Friday, January 22, 2016

50-இனி வள்ளுவ நீதி

--------------------------------------------------------------------

வள்ளுவ நீதி
-------------------------------------------------------------------------------

கடவுள் வாழ்த்து-

1. 'அ' என்ற உயிர்எழுத்து எழுத்துக்களுக்கு முதல் அதுபோலஆதி பகவன் உலக உயிர்களுக்கு முதல்.
(திருவள்ளுவரின் தாய்,தந்தை ஆதி பகவன் என்பதால் உலக உயிர்களுக்கு தாய்,தந்தை முதல் என்றும்
சொல்லலாம்)

2. இறைவனை வணங்கும் பண்பில்லாதவன் படித்திருந்தும் பயனில்லை

. 3. மலரை ஒத்த இறைவனை மனதில் ஆராதிப்பவன் பெயர் உலகில் நீடித்து இருக்கும்

4.விருப்பு வெறுப்பு இல்லா இறைவனை வேண்டுவோர்க்கு எந்த துன்பமும் வராது.

5. இறைவனை புரிந்து கொண்டால் நன்மை,தீமைகள் எல்லாம் ஒன்றே போல் தெரியும்.

6.ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தியவனின் ஒழுக்க நெறியை பின்பற்றவேண்டும்.

7.இறைவனை வேண்டினால் மனக்கவலைகள் மறையும்.

8.இறைவனை வேண்டினால் துன்பங்களை எளிதில் வெல்லலாம்.

9.இறைவனை வேண்டாதவனுக்கு ஐம்புலன்கள் இருந்தும் பயனில்லை.

10.இறைவனை வேண்டினால் நற்பிறவி அடைய முடியும்


2)வான் சிறப்பு
-----------------------

1.மழை தான் உலகத்தை வாழ வைக்கும் அமிர்தம்.

2.உணவுப்பொருட்கள் விளைய மழை தேவை...தவிர...மழையே அருந்தும் உணவாகும் உள்ளது.

3.எங்கும் கடல் நீர் சூழ்ந்திருந்தாலும் மழை இல்லை எனில் பசி வாட்டி வதைக்கும்.

4.மழை இல்லையேல் உழவுத்தொழிலும் இல்லை.

5.மழை பெய்யாமல் வாழ்வையும் கெடுக்கும்...பெய்து வாழ்வின் வளத்தையும் சேர்க்கும்.

6.மழை இல்லையேல் மண்ணில் புல்லைக்கூட பார்க்கமுடியாது.

7.கடல்நீர் மேகமாக மீண்டும் கடலில் பெய்வதால் கடல் வற்றுவதில்லை.அதுபோல மனிதனும் சமுதாயத்துக்கு
பயன்பட்டால்தான் சமுதாயம் வாழும்.

8.மழை பொய்த்துவிட்டால்  இறைவனுக்கு விழாக்களும் கிடையாது...வழிபாடும் இருக்காது.

9.மழை பெய்யாவிடின்..செய்யும் தானம்....மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இருக்காது.

10.உலகில் மழை இல்லை எனில் ஒழுக்கமே கேள்விக்குறியாகும்...

(மழையின் முக்கியத்தை இதைவிட அருமையாக யாரால் சொல்லமுடியும்.)


3)நீத்தார் பெருமை
---------------------------------

1.ஒழுக்கமுள்ள துறவிகளின் புகழ் அழியாப் புகழாய் திகழும்.

2.பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளவிட முடியாது.

3.நன்மை எது, தீமை எது என உணர்ந்து நன்மைகளை செய்பவர்கள் உலகில் பெருமையானவர்கள்.

4.துறவி என்பவன் உறுதியுடன் ஐம்புலன்களையும் அடக்கிக்காப்பவன்.

5.புலன்களை அடக்கியவர்கள் புகழ் எப்படிப்பட்டது என்பது புலன்களை அடக்காத இந்திரனின் செயலால்
தெரியவருகிறது.

6.பெருமை தரும் செயல்களை செய்பவர்கள் பெரியோராகவும், மற்றவர்கள் சிறியோராகவும் கருதப்படுவர்.

7.ஐம்புலன்களை அடக்கும் திறன் கொண்டவனை உலகம் புகழும்.

8.அறவழி நூல்கள் சான்றோரின் பெருமையை உலகிற்கு காட்டும்.

9. நல்ல குணம் படைத்தவர்கள் கோபம் கொண்டால்...அந்த கோபம் வந்த வேகத்திலேயே மறைந்துவிடும்.

10.உயிர்களிடத்தில் அன்பு கொண்ட அனைவருமே அந்தணர்கள் ஆவார்கள்.


