Tuesday, January 12, 2016

43-தீயோரும்- உறவும்



விதுரரை நோக்கி திருதராஷ்டிரர், "விதுரரே! வாழ்க்கையில் வளம் பல பெற்று முன்னேறவும், அல்லது வறுமையிலிருந்து வீழவும் மனிதன் தனிப்பட்ட முறையில் பொறுப்பாளி இல்லை.அவன் கயிற்றால் கட்டப்பட்ட பொம்மலாட்ட பொம்மை.பிரம்மா, மனிதனைத் த்லைவிதிக்குக் கீழ்ப் படவேண்டியவனாக படைத்து விட்டார்.எனெனும் உமது உபதேசத்தை தொடர்ந்து சொல்லவும்" என்றார்.

விதுரர் கூறலானார், "தேவர்களுக்குக் குருவான பிரகஸ்பதி கூட சூழ்நிலை சரியாக இல்லையெனில் பேசக்கூடாது.காலத்துக்கு ஒவ்வாது அவர் பேசினால், அவரது அறிவிற்கு மதிப்பின்றிப் போய் விடும்.அவரது மரியாதைக் கெடும்.

மனிதர்கள் பலவிதம்.பரிசு கொடுத்துத்தான் சிலரது பிரியத்தைப் பெற முடியும்.இனிமையாகப் பேசி சிலரை கவரலாம். வேறு சிலரை, மந்திரம், தந்திரம், தாயத்து என வசப்படுத்தலாம்.ஆனால், இயல்பாகவே அன்பு மிக்கவன் மற்றவர்களின் மகிழ்ச்சி இன்றியே அவர்களிடம் பிரியம் காட்டுவான்.

ஒருவரை நாம் வெறுக்கும் போது அவரது பண்பையோ, புத்திக் கூர்மையையோ,அறிவின் ஆழத்தையோ நாம் உணர முடிவதில்லை.ஒருவரை நாம் நேசித்தால் அவரிடம் அனைத்தும் நல்லபடியாக இருப்பதாகத் தெரிகிறது.நாம் வெறுப்பவரிடம் எல்லாமே கோணலாய்த் தெரிகிறது...

அரசே! துரியோதனன் பிறந்ததுமே உங்களை எச்சரித்தேன்!இவன் மீது அளவிற்கு அதிகமாகப் பாசம் வைக்காதீர்கள்.அப்போதுதான் நூறு மகன்களும் நல்ல முறையில் வாழமுடியும் என சொன்னேன்.துரியோதனன் மீது கண்மூடித்தனமான பாசத்தை கைவிடாவிடின் நூறு மகன்களும் கொல்லப்படுவார்கள்'என்றும் கூறினேன்.

வாழ்க்கை முன்னேறுவது போல இருந்து, அது கடைசியில் வீழ்ச்சிக்கு வழி வகுக்குமாயின் அது முன்னேற்றமில்லை.இதற்கு மாறாக, சரிந்து கொண்டே போவது போலத் தோன்றி, அச்சரிவு முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லுமாயின் அது வீழ்ச்சியாகாது

ஒரு நஷ்டம் ஏற்பட்டு, அந்த நஷ்டம் கடைசியில் லாபம் தந்தால் அது ஒரு இழப்பல்ல.ஒரு குறிப்பிட்ட லாபத்தைப் பெறுவதால் கடைசியில் பெருத்த நஷ்டம் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பின் அதை லாபமென்று எண்ணாமல் இழப்பாகவே கருத வேண்டும் (எந்த விஷயத்திலும் இறுதியில் முடிவு என்ன என மதிப்பீடு செய்ய வேண்டும்)

சிலரிடம் நற்பண்புகள் நிறைந்திருக்கும்.சிலரிடம் செல்வம் அதிகம் இருக்கும்.செல்வம் மட்டும் இருந்து நற்பண்புகள் இல்லாதவர்களுடன் நாம் பழகக்கூடாது.அத்தகையோரிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

உடன், திருதிராஷ்டிரர் குறுக்கிட்டு, "விதுரா! உன் அறிவுரை இப்போது கசந்தாலும் எதிர்காலத்தில் நன்மை தரக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை.நீ சொல்பவை சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.நான் என் மகனை கைவிடுதல் இயலாது.ஆனாலும், எங்கு தர்மம் உள்ளதோ, அங்குதான் வெற்றியும் நிலைபெற்று விளங்கும்

விதுரர் கூறினார், "எவன் நற்பண்புகளை பெற்றுள்ளதுடன், பண்புடனும் உள்ளானோ, அவன் பிறர்க்கு மிகச் சிறிதளவு கொடுமை இழைக்கப் பட்டாலும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.

