Wednesday, December 23, 2015

30-ஏற்றம் பெற எட்டு



விவேகம், உயர்குடிப் பிறப்பு,சுயக்கட்டுப்பாடு,புனித நூல்களில் பயிற்சி,வீரம், பேச்சில் அளவாக இருத்தல், சக்திக்கு உட்பட்டு தான தருமம் செய்தல்,நன்றி மறவாமை ஆகிய எட்டுக் குணங்களும் ஒருவனைப் புகழ்ப் பெறச் செய்யும்.

இந்த எட்டுக் குணங்களையும் ஒருவன் பெற்றிருந்தால், அவனுக்கு ஆட்சியாளர் மூலம் கௌரவம் கிடைக்கும்.அந்தக் கௌரவம் மேற்கண்ட எட்டையும் விடச் சிறப்பாகும்.

இப்பொழுது  சொல்லும் எட்டுக் குணங்களைக் கடைப்பிடித்தால் அவை நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.அவற்றில் நான் கு  நன்மக்களுக்கு இயல்பாகவே அமைவது.மீதியை அவர்கள் முயற்சித்து பெறுகின்றனர்.

வேள்வி செய்தல்,தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம்,தருமம் செய்வதில் ஈடுபாடு ஆகிய நான்கும் நல்லவர்களிடம் இயல்பாகவே உள்ளன.சுயக்கட்டுப்பாடு,வாய்மை,நேர்மை, அகிம்சை ஆகிய நான்கு குணங்களையும் நல்லவர்கள் தம்முடையதாக்கிக் கொள்கின்றனர்.

வேள்வி, தரும சிந்தனை,ஆன்மீகக் கல்வியில் ஆர்வம், தவம், வாய்மை, மன்னிக்கும் பண்பு, கருணை, பிறர் பொருளை விரும்பாமை ஆகிய எட்டும் நாம் பின்பற்ற வேண்டிய நற்குணப் பாதைகள் என முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிறர் பாராட்டைப் பெற சிலர் மேற்சொன்ன எட்டில் வேள்வி,ஆன்மீக நாட்டம்,தான தருமம் தவம் ஆகிய நான்கையும் மேற்கொண்டிருக்கலாம்.ஆனால் வாய்மை, பிழையைப் பொறுத்தல்,கருணை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை ஆகிய நான்கும் உண்மையாகவே..இயல்பாகவே சான்றோர்களீடம் காணப்படும்

முதியோர் கலந்து கொள்ளாத ஆலோசனை நிகழ்ச்சியைக் கூட்டமென்றே கூறமுடியாது.நற்பண்புகளை எடுத்துரைக்காதவர்களை முதியோர்கள் என கூறமுடியாது.எடுத்துரைக்கப்படும் குணம் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்காவிட்டால் அது நற்பண்பு ஆகாது.வஞ்சகம் கலந்த ஒன்றை உண்மை எனக் கூறமுடியாது.

இனி வாய்மை, பிறர் பொருள் விரும்பாமை ஆகியபற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.....

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்

பிறருக்கு எம்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கிறவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவார்கள்


Tuesday, December 15, 2015

29 - பாவச்செயல்கள்



விதுரர் தொடர்ந்தார்...

"திருதராஷ்டிரரே! நாட்டை உங்கள் குடும்பத்தின் வசமே வைத்துக் கொள்ள பொய் பேசுவது சரியல்ல. உண்மையைப் பேசாமல் மறைத்து, உங்களுக்கும், உங்கள் மகன்களாகிய கௌரவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அழிவைத் தேடித் தராதீர்கள்.கால்நடைகளை மேய்க்கும் இடையர் அவற்றைச் சரியான வழியில் நடத்த தடியைப் பயன் படுத்துவது போல..மக்களைக் காத்து நல்வழிப்படுத்தக் கடவுள் தடியெடுப்பதில்லை.மக்கள் தங்களைப் பாதுகாத்து முன்னேற அறிவைத் தந்துள்ளார்.நாம் நல்ல், மங்களகர விஷயங்களில் ர்வ்வளவு அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ ஈடுபடுத்திக் கொள்கிறோமோ அதே விகிதத்தில் நமது விருப்பங்கள் அதிகமாகவோ, குரைவாகவோ நிறைவேறும்.இதில் சந்தேகம் இல்லை.ஒருவன் வேதங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்த பண்டிதனாயிருப்பான்.ஆனால், அதே சமயம் அவன் மோசடி செய்து ஏமாற்றுபவனாக இருக்கலாம்.அவனை வேதங்கள் பாவத்திலிருந்து காப்பாற்றாது.பறவைகள் இறக்கை முளைத்ததும் பழைய கூட்டை மறந்துவிடுவது போல அத்தகைய பாவியை இறுதி காலத்தில் அவனது வேத அறிவு கை விட்டுவிடும்..

குடிப்பழக்கம், சண்டை போடுதல், மனிதர்களுடன் விரோதம், கணவன் மனைவி இடையே கலகம் மூட்டுதல், உறவினர்களைப் பிரித்து பிளவு உண்டாக்குதல், ராஜத்துரோகம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தகராறு விளைவித்தல் போன்ற செயல்கள் செய்வதை விட வேண்டும்.

