Sunday, January 3, 2016

36- அந்தப் பதினேழு




விதுரர் மேலும் திரிதராஷ்டிரருக்குச் சொல்ல ஆரம்பித்தார்

அரசே! பிரம்மாவின் புதல்வரான மனு, நான் சொல்லப் போகும் பதினேழு நபர்களை, ஆகாயத்தைத் தாக்குபவர்கள் (அவசரப்பட்டுச் செயல்படுவது, லட்சியமின்றி செயல்படுவது)என பட்டியல் இட்டுள்ளார். இத்தகையோர் இந்திரனின் வளைக்க முடியாத வில்லை வளைப்போம் என வீண் பெருமை பேசுவார்கள்.யாராலும் வசப்படுத்த முடியாத சூரிய  கிரணங்களையும், சந்திர கிரணங்களையும் நாங்கள் கையால் பிடித்துக் காட்டுவோம் என்று திமிராகச் சொல்வார்கள் என்றும் சொல்கிறார்.
அவர் கூறும் பதினேழு வகையினர்-
படிக்க விரும்பாத மாணவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்
முன்னேறும் ஆர்வமின்றி சம்பாத்தியத்துடன் நிறுத்திக் கொள்பவர்
எதிரிகளுக்கு பணிவிடை செய்து வாழ்க்கை நடத்துவர்
தீய பெண்களைப் பாதுகாத்துத் தரகர் வாழ்க்கை நடத்துபவர்
யாரிடம் உதவிக் கேட்கக் கூடாதோ அவரிடம் சென்று யாசிப்பவர்
தற்பெருமை பிடித்துக் கொள்ளும் வழக்கமுள்ளவர்
உயர்குலத்தில் பிறந்திருந்தும் குலப்பெருமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்பவர்
தான் பலகீனராயினும் வலிமை மிக்கவர்களிடம் பகைமைக் கொள்பவர்
தன் பேச்சைக் கவனமாகக் கேட்காதவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்
விரும்பத்தகாத பொருள்களுக்கு ஆசைப்படுபவர்
மாமனார் என்ற கண்ணியயமான ஸ்தானத்தில் இருந்த போதிலும் மருமகளிடம் கேலியும், கிண்டலுமாகத் தரக்குறைவாக பழகுபவர்
தனது பயத்தை நீக்கப் பெண்களின் உதவி தேவைப்பட்ட போதிலும், வெளியில் பெண்களை அதிகாரம் செய்பவர்
இன்னொருவரின் வயலில் விதைகள் நட்டு அறுவடை செய்பவர்(பிறன் மனை விரும்புபவர்)
பெண்களை அளவு கடந்து குறை  கூறுபவர்
ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டபின் அவ்வாறு பெற்றதாக நினைவில்லை என வாதாடுபவர்
ஒரு பொருளைக் கேட்டவருக்குக் கொடுத்துவிட்டு அதைப்பற்றியே தற்பெருமை பேசுபவர்
தவறான வழியில் செல்பவர்களை ஆதரிப்பவர்கள்

இந்தப் பதினேழு பேர்களையும் எமதூதர்கள் கையில் பாசக்கயிறு எடுத்து வந்து நரகத்திற்கு இழுத்துச் செல்வார்கள்

ஒருவன் இன்னொருவனிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது அந்த இன்னொருவன் அவனுடன் எப்படிப் பழகுகிறான் என்பதைப் பொறுத்ததாகும்.நம்மிடம் தந்திரமாக பழகுபவரிடம் நாமும் தந்திரமாகப் பழக வேண்டும்.நம்மிடம் நல்லதனமாக பழகுபவரிடம் நாமும் நேர்மையாக நடக்க வேண்டும்(நல்லவனாக இருக்கலாம்..ஆனால் ஏமாளியாக இருக்ககூடாது)

திருதராஷ்டிரர் கேட்டார். "விதுரரே! மனிதன் நூறாண்டு வாழ்பவன் என வேதங்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் அனைவராலும் நூறு வயதுவரையில் வாழ முடியவில்லை"

விதுரர் கூறினார், "அளவுக்கு மீறிய கர்வம்.அடக்கமற்றப் பேச்சு அல்லது கடுஞ்சொல் கூறுதல், கருமித்தனம், சினம், புலன் வழி இன்பங்களில் விருப்பம்.நண்பர்களுக்கோ,உறவினருக்கோ துரோகம் செய்தல் என ஆறு கொடிய பாவங்கள் உள்ளன.

இந்த ஆறும் கூர்மையான வாள் போல.இவை ஆயுளின் ஆண்டுகளை வெட்டிவிடுகின்றன.இவைதான் மனிதர்களை கொல்கின்றனவே தவிர சாவு மனிதனைக் கொல்வதில்லை.உங்கள் மகன்கள் இந்த ஆறு பாவங்களையும் செய்யாதிருந்து நூறாண்டுகள் வாழக் கடவுள் ஆசிர்வதிப்பாராக!