பிறரைப் பழித்துக் கூறுவதிலேயே சிலர் ஆர்வமாய் இருப்பார்கள்.அத்தகையோர் பிறரது மனதைப் புண்படுத்தும் விஷயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் பரப்பி அவர்களை வேதனைக்குள்ளாக்குகின்றனர்.இதனால் சம்பந்தப்பட்டவர்களிடையே தகராறுகளையும் மூட்டி விடுகின்றனர்

இவ்வாறு கோள் மூட்டுபவர்களைக் கண்ணால் கூட பார்க்கக் கூடாது.அது அமங்களம்..அபசகுனம்.அவர்கலூடன் தொடர்பு வைத்துக் கொள்வதோ ஆபத்து.அவர்களிடமிருந்து பணம் பெறுவது பாபம்.அவர்களுக்குப் பணம் கொடுப்பதும் கெடுதல்.

மக்களிடையே கோள் முட்டி, தகராறும்-பிரிவினையும் ஏற்படச் செய்பவர்கள், வரம்பு மீறிய காமம் கொண்டவர்கள்,வெட்கம் கெட்டவர்கள்,போக்கிரிகள்,கொடியவர்கள் என இகழப்படுவார்கள்.இத்தாய்யோரிடம் நாம் பழகக்கூடாது

இவர்களுடன் மட்டுமல்ல...இவர்க்ளைப் போல மற்ற தீய குணங்கள் உடையவர்களும் நட்புடன் பழக தகுதியற்றவர்கள்.

தீயோரிடம் நட்பு கொள்ளக் கூடாது.ஏனெனில், அந்நட்பு முறிந்தால்,  தீயவர், தனது முன்னாள் நண்பர் செய்த உதவிகளையும்,அந்த நட்பின் இனிமையையும் மறந்து விடுவார்கள்.அத்துடன் நில்லாது, தீயவர் தனது முன்னாள் நண்பனைப் பற்றிக் கெடுதலானத் தகவல்களை பரப்பி விடுவர்.அந்த நண்பரை நாசமாக்கும் முயற்சியிலும் ஈடுபடுவர்

தீயவருக்கு ஒருவர் தெரிந்தோ-தெரியாமலோ குற்றம் இழைத்து விட்டாலும் தீயவர் பொறுத்துக் கொள்வதில்லை.பகைமையைக் கைவிடுவதில்லை,அறிஞனானவன் இதையெல்லாம் தெளிந்து உணர்ந்து இத்தகைய இழிவானவர்களுடனும், பழி கூறித் திரியும் குடு நோக்கர்களுடனும், மாசடைந்த உள்ளம் கொண்டவர்களுடனும் இயன்றவரை பழகாது விலகி இருக்க வேண்டும்

யார் தனது உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும்,ஆதரவற்றவர்களுக்கும்,துன்புறுவோர்க்கும் ஆறுதல் அளித்து உதவுகின்றனரோ...அவர் குழந்தைச் செல்வம்,கால்நடைச் செல்வம்,நிரந்திரப் புகழ் ஆகிய சிறப்புகளைப் பெற்று விளங்குவார்கள்

யார் தனக்கு மகிழ்ச்சியும், தன் குடும்பத்திற்கு வசதிகளும் என்றும் குறைவின்றிக் கிடைத்து வர வேண்டுமென விரும்புகிறாரோ அவர் தனது உறவுகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்

எனவே அரசே! எது உங்களுக்கு நன்மை தருமோ அதையே செய்யுங்கள்.நீங்கள், உறவினர்களுக்கு நன்மையைச் செய்தால், என்றும் புகழ் பெற்று விளங்குவீர்கள்

நம் உறவினர்கள் நற்பண்புகள் இல்லாதவர்கள் ஆயினும்...நாம் அவர்களைக் காக்க வேண்டும்.உங்கள் உறவினர்களோ பண்பாளர்கள்.உங்களது ஆதரவுக்கு ஏங்குபவர்கள்.அவர்களை எந்த அளவிற்கு பராமரிக்க வேண்டும் எனச் சொல்லத் தேவையில்லை

திருதராஷ்டிரரே! வீரர்களாகிய பாண்டவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.அவர்களுக்கு சில குக்கிராமங்களையாவது கொடுங்கள்.அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து அவர்கள் வசதியாக வாழ்வார்கள்.அவர்களுக்கு இவ்வாறு உதவுவதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் புகழ் பெறுவீர்கள்.வயதாகிவிட்ட போதும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உங்கள் புதல்வர்களைக் கட்டுப்பாற்குள் கொண்டு வர வேண்டும்

