Monday, January 4, 2016

37-முதலாளியும் ..ஊழியரும்



தன்னிடம் விசுவாசம் கொண்டு, தன் நன்மைக் கருதி உழைக்கின்ற ஊழியர்களிடம் ஒரு போதும் கோபம் கொள்ளாத எஜமானன், அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறான்.ஆகவே அப்படிப்பட்ட எஜமானனுக்குப் பிரச்னையான சூழல் ஏற்படுகையில் ஊழியர்கள் அவனைவிட்டு ஓடாமல் நிலைத்து நின்று உதவுவார்கள்

ஒரு அரசன் தன்னுடைய பணியாளர்கள் உயிர் வாழ செய்கின்றத் தொழிலைத் தடுத்து புதியதோர் அரசை நிறுவவோ அல்லது செல்வம் ஈட்டவோ முயற்சிக்கக் கூடாது.இவ்வாறு வஞ்சிக்கப்பட்டு யார் உயிர் வாழ சிரமப்பட வேண்டியுள்ளதோ அவர்கள் பிரிய அமைச்சர்களாக இருந்தாலும் எதிர்ப்பு உணர்வு மேலிட தலைவனைவிட்டு பிரிவர்

ஒருவன் தன் கீழுள்ள ஊழியர்களை நியமிக்கையில்  அவர்களின் பணிகள் என்ன, தனது வரவு செலவு நிலவரம் எவ்வாறு உள்ளது.ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை எல்லாம் முன்னரே ஆராய வேண்டும்.சரியான பணியும், சரியான ஊதியமும் நிச்சயித்து பொருத்தமான ஊழியர்களை நியமித்துவிட்டால் அவர்கள் உதவியுடன் கடினமான சாதனைகளையும் நிறைவேற்றலாம்

நம் கீழ் பணிபுரிபவர் யாரெல்லாம், விருப்பு-வெறுப்பு, நோக்கத்தை அற்றவர்களாகவும், சுசுறுப்பாக எல்லாக் கடமைகளையும் செய்பவர்களாகவும், நமக்கு நன்மைத் தருவதையே பேசுபவர்களாகவும், நம்மியம் விசுவாசம் உள்ளவர்களாகவும், கண்ணியமான நடத்தை கொண்டவர்களாகவும், தங்கள் உழைப்பின் அதிகப் பட்ச அளவையும்,தங்களுக்குப் போட்டியாக உள்ளவர்களின் ஆற்றலையும் உணர்ந்தவர்களாகவும் உள்ளனரோ அவர்களை நாம் மிகவும் வேண்டியவர்களாகக் கருதிப் பணிவுடன் நடத்த வேண்டும்

நம் கீழ் பணிபுரிபவர் யாராவது நாம் கட்டளையிட்டாலும் அக்கறையுடன் வேலைசெய்யாதவராகவும், நாம் வேலை சொன்னால் எதிர்த்து பேசுபவராகவும், தனக்கு நிரம்ப அறிவுள்ளதாகக் கர்வப்பட்டவராகவும், எதற்கெடுத்தாலும் நம்முடன் வாதம் செய்பவராகவும் இருந்தால் அவரை முடிந்த அளவு விரைவில் பதவிநீக்கம் செய்ய வேண்டும்

தூதருக்குரிய குணங்கள் எட்டு என அறிஞர்கள் கருதுகிறார்கள்.சமயத்திற்கேற்ப முடிவெடுக்கும் திறமை,துணிச்சல், எக்கணமும் செயலில் இறங்க தயாராக இருப்பது, கனிவுடமை,நடை-உடை பழக்கங்களில் பண்பட்ட நளினம். ஊழல் வசப்படாமை,ஆரோக்கியம், கண்ணியம், கவர்ந்து இழுக்கும் பேச்சுத் திறன்,ஆகியவை அந்த எட்டுக் குணங்களாகும்

விவேகமுள்ள எவனும், தான் செய்வது தவறில்லை என நம்பிக்கையுடன் பொருத்தமில்லா நேரத்தில் இன்னொருவர் வீட்டிற்குள் நுழையக் கூடாது.இரவு நேரத்தில் இன்னொருவர் வீட்டில் ஒளிர்ந்திருக்கக் கூடாது.அரசன் விரும்பும் பெண்ணை ஆசையுடன் அணுகக் கூடாது

தீயவர்களுடன் நட்பு வைத்து அவர்களிடம் ஆலோசனைப் பெறுவோரின் கூட்டங்களுடன் நாம் கலந்து கொள்ளக் கூடாது.நமக்கு ஒருவரிடம் நம்பிக்கையில்லாவிடினும் அதை அவரிடம் நேருக்கு நேர் சொல்லிவிடக்கூடாது.ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அடித்தாற் போலத் தெரிவிக்காமல் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி பின் வாங்கிவிடவேண்டும்

நாம் யாருக்குப் பணம் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.நம்மை வெறுப்பவர்,அரசன்,ஒழுக்கமற்ற பெண்,அரசாங்க ஊழியர், மகன்,சகோதரன்,குழந்தைகள்,விதவை,ராணுவத்தில் வேலை பார்ப்பவன்,சொத்தையோ..அதிகாரத்தையோ முழுமையாக இழந்தவன் ஆகியோரிடம் பண விவகாரம் வைத்துக் கொள்ளக்கூடாது

தினமும் குளிப்பதால் பின் வரும் நன்மைகள் விளையும்.உடல் வலிமை பெறும்.அழகுக் கூடும்.குரல் தெளிவு பெறும்.உடலின் நிறம் சிறக்கும்.உடல் மிருதுவாக இருக்கும்,உடலிலிருந்து நறுமணம் வீசும்.உடல் தூய்மையாக இருக்கும்.எழில் மிகும்,இளமை நீடிக்கும்,அழகியப் பெண்களின் நட்பு கிடைக்கும்

அளவோடு உண்பவனுக்கு ஆறு நன்மைகள் விளைகின்றன.ஆரோக்கியம் உறுதிப்படுகிறது.ஆயுள் நீள்கிறது.வளமை கூடுகிறது.மகிழ்ச்சி மிகுதியாகிறது.ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.சாப்பாட்டுராமன் என இகழப்படும் நிலை ஏற்படாது 

