Saturday, November 21, 2015

26 -தருமரின் நற்பண்புகள்


ஒருவன் தோல்வியோ, அவமானமோ அடைய வேண்டும் என்று விதியிருந்தால் அவர்களின் அறிவு மழுங்கிப் போய்விடும்.அறிவு பழுதுப்பட்ட நிலையில் அந்த மனிதன் கீழ்த்தரமான செயல்களைப் புரியத் தொடங்கி விடுவான்

அறிவு மயங்கி அதனால் வீழ்ச்சியடையும் நேரம் வந்து விட்டால், ஒருவனுக்கு அவன் செய்யும் அநியாயமெல்லாம், நியாயமாகத் தெரியும்.தனது அநியாயச் செயலை நியாயமானது என மனதில் பதிந்துவிடச் செய்வான்

பரதகுலத்தில் பிறந்த திருதராஷ்டிரரே! உமது புதல்வர்கள் பாண்டவர்களிடம் பகைமை உணர்வு கொண்டுள்ளதால் அவர்களிடம் புத்தித் தெளிவு இல்லை.அவர்கள் எத்தகையவர்கள் என நீங்களும் அறியவில்லை

தருமர், மூவுலகும் ஆளத்தகுதியுடையவர். அதற்கான அனைத்து அரச லட்சணங்களும் உடையவர்.அப்படியிருந்தும் உங்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்.ஆகவே அவரை அமைச்சராக்கி விடுங்கள்

தருமரிடம், ஆற்றலும்,விவேகமும் சிறப்பாகக் காணப்படுகின்றன.நற்பண்புகள், உலக நன்மைக்கான அனைத்து நடவடிக்கைகள் ஆகியவற்றை நன்கு அறிந்துள்ளார்.ஆகவே, உங்கள் மகன்களைவிட தருமரே அரசப் பதவிக்கு அதிக உரிமையுள்ள வாரிசு ஆவார்..

நல்ல ,மனிதர்களில் முதல்வரானவர் தருமர்,அவருக்கு விளைவிக்கப்பட்ட கெடுதல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு வருகிறார்.அவர், கனிவானவர்.மென்மையானவர்.உங்களிடம் மரியாதை உடையவர்.இதுவே அவர் பொறுமைக்குக் காரணம்

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

Friday, November 20, 2015

25- பேசும் சொற்கள்



பேச்சு, உண்மையாக, எளிமையாக இருப்பது கடினம்.அதே நேரம் புதுமையாகவும், கேட்போரை கவரும் விதமாகவும், பொருள் நிறைந்ததாகவும் இருப்பதும் கடினமே

சிறப்பாக, இனிமையாக நிகழும் சொற்பொழிவு பல நன்மைகளை விளைவிக்கும்.ஆனால் சரியாக அமையாத கடுமையானப் பேச்சு பெரிய தொந்தரவுகளைக் கொடுக்கும்

வில்லம்புப்பட்ட புண் ஆறிவிடும்.கோடாரியால் வெட்டப்பட்ட காட்டிலுள்ள மரங்கள் மீண்டும் துளிர்க்கும்.ஆனால், புண் படும் படி பேசும் காயம் ஆறவே ஆறாது.ஆறினாலும் வடு இருக்கும்

காது வடிவிலான அம்பு,குழல் வழியே வீசப்படும் அம்பு, இரும்பு அம்பு ஆகியவை  உடலில் பாய்ந்து விட்டாலும் அவற்றை அவ்விடத்திலிருந்து எடுத்துவிடலாம்.ஆனால். கடுஞ்சொல் என்னும் அம்பு தைத்துவிட்டால் அதை எடுப்பது முடியாது.அது இதயத்தில் ஆழமாகப் பதிந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும்

ஒருவர் வாயிலிருந்து புறப்படும் சொல் அம்புகள், மற்றவரைத் தாக்கி அவர்களை இரவும், பகலும் வருந்தச் செய்யும்.ஏன், சில வேளைகளில் உயிரையேப் பறிக்கும் அளவிற்கு ஆபத்து நிறைந்தவை.ஆகவே, ஒரு அறிவாளன் அத்தகைய அம்புப் போன்ற சொற்களை பிறர் மீது மறந்தும் கூறாது த்ன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி வள்ளுவர்..

