Friday, January 29, 2016

101)நன்றியில் செல்வம்

1.ஒருவன் பெரும் பொருளைச் சேர்த்து அதை அனுபவிக்காமல் இறந்து போனால்..சேர்க்கப்பட்ட செல்வத்தால் பயன் என்ன?

2.பொருளால் எல்லாம் முடியும் என..பிறர்க்கு எதுவும் கொடுக்காமல் செல்வத்தை பற்றிக்கொண்டிருப்பவன்..எச்சிறப்பும் அற்ற இழிபிறவி ஆவான்.

3.பொருளை சேர்ப்பதே குறியாக இருப்பவர்கள்..பிறந்து வாழ்வதே பூமிக்கு சுமையாகும்.

4.யாராலும் விரும்பப்படாதவன்..மரணத்திற்குப்பின் எஞ்சி நிற்பது எது என எதை நினைத்திட முடியும்.

5.ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் அடையும் இன்பத்தை அறியமுடியாதவனிடம்..கோடி கோடியாக பணம் இருந்தும் பயன் இல்லை.

6.தானும் அனுபவிக்காது..தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்பவன் ..அவனிடம் உள்ள செல்வத்துக்கு ஒரு நோய் போல ஆவான்.

7.வறியவர்க்கு ஏதும் உதவாதவன் செல்வம்..அழகானப்பெண் ஒருத்தி தனித்திருந்து முதுமை அடைவதைப் போன்றது.

8.பிறர்க்கு உதவாதவன் செல்வம்..ஊர் நடுவில் எதற்கும் உதவாத நச்சு மரத்தில் பழுத்துள்ள பழம் போல
உபயோகமற்றது.

9.அன்பும் இன்றி,தன்னையும் வருத்தி..அறவழிக்கு புறம்பாய் சேர்க்கும் செல்வத்தை பிறர் கொள்ளை கொண்டு
போய்விடுவர்.

10.நல்ல உள்ளம் கொண்ட செல்வர்களின் சிறிய வறுமை என்பது..உலகத்தைக் காக்கும் மழைமேகம் வறுமை
மிகுந்தாற் போன்ற தன்மையுடையதாம்.

102)நாணுடைமை

1.தகாத செயல் செய்து நாணுவதற்கும்..நல்ல பெண்ணின் இயல்பான நாணத்திற்கும் வேறுபாடு உண்டு.

2.உணவு,உடை எல்லாம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது..ஆனால் மாண்பு மட்டுமே மக்களின் சிறப்பு இயல்பு.

3.உடலுடன் உயிர் இணைந்து இருப்பது போல..மாண்பு எனப்படுவது நாண உணர்வோடு இணைந்து இருப்பது.

4.சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாக அமையும்.நாணுடைமை அற்றோர்.. பெருமிதமாக நடக்கும் நடையே
நோய்க்கு ஒப்பானதாகும்.

5.தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றி..பிறர்க்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் பண்பிற்கு உறைவிடமாவர்.

6.பரந்த உலகில் நாணம் என்னும் வேலியே சிறந்த பாதுகாப்பாக கொள்ள வேண்டும்.

7.நாண உணர்வுள்ளவர்கள் மானத்தைக்காக்க உயிரையும் விடுவர்.உயிரைக் காக்க மானம் இழக்க மாட்டார்கள்.

8.வெட்கப்படும் அளவு பழி ஏற்படுமேயானால்..அதற்கு வெட்கப்படாதவர்களை விட்டு அறநெறி அகலும்.

9.கொள்கை தவறினால் குலத்துக்கு இழுக்கு..பிறர் பழிக்கும் செயல் செய்யின் நலமனைத்தும் கெடும்.

10.கயிறு கொண்டு பொம்மையை உயிர் இருப்பது போல ஆட்டிவைக்கப்படுவதற்கும்..நாண உணர்வற்றவர்களுக்கும்
வேறுபாடு இல்லை.

103)குடிசெயல்வகை

1.கடமையைச் செய்வதில் சோர்வு காணாதவனுக்கு அப்பெருமையைவிட..வேறொரு பெருமை கிடையாது.

2.முயற்சி, நிறைந்த அறிவு கொண்டு அயராது பாடுபட்டால்..அவனைச் சார்ந்த குடிமக்கள் பெருமை உயரும்.

3.என் குடியை உயரச் செய்வேன் என முயலும் ஒருவனுக்கு..இயற்கையின் ஆற்றல் தானே முன் வந்து துணை
செய்யும்.

4.தம்மைச் சார்ந்த குடிமக்களை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு, முயல்வோருக்கு வெற்றி
வந்து குவியும்.

5.குற்றம் அற்றவனாய்..குடி உயரும் செயல் செய்து வாழ்பவனை உறவு போல கருதி சுற்றம் சூழ்ந்துகொள்ளும்.

6.நல்லபடி ஆளும் திறமை பெற்றவர்..பிறந்த குடிக்கு பெருமை சேர்ப்பர்.

7.போர்க்களத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் அஞ்சா வீரர் போல,குடிமக்களை தாங்கும் பொறுப்பும் ஆற்றலுள்ளவர்க்கு உண்டு.