Sunday, January 3, 2016

36- அந்தப் பதினேழு




விதுரர் மேலும் திரிதராஷ்டிரருக்குச் சொல்ல ஆரம்பித்தார்

அரசே! பிரம்மாவின் புதல்வரான மனு, நான் சொல்லப் போகும் பதினேழு நபர்களை, ஆகாயத்தைத் தாக்குபவர்கள் (அவசரப்பட்டுச் செயல்படுவது, லட்சியமின்றி செயல்படுவது)என பட்டியல் இட்டுள்ளார். இத்தகையோர் இந்திரனின் வளைக்க முடியாத வில்லை வளைப்போம் என வீண் பெருமை பேசுவார்கள்.யாராலும் வசப்படுத்த முடியாத சூரிய  கிரணங்களையும், சந்திர கிரணங்களையும் நாங்கள் கையால் பிடித்துக் காட்டுவோம் என்று திமிராகச் சொல்வார்கள் என்றும் சொல்கிறார்.
அவர் கூறும் பதினேழு வகையினர்-
படிக்க விரும்பாத மாணவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்
முன்னேறும் ஆர்வமின்றி சம்பாத்தியத்துடன் நிறுத்திக் கொள்பவர்
எதிரிகளுக்கு பணிவிடை செய்து வாழ்க்கை நடத்துவர்
தீய பெண்களைப் பாதுகாத்துத் தரகர் வாழ்க்கை நடத்துபவர்
யாரிடம் உதவிக் கேட்கக் கூடாதோ அவரிடம் சென்று யாசிப்பவர்
தற்பெருமை பிடித்துக் கொள்ளும் வழக்கமுள்ளவர்
உயர்குலத்தில் பிறந்திருந்தும் குலப்பெருமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்பவர்
தான் பலகீனராயினும் வலிமை மிக்கவர்களிடம் பகைமைக் கொள்பவர்
தன் பேச்சைக் கவனமாகக் கேட்காதவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்
விரும்பத்தகாத பொருள்களுக்கு ஆசைப்படுபவர்
மாமனார் என்ற கண்ணியயமான ஸ்தானத்தில் இருந்த போதிலும் மருமகளிடம் கேலியும், கிண்டலுமாகத் தரக்குறைவாக பழகுபவர்
தனது பயத்தை நீக்கப் பெண்களின் உதவி தேவைப்பட்ட போதிலும், வெளியில் பெண்களை அதிகாரம் செய்பவர்
இன்னொருவரின் வயலில் விதைகள் நட்டு அறுவடை செய்பவர்(பிறன் மனை விரும்புபவர்)
பெண்களை அளவு கடந்து குறை  கூறுபவர்
ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டபின் அவ்வாறு பெற்றதாக நினைவில்லை என வாதாடுபவர்
ஒரு பொருளைக் கேட்டவருக்குக் கொடுத்துவிட்டு அதைப்பற்றியே தற்பெருமை பேசுபவர்
தவறான வழியில் செல்பவர்களை ஆதரிப்பவர்கள்

இந்தப் பதினேழு பேர்களையும் எமதூதர்கள் கையில் பாசக்கயிறு எடுத்து வந்து நரகத்திற்கு இழுத்துச் செல்வார்கள்

ஒருவன் இன்னொருவனிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது அந்த இன்னொருவன் அவனுடன் எப்படிப் பழகுகிறான் என்பதைப் பொறுத்ததாகும்.நம்மிடம் தந்திரமாக பழகுபவரிடம் நாமும் தந்திரமாகப் பழக வேண்டும்.நம்மிடம் நல்லதனமாக பழகுபவரிடம் நாமும் நேர்மையாக நடக்க வேண்டும்(நல்லவனாக இருக்கலாம்..ஆனால் ஏமாளியாக இருக்ககூடாது)

திருதராஷ்டிரர் கேட்டார். "விதுரரே! மனிதன் நூறாண்டு வாழ்பவன் என வேதங்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் அனைவராலும் நூறு வயதுவரையில் வாழ முடியவில்லை"

விதுரர் கூறினார், "அளவுக்கு மீறிய கர்வம்.அடக்கமற்றப் பேச்சு அல்லது கடுஞ்சொல் கூறுதல், கருமித்தனம், சினம், புலன் வழி இன்பங்களில் விருப்பம்.நண்பர்களுக்கோ,உறவினருக்கோ துரோகம் செய்தல் என ஆறு கொடிய பாவங்கள் உள்ளன.

இந்த ஆறும் கூர்மையான வாள் போல.இவை ஆயுளின் ஆண்டுகளை வெட்டிவிடுகின்றன.இவைதான் மனிதர்களை கொல்கின்றனவே தவிர சாவு மனிதனைக் கொல்வதில்லை.உங்கள் மகன்கள் இந்த ஆறு பாவங்களையும் செய்யாதிருந்து நூறாண்டுகள் வாழக் கடவுள் ஆசிர்வதிப்பாராக!

தன்னை நம்பியுள்ளவரது மனைவிக்குக் கேடிழைத்தல், தனது குருவின் மனைவியைப் பலவந்தப்படுத்துதல், தாழ்ந்த சாதிப் பெண்ணை உயர்குலத்தவர் மணந்து கொள்ளல், குடிப்பழக்கம்,சான்றோர்கள் மீது அதிகாரம் செலுத்துதல், ஒருவர் சம்பாதித்து வாழ உதவுகின்றத் தொழிலை நாசமாக்குதல்.அந்தணர்களை அடிமையைப் போல நடத்தி வேலை வாங்குதல், அடைக்கலம் புகுந்தவரைக் கொல்லுதல்...இத்தகையக் கொடியச் செயல்களைப் புரிந்தவர்கள் பாவிகளைப் போல நிந்திக்கப்படுவர்.அவர்களது பாவம் உடன் இருப்போரையும் தொற்றிக்கொள்ளும்.ஆகவே அவர்களுடன் இருப்பவர்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கின்றன வேதங்கள்.

எவன் சான்றோர்களாகிய ஆசிரியர்களின் உபதேசத்தைப் பின்பற்றுகிறானோ, ஒழுக்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளானோ, பெருந்தன்மை உடையவனோ,கடவுள்-முன்னோர்-விருந்தினர் ஆகிய மூவருக்கும் படைத்தப்பின உண்கின்றானோ,பிறரைத் துன்புறுத்துவதில்லையோ, தீமை ஏதும் செய்யாது கவலையின்றி விளங்குகின்றானோ,நன்றி உடையவனோ, கனிவுடன் பழகுகின்றானோ, அறிஞனாக உள்ளானோ அவன் எளிதில் சுவர்க்கத்திற்குப் போகிறான்

மற்றவர்களுக்குப் பிடித்தபடி இனிமையாய் எப்போதும் பேசுபவர் நிறைய உள்ளனர்.ஆனால், இன்னொருவருக்குப் பிடிக்காது என தெரிந்தும் கசப்பான அறிவுரைகளை தயங்காது கூறுபவர்கள் சிலரே!அந்தக் கசப்பான அறிவுரைகளையும் பொறுமையாகக் கேட்பவர் மிகவும் சிலரே

அறிஞன், தனது உபதேசம், அதிக்கேட்பவரின் மனதிற்கேற்றபடி இனிமையாக உள்ளதா..இல்லையா என்பதை கருத்தில் கொள்ளக் கூடாது.நல் விளைவுகளைத் தரும் உபதேசம் கேட்பதற்குக் கசந்தாலும் அறிஞன் அதை எடுத்துக் கூற வேண்டும்.அத்தகையவனே மன்னனின் உண்மையான உபகாரி ஆவான்

குடும்பத்தின் நலன் கருதிக் குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கைவிட நேர்ந்தால் தயங்கக்கூடாது.அதுபோல, கிராமத்தின் நலன் கருதிக் குடும்பத்தையும், நாட்டின் நலனுக்காகக் கிராமத்தையும் கைவிடத் தயங்கக்கூடாது.தன் ஆத்மாவின் நலனைக் கருதும் போது அதற்காக உலகையேத் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்

