Thursday, January 28, 2016

42)கேள்வி

1.செவியால் கேட்டறியும் செல்வம்..செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

2.கேள்வியாகிய செவி உணவு இல்லாத போதுதான் வயிற்றுக்கு உணவு தரும் நிலை ஏற்படும்.

3.செவி உணவாகிய கேள்வி அறிவு பெற்றோர் நிலத்தில் வாழ்ந்தாலும் தேவருக்கு ஒப்பாவார்கள்.

4.நாம் படிக்கவில்லையெனினும், கற்றவர்களிடம் கேட்டு அறிந்தால்,அது வயதான காலத்து ஊன்றுகோலாய் அமையும்.

5.வழுக்கும் நிலத்தில் நடக்க ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர் அறிவுரை உதவும்.

6.நல்லவற்றை சிறிய அளவே கேட்டாலும் அந்த அளவிற்கு அது பெருமையைத்தரும்.

7.நுட்பமான கேள்வி அறிவு உடையவர்,சிலவற்றை தவறாக உணர்ந்தாலும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

8.காதுகள் கேட்கக்கூடியதாக இருந்தாலும்,அவை நல்லவர்கள் உரையை கேட்காவிட்டால் செவிடாகவே எண்ணப்படும்.

9.கேள்வி அறிவு இல்லாதவர்கள்..பணிவான சொற்களை பேசும் பண்புடையவராக ஆக முடியாது.

10.செவிச்சுவை அறியாது..வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இறந்தாலும்..வாழ்ந்தாலும் ஒன்றுதான்.

43)அறிவுடைமை

1.பகையால் அழிவு வராது பாதுகாப்பது அறிவு மட்டுமே.

2.மனம் போகும் போக்கில் போகாது..தீமையை நீக்கி.. நல்வழி தேர்வு செய்வது அறிவுடைமை ஆகும்.

3.ஒரு பொருள் குறித்து யார் என்ன சொன்னாலும்..அதை அப்படியே ஏற்காது..அப்பொருளின் மெய்ப்பொருள் அறிவதே அறிவாகும்
.
4.நாம் சொல்ல வேண்டியதை எளிமையாக சொல்லி,பிறரிடம் கேட்பதையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமை

5.உலகத்து உயர்ந்தவரோடு நட்புக் கொண்டு..இன்பம்,துன்பம் இரண்டையும்..ஒன்று போல கருதுவது அறிவுடைமை

6.உலகம் நடைபெறும் வழியில் உலகத்தோடு ஒட்டி தானும் நடப்பதே அறிவாகும்.

7.ஒரு விளைவிற்கு எதிர்காலத்தில் எதிர் விளைவு எப்படி இருக்குமென..அறிவுடையார் மட்டுமே நினைப்பர்.

8.அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிஞர்கள் செயலாகும்.

9.வரப்போவதை முன்னமே அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையருக்கு துன்பம் அணுகாது.

10.அறிவுடையர் எல்லாம் உடையவர்.அறிவில்லாதவர் என்ன இருப்பினும் இல்லாதவரே ஆவர்.

44)குற்றங்கடிதல்

1.செருக்கும்,சினமும்,காமமும் இல்லாதவரின் செல்வாக்கு மேம்பட்டது ஆகும்.

2.பேராசை,மானமில்லாத தன்மை,குற்றம்புரியும் செயல்கள் ஆகியவை தலைவனுக்கு கூடாத தகுதிகளாகும்.

3.தினையளவு குற்றத்தையும்,பனையளவாக எண்ணி தங்களை காத்துக் கொள்வார்கள் பழிக்கு அஞ்சுபவர்கள்.

4.குற்றம் அழிவை உண்டாக்கும் பகையாக மாறும்..அதனால் குற்றம் ஏதும் புரியாமல் இருக்க வேண்டும்.

