Friday, January 29, 2016

61- மடி இன்மை

1.பிறந்த குடி மங்காத விளக்காயிருந்தாலும்...ஒருவனது சோம்பல்
அதை மங்க வைத்துவிடும்.

2.பிறந்த குடி செழிக்க...சோம்பலை ஒழித்து...ஊக்கத்துடன்
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

3.அழிக்கும் இயல்பான சோம்பல் கொண்டவனின் பிறந்த குடி,
அவனுக்கு முன் அழிந்துவிடும்.

4.சோம்பலில் உழன்று..சிறந்த முயற்சி இல்லாதவர்கள் குடி
தனிப் பெருமை இழந்து...குற்றத்தை பெருக்கும்.

5.காலம் தாழ்த்துதல்,மறதி,சோம்பல்.அளவுக்கு மீறிய தூக்கம்
இந்நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் தோணிகளாகும்.

6.நல்லவர்கள் உறவு தானே வந்து சேர்ந்தாலும் ..சோம்பல் உடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.

7.முயற்சியின்றி சோம்பேறியாய் வாழ்பவர்கள் அனைவரின் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

8.நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் இருந்தால் அதுவே அவனைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

9.சோம்பலை அகற்றிவிட்டால் ..அவனது குடிப்பெருமையும்,ஆண்மையும்
தானே வந்து சேரும்.

10.சோம்பல் இல்லா அரசன் உலகம் முழுவதையும் ஒரு சேர அடைவான்

62- ஆள்வினை உடைமை

1.எந்த ஒரு காரியத்தையும் நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் முயன்றால்
அதுவே பெரிய வலிமை ஆகும்.

2.எந்த செயலானாலும் ..அரைக்கிணறு தாண்டாமல் முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும்.

3.பிறர்க்கு உதவி செய்தல்....என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்ற
பண்பில் நிலைத்து இருக்கின்றது.

4.ஊக்கமில்லாதவரை நம் உதவியாளராக வைப்பது என்பது..ஒரு கோழை வாள்
வீச்சில் ஈடுபடுவதை போன்றதாகும்.

5.தன் இன்பத்தை விரும்பாதவனே..தான் ஏற்ற செயலை முடிக்க நினைப்பவனே..
தன் சுற்றத்தாரை தாங்குகின்ற தூணாக ஆவான்.

6.முயற்சி ஒருவனது செல்வத்தை பெருக்கும்..முயற்சி இன்மை அவனை வறுமையில் ஆழ்த்தும்.

7.ஒருவனின் சோம்பலில் மூதேவியும்,சோம்பலற்றவன் முயற்சியில் திருமகளும் வாழ்கின்றனர்.

8.ஊழ்வினை என்பதுடன் அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாமைதான் பெரும்பழியாகும்.

9.ஊழ்வினையால் ஒன்றை செய்ய முடியாமல் போனாலும்..ஒருவனின் முயற்சியானது
அந்த உழைப்பிற்கான வெற்றியைக் கொடுக்கும்.

10.ஊழ்வினையை வெல்ல முடியாது என்று சொல்வதை விட,முயற்சியை மேற்கொண்டால்
அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்யலாம்.

63)இடுக்கண் அழியாமை

1.துன்பம் வரும்போது கலங்கக்கூடாது.அதை எதிர்த்து
வெல்ல வேண்டும்.

2.வெள்ளம் போன்ற அளவற்ற துன்பமும்...அதை நீக்கும் வழியை
அறிவுடையவர்கள் நினைக்க விலகி ஓடும்.

3.துன்பம் வரும்போது கலங்காமல்..அத்துன்பத்திற்கே துன்பத்தை உண்டாக்கி
அதை வெல்ல வேண்டும்.

4.கரடுமுரடான பாதையில் வண்டி இழுக்கும் எருது போல விடாமுயற்சியுடன்
செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்படும்.

5.துன்பங்கள் கண்டு கலங்காதவர்களைக் கண்டு அத்துன்பமே
துன்பபட்டு அழியும்.

6.செல்வம் வரும்போது அதன்மீது பற்றுக்கொள்ளாதவர்கள்தான் ..
வறுமை வந்தபோது துவண்டுவிட மாட்டார்கள்.

7.உடலுக்கும் உயிர்க்கும் துன்பம் இயல்பானதால்..துன்பம் வரும்போது
அதை துன்பமாகக் கருதக்கூடாது.

