Wednesday, January 20, 2016

47-முன்னேற்றத்தைத் தடுக்கும் பகைவர்கள்



ஒருவன் நல்ல மனிதர்களால் மதிக்கப்பட்டு,எந்தப் பற்றும் இல்லாமல்கடமைகளை செய்து வந்து,தனது ஆற்றலை வீணாக்காமல் உழைத்து வந்தால் அவன் விரைவில் புகழ் பெறுவான்.ஏனெனில்,சான்றோரிடம் நாம் திருப்தித் தரும் விதத்தில் நடந்து கொண்டால், அவர்கள் நம் வாழ்வை மகிழ்ச்சி ஏற்படும்படி செய்யும் வல்லவர்கள் ஆவர்

ஒரு பொருளோ, பரிசோ, பதவியோ தவறான வழிமுறையைப் பின்பற்றி வாங்கப்பட்டிருந்தால் நாம் உடனே அதை மறுத்து விட வேண்டும்.பாம்பு தன் சட்டையை உரித்த பின் அதை அப்படியே போட்டுவிட்டுச் செல்வது போல, தவறான வழியில் கிடைக்கும் எதன் மீதும் பற்று வைக்காது உதறித் தள்ளினால் நாம் எத்துன்பமும் இன்றி சந்தோஷமாக வாழலாம்

பொய் வழக்கு மூலம் மேன்மை பெறுவதும், அரசர் மீது வெறுப்பு கொண்டு, அவரை பகைத்து கொள்வதும், குருவிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து அவை சரியானவைதான் என பிடிவாதமாகக் கூறுவதும்...வேதம் படித்த அறிஞனைக் கொல்வதற்குச் சமமாகும்.(வேதம் படித்தவன் அறிவு, ஒழுக்கம்,பண்பு, லட்சியம், எளிமை,ஆன்மீக நாட்டம், புலன்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முதன்மையானவர்கள் ஆவார்கள் )

பொறாமை குணம் சாவதற்கு சமமாகும்.கடுஞ்சொற்கள் சொல்வது, வசைமாரி பொழிவது, நமது செல்வச் சிறப்புகளுக்குச் சாவுமணி அடிப்பதற்கு சமமாகும்.ஆன்மீக குரு உபதேசம் செய்கையில் கவனிக்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும் அவசரப்படுத்துவது, தற்பெருமையடித்துக் கொள்வது ஆகிய மூன்றும் நம்மைக் கல்வியறிவில் முன்னேறாமல் தடுக்கும் பகைவர்கள் ஆகும்.

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல்,தடுமாற்றம், கூட்டமாக அரட்டை அடித்தல்,முரட்டுப் பிடிவாதம், போலித்தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்

வாழ்க்கையில் புலன் இன்பங்களைத் தேடி அலைபவர்கள், கல்வி, கேள்விகளில் எப்படி சிறப்பு அடைய முடியும்? அது போலவே..அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவன் சுகத்தைத் தேடி அலையக் கூடாது.வாழ்க்கையில் வசதிகள்தான் முக்கியம் என நினைப்பவன், அதே நேரம் அதிக அறிவையும் பெற்றிட வேண்டும் என்ற  ஆசையைக் கைவிட வேண்டும்.படிப்புதான் முக்கியம் என நினைப்பவன், வசதிகளுக்கும்,இன்பங்களுக்கு ஏங்கக் கூடாது

எவ்வளவுதான் கரி, விறகுகள் போட்டாலும் நெருப்பு திருப்தி அடையாது.எத்தனை நதிகள் வந்து கலந்தாலும் கடல் திருப்தியடையாது புதிதாக வருவதையும் ஏற்கும்.கோடிக்கணக்கான உயிர்களை கவர்ந்து சென்ற பின்னும் சாவுக்கடவுளுக்கு திருப்தியாகவில்லை.அழகிய பெண் ,எத்தனை ஆண்கள் தன்னைப் பார்த்து மயங்கினாலும், அனைவரும் தன் அழகுக் கண்டு மயங்க வேண்டும் என எண்ணுவாள்.

ஆசை சுயக்கட்டுப்பாட்டை அழிக்கும்.சாவு, வளர்ச்சியைத் தடுத்து அழிக்கிறது.கோபம் செல்வத்தை அழித்துவிடும்.கருமித்தனம் புகழைக் கொல்லும்.பராமரிப்பில் அக்கறையில்லாவிடின் பசுக்கள் இறந்துவிடும்.ஒரு அந்தணர்க்கு சினம் ஏற்பட்டால்..ஒரு பேரரசையே அழிக்கும்

நம்முடைய வீடுகளில் ஆடுகள், வெண்கலப்பாத்திரங்கள்,வெள்ளிப்பாத்திரங்கள்,தேன், விஷமுறிவு மருந்துகள், பறவைகள் முதலியவற்றையும், புனித நூல் கற்ற அந்தணர், வயதான உறவினர், துன்பத்தில் சிக்கிக் கொண்ட உயர்குடிப் பிறப்பினர் ஆகியவர்களையும் பராமரிக்க வேண்டும்

ஆடுகள், எருதுகள்,சந்தனம்,வீணை,முகம் பார்க்கும் கண்ணாடி,தேன்,நெல், இரும்பு,தாமிரம்,சங்கு, சாலகிராமம்,மஞ்சள், கோரோஜனை ஆகியவை மங்களப் பொருட்களாகக் கருதப்படுகிறது

மேற்கண்ட பொருட்களை நாம் வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும் என மனு அறிவுறுத்துகிறார்.ஏனெனில், அவை பூஜைக்கும்,பெரியவர்களை வழிபடவும்,விருந்தினரை உபசரிக்கவும் பயன்படும் என மனு கூறியுள்ளார்

இன்னொரு நேர்த்தியான விஷயம் -- நாம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறவழியைக் கைவிடக் கூடாது.எதன் மீதாவது விருப்பம் கொண்டோ, எவரிடமும் பயந்தோ,எதற்காகவாவது பேராசைப்பட்டோ தர்ம நெறியிலிருந்து விலகக் கூடாது
...
அறம் நிரந்தரமானது.ஆனால் இன்பமும், துன்பமும் தற்காலிகமாக வந்து செல்லும் நிகழ்ச்சிகளாகும்.வாழ்க்கை நிரந்தரமானது...ஆனால் அது எடுக்கும் வடிவங்கள் மாயையானவை.நிகழ்ச்சிகள் மீது நாம் பற்றுக் கொள்ளக் கூடாது. நிரந்தரமானவற்றை நாம் பற்றிக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும்.நல்ல மனிதர்கள் இத்தகைய திருப்தியை அடைவதிலேயே முழுக் கவனமும் செலுத்துவார்கள்

No comments:

Post a Comment