4)அறன் வலியுறுத்தல்
------------------------------------


1. அறவழி மட்டுமே சிறப்பையும் செல்வத்தையும் தரும்.

2. தீமைகளில் பெரிய தீமை அறவழியை மறப்பதுதான்.

3. செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் அறவழியிலேயே செய்யப்படவேண்டும்.

4.மனத்தூய்மையே அறம் ஆகும்.

5. பொறாமை,பேராசை,கோபம்,வன்சொல் இவை அறமாகாது.

6. நாள் கடத்தாமல் ஒருவர் அறவழியை மேற்கொண்டால் இறந்தும் புகழப்படுவார்.

7. அறவழியில் நடப்பவர்கள் இன்ப துன்பங்கள் இரண்டையும் ஒன்றாய் கருதி மகிழ்வர்.

8.ஒரு நாள் கூட வீணாக்காது நற்செயலில் ஈடுபட வேண்டும்.

9. அறவழியில் நடப்பதன் மூலம் அடையும் புகழே இன்பமாகும்.

10. அறவழிச் செயல்களில் ஈடுபடுவதே ஒருவருக்கு புகழ் சேர்க்கும்.



5)இல்வாழ்க்கை
-------------------------------

1.பெற்றோர்,மனைவி,குழந்தைகள் ஆகியோருக்கு துணையே ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

2.துறவிகள்,பசியால் வாடுபவர்,பாதுகாப்பில்லாதவர்கள் ஆகியோருக்கு இல்லறத்தானே துணை.

3.இறந்தவர்களை நினைத்தல்,தெய்வத்தை நினைத்தல்,விருந்தோம்பல்,உறவினர் பேணுதல்,
தன்னை இவற்றிற்கு தயார்படுத்திக்கொள்ளல் ஆகிய அறநெறிகள் இல்வாழ்க்கைக்குரியது.

4.சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பே வாழ்க்கையின் ஒழுக்கம் ஆகும்.

5.அன்பும்,அறவழியுமே இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் உடையதாகவையாகவும் ஆக்கும்.

6.இல்வாழ்க்கை அறநெறியில் அமைத்துக்கொண்டால் பெரும் பயன் அதிகமாகும்.

7.இல்வாழ்க்கையின் இலக்கண முணர்ந்து வாழ்பவர்கள் நல்வாழ்க்கையில் தலையானவர்.

8.அறவழியில் நடந்து ...பிறரையும் அதில் ஈடுபட சொல்வாரின் ...அது துறவிகளின் தவத்தை விட
மேன்மை யுடையதாகும்.

9.பிறர் பழிப்புக்கு இடமில்லா இல்வாழ்க்கையே இல்லறம்.

10.வாழவேண்டிய அறநெறியில் வாழ்பவன் தெய்வத்துக்கு இணையாக போற்றப்படுவான்


6)வாழ்க்கைத் துணைநலம்
--------------------------------------------

1.பொருள் வளத்துக்கு ஏற்றார் போலவும்,நற்பண்புகளுடனும் அமையும் மனைவி
கணவனின் பெருந்துணையாகும்.

2.பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறந்ததாயிருந்தாலும் பயனில்லை.

3.நற்பண்புள்ள மனைவி அமைந்தால் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தாற்போல் ஆகும்.

4.பெண்ணுக்கு கற்பைத் தவிர பெருமைத்தருவது எதுவும் இல்லை.

5.சிறந்த மனைவி பெய் என்று சொன்னால்...மழையும் அது கேட்டு பெய்யுமாம்.

6.சிறந்த மனைவி கணவனையும் காத்து,உறுதி குலையாது புகழுடன் திகழ்வாள்.

7.பண்புள்ள மனைவியை அடிமை என எண்ணுவது அறிவுடமை ஆகாது.

8.நல்ல கணவனை அடைந்த பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

9.இல்வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் சமூகத்தில் நிமிர்ந்து நடக்கமுடியாது.

10.நல்ல குழந்தைகளுடனும்,பண்புகளுடனும் வாழ்வதே இல்வாழ்க்கையின் சிறப்பு.



7)மக்கட் பேறு
----------------------

1.அறிவுள்ள நல்ல பிள்ளைகளை பெறும் பேறே சிறந்த இல்வாழ்ககை.

2.பண்புள்ள குழந்தைகளை பெற்றெடுப்பவர்களை ஏழேழு பிறவிக்கும் தீமை அண்டாது.

3.நம் நற்செயல்களின் விளைவே ...நாம் பெறும் மக்கட்செல்வங்களாகும்.

4.நம் குழந்தைகளின் பிஞ்சுக்கையால் அளிக்கும் கூழ் அமிர்தத்தைவிட சிறந்ததாகும்.