8.இன்பம் தேடி அலையாது ..துன்பம் இயற்கையானதுதான் என
எண்ணுபவன் ..துவண்டு போவதில்லை.

9.இன்பம் வரும்போது ஆட்டம் போடாமலும்...துன்பம் வரும்போது வாடாமலும்
இரண்டையும் ஒன்று போல் கருதவேண்டும்.

10.துன்பத்தையே இன்பமாகக் கருதிக் கொண்டால்...அவர்களை
பகைவர்களும் பாராட்டுவார்கள்.

64)அமைச்சு

1.உரிய கருவி,ஏற்ற காலம்,செய்யும் வகை,செய்யப்படும் பணி ஆகியவற்றை ஆய்ந்து
அறிந்து செய்ய வல்லவனே அமைச்சன்.

2.அஞ்சாமை,குடிபிறப்பு,காக்கும் திறன்,கற்றறிந்த அறிவு,முயற்சி ஆகிய ஐந்தும்
கொண்டவனே அமைச்சன்.

3.பகைவனின் துணையைப் பிரித்தல்,தம்மிடம் உள்ளவரைக் காத்தல்,பிரிந்தவரை
மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சன்.

4.ஒரு செயலை தேர்ந்தெடுத்தலும்,அதற்கான வழி அறிந்து ஈடுபடுதலும் துணிவான
கருத்துக்களை சொல்லுதலுமே அமைச்சனின் சிறப்பாகும்.

5.அறத்தை அறிந்தவனாய்,சொல்லாற்றல் கொண்டவனாய்,செயல் திறன் படைத்தவனாய்
இருப்பவனே ஆலோசனை சொல்ல தகுதி உடையவன்.

6.இயற்கையான அறிவு,நூலறிவு இரண்டையும் பெற்றவர் முன் எந்த சூழ்ச்சியும் நிற்காது.

7.நூலறிவைப் பெற்றிருந்தாலும்..உலக நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப செயல்களை
நிறைவேற்ற வேண்டும்.

8.சொந்த அறிவும் இன்றி,சொல்வதையும் கேட்காதவர்களுக்கு அமைச்சன் தான் நல்ல
யோசனைகளைக் கூற கடைமைப்பட்டவன்.

9.தவறான வழியைக் கூறும் அமைச்சனைவிட..எழுபது கோடி பகைவர்கள் எவ்வளவோ மேலாகும்.

10.முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளையும்..செயல் படுத்த திறனற்றோர் எதையும் முழுமையாக
செய்யார்.

65)சொல் வன்மை

1.நாவன்மை செல்வம் ஆகும்..அது சிறப்புடைய சிறந்த செல்வமாகும்.

2.ஆக்கமும்..அழிவும் சொல்லும் சொல்லால் வருவதால் ஒருவன் தன்
சொல்லில் தவறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3.கேட்பவரை கவரும் தன்மையும்..கேட்காதவரைக்கூட கேட்க வைப்பதுமே
சொல்வன்மை ஆகும்.

4.சொல்லும் காரணத்தை அறிந்து சொல்லும் சொல்வன்மையைவிட
சிறந்த அறமும்..பொருளும் இல்லை.

5.ஒரு சொல்லை வெல்லும் மற்றொரு சொல் இல்லை என்பதை உணர்ந்த பின்னே
அச்சொல்லை பயன்படுத்தவேண்டும்.

6.பிறர் விரும்பும் கருத்துக்களைச் சொல்லி..பிறர் சொல்லும் சொல்லின்
பயனை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது அறிவுடையார் தொழிலாகும்.

7.சொல்லுவதை நன்கு சொல்லி ..சோர்வற்றவனாய்,அஞ்சாதவனாய்
உள்ளவனை யாராலும் வெல்லமுடியாது.

8.சொற்களை கோர்த்து...இனிமையாக சொல்ல வல்லவரை உலகத்தார் கேட்டு
அதன்படி நடப்பர்.

9.குற்றமற்ற சொற்களை சொல்லத் தெரியாதவர்தான்..பல சொற்களை
திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பர்.

10.தாம் கற்றதை பிறர்க்கு சரியாக விளக்கத் தெரியாதவர்கள்...
கொத்தாக மலர்ந்திருந்தாலும்..மணமில்லா மலரைப் போன்றவர்கள்.

66)வினைத்தூய்மை

1.ஒருவனுக்கு கிடைக்கும் துணையின் நன்மை ஆக்கத்தையும்.
செய்யும் வினையின் நன்மை எல்ல நலன்களையும் கொடுக்கும்.

