Sunday, January 10, 2016

42-ரகசியம் காத்தல்



ஒரு அரசன் தான் எடுக்கும் முடிவுகளை வெளி நபர்களோ, தனக்கு வேண்டியவர்களோ தெரிந்து கொள்ள விடாமல் கவனமாக இருப்பதுடன், அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையைக் கடை பிடித்தால் அவரால் நீண்ட காலம் செழிப்பாக ஆட்சி செய்ய முடியும்

தர்மகாரியங்கள், இன்பங்களை நுகர்தல், பொருளீட்டும் முயற்சி ஆகியவற்றை அச்செயல்கள் நிறைவேற்றி முடிந்த பின்னே வெளியே சொல்வது ஏற்றது.நாம் பிறரிடம் மேற்கொள்ளும் அல்லது பிறரிடமிருந்து பெறும் ரகசிய ஆலோசனைகளையும் முன் கூட்டியே  வெளியிடக் கூடாது

முக்கியமான விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டுமாயின் அதற்கேற்ப தனியான இடத்தை நாடிச் செல்ல வேண்டும்.மலையுச்சி,தனி வீடு,காட்டுப்பகுதி போன்ற இடங்களுக்குச் சென்று சிந்திக்க வேண்டும்

நாம் மிகவும் முக்கியமானதாகக் கருதும் ரகசியங்களை நம் நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.அந்த நண்பர் மதிநுட்பம் அற்றவராக இருந்தால் அவரிடமும் கூறக்கூடாது.நமக்கு நண்பனாக இருந்து, சுயக்கட்டுப்பாடு இல்லாதவராயின் அவரிடமும் ரகசியத்தை வெளியிடக் கூடாது

ஆட்சி புரிபவர்,நன்கு பரிசோதனை  செய்த பின்னரே ,ஒருவரை தன் அமைச்சராக நியமித்துக் கொள்ள வேண்டும்.நாட்டின் நிதி நிலைமையைச் சீராக வைத்திருப்பதும், தக்க ஆலோசனைகள் கூறும் பொறுப்பும் அமைச்சரின் கடமைகளாகும்

ஒரு அரசன் மேற்கொள்ளும் அறச்செயல், செல்வம் பெருக்குதல் இன்பமாக வாழ்தல் என்னும் அறம்-பொருள்-இன்பம் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஆலோசகர்களுக்குத் தெரிய வேண்டும்.அப்படிப்பட்ட அரசனை யாரும் வீழ்த்த முடியாது.அவன் உயர் நிலையில் இருப்பான்

தன் முடிவுகளை ரகசியமாக வைத்திருக்கும் மன்னன் ,தான் விரும்பும் லட்சியங்களை நிச்சயமாக அடைந்துவிட முடியும்.ஆனால் அவன் அறிவில் தெளிவற்றவனாய் இருந்தால் தவறான முடிவுகளை எடுத்து விடுவான்.அவற்றால் கெடுதல் ஏற்படும்.இதனால் அம்மன்னன் அழிய நேரிடும்

பிறர் பாராட்டும் நற்செயல்களைச் செய்தால், அவை நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.அத்தகையச் செயலைச் செய்ய தவறிவிட்டால் பின்னால் நம் மனம் வருந்தி புழுங்கும் நிலை உண்டாகும்

வேத மந்திரங்களைக் கற்காத அந்தணர்,முன்னோர்களுக்கான திதிச் சடங்கின் போது புரோகிதராக வழிகாட்டி நடத்தி வைக்கும் தகுதியற்றவர் ஆகிறார்.அதுபோல் ஆறுவிதமான போர்த் தந்திரங்களை அறியாத அரசன்,அரசியல் ரகசியங்களை அறிந்து கொள்ள உரியவரல்லர்.(ஆறுவகை தந்திரங்கள்- சமாதானப் பேச்சு,போர்,படை வரிசை முன்னேற்றம்,முற்றுகையும்-முகாமிடலும்,எதிரிப்படையில் கலகமூட்டல்,பாதுகாப்பிற்காக அடைக்கலம் கூறல் ஆகியவை)


எந்த அரசன் தன் நாட்டின் தற்போதைய நிலையை, அதன் உயிர்சக்தி கூடுவதையும், குறைவதையும் கணக்காக கவனிக்கின்றானோ, மேற்சொன்ன ஆறுவகை தந்திரங்களையுமறிந்துள்ளவனாகவும்,பிறர் பாராட்டும்படித் தூய நடத்தையும் உடையவனாகவும் விளங்குகின்றானோ...அவன் தனது நாட்டை வெற்றிகரமாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பான்.(நாட்டின் உயிர்சக்தி- சேனை, கருவூலம்,தலைநகரம், பரப்பு எல்லை)

