Friday, January 29, 2016

91)பெண்வழிச் சேறல்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.

2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.

3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.

4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.

5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

6.மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவர்..தேவாம்சம் பொருந்தியவர்கள் போல சிறப்பான நிலையில் வாழ்ந்தாலும்
பெருமை இல்லாதவர் ஆவர்.

7.மனைவியின் எல்லாக் கட்டளைக்கும் கீழ்படிந்து நடப்பவனை விட மான உணர்வுள்ள பெண்மை சிறந்ததாகும்.

8.மனைவியின் விருப்பப்படி நடப்பவர் ..நண்பர்கள் பற்றி,நற்பணிகள் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

9.ஆணவப் பெண்கள் இடும் கட்டளைக்கு கீழ்ப்படிபவனிடம் ,சிறந்த அறநெறிச் செயல்களோ ..சிறந்த
அறிவாற்றலோ இருக்காது.

10.சிந்திக்கும் திறன்,உறுதியான மனம் கொண்டவர்கள்..பெண்களிடமே பழியாகக் கிடக்க மாட்டார்கள்

92)வரைவின் மகளிர்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்
துன்பத்தையே தருவர்.

2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.

3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தை
தழுவினாற்போன்றது.

4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாக எண்ணுவர்.

5.இயற்கை அறிவும்,கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்..விலைமகளிரின் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

6.நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர்..ஒழுக்கமற்ற பொதுமகளிரை நாட மாட்டார்கள்.

7.உறுதியற்ற மனம் படைத்தவர் மட்டுமே..தன் மனதில் பொருள் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள
பொதுமகளிரை விரும்புவர்.

8.வஞ்சம் நிறைந்த பொது மகளிரிடம் ஒருவன் மயங்குதல் என்பது..அறிவில்லாதவனிடம் ஏற்படும்
மோகினி மயக்கமாகும்.

9.விலை மகளை விரும்புதல்..தெரிந்தே நரகத்தில் விழுவதற்கு சமமாகும்.

10.பொதுமகளிர் தொடர்பு,மதுப்பழக்கம்,சூதாட்டம் இம்மூன்றும் அமைந்தவர் வாழ்வு சிறப்புற அமையாது.

93)கள்ளுண்ணாமை

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்
அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.

2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.

3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..
ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.

4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன்
நாணம் எனப்படும் பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

5.தன்னை மறந்து மயங்கி இருக்க..விலைகொடுத்து கள்ளை வாங்குதல் என்பது மூடத்தனமாகும்.

6.இறப்பு என்பது நீண்ட உறக்கம் என்பது போல..கள்ளுண்பவர்களும் அறிவுமயங்குவதால்
அவர்கள் மதுவுக்கு பதில் நஞ்சு உண்பவர்கள் என்று கூறலாம்.

7.மறைந்திருந்து மது அருந்தினாலும்..அவர்கள் கண்கள் மயக்கத்தைக் காட்டிக்
கொடுப்பதால் ஊரார் அவர்களை எள்ளி நகையாடுவர்.

8.மது அருந்தமாட்டேன் என ஒருவன் பொய் சொல்ல முடியாது..ஏனெனில் மது
மயக்கத்தில் உள்ளபோது உண்மை வெளிப்பட்டுவிடும்.

9.குடிபோதைக்கு ஆளாளவனை திருத்த முயல்வது என்பது..நீரில் மூழ்கிய ஒருவனை
தீப்பந்தம் எடுத்துச் சென்று தேடுவது போல ஆகும்.

10.ஒருவன் மது அருந்தாதபோது.. மது அருந்தியவனின் நிலையை பார்த்தப் பின்னாவது
..திருந்தமாட்டானா

94)சூது

1.வெற்றியே அடைவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது.அந்த வெற்றி..தூண்டிலில் இரையை
விழுங்க நினைத்து மாட்டிக்கொள்ளும் மீன்களைப்போல் நம்மை ஆக்கிவிடும்.

2.ஒரு வெற்றி அடைந்தோம் என்று தொடர்ந்தால்..நூறு தோல்விகளை தழுவுவதே சூதின் தனமை ஆகும்.

