Thursday, January 28, 2016

51)தெரிந்து தெளிதல்

1.அறம்,பொருள்,இன்பம்,உயிர் மேல் அச்சம் இவை நான்கும் ஆராயப்பட்ட பிறகே ஒருவனை ஒரு பணியில்
ஈடுபடுத்த முடியும்.


2.நல்ல குடியில் பிறந்தவனாகவும்,குற்றமற்றவனாகவும்,பழி சொல்லுக்கு அஞ்சுபவனாகவும் இருப்பவனே உயர் குடியில் பிறந்தவன் எனப்படுபவன்.

3.அரிய நூல்கலைக் கற்றவராயிருந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அவரிடம் அறியாமை என்பது இல்லை என்று
சொல்லிவிடமுடியாது.

4.ஒருவனது குணங்களையும்,குறைகளையும் பார்த்து அவற்றுள் எவை மிகுதியாக உள்ளவை என்று தெரிந்த பிறகே
அவனைப் பற்றி முடிவெடுக்க முடியும்

5.ஒருவர் செய்யும் காரியங்களே..அவர்..தரமானவரா,தரங்கட்டவரா என்பதைச் சொல்லிவிடும்.

6.சுற்றத்தார் தொடர்பு அற்றவரை நம்பி தேர்வு செய்யக்கூடாது.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் பழிக்கு அஞ்சார்.
உலகத்துக்கும் கவலைப் பட மாட்டார்.

7.அறிவற்றவரை அன்பு காரணமாக தேர்வு செய்தால்,அது எல்லா அறியாமையையும் கொடுக்கும்.

8.ஆராயாமல் ஒருவரை துணையாய்த் தேர்ந்தெடுத்தால் அது அவனுக்கு மட்டுமல்ல..அவன் வருங்காலத்
தலைமுறைக்கும் கேடு விளைவிக்கும்.

9.நன்கு ஆராய்ந்து தெளிந்ததும் ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.ஆராயாமல் யாரையும் நம்பக் கூடாது.

10ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து..ஏற்றுக்கொண்டு பின் அவரை சந்தேகப்படுவது தீராத் துன்பத்தைத் தரும்

52)தெரிந்து வினையாடல்

1.நற்செயலில் நாட்டம் கொண்டவர்கள் நன்மை,தீமை இரண்டையும் ஆராய்ந்து
அப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்.

2.பொருள் வரும் வழிகளை பெருகச்செய்து வளம் பெற்று இடையூறுகளையும்
ஆராய்ந்து நீக்க வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

3.அன்பு,அறிவு,ஆற்றல்,அவா இல்லாமை ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாக
பெற்றவனை தேர்ந்து எடுக்க வெண்டும்.

4.எவ்வளவு தான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும்..
செயல்வகையில் வேறுபடுபவர் பலர் இருப்பர்.

5.செய்யும் வழிகளை ஆராய்ந்து அறிந்து.. இடையூறுகளைத் தாங்கிச் செய்து
முடிக்கவல்லவன் அல்லால் மற்றவனைச் சிறந்தவன் என்று கருதிட முடியாது.

6.செய்கின்ற தன்மை,செயலின் தன்மை இவற்றை ஆராய்ந்து தக்க காலத்தோடு
பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

7.ஒரு தொழிலை இந்தக் காரணத்தால் இவர் முடிப்பார் என ஆராய்ந்து...
பின் அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.

8.ஒரு செயலில் ஈடுபட அவன் ஏற்றவனா என்பதை ஆரய்ந்த பிறகே ...
அவனை அந்த செயலில் ஈடுபடுத்த வெண்டும்.

9.மேற்கொண்ட தொழிலில் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக
எண்ணுபவரைவிட்டு பெருமை அகலும்.

10.உழைப்பவர் உள்ளம் வாடாதிருந்தால் உலகம் செழிக்கும்...ஆகவே அரசாள்பவர்
உழைப்பவனின் நிலையை நாளும் ஆராயவேண்டும்.

53)சுற்றந்தழால்

1.ஒருவன் வறுமை அடைந்த நேரத்திலும்..அவனிடம் பழைய உறவைப்
பாராட்டிப் பேசுபவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

2.அன்பு குறையா சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் ..அது வளர்ச்சி குறையாத
ஆக்கத்தை கொடுக்கும்.

3.சுற்றத்தாரோடு கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்வு..கரையில்லா
குளத்தின் நீர் போல பயனற்றது ஆகும்.