யாருடைய கோபமும் மகிழ்ச்சியும் செல்லுபடியாகுமோ, யார் தான் மேற்சொல்லியுள்ள பணிகளைப் பற்றி தீவிரமாக சிந்திக்கின்றானோ, தன்னம்பிக்கையைப் பொக்கிஷம் போலப் பெற்றுள்ளானோ...அவனுக்கு உலகு எல்லா செல்வங்களையும் வழங்கும்

ஒவ்வொரு அரசனும் தான் பெற்றுள்ள பட்டத்துடன், தன் வெண்கொற்றக் கடையுடன் மன நிறைவு அடைய வேண்டும்.அரசன் என்ற முறையில் தன்னிடம் வந்து சேரும் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது.தன்னிடமுள்ள செல்வத்தைத்  தன் கீழ் பணிபுரிபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

ஒரு அந்தணர்தான் இன்னொரு அந்தணரைப் புரிந்து கொள்ள முடியும்.கணவன், தன் மனையைப் பற்றி நன்கு அறிந்தவன்.அரசனுக்குத் தான் அமைச்சரைப் பற்றி சரியாகத் தெரியும்.ஒரு அரசன் தான் இன்னொரு அரசனைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பான்

எதிரியிடம் சிக்கிக் கொண்டு மரணதண்டனைப் பெற்றவன் விடுதலை பெற முடியாது.எதிரியிடம் பணிவன்புடன் நடந்து கொண்டு.சேவை புரிய வேண்டும்.தனக்குப் போதுமான அளவு வலிமை சேரும் வரை பொறுத்திருந்த் பின்னரே எதிரியை அழிக்க வேண்டும்.அவ்வாறு தக்க நேரத்தில் எதிரியைக் கொல்லாவிட்டால் பெரிய அபாயம் விளையும்

நமக்குக் கோபம் ஏற்படும் போது யாரைக் கோபித்துக் கொள்கிறோம் என்று பார்க்க வேண்டும்.தெய்வம்,அரசன்,அந்தணர்,முதியவர்,குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரை நாம் கோபித்துக் கொள்ளக் கூடாது

அறிவுடைய மன்னன் காரணமற்ற தகராறுகளைச் செய்யக் கூடாது.முட்டாள்கள்தான் தகராறுகளில் மாட்டிக் கொள்வர்.தகராறில் சிக்காமல் எச்சரிக்கையாக வாழ்பவன் உலகில் புகழ் பெறுவான்.அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது

எந்தப் பெண்ணும் ஆண்மையற்றவனைக் கணவனாக அடைய விரும்ப மாட்டாள்.அதுபோலவே, ஒரு குறிப்பிட்ட அரசனின் ஆதரவானாலும் பயனில்லை.அவன் கோபித்தாலும் பயமில்லை.என்றால் அந்த அரசனைத் தலைவனாகப் பெறுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

ஒருவன் அறிவாளியாய் இருந்தால் மட்டுமே அவனிடம் செல்வம் சேர்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது.உழைக்காமல் சோம்பேறியாய் இருந்தால் வறுமை ஏற்பட்டுவிடும் என்பதும் நிச்சயமில்லை.ஆனால், அறிவாளி காலம் சாதகமாக மாறும் என அறிந்திருக்கின்றான்.சோம்பேறி அதை அறிவதில்லை.அறிவாளி வாழ்க்கையை அறிந்துள்ளான்

அறிவில்லாதவன், தன்னைவிட அதிகம் படித்தவர்கள், மேலான நடத்தையுடையவர்கள்,வயதில் மூத்தவர்கள்,அறிவில் சிறந்தவர்கள்,அதிகச் செல்வந்தர்கள்,உயர் குலத்தில் பிறந்தவர்கள் ஆகியோரைச் சரிவர மதித்து மரியாதையாக நடத்த மாட்டான்.

எவனது நடத்தை சீராக இல்லையோ, அன்பு குறைவாக உள்ளதோ,.மனம் பொறாமையில் நிரம்பியுள்ளதோ, எண்ணங்கள் அநியாயமான வழியில் செல்கின்றதோ, எவன் கடுஞ்சொற்கள் பேசுபவனாகவும்,கடும் கோபக்காரனாகவும் உள்ளானோ அவன் விரைவில் துன்பத்திற்கு ஆளாவான்

பிறரை மோசடி செய்யாமலிருத்தல், தான தருமம் புரிதல்,வாக்குத் தவறாமை,பொருத்தமாகவும்-நன்மை தரும் வகையிலும் பேசுதல் ஆகிய பண்புகளால் நாம் அனைவரையும் கவர்ந்துவிட முடியும்

எவனொருவன் பிறரை ஏமாற்றாதவனாகவும்,உழைப்பாளியாகவும்,நன்றியுள்ளவனாகவும், கூர்மையான அறிவுடையவனாகவும், நேர்மையாளனாகவும் வாழ்கிறானோ அவன் செல்வவசதி இல்லாதவனாயினும் அவனைப் பின் தொடர்ந்து ஒரு பெரிய பட்டாளமே அவனுக்கு உதவ முன்வரும்