நான் எப்போதும் உங்கள் நன்மையையே நாடுபவன் என்பதை உணருங்கள்.எது உங்களுக்கு நன்மை பயக்குமோ அதை எடுத்துச் சொல்ல நான் கடமைப்பட்டவனாகிறேன்.தனது நன்மைகளை விரும்பும் யாரும் உறவினர்களுடன் ஒருபோதும் தகராறு வைத்துக் கொள்ளக்கூடாது

நாம் வாழ்க்கையில் நம் மகிழ்ச்சியை எல்லாம் நம் உறவினர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.சேர்ந்து உண்ணுதல்,ஒருவர் வீட்டிற்கு ஒருவர் வந்து போய்க்கோண்டிருத்தல், பரஸ்பர அன்பு ஆகியவை உறவினருடன் நிலைக்க வேண்டும்,

உறவினரிடையே விரோதம் கூடாது.உறவினர்களால்தான் நம்மை உலகில் நடத்திச் சென்று அக்கரையில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.அவர்களைப் பகைத்துக் கொண்டால் மூழ்கடித்தும் விட முடியும்.

நல்ல நடத்தையுள்ள உறவினர் நம்மை பாதுகாப்பார்கள்.ஆனால், கொடிய உறவினர்கள் நம்மை மூழ்க செய்து விடுவார்கள்.அரசே! நீங்கள் அனைவருக்கும் நன்மைகளை வாரி வழங்கக் கூடியவர்.பாண்டுவின் புதல்வர்களிடம் நல்ல முறையில், நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.பாண்டவர் சூழ நீங்கள் இருந்தால் உங்களை எந்தப் பகைவரும் ஏதும் செய்ய முடியாது

கையில் விஷம் தோய்ந்த அம்புகளுடன் வரும் வேடனை எதிர்த்து மான்களால் ஏதும் செய்ய இயலாது.அதைக் கொல்லும் பாவம் அவனைச் சேருகிறது.அதுபோலவே வேறு வழியின்றி உறவினர் ஒருவர் நம்மைக் காப்பாற்ற வேண்டி வந்தால்,அது குழ்ந்தையானாலும்...நாம் உதவாது போனால்...பாவமெல்லாம் நம் தலையில் ஏற்றப்படும்

பாரதப்போர் நடந்தால்..பாண்டவர்களோ..அல்லது கௌரவர்களோ ஒரு சாரார் இறப்பது நிச்சயம்.அதிக் கேட்கும் போது, நீங்கள்..முங்கூட்டியே போரைத் தடுக்காமல் போய்விட்டோமே என வருந்துவீர்கள்...எனவே, நன்கு சிந்தித்து இப்பவே ஒரு முடிவை எடுங்கள்

நாம் தீயச் செயலைச் செய்தால் அவமான உணர்ச்சி மேலிட தனியறையில் ஒதுங்கி மனம் புழுங்க நேரிடுகிறது.ஆகவே, அத்தகைய தீயச்செயல்களை நாம் செய்யாமல் இருந்து விட வேண்டும். ஏனெனில் நம் வாழ்க்கை எந்த சமயம் முடியும் என உறுதியாகக் கூற இயலாது

பார்கவர் எனப்படும் சுக்கிராச்சாரியாரைத் தவிர....ஒருபோதும் ஒழுக்கம் தவறாமலோ, நியாயம் தவறாமலோ நடந்துகொண்ட மனிதன் உலகில் யாரும் கிடையாது.எனினும் அறிவுடையார்...கடந்த காலத்தில் செய்த தவறுகளைப் பற்ரி எண்ணி வருந்திக் கொண்டிராமல் இனி எதிர்காலத்தில் சரியாக, நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என முடிவெடுப்பர்

ஏற்கனவே, பாண்டவர்களுக்குத் துரியோதனன் பல இன்னல்களை விளைவித்திருக்கிறான்.குலப்பெரியவரான நீங்கள் அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்து நியாயமாக நடந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்

பாண்டவர்களுக்கு அவர்களது உயர்ந்த தகுதிக்கேற்ற அரச பதவிகள் அளித்து கௌரவித்தால், நீங்கள் எல்லாவகையான பாவங்கள், களங்கங்களிருந்து விடுபடுவீர்கள்.அறிஞர்களும் நீங்கள் போற்றப்பட வேண்டியவர் என புகழ்வார்கள்  

No comments:

Post a Comment