எதிர்காலத்தில் விளையக்கூடிய ஆபத்துகளைச் சமாளிக்க இப்பொழுதிலிருந்தே பணம் சேமித்து வர வேண்டும்.ஆனால், மனைவியைக் காப்பாற்றுவதா இல்லை பணத்தைக் காப்பாற்றுவதா என்ற சிக்கல் எழுந்தால் மனைவியைக் காப்பாற்றுவதே முக்கியம்.பணம்,  மனைவி, ஆத்மா ஆகிய மூன்றில் எதைக் காப்பாற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டால் ஆத்மாவின் தூய்மையைக் காப்பாற்றுவதே முக்கியம்

சூதாட்டம் மனிதர்களிடையே பகையை விளைவிக்கும் என்பது அறியப்பட்ட உண்மையாகும்.ஆகவே அறிவுள்ள மனிதன் எவனும் சூதாடக்கூடாது.பொழுது போக சூதாட அழைக்கப்பட்டாலும் அதில் கலந்து கொள்ளக் கூடாது

சகுனியும், தருமரும் சூதாடுகையில், அதைத் தடுக்குமாறு தங்களிடம் கூறினேன்.ஆனால், நோயாளி கசப்பு மருந்தையும், பத்திய உணவையும் வெறுப்பதைப் போல என் ஆலோசனை உங்களுக்குப் பிடிக்காமல் போய் விட்டது

வண்ணச்சிறகுகளைக் கொண்ட மயில்கள் போன்ற பாண்டவர்களைக் காக்கைகள் போன்ற உங்கள் மகன்கள் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் எண்ணம் போலும்.சிங்கங்களை ஆதரித்துப் பாதுகாப்பதற்குப் பதிலாக நீங்கள் நரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டால், அதன் விளைவுகளை சந்தித்து அழுது புலம்பிட வேண்டும்.

Friday, January 1, 2016

35-உறவும் பகையும்



உறவினர்களுடன் சண்டையிட்டு பிரிந்து போனவர்கள் நிம்மதியாய் தூங்க முடியாது.நேர்த்தியான படுக்கை வசதியிருந்தாலும் தூக்கம் வராது.பெண்களின் இன்பமும் அவர்களுக்குத் திருப்தியைத் தராது.சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு புகழ்ந்து பாராட்டினாலும் மகிழ்வு ஏற்படாது

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தவர்கள் நற்பண்புகளைக் கடைப்பிடிக்க இயலாது.அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது.யாரும் மரியாதை காட்டமாட்டார்கள்.அமைதியாக வாழும் ஆனந்தம் கிட்டாது.(கௌரவர்கள் , பாண்டவர்களைப் பகைத்துக் கொண்டது தீது என மறைமுகமாக கூறுகிறார்)

உறவினர்களைப் பகைத்துக் கொள்பவர்கள் யார் நல்ல புத்தியைச் சொன்னாலும் மகிழ்ச்சியாகக் கேட்டுவிட்டு, அதை பின்பற்ற மாட்டார்கள்.தங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொள்ள மாட்டார்கள்.உறவினர்களை வெறுத்துத் தவிப்பார்கள்.கடைசியில் நாசமாகப் போவார்கள்

பசுக்கள் பாலைத் தருவது இயற்கை.அந்தணர்களிடம் கடுமையான விரதக் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம்.இளம் பெண்களிடம் சஞ்சலத் தன்மை இருக்கும்.அதுபோல உறவினர்களிடம் பகைத்து கொள்பவன் பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுவதும் சாத்தியமே

மெல்லியவை ஆயினும் ஒரே நீளமுள்ள தரமான நூல் இழைகள் தொகுக்கப்பட்டால் அவை துணி நெய்கையில் எத்தகைய இழுப்பையும் தாங்கும்.அதுபோல நல்லவர்கள்(பாண்டவர்கள்) ஒன்று சேர்ந்தால் மாபெரும் சாதனைகள் நிகழ்த்த முடியும்

எரிந்து கொண்டிருக்கும் விறகுகள் தனித்தனியாகப் பிரித்தால் புகைதான் கிளம்பும்.அவற்றை ஒன்றாகச் சேர்த்தால் தீ கொழுந்துவிட்டு எரியும்.உறவினர்களிடமிருந்து நாம் பிரிந்துவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியாது.எல்லா உறவும் சேர்ந்து முயற்சித்தால் அக்குடும்பம் பெரிய சாதனைகள் செய்ய முடியும்

யார், அந்தணர்கள்,பெண்கள், உறவினர்கள் ஆகியோருக்கும், பசுக்களுக்கும் கொடுமை இழைப்பதில் வீரம் காட்டுகின்றார்களோ அவர்கள் முற்றிய பழம் மரத்திலிருந்து விழுவதைப் போல ஆதாரத்தை இழந்து அழிந்து போவார்கள்

ஒரு மரம் தனியாக இருக்கிறது.அது பெரியதாகவும், வலுவாகவும் இருக்கலாம்.அதன் வேர்கள் பூமியில் ஆழமாக பதிந்திருக்கலாம்.ஆனாலும் சூறாவளிக் காற்று வீசினால் அம்மரம் ஒரு நிமிடத்தில் கிளைகள் உட்பட முற்றிலும் ஒடிந்து விழுந்துவிடும்.ஆனால், பல மரங்கள் அருகருகே அமைந்து, பூமிக்குள் நன்கு ஊடுருவி..அடர்த்தியாகத் திரண்டு நின்றால் அவை பலத்த புயல் காற்றையும் சமாளித்துவிட முடியும்.அவை ஒன்றையொன்று தாங்கிக் காப்பாற்றுவதுதான் நீடிக்க முடிவதன் காரணமாகும்

ஒரு ,மனிதரிடம் எல்லாச் சிறப்புகளும் இருக்கலாம்.ஆனால் ஊரோடு ஒட்டி வாழாமல் தனித்து நின்றால் அவனுடைய எதிரிகள் மகிழ்வர்.தனிமரத்தை காற்று வீழ்த்துவது பொல அவனை எளிதில் வெல்லலாம் என பகைவர்கள் தெரிந்துகொண்டு விடுவார்கள்

நீலத்தாமரைச் செடிகளின் தண்டுகள் தடாகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்வது போல ஒருவரை ஒருவர் சார்ந்து ஆதரித்தால் எல்லோரும் நிறைய செல்வமும், செழிப்பும் பெற்று விளங்க முடியும்

அந்தணர்கள், பசுக்கள், உறவினர்கள், குழந்தைகள், பெண்கள், நமக்கு உணவு தயாரித்து அளித்தவர்கள், நம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் ஆகியோரை ஒருபொழுதும் கொல்லக்கூடாது.அவர்களில் யாரேனும் கடுமையான குற்றம் இழைத்திருந்தாலும் அவர்களை நாடு கடத்துவதே அதிக பட்சத் தண்டனை ஆகும்

ஆரோக்கியமற்றவன். கிட்டத்தட்ட இறந்தவனுக்கு சமமாவான்.ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வச் செழிப்புப் பெறுவது சிரமம்.செல்வந்தவனாக இல்லாவிடின் சமூகத்தில் சிறப்பும் கிடைக்காது