யாகாவா ராயினும் நாக்காக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணம் ஆகிவிடும்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண் கூட ஆறிவிடும்.ஆனால், வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்களால் விளைந்த துன்பம் வடுவாய் இருந்து ஆறவே ஆறாது

Thursday, November 19, 2015

24-ஐம்புலன்கள்



கிரகங்களின் காரணமாய், நட்சத்திரங்கள் பாதிக்கப் படுகின்றன.அதுபோலவே எக்கட்டுப்பாடும் இன்றி ஐம்புலன்களிடம் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வதில் மூழ்கியிருப்பதால் உலகம் துன்பத்திற்கு ஆளாகிறது.(கிரகங்களின் சுழற்சியால்..சில நட்சத்திரங்களின் கீழ்ப் பிறந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்)

வளர்பிறைக் காலத்தில் நிலவு மேன்மேலும் வளர்ந்து ஒளி கூடுகிறது.அதுபோலவே ஐம்புலன்களின் ஆசை ஒருவனை வென்று விட்டால் அவனது துயரங்கள் அதிகமாகிக் கொண்டே செல்லும்

அரசன் தன் ஐம்புலன்களை வெல்ல இயலவில்லை எனில் அவனால் தன் அமைச்சர்களை வசப்படுத்த இயலாது.அப்படிப்பட்ட அரசன் எதிரிகளை வெல்ல முடியாது.உதவ யாருமில்லாமல் அவன் அழிவான்.

ஆனால், அதற்கு மாறாக ஐம்புலன்களையும் தனக்கு எதிரியாகக் கருதி வென்று...தன் மனதைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தால் அவனால் தன் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அவர்கள் துணையுடன் வெளிப்பகையை வெல்ல முடியும்

ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, அமைச்சர்களையும் தன் வசப்படுத்தி, குற்றவாளிகளை சரியாகத் தண்டித்து நன்கு ஆராந்து தன் கடமைகளைப் புரிந்து கொண்டு உறுதியுடன் இருக்கும் அரசன் செல்வச் செழிப்புடன் இருப்பான்

மனித உடல் தேர் போல.மனம் தன் சாரதி.ஐம்புலன்களும் குதிரைகள்.இந்தக் குதிரைகளை வசப்படுத்தி நன்கு பழக்கினால் அவன் அறிஞன் ஆவான்.அவன் தேரில் ஆபத்தின்றி இன்பமாய் வாழ்க்கைப் பயணம் செய்யலாம்

குதிரைகள் கடிவாளம் பூட்டப்படாது, பயிற்சி பெறாததாகவோ. அடங்காதவையாகவோ இருந்தால்..ஆபத்து.அவை சமயத்தில் தேரைக்கவிழ்த்து, தேரில் இருப்போரையும் வீழ்த்தி மரணிக்கச் செய்யும்.அதுபோலவே புலன்களை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிடின் அவை நாளாக ஆக நம் உடலையும், உயிரையும் அழித்து விடும்.

புலன்களை வசப்படுத்தாமல் அதன் போக்கில் வாழ்பவன் முட்டாள்.அவன் நல்ல விஷயங்களையும் கெடுதல் என எண்ணி புறக்கணித்துவிடுவான்.கெட்ட விஷயங்களை நல்லதாக எண்ணுவான்.துயரத்தை ஏற்படுத்தப் போகும் புலன் வழி திருப்தியை நிஜமான இன்பம் என ஏமாறுவான்

ஒருவன் நல்குணத்தையும்,நல்வழியையும் கைவிட்டுப் புலன்களின் தூண்டுதல்படி அலைந்தால் அவனை விட்டு செல்வம் நீங்கும்.அவன் ஆயுள் குறையும்.அவன் வாழ்க்கை வசதிக:ள் விலகும்.மனைவியும் கை விடுவாள்

ஒருவன் ஏராளமான செல்வத்திற்கு அதிபதியாக இருக்கலாம்.ஆனால் புலனாசைகளுக்கு அடிமையாகி விட்டால் அந்த பலகீனமே அவனை தன் அந்தஸ்து, ஐஸ்வரியம் ஆகியவற்றை இழந்து தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவான்.