2. புகழையும்,நன்மையும் தராத செயல்களை எப்பொழுதுமே செய்யாமல்
விட்டொழிக்க வேண்டும்.

3.மேன்மேலும் உயரவேண்டும் என விரும்புபவர்,தன் புகழ் கெட காரணமான
செயலைச் செய்யாமல் விடுவர்.

4.தெளிந்த அறிவினையுடையவர்.. துன்பத்தில் சிக்கினாலும் இழிவான
செயலை செய்யார்.

5.பின்னால் நினைத்து வருந்தும் செயல்களைச் செய்யக்கூடாது.அப்படியே
தவறி செய்திருந்தாலும்..மீண்டும் செய்யாதிருத்தல் நல்லது.

6.பெற்ற தாயின் பசி கண்டு வருந்தினாலும்..ஒருவன் இழிவான
செயலைச் செய்யக்கூடாது.

7.இழிவான செயல் புரிந்து செல்வந்தனாக வாழ்வதை விட,கொடிய
வறுமை தாக்கினாலும் ,நேர்மையாளராக வாழ்வதே மேலானது.

8.தகாத செயல்களை விலக்காமல் செய்தவர்களுக்கு அச்செயல்கள்
நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.

9.பிறர் வருந்த திரட்டிய பொருள் எல்லம் போய்விடும்.. ஆனால் நல்வழியில்
ஈட்டிய செல்வம் நம்மை விட்டு போனாலும் மீண்டும் பயன் தரும்.

10.தவறான வழியில் பொருள் சேர்த்து காப்பாற்றுதல்..பச்சை மண் பாத்திரத்தில்
நீரை விட்டு காப்பாற்றுவது போன்றதாகும்.

67)வினைத்திட்பம்

1.எல்லாம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும்
செயலிலும் உறுதி இருக்காது.

2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்
மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.

3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்
வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.

4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்
செய்து முடிப்பது கடினம்.

5.செயல் திறனால் சிறப்புற்றவரின் வினைதிட்பம்..ஆட்சியாளரையும்
கவர்ந்து பெரிதும் போற்றப்படும்.

6.எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதியாய் இருப்பவரே..
எண்ணியபடி வெற்றி பெறுவார்கள்

7.உருவத்தில் சிறியவர்களைக் கண்டு இகழக்கூடாது.பெரிய தேர் ஓட உதவும்
அச்சாணியும் உருவத்தில் சிறியது தான்.

8.மனம் கலங்காது..ஆராய்ந்து துணிந்து,தளர்ச்சியின்றி ...தாமதமும் இல்லாமல்
ஏற்ற செயலை செய்து முடிக்கவேண்டும்.

9.இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது ...அதனால் ஆரம்பத்தில்
துன்பம் வந்த போதும் துணிவுடன் செய்து முடிக்கவேண்டும்.

10.எவ்வளவு தான் உறுதி உடையவராய் இருந்தாலும் ..செய்யும் தொழிலில்
உறுதியற்றவரை உலகம் மதிக்காது

68)வினைசெயல்வகை

1.ஒரு செயலில் ஈடுபடும்முன் அச்செயலால் எழப்போகும் சாதக,பாதங்கள் பற்றி
ஆராயவேண்டும்..முடிவெடுத்தபின் காலந்தாழ்த்தக்கூடாது.

2.மெதுவாக செய்யவேண்டிய காரியங்களை காலந்தாழ்த்தே செய்யலாம்.
ஆனால் விரைவாக செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும்.

3.இயலும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது.
இயலாத இடமாயின் அதன் வழி அறிந்து செயலை முடிக்க வேண்டும்.

4.ஏற்ற செயல்.. எதிர்கொண்ட பகை இவற்றை முழுதும் முடிக்காது விட்டுவிட்டால்
அது நெருப்பைஅரைகுறையாக அணைத்தாற் போலாகிவிடும்.

5.வேண்டிய போருள்,அதற்கான கருவி,காலம்,செயல்முறை,இடம் ஆகியவற்றை....
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன் பார்த்துக்கொள்ளவேண்டும்.

6.செயலை முடிக்கும் வகையும்,வரக்கூடிய இடையூறும்,முடிந்தபின் கிடைக்கும்
பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும்.

7.ஒரு செயலை செய்பவன் அச்செயலைக்குறித்து நன்கு அறிந்தவனின் கருத்தை
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபடும்போதே ...அது தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்தல்
ஒரு யானையை பயன்படுத்தி மற்ற யானையை பிடிப்பது போன்றதாகும்.