4.சுற்றத்தாரோடு தழுவி அன்புடன் வாழ்தல்..ஒருவனுக்கு பெரும் செல்வத்தைப்
பெற்ற பலனைத் தரும்.

5.கொடைத் தன்மையும்,இன் சொல்லும் கொண்டவனை சுற்றத்தார் சூழ்ந்து
கொண்டேயிருப்பார்கள்.

6.பெரும் கொடையாளியாகவும்,கோபமற்றவனாகவும் ஆகிய ஒருவன் இருந்தால்
அவனைப்போல சுற்றம் உடையவர் உலகில் இல்லை எனலாம்.

7.காக்கை தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும்.அந்தக் குணமுடையோருக்கு
உலகில் உயர்வு உண்டு.

8.அனைவரும் சமம் என்றாலும்..அவரவர் சிறப்புக்கு ஏற்றார்போல பயன்படுத்தப்
படுவார்களேயானால், அந்த அரசுக்கு அரணாக மக்கள் இருப்பர்.

9.உறவு..ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தால்..அந்தக் காரணம் சரியில்லை என
உணர்ந்ததும் மீண்டும் உறவு கொள்வர்.

10.ஏதோ காரணத்தால் பிரிந்து..மீண்டும் வந்து இணைபவரை..ஆராய்ந்து..
பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்

54)பொச்சாவாமை

1.மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி,அடங்காத சினத்தால் ஏற்படும்
விளைவை விட தீமையானது.

2.நாளும் வாட்டும் வறுமை அறிவைக் கொல்வதுபோல,புகழை
அவனுடைய மறதி கொன்றுவிடும்.

3.மறதி உள்ளவர்களுக்கு..அவர் எப்படிபட்டவராயிருந்தாலும் புகழ்
ஏற்படாது.

4.தம்மைச்சுற்றி பாதுகாப்பிருந்தாலும்..அச்சம் உள்ளவருக்கு பயனில்லை..
அதுபோல மறதி உடையவர்களும் நல்ல நிலை இருந்தும் பயனில்லை.

5.துன்பம் வருமுன் அதை காக்காமல் மறந்துவிடுபவன்..பின்னர்
அவை வரும்போது தன் பிழையை எண்ணி வருந்துவான்.

6.ஒருவரிடம் மறவாமை என்ற பண்பு இருக்குமேயானால்..அதைவிட
அவருக்கு நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.

7.மறதியின்றி அக்கறையுடன் செயல்பட்டால் முடியாதது என்பதே கிடையாது.

8.சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களை போற்றிச் செய்யவேண்டும்..
இல்லையனில் ஏழு பிறப்பிலும் நன்மை உண்டாகாது.

9.மகிழ்ச்சியால் செருக்கு அடைந்து கடமையை மறப்பவன்...
அதுபோல முன்னரே அழிந்துபோனவர்களை எண்ணி திருந்திடவேண்டும்.

10.ஒருவன் எண்ணியதை விடாது...வெற்றி அடைவதிலேயே குறியாக இருந்தால்..
குறிக்கோளை அடைவது எளிதாகும்.

55)செங்கோன்மை

1.குற்றம் என்னவென்று ஆராய்ந்து, எந்த பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல்
வழங்கப்படுவது நீதியாகும்.

2.உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழ்கின்றன..அதுபோல குடிமக்கள் நல்லாட்சியை நோக்குகிறார்கள்.

3.மறை நூலுக்கும்..அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனின் செங்கோலாகும்.

4.குடிமக்களை அன்போடு அணைத்து..செங்கோல் செலுத்துபவரை உலகம் போற்றும்.

5.நீதி வழுவா அரசு இருந்தால் பருவ காலத்தில் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பது போல ஆகும்.

6.அரசுக்கு வெற்றி பகைவரை வீழ்த்துவதில்லை..குடிமக்களை வாழவைப்பதே..

7.நீதி வழுவாத அரசு இருந்தால்...அந்த அரசே நீதியை காக்கும்.

8.ஆடம்பர அரசு...நீதி வழங்கப்படாத அரசு..இவை தானாகவே கெட்டு ஒழியும்.

9. குடிமக்களை பாதுகாப்பதும், குற்றம் புரிந்தவர் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என
கருதாது தண்டிப்பதும் அரசின் கடைமையாகும்.