5.குற்றம் செய்வதற்கு முன்னமே காத்துக் கொள்ளாதவன் வாழ்வு நெருப்பின் முன் வைக்கப்பட்ட வைக்கோல்
போராய் அழியும்.
6.தலைவன் என்பவன் நம் குற்றத்தை உணர்ந்து திருந்திய பின்னரே பிறர் குற்றத்தை ஆராய வேண்டும்.

7.நற்பணிகள் செய்யாது சேர்த்து வைப்பவன் செல்வம் பயனின்றி அழிந்து விடும்.

8.எல்லா குற்றத்தையும் விட பெருங்குற்றம் பிறர்க்கு ஏதும் ஈயாத் தன்மையே ஆகும்.

9.தன்னைத்தானே உயர்வாக எண்ணி தற்பெருமையுடன் நன்மை தராத செயல்களில் ஈடுபடக்கூடாது.

10.தனது விருப்பம் என்ன என பிறர் அறியா வண்ணம் நிறைவேற்றுபவரை பகைவர்கள் சூழ்ச்சி ஒன்றும் செய்யாது

45)பெரியோரைத் துணைக்கோடல்

1.அறமுணர்ந்த மூத்த அறிவுடையோரின் நட்பை பெறும் வகை அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.வந்த துன்பம் நீங்கி..மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோரின் நட்பைக் கொள்ள வேண்டும்.

3.பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் நட்புக் கொள்ளல் அரிய பேறாகும்.

4.அறிவு ஆற்றலில் தம்மைவிட சிறந்த அறிஞர்களிடம் உறவு கொண்டு அவர் வழி நடத்தல் வலிமையாகும்.

5.தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரை உலகம் கண்ணாகக் கொள்ளுவதால் மன்னனும் அத்தகையோரிடம்
நட்பு கொள்ளவேண்டும்.

6.தக்க பெரியவரின் கூட்டத்தில் உள்ளவனுக்கு பகைவரால் எந்த தீங்கும் ஏற்படாது.

7.தவற்றை கண்டித்து அறிவுரை கூறும் பெரியாரை துணைக்கொள்பவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கும் இருக்க
முடியாது.

8.கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை யில்லா அரசு,பகைவர் எவரும் இல்லா விட்டாலும் தானே அழியும்.

9.முதல் இல்லா வியாபாரிக்கு ஊதியம் வராது..அதுபோல தம்மை தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு
எப்பேறும் இல்லை.

10.நல்லவரின் நட்பை கை விடுதல்,பலர் பகையை தேடிக் கொள்வதைவிட பத்து மடங்கு தீமையாகும்.

46)சிற்றினம் சேராமை

1.பெரியோர் கீழ்மக்களை அஞ்சி ஒதுங்குவர்.ஆனால் சிறியோரின் இயல்பு
கீழ்மக்களின் கூட்டத்துடன் சேருவது.

2.நிலத்தின் தன்மை போல் நீர் மாறும்...அதுபோல மக்கள் அறிவும் தங்கள் இனத்தின்
தன்மையைப் போன்றதாகும்.

3.ஒருவனது இயற்கை அறிவு மனத்தால் ஏற்படும் .ஆனால் உலகத்தாரால் இப்படிப்பட்டவன்
என மதிக்கப்படுவது சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

4.ஒருவரின் அறிவு அவரது மனதில் உள்ளது போலக் காட்டினாலும் உண்மையில் அவன்
சார்ந்த இனத்தில் உள்ளதாகும்.

5.மனத்தின் தூய்மை,செயலின் தூய்மை இரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒத்ததே ஆகும்

6.மனத்தூய்மையானவர்க்கு ...அவருக்குப்பின் எஞ்சி நிற்பது புகழும் ..இனம் தூய்மையானவருக்கு
அவரின் நற்செயலும் ஆகும்..

7.மனத்தின் நலம் உயிர்க்கு ஆக்கமாகும்...இனத்தின் நலமோ எல்லா புகழையும் வழங்கும்.