5.நம் குழந்தைகளைத் தழுவுதல் உடலுக்கு இன்பத்தையும் ..அவர்கள் மழலை செவிக்கு இன்பத்தையும் தரும்.

6.குழலோசை,யாழோசை இனிமை என்பவர்கள் தங்கள் குழந்தைகளின் மழலையை கேட்காதவர்கள்.

7.தந்தை தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமை.....கல்வியறிவு தந்து அவையில் முதல்வனாக
இருக்கச் செய்தலே ஆகும்.

8.பெற்றோர்களை விட அறிவிற் சிறந்த பிள்ளைகளைக் கண்டால் உலகமே மகிழும்.

9.தன் மகனை பெற்றேடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியை விட ...அவனை ஊரார் புகழும் போது...
தாய் மிகவும் மகிழ்வாள்.

10....இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தான் என ஊரார் சொல்லும்படி நடப்பதே
தந்தைக்கு மகன் செய்யும் உதவி ஆகும்.


8)அன்புடமை
---------------------

1.அன்பைத் தாழ்ப்பாள் போட்டு பூட்ட முடியாது.அன்புக்குரியவர் துன்பம் அடைந்தால்,நமக்கு கண்ணீர் வரும்.

2.அன்பு உடையவர்..அன்பு இல்லாதவர் போலின்றி..தன் உடல்,பொருள்,ஆவி மூன்றும் பிறருக்கென்றே எண்ணுவர்.

3.உயிரும்,உடலும் இணைந்துள்ளது போல், அன்பும்,செயலும் இணைந்திருக்கும்.

4.அன்பு பிறரிடம் பற்றை ஏற்படுத்தும்.அவர் உள்ளம் நட்பை உருவாக்கும்.

5.அன்புள்ளம் கொண்டவர்கள் உலகில் இன்புற்று வாழும் சிறப்பு அடைவர்.

6.அறச்செயல்களுக்கு மட்டுமின்றி வீரச்செயல்களுக்கும் அன்பே துணையாய் நிற்கும்.

7.அறம் எதுவென தெரிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை...மனசாட்சி வாட்டி வதைக்கும்.

8.மனதில் அன்பற்றவர் வாழ்க்கை...பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்த்தது போன்றது.

9.அன்புள்ளம் இல்லாதவர்களின் புறத்தோற்றம் அழகாய் இருந்து என்ன பயன்?

10.அன்பு வழியில் நடக்கும் உடலே உயிருள்ள உடல் மற்றவை எலும்பை போர்த்திய வெறும் உடலாகும்


9)விருந்தோம்பல்
----------------------------

1.விருந்தினரை வரவேற்று ...அவர்க்கு வேண்டியதை செய்வதே இல்லறத்தானின் பண்பு.

2.சாகாத மருந்து கிடைத்தாலும் ..அதை விருந்தினர் வெளியே இருக்க நாம் மட்டும் உண்ணுவது
பண்பான செயல் அல்ல.

3.விருந்தினரை வரவேற்று மகிழ்பவரின் வாழ்வு என்றும் துன்பம் அடைவதில்லை.

4.முகத்தில் மகிழ்ச்சியுடன் விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

5.பண்பாளன் என்பவன்...எதுவுமே இல்லை என்றாலும் ...விதை நெல்லைக்கூட எடுத்து விருந்துக்கு
அளிப்பான்.

6. வந்த விருந்தை உபசரித்து அனுப்பி ...வரும் விருந்தை எதிபார்ப்பவன்...தேவலோகத்தினராலும்
போற்றப்படுவான்.

7.விருந்தினரின் சிறப்பை எண்ணி ...விருந்தை ஒரு வேள்வியாகக் கூட கருதலாம்.

8.செல்வத்தை சேர்த்து...அது அழியும்போதுதான் ...அந்த செல்வத்தை விருந்தோம்பலுக்கு
பயன்படுத்தவில்லையே. .என வருத்தம் ஏற்படும்.

9.பணம் படைத்தவர்கள் ..விருந்தினர்களை போற்றத் தெரியாவிட்டால் தரித்திரம் படைத்தவராகவே
கருதப்படுவர்.

10.வரும் விருந்தினரை முகமலர்ச்சியின்றி  வரவேற்றால் விருந்தினர் வாடிவிடுவர்.


10)இனியவை கூறல்
---------------------------------

1.வஞ்சனையில்லாமல்,அன்புடனும்,வாய்மையுடனும் பேசப்படுவதே இன்சொல் ஆகும்.

2.மனம் விரும்பி ஏதேனும் அளிப்பதை விட முகம் மலர்ந்து இனிமையாக பேசுவதே சிறந்தது.

