Thursday, January 21, 2016

48-வாழ்வின் முடிவு சாவு




எத்தனை மாவீரர்கள், மாமன்னர்கள் கடந்த காலத்தில் தோன்றியிருக்கின்றனர்! தானிய செல்வத்திலும்,மற்றவகைச் செல்வங்களாலும் நிறைந்து விளங்கிய நிலப்பரப்பை ஆட்சி புரிந்துள்ளனர்.அவர்களுக்குச் சாவுத்தெய்வம் சலுகைக்காட்டவில்லை.எல்லாவற்றையும் இழந்து சாவுக்கு இரையாகிவிட்டனர்

நாம், மிகுந்த கவனத்தோடும், முயற்சியோடும் மகனை வளர்த்து பெரியவன் ஆக்குகிறோம்.அவன் இறந்துவிட்டால்....என்ன செய்வது? உடலை வீட்டிலிருந்து மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதுதான்.வீட்டுப் பெண்கள் அலறிப் புலம்புவார்கள் என வீட்டில் பிணத்தை வைத்திருக்க முடியுமா? யார் எப்படி அழுதாலும்....விறகுகள் நடுவே உடலையும் விறகாய் சிதையில் வைக்க வேண்டியதேத் தவிர வேறு வழியில்லை

வாழ்நாள் முழுதும் உழைத்து இறந்த ஒருவன் திரட்டிய செல்வத்தை வேறொருவன் அனுபவிக்கிறான்.நாம் எவ்வளவு சீராட்டி வளர்த்தாலும்..ஐந்து மூலப்பொருட்களால் ஆன இவ்வுடலை பறவைகள் மிச்சமின்றி அழிக்கின்றன...அல்லது நெருப்பு எரித்துவிடுகிறது.இறந்தவன், இதுவரை செய்த பாவபுண்ணியங்கள் என்றும் உடன் வர மேலுலகம் செல்கிறான்

மரங்கள் பூப்பதையும், கனிகள் தருவதையும் நிறுத்தி விட்டால் அவற்றை விட்டு பறவைகள் வேறிடம் சென்று விடும்.அதுபோலவே, ஒருவன் இறந்துவிட்டால்....அவனால் இனிப்பயன் இல்லை என அவனுடைய மகன்களும்,உறவினர்களும், நண்பர்களும் அவன் உடலைச் சுடுகாட்டில் வைத்துவிட்டு வந்து விடுகின்றனர்

சிதை நெருப்பில் போடப்படுகின்ற இறந்தவனுடைய ஆத்மாவுடன் வருபவை அவன் வாழ்க்கையில் செய்த காரியங்களின் பலன் மட்டுமே..ஆகவே நாம் எப்படிப்பட்டாவது கொஞ்சம்..கொஞ்சமாகவாவது நற்செயல்கள் செய்து புண்ணியத்தை சேகரிக்க வேண்டும்

நாம் வாழும் இவ்வுலகில் மேற்பகுதியிலும்...கீழுள்ள பகுதியிலும் வேதனையான இருண்ட உலகங்கள் பல உண்டு.அவை நம் புலன்களையும்  திணறும் அளவிற்குக் கொடுமையானவை.துரியோதனன் மீதுள்ள பாசம் காரணமாக பாவச்செயல்களுக்கு உடந்தை போய் அந்தக் கொடிய உலகங்களில் தள்ளப்பட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
(மேலுலகங்கள் - பூலோகம்,சுவர்லோகம்,அயர்லோகம்,சனலோகம்,தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்
 கீழுலகங்கள்- அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,மகாதலம்,ரசாதலம், பாதாளம்)

அரசே! நான் கூறிய அறிவுரைகளைப் பொறுமையுடன் கேட்டீர்கள்.அதன்படி நீங்கள் உண்மையாக நடந்து கொண்டால் இவ்வுலகில் பெரும் புகழ் பெறுவீர்கள்.பின்...இவ்வுலகில் எதற்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்.மேலுலகிலும் அஞ்சும்படி எத்துன்பமும் விளையாது

ஆத்மா..ஒரு நதிக்கு சமம்.புண்ணியச் செயல்களே அந்நதியில் குளிப்பதற்குரிய இடமாகும்.சத்தியமே...அந்நதியின் நீர்ப்பெருக்கு.ஐம்புலன் கட்டுப்பாடே அந்நதியின் கரைப்பகுதி.கருணை உணர்வே அதன் அலைகள்.அதில் குளிப்பவன் தூய்மைப் பெற்றுப் புண்ணியசாலியாகிறான்.ஏனெனில் ஆத்மா புனிதமானது.ஆசைகளைத் துறத்தலே தலை சிறந்த புண்ணியமாகும்

உலக வாழ்க்கை என்பது ஒரு நதி.அதில் ஐம்புலன் ஆசைகள் தண்ணீராய் உள்ளன.காமம்,சினம்,என்ற முதலைகள் அதில் நிறைந்துள்ளன.மீண்டும், மீண்டும் பிறத்தல் என்ற நீர்ச்சுழல்கள் நம்மை அச்சுறுத்துகின்றன.இத்தகைய பயங்கர ஆற்றை நாம் சுயக்கட்டுப்பாடு என்ற படகின் உதவியோடு கடக்க வேண்டும்

நம்மைச் சுற்றியுள்ளவர்களில் அல்லது உறவினர்களில் யாராவது அல்லது சிலர் விவேகத்திலோ, நற்பண்பிலோ,உலக அறிவிலோ, வயதிலோ நம்மைவிட மூத்தவர்களாக  இருக்கக் கூடும்.அப்படிப்பட்டவர்களுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.அவரது தயவைப் பெற்றிட வேண்டும்.நாம் ஒரு சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்....என்ன செய்யக்கூடாது என அத்தகைய மூத்தவரிடம் ஆலோசனைப் பெற்று அதற்கேற்ப நடந்து கொண்டால், தவறு செய்ய வாய்ப்பே இல்லை

நாம் காமத்தையும், வாயுணர்வையும் உள்ளத்து வலிமையைக் கொண்டு அடக்கி ஆள வேண்டும்.கைகளையும், கால்களையும் கண்களின் உதவியால் கட்டுப்படுத்த வேண்டும்.கண்களையும்-செவிகளையும் மனத்தால் வசப்படுத்த வேண்டும்.சிந்தனையையும், பேச்சையும் செயல்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும். 

No comments:

Post a Comment