3.பணையம் வைத்து சூதாடுவதை பழக்கமாகக் கொண்டால்..அவன் செல்வமும்..அதனை ஈட்டும் வழிமுறையும்
அவனை விட்டு நீங்கும்.

4.துன்பம் பலவற்றை உண்டாக்கி ஒருவன் புகழைக் கெடுக்கும் சூதைப்போல் வறுமை தருவது வேறு எதுவுமில்லை.

5.சூதாடும் கருவியும்,ஆடும் இடமும்,கைத்திறமையையும் மதித்துக் கைவிடாதவர் ஏதும் இல்லாதவர் ஆகி விடுவார்.

6.சூதின் வலையில் வீழ்ந்தவர்கள்..வயிறு நிறைய உணவும் உண்ணமுடியாமல் துன்பப்பட்டு வருந்துவார்கள்.

7.சூதாடும் இடத்தில் ஒருவன் தன் காலத்தை கழித்தால்..அது அவன் மூதாதையர் தேடி வைத்த செல்வம்,சொத்து,
நற்பண்புகள் எல்லாவற்றையும் நாசமாக்கும்.

8.பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி..அருள் நெஞ்சத்தையும் மாற்றி, துன்ப இருளில் ஒருவனை உழலச்
செய்வதே சூது.

9.சூதுக்கு அடிமையாகி விட்டவர்களை விட்டு புகழ்,கல்வி,செல்வம்,உணவு,உடை ஆகியவை அகன்று விடும்.

10உடலுக்கு துன்பம் வர..வர..உயிர் மேல் ஆசை ஏற்படுவதைப் போல..பொருளை இழக்க இழக்க சூதாட்டத்தில்
ஆசை அதிகரிக்கும்.

95)மருந்து

1.வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் சொல்லும் மூன்றில் ஒன்று
கூட அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

2.முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்.. அடுத்த உணவு அருந்தினவர்களுக்கு
எந்த மருந்தும் தேவைப்படாது.

3.உண்ட உணவு செரித்ததும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து
உண்டால் நீண்டநாள் வாழலாம்.

4.உண்ட உணவு செரித்துவிட்டதா என அறிந்தபின்னர்..
பசி எடுத்த பிறகு உணவு அருந்த வேண்டும்.

5.உடலுக்கு வேண்டிய உணவைக்கூட ..அதிகமாகும் போது...மறுத்து அளவுடன் சாப்பிட்டால்..
உயிர் வாழ்வதில் தொல்லை இருக்காது.

6.அளவுடன் உண்பவர் நலமாகவும் ..அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் வாழ்க்கை.

7.பசியின் அளவு..ஆராயாமல் அதிகமாக சாப்பிட நோய்களும் அதிகமாக வரும்.

8.நோய் என்ன? வரக்காரணம் என்ன? தீர்க்க வழி என்ன என ஆராய்ந்து சிகிச்சை
மேற்கொள்ளவேண்டும்.

9.மருத்துவர் என்பவர்..நோய் என்னவென்றும்,அதற்கான காரணத்தையும்,தணிக்கும் வழியையும்
ஆராய்ந்து ..நோயாளியின் உடலுக்கு பொருந்த சிகிச்சை மேற்கொள்ளுபவர்.

10.மருத்துவமுறை என்பது..நோயாளி,மருத்துவன்,மருந்து,அருகிலிருந்து துணை செய்பவர்
என நான்கு வகையாக பாகுபாடு உடையது.

96)குடிமை

1.நடு நிலையான பண்பு,அடக்கம் கொண்டவர்களையே உயர் குடி பிறப்பு எனலாம்.

2.ஒழுக்கம்,வாய்மை,நாணம் இம்மூன்றும் வழுவாமல் வாழ்வரே உயர் குடியில் பிறந்தவர்கள்.

3.முகமலர்ச்சி,ஈகை,இனியசொல்,பிறரை இகழாமை ஆகிய நான்கு நல்ல பண்புகளும் பெற்றவர்கள் உயர்குடியினர்.

4.பலகோடி பெறுவதாக இருந்தாலும்..உயர் குடியில் பிறந்தவர்..சிறப்புக் கெடும் காரியங்களை செய்யமாட்டார்கள்.