முகம், கை பார்த்து சோதிடம் சொல்லுதல், போலி எடைக்கல் வைத்து ஏமாற்றும் வியாபாரி அல்லது திருடி விற்பவர், மோசடிப் பேர்வழி, மருத்துவர், எதிரி, நண்பர், நடிகர் இவர்கள் ஏழு பேரும் சாட்சியம் சொல்ல தகுதியற்றவர்கள் ஆவார்கள்...பிறர் இல்லத்திற்கு தீ வைப்பவர், பிறரை விஷம் வைத்து கொல்பவர், விலை மாதர்களை ஏற்பாடு செய்யும் தரகர்,சாராய வியாபாரி, கோல் மூட்டுபவர்,ஆயுதங்கள் உற்பத்தி செய்பவர், காட்டிக் கொடுப்பவர், சதி செய்து நண்பருக்கு துன்பம் விளைவிப்பவர், பிறர் மனைவியை நாடுபவர், கருச் சிதைவு செய்து வைப்பவர், குருவின் மனைவியைக் கெடுப்பவர், கள் குடிக்கும் அந்தணர், குரூரமாக பிறரை ஏசுபவர், பழைய விரோதத்தைக் கிளரி விடுபவர், நாத்திகர்கள், வேதங்களை பழிப்பவர்கள், பேராசைப்பட்டு பணம் பிடுங்கும் புரோகிதர், உரிய வயதிற்குள் பூணூல் அணியாதவர், பசுக்களை கொல்பவர்,அடைக்கலம் புகுந்தவரைக் கொபவர்,இவர்கள் எல்லாம் அந்தணர்களை கொலை செய்யும் பாவிகள் ஆவர்.

(இது நடந்த காலகட்டத்தி ஞாபகம் கொள்ள வேண்டும்.அந்தணர் என்போர் சான்றோர் என வள்ளுவர் சொன்னதையும் நினைவில் கொள்ள வேண்டும்)

அந்தணர் என்போர் அறிவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

அனைத்து உயிர்களிடத்தும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுபவர் ஆவார்

.இரவுநேரத்தில் தீக்குச்ச்யைக் கொளுத்தினால்தான் வெளிச்சம் கிடைக்கும்..பொருள்கள் கண்ணூக்குத் தெரியும்.அதுபோலவே ஒருவன் செய்யும் செயல்கள் மூலமே, அவன் எவ்வளவு உயர்ந்தவன் என அறியலாம்.அவன் நடந்து கொள்ளும் விதத்தால் எவ்வளவு பண்பாளன் எனத் தெரியும்.ஆபத்தான சூழ்நிலையில் ஒரு தலைவனை அடையாளம் காணலாம்.எதிர்ப்பான பொருளாதாரச் சூழ்நிலையில் ஒருவனின் வீரம் தெரியும்.நமக்குத் துன்பம் ஏற்படுகையில்தான் யார் நண்பர், யார் எதிரி எனத் தெரியும்.

முதுமை , நமது அழகையும்,ஆசை பொறுமையையும் சீர்குலைக்கும்.சாவு நம் உயிர் மூச்சை நிறுத்திவிடும்.பொறாமை நன்னெறியில் செல்வதைத் தடுக்கும்.கோபம் செல்வத் திமிரையும், தீயோர் நட்பையும், நமது நன்னடத்தையையும் பாதிக்கும்.காமம் மான உணர்வை மரத்துப் போகச் செய்யும்.கர்வமோ அனைத்தையுமே அழித்துவிடும்.

கோபக்காரனைப் பார்த்து அதிர்ஷ்டம் புன்னகைக்காது.கெட்ட நோக்கம் உள்லவர்களுக்கு நண்பர்கள் உதவ மாட்டார்கள்.குரூரமானவர்களைப் பெண்கள் புறக்கணிப்பர்.மேலோட்டமாக ஈடுபாடு உள்ளவனுக்கு படிப்பு ஏறாது.காமம் மிக்கவன் வெட்கம் கெட்டவனாக இருப்பான். சோம்பேறிக்கு வாழ்க்கை வசதி கிடைக்காது.மன உறுதியுடன் செயலாற்றாதவன் எதையும் சாதிக்க இயலாது.

நல்ல மங்களமான செயல்களின் மூலம் செல்வம் ஏற்படும்.திறமையின் மூலம் அது வேரூன்றும்.உழைப்பின் மூலம் அது விரிவடையும்.மனக்கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் அது நிலைத்து நிலைபெறும்.

இனி கோபம்பற்றியும், நட்பு பற்றியும் வள்ளுவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்

நட்பு பற்றி..

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு

நாம் அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவுகையில் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனை சரிசெய்ய உதவுகிறதோ அதுபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்க துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், கோபத்தைக் கைவிட வேண்டும்.அல்லையேல், அந்தக் கோபம் அவனையே அழித்துவிடும்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற கோபம் கொள்பவர் இறந்தவர்க்கு ஒப்பாவர்.சினத்தைத் துறந்தவர் துறவிக்கு ஒப்பாவர்

Sunday, December 13, 2015

28_-விதுரர் சொன்ன கதை (தொடர்ச்சி)



அதற்கு பரஹம்சர் "அரசே! ஒருவர் தன் மகனுக்குத் தன்னிடம் உள்ள அனைத்து செய்வங்களையும் கொடுக்கலாம்.ஆனால், மகனுக்கும், மற்றவர்க்கும் தகராறு ஏற்பட்டு விவாதம் எழுந்தால் உண்மையான பதிலைக் கூற வேண்டும்" என்றார்.