மனிதன், தன் மனம்,அறிவு,புலன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் தன் ஆத்மாவின் தரிசனம் கிடைக்கும்.ஆத்மாவை உணர்ந்து கொண்டு அதன் மூலம் பரமாத்வாவைத் தேட வேண்டும்.ஆத்மாவே ஒருவனுக்கு நண்பன்,புலன்களை வசப்படுத்தாதவன் அந்த ஆத்மா என்னும் நண்பனின் விரோதி ஆகிவிடுகிறான்

ஒருவன் புலன்களை அடக்கித் தன் ஆத்மாவை வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆத்மா அவனுக்கு உண்மையான நண்பனாய் வழிகாட்டும். புலன்களை வசப்படுத்திக் கொண்டால்,ஆத்மா அவனுக்கு நெருங்கிய நண்பனாய் வழி காட்டும்.புலன்களை வசப்படுத்தா விட்டால் அதே ஆத்மா அவனுக்கு பரம எதிரி ஆகி விடும்.
(உடல், மனம், உயிர், புலன்கள்,அறிவு, தான் எனும் உணர்வு ஆகியவற்றின் அம்சங்கள் சேற்ந்ததே ஆத்மா எனப்படுவது)

மீன் பிடிக்க வலை வீசப்படுகிறது.ஆனால், இரு பெரிய மீன்கள் அந்த வலையைத் தாக்கினால் வலை அறுந்து போகும்,அதுபோலவே காமம், சினம் ஆகிய தீய குணங்கள் ஆபத்தானவை.அவை நம் விவேகத்தை நாசமாக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் வெற்றி பெற விரும்பினால் அறநெறியை பின்பற்றுவதுடன் அல்லாது...உலக நன்மையையும் கவனத்தில் கொண்டு அதற்குப் பயன் தரும் விதத்தில் தேவையான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும்.அப்போது அவை மூலம் நமக்கு மகிழ்ச்சி விளையும்

நம் மனதில் காமம், சினம், பேராசை, அறியாமை, கர்வம் என ஐந்து பகைவர்கள் வசிக்கின்றனர்.அவர்களை முதலில் வென்றால், வெளியில் இருக்கும் எதிரிகளை வெல்லலாம்

ஐம்புலன்களை வசப்படுத்த முடியாது...புலனாசைகளுக்கு ஆசைப்பட்டு பல மாமமன்னர்கள் அடிமையாகி இருக்கின்றனர்.பிறநாடுகளை வெல்ல வேண்டும் என்ற பேராசையாலும்..இதர அரச போகங்களுக்கு ஆசைப்பட்டும் அவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஈரமான விறகு எரியாது.ஆனால் உலர்ந்த விறகு எரிகையில் அதனுடன் சேர்ந்து ஈர விறகும் எரியத் தொடங்கும்.நாம் நல்லவர்களாக இருக்கலாம்.ஆனால், தீயோருடன் நட்புக் கொண்டால் அவர்கள் பெறும் தண்டனையை நாமும் அனுபவிக்க நேரிடும்

விறகு எரிய தாமதமாகலாம்.ஆனால் கண்டிப்பாக எரியும்,நல்லவர்கள் தீயோருடன் சேர்ந்து கெட்டுப் போக தாமதமாகலாம்.ஆனால் கெடப்போவது நிச்சயம்.கரி படர்ந்த அறையில் நுழைந்தால் கறை படாது வெளியே வர முடியாது

பொறாமை இல்லாமை,நேர்மையான பேச்சு,உள்ளத் தூய்மை,போதுமென்ற மனம், எரிச்சலூட்டா இனிய பேச்சு,மனக் கட்டுப்பாடு,வாய்மை, மன உறுதி இப்படிப்பட்ட நற்பண்புகளைத் தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஆத்ம அறிவு, கோபமற்ற தன்மை,வாழ்க்கையில் உண்டாகும் கசப்பை சகித்துக் கொள்ளல்,அறநெறியில் பிடிப்பு,பேச்சில் எச்சரிக்கை,தானம் செய்வதில் ஆர்வம்..ஆகிய பண்புகளை தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