திருதராஷ்டிரரே! கோபம் என்பது ஒருவகையான தலைவலி.அது நோயின் காரணமாக ஏற்படுவதில்லை.கோபம் தீவிரமான பானம் போன்றது.கசப்பானது.காரசாரமானது.வெம்மை நிறைந்தது.தீய விளைவுகளை ஏற்படுத்துவது.இவ்வளவு பயங்கர கோபத்தைச் சான்றோர்களால்தான் அடக்க முடியும்.நீங்களும் பாண்டவர்கள் மீதான கோபத்தை விழுங்கி விடுங்கள்.அமைதி பெறுவீர்கள்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், தங்களது குழந்தைகளைக் கொஞ்சி நேசிக்கும் பொறுமை இருக்காது.அவர்களுக்கு தங்கள் பொருள் வசதிகளை ரசித்து அனுபவிக்க முடியாது.நல்லது, கெட்டது  என பகுத்தறியும் விவேக புத்தியும் மழுங்கிப் போயிருக்கும்.அவர்கள் எப்போதும் துக்கத்தில் சிக்கித் தவித்து கொண்டிருப்பார்கள்.கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு எப்படி சந்தோசமாக இருப்பது என அறிந்திருக்க மாட்டார்கள்

துரியோதனன் நடத்த விரும்பிய சூதாட்டத்தை ஆதரிக்காமல் தடுக்குமாறு முதலிலேயே உங்களிடம் யோசனைக் கூறினேன்.ஏனெனில், அறிவாளிகள் சூதாடுவதைத் தடுப்பார்கள்.ஆனால், நீங்கள் என் பேச்சை ஏற்றுச் சூதாட்டத்தைத் தடுக்காமல் இருந்து விட்டீர்கள்.இதனால் திரௌபதி இழுக்கப்பட்டு கதற நேர்ந்தது

நாம் நமது வலிமையை மென்மையானவர்களுக்கும், பலகீனர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தக் கூடாது.நமது வலிமையை நியாயம் பெறுவதற்காகவே உபயோகிக்க வேண்டும்.கொடூரமான வழிகளில் சம்பாதித்த செல்வம் நிச்சயமாக அழிந்துப் போகும்.மென்மையான முறையில், கண்ணியமான வழியில் சம்பாதித்த செல்வம் மகன்கள், பேரன்கள் என்று பரம்பரையாக நீடித்துச் செல்லும்

அரசே! உங்கள் புதல்வர்கள் பாண்டவனின் புதல்வர்களைப் பாதுகாக்கட்டும்.அதுபோலவே பாண்டுவின் மகன்கள் உங்கள் மகன்களை ரட்சிக்கட்டும்.இருவரும்..குரு வம்சத்தினரே!  ஆகவே கௌரவர்களின் நண்பர்களைப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களாகவும்,பாண்டவர்களின் எதிரிகளைக் கௌரவர்கள் தங்கள் எதிரிகளாகவும் கருத வேண்டும்.இருதரப்பினரும் ஒரே மாதிரியான லட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டு ஒரே மாதிரியான நடவடிக்கைகளில் ஏடுபட்டு, மகிழ்ச்சியாகவும்,பலவளங்கள் பெற்று சிறப்பாகவும் வாழ வேண்டும்

அஸ்தினாபுரத்தை ஏற்படுத்தியவரான ஹஸ்தியின் மூத்த மகனாகிய அஜமீடரின் பரம்பரையில் வந்த உங்களைத்தான் குரு வம்சம் சார்ந்துள்ளது.ஆனால் நீங்களோ, வெறும் கௌரவர்களை மட்டுமே ஆதாரமாகத் தாங்குகிறீர்கள்.பாண்டவர்கள் காட்டுக்கு விரட்டப்பட்டனர்.அவர்களையும் நீங்கள் அரவணைத்துக் காத்தால் உங்கள் பெயர் களங்கப்படாமல் இருக்கும்

குரு வம்சத்தில் உதித்தவரே! பாண்டுவின் புதல்வர்களுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் எதிரிகள் ஆவார்கள்.அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.பாண்டவர்கள் சத்தியவாதிகள்.ஆகவே நீங்கள் துரியோதனனை அடக்கி வையுங்கள்.

என்று விதுரர் கூறி முடித்தார்.

Wednesday, December 30, 2015

34-நட்பு




யாருடைய கோபம் நம்மை அச்சப்படுத்துகிறதோ...அவர் நண்பர் அல்ல.அச்சத்தாலோ அல்லது தப்பாக நினைக்கக்கூடாது என்றோ யாருக்கு நாம் பணிவிடை செய்ய நேரிடுகிறதோ..அவர் நம் நண்பர் அல்ல.தந்தையிடம் பேசுவது போல நாம் யாரை நம்பிக்கையுடன் அணுகி பிரச்னைகளுக்கு ஆறுதல் பெறுகிறோமோ அவரே நம் நண்பர் ஆவார்.மற்றவர்கள் அவ்வப்போது தலைகாட்டுபவர்கள் ஆவார்கள்.அவ்வளவே!

நமக்கு உறவாக இல்லாவிடினும்..நட்போடு பழகினால் அவர் நமக்கு உறவுபோலத்தான்.அவரே நம் நண்பர்.அவரே நமக்கு உதவக் கூடியவர்.அவரே பிரச்னைகளின் போது நமக்கு அடைக்கலமும், ஆறுதலும் தருபவராக இருப்பார்

சஞ்சலமான மனதினனுக்கும், விவேகமும் அனுபவமும் உள்ள பெரியோர்களுக்கு பணிவிடை செய்யாதவனுக்கும், பதற்றப்பட வேண்டியவனுக்கும் அல்லது ஏமாற்றுபவனுக்கும் ஒரு போதும் நிரந்தர நண்பர்கள் இருக்க மாட்டார்கள்

ஏரி வறண்டு போனால் அன்னப்பறவைகள் வெளியேறி விடுவது போல..ஒருவன் சஞ்சலமான மனதினனாகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவனாகவும், புலன் ஆசைகளுக்கு வசப்பட்டவனாகவும் இருந்தால் அவனுடைய செல்வமும், வசதிகளும் அவனை விட்டு நீங்கி விடும்

கொடியவர்கள் திடீரென சீறி விழுவார்கள்.அதுபோல திடீரென காரணமில்லாமலேயே மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அவர்கள் குணம் ஆகாயத்தின் தோற்றம் போல கணம் தோறும் மாறியபடியே இருக்கும் (வானம் மேகங்களால் திடீரென இருளும்..பின் மேகங்கள் விலக திடீரென வெளிச்சமாகும்)

சிலர் தங்கள் நண்பர்களால் நன்கு வரவேற்கப்பட்டு, உபசரிக்கப்பட்டு நன்மைகள் பல பெற்றாலும், நன்றியுணர்வு அற்றவர்களாக இருப்பர்.அத்தகையோர் இறந்த பின்..அவர்களது உடலை நரி, கழுகு போன்றவை கூடத் தொடாது

ஒருவன் பணம் படைத்தவனாக இருந்தாலும் சரி,ஏழையாக இருந்தாலும் சரி உதவி தேவைப்படும் போது நண்பர்களை அணுக வேண்டும்.அப்படி ஒருபோதும் உதவி கோராவிடின் நம் நண்பர்கள் எனப்படுபவர்கள் உண்மையானவர்களா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது

கவலையால் அழகு குலையும்.உடல் வலிமை குறையும், அன்பு மழுங்கும். கவலை காரணமாக மனிதன் பல நோய்களுக்கு ஆளாகிறான்