பிரகலாதர், "முனிவரே! ஒருவன் முழு உண்மையையோ, பொய்யையோ பதிலாகக் கூறாவிடின் என்ன பாவம் செய்தவனாகிறான்? அவனுக்கு என்ன கஷ்டம் ஏற்படும்?" என வினவினார்.

"தர்மநெறி பற்றி ஒருவரிடம் கேட்டால் சரியான பதில் தர வேண்டும்,வழி தவறிய கழுதை அலைவதைப் போல சுற்றி வளைத்துப் பேசக் கூடாது.அவ்வாறு சொல்பவன் அறநெறியிலிருந்து வீழ்பவன் ஆகிறான்.அப்படிப்பட்டவன், அரசன் எனில், அவன் தன் நாட்டையும், குடிமக்களையும் இழந்தவன் ஆகிறான்.ஆற்றங்கரையில் உள்ள மரங்கள் வெள்ளம் பெருக்கெடுத்தால் வீழ்ந்துவிடும்.அதுபோல அறநெறியை அறிந்திருந்தும் மௌனமாய் இருப்பவரும்,அதுபற்றி சிந்தித்தும் கருத்தை வெளியிடாதவனும் அழிந்து போவார்கள்.ஒரு சபையின் கூட்டத்தில் சிலர் தவறாக நடந்தால் அவர்கள் கண்டிக்கப் பட வேண்டும்.அல்லையேல்,பாதி பாவம் சபைத்தலைவரைச் சேரும்.மீதியில் கால் பாகம் தவறிழைத்தவரையும், எஞ்சியுள்ள கால் பாகம் கூட்டத்திற்கு வந்து மௌனமாய் இருந்தவர்களையும் சாரும். (இவ்விடத்தில்..பாஞ்சாலி சபையில் அவமானப்பட்டபோது, விதுரர்,விகர்ணன் தவிர பீஷ்மர் உடபட மௌனம் காத்த அனைவரும் தவறிழத்தவர்கள் என்பதை நினைவுக்கு வருகிறது).

இதற்கு மாறாக குற்றம் செய்தவர்கள் கண்டிக்கப் பட்டால் சபையின் தலைவர் பாவமற்றவர் ஆகிறார்.சபையிலுள்ளோர் பாவமும் நீங்கும்.எல்லாப் பாவமும் கூற்றமிழைத்தவரையேச் சாரும்." என்றார் பரஹம்சர்.

பின் பிரகலாதர், " முனிவரே! அறியாமை காரணமாகவோ அல்லது சுயநலத்தாலோ தூண்டப்பட்டு ஒருவன் பொய்யான பதிலைச் சொன்னாலவன் நிலை என்ன? அவன் எத்துன்பத்தை அனுபவிப்பான்?" என வினவினார்.

கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டால் முதல் மனைவியும், சூதாட்டத்தில் தோற்றவனும், கவலைகளால் நசுக்கப்பட்டவனும் இரவு நேரத்தில் தூங்காமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.அதுபோலவே ஒருவன் தனக்குத் தெரிந்துள்ள உண்மையை தெளிவாகவும், துணிச்சலாகவும் பேசாவிடில் வாழ்நாள் முழுதும் துயருடன் கழிப்பான்.

ஒரு நகரினுள் நுழையமுடியாது தடுக்கப்பட்டவனும், நகருக்கு வெளியே இருக்க நேர்ந்து பட்டினி கிடப்பவனும், கண்ணெதிரே எதிரிகளையேக் காண்பவனும் , இரவு நேரத்தில் தூங்க முடியாது புலம்பிக் கொண்டிருப்பர்.அதுபோல ஒருவன் தான் அறிந்த உண்மையைத் துணிச்சலாக வெளியிடாவிடின் வாழ்நாளை துயருடன் கழிப்பர்

ஒருவன் தான் வளர்க்கும் விலங்கிற்காக (ஆடு போன்றவை) பொய் சொன்னால் அவன் முன்னோர்களில் ஐவர் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது பசுவிற்காகப் பொய் சொன்னால் பத்து முன்னோர்களும், தனது குதிரைக்காகப் பொய் சொன்னால் நூறு முன்னோர்களும் நரகத்தில் தள்ளப்படுவர்.தனது வேண்டிய மனிதர்களுக்காகப் பொய் சொன்னால் ஆயிரம் முன்னோர்கள் நரகத்தை அடைவர்

செல்வத்தை அடைய பொய் கூறுபவன், தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், எதிர்காலத்தில் பிறக்கப் போகிறவர்களுக்கும் அழிவு ஏற்படச் செய்கிறான்.நிலம் சம்பந்தமாய் பொய் சொன்னால் தன்னிடம் உள்ளவையும் தன்னைச் சார்ந்தவையும் எதுவும் மிஞ்சாமல் அழிந்துவிடும்.ஆகவே நிலம் (ராஜ்ஜியம்) பற்றிப் பொய் பேசக்கூடாது.,

பரஹம்சர் சொன்னவற்றைக் கேட்ட பிரகலாதர் விரோசனன், சுதன்வன் இருவரின் கேள்விக்கு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார்.