முட்டாள்கள் அறிவாளிகளை கடுஞ்சொற்களால் விமரிசித்து அவர்கள் மனதை புண்படுத்துகிறார்கள்.இவ்வாறு பழித்தவர்கள் பாவி ஆகின்றனர்.அறிஞர்கள் அச்சொற்களை பொறுத்துக் கொள்வதால், அவர்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தாலும் அதிலிருந்து விடுபடுகின்றனர்.அவர்கள் செய்த பாவம் அவர்களைத் திட்டிய முட்டாள்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

வன்முறை செயல்களே தீயோரின் பலம்.தண்டனைப் பற்றிய சட்ட நூல்களே அரசனின் பலம். பண்பும், சேவையும் பெண்களின் பலம்.பொறுமையே சான்றோர் பலம்.

ஐம்புலன்களை அடக்கி ஆளுவதை ஒரே குறளில் வள்ளூவர் சொல்லிவிட்டார்...

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளை ஒரே ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்புலன்களையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்

Saturday, October 31, 2015

23- செல்வம்



செல்வந்தர் உணவில் இறைச்சி அதிகம் இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் உணவு நெய்யும், அதனால் தயாரான உணவு வகைகளும் இருக்கும்.ஆனால் ஏழைகள் உணவோ எண்ணெயில் ஆகியவனவாகவே இருக்கும்

ஏழைகளுக்கு எப்போதும் நன்கு பசி எடுத்து, ருசியைத் தூண்டுகிறது. . ஆதலால், அவர்கள் உணவை ரசித்தும்,ஆர்வத்துடனும்,முழுமையாகவும் உண்கின்றனர்.ஆனால், பணக்காரர்களோ பசித்து உண்ணுவதில்லை.ஆகவே, முழுமையாக அனுபவித்து உண்ணும் வாய்ப்பு அவர்களுக்கு அரிதாகும்.

ஏழைகளுக்கு நல்ல சீரண சக்தி உண்டு..மரத்துண்டைக் கூட அவர்களால் செரிக்க முடியும்.ஆனால், பணக்காரனோ, எதிர்ப்பு சக்திக் குறைவால் சரியாகச் சாப்பிட இயலாது தவிப்பர்

அச்சம் மூன்று வகையாகும்.சமூகத்தில், அடித்தள மக்கள் உயிர் வாழ வேலையில்லாமல் போய்விடுமோ என அஞ்சுகின்றனர்.நடுத்தர மக்கள் (வசதி வருமுன்)சாவு வந்துவிடுமோ  என அஞ்சுகின்றனர்.உயர் வர்க்கத்தினர் தங்களுக்கு அவமரியாதையோ, அவமானமோ ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றனர்

குடிப்பழக்கத்தால் ஏற்படும் போதையைவிட, செல்வ மிகுதியால் ஏற்படும் போதை ஆபத்தானது.செல்வத்தால் ஏற்படும் போதைக்கொண்டவன் பேரழிவு ஏற்பட்ட பின்னரே சுயநினைவு அடைகிறான்.(பணத்திமிர் செல்வம் அழியும் வரை நீடிக்கும்)



22- நன்னடத்தை.....



படிப்பதால் வரும் கர்வம், செல்வ வசதியால் வரும் கர்வம், உயர் குலத்தில் பிறந்ததால் வரும் கர்வம் இம்மூன்று வகை கர்வங்களும் சாதாரண மனிதனைத் திமிராக நடந்து கொள்ள வைக்கும்.ஆனால் நற்பண்புகளைக் கொண்டவன் இந்த மூன்று வகைக் கர்வங்களையும் தன் முன்னேற்றத்திற்குத் தடையாகக் கருதுவான்

நல்லவர்களும், எக்காலத்திலாவது, எதற்காகவாவது தீயவர்களிடம் உதவி கேட்க நேரிடலாம்.உடன் தீயவர்கள் தாங்கள் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என கர்வம் கொள்வர்