3.முகம் மலரவும்,அகம் மலரவும் இனியவை கூறினால் அதுவே அறவழிப்பண்பாகும்.

4.அனைவரிடமும் இன்சொல்கூறி கனிவுடன் பழகினால் நண்பர்கள் அதிகமாக இருப்பர்.

5.சிறந்த பண்பும்.. இனிமையான சொல்லும் மட்டுமே சிறந்த அணிகலங்கள் ஆகும்.

6.தீய செயல்களை அகற்றினால் அறனெறித்தழைக்கும்.இனிய சொற்களை பயன்படுத்தினால்
நல்வழி ஏற்படும்.

7.நல்ல பண்பான சொற்கள் இன்பத்தையும்,நன்மையையும் உண்டாக்கும்.

8.இனிய சொல் ... ஒருவன் வாழும்போதும்...மறைந்தபிறகும் அவனுக்கு புகழ் தரும்.

9.இன்சொற்கள் இன்பத்தை தருதலால்...கடுஞ்சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும்.

10.இனிமையாக சொற்கள் இருக்கையில் கடுஞ்சொற்களை கூறுவது கனிக்கு பதில்
காயை உண்பதுபோல ஆகும்



11)செய்நன்றியறிதல்
--------------------------------------

1. அரிய உதவிக்கு வானமும்,பூமியும் கூட ஈடாகாது.

2.தேவைப்படும் சமயத்தில் செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும் அது பெரிதாக போற்றப்படும்.

3.பயனை எதிர்பாராது ...அன்பிற்காக ஒருவர் செய்த உதவி கடலை விடப் பெரிது.

4.தினையளவு சிறிய நன்மையை செய்தாலும்.. அதனால் பயனடைபவர் அதை பனை அளவு பெரிதாக எண்ணுவர்.

5.உதவி செய்யப்படும் அளவை பொருத்தது அல்ல...அதை பெறுபவரின் பண்பை பொருத்தது.

6.குற்றமற்றவர்கள் உறவையும், துன்பத்தில் நம்முடன் இருந்தவர் நட்பையும் இழக்கக்கூடாது.

7.ஒருவரின் துன்பத்தை போக்கியவரின் நட்பு ஏழேழு பிறப்புக்கும் போற்றப்படும்.

8.ஒருவர் செய்த நன்மையை மறக்கக்கூடாது. தீமையை செய்த அன்றே மறந்திட வேண்டும்

9.ஒருவர் நமக்கு செய்த தீமையை மறக்கவேண்டுமென்றால்..அதற்கு முன் அவர் செய்த ஒரு நன்மையை எண்ணினால்
போதுமானது.

10.எப்படிப்பட்ட தர்மத்தை மறந்தாலும்,ஒருவர் செய்த உதவியை மட்டும் மறக்கவே கூடாது.


12)நடுவுநிலைமை
-------------------------------

1.ஒருவரை பகைவர்,அயலார்,நண்பர் என பகுத்து பார்க்காமல் செயல்படுவதே நடுவு நிலைமை ஆகும்.

2.நடுவுநிலையாளனின் செல்வம் அழியாமல்,வரும் தலைமுறையினருக்கும் பயன் அளிக்கும்.

3.நடுவுநிலை தவறினால் நமக்கு பயன் கிடைக்குமென்றால்கூட ...அந்தப் பயனை பெரிதாக
எண்ணாமல் நிலை மாறக்கூடாது..

4.ஒருவர் நேர்மையானவரா..நெறிதவறியவரா என்பதெல்லாம் அவருக்குப்பின் உண்டாகக்கூடிய
புகழையோ,பழிச்சொல்லையோ வைத்து அறியலாம்.

5.வாழ்வும்,தாழ்வும் இயற்கை நியதி.இரு நிலையிலும் நடுவுநிலைமை மாறக்கூடாது..

6.நடுவுநிலை மாறி செயல்படுவோம் என்ற எண்ணம் தோன்றியதுமே அவனது அழிவுகாலம்
ஆரம்பித்துவிடும்.

7.நடுவுநிலைமை காப்பவருக்கு அதனால் வறுமை ஏற்பட்டாலும் ...உலகம் அவரை போற்றவே செய்யும்.

8.தராசுமுள் ...நேராக நின்று அளவை காட்டுதல் போல,நடுவுநிலைகாரர்களும் இருக்கவேண்டும்.

9.நேர்மை,உறுதி இருப்போர் சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும்.

10.பிறர் பொருளையும்,தன்னுடையது போல எண்ணி வாணிகம் செய்தலே நேர்மை எனப்படும்.

No comments:

Post a Comment