8.குடி உயிர செயல் செய்கிறவனுக்கு காலம் என்று ஒன்று இல்லை.சோம்பல் கொண்டு தயங்கினால் குடிமக்கள்
நலன் கெடும்.

9.குடிமக்களுக்கு வரக்கூடிய குற்றத்தை வராது நீக்க முயலுபவன்..அவனைப் பொறுத்தவரை துன்பத்தைத்
தாங்கிக்கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

10.துன்பத்தை எதிர் நின்று தாங்கும் ஆற்றலுள்ளவர் இல்லாத குடியை..அத்துன்பம் வெட்டி வீழ்த்திவிடும்

104)உழவு

1.உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும்..ஏர்த்தொழிலின் பின் நிற்பதால்
உழவுத்தொழிலே சிறந்ததாகும்.

2.பல தொழில்கள் புரிபவர்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில்
இருப்பதால்.. உலகத்தார்க்கு அதுவே அச்சாணியாகும்.

3.உழுதுண்டு வாழ்பவரே உரிமையோடு வாழ்பவர்கள்..ஏனெனில் மற்றவர்கள் பிறரிடம் வேலைசெய்து சம்பாதித்து
உண்பவராக இருப்பதால்.

 4.பல அரசுகளின் குடைநிழல்களை தம் குடையின் கீழ் கொண்டு வரும்
வலிமை உழவர்களுக்கே உண்டு.

5.தானே தொழில் செய்து சம்பாதித்து உண்ணும் இயல்புடையவர் பிறரிடம் கையேந்தார்..
தம்மிடம் வேண்டி நிற்போருக்கும் ஒளிக்காமல் வழங்குவர்.

6.பற்றை விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகளும் உழவர்களின் கையை
எதிர்பார்த்தே வாழவேண்டும்.

7.ஒரு பலம் புழுதி...கால் புழுதி ஆகும்படி நன்கு உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும்
போடாமலேயே பயிர் செழித்து வளரும்.

8.உழுவது உரம் இடுதல் நன்று..களைஎடுப்பது..நீர்பாய்ச்சுதல் மிகவும் நல்லது.
அதைவிட பயிரை பாதுகாப்பது மிகமிக நல்லது.

9.உழவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் இருப்பானேயாயின்..அந்நிலம் ..மனைவிபோல
பிணங்கு கொண்டு அவனை வெறுக்கும்.

10.வாழ எந்த வழியும் இல்லை என சோம்பித் திரிவாரைப் பார்த்து..பூமித்தாய்
கேலியாய் சிரிப்பாள்.

105)நல்குரவு

1.வறுமையைப்போல வேறு துன்பம் எது என்று கேட்டால்,வறுமையைப் போல துன்பம் வறுமை ஒன்றே ஆகும்.

2.வறுமை என்னும் பாவி ஒருவனை நெருங்கினால்..அவருக்கு எக்காலத்திலும் நிம்மதி என்பதே கிடையாது.

3.வறுமை காரணமாக பேராசை ஏற்பட்டால்..அது அவன் பரம்பரை பெருமையையும் ,புகழையும் சேர்த்து
கெடுத்துவிடும்.

4.வறுமை என்பது..நற்குடியிற் பிறந்தவரிடம் இழிவு தரும் சொல் பிறக்க காரணமான சோர்வை உண்டாக்கும்.

5.வறுமை என்னும் துன்பத்திலிருந்து பலவகை துன்பங்கள் உருவாகும்.

6.அரிய நூல் கருத்துக்களை, ஒரு வறியவன் சொன்னால்..அவை எடுபடாமற் போகும்.

7.வறுமை ..வந்துவிட்டது என்று..அறநெறி விலகி நடப்பவனை தாய் கூட புறக்கணிப்பாள்.

8.வறியவன்..நேற்று கொலை செய்தது போல துன்புறுத்திய..வறுமை இன்று வராமல் இருக்க வேண்டுமே என
நாளும் வருந்துவான்.

9.நெருப்பில் படுத்து தூங்கினாலும் துங்க முடியும்.ஆனால் வறுமைப் படுத்தும் பாட்டில் தூங்குவது இயலாது.

10.ஒழுங்குமுறையற்றதால் வறிமையுற்றோர், தம்மை முற்றுந் துறக்காமல் உயிர் வாழ்வது உப்புக்கும்..கஞ்சிக்கும் கேடாகும்

106)இரவு

1.கொடுக்கக்கூடிய தகுதி இருந்தும்..இரப்பவர்களுக்கு இல்லை என்று சொன்னால் பழி ஏற்படும்.

2.இரந்து அடையும் பொருள் துன்பமின்றி கிடைக்குமானால்..வழங்குபர்,வாங்குபவர் இருவர் மனத்திலும்
இன்பம் உண்டாகும்.

3.ஒளிவு மறைவு இல்லா நெஞ்சம்,கடமைஉணர்வு கொண்டவரிடம் வறுமை காரணமாக ஒருவர் இரந்து
பொருள் கேட்பதும் பெருமையுடையது ஆகும்.