விரோசனனைப் பார்த்து, "விரோசனா! சுதன்வனின் தந்தை அங்கிரச முனிவர் என்னைவிட உயர்ந்தவர்.சுதன்வனின் தாயார் உன் தாயாரைவிட உயர்ந்தவர்.எனவே சுதன்வனும் உன்னைவிட உயர்ந்தவர் ஆகிறார்.அவர் உன்னை பந்தயத்தில் வென்று விட்டார். உன் உயிரப் பணயம் வைத்துப் போட்டியிட்டதால் சுதன்வன் உன் உயிருக்கு உரைமையாளர் ஆகிறார்" என்றார்.

பின் சுதன்வனைப் பார்த்து, "சுதன்வரே! தயவு செய்து விரோசனின் உயிரை அவனுக்குத் திருப்பித் தாருங்கள்" என்றார்.

சுதன்வன், "பிரகலாதரே1 உங்கள் மகன் போட்டியில் தோற்றதால் பணயமாக வைத்த உயிர் மீதான உரிமையை இழந்துவிட்டார்.ஆனால் நீண்கள் தர்மத்தையே கடைப்பிடிக்க முடிவெடுத்தீர்கள்.சுயநலத்திற்குக் கூட நீங்கள் பொய் சொல்ல வில்லை.நீங்கள் சத்தியத்தைக் கூறியதற்காக உங்கள் மகனை உங்களுக்கேத் திருப்பி அளிக்கிறேன்.விரோசனனின் உயிர் மீதான என் உரிமையைத் திருப்பித் த்ந்து விட்டேன்.நான் உயர்ந்தவன் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டதால் கேசினியின் முன் விரோசனன் என் கால்களைக் கழுவ வேண்டும்" என்றார்.

(சாதி, மதங்கள், உயர்ந்தவன் .தாழ்ந்தவன் ஆகியவை ஒழிந்துவரும் இக்காலத்தில்...மேற்கண்ட கதை..அந்தக் காலக்கட்டத்தில் சொல்லப்பட்டது என்பதி நினைவில் கொள்க)

இனி வள்ளுவர்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

ஒரு பக்கமே சாய்ந்துவிடாமல் நாணயமான தராசுமுள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்


Saturday, December 12, 2015

27-விதுரர் சொன்ன கதை



விதுரர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவரிடம், "விதுரா! நீ அறிஞன்.இதுவரை எனக்குச் சொன்னதைப் போன்ற அறிவுரைகளை மேலும் சொல்வாயாக.உன் சொற்கள் நற்பண்பை வலியுறுத்துகின்றன.உலக நன்மைக்கான பல விஷயங்களைக் கூறினாய்.அவை உண்மை.ஆனாலும், என் மனம் மேலும் கேட்க விழைகிறது" என்றார்.

விதுரர் கூறலானார்...

புனித நதிகளீல் நீராடினால் நமக்கு என்ன புண்ணியம் கிடைக்குமோ அதற்கு சமமான புண்ணியம், எல்லா உயிரினங்களையும் சமமாக பார்ப்பதிலும் கிடைக்கும்.ஆகவே சம நோக்கு வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரையும் சமமாக உம் புதல்வராக நினையுங்கள்.இதனால் உங்கள் புகழ் ஓங்கும்.சமநோக்கு என்ற புண்ணியம், இறந்தபின் சுவர்க்க வாழ்வை அளிக்கும்.எவ்வளவு காலம் வரை ஒரு மனிதரின் புகழும், புண்ணியமும் போற்றப்படுகின்றனவோ..அவ்வளவு காலம் சுவர்க்கத்திலும் அவனுக்குக் கௌரவம் கிடைக்கும்.இதை விளக்க பழைய கதை ஒன்றைக் கூறுகிறேன்....

கேசினி என்ற ராஜகன்னிகையால் தூண்டப்பட்டு பிரகலாதன் மகனான விரோசனன், அங்கிரச முனிவரின் புதல்வன் சுதன்வனுடன் விவாதம் செய்து பேசிய கதை இது.

கேசினி அழகியாவாள்.அவள் தலைசிறந்த இளைஞன் ஒருவனைக் கணவனாக அடைய விரும்பினாள்.இதற்கான சுயம்வரம் நடத்த முடிவெடுத்தாள்.அவளை மனைவியாக டையும் நோக்கில் விரோசனன் சுயம்வரத்திற்கு வந்தான்.அவன் தைத்திய இனத்தைச் சேர்ந்தவன்.கேசினி அவனிடம் கேட்டாள்.(காசியமுனிவர் தொடங்கியது தைத்திய இனம்.மனைவி திதி.இவர்களது மக்ன்தான் இரண்யன்.இரண்யனின் மகன் பிரகலாதன்.பிரகலாதனின் மகன் விரோசனன்)

"விரோசனரே! அந்தணர்கள் உயர்ந்தவர்களா? தைத்தியர்கள் உயர்ந்தவர்களா? சுதன்வன் ஏன் சுயம்வரத்திற்கு வரவில்லை?"