8.மனத்தின் நலம் உறுதியாக இருந்தாலும் சான்றோர்க்கு இனத்தின் நலம் நல்ல காவலாக அமையும்.

9.மனத்தின் நன்மையால் இன்பம் உண்டாகும்.அது இனத்தின் தூய்மையால் மேலும் சிறப்படையும்.

10.நல்ல இனத்தைவிட சிறந்த துணை ஏதுமில்லை...தீய இனத்தைவிட துன்பமும் பகையும் தரக்கூடியது
எதுவுமில்லை

47)தெரிந்து செயல்வகை

1.ஒரு செயலில் இறங்குமுன் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை
ஆராய்ந்த பின்னே இறங்கவேண்டும்.

2.அறிந்த நண்பர்களுடன் சேர்ந்து ...ஆற்ற வேண்டிய செயல் ஆராய்ந்து தாமும் சிந்தித்து செய்தால்
எந்த வேலையானாலும் நன்கு முடியும்.

3.பெரும் லாபம் வரும் என கை முதலையும் இழக்கும் செயலை அறிவுடையார் செய்யமாட்டார்கள்.

4.களங்கத்துக்குப் பயப்படக்கூடியவர்கள்...ஒரு செயலின் விளைவுகளை எண்ணிப்பார்த்து
களங்கம் தரும் செயலை செய்யார்.

5.பகைவரை ஒடுக்க முழுமையாக முன்னேற்பாடுகள் செய்யாவிடின் அது பகைவனின் வலியைக் கூட்டிவிடும்

6.செய்யக்கூடாததை செய்தாலும் சரி..செய்யவேண்டியதை செய்யாமல் விட்டாலும் சரி கேடு விளையும்.

7.நன்கு சிந்தித்தபின்னே செயலில் இறங்கவேண்டும்..இறங்கிய பின் சிந்திப்போம் என்பது தவறு.

8.நமக்கு எவ்வளவு பேர் துணயாக இருந்தாலும்.. முறையாக.செயல்படாத முயற்சி குறையிலேயே முடியும்.

9.அவரவர் இயல்புகள் அறிந்து அதற்கு பொருந்துமாறு செய்யாவிடின், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

10.தம் நிலைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார் ஆதலால் உலகு இகழாத செயல்களை
செய்யவேண்டும்.

48)வலியறிதல்

1.செயலின் வலிமை,தன் வலிமை,பகைவனின் வலிமை,இவர்களுக்கு துணையாக இருப்பவரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து செயல் பட வேண்டும்.

2.நமக்கு பொருந்தும் செயலையும்,அதற்காக அச் செயல் பற்றி ஆராய்ந்து அறியும் முயற்சியும் மேற்கொண்டால்
முடியாதது என்பதே இல்லை.

3.நமது வலிமை இவ்வளவுதான் என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து இடையில் அதை முடிக்க முடியாது அழிந்தவர் பலர்.

4.மற்றவர்களுடன் ஒத்து போகாமை,தன் வலிமையின் அளவை அறியாமை..ஆகியவையுடன் தன்னைத்தானே
வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

5.மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் ..அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அச்சு முறியும்.(மயிலிறகானாலும் ஒரு கட்டத்தில் வலிமை மிக்கதாகும்)

6.ஒரு மரத்தின் நுனி கொம்பில் ஏறியவர்,அதையும் கடந்து ஏறமுயன்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும்(.தன் வலிமை அறிய வேண்டும்)

7.தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்க வேண்டும்.அதுவே பொருளை போற்றி வாழ்வதாகும்.

8.நமது வருவாய் குறைவாக இருந்தாலும்..செலவு அதற்குள் இருந்தால் தீங்கு ஏற்படாது.

9.பொருளின் அளவு அறிந்து வாழாதவன் வாழ்க்கை..ஒளிமயமாய் இருப்பதுபோல தோன்றி இல்லாமல் போகும்.