5.பழம் பெருமை வாய்ந்த குடிபிறப்பினர்..வறுமையால் வாடிய போதும்..பிறர்க்கு வழங்கும் பண்பை விடமாட்டார்கள்.

6.வஞ்சக எண்ணத்துடன் தகுதியில்லாதவற்றை, மாசற்ற பண்புடன் வாழ்பவர்கள் செய்ய மாட்டார்கள்.

7.உயர்குடியில் பிறந்தவர்களிடம் உண்டாகும் குற்றம்..வானத்து நிலவில் காணப்படும் களங்கம் போல
பலர் அறியத் தெரியும்.

8.நல்ல பண்புள்ள ஒருவனிடம் அன்பற்ற தன்மை இருந்தால்..அவன் பிறந்த குலம் பற்றி ஐயப்பட நேரிடும்.

9.இன்ன நிலத்தில்..இன்ன பயிர் விளைந்தது என சொல்வது போல..ஒருவரின் வாய்ச்சொல்லே அவரின்
குடிபிறப்பைக் காட்டும்.

10.ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால்..தகாத செயல் செய்ய அஞ்சி நாண வேண்டும்.அதுபோல குடியின்
உயர்வு வேண்டுமானாலும் அனைவரிடமும் பணிவு வேண்டும்.

97)மானம்

1.இன்றியமையாத செய்ய வேண்டிய செயல்கள் என்றாலும்..அவற்றால் குடிப்பெருமை குறையுமானால்..
அச்செயல்களை தவிர்த்திட வேண்டும்.

2.புகழ் மிக்க வாழ்க்கையை விரும்புகிறவர்..தனக்கு புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களை
செய்யமாட்டார்கள்.

3.உயர் நிலை அடையும்போது அடக்க உணர்வும்..அந்நிலை மாறும்போது அடிமையாக நடக்காத மான உணர்வும்
வேண்டும்.

4.மக்கள் உயர் நிலையில் இருந்து..மானமிழந்து தாழ்ந்திடும்போது..தலையிலிருந்து உதிர்ந்த முடிக்கு சமமாக
கருதப்படுவர்.

5.மலைபோல் உயர்நிலையில் உள்ளவரும்..ஒரு குன்றிமணி அளவிற்கு இழிவான செயலில் ஈடுபட்டால்
தாழ்ந்து போய் விடுவார்கள்.

6.ஒருவரின் இகழ்வையும் பொறுத்துக்கொண்டு..மானத்தையும் விட்டுவிட்டு பணிந்து செல்வதில் எந்த
புகழோ,பயனோ கிடைக்காது.

7.மதியாதோர் பின் சென்று உயிர் வாழ்வதைவிட ,செத்து ஒழிவது சிறந்ததாகும்.

8.ஒருவரின் சிறப்பு கெடும்போது..அவர் உடம்பை மட்டும் காத்து வாழ்வது என்பது இழிவான செயலாகும்.

9.தன் உடலில் இருந்து உரோமம் நீங்கினாலும்,கவரிமான் உயிர் வாழாதாம்.அதுபோல உயர்ந்த மனிதர்கள்
மானம் போனால் உயிரையே விட்டு விடுவார்கள்.

10.மானம் போயிற்றே என உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் புகழை உலகு போற்றும்.

98)பெருமை

1.ஊக்கம் ஒருவரது வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும்..ஊக்கமின்றி வாழ்வது இழிவே தரும்.

2.பிறப்பினால் அனைவரும் சமம்..தொழில் செய்யும் திறமையால் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.

3.பண்பு இல்லாதவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் உயர்ந்தவர் ஆகமாட்டார்கள்..இழிவான காரியத்தில்
ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தலும் உயர்ந்தாரே ஆவார்கள்.

4.ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொண்டு நடந்தால்..கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் புகழும் ,பெருமையும்
இவர்களுக்கும் கிடைக்கும்.

5.அரிய செயல்களை செய்து முடிக்கும் திறமைசாலிகள் அனைவரும் பெருமைக்குரியவர்களே.

6.பெரியாரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நோக்கம்..சிறியோரின் உணர்ச்சியில் இருக்காது.