இதற்கு விரோசனன், "கேசினி...பிரஜாபதியின் வம்சமான நாங்கள் அந்தணர்களைவிட உயர்ந்தவர்கள்.அதுமட்டுமல்ல....எல்லாரையும்விட நாங்கள் உயர்ந்தவர்கள்.இந்த உலகு எங்களுடையது.தேவர்கள், அந்தணர்கள் யாரும் எங்களுடன் ஒப்பிடத் தகுந்தவர் அல்ல"

கேசினி - விரோசனரே! சுதன்வன் விடியற்காலம் வரக்கூடும்.நாம் காத்திருப்போம்.உங்கள் இருவரையும் கண்டு ஒப்பிட விரும்புகிறேன்

 அன்று இரவு கழிந்தது.மறுநாள் சூரியன் உதிக்கும்போது சுதன்வன் சுயம்வர மண்டபத்திற்கு வந்தான்.விரோசனன், கேசினி இருந்த இடத்தை அடைந்தான்.

சுதன்வனைப் பார்த்ததும் கேசினி எழுந்து வரவேற்று இருக்கை அளித்தாள்.பாதபூஜை செய்ய தண்ணீர் எடுத்து வந்தாள்.இதர பூஜைக்கான பொருட்களையும் கொணர்ந்தாள்.

சுதன்வன், விரோசனனைப் பார்த்து, "பிரகலாதனின் மகனான் நீ தங்க இருக்கையில் அமர்.நான் அந்தணன்.எனக்கு சாதா இருக்கைப் போதும்.அந்தத் தங்க இருக்கையை ஒருமுறை தொடுவதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.நான் உனக்கு நெருக்கமானவன்.ஆயினிம், சரி சமமாக அமர்வது பொருந்தாது" என்றான்.

அதற்கு விரோசனனும், "ஆம்.எனக்கு சமமாக அமர தகுதியற்றவன் நீ.மரப்பலகை, புல், மான் அல்லது புலித்தோல் ஆகியவையே உனக்குச் சரி" என்றான்.அதற்கு சுதன்வன் "ஆம்.நீ சொல்வது சாஸ்திரப்படி சரி.தந்தையும், மகனும் சமமாக உட்காரலாம்.இரு அந்தணர்கள், இரு சத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு நான்காம் வருணத்தார் சமமாக உட்காரலாம்.ஆனால், வெவ்வேறான இருவர் சமமாக அமரக் கூடாது. உன் தந்தை என்னை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி உபசரிப்பார்.தாழ்ந்த இருக்கையைப் போட்டுதான் தான் அமர்வார்.நீ அரண்மனையில் ஆடம்பர சூழ்நிலையில் வளர்ந்தவன்.உனக்கு இதெல்லாம் தெரியாது" என்றான்.

விரோசனன் அதற்கு, "எங்களிடம் உள்ள தங்கம், கால்நடைச் செல்வங்கள், குதிரைகள் ஆகிய அனைத்தையும் பணயமாக வைக்கிறேன்.ஆற்றல் மிக்க யாரேனையும் நம்மில் உயர்ந்தவர் யார் எனக் கேட்டுப் பார்ப்போம்' என்றான்

அதற்கு சுதன்வன், "உன்னிடமுள்ள ஆடு, மாடு, குதிரைகள், தங்கம் அனைத்தையும் நீயே வைத்துக் கொள்.நான் என் உயிரை பணயமாக வைக்கிறேன்" என்றான்.
அதற்கு, விரோசனனும், தன் உயிரையும் பணயம் வைக்க தயாராய் இருப்பதாய்க் கூறினான்.ஆனால், இது குறித்து தேவர்களையோ, மனிதர்களையோ அணுக தனக்கு விருப்பமில்லை என்றான்.

உடன் சுதன்வன் "நாம் உயிரை பணயமாக வைத்து விட்டதால் இருவரும் உன் த்ந்தை பிரகலாதரிடம் கேட்போம்' என்றான்.இருவரும் பிரகலாதரிடம் சென்றனர். .

இவர்கள் வருவதைப் பார்த்த பிரகலாதர், "இவர்கள் இருவரும் ஒற்றுமையாய் இருந்ததில்லை.இப்போதும் சீற்றத்துடன் வருவது போலத் தெரிகிறது.என்ன சேதியாய் இருக்கும்" என யோசிக்கலானார்.

பின் அவர் விரோசனனைப் பார்த்து, "இதுவரை நீங்கள் நட்புடன் பழகியதில்லை.இப்போது சுதன்வன் உனக்கு நண்பன் ஆகிவிட்டானா?" என்றார்.

அதற்கு விரோசனன், "தந்தையே! நாங்கள் எங்கள் உயிரை பணயமாக வைத்து ஒரு பந்தயத்தில் இறங்கியுள்ளோம்.நாங்கள் கேட்கப்போகும் கேள்விக்கு பொய் கலக்காது உண்மையைச் சொல்லுங்கள்" என்றான்.

பிரகலாதரோ , அதற்கு முன்னதாக தனக்கு ஒரு கடமை உள்ளதாகக் கூறி, "சுதன்வன் அந்தண அதிதி.மரியாதைக்குரியவர் ஆகவே அவரை.வரவேற்கத் தண்ணீரும், பானமும், தானம் அளிக்க ஒரு வெள்ளைப் பசுவும் தயாராக உள்ளது' என்றார்.

