Monday, January 4, 2016

37-முதலாளியும் ..ஊழியரும்



தன்னிடம் விசுவாசம் கொண்டு, தன் நன்மைக் கருதி உழைக்கின்ற ஊழியர்களிடம் ஒரு போதும் கோபம் கொள்ளாத எஜமானன், அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறான்.ஆகவே அப்படிப்பட்ட எஜமானனுக்குப் பிரச்னையான சூழல் ஏற்படுகையில் ஊழியர்கள் அவனைவிட்டு ஓடாமல் நிலைத்து நின்று உதவுவார்கள்

ஒரு அரசன் தன்னுடைய பணியாளர்கள் உயிர் வாழ செய்கின்றத் தொழிலைத் தடுத்து புதியதோர் அரசை நிறுவவோ அல்லது செல்வம் ஈட்டவோ முயற்சிக்கக் கூடாது.இவ்வாறு வஞ்சிக்கப்பட்டு யார் உயிர் வாழ சிரமப்பட வேண்டியுள்ளதோ அவர்கள் பிரிய அமைச்சர்களாக இருந்தாலும் எதிர்ப்பு உணர்வு மேலிட தலைவனைவிட்டு பிரிவர்

ஒருவன் தன் கீழுள்ள ஊழியர்களை நியமிக்கையில்  அவர்களின் பணிகள் என்ன, தனது வரவு செலவு நிலவரம் எவ்வாறு உள்ளது.ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை எல்லாம் முன்னரே ஆராய வேண்டும்.சரியான பணியும், சரியான ஊதியமும் நிச்சயித்து பொருத்தமான ஊழியர்களை நியமித்துவிட்டால் அவர்கள் உதவியுடன் கடினமான சாதனைகளையும் நிறைவேற்றலாம்

நம் கீழ் பணிபுரிபவர் யாரெல்லாம், விருப்பு-வெறுப்பு, நோக்கத்தை அற்றவர்களாகவும், சுசுறுப்பாக எல்லாக் கடமைகளையும் செய்பவர்களாகவும், நமக்கு நன்மைத் தருவதையே பேசுபவர்களாகவும், நம்மியம் விசுவாசம் உள்ளவர்களாகவும், கண்ணியமான நடத்தை கொண்டவர்களாகவும், தங்கள் உழைப்பின் அதிகப் பட்ச அளவையும்,தங்களுக்குப் போட்டியாக உள்ளவர்களின் ஆற்றலையும் உணர்ந்தவர்களாகவும் உள்ளனரோ அவர்களை நாம் மிகவும் வேண்டியவர்களாகக் கருதிப் பணிவுடன் நடத்த வேண்டும்

நம் கீழ் பணிபுரிபவர் யாராவது நாம் கட்டளையிட்டாலும் அக்கறையுடன் வேலைசெய்யாதவராகவும், நாம் வேலை சொன்னால் எதிர்த்து பேசுபவராகவும், தனக்கு நிரம்ப அறிவுள்ளதாகக் கர்வப்பட்டவராகவும், எதற்கெடுத்தாலும் நம்முடன் வாதம் செய்பவராகவும் இருந்தால் அவரை முடிந்த அளவு விரைவில் பதவிநீக்கம் செய்ய வேண்டும்

தூதருக்குரிய குணங்கள் எட்டு என அறிஞர்கள் கருதுகிறார்கள்.சமயத்திற்கேற்ப முடிவெடுக்கும் திறமை,துணிச்சல், எக்கணமும் செயலில் இறங்க தயாராக இருப்பது, கனிவுடமை,நடை-உடை பழக்கங்களில் பண்பட்ட நளினம். ஊழல் வசப்படாமை,ஆரோக்கியம், கண்ணியம், கவர்ந்து இழுக்கும் பேச்சுத் திறன்,ஆகியவை அந்த எட்டுக் குணங்களாகும்

விவேகமுள்ள எவனும், தான் செய்வது தவறில்லை என நம்பிக்கையுடன் பொருத்தமில்லா நேரத்தில் இன்னொருவர் வீட்டிற்குள் நுழையக் கூடாது.இரவு நேரத்தில் இன்னொருவர் வீட்டில் ஒளிர்ந்திருக்கக் கூடாது.அரசன் விரும்பும் பெண்ணை ஆசையுடன் அணுகக் கூடாது

தீயவர்களுடன் நட்பு வைத்து அவர்களிடம் ஆலோசனைப் பெறுவோரின் கூட்டங்களுடன் நாம் கலந்து கொள்ளக் கூடாது.நமக்கு ஒருவரிடம் நம்பிக்கையில்லாவிடினும் அதை அவரிடம் நேருக்கு நேர் சொல்லிவிடக்கூடாது.ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அடித்தாற் போலத் தெரிவிக்காமல் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி பின் வாங்கிவிடவேண்டும்

நாம் யாருக்குப் பணம் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.நம்மை வெறுப்பவர்,அரசன்,ஒழுக்கமற்ற பெண்,அரசாங்க ஊழியர், மகன்,சகோதரன்,குழந்தைகள்,விதவை,ராணுவத்தில் வேலை பார்ப்பவன்,சொத்தையோ..அதிகாரத்தையோ முழுமையாக இழந்தவன் ஆகியோரிடம் பண விவகாரம் வைத்துக் கொள்ளக்கூடாது

தினமும் குளிப்பதால் பின் வரும் நன்மைகள் விளையும்.உடல் வலிமை பெறும்.அழகுக் கூடும்.குரல் தெளிவு பெறும்.உடலின் நிறம் சிறக்கும்.உடல் மிருதுவாக இருக்கும்,உடலிலிருந்து நறுமணம் வீசும்.உடல் தூய்மையாக இருக்கும்.எழில் மிகும்,இளமை நீடிக்கும்,அழகியப் பெண்களின் நட்பு கிடைக்கும்

அளவோடு உண்பவனுக்கு ஆறு நன்மைகள் விளைகின்றன.ஆரோக்கியம் உறுதிப்படுகிறது.ஆயுள் நீள்கிறது.வளமை கூடுகிறது.மகிழ்ச்சி மிகுதியாகிறது.ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.சாப்பாட்டுராமன் என இகழப்படும் நிலை ஏற்படாது 

No comments:

Post a Comment