தன்னை நம்பியுள்ளவரது மனைவிக்குக் கேடிழைத்தல், தனது குருவின் மனைவியைப் பலவந்தப்படுத்துதல், தாழ்ந்த சாதிப் பெண்ணை உயர்குலத்தவர் மணந்து கொள்ளல், குடிப்பழக்கம்,சான்றோர்கள் மீது அதிகாரம் செலுத்துதல், ஒருவர் சம்பாதித்து வாழ உதவுகின்றத் தொழிலை நாசமாக்குதல்.அந்தணர்களை அடிமையைப் போல நடத்தி வேலை வாங்குதல், அடைக்கலம் புகுந்தவரைக் கொல்லுதல்...இத்தகையக் கொடியச் செயல்களைப் புரிந்தவர்கள் பாவிகளைப் போல நிந்திக்கப்படுவர்.அவர்களது பாவம் உடன் இருப்போரையும் தொற்றிக்கொள்ளும்.ஆகவே அவர்களுடன் இருப்பவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கின்றன வேதங்கள்.

எவன் சான்றோர்களாகிய ஆசிரியர்களின் உபதேசத்தைப் பின்பற்றுகிறானோ, ஒழுக்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளானோ, பெருந்தன்மை உடையவனோ,கடவுள்-முன்னோர்-விருந்தினர் ஆகிய மூவருக்கும் படைத்தப்பின உண்கின்றானோ,பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, தீமை ஏதும் செய்யாது கவலையின்றி விளங்குகின்றானோ,நன்றி உடையவனோ, கனிவுடன் பழகுகின்றானோ, அறிஞனாக உள்ளானோ அவன் எளிதில் சுவர்க்கத்திற்குப் போகிறான்

மற்றவர்களுக்குப் பிடித்தபடி இனிமையாய் எப்போதும் பேசுபவர் நிறைய உள்ளனர்.ஆனால், இன்னொருவருக்குப் பிடிக்காது என தெரிந்தும் கசப்பான அறிவுரைகளை தயங்காது கூறுபவர்கள் சிலரே!அந்தக் கசப்பான அறிவுரைகளையும் பொறுமையாகக் கேட்பவர் மிகவும் சிலரே

அறிஞன், தனது உபதேசம், அதிக்கேட்பவரின் மனதிற்கேற்றபடி இனிமையாக உள்ளதா..இல்லையா என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது.நல் விளைவுகளைத் தரும் உபதேசம் கேட்பதற்குக் கசந்தாலும் அறிஞன் அதை எடுத்துக் கூற வேண்டும்.அத்தகையவனே மன்னனின் உண்மையான உபகாரி ஆவான்

குடும்பத்தின் நலன் கருதிக் குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கைவிட நேர்ந்தால் தயங்கக்கூடாது.அதுபோல, கிராமத்தின் நலன் கருதிக் குடும்பத்தையும், நாட்டின் நலனுக்காகக் கிராமத்தையும் கைவிடத் தயங்கக்கூடாது.தன் ஆத்மாவின் நலனைக் கருதும் போது அதற்காக உலகையேத் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்

எதிர்காலத்தில் விளையக்கூடிய ஆபத்துகளைச் சமாளிக்க இப்பொழுதிலிருந்தே பணம் சேமித்து வர வேண்டும்.ஆனால், மனைவியைக் காப்பாற்றுவதா இல்லை பணத்தைக் காப்பாற்றுவதா என்ற சிக்கல் எழுந்தால் மனைவியைக் காப்பாற்றுவதே முக்கியம்.பணம்,  மனைவி, ஆத்மா ஆகிய மூன்றில் எதைக் காப்பாற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டால் ஆத்மாவின் தூய்மையைக் காப்பாற்றுவதே முக்கியம்

சூதாட்டம் மனிதர்களிடையே பகையை விளைவிக்கும் என்பது அறியப்பட்ட உண்மையாகும்.ஆகவே அறிவுள்ள மனிதன் எவனும் சூதாடக்கூடாது.பொழுது போக சூதாட அழைக்கப்பட்டாலும் அதில் கலந்து கொள்ளக் கூடாது

சகுனியும், தருமரும் சூதாடுகையில், அதைத் தடுக்குமாறு தங்களிடம் கூறினேன்.ஆனால், நோயாளி கசப்பு மருந்தையும், பத்திய உணவையும் வெறுப்பதைப் போல என் ஆலோசனை உங்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது

வண்ணச்சிறகுகளைக் கொண்ட மயில்கள் போன்ற பாண்டவர்களைக் காக்கைகள் போன்ற உங்கள் மகன்கள் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணம் போலும்.சிங்கங்களை ஆதரித்துப் பாதுகாப்பதற்குப் பதிலாக நீங்கள் நரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டால், அதன் விளைவுகளை சந்தித்து அழுது புலம்பிட வேண்டும்.

No comments:

Post a Comment