9.நண்பருக்கு...நல்ல உதவியை செய்வதைவிட..பகைவராய் உள்ளவரை தன்னுடன்
சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத்தக்கதாகும்.

10.நம்மைவிட வலிமையுள்ளவரை எதிர்க்க நம்முடன் உள்ளவரே அஞ்சும்போது...
வேண்டுவது கிடைக்குமானால் வலியோரை பணிந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்வர்.

69)தூது

1.அன்பான குணம்,தகுதியான குடிப்பிறப்பு,அரசர் விரும்பும் சிறந்த பண்பு பெற்றிருப்பதே
தூதுவனின் தகுதிகளாகும்.

2.அன்பு,அறிவு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை இம்மூன்றும் தூது செல்வோருக்கு தேவையான
பண்புகளாகும்.

3.வேற்று நாட்டவனிடம்..தன் நாட்டிற்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைக்கும் தூதுவனே..
நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

4.தூது உரைப்போர்.. அறிவு,தோற்றம்,ஆய்ந்த கல்வி ஆகிய மூன்றும்..நிறைந்தவராக இருத்தல்
வேண்டும்.

5.பலவற்றை தொகுத்திச் சொல்லி..பயனற்றவைகளை நீக்கி மகிழுமாறு சொல்லி..அரசனுக்கு
நன்மை உண்டாக்குபவனே தூதுவன்.

6.கற்கவேண்டியவற்றை கற்று..பிறரின் பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில்
பதிய சொல்லி.. காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றனவே தூதுவன்.

7.செய்யவேண்டிய கடமையை தெளிவாக அறிந்து,செய்யும் காலத்தை எதிர் நோக்கித் தக்க
இடத்தையும் ஆராய்ந்து சொல்பவனே தூதுவன்.

8.துணிவு,துணை,தூய ஒழுக்கம் இவை மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

9.ஒரு அரசின் கருத்தை மற்றொரு அரசுக்கு எடுத்துக் கூறும்போது..வாய்த் தவறிக்கூட
குற்றமான சொற்களை சொல்லாதவனே தகுதியான தூதுவன் ஆவான்.

10.தனக்கு அழிவு வந்தாலும்..அதற்காக பயப்படாது..தன் அரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே
தூதுவன் ஆவான்.

70)மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

1.மன்னருடன் பழகுபவர் நெருப்பில் குளிர் காய்பவர்போல் அணுகியும்
அணுகாமலும் இருக்கவேண்டும்.

2.மன்னர் விரும்புவதைத் தாம் விரும்பாமலிருத்தல்,அரசரால்
நிலையான ஆக்கத்தைப் பெற்றுத்தரும்.

3.அரசரிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் தவறுகள்
நேராமல் காத்துக்கொள்ளவேண்டும்.அரசனுக்கு சந்தேகம் வந்துவிட்டால் தீர்ப்பது எளிதல்ல.

4.வல்லமை உள்ள பெரியவர்கள் முன் மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும்
நகைப்பதையும் தவிர்த்து அடக்கமாயிருக்கவேண்டும்.

5.அரசர் பிறருடன் பேசும்போது அதை ஒட்டுக்கேட்கக்கூடாது.அது என்ன வென்றும்
கேட்கக்கூடாது.அவர் என்ன என்று சொன்னால் மட்டுமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

6.அரசர் குறிப்பறிந்து தக்க காலம் எதிர்நோக்கி வெறுப்பில்லாதவற்றையும்,
விருப்பமானவற்றையும் அவர் விரும்பும்படி சொல்லவேண்டும்.

7.விரும்பிக்கேட்டாலும் பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்
பயனற்றவற்றை சொல்லாமல் விடவேண்டும்.

8.அரசர் எனக்கு இளையவர் ..எனக்கு இன்னமுறையில் சொந்தம் என்று எல்லாம்
சொல்லாமல் நம் நிலைக்கு ஏற்றபடி நடக்கவேண்டும்.

9.நாம் அரசரால் விரும்பபட்டோம் என்ற துணிவில் அரசர் விரும்பாதவற்றை
அறிவுடையோர் செய்யமாட்டார்கள்.

10.நெருங்கி அரசருடன் பழகுவதாலேயே தகாத காரியங்களை செய்தால் அது
துன்பத்தையேத் தரும்.

No comments:

Post a Comment