4.உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையில்லாதவரிடம்..இரந்து கேட்பது பிறர்க்குக் கொடுப்பது போல
பெருமையைத் தரும்.

5.உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கும் பண்புடையோர் இருப்பதாலேயே..இல்லாதார் அவர்களிடம்
சென்று இரத்தலை மேற்கொள்கின்றனர்.

6.உள்ளதை ஒளிக்காதவரைக் கண்டால் ..இரப்போரின் வறுமைத் துன்பம் அகலும்.

7.இகழ்ந்து பேசாமல்..ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால்..இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து
மகிழ்ச்சி அடையும்.

8.இரப்பவர்கள் தம்மை அணுகக்கூடாது என நினைக்கும் மனிதருக்கும்..மரப்பதுமைகளுக்கும் வேறுபாடு இல்லை.

9.இரந்து பொருள் பெறுவோர் இல்லையெனில்..பொருள் கொடுத்து புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.

10இரப்பவன் எந்நிலையிலும் கோபம் கொள்ளக்கூடாது..தன்னைப் போல் பிறர் நிலையும் இருக்கக்கூடும் என்ற
எண்ணமும் வேண்டும்.

107)இரவச்சம்

1.உள்ளதை ஒளிக்காமல் வழங்கும் இரக்கச் சிந்தை உள்ளவரிடம்..இரவாமல்
இருப்பது கோடி மடங்கு உயர்வானது.

2.உலகைப்படைத்தவன்.. உலகில் சிலர் இரந்துதான் உயிர்வாழவேண்டும் என
ஏற்படுத்தியிருந்தால்..கெட்டொழியப்படும்.

3.வறுமையை.. பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என எண்ணும்
கொடுமையைப்போல வேறு கொடுமை இல்லை.

4.வாழ வழி இல்லாதபோதும்..பிறரிடம் கைநீட்டாத பண்புக்கு
இந்த உலகே ஈடாகாது.

5.கூழ்தான் உணவென்றாலும் ..தம் முயற்சியில் சம்பாதித்து அதைக்குடித்தால்
அதைவிட இனிமையானது எதுவும் இல்லை.

6.பசுவிற்க்கு தண்ணீர் வேண்டும் என்று இரந்து கேட்டாலும் அதைவிட
இழிவானது வேறொன்றுமில்லை.

7.இருப்பதை மறைத்து இல்லை என்பாரிடம் கையேந்த வேண்டாம் என
கையேந்தி கேட்பதில் தவறில்லை.

8..இருப்பதை மறைத்து ..இல்லை எனக் கூறுபவர்மீது..இரத்தல் என்னும்
மரக்கலம் மோதினால் அதுதான் உடையும்.

9.இரந்து வாழ்வோர் நிலை கண்டு உள்ளம் உருகும்.கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை
நினைத்தால் உள்ளமே ஒழிந்துவிடும்.

10.இரப்பவரிடம் இல்லை என்றால் இரப்போர் உயிரே போய்விடுகிறதே..ஆனால் இல்லை என்று பொய்
சொல்பவரின் உயிர் மட்டும் எங்கு ஒளிந்துக் கொள்கிறது.

108)கயமை

1.மனிதர்களிடம் மட்டும் தான் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் கயவர்களைக் காணமுடியும்.

2.எப்போதும் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலையற்ற கயவர்கள்
ஒரு விதத்தில் பாக்யசாலிகள்.

3.புராணங்களில் வரும் தேவர்கள் போல..தங்கள் மனம் போன போக்கில் கயவர்களும் செல்வதால் அவர்கள்
இருவரும் சமம் எனலாம்.

4.கீழ் மக்கள்..தங்களைவிட கீழ்மக்களைக் கண்டால்..அவர்களைவிட நாம் நல்லவர்கள் என கர்வம் அடைவர்.

5.கீழ் மக்கள் தாங்கள் விரும்புவது கிடைத்தால் ஒழுக்கம் உள்ளவர் போல காட்டிக்கொள்வர்.மற்ற நேரங்களில்
பயம் காரணமாக உத்தமர் போல நடிப்பர்.

6.மறைக்கப்பட வேண்டிய ரகசியம் ஒன்றைக் கேட்டதும்..பிறரிடம் வலிய போய் சொல்வதால்..கயவர்களை
பறை என்ற கருவிக்கு ஒப்பிடலாம்.

7.முரடர்களுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்களே அன்றி ..ஈகை குணமற்ற கயவர்கள் ஏழை,எளியவர்க்கு
எச்சில் கையையும் உதற மாட்டார்கள்.

8.குறைகளை சொன்னதும்..சான்றோரிடம் பயன் பெற முடியும்.ஆனால் கயவர்களோ கரும்பு போல நசுக்கிப்
பிழிந்தால்தான்..பயன்படுவர்.

9.பிறர் உடுப்பதையும்..உண்பதையும் கண்டு அவர் மேல் பொறாமைக் கொண்டு..வேண்டுமென்றே அவர் மேல்
குறை சொல்வர் கயவர்.

10.துன்பம் வரும் போது..அதற்காக தம்மையும் விற்க தயாராய் இருப்பவரே கயவர்கள் ஆவார்கள்.

No comments:

Post a Comment