10.தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல்.. .அளவின்றி கொடுத்துக் கொண்டே இருந்தால் விரைவில் கெடுவான்

49)காலமறிதல்

1.தன்னைவிட வலிய கோட்டானை காக்கை பகலில் வென்றுவிடும்.அதுபோல
பகையை வெல்ல ஏற்ற காலம் வேண்டும்.

2.காலத்தோடு பொருந்தி ஆராய்ந்து நடந்தால்..அதுவே செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும்
. கயிறாக அமையும்.

3.தேவையான சாதனங்களுடன்,சரியான காலத்தையும் அறிந்து செய்தால்
எல்லா செயல்களும் எளியன ஆகும்.

4.உரிய காலத்தையும்,இடத்தையும் அறிந்து நடந்தால் உலகமே நம் கைக்குள் வரும்.

5.உரிய காலத்திற்காக பொறுமையாக கலங்காது காத்திருப்பவர் இந்த உலகத்தைக்கூட வெல்லுவர்.

6.உறுதியானவர்கள் ..உரிய காலத்துக்கு அடங்கி இருத்தல் என்பது ஆடு ஒன்று
தன் எதிரியை தாக்க கால்களை பின் வாங்குவது போன்றது.

7.அறிவுடையவர்..புற சினம் கொள்ளமாட்டார்கள்.அதே சமயம் வெல்லுவதற்கு ஏற்ற
காலம் பார்த்து அக சினம் கொள்வர்.

8.பகைவரைக் கண்டால் பொறுத்துக்கொள்ளவேண்டும்.. அந்த பகைவன் முடிவு காலம்
வந்தால் தானே விழுவான்.

9.சரியான காலம் வரும்போது.. அதை பயன்படுத்திக்கொண்டு செய்தற்கரிய
செயல்களை செய்யவேண்டும்.

10.காலம் வரும்வரை கொக்கு காத்திருப்பது போல காத்திருந்து, காலம் வரும்போது குறி தவறாமல் மீனை கொத்துவது போல காரியத்தை செய்து முடிக்கவேண்டும்.

50)இடனறிதல்

1.முற்றுகை செய்ய ஏற்ற இடத்தைக் கண்டதும்தான், பகைவரை இகழாமல் செயல்களைத் தொடங்கவேண்டும்.

2.அரணுடன் பொருந்தி ,வரும் பகையை எதிர்த்தால் பெரும் பயன் கிட்டும்.

3.தக்க இடத்தில் தம்மைக் காத்து,பகைவரிடம் தம் செயலைச் செய்தால்..வலிமை அற்றவரும் வலியவராவார்.

4.தக்க இடம் அறிந்து செயலைச் செய்தால்..அவரை வெல்ல வேண்டும் என எண்ணும் பகைவர் இரார்.

5.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும்..ஆனால் நீரில் இருந்து அது வெளியே வந்தால் அதை மற்ற உயிர்கள் வென்று
விடும்.
6.வலிய சக்கரங்கள் கொண்ட தேர் கடலில் ஓடாது..கடலில் ஓடும் கப்பலும் நிலத்தில் ஓடாது.(இடத்தேர்வு முக்கியம்)

7.செயலுக்கான வழிவகைகளைக் குறைவில்லாது எண்ணி தக்க இடத்தில் செய்தால்..அஞ்சாமை என்ற ஒரு
துணை போதும்.
8.சிறிய படை ஆயினும் அதன் இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையைக் கூட வென்றிட இயலும்.

9.பாதுகாப்பான கோட்டையும், படைச் சிறப்பும் இல்லாவிட்டால் கூட அவர் வாழும் இடத்தில் அவரை தாக்குதல் அரிது.

10.வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்தும் யானை கூட.. சேற்றில் சிக்கிக் கொண்டால் நரிகளால் கொலை செய்யப்படும் (இடம் உணர்ந்து, நிலை உணர்ந்து செயல்பட வேண்டும்)

No comments:

Post a Comment