சுதன்வனோ, "பிரகலாதரே! நீங்கள் கூறிய சொற்களே போதும்.எங்கள் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொன்னால் போதும்" என்றான்.

"அந்தணர் உயர்ந்தவரா? விரோசனன் உயர்ந்தவனா? ' என்றான் சுதன்வன்

பிரகலாதர் சொன்னார், "உமது கேள்விக்கு சரியாக விடையளிக்கும் திறமை, தர்ம சாஸ்திரங்களில் கரை கண்டவர்களான கல்மாஷர்,கபிலர்,வியாசர், லோகிதர் ஆகியவரிடம் கூடக் கிடையாது.அந்தணர், சத்திரியரில் யார் உயர்ந்தவர் என்பது கத்தி முனையைவிட கூர்மையான கேள்வி.தர்மநெரி சம்பந்தப்பட்டது.அந்தணரே1 ஒருபுறம் என் ஒரே மகன்,இன்னொரு புறம் நீங்களே நேரில் வந்துள்ளீர்கள்.என்னைப் போன்ற ஒருத்தரால் உங்கள் பிரச்னைக்கு எப்படி பதில் அளிக்க முடியும்?" என்றார்.

சுதன்வனோ, "பரவாயில்லை.என் கேள்விக்கு நீங்களே பதில் கூறுங்கள்.ஆனால் அது உண்மையானதாய் இருக்க வேண்டும்.பொய்யான பதிலைச் சொன்னால் உங்கள் தலை வெடித்துவிடும்."என்றார்.

அப்போது, அங்கே..பரமஹம்சர் பிரிவைச் சேர்ந்த தெய்வீகமான ஒரு முனிவர், அதிதி வம்சத்தைச் சேர்ந்த ஒருவருடன் வந்தார்.

அவரிடம், பிரகலாதார், "முனிவரே! இந்த இருவரில் ஒருவர் என் மகன்.மற்றொருவர் எனக்குத் தெரிந்த அந்தணர்...இவர்களிடையே தகராறு ஒன்று உள்ளது.நான் நடுவராக இருக்க வேண்டியுள்ளது.உண்மையை எப்படி நிலைநாட்டுவது?' என்றார்.

Saturday, November 21, 2015

26 -தருமரின் நற்பண்புகள்


ஒருவன் தோல்வியோ, அவமானமோ அடைய வேண்டும் என்று விதியிருந்தால் அவர்களின் அறிவு மழுங்கிப் போய்விடும்.அறிவு பழுதுப்பட்ட நிலையில் அந்த மனிதன் கீழ்த்தரமான செயல்களைப் புரியத் தொடங்கி விடுவான்

அறிவு மயங்கி அதனால் வீழ்ச்சியடையும் நேரம் வந்து விட்டால், ஒருவனுக்கு அவன் செய்யும் அநியாயமெல்லாம், நியாயமாகத் தெரியும்.தனது அநியாயச் செயலை நியாயமானது என மனதில் பதிந்துவிடச் செய்வான்

பரதகுலத்தில் பிறந்த திருதராஷ்டிரரே! உமது புதல்வர்கள் பாண்டவர்களிடம் பகைமை உணர்வு கொண்டுள்ளதால் அவர்களிடம் புத்தித் தெளிவு இல்லை.அவர்கள் எத்தகையவர்கள் என நீங்களும் அறியவில்லை

தருமர், மூவுலகும் ஆளத்தகுதியுடையவர். அதற்கான அனைத்து அரச லட்சணங்களும் உடையவர்.அப்படியிருந்தும் உங்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்.ஆகவே அவரை அமைச்சராக்கி விடுங்கள்

தருமரிடம், ஆற்றலும்,விவேகமும் சிறப்பாகக் காணப்படுகின்றன.நற்பண்புகள், உலக நன்மைக்கான அனைத்து நடவடிக்கைகள் ஆகியவற்றை நன்கு அறிந்துள்ளார்.ஆகவே, உங்கள் மகன்களைவிட தருமரே அரசப் பதவிக்கு அதிக உரிமையுள்ள வாரிசு ஆவார்..

நல்ல ,மனிதர்களில் முதல்வரானவர் தருமர்,அவருக்கு விளைவிக்கப்பட்ட கெடுதல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு வருகிறார்.அவர், கனிவானவர்.மென்மையானவர்.உங்களிடம் மரியாதை உடையவர்.இதுவே அவர் பொறுமைக்குக் காரணம்

இவ்வாறு விதுரர் கூறி முடித்தார்.

