Thursday, January 21, 2016

49- சுவர்க்கத்தை அடைய....


அந்தணர் எனப்படுபவர், தினமும் காலை-மாலை குளிக்க வேண்டும்.பூணூல் அணிந்திருக்க வேண்டும்.வேதம் ஓத வேண்டும்.சுகாதாரமற்ற உணவை உண்ணக் கூடாது.உண்மையே பேச வேண்டும்.தன் குரு சொன்ன சடங்குகளைச் செய்து வர வேண்டும்.அப்படிப்பட்டவர்கள் சுவர்க்கத்தில் வாழ்வர்

சத்திரியர் எனப்படுபவர் , வேதங்களின் பொருளை அறிய வேண்டும்.தூய்மையான வேள்விகள் நடைபெற உதவ வேண்டும்.தானும், வேள்விகளை நிகழ்த்த வேண்டும்.குடிமக்களை பராமரிக்க வேண்டும்.பசுக்களுக்கும், வேதவிற்பன்னர்களுக்கும் தீங்கு நேராமல் பாதுகாக்க வேண்டும்.போர்க்களத்தில் கொல்லப்பட தயாராய் இருக்க வேண்டும்.அத்தகையோர் சுவர்க்கத்தில் வாழ்வர்

வைசியர் எனப்படுபவர், வேதங்களின் பொருளைக் கேட்டறிய வேண்டும்.உரிய சமயத்தைல் தன் செல்வத்தை வாரிசுகளுக்குக் கொடுப்பதுடன் ,அந்தணர்களுக்கும்,சத்திரியர்களுக்கும்,சொத்தில் பங்கு தர வேண்டும்.மூவகை வேள்விகளின் புனிதப் புகையை நுகர வேண்டும்.இப்படிப்பட்ட வைசியர் சாவிற்குப் பின் சுவர்க்கத்தில் வசிப்பர்

மேற்படி மூவருணங்களுக்கு அப்பாற்பட்ட நான்காம் வருணத்தில் உள்ளவர்கள், அந்தணர்கள் - சத்திரியர்கள்- வைசியர்கள் ஆகியவரின் அதே வரிசைப்படி மதித்து, வழிப்பட்டு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.இதனால் மூவருணத்தினரும் திருப்தியடைவர்.அவர்களுக்கு பணிவிடை செய்த இவர்களின் பாவம் நீங்கும்.நிம்மதியுடன் இவர்கள் இறப்பார்கள்.அதற்குப்பின் இவர்கள் சுவர்க்கத்தில் இன்பமாய் வசிப்பர்

அரசே! நான்கு வருணத்தினர் கடமைகளையும் கூறினேன்.அதற்குக் காரணம் உண்டு.இதுவரை,..சத்திரியர்களுக்குரிய முறையில் தருமபுத்திரர் தன் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை.ஆகவே, அவரை அரியணையில் அமர்த்தி ஆட்சிப் பொறுப்பை ஒப்படையுங்கள்" என விதுரர் கூறி முடித்தார்

விதுரர்க்கு திருதராஷ்டிரர் பதில் கூறலானார்....

"விதுரா! நீ தொடர்ந்து அறிவுறுத்தி வருவதைப்போலத்தான், நடவடிக்கை எடுக்க நான் விரும்புகிறேன்.ஏனெனில் உன் அறிவுரைகள் சரியானது ஆகும்

எனது மனம் எப்போதும் பாண்டவர்க்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறது.ஆனால், துரியோதனனிடம் கொண்ட பாசம் என் மனதை மாற்றிவிடுகிறது.
விதியின் வலிமை பெரியது.இதுவரை விதியை வென்றவர் இல்லை.நாம் எவ்வளவு முயற்சித்தாலும் விதியின்படிதான் நடக்கும்.விதியின் போக்கை மாற்றவோ..தடுக்கவோ முடியாது,விதி வலியது" என்று முடித்தார்
(திருதிராஷ்டிரர், தன்னால் முடியாது என்பதை கூறாமல் விதியின் மீது பழையைப்போட்டார்.ஆனால் துரியோதனின் செயலுக்கு தண்டனை வேண்டும்.பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதும் விதியின் செயல்  என்று அவர் நினைப்பதாகக் கொள்ளலாம்)



ஊழை விட வலியது இல்லை என்கிறார் வள்ளுவரும்...

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.
சூழினுந் தான்முந் துறும்

விதியைவிட வலிமை உள்ளது வேறு என்ன?ஊழை விலக்க வேறு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் ஊழ்தான் வந்து நிற்கும்.

No comments:

Post a Comment