உத்தமர்களிடம் அனைவரும் அடைக்கலமாகலாம்.சுயக்கட்டுப்பாடும், நற்பண்புகளும் உடையவர்களும் மட்டுமல்ல,தீயவர்களும் அவர்களை அடைந்து ஆதரவும், பாதுகாப்பும் பெறலாம்.ஆனால் தீயவர்கள் நல்லவர்களுக்கு புகலிடம் அளிப்பவராக விளங்க முடியாது.(தீயவர்களையும் நல்லவன் கைவிட ,மாட்டான்.ஆனால் தீயவன், நல்லவர்களுக்கு உதவவும் மாட்டான்.ஆபத்தையும் ஏற்படுத்துவான்)

சிறப்பாக ஆடை அணிபவன் அதற்கு மதிப்பவர்களைக் கவர்ந்து விடுவான்.காலநடை செல்வம் உள்ளவன் உணவு விஷயத்திலான விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்.வாகன வசதியைக் கொண்டவன் சாலையை விரைவில் கடக்கும் விருப்பத்தை நிறைவேற்றி கொள்வான்.ஆனால், நன்னடத்தை உள்ள மனிதன் தன் நற்பண்புகள் மூலம் எல்லோரையும் கவர்ந்து அவர்கள் மூலம் தன் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வான்

ஒருவன் நீண்ட ஆயுள், அதிக செல்வம், அதிக உறவினர் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கலாம்.ஆனால், வாழ்க்கையில் நல்ல நடத்தை உயிருக்கு சமமானது.நல்ல நடத்தி இல்லாதவன் ஒருவன் வாழ்க்கையில் நல்ல பயன் பெற முடியாது. 

Thursday, October 29, 2015

21- நெகிழ்தல்



எளிதில் பாலைக் கறக்க விடாத முரட்டுப் பசு முரட்டுத்தனமாக நடத்தப்படும்.எளிதில் பால் கறக்க உதவும் பசு நேசிக்கப்படும்.அதை மக்கள் துன்புறுத்த மாட்டார்கள்.(முதலில் எதையாவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை வரின்..முரண்டுப் பிடிக்காதுக் கொடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்)

சூடு படுத்தாமல் வளையக் கூடியதை சூடேற்ற வேண்டிய அவசியமில்லை.உதாரணமாக மரத்தின் கிளைகளைச் சொல்லலாம். அவை தாமாகவே வளையக் கூடியவை.(அறிஞர்களும் தங்கள் செல்வாக்குச் செல்லாத இடத்தில் வளைந்து கொடுப்பர்)

அறிஞர் எனப்படுபவர் குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னைவிட வலியவர் முன்னால் வளைந்துக் கொடுப்பர்.(இதைத் தாழ்வாக எண்ணிவிடக் கூடாது.பிறரின் வலிமை அறிந்து நடப்பது விவேகமாகும்)

கால்நடைகள் மேயும் புல் செழிக்க மழையை நம்பியுள்ளன.அரசன், அமைச்சர்களின் ஆலோசனையைச் சார்ந்துள்ளான்.மனைவி, கணவனை நம்பி வாழ்கிறாள்.அந்தணர்கள் வேதங்களை வழிகாட்டியாகக் கொண்டு பணி செய்கின்றனர்

நாம் சத்தியத்தைப் பின் பற்றினால் நம் நற்பண்புகள் காப்பாற்றப் படும்.நாம் அறிவைத் தொடர்ந்து பயன் படுத்தினால் அது குறையாமல் நம்மிடம் நிலைத்து இருக்கும்.நாம் உடலைத் தேய்த்துக் குளித்து தூய்மையாக வைத்திருந்தால் அழகுடன் விளங்குவோம்.நம்  நடத்தை நன்றாக இருந்தால் நம் பரம்பரை நிலைபெற்று வளரும்

தானியங்கள், அவ்வப்போது எவ்வளவு உள்ளன என்பதை அவ்வப்போது  பார்த்தால் அவற்றிற்கு பஞ்சம் ஏற்படாது.குதிரைகளை  லாயத்திலேயே வைத்திருந்தால் நோயுறும்.அவ்வப்போது அவற்றை ஓட்டிச் செல்ல வேண்டும்.பசுக்களை நேரடியாகக் கவனித்து வந்தால் நல்ல அதிகப்படியான பால் தரும்.பெண்கள் உடல் தெரியுமாறு இருக்கக் கூடாது.வறுமையில் உள்ளோரும் கந்தைத் துணியிலாவது உடலை மறைக்க வேண்டும்