கவலைப்படுவதால் மட்டும் நாம் விரும்பும் எதையும் பெற முடியாது.மனதில் துன்பம் பரவி உடலும் கஷ்டத்திற்குள்ளாகிறது.இது கண்டு நம் எதிரிகள் மகிழ்வர்.எனவே கவலையால் மனம் தளரக்கூடாது

மனிதன் இறக்கிறான்.மீண்டும் பிறக்கிறான்..ஏழையாகிறான்.மீண்டும் செல்வச் சிறப்பு பெறுகிறான்.பிச்சை எடுக்கிறான்..பின்னர் வாரி வழங்குகிறான்.இன்னொருவரின் மரணத்திற்காக சோகத்தை வெளிப்படுத்துகிறான்.வேறொரு சமயம் அவன் மரணத்திற்காக மற்றவர்கள் விசனப்படுகின்றனர்

இன்பம்-துன்பம், தோற்றம்- அழிவு, வளமை- வறுமை, லாபம்- நஷ்டம், சாவு- பிறப்பு, என்ற இரட்டை நிலைகள் எல்லோருக்கம் மாறி மாறி, மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.எனவே, நாம் நமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு சமயம் கூத்தாடாமலும் மறுசமயம் புலம்பாமலும் அமைதியாகவே இருக்க வேண்டும்

கண், காது, மூக்கு,நாக்கு,சருமம். மனம் என ஆறும் எப்போதும் சஞ்சலத்துடனே உள்ளன. பானையின் எந்தப் பகுதி ஓட்டையானாலும் ஊற்றப்படும் தண்ணீர் வெளியேறுவது போல நம்புலன்கள் ஏதேனும் ஒன்று தவறாக இயங்கினாலும் அதன் வழியே நம் அறிவு வெளியேறிவிடும்

என்று விதுரர் கூறினார்.

திருதராஷ்டிரர் சோகமாக விதுரரிடம்,"துரியோதனனைச் செல்லமாக வளர்த்துவிட்டேன்.அது தவறு.உடலுக்குள் நெருப்பை மறைத்துவைக்க முயன்றது போல ஆகிவிட்டது.அந்த நெருப்பு உடலை எரித்து..அதனுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றவற்றையும் அழித்துவிடும்.துரியோதனன் தானும் அழிவதுடன், என் மற்ற மகன் களையும்  கூட அழித்துவிடுவான் போல இருக்கிறதே! இச் சூழ்நிலைத் தொடர்ந்து அச்சுறுத்துவதாகவே உள்ளது.இதனால் மனம் குழம்பிக் கிடக்கிறது.விதுரரே! எல்லா கவலைகளில் இருந்து  விடுபட வழி என்ன?" என்றார்

விதுரர் கூறலானார், "தூய மன்னரே! அறநெறி அறிந்திருத்தல், கடமையைத் தவம் போலச் செய்து வருதல், புலன்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்,பிறர் செல்வத்திற்கு ஆசைப்பாடாதிருத்தல் ஆகியவை மூலம் மனிதர்கள் மன அமைதியைப் பெற முடியும்

அறிவின் மூலம் அச்சத்தை விரட்டலாம்.கடமையைத் தவம் போலச் செய்தால் பெரிய சாதனைகள் புரியலாம்.குருவைச் சார்ந்திருந்து சேவை புரிந்தால் ஆத்ம ஞானம் பெறலாம்.புலன்களை வசப்படுத்தினால் அமைதியாக வாழலாம்

முக்தி பெற விரும்புபவர்கள், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்பு அற்றவர்களாகவும், பற்றுகளை குறைத்துக் கொண்டும் வாழ வேண்டும்.தான தருமம் செய்வதால் விளையக்கூடிய நல்ல பலன் களுக்காக ஏங்கக் கூடாது.வேதங்கள் கூறும் சடங்குகளைச் செய்வதால் கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகளுக்காகவும் ஆசைப்படக் கூடாது

சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்து முறையாக பயில்வனும்,நியாயமான காரணத்திற்காக வீரமாக போராடுபவனும், எப்போதும் நற்செயல்களையே செய்பவனும் கடமைகளைத் தவம் போல உறுதியாகச் செய்பவனும் தங்கள் முயற்சியின் முடிவில் வளமாக வாழ்வார்கள்

இனி வள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளைஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம் புலன் களையும் அடக்கியாளும் உறுதி காலமெல்லாம் வாழ்க்கைக்கு அரணாக அமையும்


Tuesday, December 29, 2015

33-உயர்க்குலப் பண்புகள்



விதுரரைப் பார்த்து திருதராஷ்டிரர் கேட்டார்,,,

:விதுரரே! அறநெறியைப் பின்பற்றுபவர்களும், நேர்மையான முறையில் சுகம் அனுபவிப்பவர்களும் ,அறிஞர்களான தேவர்களும் உயர்குலத்தினரை விரும்புவதாக அறிகிறேன்.உயர்க்குலக் குடும்பங்கள் என்பதற்கான தகுதிகள் என்ன்?

விதுரர் கூறலானார்.....

'தவம் செய்வது போன்ற புனித வாழ்க்கை,புலன்களை அடக்குதல்,ஆன்மீக அறிவு,சகிப்புத்தன்மை ,வேள்விகள் செய்தல், சாதிப்பிரிவிற்குள் திருமணம்,மனநிறைவு,அன்னதானம் செய்வதில் விருப்பம் ஆகிய எட்டும் உயர்க்குலக் குடும்பங்களில் காணப்படும் நற்பண்புகள் ஆகும்.

உயர்குலக்குடும்பத்தில் பிறந்தவர்கள்...ஒழுக்கத்திலிருந்து தடம் புரள மாட்டார்கள்.தங்களது முன்னோர், மூத்தவர்கள் மனம் புண்படும்படி பேச மாட்டார்கள்.நற்பண்புகளைபின்பற்றுவார்கள்.தங்கள் குடும்பம் புகழ்ப் பெற விரும்புவார்கள்.எல்லாவித பொய்களையும் தவிர்ப்பார்கள்

உயர்குலக் குடும்பத்தினர், தங்களுக்குரிய வேள்விகளை செய்யாவிடினும்,தங்கள் தகுதிக்குத் தாழ்வான குடும்பத்தில் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டாலும், வேதங்களைப் புறக்கணித்தாலும், நற்பண்புகளை மீறி நடந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

உயர்குலக் குடும்பத்தினர் கோயில்களிலுள்ள கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களை சேதப்படுத்தினாலும்,அந்தணர்களின் சொத்தை பிடுங்கிக் கொண்டாலும்,அந்தணர்களை அவமதித்தாலும் அக்குடும்பப் பெயர் களங்கப்படும்.(அந்தணர்களை உயர்க்குலம் என இங்கு குறிப்பிடாததை கவனித்தில் கொள்ள வேண்டும்)

உயர் குலக் குடும்பத்தினர் அந்தணர்களை அவமதித்தாலும், ஏசினாலும்,பிறர் தங்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்த பொருட்களைத் தாங்களே கவர்ந்து கொண்டாலும் அக்குடும்பத்தின் பெயர் களங்கப்படும்

சில குடும்பங்களில் கால்நடைச் செல்வம்,குழந்தைகள். சொத்து வசதிகள்,நிறைந்து இருக்கலாம்.ஆனாலும் அக்குடும்பங்களில் உறுப்பினர்கள் நன்னடத்தையும்,நற்பழக்கங்களும் கொண்டிராவிட்டால் அவற்றை உயர்குலக் குடும்பங்களாக எண்ண முடியாது.