7.சிறப்பு நிலை..பொருந்தாத கீழ்மக்களுக்குக் கிடைத்தால்..அவர்கள் வரம்பு மீறி செயல்படுவர்.

8.பண்புடைய பெரியார் எக்காலமும்..எல்லோரிடமும் பணிவுடன் நடப்பார்கள்.ஆனால் சிறியோரோ
பண்பு இன்றி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு இருப்பார்கள்.

9.ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை ஆகும்.ஆணவத்தின் எல்லைக்கு செல்வது சிறுமை ஆகும்.

10.பிறர் குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும்..பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது
சிறுமைக் குணமாகும்.

99)சான்றாண்மை

1.ஆற்றவேண்டிய கடமை இவை என உணர்ந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம்
இயல்பான கடமை ஆகும்.

2.நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கு அழகாகும்..வேறு எதுவும் அழகல்ல.

3.அன்பு,நாணம்,ஒழுக்கம்,இரக்கம்,வாய்மை என ஐந்து பண்புகளும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

4.தவம் என்பது ஒரு உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது.பிறர் செய்யும் தீமைகளை
சுட்டிக்காட்டாத பண்பே சால்பு.

5.ஆணவமின்றி பணிவுடன் நடத்தலே..ஆற்றலாளரின் ஆற்றல்..அதுவே பகையை பகையிலிருந்துமாற்றும் கருவியாக
அமையும்.

6.ஒருவரின் மேன்மைக்கு உரைகல் போல மதிப்பிடும் கருவி..தாழ்ந்தோரிடத்திலும் ஏற்படும் தோல்வியைக் கூட
ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம்தான்.

7.துன்பத்தை செய்தவர்க்கும் நன்மை செய்வதே சான்றாண்மை எனும் நல்ல பண்பாகும்.

8.சால்பு என்ற வலிமையை உடையவர்களுக்கு வறுமை என்பது இழிவு தரக்கூடியது அல்ல.

9.கடமைகளை கண்ணியத்துடன் ஆற்றுகிற சான்றோர் ஊழிக்காலம் ஏற்பட்டாலும்..தம் நிலை மாறாமல் கடல்போல
திகழ்வர்.

10.சான்றோரின் நற்பண்பு குறையத் தொடங்கினால்...அதை இவ்வுலகு பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.

100)பண்புடைமை

1.யாராயிருப்பினும்..அவரிடம் எளிமையாகப் பழகினால்..அதுவே சிறந்த ஒழுக்கமான பண்புடைமை ஆகும்.

2.அன்புடையவராக இருத்தல்..உயர் குடியில் பிறந்த தன்மை ஆகிய இரண்டும் பண்புடையராக வாழ நல்வழியாகும்.

3.உடலால் ஒத்திருந்தாலும்..நற்பண்பு அற்றவர்களை மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியாக இருக்காது.

4.நீதி வழுவாமை,நன்மை செய்தல், என பிறர்க்கு பயன்படப் பணியாற்றுவர்களின் நற் பண்பை உலகு பாராட்டும்.

5.விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுதல் துன்பம் தருவதாகும்.பகைவரிடம் பண்பு கெடாமல் நடக்க
வேண்டும்.

6.பண்பாளர்களைச் சார்ந்து உலக நடமுறைகள் இயங்க வேண்டும்.இல்லையேல் அவை நாசமாகிவிடும்.

7.அரம் போல கூர்மையான அறிவு உடையவர் ஆனாலும்..உரிய பண்பற்றவர் மரத்துக்கு ஒப்பானவர் ஆவார்கள்.

8.நட்புக்கு ஏற்றவராய் இல்லாமல்..தீமை செய்பவரிடம்..பொறுமை காட்டி பண்புடையவராய் நாம் நடக்க வேண்டும்.

9.பிறருடன் நட்புக் கொண்டு பழகி, மகிழ முடியாதவர்க்கு..உலகம் பகலில் கூட இருட்டாகவே இருக்கும்.

10.பாத்திரம் சுத்தமாய் இல்லாவிட்டால்,அதில் ஊற்றும் பாலும் கெட்டு விடுவது போல..பண்பற்றவர் செல்வமும்
பயனற்றதாகும்.

No comments:

Post a Comment