ஒருவன் உயர் பரம்பரையைச் சார்ந்தவானாக இருந்தாலும், ஒழுக்கத்தில் குறையுடையவன் ஆனால் அவன் மரியாதைக்குரியவன் அல்ல.அதுபோன்று தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் ஆனாலும் ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை மதிக்க வேண்டும்.(குலம் முக்கியமில்லை..குணமே முக்கியம்)

பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகௌரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை,அதிர்ஷ்டம், பட்டம், பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு பொறாமைப்பட்டால் நாம் வாழ்நாள் முழுதும் தீராத நோயாளியைப் போல அவதிப்பட நேரிடும்.

செய்யக் கூடாததாகிய காரியத்திற்கு அஞ்சுபவன், கட்டாயாகச் செய்ய வேண்டிய காரியத்தை செய்யாமல் விட அஞ்சுபவன், குறிப்பிட்ட காலத்திற்கு முன் ரகசியத்தை வெளியிட அஞ்சுபவன் இம்மூவகையினரும் ஒரு போதும் போதைதரும் எப்பொருளையும்  பயன்படுத்தக் கூடாது.(போதை, செய்யக்கூடாததை செய்யவைக்கும்.செய்ய வேண்டியதை  மறக்கச் செய்யும்.ரகசியம் அவனால் காப்பாற்றப் பட முடியாது)

Wednesday, October 28, 2015

20-ஆட்சியாளர்



பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய விரும்ப மாட்டார்கள்.அதுபோல குடிமக்களும் தங்களது அரசன் (ஆட்சியாளன்) பயனற்ற முயற்சியில் ஈடுபடுபவனாகவோ, பயனுள்ள செயல்களை தட்டிக் கழிப்பவனாகவோ இருந்தால் அவரை தங்களது தலைவனாக ஏற்க மாட்டார்கள்.

பெண்கள் ஆண்மையற்றவரை கணவராக அடைய மாட்டார்கள்.அதுபோல குடிமக்கள் தங்கள் அரசனுடைய ஆதரவால் அல்லது மகிழ்ச்சியால் ஒரு பயனும் இல்லையென்றாலும்,அவனது கோபத்தால் ஒரு ஆபத்தும் இல்லையென்றாலும் அவனைத் தலைவனாக மதித்து ஏற்கமாட்டார்கள்

சில விஷயங்களுக்கு அதிக முயற்சி தேவைப்படாது.ஆனால், அதனால் பெரிய பயன்கள் ஏற்படக் கூடும்.அத்தகையவற்றை அறிவாளி தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பான்.

ஒரு அரசன் (ஆட்சியாளர்) வெளிப்பார்வைக்கு ஒன்றும் அறியாதவன் போல அமைதியாகத் தெரியலாம்.ஆனால் அவன் தன்னைச் சுற்றி நடைபெறும் எல்லா விஷயங்களையும் தெளிவாகவும், கூர்மையாகவும் கவனித்துக் கொண்டிருக்கக் கூடும். அத்தகையவரிடம் குடிமக்களும் விசுவாசமாக இருப்பர்

மரமானது பூக்கள் நிறைந்ததாக இருப்பினும் அதிகம் பழம் தராததாக இருக்க வேண்டும்.பழம் தரும் மரமானால், எளிதில் ஏறிப் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருக்க வேண்டும்.அதன் பழங்கள் அரைகுறையாக பழுத்திருந்தாலும், முழுதாக பழுத்தது போல இருக்க வேண்டும்,இப்படியெல்லாம் இல்லாமல் வாடிய மரம் போல இருந்தால் மக்கள் அது பயனற்றது என வெட்டி வீழ்த்தி விடுவர்.

(ஆட்சியாளர் பழக இனிமையாக இருக்க வேண்டும்.அதே நேரம் வாரி வழங்குபவராக இருக்கக் கூடாது..எல்லோராலும் அணுகப்படக் கூடியவராய் இருக்கக் கூடாது.)

