Wednesday, January 6, 2016

39-போரைத் தவிர்



கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே போர் மூண்டால் என்ன தீமைகள் உண்டாகும் என யோசித்துப் பாருங்கள்.அப்போர், இந்திரனுக்கும்,இதர தேவர்களுக்கும் வேதனைத் தரும்.கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நிரந்திரப் பகை ஏற்படும்.உங்களின் எஞ்சியுள்ள வாழ்க்கை கவலை நிறைந்ததாய் அமையும்.குரு வம்சத்தின் பெயர் களங்கப்படும்.உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டு எதிரிகள் மகிழ்ச்சியடைவர்

வானத்தின் உச்சியில் எழுந்து, பூமியின் குறுக்காக வீழ்கின்ற வால்நட்சத்திரம் நாட்டின் நலனுக்குக் கெடுதலாக அமையும்.அதுபோலவே போரின் காரணமாக உங்களுக்கும்,பீஷ்மர்-துரோணர்-தருமர் ஆகிய மாவீரர்களுக்கும் பொங்கி வரும் சினம் உலகையே அழித்துவிடும்

இதற்கு மாறாக நாட்டின் நலன் கருதி உங்களது நூறு மகன்களும், பாண்டுவின் ஐந்து மகன்களும், கர்ணன் ஆகியோரும் ஒன்று சேர்ந்தால் கடல்வரை பரவியுள்ள நிலப்பரப்பு முழுவதையும் வென்று அரசாளலாம்

அரசே! உங்கள் மகன்கள் அனைவரும் சேர்ந்து ஒரு காடு போன்றவர்கள்.பாண்டுவின் புதல்வர்கள் புலிகளுக்குச் சமம்.புலிகளைக் கொல்வதாகக் கிளம்பிக் காடே அழியும் நிலை செய்துவிடக் கூடாது.காட்டை விட்டு புலிகளை விரட்டிவிடவும் முயற்சிக்கக் கூடாது..புலிகள் இல்லா காடு பாதுகாப்பற்றது.காடில்லாமல் புலிகளும்   வாழாது.புலிகள் காடுகளைக் காக்கின்றன.காடு புலிகளுக்கு பாதுகாப்பைத் தரும்

தீயவர்கள் மற்றவர்களிடம் என்னென்ன நல்ல குணங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.மற்றவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் அக்கறை செலுத்துகின்றனர்

தேவலோகத்திலிருந்து அமிர்தத்தைப் பிரிக்க முடியாது.அதுபோல, வாழ்வில் உயர்தரவளமையை அறநெறியிலிருந்து விலகிப் பெற இயலாது.ஆகவே, வாழ்வில் உன்னத செழிப்பையும், முன்னேற்றத்தையும் நாம் அடைய விரும்பினால் ஆரம்பம் முதலே நற்பண்புகளைக் கடைப் பிடிக்க வேண்டும்

நம் மனம் தீய சிந்தகளிலிருந்து பிரிந்து விலகி நின்று, நற்பண்புகளில் வேரூன்றி இருக்க வேண்டும்,அப்போதுதான் உலகப் பொருட்களின் மெய்யான தன்மையையும்,அவற்றால் ஏர்படும் மாறுதல்களையும் நன்கு அறிந்தவர்கள் ஆக முடியும்

நற்பண்புகளை பின்பற்றுதல், வசதிகளைப் பெறுதல், புலன்வழி இன்பங்களை அனுபவித்தல் ஆகியவற்றை அதற்கான காலத்தில் எவன் முறையாக துய்க்கின்றானோ அவனுக்கு அவை மூன்றும் இவ்வுலகில் கிடைப்பதைப் போல மறுவுலகிலும் கிடைத்துவிடும்

சினமும்,மகிழ்ச்சியும் மிகுந்த ஆற்றலை உடையவை.இவற்றிலிருந்து பொங்கிப் பிரவாகிக்கும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி, சரியான வழியில் செலுத்துவதுடன் சோதனையான சூழலிலும் தடுமாறாது இருக்க வேண்டும்.இம்முயற்சியில் வெற்றி பெறுபவனை செல்வமும், வசதிகளும் வந்து சேரும்.  

No comments:

Post a Comment