புகள் இருந்தாலும்..உள்ளிருந்து போர் புரிபவர் திறமையற்றவராய் இருந்தால்
பயனில்லை.

76)பொருள் செயல் வகை

1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.

2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.

3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்
சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.

4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.

5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள் நெறியிலோ..அன்பு வழியிலோ வரவில்லை என்னும்போது
அதை புறக்கணித்து விட வேண்டும்.

6.வரி,சுங்கம்,பகை நாடு,செலுத்தும் கப்பம் ஆகியவை அரசுக்குரிய செல்வமாகும்.

7.அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படும்.

8.தன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு தொழில் செய்தல்..மலையின் மேல் ஏறி யானைகளின்
போரைப் பார்ப்பது போல எளிதானதாகும்.

9.தன்னுடைய பகைவனின் செருக்கை அழிக்கவல்லது பொருளே ஆகும்.

10.சிறந்ததான பொருளை ஈட்டியவர்க்கு..அறமும்..இன்பமும்..எளிதாக வந்து சேரும்

77)படைமாட்சி

1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படை
அரசுக்கு தலையான செல்வமாகும்.

2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறு
எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்
வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து விடுவார்கள்.

4.அழிவு இல்லாததாய்,வஞ்சனைக்கு இரையாகாததாய் ,பரம்பரை பயமற்ற உறுதி உடையதே உண்மையான
படையாகும்.

5.எமனே கோபமடைந்து எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படை ஆகும்.

6.வீரம்,மானம்,சிறந்த வழி நடத்தல்,தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப்
பாதுகாக்கும் பண்புகளாகும்.

7.எதிர்த்து வரும் பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் ஆற்றல் அறிந்திருப்பின் அதுவே வெற்றிக்கு
செல்லக்கூடிய சிறந்த படையாகும்.

8.போர் புரியும் வீரம்,எதிர்ப்பைத் தாங்கும் ஆற்றல் இல்லை என்றாலும் படையின் அணி வகுப்புத் தோற்றம்
சிறப்புடையதாக அமைய வேண்டும்.

9.சிறுத்து விடாமல்,தலைவனை வெறுக்காமல்,பயன்படா நிலை இல்லாமல்..இருக்கும் படையே வெற்றி பெறும்.

10.நீண்ட நாள் நிலைத்திருக்கும் வீரர் பலரை கொண்டதாக இருந்தாலும்..தலைமை தாங்க சரியான தலைவர்
இல்லை எனில் அப்படை நிலைத்து நிற்காது.

78)படைச்செருக்கு

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.

2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்து
அது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.

3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்
ஆண்மையின் உச்சமாகும்.

4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத் தொடர,
தன் மார்பில் பாய்ந்த வேலை கண்டு மகிழ்பவன் ஆவான்.

5.பகைவர் வீசும் வேல் தன் மீது பாயும் போது விழிகளை இமைத்தல் கூட வீரர்க்கு அழகல்ல.

6.வீரன் தன் வாழ்நாட்களை கணக்கிட்டு ..விழுப்புண் படாத நாட்களெல்லாம்
வீணான நாட்கள் என்று எண்ணுவான்.

7.புகழை மட்டுமே விரும்பி உயிரைப்பற்றி விரும்பாத வீரரின்..காலில் கட்டப்படும் வீரக்கழல் கூட
தனிப்பெருமை பெற்றதாகும்.

8.தலைவன் சினந்தாலும் போர்வந்தால் உயிரைப் பற்றி எண்ணாமல் போர் செய்யும் வீரர்
சிறப்பு குன்றாதவன் ஆவான்.

9.தான் சபதம் செய்தபடி போர்களத்தில் சாக வல்லவனை யாரும் இழிவாக பேசமுடியாது.

10.தன்னைக் காக்கும் தலைவன் கண்களில் நீர் வருமாறு வீரமரணம் அடையும்
சந்தர்ப்பத்தை யாசித்தாவது பெற்றுக்கொள்ளுதல் பெருமை ஆகும்.

No comments:

Post a Comment