சில குடும்பங்களில் செல்வ வசதி குறைவாக இருக்கலாம்.ஆனால் அதே நேரம், குடும்ப உறுப்பினர்கள் நல்ல நடத்தையும், நல்ல பழக்கத்தையும் உடையவர்களாக இருக்கலாம்.அப்படியானால் அந்தக் குடும்பங்களும் நல்ல குடும்பங்களாகவே கருதப்பட்டுப் பெரும் புகழ் பெறும்

எத்தகைய சூழ்நிலையிலும் நன்னடத்தையும்,நல்ல பழக்கங்களையும் கைவிடாமல் பின்பற்றி வர வேண்டும்.பணம் வரும்..போகும்..பணவசதி இல்லாததால் ஒருவரது வாழ்க்கை வீணாகிவிட்டது எனக் கூற முடியாது.ஆனால் ஒழுக்கமும், நற்பழக்கங்களும் அற்றவனது வாழ்க்கை நிரந்தரமாக வீணாகி விட்டதென்றே கூற வேண்டும்.

சில குடும்பங்களில் ஏராளமான பசுக்கள்,பிற வளர்ப்பு மிருகங்கள்,குதிரைகள் ,ஏராளமான தானியங்கள் ஆகியவை இருக்கக்கூடும்.ஆனால்,குடும்ப உறுப்பினர்கள் ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டிருக்காவிட்டால் அக்குடும்பங்கள் முன்னேறவோ, புகழ் பெறவோ முடியாது

எனவே நம் குடும்பத்தைச் சார்ந்தவர் எவனும் பிறரது பகைமையைத் தூண்டாமல் இருக்க வேண்டும்.நம் கீழுள்ள அரசர்கள். எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.நம்மவர்கள் பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.நண்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.பிறரை ஏமாற்றவோ, பொய் சொல்லவோ கூடாது.வீட்டில் தயாராகும் உணவை மறைந்த முன்னோர்களுக்கும், தெய்வங்களுக்கும் படைத்து, வந்துள்ள விருந்தாளிகளுக்கும் பரிமாறிய பின்னரே உண்ண வேண்டும்

(வள்ளுவர்-
விருந்து புறத்ததாய் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல)

நம் குலத்தைச் சேர்ந்தவர் ,அந்தணர்களுக்குத் தீங்கு விளைவித்தால் அல்லது அவர்களை வெறுத்தால் அல்லது அறுவடைக்குள்ள பயிரை நாசம் செய்தால் அத்தகையவர் நம்முடன் பழக,உறவாட நாம் அனுமதிக்கக் கூடாது

நல்ல மனிதர்களின் குடும்பங்களில் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனமும் அல்லது பாயும், விருந்தினர் அமர மேடை போன்ற அமைப்பும், கை கால் கழுவ தண்ணீரும் உண்மையான இனிமையான  பேச்சும் ஆகியவற்றை கட்டாயம் எதிர்பார்க்கலாம்

பாராட்டுக்குரிய நற்செயல்கள் புரிவதில் ஆர்வமுள்ளவர்கள் மேற்கூறியவற்றுடன் தயாராய் இருப்பார்கள்.வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று கௌரவிக்கும் போது மேற்கண்டவற்றை அவர்களுக்கு மரியாதையுடன் அளிப்பார்கள்

வண்டியும், தேரும் செய்ய பயன்படும் மரம் பார்க்க சிறியதாய் இருக்கும்.ஆனால், மிக உறுதியானது.அதன் சிறு கிளைகளும் பெரும் பாரத்தைத் தாங்கும்.ஆனால், வேறு சில மரங்கள் பெரியதாய் இருந்தாலும் சுமையைத் தாங்காது.அதுபோலவே உயர்குலக் குடும்பங்களில் பிறந்தவர் பெரிய பொறுப்புகளை சுமக்ககூடியவர்களாக இருப்பார்கள்.சாதாரணமான மக்களால் பெரிய பொறுப்புகளை நிர்வகிக்க இயலாது


வள்ளுவன்-
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

சொல்லாற்றல் படைத்தவனாகவும்,சோர்வு அறியாதவனாகவும்,அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது


Sunday, December 27, 2015

32-பேச்சின் விளைவும்...மனிதரின் மூவகையும்



விதுரர் மேலும் கூறலானார்...

சூழ்நிலையை விளக்க ஒரு பழங்கதையைக் கூறுகிறேன்.இது ஒரு உரையாடல்.தத்தாத்திரேய முனிவருக்கும், சாத்தியர்கள் என்ற தேவ வையினருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் ஆகும் இது.

முன்னொருகாலத்தில் ஆத்திரேயர் என்ற மாமுனிவர் வாழ்ந்தார்.விவேகமுள்ளவர்.அவர் கடுமையான விரதங்களைக் கடைபிடித்தார்.அவர் பரமஹம்ச முறையிலான துறவி உடை அணிந்து செல்வார்.அவரிடம் சாத்தியர்கள் ஒரு விஷயம் கேட்டனர்

"மாமுனிவரே! சாத்தியர்கள் எனும் நாங்கள் தேவவகையைச் சேர்ந்தவர்கள்.தங்களை தரிசிப்பதில் மகிழ்ச்சி.ஆனால், தாங்கள் யாரென எங்களுக்குத் தெரியவில்லை.நீங்கள் வேதங்களை பயின்றவர்..பேரறிஞர் என்று நினைக்கிறோம்.நீங்கள் எங்களுக்கு ஞானத்தைப் போதித்தால் பேருதவியாய் இருக்கும்"

பரமஹம்சர் சொன்னார்.." தேவ புருஷர்களே! முதலில் நான் நன் குக்  கற்ற விஷயம் ஒன்றைக் கூறுகிறேன்.எந்த சூழ்நிலையிலும், மன உறுதி,மன அமைதி அல்லது மனக்கட்டுப்பாடு, வாய்மை,நற்பண்புகள் ஆகியவற்றைக் கைவிடக்கூடாது.இதயத்தை இறுக்கும் காமம், சினம் போன்ற முடிச்சுகளை நெகிழ்த்தி விட வேண்டும்.தன்னைப் பொறுத்தவரை இன்ப. துன்பங்கள் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும்.

நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினால் பதிலுக்கு நாமும் அவனைத் தூற்றக்கூடாது.இகழப்பட்டவர் பொறுமையாக இருந்தால் அவர் படும் வேதனை தீயைப்போல இகழ்ந்தவனை பற்றிக்கொள்ளும்.அதுமட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதேனும் புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்டவனைப் போய்ச் சேர்ந்துவிடும்

நாம் யாரையும் ஏசக்கூடாது.பிறரை அவமதிக்கவும் கூடாது.நீசர்களை சார்ந்து வாழக்கூடாது.நன்பர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது.திமிர் பிடித்து அலையக் கூடாது.கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடாது. கடுமையான புண்படுத்தும் சொற்களைப் பேசக்கூடாது.