Friday, November 20, 2015

25- பேசும் சொற்கள்



பேச்சு, உண்மையாக, எளிமையாக இருப்பது கடினம்.அதே நேரம் புதுமையாகவும், கேட்போரை கவரும் விதமாகவும், பொருள் நிறைந்ததாகவும் இருப்பதும் கடினமே

சிறப்பாக, இனிமையாக நிகழும் சொற்பொழிவு பல நன்மைகளை விளைவிக்கும்.ஆனால் சரியாக அமையாத கடுமையானப் பேச்சு பெரிய தொந்தரவுகளைக் கொடுக்கும்

வில்லம்புப்பட்ட புண் ஆறிவிடும்.கோடாரியால் வெட்டப்பட்ட காட்டிலுள்ள மரங்கள் மீண்டும் துளிர்க்கும்.ஆனால், புண் படும் படி பேசும் காயம் ஆறவே ஆறாது.ஆறினாலும் வடு இருக்கும்

காது வடிவிலான அம்பு,குழல் வழியே வீசப்படும் அம்பு, இரும்பு அம்பு ஆகியவை  உடலில் பாய்ந்து விட்டாலும் அவற்றை அவ்விடத்திலிருந்து எடுத்துவிடலாம்.ஆனால். கடுஞ்சொல் என்னும் அம்பு தைத்துவிட்டால் அதை எடுப்பது முடியாது.அது இதயத்தில் ஆழமாகப் பதிந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும்

ஒருவர் வாயிலிருந்து புறப்படும் சொல் அம்புகள், மற்றவரைத் தாக்கி அவர்களை இரவும், பகலும் வருந்தச் செய்யும்.ஏன், சில வேளைகளில் உயிரையேப் பறிக்கும் அளவிற்கு ஆபத்து நிறைந்தவை.ஆகவே, ஒரு அறிவாளன் அத்தகைய அம்புப் போன்ற சொற்களை பிறர் மீது மறந்தும் கூறாது த்ன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி வள்ளுவர்..

யாகாவா ராயினும் நாக்காக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணம் ஆகிவிடும்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண் கூட ஆறிவிடும்.ஆனால், வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்களால் விளைந்த துன்பம் வடுவாய் இருந்து ஆறவே ஆறாது

Thursday, November 19, 2015

24-ஐம்புலன்கள்



கிரகங்களின் காரணமாய், நட்சத்திரங்கள் பாதிக்கப் படுகின்றன.அதுபோலவே எக்கட்டுப்பாடும் இன்றி ஐம்புலன்களிடம் தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வதில் மூழ்கியிருப்பதால் உலகம் துன்பத்திற்கு ஆளாகிறது.(கிரகங்களின் சுழற்சியால்..சில நட்சத்திரங்களின் கீழ்ப் பிறந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்)

வளர்பிறைக் காலத்தில் நிலவு மேன்மேலும் வளர்ந்து ஒளி கூடுகிறது.அதுபோலவே ஐம்புலன்களின் ஆசை ஒருவனை வென்று விட்டால் அவனது துயரங்கள் அதிகமாகிக் கொண்டே செல்லும்

அரசன் தன் ஐம்புலன்களை வெல்ல இயலவில்லை எனில் அவனால் தன் அமைச்சர்களை வசப்படுத்த இயலாது.அப்படிப்பட்ட அரசன் எதிரிகளை வெல்ல முடியாது.உதவ யாருமில்லாமல் அவன் அழிவான்.

ஆனால், அதற்கு மாறாக ஐம்புலன்களையும் தனக்கு எதிரியாகக் கருதி வென்று...தன் மனதைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தால் அவனால் தன் அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அவர்கள் துணையுடன் வெளிப்பகையை வெல்ல முடியும்

ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, அமைச்சர்களையும் தன் வசப்படுத்தி, குற்றவாளிகளை சரியாகத் தண்டித்து நன்கு ஆராந்து தன் கடமைகளைப் புரிந்து கொண்டு உறுதியுடன் இருக்கும் அரசன் செல்வச் செழிப்புடன் இருப்பான்

மனித உடல் தேர் போல.மனம் தன் சாரதி.ஐம்புலன்களும் குதிரைகள்.இந்தக் குதிரைகளை வசப்படுத்தி நன்கு பழக்கினால் அவன் அறிஞன் ஆவான்.அவன் தேரில் ஆபத்தின்றி இன்பமாய் வாழ்க்கைப் பயணம் செய்யலாம்

குதிரைகள் கடிவாளம் பூட்டப்படாது, பயிற்சி பெறாததாகவோ. அடங்காதவையாகவோ இருந்தால்..ஆபத்து.அவை சமயத்தில் தேரைக்கவிழ்த்து, தேரில் இருப்போரையும் வீழ்த்தி மரணிக்கச் செய்யும்.அதுபோலவே புலன்களை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிடின் அவை நாளாக ஆக நம் உடலையும், உயிரையும் அழித்து விடும்.

புலன்களை வசப்படுத்தாமல் அதன் போக்கில் வாழ்பவன் முட்டாள்.அவன் நல்ல விஷயங்களையும் கெடுதல் என எண்ணி புறக்கணித்துவிடுவான்.கெட்ட விஷயங்களை நல்லதாக எண்ணுவான்.துயரத்தை ஏற்படுத்தப் போகும் புலன் வழி திருப்தியை நிஜமான இன்பம் என ஏமாறுவான்

ஒருவன் நல்குணத்தையும்,நல்வழியையும் கைவிட்டுப் புலன்களின் தூண்டுதல்படி அலைந்தால் அவனை விட்டு செல்வம் நீங்கும்.அவன் ஆயுள் குறையும்.அவன் வாழ்க்கை வசதிக:ள் விலகும்.மனைவியும் கை விடுவாள்

ஒருவன் ஏராளமான செல்வத்திற்கு அதிபதியாக இருக்கலாம்.ஆனால் புலனாசைகளுக்கு அடிமையாகி விட்டால் அந்த பலகீனமே அவனை தன் அந்தஸ்து, ஐஸ்வரியம் ஆகியவற்றை இழந்து தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவான்.