10.கொடியவர் சிலரை கொலை தண்டனை மூலம் அரசு தண்டிப்பது வயலில் பயிரின்
செழிப்புக்காக களை எடுப்பது பொலாகும்

56)கொடுங்கோன்மை

1.குடிகளை வருத்தும் தொழிலையும்,முறையில்லா செயல்களையும் செய்யும் அரசன் கொலையாளியை விடக்
கொடியவன்.

2.ஆட்சியில் இருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி பொருள் பறித்தல்..வேல் ஏந்தி நிற்கும்
கள்வன் மிரட்டி 'கொடு' என பறித்தல் போன்றது.

3.ஆட்சியில் விளையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தகுந்தவாறு நடக்காத அரசு சீர் குலையும்.

4.நாட்டு நிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசன் பொருளையும்,குடிகளையும் ஒரு சேர இழப்பான்.

5.கொடுமையால் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கக்கூடியதாகும்.

6.நீதி நெறி தவறாத அரசு புகழ் பெறும்..தவறிய அரசு சரிந்து போகும்.

7.மழை இல்லா உலகம் எத்தன்மையானதோ..அத்தன்மையானது நாட்டில் வாழும் மக்களிடம் அருள் இல்லா அரசு.

8.வறுமை இல்லா ஒருவன் வாழ்வு..கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்து விட்டால் அது வறுமைத் துன்பத்தை
விட அதிக துன்பமாகும்.

9.முறை தவறி நாட்டை ஆளும் அரசன் இருந்தால்..அந்த நாட்டில் பருவ மழை கூட பொய்த்துப் போகும்.

10.நாட்டைக் காக்கும் அரசன் முறை தவறினால்..அந் நாட்டில் பசுக்கள் பால் தராது..அறநூல்களையும் மக்கள்
மறப்பர்.

57)வெருவந்த செய்யாமை

1.ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதப்படி..குற்றத்துக்கு பொருந்துமாறு
தண்டிப்பவனே அரசன்.

2.குற்றங்கள் நிகழாமல் இருக்க..தண்டிக்கும்போது அளவுக்கு அதிகமாக நடந்துக்கொள்வது போலக் காட்டி
..அளவு மீறாமல் நடக்க வேண்டும்.

3.குடிமக்கள் அஞ்சும்படியாக நடக்கும் அரசு..விரைவில் அழியும்.

4.நம் தலைவன் கடுமையானவன்..என குடிமக்கள் கருதினால்..அந்த அரசு தன் பெருமையை விரைவில்
இழக்கும்.

5.கடுகடுப்பும்,இனிமையற்ற முகமும் உடையவன் செல்வம் பேயைப்போல அஞ்சத்தக்க தோற்றத்துக்கு ஒப்பாகும்.

6.கடுஞ்சொல்லும்,இரக்கமற்ற உள்ளமும் கொண்டவன் செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.

7.கடுஞ்சொல்லும்,முறையில்லா தண்டனையும் அரசின் வெற்றிக்கான வலிமையை தேய்க்கும் கருவியாக அமையும்.

8.அமைச்சர்களுடன் கலந்து முடிவெடுக்கா அரசன்..சினத்துக்கு ஆளாகி நிற்பதுடன்,புகழையும் இழப்பான்.

9.முன்னரே உரிய பாதுகாப்பு இல்லாத அரசன்..போர் வந்துவிட்டால் தற்காப்பு இல்லாது விரைவில் வீழ்வான்.

10.கொடுங்கோல் மன்னன் படிக்காதவர்களை, இந்த பூமிக்கு பாரமாய் தனக்கு பக்க பலமாய் ஆக்கிக்கொள்வான்.

58)கண்ணோட்டம்

1.இரக்கம் என்னும் சிறந்த அழகு இருப்பதால் தான் உலகு
அழியாமல் இருக்கின்றது.

2.இரக்கம்,அன்பும் இல்லதவர்கள் உயிரோடு இருத்தல் நிலத்துக்கு ஒரு சுமையே ஆகும்.

3.பாடலுடன் பொருந்தாத இசை போல..இரக்கம் சுரக்கா கண்ணினால் என்ன பயன்.

4.தக்க அளவில் அன்பும் இரக்கமும் இல்லாத கண்கள் முகத்தில் இருந்தால் என்ன...இல்லாவிட்டால் என்ன.

5.கருணைஉள்ளம் உள்ளவன் கண்ணே கண்..மற்றவை எல்லம் கண் அல்ல புண்.

6.கண் இருந்தும் இரக்கம் இல்லாதவர் மரம் போன்றவர்கள்.

7.கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு இருப்பதே கண்கள்..அல்லாதவர்கள்
கண்ணற்றோர் என சொல்லலாம்.