கடுஞ்சொல் கூறுவதால் உடலுக்குக் கெடுதல் விளைகிறது.கடுஞ்சொற்கள் உடலில் உயிர்நிலைகளாக உள்ள உறுப்புகளை அரித்துவிடும்.எலும்புகள், இதயம், நுரையீரல் ஆகிய பகுதிகளையும் பாதித்துவிடும்.ஆகவே  அறநெறியைப் பின்பற்ற விரும்பிகிறவன்  பிறரைக் கீறுவது போன்ற கடுஞ்சொற்களை எப்போதும் கூறாமல் இருக்க வேண்டும்.

எவன் எரிந்து விழும் குணம் கொண்டுள்ளானோ, கல் போன்ற கடுமையான சுபாவம் கொண்டுள்ளானோ, சொல்லம்புகளால் பிறரது இதயத்தைத் துளைக்கின்றானோ அத்தகையவன் அதிர்ஷ்டம் கெட்டவனாக, மனிதர்களுள் கீழ்த்தரமானவனாக இருப்பான்.அவனது வாயில் எமன் குடிகொண்டிருப்பான்

ஒரு தீயவன், கூரானதும் நெருப்பு அல்லது சூடான சொல்லம்புகளால் ஒரு அறிஞனைத் தூற்றினால், அந்த அறிஞன் வேதனையடைந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப் பொறுமைக் காத்தால் திட்டியவன் செய்திருந்த புண்ணியங்களின் நற்பலனெல்லாம் அறிஞனிடம் வந்துவிடும்  என்பதை அறிஞன் உணர்ந்திருக்க வேண்டும்

நாம் துணியை எந்த நிறச் சாயத்தில் நனைக்கிறோமோ, அந்த நிறத்தில் துணி மாறும். அதுபோல நல்லவருடனோ, தீயவருடனோ,துறவியிடனோ, கள்வனுடனோ இப்படி யாருடன் பழகுகிறோமோ அவரது பாதிப்பால் அதற்குரிய குணமாறுதலைப் பெற்றுவிடுவோம்.

தன்னை பிறர் ஏசினாலும் எவன் ஒருவன் பிறரை இகழ்வதில்லையோ, தன் சார்பில் யாரும் பிறரை இகழ அனுமதிப்பதும் இல்லையோ அத்தகைய பொறுமைசாலி தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்பும்

தன்னை ஒருவன் தாக்கினாலும், எவன் அவனைத் திருப்பித் தாக்குவதில்லையோ....தன் சார்பில் யாரும் அவரைத் திருப்பித் தாக்க அனுமதிப்பதும் இல்லையோ, தன்னைக் காயப்படுத்தியவனுக்குத் துளிக்கூட கெடுதல் செய்ய விரும்புவதில்லையோ அத்தகைய பொறுமைசாலியை தங்களுடன் வசிக்க வேண்டும் என தெய்வங்களும் விரும்புவர்

பேசுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது.பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும்.அவ்வாறு நாம் பேசும் உண்மைபிறருக்கு நன்மை செய்வதாகவும் அமைய வேண்டும்.நாம் நன்மையளிக்கும் வகையில் பேசுவது அறநெறிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்

ஒரு மனிதன் யாருடனெல்லாம் நெருங்கிப் பழகிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான்.அல்லது யாரைச் சார்ந்து பணி புரிகிறானோ அவர்களைப் போலவே ஆகிறான் அல்லது யாரைப்போல ஆகவேண்டும் என மனதில் நினைக்கிறானோ அவரைப்போல ஓரளவாகிறான்

ஒருவன் எதை எதைத் தவிர்த்து விடுகிறானோ அதனதன் பின் விளைவுகளிலிருந்தும் தப்பித்து விடுகிறான்.எல்லாவற்றையும் தவிர்ப்பவன் வாழ்வில் சிறிதளவு கூட துன்பம் ஏற்படுவதில்லை

மேற்கண்டவாறு பற்றுகளை விட்டவனை யாரும் வெல்ல முடியாது.அவனும் யாரையும் வெல்ல விரும்புவதில்லை.அவன் யாருக்கும் எதிரியில்லை.அவன் யாரையும் பழி வாங்குவதில்லை.பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் பாதிற்குள்ளாகாது அவன் அமைதியாக இருப்பான்.அவன் ஒன்றை இன்பம் என எண்ணிக் குதிப்பதில்லை.மற்றதைத் துன்பம் என எண்ணி துவண்டும்போவதில்லை

மனிதர்களில் முதல்தர மனிதன் உலகில் அனைவரும்,அனைத்தும் நலமாக வாழ வேண்டுமென ஆசைப்படுவான்.அத்தகைய நிலைக்கு எதிரான எதையும் என்றும் அவன் ஆதரிக்க மாட்டான்.அவன் உண்மையே பேசுவான்.கனிவுடன் பழகுவான்.உடல்,மன உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்

நடுத்தர மனிதன்   வாக்குறுதிகள் கொடுப்பான்.அவற்றை நிறைவேற்றியும் தருவான்.எதையும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுத்து விடுவான்.பிறரிடம் குற்றம் கண்டுபித்தவாரே இருப்பான்.

கீழ்த்தர மனிதர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள்.எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள்.பாவச்செயல்களில் ஈடுபடுவார்கள்.பயங்கரமாய்க் கோபப்படுவார்கள்.நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள்.அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர்.சில சமயங்களில் நல்லவர்களைப் போலப்பழகினாலும் கொடிய மனம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

கீழ்த்தரமானவர், பெரியவர்கள் கூறும்  நல்ல ஆலோசனைகளின்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.அந்த ஆலோசனைகளால் நன்மை விளையும் என நம்பமாட்டார்கள்.தன்னையே சந்தேகப்படுபவர்களாக இருப்பார்கள்.தன் நண்பர்களையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள்

வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புபவன் மேற்கண்ட மூவகை மனிதரில் உத்தமமான மனிதர்களையே அணுக வேண்டும்.தவிர்க்க இயலா நிலையில் நடுத்தரமானவர்களை அணுகலாம்.ஆனால் ஒருபோதும் கீழ்த்தரமக்களை சார்ந்திருக்கக் கூடாது

ஒருவன் தன் வலிமையைத் தவறாகப் பயன்படுத்தியோ,விடாமுயற்சியுடன் உழைத்தோ, அறிவையும், ஆண்மையையும்கொண்டோ செல்வம் சம்பாதிக்கலாம்.ஆனால் இவற்றால் மட்டுமே அவன் நற்பெயரோ, உயர்குடியில் பிறந்தோரின் நற்பண்பையையோ அடையமுடியாது.