எரிபொருளாகிய விறகு முதலியவை, நெருப்பைத் தூண்டுவது போல துன்பங்களில் தளராமை,மனக்கட்டுப்பாடு, புலன்களைக் கட்டுப்படுத்துதல், தூய்மை,கருணை,இன்சொல் உரைத்தல்,நண்பர்களுக்குத் துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகிய ஏழு பண்புகளும் வாழ்வில் வளத்தையும்,வசதிகளையும் பன்மடங்காகத் தூண்டிவிடும்.
எந்த அரசன் தன்னிடம் வந்து சேரும் செல்வத்தையும்,வசதிகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் தான் மட்டும் அனுபவிப்பராகவும், தீய மனம் கொண்டவராயும்,,நன்றி கெட்டவராயும்,தீயவை செய்யக் கூசாதவராகவும் உள்ளாரோ அவரைத் தவிர்த்து விட வேண்டும்.
ஒரு வீட்டில் பாம்பு ஒளிந்திருந்தால், அந்த வீட்டுக்காரனால் அச்சமின்றி தூங்க முடியாது.அதுபோல தன்னைச் சுற்றியுள்ள அப்பாவியான ஒரு மனிதனுக்குத் தொந்தரவு கொடுக்கும் தீய மனிதனும் நிம்மதியாக உறங்க முடியாது

தீய எண்ணத்தாலோ, கோபத்தாலோ தூண்டப்பட்டு நம்மிடமுள்ள செல்வத்தையும், மற்ற வசதிப் பொருட்களையும் நாசமாக்கக் கூடிய அளவிற்கு அக்கிரம் செய்யும் வலிமை கொண்டவர்க்கு எதையாவதுக் கொடுத்துத் திருப்திப்படுத்தி அனுப்பி விடுவதுதான் நமக்கு பாதுகாப்பானது(தீயவர்களை இயன்றவரை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்)

முக்கியமான பணிகளைப் பெண்களிடம் ஒப்படைக்கக் கூடாது.வழக்கமாகத் தவறு செய்பவர்கள் , சமுக மதிப்பு அல்லது சாதியிலிருந்து தாழ்ந்து வீழ்ந்தவர்கள்,நேர்மையும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஆகியோரிடம் முக்கியமானப் பணிகளை ஒப்படைக்கக் கூடாது.அவர்களிடம் பொறுப்புள்ள பணிகளைக் கொடுத்தாலவை நிறைவேறுவது சந்தேகமே!(விதுரர் காலத்தில் பெண்களால் கூடுதலான பொறுப்புகளை சுமப்பது கடினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)

கல்லால் படகு செய்து அதைத் தண்ணீரில் விட்டு நாம் அமர்ந்தால் அதனுடன் சேர்ந்து மூழ்க நேரும்.அதுபோன்றே நாம், பெண்கள், மோசடிக்காரர்கள் அல்லது குழந்தைகளின் ஆலோசனைப்படிச் செயல்பட்டால் தோல்வியடைந்து அழிந்து போவோம்(பெண்களுக்கு உலக அனுபவம் போதாது)

வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களின் இறுதிப்பயனில் கவனம் செலுத்துவதே அறிவுள்ளவன் கடமையாகும்.அந்த லட்சியங்களை அடைவதற்கான முயற்சியின் இடையில் காணப்படும் சிறு விஷயங்களிலும், விசித்திரங்களிலும் அறிவாளியின் கவனம் சிதறக்கூடாது.ஏனெனில் நடுவில் வரும் விஷயங்கள் தற்செயலானவை.மேலும் இரண்டாம் பட்சமானவை

ஒருவன் போக்கிரிகளாலும், முகஸ்துதி செய்து பிழைக்கும் கவிஞர்கள் அல்லது பாடகர்களாலும், விலை மாதர்களாலும் மட்டுமே புகழப்படுவானாயின் அவன் உயிர் வாழ்வதைவிட சாவதே மேல்

அரசே! பாண்டவர்கள் அற்புதமான வில் வித்தை வீரர்கள்,அளவற்ற ஆற்றல் கொண்டவர்கள்.அவர்களை நீங்கள் கைவிட்டீர்கள்.இந்தப் பேரரசை ஆளும் பொறுப்பைத் துரியோதனனிடம் ஒப்படைத்துத் தவறு செய்து விட்டீர்கள்

மகாபலி யைப் போல துரியோதனன், செல்வமும், செல்வாக்கும் உள்ள காரணத்தால் திமிர் பிடித்து அலைகிறான்.மூவுலகையும் ஆண்ட மகாபலி அவற்றை இழந்தது போல துரியோதனனும் விரைவில் இப்பேரரசை ஆளுகின்ற உன்னத நிலையிலிருந்து உருண்டு விழத்தான் போகிறான்.இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று விதுரர் கூறி முடித்தார்.  

No comments:

Post a Comment