8.கடமை தவறாதல் கருணை பொழிதல் உள்ளவர்க்கே
இவ்வுலகம் உரிமையுடையதாகும்.

9.தம்மை அழிக்க நினைப்பவரிடமும் பொறுமை காட்டுவது மிக
உயர்ந்த பண்பாகும்.

10.கருணை உள்ளமும் பண்பும் உள்ளவர்கள் விஷத்தையேக் கொடுத்தாலும் அருந்தி மகிழ்வர்

59)ஒற்றாடல்

1.ஒற்றரும்,நீதிநூலும் அரசனின் இரண்டு கண்களாக அமையும்.

2.எல்லோரிடத்திலும்,நிகழும் எல்லாவற்றையும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல் அரசனின் தொழிலாகும்.

3.நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்து நடக்காத அரசு தழைத்திடமுடியாது.

4.ஒற்று வேலை பார்ப்பவர்கள் வேண்டியவர்,வேண்டாதவர்,சுற்றத்தார் என்று எல்லாம் பாராது பணி செய்தலே
நேர்மைக்கு அடையாளம்.

5.சந்தேகப்படாத உருவத்தோடு,பார்ப்போர் கண் பார்வைக்கும் அஞ்சாமல்,என்ன நேரிடினும் மனத்தில் உள்ளதை
சொல்லாதவரே சிறந்த ஒற்றர்கள் ஆவர்.

6.முற்றும் தொடர்பில்லாதவராய் இருந்துக்கொண்டு..செல்ல முடியாத இடங்களில் சென்று ஆராய்ந்து..துன்பங்களை
தாங்கிக்கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவரே ஒற்றர் ஆவார்.

7.மற்றவர்கள் பற்றிய செய்திகளையும் அவர்களுடன் இருப்பவர் மூலம் கேட்டுத் தெரிந்துக்கொண்டு ..அதன்
உண்மைகளை தெளிந்து அறிவதே உளவறியும் திறனாகும்.

8.ஒரு ஒற்றன் தெரிவித்த செய்தியையும்..மறு ஒற்றன் மூலம் தெரிந்துக்கொண்டு ..செய்தியின் உண்மையைப் பற்றி
முடிவுக்கு வர வேண்டும்.

9.ஒரு ஒற்றனை..மறு ஒற்றன் தெரியாதபடி ஆள வேண்டும்.இது போல் மூன்று ஒற்றர்களை இயங்க வைத்து
அறிவதே உண்மை எனக் கொள்ள வேண்டும்.

10.ஒற்றரின் திறனை வியந்து அவனை சிறப்பு செய்தால்,அவன் ஒற்றன் என்பது வெளிப்படையாக தெரிந்து விடும்

60)ஊக்கம் உடைமை

1.ஊக்கம் உடையவர் எல்லாம் உடையவர்.ஊக்கம் இல்லாதவர் எது இருந்தாலும் உடையவர் ஆக மாட்டார்கள்.

2.ஊக்கம் ஒன்றுதான்..நிலையான உடைமையாகும்.

3.ஊக்கம் உடையவர்கள்..ஆக்கம் இழந்து விட்டாலும்..இழந்துவிட்டோமே என கலங்க மாட்டார்கள்.

4.உயர்வு..ஊக்கமுடையவர்களை தேடிப்பிடித்து போய்ச் சேரும்.

5.தண்ணீர் அளவே தாமரைத் தண்டின் அளவும் இருக்கும்.அதுபோல மனிதர்களின் வாழ்க்கையின் உயர்வும்
ஊக்கத்தின் அளவே இருக்கும்.

6.உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்..அவ்வுயர்வை அடையாவிடினும் நினைப்பை விட்டு விடக் கூடாது.

7.உடம்பு முழுதும் அம்புகளால் புண்பட்டாலும் யானை தன் பெருமையை நிலை நிறுத்தும்..அதுபோல
அழிவு வந்தாலும் ஊக்கமுடையவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

8.ஊக்கம் அற்றோர்..தம்மைத் தாமே எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடைய மாட்டார்கள்.

9.யானை பருத்த உடலையும்,கூர்மையான தந்தங்களையும் உடையது..ஆனாலும் ஊக்கமுள்ள புலி
தாக்கினால் அஞ்சும்.

10.ஊக்கமில்லாதவர்கள் மனிதர்களாக காணப்பட்டாலும்..மரங்களுக்கும்,அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

No comments:

Post a Comment