Friday, December 25, 2015

31-பாவ புண்ணியம்



வாய்மை,பணிவு,ஆன்மீகப் பயிற்சி,நூல் அறிவு,உயர் குடிப் பிறப்பு,ஒழுக்கம்,மனவலிமை,நல் வழியில் சம்பாதித்த செல்வம்,வீரம், பல விஷயங்களை இனிமையாய்ப் பேசும் திறன் ஆகிய பத்தும் சுவர்க்கத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்லும் வழியைக் காட்டும்

ஒருவன் பாவச்செயலைப் புரிந்தால் அதன் விளைவாக பாவி என்று சொல்லப்பட்டு இகழப்படுவான்.அதனால் தண்டனையும் பெறுவான்.அதுவே, ஒருவன் நற்செயல் புரிந்தால் அவன் புண்ணியவான் எனப் புகழ்ப் பெறுவான்.அச்செயலால் பிற்காலத்தில் நல்ல பலனையும் பெறுவான்

ஆகவே, நாம் பாவச்செயல் புரிய மாட்டோம் என உறுதியுடன் இருக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் பாவச் செயல் புரிபவனின் அறிவு மழுங்கிவிடும் .இவ்வாறு அறிவை இழப்பவன் பாவச் செயல்களையேச் செய்வான்.மாறாக நல்ல செயல்களைச் செய்து வந்தால் நம் அறிவு மேலும் வளரும்

நல்லறிவு கொண்டவன் புண்ணியச் செயல்களில் ஈடுபடுவான்.புகழ் பெறுவான்.இறுதியில் அவன் சுவர்க்கத்தைச் சென்றடைவான்.ஆகவே ஒருவன் புண்ணியச் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்

பொறாமை கொள்பவன், பாம்பு போல மனதில் விஷம் நிறைந்தவன்.கொடூர இதயம் படைத்தவன்.கடுஞ்சொல் கூறுவோன்.வேண்டுமென்றே பிறரிடம் விரோதம் கொள்வோன்.மோசடி செய்வோன்.ஆகியோர் பாவச் செயல்கள் புரிவோர் ஆவர்.அவர்கள் விரைவில் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்

ஒருவன் பிறரிடம் பொறாமை கொள்ளாதவனாகவும், நல்லதை பிரித்தறியும் விவேகம் உள்ளவனாகவும், பின் நல்லதை மட்டுமே செய்பவனாகவும் இருந்துவிட்டால் அவனுக்கு துன்பம் நேராது.மேலும் அவன் எளிதில் புகழப்படுவான்.

அறிவுள்ள மனிதன் தயங்காமல் மற்ற அறிஞர்களின் அறிவையும் திரட்டிப் பெற்று மேலும் அறிஞன் ஆவான்.அவன் நற்பண்புகளை கடைப்பிடிப்பான்.நேர்மையான ,முறையில் வாழ்க்கை வசதிகளைச் சேகரித்துக் கொள்வான்.இதனால் மேன்மேலும் மகிழ்ச்சி அடைபவனாக முன்னேறுவான்

நாம் இரவில் மகிழ்ச்சியாகத் தூங்க உதவும் வகையில் பகலில் செய்யும் வேலையின் தன்மையின் அளவும் அமைந்திருக்க வேண்டும்.மழைக்காலமான நான்கு மாதங்களில் நாம் வாழ உதவியாக எட்டு மாதங்களில் செய்யும் வேலையின் தன்மையும், அளவும் அமைய வேண்டும்

நாம் முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்றபடி வாழ்க்கையின் தொடக்கத்திலேயே செய்கின்ற வேலையின் தன்மையும், அளவும் அமைந்திருக்க வேண்டும்.இவ்வுலகை விட்டு நாம் சென்றாலும் சுவர்க்கத்தில் மகிழ்வோடு வாழ உதவும் வகையில் வாழ்க்கை முழுதும் நாம் செய்கின்ற வேலையின் தன்மை அமைய வேண்டும்

அறிஞர்கள் அவசரப்பட்டு எதையும், யாரையும் புகழ்ந்துவிட மாட்டார்கள்.அவர்கள் எளிதில் ஜீரணமானபின்பே குறிப்பிட்ட உணவையும்,நடுத்தர வயதைக் கடந்துவிட்ட பிறகே மனைவியையும், போரில் வெற்றி பெற்ற பிறகே வீரனையும்,தன்னை அறிந்து ஆத்ம தரிசனம் பெற்ற பிறகே துறவியையும் புகழ்வார்கள்

ஒருவன் தவறான வழியில் செல்வம் சம்பாதித்து பிறகு அதைக்கொண்டு அத்தவறை மூடி மறைக்க முயற்சித்தால் அது பலனளிக்காது.அது மட்டுமின்றி வேறு பல தவறுகளும் ஏற்பட்டுவிடும்

ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டவர்களை ஆன்மீகக்குரு அடக்கியாள்கிறார்.கொடியவர்களை அரசர் தண்டனைகள் மூலம் அடக்கிகிறார்.விவஸ்வத் எனப்படும் சுரியனின் மகனாகிய வைவஸ்தர் என்னும் யமன் ரகசியமாகப் பாவம் செய்தவர்களையும் கண்டுபிடித்து அடக்கிவிடுகிறான்

ரிஷிமூலம், நதிமூலம் ,உத்தமர்களின் குலத்தின் மூலம் ஆகியவற்றைத் தேடி ஆராய்ந்துக் கொண்டிருக்கக் கூடாது.பெண்கள் கெட்டுப்போனால் அவர்கள் மேற்கொள்கின்ற தந்திரமான வழிகளில் மூலத்தையும் கண்டறிய இயலாது

எந்தச் சத்திரியர் அந்தணர்களை  போற்றுகிறாரோ , நிறைய தான தருமம் செய்கிறாரோ,உறவினர், சுற்றத்தாருடன் மென்மையாக, நேர்மையாக பழகுகிறாரோ, ஒழுக்கமான நடத்தை கொண்டுள்ளாரோ அவர் நெடுங்காலம் உலகை ஆள்வார்

வீரம் மிகுந்தவர்கள்,அறிவு மிக்கவர்கள்,மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவை உணர்வு மிகுந்தவர்கள் ஆகிய மூன்று வகையினரும் தங்க மலர்களால் ஆன உலகத்தைப் பரிசாகப் பெறுவர் (செல்வச் செழிப்புடன்விளங்குவர்)

மூளையின் உதவியுடன் செயல்படும் செயல்கள் உயர்தரவையாக இருக்கும். கைகளில் உதவியுடன் செயல்படுபவை நடுத்தரமானவையாகும்.தொடைகளால் செயல்படுபவை மோசமானதாக இருக்கும்.தலையால் செய்யப்படும் (பாரம் தூக்குதல் போன்றவை) தாழ்ந்ததாக இருக்கும்

திருதராஷ்டிரரே! இந்த நாட்டில் ஆட்சியை துரியோதனன்,சகுனி, துச்சாதனன், கர்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டீர்.இப்படிப்பட்ட நிலையில் நாடு வளம் பெற்று விளங்கும் என எப்படிச் சொல்வது?

இதற்கு மாறாக பாண்டவர்கள் ஐவரும் நற்குணங்கள் நீரைந்து விளங்குகிறார்கள்.உங்களைத் தங்களதுத் தந்தையாகவே எண்ணி மதிக்கின்றனர்.ஆகவே நீங்களும் அவர்களை உங்கள் புதல்வர்களாக எண்ணி அந்த முறையில் நடத்துங்கள்

என்று விதுரர் கூறி முடித்தார்.

இனி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் எனப் பார்ப்போம்


பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை

பிறர் அழத்திரட்டிய செல்வம் அழ அழப் போய் விடும்.நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்