அரசன் (ஆட்சியாளர்) தன் பார்வையாலும், மனதாலும், பேச்சாலும், செயலாலும் உலகத்திற்கு மனநிறைவை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். அத்தகையோரை குடிமக்கள் வழிபடுவர்.

ஒரு அரசன் கடல்வரை பரவியுள்ள நிலத்திற்கு முழுதும் உரிமையாளனாக இருக்கலாம்.ஆனால், மக்கள் அவனுக்குப் பயப்படும் நிலையில் இருந்தால், அவன் அரசு புரிய தகுதியற்றவன் ஆவான்.மக்கள் அவனை விரைவில் கைவிட்டு விடுவர்,(மக்களை பயமுறுத்தி ஆட்சியாளர் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது)

அரசருக்கு ஆட்சி செய்யும் உரிமை பரம்பரை சொத்தாய் கிடைத்திருக்கலாம்.அதற்காக அவன் அநியாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதில்லை.அவன் தீய செயல்களைச் செய்தால்...காற்று மேகங்களை சிதறடிப்பது போல நாடு சிதறுண்டு போகக் காரணமாவான்.

பண்டைக் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் அறநெறி வழிப்படி அரசன் நல்லாட்சி செய்ய வேண்டும்.அத்தகையவனுடைய நாடு செழிப்புடன் விளங்கும்.அந்நாட்டில் மகிழ்ச்சி பொங்கும்

இதற்கு மாறாக அரசன் தன் நற்பண்புகளை விட்டு, அநியாய நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவனது நாட்டில் வளம், வசதிகள் குறையும்.நெருப்பினால் சருமம் சுருங்கி விடுவதுபோல அவனது நாட்டு எல்லையும் சுருங்கி விடும்.

அரசர்கள் எதிரி நாடுகளை வென்று தாக்க கடுமையாக முயற்சிப்பர்.அதுபோலவே அவர்கள் கடும் முயற்சி செய்து தங்கள் நாட்டையும் பாதுகாத்து செழிப்படையச் செய்ய வேண்டும்.

ஆட்சியை நேர்மையான முறையில் முயற்சித்து அடைய வேண்டும்.ஆட்சியைப் பிடித்த பின்னர் நேர்மையாக ஆள வேண்டும்.நேர்மையாகக் கிடைக்கின்ற ஆட்சியை ஆட்சியாளர் கைவிட மாட்டார்கள்.அந்த அரசாட்சி வாய்ப்பும் அவர்களைக் கைவிடாது.

எங்கும் எதிலும் நாம் சத்தியத்தைத் தேடி அறிய வேண்டும்.பாறையிலிருந்து தங்கத்தைச் சுரண்டி எடுப்பது போல, சத்தியத்தை அறிய முயற்சிக்க வேண்டும்.உளறுகின்ற பைத்தியம், மழலைப் பேசும் குழந்தை ஆகியோரிடம் கூட விஷயங்கள் இருக்கலாம்.ஆகவே யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது

அறுவடை நேரத்தில், கொஞ்சம் தானியங்கள் வயலிலேயே சிதறிப் போகும்.அதை சேகரித்து, உணவாக்கி சிலர் விரத வாழ்க்கை நடத்து கின்றனர்.அதுபோன்ற சான்றோர்களின், நன்மொழிகளும்,அரிய செயல்களின் விவரங்களும் பல்வேறு இடங்களில் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றையெல்லாம் சேகரித்து அவற்றின் அடிப்படையில் வாழ வேண்டும்

பசுக்கள் மோப்ப சக்தி மூலம் தொலைவில் உள்ளதையும் அறிந்து கொள்கின்றன. அந்தணர்கள் வேதம் மூலம் கண்ணுக்குப் புலப்படாததை அறிகின்றனர்.அரசர்கள் ஒற்றர்கள் மூலம் தங்கள் பார்வைக்கு அப்பால் நடக்கும் விஷயங்களையும் அறிகின்றன.சாதாரண மக்கள் தங்கள் படுவதைக் கண்டு திருப்தியடைகின்றனர்.