மனிதன், தன் மனம்,அறிவு,புலன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் தன் ஆத்மாவின் தரிசனம் கிடைக்கும்.ஆத்மாவை உணர்ந்து கொண்டு அதன் மூலம் பரமாத்வாவைத் தேட வேண்டும்.ஆத்மாவே ஒருவனுக்கு நண்பன்,புலன்களை வசப்படுத்தாதவன் அந்த ஆத்மா என்னும் நண்பனின் விரோதி ஆகிவிடுகிறான்

ஒருவன் புலன்களை அடக்கித் தன் ஆத்மாவை வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆத்மா அவனுக்கு உண்மையான நண்பனாய் வழிகாட்டும். புலன்களை வசப்படுத்திக் கொண்டால்,ஆத்மா அவனுக்கு நெருங்கிய நண்பனாய் வழி காட்டும்.புலன்களை வசப்படுத்தா விட்டால் அதே ஆத்மா அவனுக்கு பரம எதிரி ஆகி விடும்.
(உடல், மனம், உயிர், புலன்கள்,அறிவு, தான் எனும் உணர்வு ஆகியவற்றின் அம்சங்கள் சேற்ந்ததே ஆத்மா எனப்படுவது)

மீன் பிடிக்க வலை வீசப்படுகிறது.ஆனால், இரு பெரிய மீன்கள் அந்த வலையைத் தாக்கினால் வலை அறுந்து போகும்,அதுபோலவே காமம், சினம் ஆகிய தீய குணங்கள் ஆபத்தானவை.அவை நம் விவேகத்தை நாசமாக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் வெற்றி பெற விரும்பினால் அறநெறியை பின்பற்றுவதுடன் அல்லாது...உலக நன்மையையும் கவனத்தில் கொண்டு அதற்குப் பயன் தரும் விதத்தில் தேவையான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும்.அப்போது அவை மூலம் நமக்கு மகிழ்ச்சி விளையும்

நம் மனதில் காமம், சினம், பேராசை, அறியாமை, கர்வம் என ஐந்து பகைவர்கள் வசிக்கின்றனர்.அவர்களை முதலில் வென்றால், வெளியில் இருக்கும் எதிரிகளை வெல்லலாம்

ஐம்புலன்களை வசப்படுத்த முடியாது...புலனாசைகளுக்கு ஆசைப்பட்டு பல மாமமன்னர்கள் அடிமையாகி இருக்கின்றனர்.பிறநாடுகளை வெல்ல வேண்டும் என்ற பேராசையாலும்..இதர அரச போகங்களுக்கு ஆசைப்பட்டும் அவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஈரமான விறகு எரியாது.ஆனால் உலர்ந்த விறகு எரிகையில் அதனுடன் சேர்ந்து ஈர விறகும் எரியத் தொடங்கும்.நாம் நல்லவர்களாக இருக்கலாம்.ஆனால், தீயோருடன் நட்புக் கொண்டால் அவர்கள் பெறும் தண்டனையை நாமும் அனுபவிக்க நேரிடும்

விறகு எரிய தாமதமாகலாம்.ஆனால் கண்டிப்பாக எரியும்,நல்லவர்கள் தீயோருடன் சேர்ந்து கெட்டுப் போக தாமதமாகலாம்.ஆனால் கெடப்போவது நிச்சயம்.கரி படர்ந்த அறையில் நுழைந்தால் கறை படாது வெளியே வர முடியாது

பொறாமை இல்லாமை,நேர்மையான பேச்சு,உள்ளத் தூய்மை,போதுமென்ற மனம், எரிச்சலூட்டா இனிய பேச்சு,மனக் கட்டுப்பாடு,வாய்மை, மன உறுதி இப்படிப்பட்ட நற்பண்புகளைத் தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

ஆத்ம அறிவு, கோபமற்ற தன்மை,வாழ்க்கையில் உண்டாகும் கசப்பை சகித்துக் கொள்ளல்,அறநெறியில் பிடிப்பு,பேச்சில் எச்சரிக்கை,தானம் செய்வதில் ஆர்வம்..ஆகிய பண்புகளை தீயோரிடம் எதிர்பார்க்க முடியாது.

முட்டாள்கள் அறிவாளிகளை கடுஞ்சொற்களால் விமரிசித்து அவர்கள் மனதை புண்படுத்துகிறார்கள்.இவ்வாறு பழித்தவர்கள் பாவி ஆகின்றனர்.அறிஞர்கள் அச்சொற்களை பொறுத்துக் கொள்வதால், அவர்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தாலும் அதிலிருந்து விடுபடுகின்றனர்.அவர்கள் செய்த பாவம் அவர்களைத் திட்டிய முட்டாள்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

வன்முறை செயல்களே தீயோரின் பலம்.தண்டனைப் பற்றிய சட்ட நூல்களே அரசனின் பலம். பண்பும், சேவையும் பெண்களின் பலம்.பொறுமையே சான்றோர் பலம்.

ஐம்புலன்களை அடக்கி ஆளுவதை ஒரே குறளில் வள்ளூவர் சொல்லிவிட்டார்...

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

உறுப்புகளை ஒரே ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஐம்புலன்களையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்